அடியேனின் புத்தக கண்காட்சி திக்விஜயம் கடந்த சனிக்கிழமையன்று (இவ்விடத்தே " இனிதே " என்ற adverbஐ பயன்படுத்தலாமா என் யோசித்து கைவிட்டேன்) நிறைவடைந்தது. ஒவ்வொரு வருடக் கண்காட்சியின் முடிவிலும், வாங்காமல் தவறவிட்ட புத்ததகங்கள் குறித்த ஆதங்கத்தின் சாயை படர்ந்து மனது வெறுமையில் உழலும். ஒரு தேர்ந்த பேராசைக்காரனுக்கே உரிய வல்லிய அவஸ்தை அது. வாங்காமல் போனதற்கு பணம், நேரம், தூரம் என பல காரணங்கள் அமையும். இம்முறையும் அதே மனநிலையோடு தான் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். காரணம் மட்டும் வேறு - எடை. ஆம். இம்முறை (மனைவியின்றி) நான் மட்டும் தனியாக செல்ல வேண்டி இருந்தது. அதுவும் ஒரே நாள் மட்டும் தான் கெடு (அடுத்த நாள் எனக்கு பெங்களூரில் FMS நுழைவுத்தேர்வு). இதன் காரணமாக சென்னையிலிருக்கும் என் சினேகிதன் இராஜராஜனை கூட்டணி சேர்த்துக் கொண்டு களத்தில் குதித்தேன். புத்தகம் வாங்க கொண்டு போயிருந்த இரண்டு பெரிய பைகளில் ஒன்றை அவன் தலையில் கட்டினேன். எடையில் ஆளுக்கு பாதி என்பது ஒப்பந்தம். பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், க.நா.சு., இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, கோபிகிருஷ்ணன்