சுகமான சுமைகள்

அடியேனின் புத்தக கண்காட்சி திக்விஜயம் கடந்த சனிக்கிழமையன்று (இவ்விடத்தே "இனிதே" என்ற adverbஐ பயன்படுத்தலாமா என் யோசித்து கைவிட்டேன்) நிறைவடைந்தது.

ஒவ்வொரு வருடக் கண்காட்சியின் முடிவிலும், வாங்காமல் தவறவிட்ட புத்ததகங்கள் குறித்த ஆதங்கத்தின் சாயை படர்ந்து மனது வெறுமையில் உழலும். ஒரு தேர்ந்த பேராசைக்காரனுக்கே உரிய வல்லிய அவஸ்தை அது. வாங்காமல் போனதற்கு பணம், நேரம், தூரம் என‌ பல காரணங்கள் அமையும். இம்முறையும் அதே மனநிலையோடு தான் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். காரணம் மட்டும் வேறு - எடை.

ஆம். இம்முறை (மனைவியின்றி) நான் மட்டும் தனியாக செல்ல வேண்டி இருந்தது. அதுவும் ஒரே நாள் மட்டும் தான் கெடு (அடுத்த நாள் எனக்கு பெங்களூரில் FMS நுழைவுத்தேர்வு). இதன் காரணமாக சென்னையிலிருக்கும் என் சினேகிதன் இராஜராஜனை கூட்டணி சேர்த்துக் கொண்டு களத்தில் குதித்தேன். புத்தகம் வாங்க கொண்டு போயிருந்த இரண்டு பெரிய பைகளில் ஒன்றை அவன் தலையில் கட்டினேன். எடையில் ஆளுக்கு பாதி என்பது ஒப்பந்தம்.

பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், க.நா.சு., இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, கோபிகிருஷ்ணன், பிரம்மராஜன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி, பெருமாள் முருகன், இரா.முருகன், அப்துல் ரகுமான், பவுத்த அய்யனார், வா.மு.கோமு, பாரதிராஜா, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் and last but not the least - சுஜாதா போன்ற எழுத்தாளர்களின் கிட்டத்தட்ட முப்பத்தைந்து புத்தகங்கள் வாங்கினேன்.

வெகுஜன வாசிப்பிலிருந்து மெல்ல விலகி வரத்தொடங்கியிருக்கும் என் மங்களூர் நண்பனுக்கு நான் சிபாரிசு செய்து வாங்கிய‌ பத்து இலக்கிய புத்தகங்களும், இராஜராஜன் அவனுக்கென வாங்கிய‌ புத்தகங்களும் (எனக்கு அவன் தாமதித்த‌ பிறந்த நாள் பரிசாய்த் தந்த‌ ஜெயகாந்தனின் நாவல் உட்பட) இதில் சேர்த்தியில்லை. மனுஷ்யபுத்திரனைத் தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை. பிறகு எஸ்.ராமகிருஷ்ணனும் அதே நேரத்தில் அங்கு இருந்ததாய் கேள்விப்பட்டேன்.

பத்தாயிரம் ரூபாய் என்கிற திட்ட மதிப்பீட்டில் காலை பதினோரு மணிக்குத் தொடங்கிய என் புத்தக வேட்டை அதில் பாதியைக்கூட தொட முடியாமல் மாலை ஆறு மணிக்கு வைரமுத்துவின் சொற்பொழிவோடு நின்று போனது. அதற்குள்ளாகவே பைக‌ள் புத்தகங்களின் கனத்தால் எங்கள் தோளை அழுத்தியிருந்தன; போதாக்குறைக்கு கால்களும் கெஞ்சத்தொடங்கியிருந்தன. அப்படியே நிறுத்தி விட்டு கண்காட்சியிலிருந்து வெளியேறினோம்.

வாங்கியதில் முக்கியமானதாய் கருதும், முதலில் படிக்க கையிலெடுத்திருக்கும் மூன்று புத்தகங்கள் இவை:
  1. ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு - ஜெயமோகன்
  2. மணற்கேணி - யுவன் சந்திரசேகர்
  3. காமரூபக் கதைகள் - சாரு நிவேதிதா
விடுபட்டதில் முக்கியமானதாய் கருதும், விரைவில் வாங்க வேண்டியிருக்கும் மூன்று புத்தகங்கள் இவை:
  1. ஜெயகாந்தன் கவிதைகள்
  2. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ.முத்துலிங்கம்
  3. அறிந்தும் அறியாமலும் - ஞானி
தற்போது, தலைப்பொங்கலுக்கு ஈரோடு வந்திருக்கிறேன். மிக நிசப்தமான ஒரு நள்ளிரவு நேரம். அருகே என் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறாள். நான் யுவன் சந்திரசேகரோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்