Posts

Showing posts from September, 2011

நன்றி : ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் தன் தளத்தில் எனது " ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி " கட்டுரையைப் பற்றி எழுதியிருக்கிறார். புதிய பிரபஞ்சம் : http://www.jeyamohan.in/?p=21430 என்னுடைய‌ ' ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி ' என்ற தலைப்பு பிரமிளின் ' E=MC 2 ' கவிதையிலிருந்து எழுத்தாளப் பெற்றது. ஆச்சரியமாய் ஜெயமோகனின் தலைப்பான ' புதிய பிரபஞ்சம் ' என்பதும் அதே கவிதையில் வேறோர் இடத்தில் வருகிறது. *******

ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி

கடந்த சில தினங்களாக உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் CERN நியூட்ரினோ ஆராய்ச்சி, முடிவுகள் மற்றும் விளைவுகள் குறித்த எனது விரிவான கட்டுரை ஒன்று இன்றைய தமிழ்பேப்பர்.நெட் இதழில் வெளியாகியிருக்கிறது. கட்டுரையை எடிட் செய்த பத்ரி சேஷாத்ரிக்கும் வெளியிட்ட மருதன், ஹரன் பிரசன்னா இருவருக்கும் என் நன்றிகள். ஐன்ஸ்டைனின் கண்ணீர்த்துளி - http://www.tamilpaper.net/?p=4190 *******

பஞ்ச ஹிந்தியும் ஹிந்தி பஞ்சமும் - 2

Image
இந்திப்படங்கள் பற்றிய இன்னொரு முக்கியமான விஷயத்தைப் போன பதிவில் சொல்ல மறந்தேன். அது அவற்றின் வசன‌ங்கள். இன்றைய தேதியில் வெளியாகும் கணிசமான இந்திப்படங்களில் பாதிக்குப் பாதி ஆங்கில வசன‌ங்கள் இருக்கின்றன (அவ்வகையில் பாலிவுட்டில் எல்லா இயக்குநர்களுமே கௌதம் மேனன் தான்!). இவ்விஷயம் எனது linguistic constipationஐ மேலும் இளக்கி இலகுவாக்குகிறது. தவிர இதற்கெல்லாம் பின்குறிப்பாய் நானும் எட்டாம் பாரம் வரையில் பள்ளியில் இந்தி பயின்றவன். "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்பது வரை துல்லியமாய்ப் புரியும். 3. Aarakshan [आरक्षण] 'ஆரக்ஷன்' என்றால் இந்தியில் 'இடஒதுக்கீடு' என்று அர்த்தம். இந்தப் படத்தை நான் பார்க்கக் காரணம் அந்தத் தலைப்புத் தான். இடஒதுக்கீட்டுக்கொள்கை பற்றிய படம் என்று வந்த செய்திகள் தாம் first hook. இடஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்டது எனச் சொல்லி உத்திரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அவ்விரவில் தான் அடக்க மாட்டாம‌ல் படத்துக்குச் சென்றேன். ஏமாற்றமே. படம் மேலோட்டமாய் 2008ம் ஆண்டில் உச்சநீதிமன்றம

பஞ்ச ஹிந்தியும் ஹிந்தி பஞ்சமும் - 1

Image
கடந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்திருக்கும் இந்தித் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் ஐந்து. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை பரங்கி பாஷைப் படம் பார்க்கும் என் மாதிரியான குண்டுச்சட்டிக் குதிரைக்கு இந்த frequency அபூர்வம். ஆங்கிலமென்றால் கூடப் பரவாயில்லை - தட்டுத் தடுமாறி வசனங்களூறுதல் சாத்தியம். இந்திப் படமென்றால் படுசுத்தம் - குருடன் யானையைத் தடவிப் பார்த்த கதை தான். ஆனால் நான் இதுகாறும் பார்த்த இந்திப் படங்கள் எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த சொற்ப இந்தியைக் கொண்டு 75% - 80% வரை புரிந்து கொள்ள முடிகிறது என்றே சொல்லுவேன் (இதில் ஒரு பாதி contextual understanding பலத்தில்). இந்த ஐந்து படங்களும் கூட அப்படித் தான். இதில் முக்கியமான சுவாரசியமே இப்படங்கள் ஒவ்வொன்றையும் நான் பார்த்தது வெவ்வேறு காரணங்களுக்காக. 1. Bbuddah Hoga Terra Baap [बुड्ढा होगा तेरा बाप] இப்படம் பார்த்தது அமிதாப் பச்சனுக்காக. நீண்ட நாள் கழித்து அமிதாப் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் (படத்தின் இறுதியில் "a tribute to the 80s angry young man” என்று கார்ட் போடுகிறார்கள்). அமிதாப் பச்சன் பட்டையைக் கிளப்பிய

மரண தண்டனை - விவாதம் தொடர்கிறது

மரண தண்டனை குறித்து ராஜன் குறை எழுப்பியிருந்த கேள்விகளுக்கு நான் சென்ற பதிவில் பதிலளித்திருந்தேன். அது குறித்த த‌ன்னுடைய விரிவான மறுப்பினை "பொறுமையான உரையாடலுக்கு நன்றி" என்ற குறிப்புடன் ராஜ‌ன் குறை ஃபேஸ்புக்கில் ஒரு தனி note-ஆக பதிவு செய்துள்ளார். நம் தள நண்பர்களின் வசதிக்காக அதை இங்கே மறுபதிகிறேன். https://www.facebook.com/note.php?&note_id=276747989004372 ******* மரண தண்டனை குறித்து சரவண கார்த்திகேயனுக்கு விரிவான மறுப்பு by Rajan Kurai Krishnan on Wednesday, September 7, 2011 at 1:22am என்னுடைய எதிர்வினைக்கான தன்னுடைய விளக்கங்களை சரவணகார்த்திகேயன் (CSK) அவருடைய வலைப்பதிவில் இட்டுள்ளார் http://www.writercsk.com/2011/09/blog-post_06.html. அவர் முதலில் எழுதிய மரண தண்டனை ஆதரவுக் குறிப்புகளைவிட ஆபத்தான புரிதல்கள் இதில் காணப்படுவதால் அவருக்கு மீண்டும் ஒரு விரிவான மறுப்பை எழுத விரும்புகிறேன். இந்தக் குறிப்புகள் மரண தண்டனை குறித்து விவாதத்தில் ஈடுபட்டு வரும் பிற நண்பர்களுக்கும் உதவியாக இருக்கலாம் என்று நம்புகிறேன். தவறான புரிதல் ஒன்று: மரண தண்டனை கொலைகளை குறைத்துள

மரண தண்டனை - ஓர் எதிர்வினை

மரண தண்டனை குறித்தான‌ என் முந்தைய பதிவு க்கு ராஜன் குறை கிருஷ்ணன் ஆற்றியிருந்த எதிர்வினையையும் அதற்கான எனது பதில்களையும் இங்கே தந்திருக்கிறேன் (உள்ளடக்கம் நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இடுகிறேன்): ******* ராஜன் குறையின் எதிர்வினை : முகப்புத்தகத்திலும்/வலைப்பூவிலும் இந்த எதிர்வினையை பதிவு செய்கிறேன். நீங்கள் மரண தண்டனை இருக்கலாம் என்று சொல்வதற்குக் காரணம் பரவலாக பலரும் சொல்வதுதான். நான் உங்களுடன் உடன்படவில்லை. அதற்கான காரணங்களை கீழே தருகிறேன். 1) மரண தண்டனை ஒரு நூற்றாண்டுக்காலமாக ஊடகங்கள் பரவலாகிய பின் நவீன இந்தியாவில் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள். அது குறித்த பிரக்ஞை, உங்கள் வார்த்தையில் மரண பயம், குற்றங்களை நடக்காமல் தடுத்திருக்க வேண்டுமே? ஏன் மேலும் மேலும் கொடூரமான கொலைகள், சதிகள் போன்றவை நடக்கின்றன? ஏனெனில் ஒன்று அவை உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் பேதலித்த நிலையில் நடக்கின்றன அல்லது நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையில் நடக்கின்றன. மரண தண்டனையால் மோசமான குற்றச்செயல்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் தினமும் செய்தித்

மரண தண்டனை - சில சிந்தனைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாய் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்தானதல்ல இக்கட்டுரை. மரண தண்டனை குறித்த பொதுவான என் புரிதல்களைப் பகிர்வதே இதன் நோக்கம். சமீபமாக இது தொடர்பான விவாதங்கள் பரவலாகியுள்ள நேரத்தில் - குறிப்பாய் மரண தண்டனைக்கு ஆதர‌வாய்ப் பேசுவது ஒரு மோஸ்தராகி விட்ட நிலையில் - இதில் எனது நிலைப்பாட்டினை பதிவு செய்ய விரும்புகிறேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தண்டனை என்பது ஒருவர் செய்த குற்றத்திற்கானது அல்ல; அடுத்து இன்னொருவர் செய்யவிருக்கும் குற்றத்தைத் தடுப்பதற்கானது அது. பொறாமையும், பேராசையும் சூழ மனித குலம் வாழும் இன்றைய தேதியில் த‌ண்டனை ஏற்படுத்தும் பயத்தின் மூல‌மாக மட்டுமே ஒருவன் பெருங்குற்றம் புரிவதைத் தடுக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். அதுவும் சுலபமாய்க் கடக்கவியலும் சிறை பயமோ, அபராத பயமோ அல்ல; மரண பயம். எதன் பொருட்டும் சக மனிதனை இம்சிக்காமல் வாழும் பக்குவ மனநிலை இன்னமும் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கு வரவில்லை என்பதே எனது புரிதல். அந்தப் பக்குவமானது மனிதனைக் க‌ட்டுப்படுத்தி குற்றத்தை மட்டுப்படுத்தும்.

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

இரு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா குறித்து ஜெயமோகன் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்வினையாய் இந்த மின்னஞ்சலினை அவருக்கு அனுப்பியிருந்தேன். ******* from c.saravanakarthikeyan@gmail.com to jeyamohan.writer@gmail.com date Thu, Aug 18, 2011 at 1:33 AM subject சுஜாதாவும் இளைஞர்களும் - சில கருத்துக்கள் mailed-by gmail.com டியர் ஜெயமோகன், "சுஜாதாவின் எழுத்து இன்றைய இளைஞர்களைக் கவர்வதில்லை" என்கிற தொனியில் நீங்கள் எழுதியிருந்த ஒரு சிறிய குறிப்பினை வாசித்தேன் [சுஜாதாவும் இளைஞர்களும் ஒரு கடிதம் - http://www.jeyamohan.in/?p=19548 ]. இவ்வாக்கியத்தின் பொருளை முழுவதுமாய் உள்வாங்கிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இவ்விளக்கத்தைக் கோருகிறேன். மற்ற‌படி சுஜாதாவின் இலக்கிய ஸ்தான‌த்திற்குக் கொடி பிடித்து எழுதப்படுவதல்ல இக்கடிதம். இதன் அர்த்தம் இன்றைய இளைஞர்கள் சுஜாதாவைப் படிப்பதில்லை என்பதா அல்லது சுஜாதாவைப் படிக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு அவரெழுத்து பிடிக்கவில்லை என்பதா? சுஜாதாவைப் படிப்பதில்லை என்றால் அவர்கள் வேறு யாரைப் படிக்கிறார்கள்? படித்தும் பிடிக்கவில்லை என்றால் அவர்