பெட்டை [சிறுகதை]
“லொள் லொள் லொள்” அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் கண்ணாடி பார்த்துக் கண்ணுக்கு மையிட்டிருந்த மாதவியின் காதுகளைக் கிழித்தது வாசலருகே திடீரென எழும்பிய தெருநாய்களின் கூட்டுக் குரைப்பரவம். சினமும் பயமும் அட்ரினலினாய்க் குருதியில் பரவி, கதவைத் திறந்து அவள் வெளியே வர, சக்திவேல் கற்களை எறிந்து விரட்டிக்கொண்டிருந்தான். வாசலிலிருந்த மயில்களைக் குதறியிருந்தன நாய்கள். அதாவது கோல மயில்கள். மார்கழிக்குப் போட்ட கோலம். 11 புள்ளி, 4 வரிசை, 5 வரை நேர்ப்புள்ளி என்ற இலக்கணத்தில் போட்டது. அதன் மீது தூவப்பட்ட பச்சை, நீலம், வாடாமல்லி வண்ணப் பொடிகள். வைகறையில் முக்கால் மணி நேரம் குத்த வைத்தமர்ந்து, நைட்டித் துவாரங்கள் வழி ஊடுருவி உடம்பை நடுக்கிய செங்குளிரில் போட்டது. அத்தனையும் பாழ். ஆறுதல் பரிசாய் நாய்களின் காலடித் தடங்கள் புதுப்புள்ளிகளைக் கோலத்திற்குச் சேர்த்திருந்தன. மனதில் கடும் எரிச்சல் உண்டாயிற்று மாதவிக்கு. தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். இடது பக்கம் மங்கயர்கரசி அக்காவின் வீட்டு வாசலிலும் எதிரே சுப்ரியா வீட்டு வாசலிலும் இருந்த கோலங்கள் அப்படியே இருந்தன. வலப்புறம் பரத் அம்மாவின் வ