இந்தி நம் தேசிய மொழியா?
பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும் தீர்மானமாக நம்பும் ஒரு விஷயம் “இந்தி நம் தேசிய மொழி” என்பது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பதே அவர்களுக்கு பேராச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஜாவா தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட அத்தனை அதிசயித்திருக்க மாட்டர் எனத் தோன்றுகிறது. இத்தனைக்கும் அவர்களில் கணிசமானோரின் தாய்மொழி இந்தி அல்ல. ஆனால் எல்லோருக்கும் இந்தியில் குறைந்தபட்சம் பேச மட்டுமாவது தெரிந்திருக்கிறது. இன்னும் சிலருக்குத் தம் தாய்மொழியைக் காட்டிலும் இந்தியே அதிகப் பரிச்சயம். சில சமயம் மீட்டிங் இடையே சரளமாக இந்தியில் பேசத் தொடங்கி விடுவார்கள். பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் இந்தி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதால் அடிப்படை இந்திச் சொற்கள் எனக்குப் புரியும். இந்திப் படங்களைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அப்படித்தான். (அதிலும் காட்சிரூபமாக நகராமல் முழுக்க வசனங்களால் ஆன இந்திப் படம் எனக்கு உகந்ததல்ல. உதாரணமாய் A Wednesday