Posts

Showing posts from August, 2020

மீயழகி

Image
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:

கலி [சிறுகதை]

Image
“அன்புள்ள தபஸ்வி… ஒளிநிறை உடலுறைவோனே… பிறப்பால் என்ன வர்ணம் நீ?” விரிந்து நின்ற புங்கை விருட்சத்தின் கிளையில் வௌவால் ஒன்றின் அவதாரம் போல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த யாக்கையில் அசைவேதும் இருக்கவில்லை. பரத கண்டத்தின் தென்னகத்தே சைவஜ மலைச்சாரலில் அடந்திருந்த ஆரண்யத்துள் செழித்திருந்த தனிமையையும் மௌனத்தையும் கண்ணுக்குத் தென்படாத பூச்சிகள் குலைத்துக் கொண்டிருந்தன. சூரியன் அவ்விடத்துள் ஊடுருவத் தயங்கி, கண்டும் காணாமல் நகர்ந்து கொண்டிருந்தான். எங்கோ பாயும் அருவியின் சப்தம் செவியில் தேய்ந்து பாய்ந்தது. மரங்களின் பச்சை வாசனை வனத்தின் கற்பைப் பறைசாற்றியது. அயோத்திப் பேரரசன் ஸ்ரீராமச்சந்திரன் பொறுமையிழந்து குரலை உயர்த்தினான். அது ஒரு குதிரைக் கனைப்பைப் போல் நாராசமாய் இருந்ததாய் அவனுக்கே தோன்றியது. “ஏ, முதிராத் துறவியே, முனிவினை புரிபவரே, கண்ணையும் காதையும் திறங்கள்!” ஆழ்ந்த தவத்துள் தொலைந்து போயிருந்த மனிதரின் காதுகளை அந்த ஆறாச்சினம் தொட்டது போல் தெரியவில்லை. அவர் முகத்தில் சாந்தம் நிறைந்து வழிந்தது. இறுக மூடியிருந்த அவரது விழிகளில் மட்டும் இரண்டு நரம்புகள் மெல்லிசாய் அசைந்தன. ராமன் இறுதி ம

வீ [சிறுகதை]

Image
மெலினா மல்லாக்கப் படுத்து வெண்பஞ்சுத் துணுக்குகள் மிதந்த வானத்து நீலத்தைப் பார்த்திருந்தாள். பழுப்புக் கழுத்துடைய சாம்பல் நிறப் பட்சிகள் சீர்மையுடன் பறந்து அக்காட்சியை ஊடறுத்தன. ஷைர் நதி பொசிந்து அரும்பியிருந்த புத்தம் புதுப் புற்கள், செழிக்கத் துவங்கியிருந்த அவள் பிருஷ்டத்தின் அதிமென்மையை விரும்பியிருந்தன. கருப்பின் மினுமினுப்பு படர்ந்த அவளது முகத்தில் திகட்டாத அழகு திட்டுத்திட்டாய் அப்பியிருந்தது. அதை ஊர்ஜிதம் செய்ய அவ்வப்போது நிலைக்கண்ணாடி பார்ப்பாள். தான் அழகென நன்கறிந்த பெண்ணின் அலட்டலை, அலட்சியத்தை விட தான் அழகு தானா என அவ்வப்போது எழும் சந்தேகத்தைச் சமாதானம் செய்து மெனக்கெடுபவள் அதிரூபசுந்தரி ஆகிறாள். மெலினா அதன் உச்சம் நோக்கி நகரும் பருவத்திலிருந்தாள். “மெலினா…” டொமினிக்கின் அழைப்பு அவளது தலையையும் உற்சாகத்தையும் உயர்த்தச் செய்தது. அவன் குரல் உடைந்து கொண்டிருப்பதை அவள் கடந்த சில நாட்களாகவே கவனித்து வந்திருந்தாள். அவளுக்கு அவனது முந்தைய கீச்சுக் குரல் தான் பிடிக்கும் என்றாலும் இந்த மாற்றத்தில் நுழைந்து வரும் முரட்டுத்தனமும் வசீகரிக்கத் துவங்கி இருந்தது. “ஆண்கள் வயதுக்கு வருவதை உண