இறுதி இரவு - முன்னுரை
புறக்கணிக்கப்பட்ட பிரதிகள் என் முதல் சிறுகதையை 2001ல் எழுதிய போது என் வயது பதினாறு. விஞ்ஞானப் புனைவு. தலைப்பு 'நியூட்டனின் மூன்றாம் விதி'. அதற்கும் முன்பு 1998 வாக்கில் 'ப்ரியமுடன் கொலைகாரன்' என்ற தலைப்பில் ராஜேஷ் குமார் பாதிப்பில் நாவல் எழுதினேன். அப்போது நான் பள்ளி மாணவன். எங்கள் மேல் வீட்டில் குடியிருந்த, கல்லூரி செல்லும் பிரேமா பிந்து அக்காவிடம் படிக்கத் தந்தேன். வார இதழ்கள் தாண்டி ஓரளவு வாசிப்புப் பழக்கம் கொண்ட அவருக்கு அந்நாவல் பிடித்திருந்தது. “கதையில் நிறையக் கொலை பண்ணி இருக்கே!” என்றார். அதில் இலக்கியத்தையும் சேர்த்துச் சொன்னாரா என்றறியேன். என் முதல் வாசகி அவரே. தீவிர பாலகுமாரன் வாசகியான என் தமிழாசிரியை தனலெட்சுமிக்கு அக்கதை அத்தனை உவப்பில்லை. நினைவாய், கைப்பிரதியாய் எஞ்சியுள்ள அக்கதைகளை இன்னும் பிரசுரிக்கவில்லை. பின் 2009ல்தான் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை எழுதத் தொடங்கினேன். ‘E=mc 2 ’, ‘மதுமிதா: சில குறிப்புகள்’, ‘மண்மகள்’ கதைகள் சில வெகுஜன இதழ்களுக்கு அனுப்பி, வெவ்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டவை. பிரபல இதழ் சொன்ன சுவாரஸ்யமான பதில்: