ஜலப் பிரவேசம் [சிறுகதை]

காவல் ஆய்வாளர் மஞ்சுநாத்தின் செல்பேசி சிணுங்கிய போது அவரது மனைவியும் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். அவர் உதாசீனம் செய்யத் தீர்மானித்தாலும் அதன் அதீத ஒலியினால் எரிச்சலுற்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள். மஞ்சுநாத் எழுந்து தன் லுங்கியைச் சீரமைத்துக் கொண்டு செல்பேசியைப் பற்றினார். பாகமண்டலா காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் பசவப்பா பேசினார். தன் குரலில் மரியாதையையும் அவசரத்தையும் சரிவிகிதம் கலந்தளிக்க முயன்றார். ஆனால் அதை எல்லாம் மீறிக் கொண்டு தார்வாட் கன்னடம் தான் நிரம்பி வழிந்தது. “ஸார், ஒரு மிஸ்ஸிங் கேஸ். கன்ட்ரோல் ரூம்ல இருந்து தகவல்.” “போய்ப் பார்த்துட்டு எஃப்ஐஆர் போட்டு வைங்க. காலைல பார்க்கிறேன்.” “ஸார். லேடி…” “வாரமொரு பொம்பள காணாமப் போகுதுய்யா கூர்க் மாவட்டத்துல.” “இல்ல ஸார். அது வந்து…” “அட, என்னய்யா?” அந்தக் கடுப்பு பசவப்பாவிற்கானதா அல்லது ஜாக்கெட் ஹூக் சரி செய்து கொண்டு திரும்பிப் படுத்து விட்ட தன் பெண்டாட்டிக்கானதா என அவருக்கே தெளிவில்லை. “ஹை ப்ரோஃபைல் கேஸ் ஸார். எப்படியும் மீடியா சீக்கிரம் வந்துடும்.” “யாரு?” “ஷ்யாமளா. தமிழ் ரைட்டர்.