விமர்சனத்தின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்
ஆர். அபிலாஷ் எழுதிய ' கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள் ' நாவலை சற்று முன் தான் வாசித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. நல்ல வாசிப்பின்பம் கொண்ட எழுத்து. பொருட்படுத்ததக்க சீரியஸ் உள்ளடக்கம் கொண்டது என்றாலும் துப்பறியும் நாவல் என்பதற்கு நியாயம் செய்யும் வகையிலான சுவாரஸ்யமான ஆக்கம். 2008 நொய்டா இரட்டைக் கொலை வழக்கு, 2014 சென்னை மென்பொருள் ஊழியை கொலை வழக்கு, (நாவல் வந்த பின் சமீபத்தில் நிகழ்ந்த ஜிஷா கொலை வழக்கும் கூட) என நிஜ சம்பவங்களின் வலுவான சாயைகள் இப்புதினத்தில் இடம் பெறுகின்றன. சில திரைப்படங்களின் வாசனை கூட மனதில் நிழலாடியது - அமீர் கான் நடித்த 'Talaash' மற்றும் மிஷ்கினின் 'யுத்தம் செய்'. துப்பறியும் நாவல்கள் அல்லது சாகசப் புனைகதைகளில் சிந்தனைக்கு உரியவை தமிழில் மிக அரிது. அவை சம்பவங்கள் மற்றும் உரையாடல்களின் தொகுப்பாகவே அமைகின்றன. அதிகம் போனால் நேர்த்தியான வர்ணனைகள் இருக்கும். போக அரிதாய்ச் சில கவிதைத் தருணங்கள் தென்படும். அவை லேசாய் வாசகனை யோசிக்கத் தூண்டும். சுஜாதாவின் நாவல்களில் அவ்வப்போது இத்தகைய இடங்களைக் காணலாம். (சட்டென நினை