வெண்குடை [சிறுகதை]
ஆகஸ்ட் 6, 1985. பனியின் சாயைகள் இன்னும் முற்றிலும் விலகாத காலை நேரம். கென்பக்கு டோமு என்கிற ஹிரோஷிமா அமைதி நினைவகத்தின் முன்பு நின்றிருந்தார் ஜேக்கப் பேசர். உருளை வடிவக் கட்டிடம். அதன் தலையில் கிரீடம் போல் கோபுரத்தின் கான்க்ரீட் உதிர்ந்த இரும்பு எலும்புக்கூடு. அதைச் சுற்றி நின்றிருந்த கட்டிடமும் சுவர்களும் துணையாய் பாதிப்புற்றிருந்தன. வரலாற்றின் ஒரு துளி அங்கு உறைந்திருந்தது. சிதிலமடைந்திருந்த அக்கட்டிடம் குண்டு வீச்சில் படுகாயமுற்ற ஒரு மனிதனையே உருவகப்படுத்துவதாகத் தோன்றியது ஜேக்கப்பிற்கு. மோசமான ஒரு போரில் சந்தித்த பேரிழப்பைத் திரும்பத் திரும்ப இந்த ஜப்பான் தேச மக்களுக்கு நினைவூட்டியபடியே இருக்கும் இந்த இடம் எப்படி அமைதிச் சின்னம் ஆகும் என்று யோசனை ஓடியது. ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என எல்லோரும் வரிசையாய் வந்து அக்கட்டிடத்தின் முன் அமைப்பட்டிருந்த கவிழ்த்துப் போட்ட பூமராங் வடிவ நினைவிடத்தில் தாம் கையில் கொண்டு வந்திருந்த பூங்கொத்தை வைத்து விட்டு தலை வணங்கி சில கணங்கள் அமைதியாய் நின்று அஞ்சலி செலுத்தினர். அதிகம் யாரும் பேசவில்லை. நேரம் செல்லச் செல்ல பூக்குவியல்