நதியின் பிழை [சிறுகதை]


“ஒற்றை இரவில் இந்த நாட்டின் மொத்தத் தங்கமும் செல்லாததாகி விடுமா என்ன?”

செம்மறியாட்டின் சிறுநீர்ப் பையாலான சுறைக் குடுவையின் ஓரத்தை ஊசி முனைத் துல்லியத்தில் நரம்பு கொண்டு தைத்தபடி கேட்டான் சுலைமான். அவன் சொற்களில் ஆச்சரியமும் அச்சமும் ஒருசேர மிதந்தன. ‘இல்லை’ என்ற ஆறுதலான பதிலையும் அதற்கான மேல் விளக்கத்தையும் பெறுமோர் எதிர்பார்ப்பு அதில் உள்ளூர இருந்தது.

“ஆம். அப்படித்தான் ஆகி விட்டது. எல்லாம் அந்த நாசமாய்ப் போன மன்னனின் முட்டாள்தனத்தால் விளைந்தது. எளியவர்களின் மீது அக்கறையற்ற ஆணவம்!”

கோபமாய்ப் பேசினார் அயூப். அனுபவமேறித் தளர்ந்திருந்தன அவர் உடலும் குரலும்.

அதைக் கேட்டதும் நாவிலூறிய ஆபாச வசையை சுலைமான் பற்களால் கடித்துத் துப்பினான். தன் தாய் மாமன் முன் அப்படிப் பேசும் வழக்கமில்லை அவனுக்கு.

“எகிப்து சாம்ராஜ்யத்தின் பொருளாதாரமே வீழப்போகிறது!” என முனகினார் அயூப்.


அடுத்தடுத்த மாதங்களில் தன் தந்தையைப் போருக்கும் அன்னையை நோய்க்கும் பலி கொடுத்த போது சுலைமானுக்கு வயது மூன்று. அப்போது முதல் அவனை வளர்த்தது அவன் தாயின் மூத்த சகோதரரான அயூப் தான். இளமையிலேயே மனைவியை இழந்தவர். இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய மெஹிர் கொடுக்குமளவு அவரிடம் பணம் இருக்கவில்லை என்று பேசிக் கொள்வார்கள்.

அவரை ஒரு ஞான குரு ஸ்தானத்தில் வைத்து எல்லாமே பேசுவான் என்றாலும் அவன் அவரிடம் அது பற்றிக் கேட்டதில்லை. அவரைப் புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணம் ஒரு பக்கம் என்றாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என அவன் நம்பியது மற்றுமொரு காரணம். ஆனால் சுலைமான் கடன் வாங்கி பாலைவனப் பயணத்துக்குத் தேவையான பொருட்களை விற்பதற்கென பிரத்யேகமான கடை வைத்த போது அவர் சொன்ன சொற்கள் ஒருபோதும் அவனுக்கு மறப்பதில்லை.

“வீண் செலவுகள் செய்யாதே சுலைமான். காசைச் சேர்த்து வை. பொன் வாங்கு. சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள். பெண் இல்லாத வாழ்வு என்பது நரகம்.”

அப்போது சுலைமானுக்கு ஈரக் கனவுகள் துரத்திக் கொண்டிருந்த பதின்மத்தின் முடிவு என்பதால் அவனுக்குப் பெண் இல்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்வது கூட சாத்தியமாக இருக்கவில்லை. அவர் சொன்னதை இம்மி பிசகாமல் பின்பற்றினான்.

கிட்டத்தட்ட சுலைமான் கடை போட்ட அதே காலத்தில் தான் அவர்கள் வசித்து வந்த கெய்ரோ என்ற சிற்றூர் பெருநகரமாக அதிவேகத்தில் வளர்ந்து இஸ்லாமிய உலகின் மையமாக உயர்ந்தது. எகிப்து நாட்டின் தலைநகராகவே எப்போதும் அது இருந்து வந்திருக்கிறது என்றாலும் நைல் நதியின் கழிமுகத்தில் அமைந்திருக்கும் விவசாயம் செழித்த பிரதேசம் என்றாலும் அது பெருநகரமாக அதுவரை மாறியிருக்கவில்லை.

வடக்கு ஆஃப்ரிக்கவிலிருந்த பல தேசங்களிலிருந்தும் மக்கள் வியாபார நிமித்தமும், பயண முகாந்திரத்துடனும், சமயங்களில் யுத்தங்களின் பொருட்டும் பிரம்மாண்ட மணற்கடல் ரூபமான சஹாராவைக் கடந்து கொண்டே தான் இருந்தனர் – கெய்ரோ
நகரின் வழியே. அதனால் சுலைமானுக்குத் தொழில் ஓரளவு நன்றாகவே நடந்தது.

ஆடம்பரமாய் ஏதும் செலவுகள் செய்யவில்லை என்பதைத் தாண்டி தன் தேவைகள் சுருக்கிக் கொண்டான். செல்வமானது மெல்ல மெல்ல அவனிடம் அடைக்கலமானது.

புனிதக் குர்ஆன் திருமணம் செய்கையில் பெண்ணுக்கு ஆண் வரதட்சணை தருவது கட்டாயம் என்கிறது. மெஹிர்! நபிகள் நாயகம் ஒரு ஹாடித்தில் அந்தப் பணம் தங்கக் கட்டியாக இருக்க வேண்டும் என்கிறார். நபியின் வாக்கில் கெய்ரோவாசிகள் எதைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ பெண்களுக்குத் மணம் செய்கையில் கறாராய்ப் பேரம் பேசி தங்கம் வாங்கத் தவறுவதில்லை. மணமாகும் பெண்ணின் பொருளாதாரப் பாதுகாப்புக்காகவே அந்த ஏற்பாடு என்றாலும், எந்த வற்புறுத்தலும் இன்றி பரஸ்பர இணக்கத்துடனே இப்பரிவர்த்தனை நிகழ வேண்டும் என்றாலும் ஒரு கட்டத்தில் அது எளியவர்களைத் தொந்தரவு செய்யும் பழக்கமாக ஆகிப்போனது. பேசிய வரதட்சணை தர இயலாததால் நிக்காஹ் நாளன்று நின்று போன திருமணங்கள் கூட அங்குண்டு.

சுலைமான் அறுபது மித்கல் தங்கம் சேர்த்திருந்தான். ஒரு மித்கல் தங்கத்தின் விலை முப்பது திர்ஹாம் முன்பின்னாக இருந்தது. எழுபத்தைந்து மித்கல் தங்கம் போட்டுப் பெண்ணை மணம் செய்வது சுலைமான் போன்ற கீழ்நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பொதுவான வழக்கமாக இருந்தது. பெண்ணின் அழகு மற்றும் வனப்பு பொறுத்து இது கூடக் குறைய இருக்கும். கெய்ரோ நகரில் பெண்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் போர் வீரர்கள், பெருவியாபாரிகள், அரச குடும்பத்தினர் போன்றோர் மத்தியில் பணப் புழக்கம் அதிகம் என்பதால் அவர்களுக்கு இரண்டாம், மூன்றாம் மனைவிகளாகப் போனவர்கள் கழித்து மீந்த பெண்டிரே சாதாரண குடிமகன்களுக்குத் தாரமானார்கள்.

வரதட்சணை விஷயத்தில் எவ்வளவு பொன் என்பது எப்போதும் பெண்ணின் தந்தை சொல்வதே இறுதிச் சொல். அதனால் நிக்காஹ் விஷயத்தின் பெண் வீட்டார் ஓர் அதிகார மையமாக விளங்கினர். நிறையப் பெண் பெற்றவர்கள் மதிக்கப்பட்டார்கள்.

அயூப் சுலைமானுக்குப் பெண் பார்க்கத் தொடங்கி ஆறு மாதங்களாகின்றன. பெண் பிடிக்கவில்லை, மாப்பிள்ளை வீட்டில் பெண் துணை என்பதே இல்லை, இன்னும் நிறையச் சம்பாதிக்கும் மாப்பிள்ளை கிட்டினால் நல்லது, இப்பெண்ணுக்கு இத்தனை மெஹிர் கேட்பது மிக அதிகம் என்பதெல்லாம் காரணமாகி நான்கு, ஐந்து பெண்கள் தட்டிப் போனார்கள். கடைசியாய் போய்ப் பார்த்து விட்ட வந்தவள் மெஹ்ருனிஸா!

முகத்திரைக்குப் பின் ஒளிந்திருந்தாலும் மெஹ்ருனிஸா பெரும் பேரழகி என்பது சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்தது. அவள் அக்கம் பக்கத்தவர்களுக்கும் அதையே சுலைமானிடம் உறுதி செய்தார்கள். அவளை மணம் செய்யப் போட்டி நிலவியது.

அவளது தந்தை கரீம் அவளுக்கான மெஹிராக நூறு மித்கல் தங்கம் கேட்டார்.

போட்டி போட்டவர்கள் வாய் பிளந்து போனார்கள். பணக்காரர்கள் சிலர் அதைத் தரத் தயாராய் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் ஏற்கனவே மணமானவர்கள். கரீம் தன் மகளை முதல் தாரமாய்க் கல்யாணம் செய்து கொடுக்கவே விரும்பினார்.

இந்நிலையில் தான் அயூப்பின் இறந்து போன மனைவியின் உறவினர் வழி கரீம் அவர்களுக்கு அறிமுகமானார். சுலைமானுக்கு மெஹ்ருனிஸாவை மிகப் பிடித்துப் போனது. அவனது ஈரக் கனவுகளில் கூட அவளைப் போன்ற கச்சிதமான செழுமை கொண்ட பெண்களை அவன் கற்பனை செய்ததில்லை. எப்பாடு பட்டாயினும் நூறு மித்கல் பொன் சேர்த்து மெஹ்ருனிஸாவை மணம் முடிப்பது எனத் தீர்மானித்தான்.

கரீமுக்கும் சுலைமானின் தொழில் வளர்ச்சியும் அணுகுமுறையும் பிடித்திருந்தது.

ஆனால் சுலைமான் உழைத்துச் சேர்க்கும் வரை கரீம் காத்திருக்கத் தயாரில்லை. அடுத்து கல்யாணத்துக்குத் தயாராய் இரு மகன்கள் இருந்தார்கள். அதனால் அவர் அயூப்பின் உறவை மதித்து அவர்கள் முயற்சித்து முடிவு சொல்ல ஒரு மாதம் அவகாசம் அளித்தார். அதுவரையிலும் அவர் வேறு மாப்பிள்ளை தேட மாட்டார்.

அயூப் நாசூக்காய் எண்பது மித்கல் போடுகிறோம் எனக் கேட்டுப் பார்த்தார். கரீம் சிரித்துக் கொண்டே மறுத்து விட்டார். நூறுக்கு ஒன்று குறையக்கூடாது என்றார்.

கையில் இருக்கும் திர்ஹாம்களையும் வீட்டிலிருக்கும் வெள்ளிப் பாத்திரங்களையும் விற்றுப் போட்டால் இன்னுமொரு பத்து மித்கல் பொன் வாங்க முடியும். அப்படிப் பார்த்தாலும் மேலும் முப்பது மித்கல் தங்கம் பற்றாக்குறை. சுலைமானின் வெறி கொண்ட வேகத்தைப் பார்த்து விட்டு கடன் வாங்க யோசனை சொன்னார் அயூப்.

அவரே விசாரித்து கனியிடம் சுலைமானை அழைத்துப் போனார். கனி பெருவணிகர். ஒட்டக வியாபாரம். சஹாரா அவருக்கு மட்டும் சோலைவனமாகக் கொழித்தது. அவர் சுலைமானுக்கு ஆயிரம் திர்ஹாம் கடன் தர ஒப்புக் கொண்டார். இஸ்லாம் ரிபா (வட்டி) கொடுப்பதையும் வாங்குவதையும் ஹராம் (பாவம்) என்கிறது. ஆனால் அதற்காக மனிதர்கள் கடன் கொடுக்காமலும் வாங்காலும் இருக்க முடியுமா அல்லது வட்டி இல்லாமல் கடன் தருமளவு மனிதர்களுக்கு மனம் தான் வாய்த்து விடுமா!

சுலைமான் ஆயிரம் திர்ஹாம் பணமாய் வாங்கிக் கொண்டு தன் கடையை கனிக்குத் தற்காலிகமாக விற்று விட வேண்டியது. மாதா மாதம் கடைக்கான வாடகை ஒன்றை கனிக்குத் தந்து விட வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள் ஆயிரம் திர்ஹாம் கொடுத்து கடையை மீண்டும் சுலைமானே வாங்கிக் கொள்ளலாம். அவ்வளவு தான் ஒப்பந்தம்.

சுலைமான் ஒப்புக் கொண்டான். எல்லாவற்றையும் திரட்டிப் போட்டு மேலும் நாற்பது மித்கல் தங்கம் வாங்கினான். மொத்தமாய் நூறு மித்கல் பொன் ஜ்வலித்தது. ஆயிரம் மித்கல் கூடத் தந்து மெஹ்ருனிஸாவைக் கட்டலாம் என நினைத்துக் கொண்டான்.

அடுத்த நாள் கரீம் வீட்டுக்குப் போய் தம் முடிவைச் சொல்லத் தீர்மானித்தார்கள் எல்லோரும் திருப்தி எனில் இன்னும் ஒரு மாதத்தில் நிக்காஹ் வைத்து விடலாம்.

“உன் ஆத்திரத்துக்கு ரொம்ப நாள் தாங்காது சுலைமான். பகலில் சமாளித்துக் கொண்டாலும் இரவென்று ஒன்று இருக்கிறதல்லவா! பொல்லாத பொழுது!”

கேலி பேசினார் அயூப். அவனைச் சாக்கிட்டுத் தன் ஆதங்கத்தைப் பேசுகிறாரோ எனத் தோன்றியது. சிரித்துக் கொண்டான். மெஹ்ருனிஸாவை நினைத்துக் கொண்டான்.

அன்றைய இரவில் தான் கெய்ரோ நகருள் மன்சா மூஸாவின் பரிவாரம் நுழைந்தது.

*

நாட்காட்டிக் கணக்குப்படி இயேசு கிறிஸ்து பிறந்து 1324 ஆண்டுகள் ஆகி இருந்தது.

எகிப்துக்கு மேற்கே ஆஃப்ரிக்கக் கண்டத்தின் மூக்கு போல் அமைந்திருந்தது மாலி ராஜ்யம். அந்நாட்டு மன்னர்களின் செல்வச் செழிப்பு பற்றி வடக்கு ஆஃப்ரிக்காவிலும் மத்தியக் கிழக்கிலும் கதை கதையாகப் பேசினார்கள். அவர்கள் அரண்மனை முழுக்க தங்கத்தால் ஆனது, அவர்களிடமிருக்கும் தங்கத்தைக்கொண்டு உலகையே விலைக்கு வாங்கலாம், அந்த ராஜாக்கள் நித்தம் தங்கப் பஸ்பம் சாப்பிடுவார்கள், இன்னும் பல.

அவர்களின் சுக்கிலத்தில் பொன் துகள்கள் மிதக்கும் என்று கூடக் கிசுகிசுத்தார்கள்.

மாலி மன்னன் மான்சா மூஸா கீட்டா மெக்காவுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு இருந்தான். பெரும்பாலும் சஹாரா வழியான பாலைவனப் பயணம். அம்மார்க்கத்தில் மெக்காவை அடையும் முன் எகிப்து தேசத்தையும் அரேபிய தீபகர்ப்பத்தையும் கடக்க வேண்டும். அப்படித்தான் கெய்ரோவுக்கு வந்திருந்தது மூஸாவின் பெரும்பரிவாரம்.

மெக்கா போவது ஒரு முஸல்மானின் ஆயுள் கடமை என்பது தாண்டி மூஸாவுக்கு வேறு நோக்கங்கள் இருந்தன. அவர் ஓர் ஆத்மார்த்தமான இஸ்லாமியர். அவரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பது கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதியின் உயர் கலாசாரத்துக்கு ஒரு நுழைவாயில். அதன் செழுமையான வாழ்நெறியை மாலி தேசத்துக்குக் கடத்த விரும்பினார். அதை உத்தேசித்தே தன் புனிதப் பயணத்தைத் திட்டமிட்டார். அதனால் தான் தன்னுடன் நிறைய மனிதர்களை அழைத்துச் சென்றார்.

சுமார் 60 ஆயிரம் பேர் - அதில் 12 ஆயிரம் அடிமைகள். அவர்கள் ஒவ்வொருவரும் ஐந்நூறு மித்கல் தங்கத்தை எடுத்து வந்தார்கள். அது போக அவர்கள் பயணத்துக்குத் தேவையான உணவு, உடை, மருந்து, இன்ன பிற விஷயங்களை எடுத்து வர சுமார் 80 ஒட்டகங்கள். அவை ஒவ்வொன்றும் 5,000 முதல் 32,000 மித்கல் பொன் சுமந்து வந்தன. எல்லாம் யாத்திரையின் வழிச் செலவுக்கும் தானத்துக்கும். பிரம்மாண்டத் தங்க வயல் ஒன்று கண்டம் விட்டுக் கண்டம் இடம் பெயர்வது போல் இருந்தது!

அந்தப் பயணத்தின் போது வெள்ளிக் கிழமையன்று மூஸா எங்கிருக்கிறாரோ அங்கே புதிதாய் ஒரு மசூதி கட்டியெழுப்பி வழிபட்டுச் சென்றார் என்று பேசிக் கொண்டனர்.

மறுநாள் விடிந்து சுலைமான் துயிலெழுந்த போது கெய்ரோ அல்லோகலப்பட்டது.

சிறிதோ பெரிதோ அந்நகரின் அத்தனை வணிகர்களும் முகமெல்லாம் பல்லாய்த் திரிந்தார்கள். அன்றைய வருமானம் முழுக்க தங்கத்தில் தான் இருந்தது. எல்லாக் கடைகளிலும் மாலியிலிருந்து வந்தவர்களை விழுந்து விழுந்து கவனித்தார்கள். உள்ளூர் வாடிக்கையாளர்கள் இரண்டாம் நிலை பிரஜைகளாகிப் போனார்கள்.

சுலைமானுக்கும் அன்று நல்ல வேட்டை. அவன் மனம் உற்சாகத்தில் கொந்தளித்தது.

கரீம் கேட்டதை விடவும் கொஞ்சம் கூடுதலாய்ப் பொன் கொடுத்து அறிமுகத்தின் போதே மெஹ்ருனிஸாவின் இதயத்தை வலுவாய் ஈர்த்து விட வேண்டும் எனக் கணக்குப் போட்டான். அதே சமயம் இன்னொரு பக்கம் வருந்தினான். ஒரு நாள் தாமதித்திருந்தால் கனியிடம் கடன் வாங்கியிருக்க வேண்டியதில்லை. அல்லது குறைவாய் வாங்கி இருக்கலாம். இப்போதும் மோசமில்லை. மாலி தேசத்தவர்கள் கெய்ரோவில் தங்கி இருக்கும் வரை கடையில் லாபம் நிறையவே இருக்கும். அதைக் கொண்டு சீக்கிரத்தில் கடனை அடைத்து விடலாம் என நினைத்துக் கொண்டான்.

அயூப் மட்டும் “இத்தனை தங்கமா, இது நல்லதுக்குத் தானா!” என்றபடி தயங்கினார்.

“பொன்னும் பெண்ணும் மட்டும் எத்தனை கிட்டினாலும் நல்லது தான் மாமா. கேள்வி கேட்காது வைத்துக் கொள்ள வேண்டும்” என உற்சாகத்தில் பேசினான் சுலைமான்.

அயூப் சட்டென ஒரு கணம் நிமிர்ந்து அவனைப் பார்த்தார். அவரது பலவீனத்தில் அடித்து விட்டோமோ என நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டான் சுலைமான்.

அடுத்த ஒரு வாரத்துக்கு கடையில் அதிக வேலை இருந்தது. வியாபாரம் நிறைய என்பதாலும் பொன்னைப் பாதுகாக்கவும் அயூப்பும் கடையில் உட்கார்ந்தார். அதனால் கரீம் வீட்டுக்குப் போகவே நேரம் கிட்டவில்லை. மூஸா எகிப்திய சாம்ராஜ்யத்தின் சுல்தானான அல்-நசீர் முகமதுவைச் சந்தித்து விட்டு மெக்காவை நோக்கிய தன் பயணத்தைத் தொடர கெய்ரோவை நீங்கினார். கிளம்பும் நாளன்றும் பெரிய அளவு வியாபாரம் நடந்தது. சுலைமானிடம் மேலும் இருபது மித்கல் தங்கம் சேர்ந்திருந்தது.

எகிப்து சுல்தானை மூஸா சந்தித்ததைப் பற்றி பல்வேறு கதைகள் நிலவின. முதலில் மூஸா சுல்தானைச் சந்திக்கவே விரும்பவில்லை எனவும் தான் புனித யாத்திரைக்கே வந்திருப்பதாகவும் வேறெந்த அரசியலையும் இதோடு இணைக்க விரும்பவில்லை என்பதாகக் காரணம் சொன்னதாகவும் பேசிக் கொண்டார்கள். பிறகு அபு என்ற தளபதி தம் நாட்டின் அரச நடைமுறைகளைச் சுட்டிக் காட்டிச் செய்த பணிவான தொடர் வற்புறுத்தல்களின் பயனாகவே சுல்தானைச் சந்திக்க ஒப்புக் கொண்டாராம் மூஸா.

இன்னுமொரு கதை அச்சந்திப்பைப் பற்றி உலவியது. சுல்தானை நேரில் கண்டதும் மூஸா நிலத்தை முத்தமிட வேண்டும் எனச் சொல்லப்பட்டதாகவும் ஆனால் அவர் முதலில் மறுத்து, பின் உடனிருந்த மாலி தேசத்து அமைச்சர் ஒருவர் மூஸாவின் காதில் ஏதோ சொல்லவும், அவர் யோசித்து விட்டு “என்னைப் படைத்த இறைவனை வணங்குகிறேன்” என்று விட்டு தரையில் விழுந்து வணங்கியதாகவும் சொன்னார்கள்.

அதன் பிறகு நெடுநேரம் இருவரும் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தார்களாம்.

கிளம்புகையில் சுல்தான் மூஸாவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் அழகான முழு ஆடைகள் பரிசளிக்க, பதிலுக்கு அரசருக்கும், குடும்பத்தாருக்கும், அமைச்சர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தங்கத்தைத் தூர் வாரி இறைத்துச் சென்றிருக்கிறார் மூஸா.

மூஸாவின் வருகையால் கெய்ரோ பெரும் பணக்கார நகராகி விடும் என்று தான் எகிப்து சுல்தான் முதற்கொண்டு எல்லோரும் எண்ணினார்கள். ஆனால் எப்போதும் தர்க்கங்கள் வினோதமானவை. ஆம். கெய்ரோவின் பிச்சைக்காரர்கள் தொடங்கி கோடீஸ்வரர்கள் வரை எல்லோரிடமும் தங்கம் வந்து சேர்ந்திருந்தது. அவர்கள் அனைவருமே தங்கத்தை விற்க முனைந்தார்கள். ஆனால் எவருக்கும் அதை வாங்க விருப்பமிருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய்த் தங்கம் நகரில் குவிய, அதற்கு அத்தனை தேவையும் இல்லாமல் போக, அதன் விலை சரியத் தொடங்கியது.

மித்கல் தங்கம் இருபது திர்ஹாமுக்கு விற்பதே ஏமாற்று வேலை என்று சொல்லும் அளவு பொன் விலை வீழ்ந்தது. தங்கத்தின் மின்னும்தன்மை குறைந்து போனதாய் எல்லோருக்கும் தோன்றியது. பெண்கள் தவிர எல்லோரும் கவலைப்பட்டார்கள்.

சுலைமானிடம் மொத்தம் நூற்றி இருபது மித்கல் பொன் இருந்தது. மேலும் தாமதம் செய்யாமல் அயூப்பை அழைத்துக் கொண்டு சுலைமான் கரீமின் வீடு சென்றான்.

கடந்த முறை கண்ட குழைவு இடந்தெரியாமல் கரைந்திருந்தது கரீமின் குரலில்.

“அஸ்-ஸலாமு அலைக்கும்.”

“வா-அலைக்குமு ஸ்-ஸலாம்.”

உள்ளிருந்து வளையல்கள் சரசரக்கும் ஓசை கேட்டது. மெஹ்ருனிஸாவாய்த்தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான் சுலைமான். தன்னை வரவேற்றுத் தான் வெட்கத்துடன் ஏதோ சேதி சொல்கிறாள் என நம்ப விரும்பினான். அஃது சிருங்கார இசையாய் ஒலித்து கிளுகிளுப்பூட்டியது. மெய் சிலிர்த்துக் கொண்டான்.

அயூப் சிரித்தபடி பேச ஆரம்பித்தார்.

“மெஹிர் பேசி விட்டுத் திருப்தி எனில் நிக்காஹ் நிச்சயிக்கலாம் என வந்தோம்.”

“ம்ம். சொல்லுங்கள்.”

“நூற்றி இருபது மித்கல் தங்கம் போடுகிறோம். மெஹ்ருனிஸாவை சுலைமானுக்கு நிக்காஹ் செய்விக்க வேண்டும். சீக்கிரம் செய்யலாம் எனப் பையன் நினைக்கிறான். கல்யாணம் எப்போது பண்ணலாம் எனக் கேட்டால் நேற்றைக்கு எனச் சொல்வான்.”

சொல்லி விட்டு தன் நகைச்சுவையைத் தானே ரசித்து, பலமாகச் சிரித்தார் அயூப். "மாமா!" என்று சுலைமான் அதட்ட, சட்டென அசடு வழிந்தபடி அமைதியானார்.

“நான் சொல்ல வேண்டும் என்றில்லை, கெய்ரோவில் இன்றைய நிலைமை என்ன என உங்களுக்கே தெரியும்.” - தயக்கம் தோய்ந்த குரலில் பீடிகையுடன் தொடங்கினார் கரீம். சுலைமானும் அயூப்பும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தங்கம் வைத்திருப்பதுதான் கணக்கு எனில் பள்ளிவாசலின் வாசலில் நின்று யாசகம் கேட்பவன் கூட பத்து மித்கல் பொன் வைத்துள்ளான். ஆனால் வாங்க ஆள் இல்லை.”

தான் சொன்னதை அவர்கள் இருவரின் மனமும் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தாரோ என்னவோ ஓர் இடைவெளி விட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தார்.

“இப்போதிருக்கும் தங்க விலைகூட அப்படியே நிலைக்குமா மேலும் குறையுமா எனத் தெரியவில்லை. அதனால் தங்கமாக மெஹிர் வாங்குவது சரியாகப் படவில்லை.”

அயூப் குரலை உயர்த்திக் கேட்டார்.

“நாம் முன்பு பேசியது தங்கம் தானே? அதற்காகத் தான் சுலைமான் சிரமப்பட்டு கடன் எல்லாம் வாங்கித் தங்கம் சேர்த்தான். இப்படித் திடீரென மாற்றிப் பேசுகிறீர்களே?”

“மன்னிக்க வேண்டும் அயூப் பாய். மாற்றிப் பேசுவது தவறு தான். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. அடுத்து கல்யாணத்துக்கு இரு மகன்கள் காத்திருக்கிறார்கள். இருவருக்கும் ஸ்திரமான தொழில் இல்லை. உங்களிடம் சொல்ல ஒன்றுமில்லை, இந்த மெஹிரில் ஒரு பகுதியை மெஹ்ருனிஸாவுக்குக் கொடுத்து விட்டு மீதியை வைத்துத் தான் அவர்கள் இருவருக்கும் நிக்காஹ்வைத் திட்டமிட்டேன். அதனால் காசாகவே மெஹிர் வாங்குவதே இன்றைக்குப் பாதுகாப்பானது என நினைக்கிறேன்.”

“மெஹிராகக் காசு வாங்குவது நம் மதத்தின் வழக்கத்திலேயே இல்லையே கரீம்?”

“அது பொதுவான சூழலில் தானே அயூப்? இக்கட்டில் விலக்கு ஏதும் இல்லையா?”

அயூப் சிரித்தார். கரீம் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுப் பின் தலை குனிந்தபடி சொன்னார்.

“அல்லாஹ் என்னைப் மன்னிப்பார் என நம்புகிறேன்.”

“சரி கரீம், முடிவா என்ன தான் எதிர்பார்க்கறீங்க?”

“மூவாயிரம் திர்ஹாம்.”

“…”

“அதிகரிக்கவே இல்லை. நூறு மித்கல் பொன்னின் முந்தைய மதிப்பு இது.”

தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்பவர் போல் விளக்கினார் கரீம்.

“சரி, நாங்கள் வருகிறோம்.”

அயூப் எழுந்து கொண்டார். சுலைமானும் தயங்கியபடி வணங்கி விட்டு எழுந்தான்.

“என்னைப் பிழையாக எண்ணாதீர்கள். என் மகன்களின் முடிவும் இதில் முக்கியம் அல்லவா! இன்னும் சொல்லப் போனால் நம் எகிப்திய சுல்தான், அமைச்சர்கள், அந்த மாலி மன்னன் என எல்லோருக்கும் இதில் பங்கிருக்கிறது. மன்னித்து விடுங்கள்.”

கரீமின் குரல் முதுகுக்குப் பின் ஒலித்தது. அவர் தம் சொல்லைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிக்க விழைகிறார் என்று தோன்றியது.

உள்ளிருந்து வளையல் சப்தம் நின்று விட்டிருந்தது. ஆனாலும் மெஹ்ருனிஸா இதைக் கேட்டுக் கொண்டு தானிருக்க வேண்டும். அவள் எனக்காக வருந்துவாளா அல்லது நானும் அவளுக்கு வந்த மாப்பிள்ளைகளுள் பத்தோடு ஒன்று தானா!

வலி மனதை அறுக்க சுலைமான் விரைந்து அவ்வீட்டை விட்டு வெளியேறினான்.

*

அன்றைய இரவின் சம்பாஷணையில் தான் அயூப் மாலி மன்னனைச் சபித்தார்.

சுலைமானும் கடும் வெறுப்பிலும் பெரும் சினத்திலும் இருந்தான் என்றாலும் அவன் அயூபைப் பேசிச் சமாதானம் செய்ய முயன்றான். - “மூஸா கெய்ரோ மக்களிடையே செல்வம் கொழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தானே இதைச் செய்தார்?”

“வெங்காயம். நல்ல எண்ணம் மட்டுமே நல்ல செயல்களைச் செய்யப் போதுமானது அல்ல. நல்ல அறிவும் அவசியம். அது அந்த மாலி அரசனிடம் கிஞ்சித்தும் இல்லை.”

“ஆனால் நாம் எல்லோருமே மூஸாவின் கொடையை போற்றத்தானே செய்தோம்?”

“ஆம். ஆரம்பத்தில் அதை விரும்பினோம். கெய்ரோவில் ஒவ்வொரு குடிமகனும் செழிப்பாக மாறுவான் எனக் கனவு கண்டோம். அந்த மன்னனின் செயல் அத்தகைய கற்பனைகளை விதைத்தது. ஆனால் இன்று நிலைமை வேறு. அது எவ்வகையிலும் பிரயோஜனமில்லாத தானமாகவே அமைந்தது. அக்கனவுகள் வெறும் கனவுகளே.”

“…”

“குடிகளுக்குப் பொருளாதாரம் தெரியாது; தர்க்கம் தெரியாது. ஆனால் ஆட்சியாளர்கள் அப்படிச் சொல்லித் தப்பிக்க முடியாது. எகிப்து சுல்தானாவது தங்கம் மிகையான அளவில் உள்ளே வருவதை உணர்ந்து திட்டமிட்டு அதை முறைப்படுத்தி இருக்க வேண்டும். செய்யவில்லை. கையாலாகாதவர்கள். இப்போது அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தங்கம் மட்டும் சேர்த்தவர்கள் தான் தெருவில் நிற்கிறார்கள்.”

“ஆம். இன்று நாம் திரும்புகையில் கடைவீதியில் பெரிய வரிசை. ஏதோ ஓர் அயல் தேச வணிகர் கூட்டம் தங்கம் பெற்றுக் கொண்டு திர்ஹாம் தந்தார்கள். அதுவும் ஒரு மித்கல் பத்தொன்பது திர்ஹாம் என்ற அடிஒட்டக விலை. ஆனால் அதற்கும் கூட்டம். வரிசையில் நின்றதில் பத்து பேருக்கு மேல் காசு கிட்டவில்லை. தீர்ந்து விட்டதாம்.”

“ஆம். கண்டேன். ஏற்கனவே மக்கள் இவ்விஷயத்தில் நம் மன்னனின் செயலின்மை குறித்து முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள். பொன்னை மாற்ற கஜானாவில் போதுமான அளவு திர்ஹாம்கள் இல்லாமல் சுல்தான் ஏன் அனுமதித்தார் என.”

“மெல்லப் பேசுங்கள் மாமா. அதைப் பேசினாலும் கழுத்தில் கத்தி வைக்கிறார்களே! நம் கஷ்டத்தை நாம் பேசினால், அதற்கு அரசை உதவக் கோரினால் தேசத் துரோகி என்கிறார்கள் சில தேச பக்தர்கள். கெய்ரோவில் எவருக்கும் சிரமமே இல்லையாம்!”

“இதில் எல்லையில் நிற்கும் போர் வீரர்கள் தியாகத்துடன் அபத்தமான ஒப்பீடு வேறு. அவர்கள் எகிப்து சாம்ராஜ்யத்துக்காக உயிரையே தருகிறார்களாம். இந்தப் பொன்னால் உண்மையில் நீண்டகால நோக்கில் நாட்டுக்கு நன்மைதான் விளையும் என்கிறார்கள்.”

“அதனால் மக்கள் சில தினம் இச்சிறுகஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்.”

“இத்தனை கஷ்டத்தையும் பகடியால் தானே எதிர்கொள்கிறோம். அதுவும் அவர்கட்குப் பொறுக்கவில்லை. ஊமைகளே ஓர் அரசுக்குப்பிரியத்துக்குரிய பிரஜைகளாய் இருப்பர்!”

“அவர்கள் சொல்வது போல் நிஜமாகவே இது எகிப்தைச் சுபிட்சமாக்குமா மாமா?”

“தெரியவில்லை சுலைமான். அப்படி ஆக்கினாலும் மக்களின் மண்டை ஓடுகளின் மீது நடந்தா அந்தச்சுபிட்சத்தை தேசம் அடைய வேண்டும்? எனில் தேசம் என்றால் யார்?”

“ஏற்கனவே மக்கள் ஆங்காங்கே கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். திர்ஹாமுக்கு வரிசை கட்டி நிற்பவர்கள் வெப்பம் தாளாமல் இறக்கிறார்கள். இன்னும் சிலர் பணமில்லை எனத் தற்கொலை செய்திருக்கிறார்கள். தெற்கே ஓர் ஊரில் அரசு வரி வசூல் செய்த பணத்தைக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதெல்லாம் எதை நோக்கிப்போகிறதோ!”

“இத்தனை பொன் உள்ளே வந்தும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. பிச்சைக்காரன் பிச்சைக்காரனாகவே தான் இருக்கிறான். ஒரே மாற்றம் அவன் கையில் இப்போது கொஞ்சம் தங்கம் இருக்கிறது. செல்லாப் பொன். உயிரற்ற பெண்ணுடல் போல்.”

அயூப் அப்படிச் சொன்னதும் சட்டென இருவருமே சற்று நேரம் மௌனமானார்கள்.

“சரி, ஊர்க் கதை ஒரு பக்கம் கிடக்கட்டும். நம் விஷயத்துக்கு வருவோம் சுலைமான்.”

“சொல்லுங்கள் மாமா.”

“கரீம் சொன்னதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.”

“சரி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். நாளை கனியிடம் போவோம். நம்மிடம் இருக்கும் தங்கத்தை அவனிடம் கொடுத்து திர்ஹாம்கள் தரச் சொல்லிக் கேட்போம். கடையை மீட்பது மிக முக்கியம். அதன் பிறகு மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம்.”

ஆமோதிப்பாய்த் தலை அசைத்தான் சுலைமான். அவனுக்கு கடை அளவுக்கு அல்லது அதற்கு ஒரு படி மேலேயே மெஹ்ருனிஸாவும் முக்கியம். ஆனால் அப்போதைக்குக் கடையை மீட்பதே உசிதமாகப் பட்டது. அல்லது வாடகைக்கே வருமானம் அழியும்.

*

மறுநாள் காலை கனியின் மாளிகைக்குப் போனார்கள். கனி நேரடியாகவே மறுத்தார்.

“எல்லாமே சுணக்கம் கண்டிருக்கிறது அயூப். கெய்ரோவில் பாதிக்கு மேல் தங்கப் பரிவர்த்தனையாகவே நடந்து வந்தது. மீதி தான் திர்ஹாம்களில். இப்போது தங்கம் கிட்டத்தட்ட செல்லாதது போலாகி விட்டதால் எல்லோரும் தாம் வைத்திருக்கும் திர்ஹாம்களைப் பதுக்கி வைத்துக் கொண்டுக் கொஞ்சமாகச் செலவு செய்கின்றனர்.”

“…”

“பணப்புழக்கமே பாதியாய் அருகி விட்டது. பொருட்களின் விலைவாசியும் ஏறத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் நான் தங்கத்தை வாங்குவது ஒவ்வாத காரியம். என்னிடம் இருக்கும் தங்கத்தையே விற்க முடியாத இக்கட்டில் இருக்கிறேன்.”

“புரிகிறது மாலிக்.”

“ஆனால் என்னால் ஓர் உதவி செய்ய முடியும். சுலைமான் கடைக்கு வாடகை தர வேண்டியதை சில மாதங்கள் வரை பொறுத்துக் கொள்கிறேன். கணக்கு வைத்துக் கொள்கிறேன். சேர்த்துக் கொடுங்கள். ஆனால் தாமதத்திற்கு அபராதம் உண்டு.”

“மிக்க நன்றி. இன்ஷா அல்லாஹ்!”

ஏமாற்றத்துடன் கிளம்பினர். கனி வீட்டிலிருந்து சுலைமான் வீட்டிற்கு வரும் வழி நைல் நதியை ஒட்டியது. இருவரும் மௌனமாக மணல் மேவிய நதிக் கரையில் நடந்து கொண்டிருந்தனர். உலகின் நீளமான அந்நதி தன் விஷ்வரூபத்தை மறைத்த படி அடக்கமாய்ச் சலசலத்துக் கொண்டிருந்தது. அதன் காற்று இதமாய்த் தழுவியது.

“கனியிடம் காசு இருக்கிறது சுலைமான். ஆனால் அவனுக்குத் தர மனதில்லை.”

“எப்படிச் சொல்கிறீர்கள் மாமா?”

“அவன் மூன்றாம் கல்யாணம் செய்யப் போவதாய்ப் பேசிக் கொள்கிறார்கள்.”

“இந்த வயதிலா? அவருக்கு நாற்பந்தைந்து வயதாவது இருக்குமே மாமா!”

“ஆம், அதெல்லாம் இங்கு புதிதா என்ன? பணமிருப்பவர்களுக்கு ஏதும் சாத்தியம். ஆனால் பெண்ணுக்குப் பதினாறு தான் இருக்கும். அதிலேதும் மாற்றமில்லை.”

“அடுத்தவர் விஷயம் நமக்கெதற்கு மாமா, விடுங்கள்.” - கசப்பாய்ச் சொன்னான்.

அவன் மனதைப் படித்துச் சுதாரித்தவராய் அயூப் பேச்சை மாற்ற விரும்பினார்.

“இயற்கையின் ராட்சச பிரம்மாண்டமான இந்த நைல் நதி ஒரு காலத்தில் வற்றிப் போனால் அது நைல் நதியின் பிழையா எனக் கேட்கிறார்கள். அதாவது காசு இன்றி மக்கள் அல்லலுறுவதற்கு சுல்தானோ அரசோ எவ்வகையிலும் பொறுப்பில்லையாம்.”

“அவர்கள் சொல்தில் நியாயமில்லை என்றாலும் தர்க்கமிருப்பதாய்ப் படுகிறதே!”

“அப்படி மாயை ஏற்படுத்துவது தான் அவர்களுக்கு கைவந்த கலை ஆயிற்றே!”

“அப்படி எனில் அது நதியின் குற்றமா?”

“ஆம். நதி என்பது ஜீவனுள்ள அம்சம். அது தன்னைத் தற்காத்துக் கொண்டு சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் பிழைக்கும் சக்தி அதற்கு உண்டு என்றே நம்புகிறேன். அல்லாவிடில் அதை நாம் வணங்க வேண்டியதில்லையே. அதனால் நைல் நதி வறண்டால் அது அந்நதியின் பிழையே. போலவே தான் மன்னனும்.”

“ம்ம்ம். புரிந்தது போல் இருக்கிறது.”

அப்போது விழுந்த ஓர் அனாவசிய மௌனத்தை அயூப் கலைத்தார்.

“உன் திருமண விஷயத்தை நீ தான் முடிவு செய்ய வேண்டும் சுலைமான்.”

“எனக்கு மெஹ்ருனிஸாவை விட மனமில்லை, மாமா.”

“புரிகிறது சுலைமான்.”

“…”

“நாடே பஞ்சத்தில் இருக்கிறது. கரீம் நினைப்பது போல் காசு தந்து கட்டக்கூடியவர் உடனடியாய்க் கிடைப்பது சிரமம். கொஞ்சம் நாளில் அதைப் புரிந்து கொண்டு கரீம் இறங்கி வரவும் கூடும். ஒன்று மெஹ்ருனிஸாவுக்காகக் காத்திருக்கலாம். அல்லது நிலைமை சற்று மேம்பட்ட பின் நமக்கு வசதிப்படும் வேறிடங்களில் பார்க்கலாம்.”

கடைசி வாக்கியத்துக்கு அழுத்தம் கொடுத்தார். சுலைமான் நிமிர்ந்து பார்த்தான்.

“ஆம், சுலைமான். நினைவிருக்கிறதா? நம் எகிப்திய சுல்தான் அல்-நஸீர் ஒருமுறை ராஜாங்கக் காரணங்களுக்காக திருமணத்திற்கு முதலில் பெண் கேட்டது மங்கோலிய மன்னன் ஓஸ்பெக் கானின் சொந்த மகளைத் தான். ஆனால் அவர்கள் கேட்ட பெரும் மெஹிர் சுல்தானுக்குக் கட்டுபடியாகாமல் போக, பின் ஓஸ்பெக் கானின் உறவுக்காரப் பெண்ணொருத்தியை மணந்தான். அரசி துல்பியா கெய்ரோ வந்தது அப்படித் தான். அரசனின் நிலைமையே அது தான். நீ ஏன் காற்றில் கோட்டை கட்ட வேண்டும்?”

“இல்லை மாமா, நான் காத்திருக்க விரும்புகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”

*

ஏழு மாதங்கள் ஓடின. கெய்ரோ முன்பை விட மோசமான நிலைக்குப் போயிருந்தது.

இடையில் நாட்டு நன்மைக்காக இந்தச் சிரமங்களை ஐந்து மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், நிலைமை சரியாகி விடும் என எகிப்து சுல்தான் அறிவிப்பு செய்தான். அவன் சொன்ன மாதங்கள் கடந்தன. ஆனால் நிலைமை மாறவில்லை. விலைவாசி விடமென ஏறியது. மாறாய்ப் பணப் புழக்கம் அறவே இறங்கியது. சிறுவியாபாரிகளின் தொழில் அழிந்து பட்டது. எல்லோரும் பார்த்துப் பார்த்துத்தான் செலவு செய்தார்கள்.

அவ்வப்போது தங்கத்துக்குக் காசு தருகிறார்கள் என்று நெடிய வரிசையில் கூட்டம் கூடினார்கள். தங்கம் மதிப்பிழந்ததால் மட்டும் சுமார் நூறு பேர் செத்துப் போனார்கள்.

இடையில் அயூபிற்கு மிதமான ஜன்னி கண்டு ஒரு வாரம் படுக்கையில் கிடந்தார். சுலைமானால் ஒரு மாதம் கூட தன் கடைக்கு வாடகை செலுத்த இயலவில்லை.

மரியாதை நிமித்தம் கனியைச் சந்தித்து வாடகை செலுத்த முடியாததைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லி விடலாம் என முடிவு செய்து அயூப்பும் சுலைமானும் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். மெதீனாவிலிருந்து தூதுவன் கனியைக் காண வந்திருப்பதால் காத்திருக்கும்படி வேலையாள் சொன்னான். சற்று நேரத்தில் கனி வந்து பேசினான்.

ஏழு மாதங்களாக வாடகை தரவில்லை என்பது பற்றி வருத்தம் தெரிவித்து மாதா மாதம் சிறுகச் சிறுகச் சேமித்து வந்ததாகவும் எதிர்பாராவிதமாய் அயூபிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கெனச் செலவாகி விட்டதாகவும் சொன்னார்கள்.

கனி யோசித்து விட்டு, “உங்களிடம் தங்கம் இருப்பதாகச் சொன்னீர்கள் தானே?”

“ஆம், சாஹிப்”

“அதை நான் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் பழைய விலைக்கு அல்ல. அதில் பாதி. ஒரு மித்கல் பதினைந்து திர்ஹாம்கள். வியாபார நிமித்தம் ஒரு தேசாந்திரம் போக வேண்டி இருக்கிறது. அதற்குக் கொஞ்சம் தங்கம் தேவைப்படுகிறது. அயல் நாடுகளில் தங்க மதிப்புக்குப் பிரச்சனையில்லை. உங்களுக்குச் சம்மதமெனில் சொல்லுங்கள்.”

அயூப்பும் சுலைமானும் தனியே வந்து ஆலோசனை செய்தார்கள். கடையை மீட்க அது ஒரு வாய்ப்பு எனத் தீர்மானித்தார்கள். மேலும் காசு மிஞ்சினால் அதிலிருந்து சேமிப்பை ஆரம்பிக்கலாம். சுலைமானின் மனதில் மூவாயிரம் திர்ஹாம்கள் சேமிப்பு என்ற கற்பனை ஓடியது. கரீம் கேட்ட மெஹிராகக் கேட்ட மூவாயிரம் திர்ஹாம்கள்!

சுலைமான் ஒப்புக் கொண்டான். கனி தங்கத்தைப் பொறுமையாக உரசியுரசிப் பார்த்து வாங்கிக் கொண்டு அசல், வாடகை, வாடகை தாமதமானதற்கான அபராதம் எல்லாம் கழித்து விட்டு ஐந்நூறு திர்ஹாம்கள் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு கனிக்கு ஒரு கூழைக் கும்பிடுடன் கூடிய நன்றிய உதிர்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

மறுபடி முதலிலிருந்து தொடங்க வேண்டும் என்பது மட்டும் பிரச்சனை. இன்னும் மெஹ்ருனிஸாவுக்கு மணமாகவில்லை என்பதை விசாரித்து வைத்திருந்தான்.

*

அடுத்த மாதத்து நண்பகல் ஒன்றில் மீண்டும் கெய்ரோவில் பரபரப்பு தோன்றியது.

மெக்கா புனிதப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலி தேசம் திரும்பும் வழியில் மூஸா மன்னன் மீண்டும் கெய்ரோவுக்கு வந்தான். ஆனால் இம்முறை அவனிடம் தங்கம் இல்லை. மெக்காவிலிருந்து கிளம்பும் போதே மூஸா கொண்டு வந்திருந்த தங்கமெல்லாம் தீர்ந்திருக்க, மெதீனா, கெய்ரோ என திரும்பும் வழியில் கிடைத்த தங்கத்தைக் கடனாகப் பெற்று மாலி திரும்பியதும் திர்ஹாம்களாக அனுப்புவதாக வாக்களித்தான். தங்கம் வைத்திருந்தவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள்.

ஆனால் மூஸாவின் திட்டம் வேறு. மெதீனாவில் போதுமான அளவு தங்கம் கிட்டாது போக, அங்கிருக்கும் போதே கெய்ரோவுக்குத் தூது அனுப்பினான். தூதுவன் எகிப்து மன்னனைச் சந்திக்க, அவன் தேர்ந்தெடுத்த சில பணக்காரர்களுக்குச் செய்தி அனுப்பி ஒரு மாதத்துக்குள் தங்கத்தைத் தயார் செய்து வைக்குமாறு சொல்லி அனுப்பினான்.

மூஸா வரப்போவதும் தங்கம் வாங்கப் போவதும் முன்பே தெரிந்ததும், கெய்ரோவின் பெருவணிகர்கள் அனைவரும் தங்கத்தை மிகக் குறைந்த விலைக்குச் சேகரிக்கத் தொடங்கினார்கள். இப்போது மூஸாவிடம் ஒரு மித்கல் தங்கத்தை முப்பத்தைந்து திர்ஹாம்களுக்கு விற்றார்கள். பின் எகிப்து சுல்தானின் அரசவையில் வைத்து அனைத்து வணிகர்களுக்கும் தான் அடுத்த ஆறு மாதத்தில் மாலி திரும்பியதும் மொத்தத் தொகையையும் அனுப்பி வைப்பதாக எழுத்துப்பூர்வ உறுதியளித்தார்.

அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் பெயரால் நன்றி தெரிவித்தார். தங்கத்தை மக்களிடம் சிதற விடாமல் பெருவணிகர்களிடம் குவித்து வைத்த எகிப்து சுல்தானின் மதியூகத்தை வியந்தார். அல்லாது போயிருந்தால் பொதுமக்களிடம் இப்படிக் கடன் பெற்றுச் செல்வதும் பிறகு சரியான நபருக்குத் திருப்புவதும் சிரமமாகி விட்டிருக்கும்.

“நன்றாக ஏமாந்து விட்டோம் சுலைமான். இது பெரும் பணக்காரர்களுக்கான உலகம்!”

அன்றிரவு கசப்பாய்ச் சொன்னார் அயூப். அதற்குப் பதிலில்லை சுலைமானிடம். பதில் ஏதும் இருந்து அதைச் சொன்னாலும் என்ன வித்தியாசம் என்றெண்ணிக் கொண்டான்.

*

மந்தகதியான ஓடுசுமக்கும் நத்தையின் நகர்ச்சியில் மேலும் ஏழு மாதங்கள் கழிந்தன.

கெய்ரோ சோர்ந்திருந்த போதும் சுலைமான் தன் கடுமையான உழைப்பின் மூலம் கடையைக் கொஞ்சம் விஸ்தரித்தான். இப்போது அவனிடம் ஆயிரம் திர்ஹாம்கள் சேர்ந்திருந்தன. மெஹ்ருனிஸா தான் ஒரே நோக்கமாய் அவன் மனதில் இருந்தாள்.

இடையிடையே நண்பர்கள் மூலம் அவளுக்கு இன்னும் மணமாகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். ஒரு முறை கரீம் தன் பிடிவாதம் தளர்த்திக் கொண்டு இரண்டாயிரத்து ஐந்நூறு திர்ஹாம்களுக்கு பெண்ணைத் தரத் தயாராய் இருப்பதாய்க் கேள்விப் பட்டான். அடுத்த முறை அவர் மேலும் கீழிறங்கி இரண்டாம் மனைவியாய் அவளைக் கட்டித் தரவும் தயாராய் இருப்பதாய்ப் பேசினார்கள். இப்படியாய் நல்லதும் கேட்டதுமாய் மாறி மாறி சுலைமானின் செவிப்பறைகளில் அதிர்ந்தன. அவன் தினம் வீடு வருவதும் தன் சேமிப்பை எண்ணி எண்ணி பத்திரம் செய்வதுமாய் இருந்தான்.

ஒரு நாள் கரீம் வீடிருக்கும் பகுதியில் வசிக்கும் அந்த சினேகிதன் வந்திருந்தான்.

“மெஹ்ருனிஸாவுக்கு நிக்காஹ் வைத்திருக்கிறார்கள் சுலைமான்”

அவன் அதிர்ந்தான். அந்த அதிர்ச்சி ஒற்றை எழுத்தாகவே வெளிப்பட்டது.

“ஓ!”

“ஆம். அடுத்த மாதத்தில் வருகிறது. மூன்றாம் தாரமாய்த் தான் போகிறாள். வரதட்சணை மூவாயிரம் திர்ஹாம்கள் என்பதாகப் பேசிக் கொள்கிறார்கள்.”

“…”

“ம்ம்ம்”

“மாப்பிள்ளை யார்?”

“கனி.”

வேறு ஏதேனும் கனியாய் இருக்கக்கூடும் என நினைத்துக் கொண்டான் சுலைமான்.

***

(கோடைக்கானல் பின்நவீனத்துவ பயிற்சி வகுப்பின் குளிரிலிருந்த ஐந்து தினங்களில் எழுதத் தொடங்கிய சிறுகதை இது. இந்தக் கதைக்கும் போஸ்ட்மார்டனிஸத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை அறியேன். ஆனால் அங்கு அணுக்கமாகப் போதித்தவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான டி. தருமராஜ். அவருக்கு இக்கதையைச் சமர்ப்பணம் செய்கிறேன்.)