அரட்டைக்குத் திரட்டியவை
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நூறு நவீனத் தமிழ் கவிஞர்களின் கவிதைகளை தினம் ஒன்று வீதம் ('அரட்டைகேர்ள்' சௌம்யாவுக்கு மென்ஷனோடு) ட்விட்டரில் போட்டு வந்தேன். அவற்றின் முழுத்தொகுப்பு இது. உடன் அதன் கதையும். நூறு என்ற எண்ணிக்கையை மனதில் வைத்துத் தொடங்கவில்லை. ஆரம்பிக்கும் போது எந்த எண்ணிக்கையுமே மனதில் இல்லை. அறுபது கவிதைகள் கடந்த போது தான் நூறு என்ற எண்ணிக்கை மனதில் உதித்தது. தொன்னூறு தொட்ட போது 365 போட்டால் என்ன என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் இப்போது இத்தொடர் அதன் உச்சத்தில் இருக்கிறது; எனக்கு ஆர்வமான சவாலாக இருக்கிறது; அது அலுப்பான கடமையாக மாறக் கூடாது. அதற்கு முன்பு நிறுத்தி விட வேண்டும். அதனால் தான் நூறோடு நிறுத்தினேன். நிறுத்த மனமில்லாமல், ஆனால் மனநிறைவோடே நிறுத்தப்பட்டது இத்தொடர். எந்த நாளும் தடைபடாமல் தொடர்ந்து இது வெளியாக சில பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருந்தது. இந்த மூன்றரை மாதங்களில் பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சிவகங்கை என் பல ஸ்தலங்களில் ஓரிரு தினங்களைக் கழிக்க நேர்ந்தது. அவ்விடங்களின் பணி அழுத்தங்கள், இணையத