மரண தண்டனை - ஓர் எதிர்வினை

மரண தண்டனை குறித்தான‌ என் முந்தைய பதிவுக்கு ராஜன் குறை கிருஷ்ணன் ஆற்றியிருந்த எதிர்வினையையும் அதற்கான எனது பதில்களையும் இங்கே தந்திருக்கிறேன் (உள்ளடக்கம் நீண்டு விட்டதால் தனிப்பதிவாக இடுகிறேன்):

*******

ராஜன் குறையின் எதிர்வினை:

முகப்புத்தகத்திலும்/வலைப்பூவிலும் இந்த எதிர்வினையை பதிவு செய்கிறேன். நீங்கள் மரண தண்டனை இருக்கலாம் என்று சொல்வதற்குக் காரணம் பரவலாக பலரும் சொல்வதுதான். நான் உங்களுடன் உடன்படவில்லை. அதற்கான காரணங்களை கீழே தருகிறேன்.

1) மரண தண்டனை ஒரு நூற்றாண்டுக்காலமாக ஊடகங்கள் பரவலாகிய பின் நவீன இந்தியாவில் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள். அது குறித்த பிரக்ஞை, உங்கள் வார்த்தையில் மரண பயம், குற்றங்களை நடக்காமல் தடுத்திருக்க வேண்டுமே? ஏன் மேலும் மேலும் கொடூரமான கொலைகள், சதிகள் போன்றவை நடக்கின்றன? ஏனெனில் ஒன்று அவை உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் பேதலித்த நிலையில் நடக்கின்றன அல்லது நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையில் நடக்கின்றன. மரண தண்டனையால் மோசமான குற்றச்செயல்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படித்தால் குற்றங்களின் கொடூரம் உங்களை பெரிதும் வியப்படை வைக்கும்.

2) மரண தண்டனை என்பது ஒருவரின் உயிரை குடிமக்கள் அனைவர் சார்பாகவும் அரசு பரிப்பதாகும். இது மக்களையெல்லாம் கொலையில் பங்குதாரர்களாக மாற்றும் செயல். ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் கொடுந்தண்டனையைவிட மரணம் பெரியதா? ஆனால் ஒருவரின் உயிரை எடுக்கும் அதிகாரம் நமக்கு இருப்பதாக நினைப்பது நாகரீக சமூகத்தின் அடிப்படைகளை கேள்வி கேட்பது. உண்மையில் மரண தண்டனைதான் பலரையும் கொலை செய்யத் தூண்டும். அரசு எல்லார் சார்பாகவும் கொலை செய்யலாமென்றால் அதை நானே செய்துவிட்டுப் போகிறேனே என்று அவரவர் நீதி வழங்க நேர்கிறது. என்கவுண்டர் என்ற பொய்ப்பெயரில் போலீஸே குற்றவாளிகளை கொன்று தீர்க்கிறது. இதெல்லாம் குற்றங்களை அதிகரிக்கின்றனவே தவிர குறைப்பதில்லை. ஏனென்றால் சாவிற்கு அஞ்சாதவர்கள்தான் ரெளடிகளும், கிரிமினல்களும். அவர்கள் அதை ஒரு வாழ்க்கை முறையாகத்தான் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கிறார்கள்.

3) மக்கள் தொகைக்கும் குற்றத்திற்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்துகிறீர்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மக்கள் தொகையும், அடர்த்தியும் குறைவாக இருக்கும் ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளைப் பற்றி படித்துப் பாருங்கள். குற்றம் என்பது மனித இயல்பு. அது நிகழாத எந்த சமூகத்தையும், ஆதிவாசி குழுக்கள் உட்பட மானுடம் அறிந்ததில்லை. அதனால் ஒரு நவீன அரசு உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி மக்களை நல்லவர்களாக வைத்திருக்க முடியும் என்பது முதிர்ச்சியற்ற கற்பனை என்றே நினைக்கிறேன்.

*******

எனது பதில்கள் / விளக்கங்கள்:

டியர் ராஜன் குறை,

தங்கள் விரிவான எதிர்வினைக்கு நன்றி. அவற்றுக்கான‌ பதில்களை / விளக்கங்களை கீழே வரிசைப்படி தந்திருக்கிறேன்.

1) மேலும் மோசமடையாமல் தற்போதிருக்கும் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கே மரண தண்டனை தேவையாய் இருக்கிறது என்பதே நிதர்சனம். அதாவது மரண தண்டனை இல்லாதிருந்தால் நம் சமூகத்தில் ஒப்பீட்டளவில் இன்னமும் குற்றங்கள் அதிகமாய் நடந்து கொண்டிருக்கும். உயிருக்கு பயந்தவர்கள் குற்றம் புரிவதையே மரண தண்டனை தடுக்கும். And believe me, குற்றம் செய்ய விழையும் கணிசமானோருக்கு இந்த பயம் குறைந்த அளவிலேனும் இருக்கவே செய்யும். அந்த சதவிகிதத்தினரின் பயத்தை சமூகப் பாதுகாப்புக்காக‌ capitalise செய்து கொள்வதே மரண தண்டனையின் சூத்திரம். அதாவது மரண தண்டனையின் scope என்பது நன்கு திட்டமிட்டு, தன் செயலின் விளைவுகள் புரிந்து  ஒரு குற்றத்தில் இறங்குபவர்களைக் குறைப்பதற்கானது மட்டுமே (கவனிக்கவும் குறைப்பதற்கானது; ஒழிப்பதற்கானது அல்ல).

2) நாம் நாகரீகம் அடைந்தவர்களாய்க் காட்டிக் கொள்தல் முக்கியமா அல்லது பாதுகாப்பாய் வாழ்வது முக்கியமா எனக்கேட்டால் நான் இரண்டாவதைத் தான் தேந்தெடுப்பேன். மனித உயிரை மனிதனே பறிப்பது சரியில்லையெனில் முதலில் நீங்கள் ராணுவத்தைத் தான் தடை செய்ய வேண்டியிருக்கும். அதே போல் மரணதண்டனை என்பது உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஒரு வகை ராணுவம் என்ற முறையில் தவிர்க்கவியலாதது. நீங்கள் சொல்வது போல் மரண தண்டனையைக் காரணம் காட்டி அவரவர் சட்டத்தைக் கையிலெடுத்து சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தால் அதற்கும் மரண தண்டனை தான் பதிலாக அமைய முடியும். நம் தேசத்தின் சட்டத்தை அது இப்போதிருக்கும் நிலையில் அப்படியே கொண்டு மரண தண்டைனை வழங்குவது ஆபத்தானதே. அதனால் தான் சட்ட திருத்தங்களுடன் கூடிய மரண தண்டனை என்கிறேன். என்கௌண்டர், சட்டத்தைக் கையிலெடுத்தல் போன்ற விஷயங்களும் இத்திருத்தங்கள் மூலம் தடுக்கப்படும்.

3) பத்து பேருக்கு ஒரு போலீஸ்காரன் இருப்பதற்கும், நூறு பேருக்கு ஒரு போலீஸ்காரன் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நூறு பேருக்கு ஒரு கோர்ட் இருப்பதற்கும், ஆயிரம் பேருக்கு ஒரு கோர்ட் இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. மக்கட்தொகை என்று நான் சொல்ல வருவது இந்த கண்காணிப்பின் வீச்சினைத் தான். மக்கட்தொகை அதிகமிருப்பதால் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்படாமலேயே தப்பி விடுகின்றன. அப்படிக் கண்டுபிடிக்கப்படும் குற்றங்கங்களும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அதனால் ஒருவன் சுலபமாய் குற்றம் புரிந்து நிரந்தரமாய் அல்லது நெடுநாள் தப்பித்திருக்க மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற ஒரு தேசம் ஏதுவான ஸ்தலமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் மரண தண்டனையையும் ஒழித்து விட்டால் குற்றவாளிகளுக்கு அது தீபாவளிக் கொண்டாட்டம் தான்.

ஒரு வகையில் உங்கள் எதிர்வினை என் தரப்பை மேலும் தெளிவாக எடுத்துரைக்க வழிவகை செய்திருக்கிறது - நன்றி.

 - CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet