பரத்தை கூற்று : லக்ஷ்மி சாஹம்பரி

லக்ஷ்மி சாஹம்பரி என் மிகுபிரியத்திற்குரிய கவிஞ‌ர்களுள் ஒருவர். காலச்சுவடு, வார்த்தை இதழ்களில் அவரது கவிதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. நிலாரசிகன் நிலா விருதுகள் 2008ல் சிறந்த புதுமுக கவிஞராக லக்ஷ்மியையும் குறிப்பிட்டிருந்தார். அதே போல் எனது படித்தது / பிடித்தது தொடரிலும் அவரது கவிதை இடம்பெற்றிருக்கிறது.

தற்போது, நிறைய இடைவெளி விட்டு எழுதுகிறார். எந்த அளவுக்கு எனில், கடைசியாய் ஒரு கவிதையை சென்ற வாரத்தில் எழுதியிருக்கிறார்; அதற்கு முந்தையது சென்ற வருடத்தில்! அவரது அந்த கடைசிக்கவிதை : விடாது பொழியும் / மழை விட்டுச் செல்லக்கூடும் / வானவில்லை / சிலநேரங்களில் / கவிதையையும். தற்போது அவர் வசிக்கும் பிரதேசத்தில் வருடமொருமுறை தான் விடாது மழை பொழிகிறது போலும்.

பரத்தை கூற்று படித்து விட்டு அவர் எழுதிய கடிதம் அவரது அனுமதியுடன் இங்கே:

*******

அன்பின் CSK ,

நெடுநாட்களுக்குப்பிறகு , நல்லதொரு வாசிப்பை தந்தது உங்கள் குழந்தை !!
வாய்ப்புள்ள களத்தினை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.உங்களின் சில சிந்தனைகள் பிரம்மிக்க வைக்கின்றன - உளமார பாராட்டலாம் !!

சில கருத்துக்களை எனக்குச் சொல்லத் தோன்றுகிறது - அவை எனது கருத்து மட்டுமே - உண்மையாய் இருத்தல் வேண்டும் என்ற அவசியம் துளியும் இல்லை :)

ஐந்திணை பிரிவுகளை தந்துள்ளீர்கள் - நன்று .. எனினும் ஒவ்வொரு திணைக்குமான பகுப்பு இன்னும் வெளிப்படையாக இருக்கலாம். பெரும்பாலான கவிதைகளில் அப்பெண்டிரின் ஒரே விதமான, அதாவது அவர்கள் தொழிலை நியாயப்படுத்தும் தன்மை மட்டுமே வெளிபடுகிறது. பல நேரங்களில் ,ஒன்றை பற்றிய குற்றஉணர்ச்சி அதிகமாகும் பொழுது அதிலிருந்து மீள அதை நியாயப்படுத்த முயற்சி கொள்வோம். இக்கவிதைகளில் இத்தன்மை எனக்கு தூக்கலாக தோன்றுகிறது. இதை மற்றுமொரு தொழிலாகவும் பலர் அணுகுகின்றனர் - பலர் இத்தொழில் புரிவதை எண்ணி வருத்தம் கொள்கின்றனர் - சில கவிதைகளில் அதை கண்ணுற முடிகிறது. இன்னும் பல கோணங்களை கையாண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஒரு சில கவிதைகள் - தகவல்களாகவே அமைந்திருக்கிறது. இன்னும் செதுக்கி இருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆங்கிலக்கலப்பு திணிக்கப்பட்டதாக தெரிகிறது, மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை - "கிளிக்கு எதுக்கு பருந்தின் சிறகுகள் " என்ற அறிவுமதியின் கருத்து மனதில் தோன்றுகிறது.

நல்ல தொகுப்பு .மேலும் சிறந்த படைப்புகள் பலவற்றை தருவீர்கள் என்ற நம்பிக்கையை உங்கள் எழுத்து தருகிறது.

வாழ்த்துக்கள் !!

நட்புடன்
லக்ஷ்மி சாஹம்பரி

*******

அவரெழுதிய‌ மெயிலின் சப்ஜெக்ட் ":)". மேலே குறிப்பிட்ட கவிதையின் தலைப்பும் அதே!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்