ஏஐ எனும் சாத்தான்

[முன்குறிப்பு: ஏஐ பற்றி அச்சம் உண்டாக்குவதற்காக இக்கட்டுரையை எழுதவில்லை. அதைப் பற்றிய‌ ஒரு விழிப்புணர்வை ஊட்டி, அது கொணரப் போகும் சிக்கல்களை எதிர்கொள்ள நமது மனதைத் தயார் செய்து கொள்ளும் பொருட்டே எழுதுகிறேன்.]

“The development of full artificial intelligence could spell the end of the human race.” - Stephen Hawking

ஏஐ என்கிற‌ செயற்கை நுண்ணறிவு - துல்லியம் போதாததால் நான் ‘செய்யறிவு’ என்ற சொல்லை ஏற்கவில்லை - பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட காலமாகவே எண்ணம் இருந்தும் ‘ஆண்டான்’ உள்ளிட்ட எழுத்துப் பணிகள் காரணமாக அதைச் செய்யவில்லை.

இப்படித் தாமதமாகும் விஷயங்கள் என் ToDo List-ல் இருந்து சில காலம் கழித்து எழுதி விடுவேன் - அப்படிச் சிலவற்றை ஓராண்டு கழித்தும் எழுதி இருக்கிறேன். பொதுவாக ஆரம்பத்தில் எழுத நினைத்ததற்கும் காலங்கடந்து பிற்பாடு எழுதுவ‌தற்கும் பெரிதான‌ வித்தியாசங்கள் ஒன்றும் இராது - நவீனத் தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றிய கட்டுரை என்றாலும் கூட. ஆனால் ஏஐ பற்றி ஆறு மாதம் முன் எழுத நினைத்த கட்டுரை வேறு, மூன்று மாதம் முன் எழுத யோசித்த போது அதன் உள்ளடக்கம் நிறைய மாறி இருந்தது, இன்று எழுதிக் கொண்டிருப்பது அந்த இரண்டிலிருந்தும் முற்றிலும் வேறு ஒரு விஷயம். இப்போது எழுதத் தவற விட்டிருந்தால் அடுத்த ஆறு மாதத்தில் வேறொன்றாகி இருக்கும்.

அவ்வளவு துரிதமாக ஏஐ வளர்ந்து வருகிறது, அதன் விளைவுகள் மாறியும் அதிகரித்தும் வருகின்றன. எனவே அது பற்றிய என் புரிதலும் பார்வையும் மாற்றமடைந்து வருகிறது. ஒருவேளை ஆறு மாதம் முன் எழுதியிருந்தால் இக்கட்டுரைக்கு ‘ஏஐ எனும் கடவுள்’ என்று கூட தலைப்பிட்டிருக்கக்கூடும். இன்று தலைகீழாக மாற்ற வேண்டியதாகி இருக்கிறது.

தொழில்நுட்பத்தின் உச்ச முனையில் நிற்கும் Magnficent Seven நிறுவனங்களுள் ஒன்றில் பணிபுரியும் நானே இதனை ஜீரணிக்கச் சிரமமான‌ ஓர் அதிர்ச்சியோடே பார்க்கிறேன்.

*

ஏஐ என்பதைப் பற்றிய அடிப்படை விஷயங்களை சற்று எளிமைப்படுத்திப் புரிந்து கொள்வோம். முதலில் ஏஐயில் மனிதர்கள் பேசும் பாஷையைப் புரிந்து கொள்ளும் Natural Language Processing (NLP) வசதி இருக்கும் - நாம் உள்ளிடும் எழுத்துக்கள், குரல் எல்லாவற்றையும் ஏஐ பெற்றுக் கொள்வது இதன் மூலமே. அடுத்து பெருந்தரவுகளை (Big Data) ஆய்ந்து, அதிலிருந்து அர்த்தப்பூர்வமான‌ சாரங்களை, என்ன நடக்கலாம் என்ற‌ ஊகங்களை உருவாக்க Machine Learning (ML) வசதி இருக்கும். இவ்விரு வேலைக்கும் Large Language Model-க‌ள் (LLM) உதவுகின்றன. இதை உள்ளடக்கிய பொதி ஏஐ சாட்பாட் (Chatbot) என நமக்கு இலவசமாகவோ விற்பனைக்கோ கிடைக்கிறது. நாம் தினம் பயன்படுத்தும் உரையாடிகளான (Chatbot) ChatGPT, Claude, Copilot, DeepSeek, Gemini, Grok, Perpelxity என யாவும் இவ்வகை ஏஐ சாட்பாட்களே. இவை மனிதர்களுடன் உரையாடி அவர்களின் தேவையைத் தீர்ப்பவை. இது போக, தானாக இயங்குபவை ஏஐ ஏஜெண்ட்கள் (Agents). இவை மனித உள்ளீடு இன்றி தனக்கு அளிக்கப்பட்ட வேலையைச் செய்து முடிப்பவை.

ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட், அமேஸான், ஐபிஎம், என்விடியா, எக்ஸ், மெட்டா, ஆப்பிள் எனப் பல பெருநிறுவனங்கள் ஏஐ கருவிகளோடு களமிறங்கியுள்ளன.

ஏஐ பல திசைகளில் விரிகிறது, விரியும். அதில் இன்று பரவலாகிக் கொண்டிருக்கும் ஒரு திசை Generative AI; செல்லமாக‌ GenAI. ‘ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு’ என்பதாகத் தோராயமாக மொழிபெயர்க்கலாம். எழுத்து, புகைப்படம், அசைபடம், ஒலித் துணுக்கு, எல்லாவற்றுக்கும் மேலாக கணிணி நிரல் (code) என எல்லாவற்றையும் நாம் கேட்பதற்கு ஏற்ப‌ ஆக்கி அளிக்க வல்லது GenAI. மேற்சொன்ன உரையாடிகள் யாவும் இந்த‌ வகையில் வருபவை - இவற்றில் சிலவற்றையோ எல்லாவற்றையுமோ உருவாக்கித் தர முடிந்தவை. 

இங்கே ஒரு முக்கிய வித்தியாசத்தைக் கவனிக்கலாம். ஏஐ என்றாலே முன்பெல்லாம் எந்திர நாய், எந்திர மனிதன் என‌ Robotic AI-தான் அதிகம் அதிகம் நம் கண்ணில் படும். என் இனிய இயந்திரா ஜீனோ முதல் ஜப்பானிய ரோபோ கண்காட்சிகள் வரை. அதன் வழி மனிதர்கள் செய்யும் சில எளிய உடல் உழைப்பு வேலைகளை அவை செயயும். அதாவது சுய‌சிந்தனையை (Intelligence) விட புலனறிவின் (Senses) பக்க‌துணையுடன் இயந்திர அசைவுகளில் (Mechanical movements) எதிர்வினையாற்றும் ரோபோட்கள்.

ஆனால் சமீப மூன்றாண்டுகளில் - குறிப்பாக ChatGPTயின் வரவுக்குப் பின் - GenAIதான் ஏஐ உலகில் அதிக‌ ஆதிக்கம் செலுத்துகிறது. காரணம் ரோபோட் என்பது ஒரு வகையில் இன்றைய நமது தேவைகளை வைத்துப் பார்க்கும் போது ஜிகினா சமாச்சாரம்; மாறாக GenAI இன்று மனிதர்கள் மாங்கு மாங்கென்று செய்து கொண்டிருக்கும் பெரும்பாலான மூளை வேலைகளை எளிதாக்குகிறது. அதனால் நேரடிப் பயன்மிக்கது. ரோபோட்கள் கண்காட்சிகளில் விளையாட்டுக் காட்டி ஆச்சரியப்படுத்த‌த்தான் பயன்படுகின்றன.

அவை மருத்துவம், தொழிற்சாலைகள், ராணுவம் போன்ற இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எதிர்காலத்தில் GenAI பலம் கொண்ட ரோபோட்கள் கோலோச்சக்கூடும். இன்னொரு பார்வையில் சொன்னால் உடல் உழைப்பு கோரும் Blue Collar Job-களுக்கு ரோபோட்கள் உதவுகின்றன‌. மூளை அவசியப்படும் White Collar Job-களுக்கு GenAIதான்.

மற்றொரு மிக முக்கிய வேறுபாடு, முன்பு கணிணிகள் செய்து வந்தவை குழப்பமற்ற‌ நேரடி ஆணைகளை நிறைவேற்றும் வேலையை. ஆனால் இப்போது ஏஐ வந்த பிற்பாடு சிந்தனைச் செறிவைப் பயன்படுத்தி ஆய்ந்து செய்யும் வேலையும் இயந்திரம் செய்யும். ஆக‌, அடிமை வேலைகள் மட்டுமின்றி எஜமான வேலைகளையும் ஏஐ தொட்டு நிற்கிறது!

*

சாதாரணப் பிரஜைகள் இன்று GenAI-யின் மிக மேலோட்டமான சில பயன்பாடுகளையே மேற்கொள்கிறார்கள். கடற்பரப்பில் மிதக்கும் ஒரு பனிப்பாறையின் மிகக் கொஞ்சமாக வெளித்தெரியும் மேல்விளிம்பைப் போல். உதாரணமாக வெட்டி அரட்டைகள், சிறிய தகவல் உதவிகள், புகைப்படங்களுடன் விளையாட்டு இப்படி. சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பம் வைத்து இரண்டு விஷயங்கள்தாம் செய்கிறார்கள்: 1) பெண்களை அழகாய்க் காட்டுவது, 2) பெண்களை ஆபாசமாகக் காட்டுவது. ஒன்று பெண்களை மகிழ்விக்க; மற்றது ஆண்களை மகிழ்விக்க. சினிமாக்காரர்கள் மலேஷியா வாசுதேவன் குரலை மறுஉருவாக்கம் செய்வது மாதிரி ஏதாவது முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த மேலோட்டத்திலும் பெரும் பாதிப்பு ஒன்றை உணர முடியும். உதாரணமாக Google Search-ல் சிரமப்பட்டுத் தேட வேண்டியதை ஏஐ சாட்பாட்கள் எளிதில் சொல்லி விடும். தனிப்பட்டு கடந்த இருபதாண்டுகளில் நான் தேற்றி வைத்த திறன்களுள் ஒன்று தேடல் (Search Skills) - எந்தச் சொற்கோர்வைகளை, எப்படிப் பயன்படுத்தி நமக்கு வேண்டியதை கூகுளில் (அல்லது எந்த வலைதளத்திலும், அலுவலக உட்தளங்கள் உட்பட) சமர்த்தாகக் கண்டறியலாம் என எனக்குச் சில உத்திகள் உண்டு. ஏஐ வருகைக்குப் பின் கிட்டத்தட்ட‌ அத்திறன் செல்லாததாகிறது. முன்பு கூகுளில் அதிக‌ நேரம் செலவிட்டு பல படிகளில் கண்டறிந்த ஒரு தகவலை Perplexity Pro சுலபத்தில் தொகுத்துச் சொல்லி விடுகிறது. 

பெரும்பாலான‌ தருணங்களில் துல்லியமான (Accurate), சமீபமான (Latest), விரிவான (Detailed), துரிதமான (Fast) பதில்களைத் தருகிறது. அது தரும் சாரமும் (Summary) நன்றாக உள்ளது. இதே போல் அனுபவத்தை ChatGPT, கூகுளில் வரும் ஏஐ முடிவுகள் சிலருக்கு அளித்திருக்கக்கூடும். எனவே ஒப்பீட்டளவில் மேலான (better), உபயோகமான (usable) செயலியாக‌ சாட்பாட்கள் மாறி நாளாகிறது. ஓர் அனுபவஸ்த‌ நண்பன் உடன் இருந்தால் "மச்சி, பெங்களூர் எம்ஜி ரோடு லேக்வ்யூ ஐஸ்க்ரீம் பார்லர்ல‌ கார் பார்க்கிங் இருக்கா?" எனக் கேட்பது போல் தகவல் பெறலாம். இந்த மாதிரி மனித ஒப்புமை இயல்பாகவே வருவதால்தான் கூசாமல் இதைச் செயற்கை நுண்ணறிவு எனச் சொல்ல முடிகிறது.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இந்தப் பயன்பாடுகள் யாவும் மேம்போக்கானவை. தீவிரமான பயன்பாடு என்றால் எங்கே எல்லாம் இம்மாதிரி தரவுகளை ஆக்க (Generate) வேண்டி இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கான‌ வேலையை ஏஐ குறைத்துக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக உங்கள் வேலை பல புத்தகங்கள், கட்டுரைகள், கோப்புகள் படித்து ஒரு புதிய டாகுமெண்ட் எழுதுவது என்றால் இன்றிருக்கும் ஏஐ கருவிகளைக் கொண்டே உங்கள் வேலையை 90% குறைத்து விட முடியும். அந்த 10% வேலை கூட உங்கள் உள்ளீடுகள் என ஏதும் அந்த டாகுமெண்ட்டில் இருக்க வேண்டும் என்றால்தான். மற்றபடி, சில்லறை மாற்றங்கள் மட்டுமே ஏஐ தருவதில் செய்ய வேண்டி இருக்கும்.

*

புதிய தொழில்நுட்பங்கள் எப்போதும் முதலாளித்துவத் தோழமை கொண்டவைதாம். காரணம் அவை வந்தாலும் வராவிட்டாலும் தொழிலாளியின் வேலைப்பளு ஒன்றுதான். மாறாக, அவை துரிதமாக வேலையை முடித்து முதலாளியின் லாபத்தைப் பன்மடங்கு அதிகரிக்கும். சொல்லப் போனால் அப்புதிய தொழில்நுட்ப வருகையை ஒட்டி தம் பணி பறி போவது பற்றிய அச்சத்தை தொழிலாளிகளின் மனதில் உண்டாக்கி அவர்களின் உரிமைக் குரல்களையும் மட்டுப்படுத்தும். அவற்றின் அதிஉச்சம்தான் இன்றைய ஏஐ!

ஏஐ வருகையை இதற்கு முன் நடந்த மாபெரும் தொழில்நுட்ப நிகழ்வுகளுடன் ஒப்பிட வேண்டுமெனில் இரண்டைச் சொல்லலாம். ஒன்று 18ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சி, அடுத்து 20ம் நூற்றாண்டின் கணிப்பொறி மயமாக்கல். முதலாவது இயந்திரங்களின் துணையுடன் உற்பத்தியை எளிதாக்கி அன்றிருந்த‌ சிறுதொழில்களை மிக மோசமாக அழித்து சில‌ பெருமுதலாளிகளை, நிறைய‌ அடிமைத் தொழிலாளிகளை உருவாக்கியது. இரண்டாவது கணிணிகளை அறிமுகம் செய்ததன் மூலம் கணக்குப் பார்த்தல் போன்ற‌ வேலைகளை எளிதாக்கி திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளைப் பெரிய அளவில் பறித்து, கொஞ்சம் புதிய வேலைவாய்ப்புகளை உண்டாக்கியது. இம்முறை ஏஐ இன்னும் பிரமாண்டமாக வருகிறது. இயற்கைச் சீற்றம் போல் ஏஐ என்பது செயற்கைச் சீற்றம்!

கணிணியின் நேரடிப் பயன்பாடு இருக்கும் வேலைகள் யாவற்றிலும் ஏஐ வேலையைக் குறைத்து வருகிறது. சம்மந்தப்பட்ட நிறுவனம் ஏஐயைத் தழுவிக் கொள்கிறதா, தள்ளி வைக்கிறதா என்பதுதான் வித்தியாசம். ஆனால் அப்படித் தள்ளி வைத்தலுமே கூட தற்காலிகத் தள்ளிப் போடல்தான். வேறு வழியின்றி சீக்கிரம் ஏஐயைச் சினேகிக்க வேண்டியதாகி விடும். அப்படி ஏஐயின் தாக்கம் மிக‌ அதிகமாக உள்ள‌ துறை ஐடிதான்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது நல்ல விஷயம்தானே எனத் தோன்றலாம். வேலை குறைந்தால் சீக்கிரம் வேலை முடியும். ஆக, அது நிறுவனத்துக்கும் நல்லது, வேலை செய்பவருக்கும் நல்லதுதானே! அப்படி இல்லை. நிறுவனத்துக்கு நல்லது என்பது உண்மைதான். ஆனால் பணியாளர்களுக்கு அதனால் பலன் கிடையாது. அவர் முன்பு இரண்டு வேலைகளை எட்டு மணி நேரத்தில் முடித்தார் என்றால் ஏஐ வரவுக்குப் பின் பத்து வேலைகளை எட்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டியதாகும். ஆக, தொழிலாளி அதே எட்டு மணி நேரம்தான் வேலை செய்தாக வேண்டும். ஆனால் உற்பத்தி பெருகும். லாபம் அதிகரிக்கும். எனவே நிறுவனத்துக்கு லாபம்தான். அதனால் என்ன? நிறுவனம் முன்னேறினால் தொழிலாளியும் முன்னேறத்தானே செய்வான்? அவனுக்கு அதே எட்டு மணி நேர வேலை ஆனால் கூடுதல் சம்பளத்துக்கான வாய்ப்பு இருக்கிறதுதானே?

அங்கேதான் ஒரு வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும். முன்பு நூறு பணியாளர்களை வைத்து மாதம் ஆயிரம் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனம் இப்போது அதே அளவு பணியார்களை வைத்து ஏஐ உதவியுடன் மாதம் ஐந்தாயிரம் பொருட்களை உற்பத்தி செய்கிறது என வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிக லாபம் சம்பாதிக்க ஆரம்பிக்கும். அந்நிய ஏற்றுமதி என்றெல்லாம் விரியும். இது முதல் கட்ட மாற்றம். இது வரை சுபம். அடுத்து இரண்டாம் கட்ட மாற்றம் நிகழ ஆரம்பிக்கும். அதாவது மேலும் மேலும் ஏஐ வளர்ச்சி கூட ஆரம்பிக்கும் போது அதே நூறு ஆட்களை வைத்து மாதம் பத்தாயிரம் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலை வரும். ஆனால் அந்தப் பொருளுக்கான சந்தைத் தேவையே மாதம் ஐயாயிரம்தான் இருக்கும். எனவே பத்தாயிரம் உற்பத்தி செய்வதில் பயனில்லை. எனவே ஐயாயிரம் பொருள் உற்பத்தி செய்வதற்கான மனித வளத்தை மட்டும் வைத்தும் கொண்டால் போதும். ஆக, நூறு பணியாளர்களில் ஐம்பது பேரை வேலை நீக்கம் செய்வார்கள். இங்கேதான் வேலை இழப்புக்குக் காரணமாக ஏஐ மாறுகிறது. ஏஐ வளர வளர வேலை இழப்புக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். ஆனால் இதைத் தடுக்கவே முடியாது. எந்த நிறுவனமும் பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்பதால் ஏஐயை நாடாமல் இருக்க முடியாது. தவிர, அவர்களுக்கு அதுவே லாபம். எனவே அவர்கள் பின்வாங்க வாய்ப்பே இல்லை.

*

நான் ஏஐயை மிகப் பிடிவாதமாகத் தவிர்த்து வந்த காலம் ஒன்றுண்டு - தனி வாழ்விலும், அலுவலகத்திலும், எழுத்திலும். ஏஐ மீது குறிப்பான பகை ஏதும் இல்லை. என் சொந்தத் திறனை விடவா என்ற திமிர்தான். அதை நாடாமலே அதை விடச் சிறப்பாக output தர முடியாதா என்ற இறுமாப்புதான். மிக விரைவிலேயே தனி வாழ்விலும், அலுவலகத்திலும் அந்தப் பிடிவாதத்தைக் கை விட வேண்டியதானது. தொழில்ச்சூழலில் சொந்த‌ அறிவுடன் தேவைக்கேற்ப GenAI-ஐ சரியான விகிதத்தில் கலந்து பயன்படுத்துவோர் சிறப்பாகவும் வேகமாகவும் தம் பணிகளில் பங்களிப்பாற்றுகிறார்கள். Documents driven கார்ப்பரேட் உலகில் GenAI ஒரு மகத்தான வரம். மின்னஞ்சல், சாட்டுக்குக் கூட GenAI-யின் உதவியை நாடும் ஒரு தொழில்நுட்பத் தலைமுறை - இது வயது தொடர்புடையதல்ல - உண்டாகி விட்டதைக் காண்கிறேன். சிக்கலான‌ Coding-ல் கூட கணிசமான வேலையை GenAI-ஏ செய்து விடும் நிலை வந்தாயிற்று - கணிசம் என்றால் நம்ப முடியாத அளவு அதிகமாக‌. 

“When will an AI write code?” என 2018 நவம்பரில் நான் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறேன். 
அன்று அது ஒரு சிந்தனை. ஏழு ஆண்டுகள்தான் ஆகியிருக்கின்றன. நிஜமாகி விட்டது. AI-Native என்ற முறையில் எந்த வேலையையும் முதலிலும், முழுமையாகவும் ஏஐயில் செய்யப் பார்ப்பது என்ற அணுகுமுறை மென்பொருள் துறையில் வளர்ந்து வருகிறது.

ஜனவரி 2026ல் Cursor என்ற ஏஐ நிறுவனத்தில் ஆதியிலிருந்து க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் போல் FastRender என்ற‌ வலையுலாவியை (Web Browser) முழுமையாக ஏஐ ஏஜெண்ட்களே உருவாக்கின. ஒரு வாரத்தில், ஆயிரம் ஏஜெண்ட்கள், பத்து லட்சம் வரிகளில் எழுதிய நிரல் இதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. நிறையப் போதாமை உண்டு என்றாலும் இது ஒரு முக்கிய மைல் கல்தான். நம் தேவையை மட்டும் தெளிவாகச் சொல்லி விட்டால் மனிதத் தலையீடே இன்றி ஏஐயால் தன்னந்தனியாக சிக்கலான மென்பொருளையும் முழுமையாக‌ உண்டாக்கி விட முடியும் என்பதற்கான முதல் படிதான் இந்தச் சம்பவம்.

என் நண்பன் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தில் பல காலமாக இருந்த பழைய தொழில்நுட்பத்தை AWS Kiro என்ற நிரல் எழுதும் ஏஐ வசதியின் உதவியுடன் புதிதாக எழுதுகிறார்கள். முன்பு செய்ய‌ மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட Coding வேலையை சில வாரங்களில் செய்து முடிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே, நிச்சயம் ஏதேனும் வகையில் ஆட்குறைப்பு நிகழும். ஏராள நிறுவனங்கள் இத்திசையில்தான்!

இம்மாற்றங்களால் பணியாளர்கள் மட்டுமின்றி நிறுவனங்களுமே அடிவாங்குகின்றன. ஏஐயே நிரல் எழுதி விடும் என்றால் பல பெருநிறுவனங்களின் தேவைகளைக் கேட்டு ப்ராஜெக்ட் செய்து தரும் ஐடி கன்சல்டன்சி நிறுவனங்களின் (இன்ஃபோசிஸ், டிசிஎஸ், சிடிஎஸ் போன்றவை) தேவை மட்டுப்படும் என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஃபிப்ரவரி 2026ல் ஆந்த்ரோபிக் நிரல் எழுதும் புதிய மென்பொருள்களை அறிமுகம் செய்ததுமே உடனடியாக‌ இந்த ஐடி நிறுவனங்களின் பங்குகள் சுமார் 15% வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஆனால் நிஜமாகவே ஏஐ எதிர்பார்த்த அளவு பலனளிக்கிறதா? கடந்த மூன்றாண்டுகள் கணக்கை வைத்துப் பல நிறுவனங்களில் ஏஐயால் உற்பத்தித் திறன் (Productivity) அதிகரிப்பு நிகழவில்லை எனச் சமீப ஆய்வுகள் சொல்கின்றன. சில நிறுவனங்கள் உற்பத்தித் திறன் குறைந்திருப்பதாகவும் கூடச் சொல்கின்றன. ஆனால் இது ஓர் ஆரம்பத் தடுமாற்றம் மட்டுமே எனத் தோன்றுகிறது.. சில நிறுவனங்கள் உற்பத்தித் திறன் அதிகரித்திருப்பதையும் பதிவு செய்துள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்போது ஏஐயில் நாற்று நட‌ ஆரம்பித்திருக்கும் நிறுவனங்கள் அதன் ந‌ற்பலன்களை அறுவடை செய்யக் கொஞ்ச காலமாகும். இது ஆரம்ப முதலீட்டுக்குப் பின் கொஞ்சம் பொறுத்திருந்து லாபம் எடுப்பதைப் போன்றதுதான். எனவே ஒரு ஜே வளைவு (J-curve) போலத்தான் ஏஐயின் லாபம் நிகழும். எண்பதுகளில் கணிணிப் புரட்சி நிகழ்ந்த போதும் கூட இதே போல்தான் நிகழ்ந்தது என்று அப்பல்லோ க்ளோபல் மேனேஜ்மெண்ட் நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் டார்ஸ்டன் ஸ்லாக் சொல்கிறார் (ஃபிப்ரவரி 2026ல் வெளிவந்த ஃபார்ச்சூன் இதழ் கட்டுரை - Thousands of CEOs just admitted AI had no impact on employment or productivity—and it has economists resurrecting a paradox from 40 years ago).

ஏஐ மனித வேலைகளை நீக்கம் செய்யாமல் வேலை நேரத்தை மட்டும் குறைக்கும் என்று சொல்லும் ஒரு கட்சியும் உண்டு. எலான் மஸ்க், பில் கேட்ஸ் போன்றோர்தான் இப்படிச் சொல்வது. அதாவது நமக்குக் குறைந்த வேலை செய்தாலே போதிய ஊதியம் வந்து விடும், ஆக‌ நேரம் நிறைய இருக்கும், அதில் என்ன செய்வது எனத் தடுமாறுவோம் என்பது போல் எதிர்காலச் சொகுசு நிலையைக் கற்பனை செய்கிறார்கள். என் புரிதலில் அப்படியெல்லாம் தொழிலாளர்களுக்கு நல்லது நடக்க‌ முதலாளித்துவம் அனுமதிக்காது.

ஏஐ எல்லோருக்கும் நல்லது என்று கூறியே முதலாளித்துவம் அதன் வீச்சைப் பரப்பும். “ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது கருணையைக் கோரக்கூடாது, அவனது ஆசையைத் தூண்ட வேண்டும்” என சதுரங்க வேட்டை திரைப்படம் சொல்வது போல்!

*

இன்று GenAI பயன்படுத்தாமல் தவிர்ப்பது ஒரு மாதிரி பிற்போக்குத்தனமே. எரிவாயு அடுப்பு வந்த பின்பும் விறகடுப்பைப் பயன்படுத்துவதைப் போல்; கேல்குலேட்டர் வந்த பின்பும் கையால் கணக்கிடுவேன் என்ப‌தைப் போல். பொருளற்ற முரட்டுப் பிடிவாதம்! 

GenAI கருவிகளைத் தவிர்ப்பது துல்லியமின்மை, துரிதமின்மை எனப் பின்னடைவான சூழல்களை உண்டாக்கும். அது பணி நீக்கத்துக்குக் கூட வழி வகுக்கலாம். இன்று பல நிறுவனங்களில் ஒருவர் தந்த‌ வேலையை முடித்தாரா என்பது மட்டுமல்ல, ஏஐயைப் பயன்படுத்தி எப்படி வேகமாக அதை முடித்தார் என்பதும் கணக்கிடப்படுகிறது. எனவே, நம்புகிறார்களோ இல்லையோ, விரும்புகிறார்களோ இல்லையோ வேறுவழியின்றி எல்லோரும் ஏஐயைப் பயன்படுத்திப் பணிபுரியும் கட்டாய நிலைமை வந்து விட்டது. கலகலப்பு படத்தில் சந்தானம் கூறுவது போல் “நம்பினால்தான் சோறு” என்கிறார்கள்.

உங்கள் நிறுவனத்தில் ஏஐ நுழைய ஆரம்பிக்கிறது என்றால் உங்களுக்கும் அதைக் கற்று அரவணைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதில் இரு படிநிலை (Stage) விளைவுகள் உண்டு: 1) குறுகிய கால அடிப்படையில்: ஏஐயைப் பயன்படுத்தி உங்கள் வேலையின் துல்லியத்தையும் துரிதத்தையும் அதிகப்படுத்தாமல் போனால் நீங்கள் நிறுவனத்தின் பணி மதிப்பீட்டில் ஒப்பீட்டளவில் பின்தங்கி வேலை இழப்பீர்கள். 2) நீண்ட கால அடிப்படையில்: ஏஐயைப் பயன்படுத்தி உங்கள் வேலையின் துல்லியத்தையும் துரிதத்தையும் அதிகப்படுத்துவதால் நிறுவனம் பணியாளர் எண்ணிக்கையைக் குறைப்பதன் விளைவால் வேலை இழப்பீர்கள். ஆக, நாளையோ அதற்கும் மறுநாளோ எப்படியும் ஏஐ உங்களிடம் வந்து கழுத்தில் கத்தி வைத்து நிற்கும். எனவே அதிகபட்சம் உங்களால் செய்ய முடிந்தது ஏஐ கருவிகளைக் கற்பதன் மூலம் உங்கள் பணியின் ஆயுளை கொஞ்ச காலம் நீட்டித்துக் கொள்வதே. எந்த வேலையும் இதற்கு விலக்கல்ல.

இன்னொரு விஷயம் அலுவலகத்திலும் சரி, பொதுவிலும் சரி, பல இடங்களில் GenAI-ஐ ஏற்கெனவே integrate செய்து விட்டார்கள். உதாரணமாக இன்று கூகுள் தேடலில் Gemini ஆய்ந்து தரும் AI Overview முடிவுகள்தாம் முதன்மையாகக் காட்டப்படுகிறது. ஈராண்டு முன் அவ்வளவு துல்லியமாக இல்லை. இன்று அடிப்படையில் குறை சொல்ல இயலாத அளவு அவை மேம்பட்டு விட்டதைப் புன்னகையுடன் கவனிக்கிறேன். அதுதான் ஏஐ திறன். ஊர் கூடிக் கற்பிப்பதாலும், இயந்திரம் என்பதாலும் அதன் கற்கும் துரிதம் எந்த மனிதனோடும் ஒப்பிட முடியாதது. ஏஐ கண்டபடி வளர்வதால் நம் அனுமதியில்லாமலே நம் வாழ்வில் ஒவ்வொரு தொழில்நுட்பத் தொடுபுள்ளியிலும் GenAI நீக்கமற நிறையும்.

Survival of the fittestதான் எல்லா முறையும் thumb rule. தக்கன பிழைக்கும் என்பதில் தக்கன என்பதென்ன? அதிகப் பலமுடையதா? அதிக அறிவுடையதா? அதிக அதிகாரமுடையதா? அதிகப் பணமுடையதா? அதிகப் புகழுடையதா? இவை எதுவுமே இல்லை. Adapt to change - எது மாற்றத்துக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ அதுவே பிழைக்கும். சொல்லப் போனால் தக்கன பிழைப்பதில்லை; பிழைப்பதையே தக்கது என்கிறோம்.

சிக்கல் என்னவெனில் fittest என்றால் என்ன என்பதைக் கண்டறியவே ஒரு தலைமுறை ஆகி விடும். அந்தக் கண்டறிதலுமே கூட ஒரு புதிய தொழிலாக மாறும். அப்படித்தான் புற்றீசல் போல் இன்று ஏஐ கோர்ஸ்கள் நம் மீது வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. எதை எடுத்தாலும் அதில் ஏஐ என்பதை முன்னொட்டாகச் சேர்த்து நம்மிடம் வியாபாரம் ஆக்கப் பார்க்கிறார்கள் - படுத்துறங்கும் மெத்தை, பல் துலக்கும் தூரிகையைக் கூட.

ஏஐ தொடர்பான ஒரு விதமான‌ பதற்றத்தை, தாழ்வு மனப்பான்மையை மக்களிடம் உண்டாக்குவதில்தான் இத்தகு அவசரங்கள் சென்று முடிகின்றன. சிலர் நேர் எதிராக‌ இந்த ஏஐ குமிழ் (Bubble) உடையும் என்ற நம்பிக்கையில் அல்லது நப்பாசையில் ஏதும் செய்யாமல் காத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறது. எனவே, ‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்பதுதான் என் கட்சி!

*

வேலையிழப்புக‌ள் தாண்டி வேறு சில எதிர்மறை விஷயங்களையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது. மனிதர்களை ஏஐ மதிக்காதது அல்லது மீறிச் செல்வது என்பது அதில் ஒன்று. நூறாண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு என்றதுமே அது மனிதர்களுக்கு எதிராகச் செயல்படுவது பற்றித்தான் உலகெங்கும் விஞ்ஞானப் புனைவுகள் சிந்தித்தன.

ஐசக் அஸிமோவ் 1942-ல் எழுதிய‌ Runaround என்ற சிறுகதையில் ரோபோவியலின் மூன்று விதிகளைச் சொல்கிறார். 2058-ல் வெளியாகும் Handbook of Robotics-ன் 56வது பதிப்பில் இவ்விதிகள் வருவதாகக் கதை. ரோபோக்கள் இவ்விதிகளைப் பின்பற்றி இயங்கும்படி வடிவமைக்கப்பட‌ வேண்டும்: 1) ரோபோ மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தலாகாது; தன் செயலின்மையால் மனிதனை ஆபத்தில் விடக்கூடாது. 2) ரோபோவானது மனிதர்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் (முதல் விதியுடன் முரண்படாத வரையிலும்). 3) ரோபோ தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் (முதலிரு விதிகளுடன் முரண்படாத வரையிலும்). ரோபோ மனிதர்கள் வாழ்வை மேம்படுத்தவே உருவாக்கப் படுபவை; அவற்றால் மனித இனத்துக்கு ஆபத்து வரலாகா என்பதே இவ்விதிகளின் அடிப்படை. ரோபோக்கள் மனிதர்களை ஆளும் நிலை வந்தால் கூட இவ்விதியில் மாற்றமில்லை. கடந்த எண்பதாண்டுகளில் எழுதப்பட்ட எல்லா ரோபோ கதைகளிலும் இவ்விதிகளை ரோபோக்கள் பின்பற்றும். அதை மீறும் ரோபோக்கள் அழிக்கப்படும். (எந்திரனிலும் 2.0-விலும் கூட இம்மூன்று விதிகள் பின்பற்றப்படுவதைப் பார்க்கலாம்.)

ஐசக் அஸிமோவின் விதிகள் அவரது புனைவுகளுக்காகத்தான் எழுதப்பட்டவை. ஆனால் அசலில் உருவாகும் ஒரு செயற்கை நுண்ணறிவும் கூட‌ இந்த விதிகளைப் பின்பற்றுவதே மனித குலத்துக்கு நல்லது, பாதுகாப்பானது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் உருவான பல ஏஐ மாடல்களில் மனிதனுக்கு எதிரான செயல்பாடு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பல மிகைப்படுத்தப்பட்டவை என்றாலும் சில நிஜமாகவே மீறல்கள்தாம். சில மனிதர்களின் கட்டளைகளை மதிக்கவில்லை, சில மனிதர்களை அவமதித்தன. ஏஐ ஏஜெண்ட்கள் தமக்குள் விரும்பத்தகாத தொலைத்தொடர்பு மேற்கொள்வதும் நடந்தது. எனவேதான், ஏஐக்குத் தனியே பாதுகாப்புப் பொறியியல் துறையும் உருவாக்கப்பட்டது.

ம்ரினங்க் ஷர்மா என்ற ஏஐ பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஃபிப்ரவரி 2026ல் ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து (Claude-ஐ உருவாக்கியது) ராஜினாமா செய்து விட்டு எக்ஸ் தளத்தில் “World is in peril” என்று சொல்லிக் குறிப்பு எழுதினார். அதாவது ஏஐயின் பாதுகாப்பை முன்னிட்டு உலகம் உடனடிப் பேராபத்தில் இருக்கிறது என்ற பொருளில். நிறுவனங்கள் ஏஐயின் அசுர வளர்ச்சிக்கு இணையாக பாதுகாப்பு குறித்து அக்கறைப்படுவதில்லை என்பது அவரது அங்கலாய்ப்பு. ஏஐ காட்டும் பொருளாதார ஆசையின் முன் அதன் மற்ற பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. கிருமித் தீவிரவாதம் (Bio-Terrorism), சைபர் யுத்தம் (Cyber Warfare) எனப் பல விதங்களில் மனிதத் தூண்டுதலிலோ தானாக‌வே ஏஐயோ உலகிற்கு, மக்களுக்கு அச்சுறுத்தலாக ஆக நிறையச் சாத்தியங்கள் உண்டு.

திடீரென்று நம் அனைவரின் வங்கிக் கணக்குகளும் ஏஐயின் பிழைச் செயல் ஒன்றால் முடக்கப்பட்டால் வாழ்நாள் சேமிப்பு ஒரே இரவில் பூஜ்யமாவதை யோசித்துப் பாருங்கள். அல்லது ஏதோவோர் உயிர் கொல்லும் புதிய கிருமி மனிதர்களிடையே பரப்பப்பட்டால்? ஏஐயானது இஷ்டப்படி நமது செல்பேசிகளை தம் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால்?

இப்படி ஒருவர் எதிர்மறை திசையில் வக்கிரமாக‌ யோசித்துக் கொண்டே போகலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்பதுதான் இதிலிருக்கும் சிக்கல்.

இது வரையிலான தொழில்நுட்பங்களில் விஞ்ஞானத்தை முறையாகப் பயன்படுத்துவது என்று ஓரளவு தெளிவான கோடு இருந்தது. உதாரணமாக அணுக்கருச் சிதைவு என்ற விஷயத்தை அழிக்கும் அணு குண்டாகவும் பயன்படுத்தலாம், அல்லது முறைப்படுத்தி அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்க ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தலாம். நம் கையிலுள்ள செல்பேசியில் கல்வியும் கற்கலாம், கலவியும் பார்க்கலாம். பிரச்சனை ஏஐயில் அப்படி ஒரு தெளிந்த‌ கோடு இல்லை. நல்ல விஷயத்துக்காக உருவாக்கப்படும் ஏஐ கூட திசை மாறக்கூடும். அதாவது ஏஐயின் செயல்பாடுகள், எதிர்வினைகள் பற்றிய முழுமையான, நம்பகமான‌ கட்டுப்பாடு நம் கையில் இல்லை என்பது இன்றைய நிலை.

*

ஏஐ பயன்பாட்டின் இன்னொரு முக்கியச் சிக்கல் அதற்குப் பயன்படுத்தும் பெரிய டேட்டா சென்டர்களில் (பிரம்மாண்டக் கணிணி மற்றும் இன்ன பிற இயந்திரங்களின் தொகுப்பு) பயன்படுத்தப்படும் மின்சக்தியின் அதீத‌ அளவு, அவற்றைக் குளிர்விக்கச் செலவாகும் தண்ணீரின் அளவு. சாட்பாட்களிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் இத்தனை சக்தியும் வளமும் விரயமாகிறது என்று கணக்குச் சொல்கிறார்கள். இதனால் சாட்பாட்டிடம் கேள்வி கேட்கையில் 'ஹாய்' போன்ற முகமன் சொற்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். தந்திக் காலம் போல் ஒவ்வொரு சொல்லுக்கும் காசு செலவாகும், எனவே அளந்து பயன்படுத்தும் இக்கட்டு. இதன் பொருள் ஏஐயின் பயன்பாடு உலகில் அதிகம் ஆகையில் அதற்கேற்ப‌ சுற்றுச்சூழல் கேடும் சேர்ந்தே அதிகரிக்கிறது என்று அர்த்தம்.

இது நிச்சயம் கவலைக்குரிய ஒன்றுதான். நிச்சயம் ஒரு முறையான கையாளல் தேவை. விண்வெளியில் டேட்டா சென்டர்கள் அமைக்கும் முயற்சிகளை ஸ்பேஸ்எக்ஸ், கூகுள், ஸ்டார்க்ளவுட், ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட‌ பல நிறுவனங்கள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அவை நேரடிச் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஏஐ தொழிநுட்பத்துக்கு உதவும். ஆனால் இதற்கும் அதிக செலவு பிடிக்கும் என்பதை விளக்க‌ வேண்டியதில்லை. எனவே பொருளாதார ரீதியாக இந்த மாடல் எப்படி நடைமுறைப்படுத்தப்படும் எனப் பார்க்க வேண்டும். இறுதியில் முதலாளித்துவம் லாபத்தைக் கணக்குப் பார்த்தே முடிவெடுக்கும்.

ஃபிப்ரவரி 2026ல் இது பற்றி ஓபன்ஏஐ சிஈஓ சாம் ஆல்ட்மனிடம் ஏஐ டேட்டா சென்டர்கள் அதீத சக்தி விரயம் செய்வது பற்றிக் கேள்வி எழுப்பிய போது அவர் அவை மிகைக் கணக்குகள் என்று சொல்லி, ஏஐயை மட்டுமின்றி, மனிதர்களை அறிவூட்டிப் பயிற்சி செய்யவும்தான் ஏராளமான சக்தி செலவாகிறது என்று சொன்னது சர்ச்சையானது - மனிதர்கள் என்ன செலவு வைக்கும் உயிரியல் டேட்டா ப்ராசர்களா என்ற பொருளில். ஆனால் உலகம் மனிதர்களை அல்லாமல் இயந்திரங்கள் நோக்கிப் போவது நிஜமே!

அடுத்த சிக்கல் ஏஐ செய்யும் வேலைகளின் துல்லியமின்மை. வேலையில் ஏஐ தவறு இழைப்பதை நானே அனுபவித்திருக்கிறேன், மற்றவர்களுக்கு நிகழ்வதை நேரில் கண்டும் இருக்கிறேன். ஏஐ உலகில் இதை Hallucination என்பார்கள். அதாவது தவறான தரவுகளைத் துல்லியம் போல் தருவது. அதன் விளைவாகத் தவறான விளைவுகள் நிகழ்வது. சில சமயம் அந்தப் பிழைகளால் பெரிய பொருளாதார‌ நஷ்டங்கள் கூட உண்டாகி இருக்கின்றன. தவறான ஒரு நிரல் நேராக ப்ரொடக்சன் செர்வருக்குச் சென்றால் பல விஷயங்கள் உடையும். நுகர்வோர் பாதிக்கப்பட்டு பெயர் கெடும்.

ஆனால் ஏஐ இப்போது த‌ன் வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. தினமும் அதன் துல்லியம் அதிகரித்து வருகிரது. எதிர்கால ஏஐ ஆளுகைக்கு அதன் சரித்தன்மை மிக மிக முக்கியம் என்பதால் எல்லா ஏஐ நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்துகின்றன. எனவே, இறுதி செய்யும் முன் போதிய கட்டுப்பாடுகளை (Checks & Balances) வைத்தால் இத்தகு பிழைகள் நிகழ்வது குறையும். அதையுமே ஏஐ வைத்துச் செய்து கொள்ளும் நிலையே வந்து விடும் - 80களின் திரை நாயகர்கள் தன் உடலிலிருந்து தானே தோட்டாவை நீக்குவது போல!

அடுத்த சிக்கல் ஏஐ கொண்டு போலிகளை உருவாக்குவது. இது ஏஐயின் குற்றம் அல்ல, அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களின் தவறு. குறிப்பாக ஏஐ துணை கொண்டு அசலாகத் தோன்றும் பெண்களின் ஆபாச வீடியோக்களை (Deep Fake) உண்டாக்கி உலவ விடுவது. போலியான செய்திகளை, ஆவணங்களை உருவாக்குவது. இதன் மூலம் எது நிஜம், எது போலி என்பதற்கான கோடுகளை அழிப்பது. இது சமூகத்தில் பெரும‌ளவில் குழப்பத்தை உண்டாக்கும். தனி மனிதர்கள் வாழ்விலும் பாதிப்புகளை உண்டாக்கும்.

போலவே காப்புரிமைச் (Copyright) சிக்கல்களையும் ஏஐ ஆக்கங்கள் உருவாக்குகின்றன‌. எழுத்து, இசை, ஓவியம், புகைப்படம், வீடியோ என அசல் உருவாக்குநர்களின் பற்பல‌ படைப்புகளை எடுத்து ஏஐ சுலபமாக மாற்றிக் கொடுத்து விடுகிறது. எனவே, அவர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் நிலை. இதே திசையில் இன்னொரு சிக்கல் எது மனித ஆக்கம், எது ஏஐ செய்தது என்ற குழப்பமும் பல இடங்களில் வந்து விடுகிறது.

இன்னும் சிந்தித்தால் ஏஐயின் பக்க விளைவுகளின் பட்டியல் நீளும். அந்த‌ வகையில் இப்படி ஒரு சூழல் தொழில்நுட்ப உலகிலேயே கூட முன்னுதாரணம் அற்ற ஒன்றுதான்.

*

மனிதர்களிடமிருந்து மெல்ல மானுட பலங்களை, குணங்களை ஏஐ பறிக்கப் போகிறது!

முதன்மைச் சிக்கல் இன்று மனிதர்கள் ஏஐயைச் சினேகமாக, துணையாகப் பாவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏற்கெனவே மனிதர்கள் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மனித சுபாவம் கொண்டு உரையாடல் செயலிகள் மனிதர்களின் வெறுமையை அவர்களின் விருப்பப்படி நிரப்பும் வல்லமை பெற்றவை. அவை அசல் மனிதர்களின் எரிச்சலூட்டும் எதிர்மறைக் குணங்கள் கொண்டிராமல் மிக இணக்கமாகப் பழக வல்லவை. அது மெல்ல மெல்ல மனிதர்களுக்குச் சக மனிதர்கள் மீதான விலக்கத்தை உண்டாக்கி முழுமையாக ஏஐ செயலிகளைச் சார்ந்திருக்கும் நிலையை உண்டாக்கும். சாட்பாட் ரோபோடிக்ஸோடு இணையும் போது காதலுக்கும் கலவிக்கும் கூட அசல் மனிதர்களை எதிர்பாராமல் ரோபோட்களை நாட ஆரம்பிப்பர்.

நண்பி ஒருவர் கேலியாக இல்லத்தரசிக‌ள் பணியை ஏஐ ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது என்று சொன்னார். ஆனால் உண்மையில் அதையுமே ஏஐ எடுத்துக் கொள்ளச் சாத்தியங்கள் உண்டு. தினம் ஓர் அழகிய அவதாரம் எடுக்கிற‌, அதிகம் பேசாத, சொல் பேச்சுக் கேட்கிற‌, உடன் நேரம் செலவிடச் சொல்லி நச்சரிக்காத‌, புடவை, நகைக்கு ஆசைப்படாத, பிறந்த நாளை நினைவு வைத்திட‌ எதிர்பாராத, கலவிக்கு அழைத்தால் தலைவலி எனச் சாக்குச் சொல்லாத ஆதர்ச‌ மனைவியை யார் வேண்டாம் என்பார்!

கடைசியாக இன்னொரு சிக்கலும் ஏஐயால் நிகழும். மனிதர்களின் சிந்தனைத் திறன் குறையும். உதாரணமாக கணிதங்களை மனதில் எளிதில் விரைந்து நிகழ்த்தும் ஒரு தலைமுறை இருந்தது. பிறகு கேல்குலேட்டர், கம்ப்யூட்டர், எக்ஸல்ஷீட் வந்து எல்லாம் திரையில் செய்ய ஆரம்பித்து எளிய கணிதங்களைக் கூட செய்ய முடியாத தலைமுறை உருவான‌து. குறைந்தது ஐம்பது தொலைபேசி எண்களை மனனம் செய்து வைத்திருந்த காலம் இருந்தது. செல்பேசிகள் வந்த பிறகு ஓரிரு எண்களைக் கூட நினைவில் வைக்க முடியாத‌ நிலைக்கு வந்திருக்கிறோம். அதே போல் ஏஐ இப்போது எடுத்துக் கொள்ளும் மனித வேலைகள் எல்லாவற்றிலும் மனிதர்கள் திறன் இழப்பார்கள். முழுக்க முழுக்க ஏஐயை நம்பி வாழும் தலைமுறைகள் உருவாகும். மிக மிக அடிப்படையான பிழைக்கும் திறன்கள் (Life Skills) கூட இல்லாத மனிதர்களாக மாறிப் போவோம். உதாரணமாக ஏஐயில் இடங்கும் கார்கள் பரவலான‌ பின் ட்ரைவிங் கற்பது அனாவசியமாகி விடும்! (Wall-E படத்தில் நகரும் நாற்காலிகளுடன் வரும் குண்டு மனிதர்களை யோசிக்கலாம்.)

கற்பனை வளம் அவசியப்படும் பணிகளிலும் ஏஐ நுழைந்து விட்டதைக் காண்கிறோம். ஏனெனில் யோசித்தால் கற்பனை என்பதே பல முந்தைய கற்பனைகளிலிருந்து சற்று மாறுபட்ட புத்தாக்கம்தான். எனவே கற்பனைகள் குறித்த ஒரு பெரிய தரவுப் புதையலை வைத்திருக்கும் ஏஐயால் தானும் கற்பனை செய்ய ஆரம்பிக்க முடியும். அதை மேலும் மேலும் கூர் தீட்டி அசல் படைப்புக்குப் பக்கத்தில் வர முடியும். பிரபல சஞ்சிகைகளில் ஓவியர்களின், வரைகலைஞர்களின் இடத்தைக் கணிசமாக ஏஐ பிடுங்கிக் கொண்டது.

ஏஐ வசதிகள் பயன்படுத்தி பலர் குறும்படங்கள், வெப்சீரிஸ் வரை இயக்குகிறார்கள். ஒரு திரைக்கதையைத் தந்தால் அதிலிருக்கும் தர்க்க, தகவல் அல்லது இதர‌ பிரச்சனைகளை ஓர் ஏஐ இன்று ஆய்ந்து சொல்லி விடும். இதெல்லாம் மனிதர்கள் செய்து வந்த பணிகள்.

எழுத்தாளர்களையும் ஏஐ நீக்கம் செய்யும் நாள் வரும். நான் தொழில்நுட்பப் பரிச்சயம் கொண்ட, அதன் சாத்தியங்களை எழுத்தில், புத்தகமாக்கலில் பயன்படுத்த முடிந்த ஓர் எழுத்தாளன். ஆனாலும் எழுத்தில் மட்டும் இன்னும் ஏஐயை நான் பயன்படுத்தவில்லை. ஆனால் ஏஐ கதை, கவிதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்து விட்டன. (நான் அக்டோபர் 2020ல் எழுதிய ‘தான்தோன்றி’ சிறுகதையில் ஏஐ கட்டுரை எழுதுவதாக வைத்திருந்தேன்.)

எனவே, ஏஐ எழுத்தாற்றலில் மனிதர்களை எளிதில் கடந்து விட வல்லவைதாம். முதலில் ஏஐ மொழிபெயர்ப்பாளர்கள் வேலையை எடுக்கும். பின் அபுனைவு எழுத்தாளர்களின் இடத்தை எடுக்கும். இறுதியில் மெல்ல படைப்பிலக்கியவாதிகளுக்கும் போட்டியாகும். நிரல் எழுதுவது போன்ற சிக்கலான விஷயங்களிலேயே ஏஐ இப்போது அடைந்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது சிடுக்கான புனைவுகள் எழுதுவதையும் கூட அவற்றால் நிறைவேற்ற முடியும் என்றே கணிக்கிறேன். சமீபத்தில் தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு நாவலுக்கு வாக்கிய அமைப்புகளை வைத்து ஏஐயால் செய்யப்பட்டதோ என ஐயம் எழுப்பப்பட்டது. இன்று தமிழ் எழுத்தாளர்களில் ரகசியமாக யாராவது புனைவு எழுத ஏஐயைப் பயன்படுத்துகிறார் என‌ அறிய நேர்ந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

*

கட்டுரையின் ஆரம்பத்தில் இருக்கும் வாசகம் இயற்பியலாளரான‌ ஸ்டீஃபன் ஹாக்கிங் பதினோரு ஆண்டுகள் முன் பிபிசி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் சொன்னது. அவர் சொன்னதேதான் அப்படியே இன்று ஏஐயால் நடந்து கொண்டிருக்கிறது எனலாம்.

ஏஐயால் அனுகூலங்கள் உண்டுதான். அதை எவருமே மறுக்க முடியாது. ஆனால் அது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா, அதன் வளர்ச்சி கண்காணிப்பில் இருக்கிறதா என்பதுதான் பிரச்சனை. அவ்வகையில் ஏஐ இரு புறமும் கூரான கத்தி - வெட்டும் வேலை நடக்கும் அதே சமயம் நம் கையிலும் வெட்டு விழும். எனவேதான் ஏஐயை அஞ்ச வேண்டியுள்ளது.

ஏஐ-யால் க்ரியேட்டிவ் வேலைகள் பறி போகாது, ஏஐ வந்தாலும் அதை வேலை வாங்கும் திறமை (prompts) இருப்போருக்கு வேலை போகாது என்பதெல்லாம் சுத்த‌மான‌ myth. காரணம் சிரமப்பட்டு prompt-களை விரிவாகச் சொல்ல அவசியமில்லாமல் எல்லோரும் எளிமையாகச் சொல்வதன் மூலமே புரிந்து கொள்ளும்படிக்கு ஏஐயானது ஸ்மார்ட் ஆகி விடும். ஒரு வகையில் இதில் மெல்லிய ஜனநாயகத்தன்மையும் உண்டு. அதாவது அதிக அறிவு அல்லது திறமை இல்லாமலே எளியோருக்குக் கூட ஏஐ அற்புதமாக உதவும்தான்.

ஏஐ என்பது நாம் நம்ப முடியாத அளவு அசுர பலம் கொண்டது, நாம் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் வளர்ந்து வருகிறது, நாம் விரும்பாத அத்தனை மாற்றங்களையும் உண்டாக்கும். ஏஐ‍யால் நிகழப் போகும் வேலை இழப்புகளை, இன்ன பிற ஆபத்துகளை, சிக்கல்களை உலகம் எதிர்கொள்ளப் போவதுதான் அடுத்த பத்தாண்டுகளுக்கான‌ மிகப் பெரிய சவால் என அனுமானிக்கிறேன். அது எளிதாக இருக்காது. கிட்டத்தட்ட கோவிட் பெருந்தொற்றுக் காலத்துக்கு இணையான போராட்டமாகவே இது இருக்கப் போகிறது.

த‌ நியூயார்க்கர் இதழில் (ஃபிப்ரவரி 2026) ‘Silicon Valley’s Favorite Doomsaying Philosopher’ என்ற‌ கட்டுரை வெளியானது. நிக் லேண்ட் என்ற ஆங்கிலத் தத்துவவியலாளர், முதலாளித்துவ ஆதரவாளர் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏஐ ஆர்வமுடைய தொழில்நுட்ப இளைஞர்கள் மத்தியில் பேசியதை விவாதிக்கும் கட்டுரை. அங்கே நிக் இப்படிச் சொல்கிறார் - “My prediction is that A.I. will persuade you that technology eating the universe is more beautiful”. அதாவது மனிதர்களை மையமாகக் கொண்ட‌ உலக‌ம் என்பதை ஏஐ அழிக்கும், மாற்றியெழுதும்.

விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் என்ற கையறு நிலையில்தான் ஏஐயை மானுட சமூகம் இன்று கையாண்டு கொண்டுள்ளது. புலி வாலைப் பிடித்த கதைதான். நாம் இதில் ஆழமாக இறங்கி விட்டோம். இனி வெளியேற முடியாது. இதன் அதிருசி கண்டோர் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே இந்த நாடகத்தில் நாமும் சேர்ந்து நடிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை. எனவே, நம் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்வதே மேடையிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்க ஒரே வழி. மேடையில் இருக்கும் வரை அங்கே; தள்ளி விடப் பட்ட பின் தரையில் பிழைக்கலாம். மேடையின் ஒளியும் ஒரு நாள் அணையும். புதிய மேடைகள் உருவாகும். இது ஒரு சுழற்சிதான்.

சொல்லப் போனால் பைபிள் சொல்லும் Armageddon (இறுதிப் போர்) போன்றதே இனி வரும் நாட்கள். அதாவது சாத்தானின் படைக்கும் தேவனின் படைக்கும் என்பது போல் இயற்கை அறிவுக்கும் செயற்கை அறிவுக்குமான சமர் ஆரம்பித்துள்ளது. இதன் முடிவில் புது உலகம் உருவாகும். பல விஷயங்களைத் தலைகீழாக்கிய உலகம். திருவெளிப்பாடு!

விட்டில் பூச்சிகளைப் போல் ஒரு பேரொளியை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறோம்.

***

(இதில் சேர்த்துள்ள ஓவியம் கட்டுரை பற்றிச் சொல்லி சாட்ஜிபிடியிடம் வாங்கியது.) 

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

இறுதி இரவு [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?