மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை
காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான ஒரு செயல்!
காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்?
வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது.
ஆணின் காதல் என்பது அவனது இதர வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு.
இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே.
ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வேண்டி இருக்கிறது; மறுபுறம் ஆகக் கொடூரமான வழிகளில் குருதி சிந்தவும் வேண்டி உள்ளது. பெண்கள் மீது உடல்ரீதியான வன்முறைகளை, பாலியல் குற்றங்களை இழைக்கும் அதே ஆண்தான் மறுபுறம் உயிருருகக் காதலிக்கவும் அதன்நிமித்தம் துயருறவும் செய்கிறான்.
அப்படி நாமறிந்த சில ஆண்களுக்குப் பின் இருக்கும் அரிதான காதலைப் பார்ப்போம்.
(இலக்கியமோ திரைப்படமோ மக்களின் வாழ்விலிருந்து பாதிப்பை எடுத்துக் கொண்டு திரும்ப மக்களின் வாழ்விலேயே செல்வாக்கு செலுத்துகிறது. எனவே நிஜமாக வாழ்ந்த காதலர்களுடன் மனிதக் கற்பனையில் உதித்த காதலர்களும் இப்பட்டியலில் உண்டு.)
*
(1)
மஜ்னுவின் காதலிலிருந்தே ஆரம்பிக்கலாம். அவன் ஏழாம் நூற்றாண்டு அரபுப் பழங்குடி. காஸ் இபின் அல்-முலவ்வா என்பதே அவனது அசல்ப் பெயர். பள்ளிப் பருவத்திலேயே உடன் படித்த லைலா அல்-ஆமிரியா என்பாளைக் காதலிக்க ஆரம்பித்தான். பித்தேறி அவளது அழகை வர்ணித்துக் கவிதைகள் எழுதினான். அவளை ஈர்க்க அவற்றைத் தெரு முனைகளில் நின்றுக் கூவி வாசித்தான். அவனை எல்லோரும் மஜ்னு(ன்) என அழைக்க ஆரம்பித்தனர். அரபியில் அதற்குப் ‘பைத்தியம்’ என்று பொருள். அவள் விழுந்தாள்.
ஆனால் அவளது பெற்றோருக்கு பைத்தியம் என்றழைக்கப்படும் அவனுக்கு அவளை மணம் முடித்துத் தர விருப்பமில்லை. அவர்களைப் பிரித்து அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்தனர். மனம் உடைந்த மஜ்னு பாலைவனத்துள் புகுந்தான். மிருகங்களுடன் வாழத் தொடங்கினான். அங்கும் மணலில் குச்சி வைத்து லைலா பற்றிக் கவிதைகள் எழுதினான். இதைக் கண்டு சகியாத அவன் தந்தை அவனது காதல் பித்தினை ஒழிக்க காபா என்ற புனிதத் தலத்துக்கு அழைத்துச் சென்ற போது லைலாவின் மீதான காதல் இன்னும் நூறு மடங்கு பெருக வேண்டும் என இறையிடம் வேண்டிக் கொண்டான் மஜ்னு.
மறுபக்கம் லைலா கணவனை நெருங்க விடவே இல்லை. நிராகரிப்பின் வலியிலேயே அவன் செத்துப் போனான். அதன் பிறகு லைலாவைச் சந்திக்கப் பல வாய்ப்பிருந்தும் மஜ்னு பாலைவன வாசத்தை விடுத்து அவளை வந்து சந்திக்கவே இல்லை. (கதையின் ஒரு வடிவில் லைலா அவனைத் தேடிப் போய்ச் சந்திந்த போதும் கூட அவன் அவளைத் தொடவே இல்லை என்று இருக்கிறது.) லைலா அந்தத் துக்கத்திலேயே உளம் வெதும்பி நோய் கண்டு இறந்தாள். செய்தி அறிந்து பாலைவனத்தை விடுத்து நகருள் நுழைந்த மஜ்னு அவளைப் புதைத்த சமாதியின் அருகிலேயே படுத்து அழுதே உயிர் விட்டான்.
மரணத்தில்தான் மஜ்னுவும் லைலாவும் சேர்ந்தார்கள். இருவரும் இறுதி வரை தொட்டுக் கொள்ளவே இல்லை. எது மஜ்னுவை அப்படிப் பிடிவாதமாக இருக்க வைத்தது? ஆன்மீகக் காரணங்கள் சொல்கிறார்கள். காதலின் மிகப் பரிசுத்தமான வடிவம் அது என்கிறார்கள்.
ஆனால் அது ஆணுக்கான பிரத்யேகத் திமிரின் துயர் என்றே எனக்குத் தோன்றுகிறது.
*
(2)
அடுத்தது ரோமியோவும் ஜூலியட்டும். இது ஷேக்ஸ்பியரின் நாடகம். மான்டேக் மற்றும் கேப்புலெட் என்ற இரண்டு இத்தாலிய அதிகாரக் குடும்பங்களுக்குள் பல காலமாக, பல முறை ரத்தம் சிந்திய ஜென்மப் பகை. ரோமியோ மான்டேக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜூலியட் கேப்புலட் குடும்பத்தில் ஒருத்தி. ஒரு முறை ரோமியோ உள்ளிட்ட மாண்டேக் குடும்ப இளைஞர்கள் சிலர் கேப்புலெட் குடும்பத்தில் ஒரு விருந்து நடப்பதை அறிந்து அதற்குள் ஊடுருவுகின்றனர். அங்கு அவர்கள் நுழைவதன் நோக்கமே ரோமியோ தான் காதலிக்கும் ரோஸ்லின் என்ற பெண்ணைச் சந்திப்பதே. மறுபக்கம் விருந்து நடப்பதே ஜூலியட்டுக்கு மணம் முடிக்க அவள் தந்தை மாப்பிள்ளை பார்த்திருப்பதன் நிமித்தமே.
ஆனால் அந்த விருந்தில் விபத்தாக ரோமியோவும் ஜூலியட்டும் சந்தித்துக் கொள்ள, முதற் பார்வையிலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அதற்குள் மான்டேக் இளைஞர்கள் கண்டறியப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அன்று இரவே மாளிகையின் உப்பரிகை வழி ஜூலியட்டின் படுக்கை அறைக்குள் நுழைந்து காதலைச் சொல்கிறான் ரோமியோ. மறுநாள் இருவரும் ரகசிய மணம் செய்து கொள்கிறார்கள்.
ரோமியோ அன்றிரவு அவளைத் திறக்கிறான். இனித்த உடலுடன் ஜூலியட் வீட்டுக்குத் திரும்புகிறாள். மறுநாள் நடக்கவிருந்த ஜூலியட்டின் திருமணம் அவளது சகோதரனை ரோமியோ ஒரு தெருக் கைகலப்பில் கொன்றதால் ஒரு நாள் தள்ளிப் போடப்படுகிறது.
ஜூலியட் கல்யாணத்திலிருந்து தப்பிக்க அவளுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த பாதிரியார் ஒரு யோசனை சொல்கிறார். அவர் அவளுக்கு மயக்கமூட்டும் ஒரு மருந்தை அளிப்பார். அவள் இறந்தது போல் நடிக்க வேண்டும். சமாதி செய்ததும் ரோமியோ வந்து அவளை மீட்டு இருவரும் சேர்வது. திட்டப்படி அவள் இறந்தது போல் நாடகமாட சமாதி செய்யப்படுகிறாள். ஆனால் அவளை மீட்க ரோமியோ வர வேண்டும் என்று பாதிரியார் அனுப்பிய தகவல் ப்ளேக் தொற்று காரணமாகப் போய்ச் சேரவில்லை. மாறாக, அவள் இறந்த செய்தி அவனைச் சேர்கிறது. அவள் சமாதிக்கு வருகிறான் ரோமியோ. அங்கே அழுது கொண்டிருந்த ஜூலியட்டின் மாப்பிள்ளையைக் கொன்று, தானும் விடமருந்தி உயிர் விடுகிறான். பாதிரியார் வந்து ஜூலியட்டை மீட்க, மயக்கம் தெளிந்து எழுந்தவள் விஷயமறிந்து சமாதியை விட்டு வர மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறாள். அங்கு வந்த இரு பகையாளிக் குடும்பங்களும் அத்துயரின் மேல் சமாதானம் கொள்கின்றன.
மிகச் சுலபமாக, மிகச் சுபமாக முடிந்திருக்க வேண்டிய எளிய காதல் கதை. ஆனால் ஆண்களுக்கு மத்தியிலான பகையே ரோமியோவின் காதலைக் கொன்றது. ஆண் தன் காதலை நிலை நாட்ட தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அஃதில்லை என்றாகும் போது அவன் தன்னைத் தானே மாய்க்கவும் தயங்குவதில்லை.
*
(3)
கிரேக்க புராணத்தில் ஒரு காதல் கதை இருக்கிறது. பாரிஸ் - ஹெலன். பாரிஸ் ட்ராய் நகரில் வாழ்ந்த இளவரசன். ஹெலன் ஸ்பார்டா நகரில் வாழ்ந்த மெனெலௌஸ் என்ற அரசனின் மனைவி. பாரிஸ் ஒரு முறை ஸ்பார்டா நகருக்கு விருந்தாளியாக வந்த போது ஹெலன் அழகில் அவள் மீது மோகம் கொள்கிறான். அப்படிப் பிறனில் விழையுமளவு நிகரற்ற உயரழகு வாய்த்தவள்தான் ஹெலன். அவளுக்கும் பாரிஸின் மேல் காதல் உண்டாகிறது. பாரிஸ் ஹெலனை ட்ராய்க்குத் தூக்கிச் செல்கிறான். மெனெலௌஸ் சினமுற்று, தன் சகோதரன் உதவியுடன் ஆயிரம் கப்பல்களில் படைகளுடன் போய் ட்ராய் நகர் மீது போர் தொடுக்கிறான். (ஹெலனை “the face that launched a thousand ships” என்றுதான் வரலாறு வர்ணிக்கிறது.) ஆனால் ட்ராய் வலுவான கோட்டை என்பதால் பல்லாண்டு தாக்குப் பிடிக்கிறது. பாரிஸ் ஹெலனை ஒப்படைக்க மறுத்து விடுகிறான்.
இறுதியில் பிரம்மாண்ட மரக் குதிரையில் பரிசுப் பொருட்களை அனுப்பிச் சமாதானம் செய்வதாக மெனெலௌஸ் அனுப்பியதை நம்பி கோட்டைக் கதவுகள் திறக்கப்பட, மரக் குதிரை உள்ளே நுழைகிறது. அதில் ஒளிந்திருந்த வீரர்கள் இரவில் வெளியே வந்து ட்ராய் நகரைத் தாக்கத் தொடங்குகிறார்கள், கோட்டைக் கதவுகளைத் திறந்து விடுகிறார்கள். சில நாட்களிலேயே ட்ராய் வீழ்கிறது. பாரிஸ் கொல்லப்படுகிறான். ஹெலன் மறுபடி மெனெலௌஸ் மனைவியாகி ஸ்பார்டா நகருக்குத் திரும்புகிறாள். பெண் மீதான காதலின் நிமித்தம் ஒரு போர் நடந்து ஒருவன் செத்து ஒரு நகரம் அழிக்கப்படுகிறது.
ஹோமரின் இலியட் மற்றும் ஒடிஸி காவியங்களில் இந்தக் கதை சொல்லப்படுகிறது. நம் ராமாயணத்தை இதனுடன் இணை வைக்கலாம். இங்கும் சீதையின் பொருட்டே ராமன் இலங்கை மீது போர் தொடுத்து அழிக்கிறான்; ராவணனை வேரறுக்கிறான்.
இதில் பாரிஸ், மெனெலௌஸ் ஆகிய இரண்டு ஆண்களில் யாரேனும் ஒருவர் போய்த் தொலைகிறது என ஹெலனை விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஆணுக்குக் காதல் என்பது தன் பலத்துக்கும் அதிகாரத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரம். ஆக, அதன் பரிசான காதலியை மற்றொருவன் அபகரித்துச் செல்வது என்பது அவனது தன்முனைப்புக்கு விடுக்கப்படும் சவால். அதனால்தான் இப்படி முட்டாள்தனமான லாப நஷ்டக் கணக்கு கொண்ட யுத்தங்களை அவன் வரலாறெங்கும் நிகழ்த்தி இருக்கிறான். அரசன் என்றால் போர் நிகழும். சாதாரணன் அவனளவில் இதே போல் போராடுகிறான்.
ஆண் மரித்தே போனாலும் காதலை மீட்கவே முனைவான். அவனது பிறவிச் சாபம் அது.
(4)
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்ரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி. அப்போது நாட்டை ஆண்டிருந்த இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் மகளான அமராவதி மீது அவனுக்குக் காதல். அம்பிகாபதியும் நல்ல கவி. அதனால் இயல்பாகவே அமராவதிக்கு அவன் மீது காதல் வந்தது. சொற்களும் வெட்கமுறும் வண்ணம் அமராவதியின் அழகை அம்பிகாபதி பாடல்களாக வடித்துக் கொண்டே இருந்தான். அரசனுக்கு இது தொடர்பாக சந்தேகம் எழ, அவன் கம்பரையும் அவரது மைந்தனையும் அரண்மனைக்கு விருந்துக்கு அழைத்தான். அங்கே அமராவதியின் பேரெழில் கண்டு நிலை தடுமாறிய அம்பிகாபதி அவளை வர்ணித்து ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தான். குலோத்துங்கன் கடும் கோபம் கொள்ள, சூழலைச் சமாளிக்க கம்பர் அப்பாடலை சரஸ்வதி தேவி மீது பாடி முடித்தார்.
அன்றைக்கு அம்பிகாபதியின் தலை தப்பித்தாலும் தும்மலும் காதலும் அப்படி அடக்கி வைத்து விட முடியுமா என்ன! ஒரு நாள் விஷயம் வெளியே வந்தது. சினத்தின் உச்சத்தில் மன்னன் அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதித்தான். கம்பர் கண்ணீருடன் கருணை கோரி நின்றார். ஒட்டக்கூத்தர் ஆலோசனைப்படி அம்பிகாபதி காதல் கலவாத பக்திப் பாடல் நூறு பாடிக் காட்டினால் அவனை மன்னித்து விடுவதாக அறிவித்தான் மன்னன்.
அம்பிகாபதியின் திறனுக்கு அச்சவால் பிள்ளை விளையாட்டு. மறுநாள் அவை கூடியது. அமராவதி ஒரு திரைக்குப் பின் அமர்ந்து நடப்பதைக் கவனித்திருந்தாள். அம்பிகாபதி பாட ஆரம்பித்தான். அமராவதி ஒவ்வொரு பாடலாக எண்ணிக் கொண்டே இருந்தாள். நூறு பாடல் பாடி முடித்ததும் அவள் உற்சாகமாக திரையை விலக்கி அம்பிகாபதி முன் வந்து நின்றாள். அவளது நல்வனப்பைக் கண்டு வெறியேறிய அம்பிகாபதி உடனே ஒரு காதல் பா இசைத்தான். அவ்வளவுதான் ஒட்டக்கூத்தர் அவன் தோற்றதாக அறிவித்தார்.
ஏனெனில் அம்பிகாபதி பாடிய முதற்பா கடவுள் வாழ்த்து. அது பாடல் கணக்கில் வராது. எனவே அவன் அது வரை 99 பக்திப் பாடல்கள் மட்டுமே பாடியிருந்தான். இதை அறியாத அமராவதி அவன் முன்பு தோன்றி, அவனது கவனத்தைச் சிதற வைத்து தொடர்ச்சியை அறுத்து விட்டாள். சோழக் கோ அம்பிகாபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றினான். கம்பர் மனமுடைந்து நாட்டை விட்டு வெளியேறினார். சிறிது காலத்தில் அமராவதியும் துயரில் உழன்றே செத்துப் போனாள். காதலர்கள் வழமை போல் மரணத்தில் சேர்ந்தனர்.
பெண்ணின் அவசரத்துக்கும் சேர்த்து ஆணே காதலில் தண்டனையை அனுபவிப்பதை இதில் கவனிக்கலாம். அவனது போராட்டம் உலகோடு மட்டுமல்ல, காதலியோடும்தான்.
*
(5)
16ம் நூற்றாண்டில் அம்பிகாபதி - அமராவதி கதைக்கு நேர் எதிரான ஒரு கதை உண்டு. அன்றைய முகலாய சாம்ராஜ்யத்தில் அக்பர் அரசனாக, (பிற்பாடு ஜெஹாங்கீர் எனப் புகழ் பெற்ற) சலீம் இளவரசனாக இருந்தார்கள். லாஹூரைச் சேர்ந்த புத்திசாலிப் பெண் ஷர்ஃப்-உன்-நிசா அக்பரின் அரசவையில் இடம் பெற்றிருந்தாள். அவளுக்கு இன்னொரு பெயர் அனார்கலி. அப்போது அலுவல் நிமித்தம் தேச இளவரசனுடனும் பழக வேண்டிய சூழல் அமைந்த போது சலீமுக்கும் அனார்கலிக்கும் காதல் முகிழ்த்தது. மனதைக் கடந்து உடலுக்கும் விரைவிலேயே தாவியது. விஷயம் பேரரசன் அக்பர் காதுகளுக்குச் சென்றது.
அக்பரின் எச்சரிக்கைகள் ஏதும் சலீமின் காதில் விழவில்லை. எல்லாம் காதல் படுத்தும் பாடு. சலீம் தன்னைப் புராதன அரேபியத்தின் மஹா காதலனான மஜ்னு என்றே கருதிக் கொண்டான். அனார்கலியின் மீது காதலை அளவின்றிப் பொழிந்தான். அக்பருக்கு வேறு வழி இல்லை. சலீம் இல்லாத சமயம் அக்பரின் ஆணைப்படி அனார்கலியைச் சுற்றி நால் புறமும் நெருக்கமான சுவர் எழுப்பி காற்றுப் புகாமல் மூடினார்கள். உயிருடன் சமாதி.
விஷயமறிந்து சலீம் அங்கே வந்து சேர்வதற்குள் அவள் செத்துப் போனாள். அதற்கு சலீம் எப்படி எதிர்வினை ஆற்றினான் என்பது பற்றி வரலாற்றில் குறிப்புகள் இல்லை. ஆனால் அதன் பிறகு அனார்கலி சமாதி இருந்த இடத்தில் ஒரு நினைவு மாளிகை எழுப்பினான். அது இன்றும் லாஹூரில் காற்றுடன் மௌனக் காதல் கதைகள் சொல்லியபடி நிற்கிறது.
அதன் பிறகு சலீம் பேரரசனாகி நன்கு நாடாண்டான். புகழ் பெற்ற அரசி நூர் ஜஹான் உள்ளிட்ட பலரை மணம் செய்து கொண்டான். ஆனால் அவை யாவும் புற வரலாறுதாம். அகத்தில் ஒரு பெண்ணின் மரணத்துக்குத் தன் காதல் காரணமாகி விட்டதை எண்ணி ஆயுள் முழுக்கக் குற்றவுணர்வுடனே வாழ்ந்து மடிந்திருப்பான். கற்பனைக்கெட்டாத சர்வாதிகாரம் கொண்ட தன் தகப்பனை ரகசியமாக வெறுத்திருப்பான். அவளற்ற வெறுமையில் திணறியிருப்பான். யோசித்துப் பார்த்தால் இதிலுமே ஆண்தான் பலி.
அனார்கலியின் கல்லறை மீது ‘மஜ்னு சலீம் அக்பர்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள வரி:
“என் காதலியின் முகத்தை இன்னொரு முறை நான் கரத்தில் ஏந்த முடிந்தால்
கடவுளுக்கு நான் செத்து உயிர்த்தெழும் வரை நன்றியுடைவனாயிருப்பேன்.”
செத்தவளுக்கு ஒரு நாள் வேதனையோடு போனது. இருப்பவனுக்குத் தினமும் ரணம்.
*
(6)
இதே போல் இன்னொரு துன்பியல் கதை ஆன்டணியும் க்ளியோபாட்ராவும். இதையும் ஷேக்ஸ்பியர் நாடகமாக்கி இருக்கிறார் என்றாலும் இது உண்மையில் நடந்த வரலாறு. க்ளியோபாட்ராவுக்கு ஏராளம் கணவர்கள் காதலர்கள் உண்டு என்றாலும் மனித குலம் ஆன்டணியை மட்டுமே அவளது காதலன் என்று நினைவில் கொள்ளக் காரணம் உண்டு.
க்ளியோபாட்ரா கிறிஸ்து பிறப்பதற்கு ஐம்பதாண்டுகள் முன் எகிப்தில் வாழ்ந்த பேரரசி. அன்றைய தேதியில் உலகப் பேரழகி. “The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” என்று 17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு தத்துவ ஞானி ப்ளைஸ் பேஸ்கல் அவளது மூக்கு குறித்து எழுதினார். ஆண்கள் அவளை அடையத் துடித்தனர்.
தன் தந்தை மறைவுக்குப் பின் தனது சகோதரர்கள் இருவரையும் மணம் செய்து நாட்டை ஆட்சி செய்தவள். அதே சமயத்தில் ரோம் மன்னன் ஜூலியஸ் சீஸருடன் காதல் உறவில் இருந்து குழந்தை பெற்றவள். சீஸர் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட பின் அவரிடம் தளபதிகளாக இருந்த மார்க் ஆன்டணியும் மார்கஸ் ஏமிலியுஸ் லெபிடஸும் சீஸரின் வளர்ப்பு மகனான ஆக்டேவியன் சீஸரும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டனர். ரோம் ராஜ்யத்தின் கீழிருந்த எகிப்தைக் கவனிக்கும் பொறுக்கு ஆன்டணிக்கு வந்தது. அவர் அங்கிருந்த ஏழாம் க்ளியோபாட்ராவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டான்.
ஆன்டணிக்கு க்ளியோபாட்ரா தன் போர்ப் படைகளின் ஆதரவை நல்கினாள். பதிலுக்கு அவளுக்குத் தொந்தரவாக அவளது சகோதரி ஒருத்தியைக் கொன்றழித்தான் ஆன்டணி. இருவரும் எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் இரவு பகல் பாராது, புறச் சூழல் பற்றிய கவலைகள் இல்லாது காதல் பறவைகளாகத் திரிந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன.
இடையே ஆன்டணிக்கும் ஆக்டேவியனுக்கும் உரசல்கள் எழுந்தன. அதைச் சரி செய்ய ஆக்டேவியனின் தங்கையை ஆண்டனி மணந்தான். அதே சமயம் க்ளியோபாட்ராவின் உறவும் தொடர, அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தது ஆக்டேவியனுடனான பகையை அதிகரித்தது. அதன் உச்சமாக ஆன்டணி க்ளியோபாட்ராவை அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டு ஆக்டேவியனின் தங்கையுடனான திருமணம் உறவை முறித்து அவளைத் திருப்பி அனுப்பினான். கடுப்பான ஆக்டேவியஸ், ஆன்டணியை ரோமின் துரோகி என அறிவித்து க்ளியோபாட்ரா மீது போர் தொடுத்தான். யுத்தத்தில் தோல்வியுற்ற ஆன்டணியும் க்ளியோபாட்ராவும் எகிப்துக்குத் தப்பித்து ஓடினார்கள்.
ஆக்டேவியன் எகித்துக்கும் அவர்களைத் தேடி வந்தான். அங்கே இருவரும் வெவ்வேறு இடங்களில் ஒளிந்திருந்தார்கள். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து இறந்ததாக வந்த தவறான செய்தியை நம்பிய ஆன்டணி வாளின் மீது பாய்ந்து தானும் சாக முயன்றான். உயிர் போய்க் கொண்டிருக்கையில் க்ளியோபாட்ரா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டான் ஆன்டணி. அவனது நண்பர்கள் அவனை க்ளியோபாட்ரா ஒளிந்திருந்த இடத்துக்குத் தூக்கிச் செல்ல, அவளது மடியில் கிடந்து உயிர் துறந்தான் ஆன்டணி.
ஆக்டேவியினால் அவமானப்படுத்தப்படுவோம் என்று அஞ்சிய க்ளியோபாட்ரா ஒரு கொடிய விடமுடைய நாகத்தைத் மார்பில் கொத்த விட்டு இறந்தாள் எனகிறார்கள். அவள் ஆக்டேவியனையும் மயக்க முயன்று தோற்றதாலேயே இறந்தாள் என்று ஒரு வடிவமும் உண்டு. ஆன்டணி - க்ளியோபாட்ரா ஆகிய இரண்டு பெருந்தடைகளும் நீங்கியதால் ரோம் சாம்ராஜ்யத்தின் எதிர்ப்பற்ற ஒற்றை அரசனானன் ஆக்டேவியன்.
க்ளியோபாட்ராவின் காதலர்களில் ஆன்டணி ஏன் தனித்துவமானவன்? அவன் மட்டுமே அவளுக்காக உயிரை விட்டான். ஆண் போரில் தோற்று நாட்டை விட்டோடிய போதும் கலங்காதவன். ஆனால் காதலி செத்ததாகச் செய்தி கேட்ட கணம் வாழ்வு வெறுத்தான்.
ஆண்கள் காதலின் பொருட்டு உணர்ச்சி வசப்படும் தருணங்களும் இவ்வாறு உண்டு.
*
(7)
1997ல் வெளியான திரைப்படமான Titanic ஆண் காதலின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. தியாகம். 1912ல் டைட்டானிக் என்ற பிரம்மாண்ட சொகுசுக் கப்பலில் ரோஸ் என்ற பெண்ணும், அவளுக்கு நிச்சயம் செய்திருக்கும் பெரும்பணக்காரனான கேல்டனும், அவளது தாயும் கிளம்புகின்றனர். அத்திருமணம் தங்களைக் கடனிலிருந்து மீட்கும் என்பது அந்த அம்மாளின் நம்பிக்கை. ரோஸுக்கு அதில் விருப்பமில்லை. அதே கப்பலில் ஜேக் என்ற இளைஞனும் சூதாட்டத்தில் மூன்றாம் வகுப்பு டிக்கெட் ஜெயித்து நுழைகிறான். ரோஸ் விரக்தியில் கப்பலிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போகும் போது ஜேக் காப்பாற்றுகிறான். அவர்களுக்குள் நட்பும், சீக்கரம் காதலும் உண்டாகிறது.
ஜேக் ரோஸை நிர்வாணமாக வரைகிறான். அவளுடன் கலவி கொள்கிறான். அப்போது கப்பல் பெரிய பனிப்பாளத்தில் மோதிச் சேதமுறுகிறது. கேல்டன் ரோஸில் நிர்வாண ஓவியத்தைப் பார்த்து சினத்தில் ஜேக்கைக் கப்பலில் ஓர் அறையில் விலங்கிட்டு சிறை செய்கிறான். கடல் நீர் புக, கப்பல் மூழ்க ஆரம்பிக்கிறது. அதில் ஆபத்து காலப் படகுகள் அதிகமில்லை என்பதால் பெண்களும், குழந்தைகளும், சில பணக்காரர்களும் இருக்கும் சொற்ப படகுகளில் கடலில் இறக்கப்படுகிறார்கள். ரோஸ் படகேறப் போகும் தாயையும் கேல்டனையும் விட்டு விலகி ஜேக்கைத் தேடிப் போகிறாள். அவனை விடுவிக்கிறாள்.
ஜேக்கும் ரோஸும் பெரும் சிரமத்திடையே தப்பிக்க முனைகையில் கப்பல் இரண்டாக உடைந்து மொத்தமும் மூழ்குகிறது. ஜேக் ரோஸை ஒரு மரப் பலகை மீது ஏற்றுகிறான். அவனும் உடன் ஏற இடமில்லை என்பதால் உறையும் குளிருடைய கடல் நீரில் அவன் அவளைப் பற்றியபடி மிதந்து இறந்து கடலுக்குள் போகிறான். உயிர் காக்கும் படகு ஒன்று வெகுநேரம் கழித்து வந்து ரோஸை மீட்கிறது. ரோஸ் இறுதி வரை திருமணம் செய்யாமல் ஜேக்கின் மனைவி என்ற அடையாளத்துடனேயே வாழ்ந்து முடிக்கிறாள்.
இது மேலே பார்த்த சலீம் அனார்கலி கதைக்குத் தலைகீழானது. இங்கே காதலி தன் காதலனை நினைத்தபடி ஆயுள் முழுக்கத் தனித்தே வாழ்ந்து மரிக்கிறாள். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் வேறொன்று. ஆண் பலவான். எப்படிக் கப்பல் மூழ்குகையில் உயிர் பிழைக்க பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அப்படி இருக்கும் ஒரு மரப் பலகையில் காதலன் ஏறாமல் காதலிக்கு விட்டுத் தருவதே அறமும் காதலும். அப்படித்தான் ஒரு காதலன் நடந்து கொள்ள முடியும். தன் உயிரைக் கொடுத்தேனும் காதலியின் உயிரைக் காக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஆனால் பரவலாக ஏற்கப்பட்ட விதி. அவனுக்கும் ஒரு பலகை இருந்திருக்கலாம் என்று நமக்குத் தோன்றுமே ஒழிய, அவளுக்கு பதில் அவன் மரப் பலகையில் ஏறிப் பிழைத்திருக்கலாம் என்று தோன்றவே செய்யாது. அப்படித்தான் மனித இனம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
ஆண் காதலில் தியாகம் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும், தன் உயிரையும் கூட.
*
(8)
1956ல் தி. ஜானகிராமனால் எழுதப்பட்ட மோக முள் நாவல் மற்றுமொரு கோணத்தைத் தருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தஞ்சையில் நிகழும் கதை. பாபு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் மிக்க, இருபது வயதைத் தொடும் பிராமண இளைஞன். யமுனா அவளை விட பத்து வயது அதிகம் கொண்ட மராட்டியப் பூர்வீகம் கொண்டவள்.
பால்யத்திலிருந்தே யமுனாவுடன் பழகி வரும் பாபுவுக்கு வயது வரும் போது அவளது அழகு மனதில் மோகத்தை எரியச் செய்கிறது. விபத்தாக பக்கத்து வீட்டுக் கிழவனின் இளம் மனைவியுடன் கூடி விடுகிறான். அது தான் யமுனா மீதான காதலை அவனுக்கு உணர்த்துகிறது. அவள் கடவுள் போல் தோன்றுகிறாள். அவளுக்கு துரோகம் செய்து விட்டதாகத் தோன்றுகிறது. அவளிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள். சமூகத்தைக் காட்டி இது பொருந்தாக் காதல் என்று சொல்லி நிராகரித்து ஊரை விட்டுப் போகிறாள்.
அந்தத் துயரிலிருந்து வெளிவரும் உத்தேசத்தில் வெறியுடன் கர்நாடக இசை கற்கத் தொடங்கி அதில் முன்னேற்றம் காண்கிறான். எட்டாண்டுகள் கழித்து யமுனாவைச் சென்னையில் சந்திக்கிறான். வறுமை அவள் இளமையைக் குலைத்து விட்டிருந்தது. அப்போதும் யமுனா திருமணம் செய்து கொள்ளவே இல்லை. பாபுவுக்குத் தன்னைத் தருகிறாள். கலவி முடிந்ததும் பாபுவிடம் “எல்லாம் இதற்குத்தானா?” என்று கேட்கிறாள். பாபுவிடம் அதற்குப் பதில் இல்லை. “இதற்குத்தான்” என்று அவளே பதில் சொல்கிறாள்.
அதன் பிறகும் அவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. அவ்வளவுதான் அவர்களின் உறவு. பாபு இனி அவன் வழியைப் பார்த்துக் கொண்டு ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.
இதில் கவனித்தால் ஆண் இந்தக் காதலில் தன் காதல் அல்லது காமம் சார்ந்து எந்த முடிவையும் எடுப்பதே இல்லை என்பது விளங்கும். பெண்ணே வழி நடத்துகிறாள். கிழவரின் இளம் மனைவியுடன் பாபு கூட நேர்ந்ததும் அவளது முடிவுதான். இறுதியில் யமுனாவுடன் புணர நேர்ந்ததும் அவளது முடிவே. பாபு இதில் வெறும் உடல் மட்டுமே. தொடர்ந்து காமத்தைக் கையில் பிடித்துக் கொண்டு அலைவது மட்டுமே அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. காதலோ காமமோ முடிவுகளைப் பெண்களே எடுக்கிறார்கள்.
யமுனா பாபுவுக்குத் தன் உடலை ஒப்புவிக்கும் இடத்தில் நிகழும் உரையாடல் இது:
“எனக்கு நீதான் வேணும்.”
“சரி எடுத்துக்கோ…”
“அன்னிக்கி நான் கேட்டேனே?”
“அப்ப எனக்கு மனசு இடங்கொடுக்கவில்லை. இப்ப உயிரில்லாமல் கிடக்கும் போது போனால் போறது என்று தோன்றுகிறது.”
“உயிரில்லா பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?”
“நீ உயிர் கொடேன்.”
போனால் போகிறது என்றுதான் யமுனா சம்மதிக்கிறாள். அதில் காமம் பெறும் சுயநலம் இருக்கிறது. அதற்காக மற்றவரிடம் போகாமல் பாபுவைத் தேர்ந்தெடுப்பதில் அவளது காதல் துலங்கத்தான் செய்கிறது. ஆனால் பாபு இதில் வெறும் பகடைக்காய்தானே!
காதலில் ஆயுள் முழுக்க பெண்களால் அலைக்கழிக்கப்படுவதே ஆண்களின் விதி.
*
(9)
2018ம் ஆண்டு வெளியான 96 படத்தை இதன் இன்னோர் உதாரணமாகக் கொள்ளலாம்.
பள்ளிக் காலத்தில் ராமும் ஜானுவும் சொல்லிக் கொள்ளாமலே காதலிக்கிறார்கள். சூழல் அவர்களைப் பிரிக்கிறது. கல்லூரிக் காலத்தில் ஜானுவைத் தேடி வரும் ராம் ஒரு சிறிய குழப்பத்தில் ஜானுவுக்குத் தன் மீது விருப்பமில்லை என்று எண்ணிக் கொள்கிறான். அவளைத் தொந்தரவு செய்யாமல் விலகுகிறான். ரகசியமாக அவள் திருமணத்துக்குச் சென்று காண முடியாமல் ஓடி வருகிறான். பிற்பாடு இருபதாண்டுகள் கழித்து பள்ளி ரீயூனியனில் ராமும் ஜானுவும் சந்திக்கிறார்கள். ராம் மாறவே இல்லை. அவன் காதலும்.
ஜானு திருமணமாகிக் குழந்தை பெற்றவள். காமத்தின் சாயை சிறிதுமின்றி அவ்விரவை அவர்கள் ஒன்றாகக் கழிக்கிறார்கள். ராம் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமின்றி, இன்னும் கன்னித்தன்மை இழக்காது இருக்கிறான் என்பதை ஜானு புரிந்து கொள்கிறாள். குற்ற உணர்வில் அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறாள். அழுது விடை பெறுகிறாள். ராம் திருமணம் செய்யப் போவதில்லை. ஜானுவுடனான தன் பள்ளிக்கால நினைவுகளைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தது போலவே அந்த ஓர் இரவையும் இனி அவன் ஞாபகங்களில் ஏந்தி நின்று மகிழ்ச்சி கொள்ளப் போகிறான்.
இதில் கவனிக்க வேண்டியது ராம் ஏன் அப்படித் திருமணம் செய்யாமல் இருக்கிறான் என்பதே. ஜானுவின் காதலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவனுக்கு இணையாக அவளும் அவனை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அவன் மட்டுமே அந்த முடிவெடுக்கிறான். காரணம் ஆண் என்ற திமிர்தான். அவனால் முடியும். அவன் சமூகத்துக்காக ஒரு சமரசத்துக்குள் புக வேண்டியதில்லை. இரட்டை வாழ்க்கை வாழும் கட்டாயம் இல்லை. அதனால் அவன் தன் காதலைப் பற்றிக் கொண்டு வாழ்கிறான்.
ஆண் என்ற அகங்காரம் காதலில் மட்டுமல்ல, காதல் பிரிவிலும் தூக்கலாகவே இருக்கும். பெண் அதை உள்ளுக்குள் புதைத்து வளைந்து கொடுக்க, ஆண் பிடிவாதமாய் நிற்பான். அதன் வழி தனக்குத் தானே வதை தருவான். அதைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை.
*
(10)
2022ல் வெளியான லவ் டுடே படத்தில் காதலில் பெண்களே முடிவெடுக்கும் இடத்தில் இருப்பதை, ஆண் அதைச் செயல்படுத்தும் இடத்தில் மட்டுமே இருப்பதைச் சுட்டும் ஒரு நல்ல சமகால உதாரணத்தைக் காணலாம். அதில் பிரதானக் காதலர்கள் உத்தமனும் நிகிதாவும் என்றாலும் நான் இங்கே குறிப்பது மாமாக் குட்டி நிகிதா ஜோடியைப் பற்றி.
மாமக்குட்டி நிகிதாவின் முன்னாள் காதலன். அவனிடமிருந்து அவள் விலகி வந்து வெகு நாளாகிற்று. இப்போது அவள் காதலிப்பது உத்தமனை. ஆனால் உத்தமனுடன் பிணக்கு உண்டாகும் போது அவள் மனம் இயல்பாகவே மாமாக் குட்டியைத் தேடுகிறது. அவனை சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை இரவில் காரில் லாங் ட்ரைவ் போய் வரலாமா எனக் கேட்கிறாள். அவனுக்கு நிச்சயம் சந்திப்பைத் தாண்டி அதில் வேறு எதிர்பார்ப்பு இருந்திருக்கும். எனவே உடனே சம்மதித்து அழைத்துப் போகின்றான். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி ஏதும் நடப்பதில்லை. அது வெறும் சைவப் பயணம். அவள் தன் மனக் கிலேசத்தைச் சரி செய்து கொண்டு திரும்புகிறாள். அவன் ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். அல்லது தன்னை நீங்கிப் போன காதலி இன்னும் தன்னிடம் இளைப்பாறல் தேடுகிறாள் என்பதையே தனக்கான அங்கீகாரமாகக் கூட கருதிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இந்நாள் காதலன் மட்டுமல்ல, முன்னாள் காதலன் கூட காதலியின் கையில் பாவைதான். அவள் நினைப்பு மிக எளிதில் நிறைவேறும், அந்த இடத்தில்தான் இயற்கை ஆணையும் பெண்ணையும் வைத்திருக்கிறது என்பதைத்தான்.
*
காதலிக்க ஆண், பெண் இருவரும் அவசியம். ஆனால் இரண்டும் வெவ்வேறு. சொல்லப் போனால் இரண்டும் நேரெதிர். காமத்தின் பொருட்டே ஆண் காதல் என்பது பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் அதைத் தாண்டி பல சிடுக்கான விஷயங்களை அடக்கியது.
காதலிக்கும் ஆண் உண்மையில் சிறகுகள் கட்டப்பட்ட பட்சி போன்றவன். அக்காதல் தீரும் வரை அல்லது அவன் சாகும் வரை பறக்க இயலாத சாபம் அவனைப் பீடிக்கும்.
ஆணுக்குக் காதல் என்பது வெற்றி. அதற்காகப் போர் எடுப்பான். அவனுக்குக் காதல் என்பது மானம். அதற்காக உயிரைக் கொடுப்பான். இப்படிச் சொல்கையில் ஒரு காதல் உறவில் அவனே ஆதிக்கம் செலுத்துபவன் போன்றதொரு தோற்றம் எழுந்தாலும் அது உண்மையில்லை. அது எல்லாம் வெளியே. காதலுக்குள் நடப்பது வேறு கதை. அவன் தொடர்ந்து தன் காதலியுடன் போராடுகிறான். அவளால் அலைக்கழிப்படுகிறான்.
காதலுக்காக அவன் தியாகங்கள் செய்வான். காமத்தின் பொருட்டே ஆணின் காதல் என்று சொல்லப்படுவதைக் கூட உடைத்து காதலின் நிமித்தம் புலனை அடக்குவான். காதலில் அவனது எதிரிகள் பட்டியல் நீளமானது. காதலியின் குடும்பம் தொடங்கி சக ஆண்கள், பெற்றோர், உற்றார், சமூகம், அந்தக் காதலி வரை சகலரும் விரோதிகளே!
ஒட்டுமொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஆண்களின் அத்தனை கீழ்மை நிறைந்த அயோக்கியத்தனங்களையும் தாண்டி காதலிக்கும் ஆண்களின் மீது ஒருவிதமான பரிவுதான் உண்டாகிறது. ஏனெனில் அவனுக்கு காதல் என்பது காதல் மட்டுமல்ல.
மஜ்னு முதல் மாமாக் குட்டி வரை காதலன்கள் யாவரும் பரிதாபத்துக்குரியோரே!
***
(மெட்ராஸ் பேப்பர் ஃபிப்ரவரி 8, 2023 காதலர் தின சிறப்பிதழில் வெளியானது)
Comments