ஓர் அழகியைக் கொண்டாடுவது எப்படி?

பெண் என்கிற‌வள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக‌ விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான்.

மலை உள்ளிட்ட இயற்கைக் கொடைகளோடும் இசை போன்ற‌ கலைச் சரக்குகளோடும் இணை வைத்துக் கொண்டாடத்தக்கது பெண்ணழகு. பலர் அதை ரகசியமாகவும் சிலர் பகிரங்கமாகவும் செய்கிறார்கள். ரசிக்கப்படுவதால் வெட்கப்படலாம்; ரசிப்பதற்கே கூட‌ வெட்கப்படுவதா! எப்படியோ பெண் ரசிப்புத் தொழில் சிற‌ப்பாகவே நடந்து வருகிறது.

அழகென்றால் அன்னை தெரசா, பிடித்தவரே பேரழகு என்கிற உணர்ச்சிவசங்களைக் கடந்து பார்த்தால் அழகு என்பது ஒருவர‌து புறத் தோற்றம் மற்றும் உடல் மொழியினால் ஈர்க்கப்படுவதே. புறத்தோற்றம் என்பதில் ஒருவரது முகம், உடல் வடிவு எல்லாம் சேர்ந்து கொள்ளும். உடல் மொழியில் அசைவுகள, நகர்வுகள், குரலினிமையைச் சேர்க்கலாம்.

அழகு (Beauty) என்றால் என்ன என்று யோசிக்கிறேன். அது காட்சியால் மகிழ்வூட்டுவது. காட்சியால் மட்டுமே. மலரின் தோற்றத்தை ரசிப்பது மட்டுமே அழகில் சேர்த்தி. அதன் தோற்றம் கொண்டே அது எவ்வளவு மென்மையாக இருக்கும், எவ்வளவு வாசனையாக இருக்கும் எனக் கற்பனை செல்வது இயல்பு. அதுவும் நீட்டிக்கப்பட்ட ஓர் அழகே. அந்த‌ மானசீக அழகு வரைதான் கோடு. பூவைப் பறிப்பதோ, ஸ்பரிசிப்பதோ, கசக்குவதோ அழகை ரசிப்பதில் வராது. போலவே பெண் அழகை ரசித்தல் என வரும் போது அங்கே பாலியல் கிளர்ச்சிக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. அதாவது காமத்தின் கண்ணாடி அணிந்து அழகை ரசிக்கலாகாது. மானுடவியல்படி இயல்பாகவே ஆழ்மனதில் செழித்த பெண்டிர் மீதே ஆண் மனம் லயிக்கும் என்றாலும் அதற்கு விதிவிலக்குகளும் ஏராளம்.

தோற்றத்தில் உள்ள‌ சீர்மை (Symmetry) ஒன்றை அழகாகத் தெரிய‌ச் செய்யும் முக்கியக் காரணி. அதை அளவுகோல் வைத்துக் கறாராக‌ அளக்கும் கேத்திர கணிதம் என்பதாக எடுக்காமல் கண்களுக்கு இனிமையாகத் தெரியும் முப்பரிமாண‌ வடிவக் கச்சிதம் எனப் புரிந்து கொள்ளலாம். முதல் பார்வையிலேயே மனம் அளந்து தீர்மானிக்கும் விசித்திரம்!

பிறந்த பசுஞ்சிசு எவரும் சொல்லித் தராமலேயே முலையுறிஞ்சத் தொடங்குவது போல் நமக்கு பெண்களை ரசிக்கும் நுட்பம் மரபணுக்களிலேயே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றாலும் புட்டிப்பால் கட்டம் ஒன்று வருவது போல் கொஞ்சம் முறையாகக் கற்கலாம்.

பெண் ரசனை என்பது வாழ்க்கைச் சுழற்சி (Life Cycle). இதில் மூன்று கட்டங்கள் உண்டு. முதல் கட்டம் ரசிக்க ஒருவரைத் தேர்ந்தெடுத்தல். இரண்டாவது கட்டம் அவரை ரசித்தல். மூன்றாவது கட்டம் அவரை விலகுதல். ஒவ்வொன்றையும் எப்படிச் செயல்படுத்துவது?

*

தேர்ந்தெடுத்தல்

முதற்கோணல் முற்றிலும் கோணலாகும் அபாயத்தால் தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கியக் கட்டம். அதற்கு கண்களையும் மனதையும் முன்முடிவு இல்லாமல் திறந்து வைத்திருக்க வேண்டும் - கொக்கு ஒன்று ஒற்றைக் காலில் மீனின் வருகைக்குக் காத்திருப்பது போல.

அது ஒரு திரைப்படத்தின் நாயகியாக இருக்கலாம். நெடுந்தொடர் துணை நடிகையாக இருக்கலாம். ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் மாடலாக இருக்கலாம். அல்லது ஒரு நாளிதழ் விளம்பரத்தின் உறைவை மீறி உயிர்த்திருக்கின்ற‌ முகமாக இருக்கலாம்.

எனக்கு அப்படித்தான் பதின்மத் தொடக்கத்தில் பெப்ஸி விளம்பரம் ஒன்றில் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானார். அன்று அவர் உலக அழகி பட்டம் பெற்றிருக்க‌வில்லை; சினிமா நடிகை கூட‌ இல்லை; அவரது பெயர் கூடத் தெரியாது. ஆனால் அப்போதே அவர் நிகரற்ற அழகி எனப் பதிந்து போனது. அதிலிருந்து சுமார் பதின்மூன்று ஆண்டு அவரே உலகின் உச்சப் பேர‌ழகி என என் மனதில் சம்மணமிட்டிருந்தார். அது ஒரு திறப்புக்கான‌ கணம்!

ஆம். இப்படி அத்தனை பேரையும் சலித்தெடுபதில் உங்கள் இலக்கு இன்றைய தேதியில் உங்களைப் பொறுத்த வரை உலகின் உச்சமான‌ பேரழகி யார் என்பதைக் கண்டறிவதே.

முன்பெல்லாம் இதன் பொருட்டு சினிமா பார்க்க வேண்டும், சீரியல் பார்க்க வேண்டும், ஃபேஷன் ஷோக்கள் பார்க்க வேண்டும், தினசரிகளையும் சஞ்சிகைகளையும் பார்க்க வேண்டும். பணம், நேரம் இரண்டு செலவும் அதிகம். இன்றைய அழுத்தம் மிக்க அவசர வாழ்வில் அது பலருக்கும் சாத்தியமில்லை. உலகைச் சுற்றாமல் அம்மையப்பனைச் சுற்றி வந்து ஞானப் பழம் பெற்ற பிள்ளையார் மாதிரி இருந்த இடத்திலேயே இவர்கள் அனைவரையும் தரிசிக்க ஒரு மார்க்கம் இருக்கிறது. இன்ஸ்டாக்ராம்! மொத்த உலகமும் ஒரு கிராமம் என்ற சித்தாந்தம் இந்த இன்ஸ்டா கிராமம் வழிதான் உண்மையாகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கப்போர்களை விடவும் எவ்வளவோ அமைதியான, அழகான‌ உலகம் இன்ஸ்டாக்ராம். செயல்பாட்டில் இறங்க மாட்டீர்கள், வேடிக்கை பார்ப்பதே இல‌க்கு என்றால் இன்ஸ்டாக்ராமே கனகச்சிதம். ஒரே விஷயம் ஆண்களை (குறிப்பாக எழுத்தாளர்களை) பின்தொடராமல் கணக்கைச் சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது நூறு முதல் அதிகபட்சம் ஆயிரம் பேர் வரை பின்தொடரலாம். அதற்கு மேல் போனால் பழைய பிஎஸ்என்எல் டெலிஃபோன் டைரக்டரி மாதிரி ஆகி விடும். தவிர, யோசித்தால் அவ்வளவு அழகிகள்தாம் ஒருவர் ரசனைக்குச் சாத்தியம்!

அந்த ஆயிரம் பேரில் யார் உங்களுக்கான அழகி எனக் கண்டறிய ப்ரக்ஞைப்பூர்வப் பாடங்கள் ஏதுமில்லை. பூ மலர்வது போல் அது தானாகவே நிகழ வேண்டும். தீபிகா படுகோனை Aankhon Mein Teri பாடலில் முதலில் பார்க்கையில்அது நிகழ்ந்தது எனக்கு.

உத்தேச அளவுகோல் ஒன்றுண்டு. அவ‌ர் உங்களுக்கு எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகாகத் தெரிய வேண்டும். இன்னொரு முக்கிய விஷயம் புகைப்படங்கள் தாண்டி அசைபடத்திலும் ஈர்க்க வேண்டும். சிலர் புகைப்படங்களில் சிறப்பாக இருப்பார்கள். ஆனால் அசைபடம் (உதாரணமாகச் சிரிப்பு, முக பாவம்) பார்த்தால் ஒருவித‌ விலக்கம் தோன்றி விடும். அப்போது ‘இவர்தான் நம் உச்ச அழகியா?’ என்ற இருத்தலியல் சிக்கல் எழும். மறுபடி முதலிலிருந்த தேர்வைத் தொடங்க வேண்டும் - அதைத் தவிர்க்கத்தான்.

நீங்கள் அவரைத்தான் இன்னும் சில காலத்துக்கு உயிரைக் கொடுத்துக் கொண்டாடப் போகிறீர்க‌ள் என்பதால் அதற்குரிய பூரணத் தகுதிகளுடன் அவர் இருப்பது முக்கியம்.

பல ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் அவர் அழகாக இல்லை, ஒப்பனை இல்லாமல் சிறப்பாக‌ இல்லை என்பதை எல்லாம் தாரளமாக‌ மன்னிக்கலாம். காரணம் நீங்கள் கால இயந்திரத்தில் ஏறி பழைய காலத்துக்கும் போகப் போவதில்லை. அவரை மணம் செய்து தூங்கி எழுந்தவுடன் எப்படி இருக்கிறார் எனக் காணும் வாய்ப்பும் இல்லை. இன்றைய தேதியில் செறிவான ஒப்பனையில் எப்படி இருக்கிறார் என்ற கணக்கே போதுமானது.

எது கூடாது என்பதற்குச் சில விதிகள் இருக்கின்றன. ஒன்று ஊரே கொண்டாடுகிறது என்பதாலேயே அவரை உங்களுக்குப் பிடித்தமானவர் என்று நம்ப‌த் தொடங்கலாகாது. குஷ்புவும், ஜோதிகாவும், அனுஷ்காவும், நயன்தாராவும் எனக்கு அப்படித்தான் ஆகாது. (இலக்கியம், சினிமா என்ற மற்ற ரசனைகளுக்கும் கூட‌ இது பொருந்தும்.) இன்னொன்று யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதால் தனித்துவமாக இருக்கட்டும் என ஒருவரை நமக்குப் பிடித்ததாகச் சொல்லிக் கொள்வது. இதுவும் சங்கடம் தரும். முழுமையாகப் பிடிக்காத விஷயத்தைப் பிடித்ததாகப் பாசாங்கு செய்வது சுயவதையிலேயே முடியும்.

அழகை ரசிப்பது மன மகிழ்ச்சிக்கான விஷயம். அதை ந‌ம் தன்முனைப்புடன் குழப்பிக் கொள்ளாதீர். சொல்லப் போனால் இது அதற்கு நேர்மாறான விவகாரம். சரணடைதல்!

*

ரசித்தல்

ஒப்பீட்டளவில் இது எளிது. கரும்பு தின்னக் கூலி போல். ஏற்கெனவே விட்ட இன்ஸ்டாவில் இருந்தே தொடங்குவோம். ஓர் அடையாளத்துக்கு நாம் பின்பற்றும் உலகப் பேரழகி ஒரு நடிகை என வைத்துக் கொள்வோம். முதலில் அந்நடிகையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கைப் பின்தொடர வேண்டும். அடுத்து ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் அவரது ரசிகர் மன்றக் கணக்குக‌ள். அப்புறம் அவரது பிஆர் நிறுவனக் கணக்கு. பிறகு அவரது இயக்குநர், உடன் நடிக்கும் கலைஞர்கள், புகைப்படம் எடுப்பவர், ஒப்பனை செய்பவர், அவரை விளம்பரத் தூதராகக் கொண்டிருக்கும் நிறுவனம், தனிப்பட்ட தோழிகள் என பின்தொடரலை விஸ்தரிக்க வேண்டும். (நான் அப்படித்தான் என் ப்ரியமான நடிகை - கிசுகிசு - தொடர்பான சுமார் நூறு கணக்குகளை இன்ஸ்டாக்ராமில் தொடர்கிறேன்.)

இது போக நடிகையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் கணக்குகளையும் பின்தொடர வேண்டும். இதெல்லாம் எதற்கு? காரணம் நடிகை தன் அதிகாரப்பூர்வக் கணக்கில் தேர்ந்தெடுத்து சில படங்கள் மட்டுமே பகிர்வார். ஆனால் மற்றவர்களோ கூடுதல் படங்களையும் செய்திகளையும் பகிர்வார்கள். அதிலும் ரசிகர் பக்கங்களில் எடிட் செய்யப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட‌ படங்கள், வீடியோக்கள் வெளியிடுவர்.

இது ஒரு மாதிரி ஊர் கூடித் தேர் இழுக்கும் வேலைதான். டாரன்ட் தளம் போல் இதிலும் நீங்கள் பெற்றதை நீங்கள் திரும்பிச் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே முக்கியம். அதாவது நீங்களும் உங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் கணக்குகளின் வழியே உங்களுக்குப் பிடித்த அவரது நிழற்படங்களை, அசைபடங்களைப் பரப்ப வேண்டும்.

இதில் முக்கிய விஷயம் பரப்புதல் என்பது வெறுமனே படம் பகிர்தலாக இருக்கக்கூடாது. அதை ஒரு ப்ரொக்ராமில் பிறந்த‌ பாட் கூடச் செய்யும். ஆனால் நாம் ரத்தமும் சதையும் கனவும் உணர்வும் நிரம்பிய மனிதர்கள். எனவே அதில் அவரது கண்கள், உதடுகள் என உடற்பாகங்களின் சிறப்பைத் தனித்தனியாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக அவர் எப்பேர்ப்பட்ட அழகி என்பதாகவோ வெளிப்பட வேண்டும். அவரே உலகின் முதன்மை அழகி என்பது அதன் சாரமாக இருக்க வேண்டும். ஆண்கள் அவள் காலடியில் என்பதும் இயற்கை அவள் முன் தோற்கிறது என்பதையும் சொல்ல வேண்டும். இதிலும் ஆபாசம் ஏதும் கலக்காத கவனம் காக்கப்பட வேண்டும். அவள் நம் சொற்களில் தேவதையாகவே மற்றவர் மனதில் எழ வேண்டும். எந்த ஆபாசமும் கலவாத பரிசுத்தம் கமழ வேண்டும்.

அவர் நடித்த சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்க வேண்டும். நன்றாக இருந்தால் மூன்று முறை, சுமாராக இருந்தால் இரு முறை, மோசமாக இருந்தால் ஒரு முறை பார்க்கலாம். இது குறைந்தபட்சத் தேவை. அதிகபட்சத்துக்குக் கணக்குகள் இல்லை. அவரது படம்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் பார்க்கத் தயாராக வேண்டும். அவர் பேட்டிகள் அல்லது கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் டிவியிலோ, யூட்யூப் சேனல்களிலோ வந்தால் தவறாமல் பார்க்க வேண்டும். அதில் அவர் தப்பித் தவறி ஏதாவது தத்துவம் போல் பஞ்ச் லைன் சொல்லி விட்டால் அதை முடிந்த அளவு பரப்புரை செய்ய வேண்டும். (அழகியல் (Aesthetics) என்பதே தத்துவத்தின் ஓர் உட்பிரிவுதான் என்பதை மறந்து விடக்கூடாது.)

நீங்கள் கேட்கலாம். அழகை ரசிப்பது என்றால் அவர் படங்கள் மட்டும் போதாதா? எதற்கு அவர் குறித்த செய்திகள்? போதாது என்பதே நேரடியான பதில். காரணம் புகைப்படம் பார்க்கும் போது நீங்கள் நுகர்வோர். அதை விரும்பும் போது நீங்கள் ரசிகர். அது பற்றி மேலும் தகவல் தேடும் போதுதான் அடியார். அவர் பற்றி அவரை விடவும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எழாமல் ஆராதனை சாத்தியம் இல்லை. அதுதான் பூரண சரணாகதி. கொண்டாடுதலின் உச்சம். ஆகவே, அவர் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சதா அது பற்றிய தேடுதல் உள்ளுக்குள் ஓட வேண்டும்.

உதாரணமாக நடிகை நடித்து வெளியான படங்களின் பெயர்கள், வெளியான ஆண்டு, அதில் அவர் பாத்திரத்தின் பெயர், அது எந்த ஓடிடியில் கிடைக்கிறது போன்ற தகவல்கள் எப்போதும் விரல் நுனியில் இருக்க வேண்டும். அப்புறம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், நடிப்பதாக வதந்தி வரும் படங்கள் பற்றிக் கூட‌ அறிந்திருக்க வேண்டும். அவர் தோன்றும் விளம்பரங்கள் எவை எனத் தெரிந்திருக்க வேண்டும். அந்த‌ ப்ராண்ட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் - அது பவுடரோ, க்ரீமோ, சட்டையோ, தங்கமோ!

அவர் வென்ற விருதுகள், நாமினேட் செய்யப்பட்டு தவற விட்ட விருதுகள் பற்றித் தெரிய வேண்டும். அவரது படம் அட்டையில் போட்டு வந்த இதழ்கள், அவரது நேர்காணல் வந்த சஞ்சிகைகள் சேகரிக்க வேண்டும். அவர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அறிந்திருக்க வேண்டும். உதா: பிறந்த நாள், பெற்றோர் பெயர், பூர்வீகம், பள்ளி, கல்லூரி, இனம், மதம், காதல், முறிவு, மணம், பிடித்த விஷயங்கள், அளித்த / பெற்ற பரிசுகள், பயன்படுத்தும் பொருட்கள், போய் வந்த‌ சுற்றுலாத் தலங்கள், உடம்பில் குத்தியிருக்கும் டாட்டூக்கள் …

இதில் பிறந்த நாள் என்ற விஷயம் முக்கியமானது. அன்று சிறப்பாக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்பது விதி. உதாரணமாக அவரது நூறு நிழற்படங்களைச் சேகரித்துப் பகிர்வது, அவர் தோன்றும் அத்தனை திரைப்படப் பாடல்களையும் தொகுத்து யூட்யூபில் ப்ளேலிஸ்ட் போடுவது, அவரது பிறந்த நாளுக்கு அவரது படம் போட்ட கேக் வெட்டுவது என்று இப்படி மற்ற நாட்களை விடப் பிரத்யேகமாக ஏதாவது மெனக்கெட்டுச் செய்ய வேண்டும். இல்லையென்றால் பிறந்த நாளுக்கு என்ன மதிப்பு! அது ஒரு திருவிழா.

அவரை மிகப் பிடித்து விட்ட பின் அடுத்த கட்டத்தில் இதில் உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஏதேனும் காரியத்தில் இறங்க வேண்டும். தினம் அவரைப் பற்றிச் செய்வது போல் ஏதாவது வேலை வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக அவரது புகைப்படம் ஒன்றைத் தினம் போட்டு அதற்குப் பொருத்தமான கவிதை சொல்லலாம் (சொந்தச் சரக்கோ கடன் பெற்றோ), அவரது புகைப்படத்தை இனிப்புப் பண்டத்துடன், ல்லது புள்ளினத்துடன், அல்லது புத்தக அட்டையுடன் ஒப்பிட்டு தொடர் வெளியிடலாம்.

இதில் எல்லாவற்றையும் விட‌ மிக மிக மிக முக்கியமான விஷயம். இதெல்லாம் அந்த நடிகைக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தெரிந்த பின் இது எல்லாமே அவரை ஈர்க்கத்தான் செய்யப்படுகிறது என்றாகி விடும். அதில் இயல்பு இராது. கடவுள் மீதான பக்தி ஏன் அத்தனை உயர்வாகப் பார்க்கப் படுகிறது என்றால் அது பிரதிபலன் எதிர்பாராதது. ஒரு நடிகை மீதான‌ ஆராதனையும் அந்த உயரத்தில் நிகழ‌ வேண்டும்.

*

விலகுதல்

ஒர் அழகியை விலகுதல் என்பது மனம் நிறைய வலியுடன் மேற்கொள்ளப்படும் செயல். ஆனால் எல்லா அழகிகளுமே Expiry Date உடன்தான் வருவார்கள் என்பதே இயற்கையின் விதி - சில ஆண்டு முதல் பல வருடம் வரை எனக் கால நீளத்தில் வேறுபாடு இருக்கலாம்.

ஏன் விலக‌ல்? ஓர் அழகியை நாம் ரசிப்பது அவளது அழகிற்காகவே. ஆக‌வே எப்போது அவள் அழகு குறைந்தவளாகத் தோன்ற ஆரம்பிக்கிறாளோ அப்போது விலகல் மெல்ல ஆரம்பிக்கிறது. ஓர் அழகி எப்போது நமக்கு அழகு குறைந்தவளாகத் தோன்றுவாள்?

நானறிந்த வரை இரு காரணங்களால்: 1) திருமணத்திற்குப் பின்போ பிரசவத்துக்குப் பிறகோ வயதாவதாலோ முக மாற்று அறுவை சிகிச்சையாலோ தோற்றப் பொலிவில் சரிவு உண்டாகும் போது. 2) அவரை விடவும் பேரழகியாக ஒருவர் தெரிய ஆரம்பிக்கும் போது. ஓர் உறையில் ஒரு வாள்தான் இருக்க முடியும். ஒரு சமயம் ஒருத்திதான் நமக்கு உலகப் பேரழகியாக இருக்க முடியும். அனு ஸிதாராவை அப்படித்தான் நீங்கினேன்.

மனதின் ரசனை இடும் கட்டளையை ஏற்று வலி மீறி விலகுவதைத் தவிர வழியில்லை. முந்தைய நம் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த விலகல் கேலிக்குள்ளாகக் கூடும். ஆனால் நாம் நம் மனசாட்சிக்கே விசுவாசமாக இருக்க வேண்டும். இன்றைய மாற்றம் முந்தைய சிலாகிப்புகளை ரத்து செய்து விடாது. அது அன்றைய நிஜம்; இது இன்றைய உண்மை! இதில் குற்றவுணர்வு கொள்ள ஏதுமில்லை. ரசித்தலின் ஒரு பகுதியே இதுவும்.

*

இப்படியாக ஓர் அழகியை ரசிப்பதை ஒரு காவியம் எழுதுவது போல் கலாப்பூர்வமாகச் செதுக்க வேண்டும். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல் அது அளிக்கும் மகிழ்ச்சி அலாதியானது. அதன் பொருட்டு கொஞ்சம் கூடுதல் நேரம் அழிந்துபட்டால்தான் என்ன!

***

(மெட்ராஸ் பேப்பர் நவம்பர் 2, 2022 அன்றைய இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்