நித்ய தண்டனை

வைரமுத்து இல்லையென்றால் நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே மாட்டேன். என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து. அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவர்மீது எனக்கு உண்டு. இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் அதன் நிமித்தம் அவர் இலக்கிய இடத்தை உயர்த்தியோ, அவரது பாலியல் அத்துமீறல்களை ஆதரித்தோ ஒருபோதும் பேச மாட்டேன்.

எழுத்தில் வைரமுத்துவின் இடம் என்ன? வைரமுத்து மிகச் சிறந்த திரைப் பாடலாசிரியர். இந்திய அளவில் கூட இதுவரை உருவான சினிமா பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக இருக்கலாம், ஆனால் எனக்கு பன்மொழிப் பாண்டித்யம் இல்லாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அளவில் எடுத்தால் ஆகச் சிறந்த பாடலாசிரியர் அவரே - கண்ணதாசனும், வாலியும் அவருக்குப் பின்தான். வெகுஜனங்களை வாசகர்களாகக் கொண்ட புதுக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் அவரே தமிழில் முதன்மையானவர். தமிழில் பரப்பியப் புதுக்கவிதை எழுதிய அனேகம் பேரை வாசித்திருக்கிறேன் (குறைந்தது ஒரு நூலேனும்) என்ற தகுதியில் இதை உறுதியாகச் சொல்வேன். போலவே 'வில்லோடு வா நிலவே' குறிப்பிடத்தகுந்த வெகுஜன நாவல். இதைத் தாண்டி நவீன இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு எந்த இடமும் இல்லை. 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு வித‌ டாகுமெண்டரி மட்டுமே. 'கருவாச்சி காவியம்', 'மூன்றாம் உலகப் போர்' நான் முழுக்க‌ முடிக்க‌வில்லை என்றாலும் வாசித்த வரை அவை பற்றியும் அப்படியான அபிப்பிராயமே கொண்டிருக்கிறேன். இம்மூன்றிலுமே பண்பாட்டுப் பதிவுகள், இனவரைவியல் குறிப்புகள் முதலியவை ஏராளம் உண்டுதான். அதைத்தாண்டி தரிசனம் கொண்ட பேரிலக்கியப் பிரதியாக‌ இவை உயரவில்லை. அவ்வளவு ஏன், சுவாரஸ்யமான வெகுஜனப் படைப்பாகக் கூட நிற்கவில்லை என்றே சொல்வேன். குமுதம் இதழில் வைரமுத்து எழுதிய தொடர் சிறுகதைகள் எதையும் நான் வாசிக்கவில்லை. 'தமிழராற்றுப்படை' மொழி மூத்தோர் குறித்து வெகுஜனத்தின் மனதில் பதிய வைக்கும் வலுவான‌ முயற்சி என்ற அளவில் முக்கியமானது. இதுவே என்வரையில் வைரமுத்துவின் இலக்கிய இடம்.

தனி மனிதராக வைரமுத்து குறித்துப் பல மனத்தாங்கல்கள் எனக்குண்டு. முதலில் அவரது அரசியல் நிலைப்பாடு. காற்றுள்ள பக்கம் சாய்வதில் தயக்கம் இல்லாதவர். கலைஞரைக் கொண்டாடிய அதே வாயால் நிர்மலா சீதாராமனையும் தருண் விஜய்யையும் புகழ்வார். தன்னை விழாக்களுக்கு அழைப்போரிடம் தன் புத்தகங்களை வாங்க வற்புறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. படுக்கையிலிருந்த ஜெயகாந்தனிடம் தன் கதைகளைப் பாராட்டி எழுதிக் கொண்டு கையொப்பம் வாங்கினார் என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது. சாஹித்ய அகாதமி, ஞான பீடம் முதல் நொபேல் பரிசு வரை வாங்க லாபி செய்கிறார் என்றும் செய்திகள் இருக்கின்றன‌. சுயசாதிப் பற்றுதல் கொண்டவர் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. சில விஷயங்களில் உளறலாகக் கருத்துப் பகிர்ந்திருக்கிறார். அவர் பாடல்களில், கவிதைகளில், கதைகளில், கட்டுரைகளில், உரைகளில், ட்வீட்களில் பிற்போக்கான கருத்துக்கள் உண்டு. இளையராஜாவுடனான பிணக்கு விஷயத்திலும் பாசாங்கான ஒரு நிலைப்பாடு எடுத்து மக்களிடம் நல்லவர் எனப் பெயரெடுக்க முனைகிறார் என்றே புரிந்து கொள்கிறேன்.

இவை எல்லாம் தாண்டி மீடூ பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள். முகம் காட்டியும் காட்டாமலும் பலர் வெளிப்படுத்திய பத்துக்கும் மேற்பட்ட மீடூ குற்றச்சாட்டுக்கள். நடுவுநிலை மாறா தர்க்கத்தில் யோசித்துப் பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிலவற்றிலேனும் உண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். சினிமா உலகிலும் அவர் பற்றி அப்படியான பேச்சுக்களே நிலவுகின்றன. அத்தனை பேரும் சேர்ந்து கொண்டு ஒரே குரலில் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை. தவிர, அவர் அதை எதிர்கொண்ட முறையிலேயே ஓர் அபாண்டக் குற்றச்சாட்டிற்கான அறச்சீற்றம் இல்லை. (இது பார்ப்பனச் சதி என்று சொல்வதை எல்லாமும் தப்பித்தலாகவே பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பனர்கள் சேர்ந்து பழி தீர்க்குமளவு வைரமுத்து அத்தனை ஸ்திரமான திராவிடரும் அல்ல! ஆனால் அவர் மீது தீவிர இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலருக்கும் ஏராளப் பொறாமை உண்டு என அறிவேன்.)

பல்லாண்டுகளாக அவர் எப்படி தைரியமாக அதைச் செய்தார்? அவரது முயற்சிக்கு சிலரேனும் லாபம் கருதியோ பயந்து கொண்டோ இணங்கியதால் பெற்ற உற்சாகமாகவே இருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் அவர் செய்தது குற்றமே. தன் செல்வாக்கை, தன் புகழை, தன் மரியாதையை முதலீடாக வைத்து பெண்களிடம் காமம் பெற முயற்சிப்பது என்பது சினிமா துறையில் அவரைப் பயன்படுத்தும் இயக்குநர் / இசையமைப்பாளர் / தயாரிப்பாளர் / நடிகர் மற்றும் அவரது வரிகளைக் கைதட்டிக் கொண்டாடும் ரசிகன் இருதரப்புக்குமே செய்த துரோகமே. வாய்ப்பும், பாராட்டும் வழங்கப்பட்டது அதைக் கொண்டு பெண்களைச் சுரண்ட அல்ல. அது அவர் மீதான மரியாதையைக் குறைக்கிறது.

அதற்கான தண்டனை என்ன என்பதில்தான் நான் சற்றே மாறுபடுகிறேன். நியாயமாக என்ன நடக்க வேண்டும்? சட்டப்பூர்வமாக இதை எடுத்துப் போய் நீதிமன்றத்தில் அவருக்குத் தண்டனை பெற்றுத் தரலாம். அப்படி நடந்தால் அது எல்லோராலும் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டியதே. ஆனால் மீடூ குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மைக்கு ஆதாரம் இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சிசிடிவி ஆதாரங்கள் கொண்டு நடந்த 'தெஹல்கா' தருண் தேஜ்பால் வழக்கிலேயே அவர் குற்றமற்றவர் என விடுதலையாகி விட்டார்.) இன்னொரு விதமான தண்டனை அவர் செயலுக்காக அவரைத் தவிர்க்க உத்தேசிக்கும் படைப்பாளிகளும் ரசிகர்களும் அதைச் செய்யலாம் (அதாவது எந்த வெளி அழுத்தங்களும் இல்லாமல், தாமாகவே செய்வதைச் சொல்கிறேன்). உதாரணமாக ரஹ்மான் தான் இசையமைக்கும் படங்களில் தொடர்ச்சியாய் வைரமுத்துவைத் தவிர்ப்பதைச் சொல்லலாம்.

மாறாக‌, அவர் ஒவ்வொரு முறை ஏதேனும் அங்கீகாரம் பெறும் போதும் அல்லது அவரது படைப்பு ஏதேனும் ஒன்று வெளியாகும் போதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டே இருப்பதில் என்ன தர்க்கம் இருக்க முடியும்? எனில் நாம் என்ன சொல்கிறோம்? ஆயுள் முழுக்க வைரமுத்து வீட்டிலேயே முடங்கி விட வேண்டும். அமைப்புகளும் ரசிகர்களும் அவர் பங்களிப்பை இனிமேல் ஒருபோதும் பேசவே கூடாது என்றா? அவர் சினிமாவில் வாய்ப்புப் பெறவே கூடாது என்றா?

வைரமுத்துவுக்கு ஓஎன்வி இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. அந்த விருதின் இடம் பற்றி எனக்குத் தெரியாது. அதனால் வைரமுத்துவின் பங்களிப்புகளுக்கு அது பொருந்துமா என என்னால் சொல்ல முடியவில்லை. (அடூர் கோபாலகிருஷ்ணன் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பதால் வைரமுத்துவின் சினிமா பங்களிப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன்.) அப்படியே நமக்கு விருதுக்கான‌ அவரது தகுதி குறித்த கேள்விகள் இருந்தாலும் அது தனியான விவாதம். ஆனால் பிரச்சனை அவரது இலக்கிய ஸ்தானம் பற்றியது அல்ல; ஒழுக்கத்தை முன்வைத்து அவர் விருதுகளிலிருந்து நிராகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுவதுதான்.

மலையாள நடிகைகளில் முற்போக்காளராகக் கருதப்படும் பார்வதி திருவோத்து இதை ஆர‌ம்பித்து வைத்திருக்கிறார். பலரும் இதைத் தொடர்வார்கள். அவர்களின் கருத்தை அறிய விழைகிறேன்.

கொலை / கொள்ளை / ஊழல் / கலவரம் / வல்லுறவுக் குற்றவாளிகள் கூட சில பல‌ ஆண்டுகளில் விடுதலை அடையலாம், ஆனால் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர் இறுதி வரை இறந்த ஒருவர் போலவே இருந்து விட்டுப் போய் விட வேண்டும் என்பதுதான் அவர்கள் கருத்தா? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றிருக்கிறது: மற்ற குற்றங்கள் யாவும் பல்லாண்டு விசாரணைக்குப் பிறகே உரிய தண்டனை தரப்பட்டு, அதற்கும் மேற்முறையீட்டு வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. கொடூரக் குற்றங்களுக்கே அப்படி எனும் போது, நிரூபிக்கப்படாத Name & Shame வகைக் குற்றச்சாட்டுகளுக்கு நாம் இப்படி ஒரு நிரந்தர ஒதுக்குதல் தண்டனையைத் தர உத்தேசிக்கிறோம் என்பது முரணல்லவா!

கவனியுங்கள், வைரமுத்து குற்றம் செய்யவில்லை என நான் வாதிடவில்லை; வைரமுத்து ஏற்கனவே தண்டனை பெற்று விட்டாரே என்று கூட நான் கேட்கவில்லை. ஒவ்வொரு முறையும் வேறு யாராவது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போதோ, வைரமுத்துவுக்கு அங்கீகாரம் கிட்டும் போதோ மீடூ பிரச்சனையை முன்னெடுப்போர் எதிர்பார்ப்பதுதான் என்ன என்று புரிந்து கொள்ள முனைகிறேன்.

எல்லாக் குற்றங்களும் ஒன்றல்ல. அந்தந்தக் குற்றத்தின் உயரத்திற்கேற்பவே தண்டனை கிட்டும். எல்லாவற்றுக்கும் மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ சாத்தியமில்லை. தேசத்தின் முன்னாள் பிரதமரையும் இன்னும் சிலரையும் குண்டு வெடித்துச் சாகடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையே பல்லாண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள் என விடுதலை செய்யக் கோருகிறோம் நாம். பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த பதின்மனை சுயதொழில் செய்ய அனுமதித்து விடுதலை செய்கிறோம். சாதி ஆணவக் கொலை செய்தவர்கள் குறைந்த தண்டனை பெற்று எளிதில் விடுதலையாகிறார்கள். சுதந்திர தினத்துக்கும், காந்தி ஜெயந்திக்கும் கொடூரக் குற்றங்கள் செய்த‌ எத்தனையோ சிறைவாசிகளை தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுவிக்கிறோம். எனில் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மட்டும் ஆயுள் முழுக்க அதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறோம்?

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்