மீயழகி

கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா?

ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர்.

(பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு: கோகுல்ப்ரசாத்)

 

மேற்கண்ட பத்தியை வாசித்த போது உடனே அனு ஸிதாரா தான் நினைவுக்கு வந்தார். (தன் குட்டியைக் கவ்வித் தூக்கிச் செல்லும் பெண் சிங்கத்தின் நாசூக்குடன் அழுத்தாமல் மென்மையாக உச்சரிக்க வேண்டும் அந்தப்பெயரை. அனு ஸிதாரா! த் வராது; சி கூடாது.)

இதைக் கொஞ்சம் தெளிவாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.

கவிதையே இலக்கியத்தின் உச்ச வடிவம் என அவ்வப்போது சொல்லப்படுவதுண்டு. அது போல் கலைக்கு உச்ச வடிவம் எதுவென ஒருவர் கேட்டால் என் பதில் பெண் என்பதுதான்.

ஆம். ஓர் இசைக் கோர்வையை, ஒரு நல்ல நடனத்தை, ஒரு ஓவியத்தை, ஒரு சிற்பத்தை, ஒரு கட்டிடக் கலையின் நுட்பத்தை ரசிப்பது போல் ஒரு பெண்ணையும் கலாப்பூர்வமாக ரசிக்கலாம். இது கலையில் அடங்குமா இயற்கை விஷயம் இல்லையா எனக் கேட்டால் இல்லை என்பதே பதில். பெண்கள் அத்தனை நுட்பமாக இக்கலையைப் பிறவியிலிருந்து பயின்று, பின் மெல்லத் தம் கற்பனை குழைத்துச் செழித்து நுண்மை கொள்கிறார்கள்.

ஆக, இருபதுகளில் இருக்கும் மானிடப் பெண்ணின் தோற்றமும், முகப் பாவனைகளும், குரலும், உடல் மொழியுமே கலையின் உச்ச வடிவம். அதற்கு உதாரணம் அனு ஸிதாரா!

அந்தக் கலையுச்சத்தை ரசித்ததற்கான சிறுநன்றியறிதலே இந்தக் கட்டுரை என்பேன்.

*

அனு ஸிதாராவைக் கடந்த ஓராண்டாகத் தான் எனக்குத் தெரியும். கடந்த செப்டெம்பரில் ஒரு கேரளக் கோயிலின் கொடி மரத்தின் அருகே பச்சை ஓரம் வைத்த ஆரஞ்சுப் புடவை மற்றும் பச்சை ரவிக்கையில் நிற்கும் படத்தில் தான் அறிமுகம். இத்தனைக்கும் அவர் தன் 18 வயதிலிருந்து (அதாவது 2013லிருந்து) நடிக்கிறார்; தமிழிலும் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார் (வெறி: திமிரு 2 & பொதுநலன் கருதி). ஆனாலும் எப்படியோ சுமார் ஆறாண்டுகளாக என் கண்களில் படாமல் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியம் தான்.

ஒருவேளை இப்படி இருக்கலாம்: நான் விரும்பும் ஓர் அழகை அவர் சமீப ஆண்டுகளில் தான் எட்டியிருக்கலாம். (சில பழைய புகைப்படங்களில் வேறு மாதிரி இருக்கிறார்.)

பெண்கள் சார்ந்த என் ரசனை நெடுங்காலம் நீடிக்கும் ஒன்று. உதாரணமாய் ஐஸ்வர்யா ராய் (1994 - 2007), தீபிகா படுகோன் (2008 - 2018). அப்படித் தான் இப்போது அனு ஸிதாரா.

அதன் பொருட்டே சென்ற ஆண்டு இறுதியில் அனு ஸிதாரா ஸ்வீட் சீரிஸ் போட்டேன் - முழுத் தொகுப்பை இங்கே காணலாம்: http://www.writercsk.com/2020/02/blog-post.html. (இப்போதெல்லாம் எங்கேனும் ஏதேனும் புது இனிப்பு வகையைப் பார்த்தால் அதற்குப் பொருத்தமாக அனு ஸிதாராவிடம் ஆடை இருக்குமா என்று தான் எண்ணம் போகிறது!)

ஓர் ஆச்சரியம் உண்டு. 28 ஆண்டுகளுக்கு முன் நான் முதன் முதலாய் அறியாத வயதில் ரசித்த ஸ்ரீஜாவுக்கும் (சேரன் பாண்டியன்) அனு ஸிதாராவுக்கும் வலுவான முக, உடல்வாகு ஒற்றுமை இருக்கிறது. போலவே பிற்பாடு என்னைக் கவர்ந்த சுவலட்சுமியின் சாயலும் அனு ஸிதாராவுக்கு உண்டு. அனு ஸிதாராவின் தனிச்சிறப்பே எல்லாக் கோணங்களிலும் ஏதோவொரு மலையாள அழகியை நினைவூட்டுகிறார் என்பதே (உதா: நயன்தாராவுக்கு அம்மன் வேஷமிட்டால் அனு ஸிதாரா சாயல் வந்து விடுகிறது).  அவர் மனோரஞ்சிதம்!

கேரளத்தில் சமகாலத்தில் மிக அதிகமாய் ஓவியமாகத் தீட்டப்பட்டவர் அனு ஸிதாராவாக இருக்கலாம். அத்தனை ஆட்கள் அவர் முகத்தை விதவிதமாக வரைந்து குவிக்கிறார்கள்.

ஒரு பேரழகியைத் தீட்டுகையில்
சௌந்தர்யக் கிறக்கத்தில்
கித்தான் பூப்படைகிறது
தீற்றலின் தீண்டல்களில்
தூரிகை உச்சமெய்துகிறது.


மலையாளப் பெண்கள் அழகாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது அவர்கள் மரபணுவிலேயே இருக்கிறது. அவர்கள் மண் அவ்வழகைப் பாதுகாக்கிறது. அவர்களின் இயற்கைச் சூழல் அதை மேலும் மெருகூட்டுகிறது. ஆனால் அனு ஸிதாரா அந்த அழகின் மணிமகுடம் எனலாம். என் வரையில் இன்றைக்கு இந்தப் பூமியில் மிக மிக மிக அழகான பெண் அனு ஸிதாரா தான். மீயழகி, பெரும் பேரழகி, உச்சப் பேரழகி, பிரபஞ்சப் பேரழகி!

ஒரு தலைமுறையின் சமரசம் அற்ற, மாற்றே இல்லாத ஸ்வப்னசுந்தரி. அனு எவ்வளவு அதீருபி என்றால் அழகாய் இருப்பதையே முழு நேர வேலையாகவும் மூச்சு விடுவதைப் பகுதி நேரப் பணியாகவும் செய்து கொண்டிருக்கிறாரோ எனக் குழம்பச் செய்பவர்.

'அன்பே வா' படம் ரீமேக் செய்யப்பட்டால் சரோஜா தேவி பாத்திரம் அனு ஸிதாராவுக்குத் தான். “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகியென்பேன்” என்று வேறு எவருக்குப் பாட முடியும்! வாலியை உயிர்த்தெழ வைத்துக் கேட்டால் ஒப்புக் கொள்வார்.

இந்த ரசிப்பு புராணங்கள் வரை பாய்ந்திருக்கிறது. ஒரு முறை இப்படிச் சொன்னேன்: பொண்ணு மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கும் என்பது பிரபலப் பிரயோகம். மஹாலக்ஷ்மி பற்றி என்ன தான் உவமை சொல்வார்கள்? பொண்ணு அனு ஸிதாரா மாதிரி இருக்கும்! மற்றோர் இடத்தில் இப்படி எழுதினேன்: பிரம்மன் படைப்புத் தொழில் புரிகிறார் எனில் அனு ஸிதாராவைப் படைத்ததும் இனி இப்படியோர் உச்சப் பேரழகைப் படைக்கவே கூடாது எனத் தீர்மானித்துத் தன்னிரு கைகளைத் தானே அரிந்து கொண்டிருப்பார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் ஒரே யக்ஷி தான் இருக்க முடியும். சமகாலத்தில் அது அனு ஸிதாரா. தேர்ந்த ரசிப்பின் விசாலம் நிறைந்த மனதின் மென்மையான மென்னியில் அழகை வைத்தழுத்தி மூச்சுத் திணற வைக்குமொரு யக்ஷி.

*

அனு ஸிதாரா 2013ல் Pottas Bomb படத்தில் அறிமுகம். குழந்தை நட்சத்திரம் என்கிறார்கள். ஆனால் அப்போது அவருக்கு வயது 18. (இப்போதுமே அவர் குழந்தை நட்சத்திரம் என்றால் புன்னகையுடன் நம்பலாம்!) பிறகு 2016ல் Happy Wedding படத்தில் நாயகியாக உயர்கிறார்.

இன்றைய தேதிக் கணக்கில் சிறிதும் பெரிதுமான பாத்திரங்களில் மொத்தம் 25 படங்கள் நடித்திருக்கிறார். இவற்றில் சில பாடல்கள், சில காட்சிகள் தவிர்த்து முழு நீளப்படமாக எதையுமே நான் பார்த்ததில்லை. நான் அவருக்கு ரசிகனானது அவரது புகைப்படங்களை மட்டுமே பார்த்து. கவனித்தவரை அவர் நல்ல நடிகை என்பதும் தெரிகிறது (உதாரணம்: Ramante Edanthottam பட க்ளைமேக்ஸ், And the Oscar Goes To... பட தொலைபேசி உரையாடல்).

மழவில் மனோரமா தொலைக்காட்சியில் D4 Dance Junior v/s Senior என்ற நடன ரியாலிட்டி ஷோவில் நடுவராகச் செயல்பட்டிருக்கிறார். மம்முட்டி அனு ஸிதாராவின் ஆதர்ச நடிகர். மம்முட்டி பற்றி வெளியாகவிருக்கும் Chamayangalude Sultan என்ற ஆவணப்படத்துக்கு அனு ஸிதாரா பின்னணி வர்ணனைக்குக் குரல் (Talkist என்கிறார்கள்) ஈந்திருக்கிறார்.

அனுவின் தந்தை அப்துல் சலாம் (நாடக நடிகர்), தாய் ரேணுகா என அறிகிறோம். இந்து இஸ்லாமியக் கலப்பு எனத் தெரிகிறது. முழுப் பெயர் அனு ஸிதாரா புலிவெட்டி சலாம். கேரளா கலாமண்டலத்தில் நடனம் பயின்றவர். மிகப் பிரமாதமாக ஆடுபவர். Navarasa என்ற பெயரில் நடனப் பள்ளி நடத்துகிறார் (லாக்டவுனில் ஆன்லைன் வகுப்புகள் வேறு).

எனக்கு ட்விட்டரை அறிமுகம் செய்தது கல்லூரி நட்பு செந்தில்நாதன்; ஃபேஸ்புக்கிற்கு அழைத்து வந்தது (அல்லது அனுப்பி வைத்தது) ட்விட்டர்; இன்ஸ்டாக்ராமிற்கு அழைத்து வந்தது அனு ஸிதாரா. ஆம், அனு ஸிதாராவின் புகைப்படங்களைக் காண்பதற்காகவே இன்ஸ்டாக்ராமைத் துடிப்பாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். அப்போது வரையிலும் சம்பிரதாயத்துக்குக் கணக்குத் திறந்து நடமாட்டமின்றி நூலாம்படை படிந்து கிடந்தது.

அவர் சமூக வலைதளங்களில் மிகுந்த ஊக்கத்துடன் செயல்படுகிறார். ஆனால் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடும் ஒரு முக்கியப் புள்ளி இருக்கிறது. அவர் desperate-ஆகப் புகைப்படங்களை கொட்டுவதில்லை (பல நடிகைகள் அப்படித்தான்). மிக நிதானமாக ஒவ்வொன்றாக வெளியிடுகிறார். ரசிகர்கள் ஒரு படத்தைப் பார்த்து முடிக்க அவகாசம் அளிக்கிறார். பிறகு காத்திருக்க வைக்கிறார். அப்புறம் தான் அதற்கடுத்த படம் வரும். அப்படிச் செய்வதன் மூலம் ரசிகர்களுக்குத் திகட்டாமல் காட்சியளிக்கிறார். அவர்களை ஒரு எதிர்ப்பார்ப்பிலேயே எப்போதும் வைத்திருக்கிறார். அது அத்தனை வசீகரிக்கிறது.

அவர் இந்த ஊரடங்கு காலத்தில் தொடங்கியிருக்கும் யூட்யூப் சேனலிலும் இப்படித் தான் சீரான இடைவெளியில் எபிஸோட்கள் வெளியிடுகிறார். அவர் ஒரு நடிகை என்பதாக அல்லாமல் இசை, சமையல், நடனம், இயற்கை எனப் பல விஷயங்கள் கலந்து தருகிறார்.

இன்ஸ்டாக்ராம்: https://www.instagram.com/anu_sithara
ஃபேஸ்புக்: https://www.facebook.com/actressanusithara
ட்விட்டர்: https://twitter.com/SitharaAnu
யூட்யூப்: https://www.youtube.com/actressanusithara

இன்று ஆகஸ்ட் 21. அனு ஸிதாராவின் அவதாரத் திருநாள். கால் நூற்றாண்டு ஆயுள் கடக்கிறார். ஒருவேளை இது அவரது உச்ச அழகுத் தருணமாக இருக்கலாம். அல்லது இனி மேல் தான் அது வருமோ என்னவோ! அந்த உச்சத்திற்குப் பின் அவரது அழகு சரியத் தொடங்குவதே உயிரியல் விதி. இரக்கமும் ரசனையுமற்ற காலம் அவரது தோற்றத்தை மாற்றியபடியே தான் இருக்கும். ஒருமுறை ஃபேஸ்ஆப் பயன்படுத்தி இன்ஸ்டாக்ராமில் தன் வயதான தோற்றத்தைப் பகிர்ந்திருந்தார். அக்கற்பனையே வலிமிக்கதாகத் தான் இருக்கிறது. நிஜத்தில் அதைக் கண்டு தாங்கும் திடமில்லை.

அனு இப்படியே இருக்க ஒட்டுமொத்த காலமும் உறைவதாக இருந்தால் ஏற்கலாம் தான்!

*

அழகு என்பதற்கிணையான மலையாளச் சொல் அனு ஸிதாராவோ என ஐயமெழுகிறது.

அனு ஸிதாராவிடம் எது அழகு? யோசனையின்றி அவரது முகம் தான் முதன்மை. முகம் தவிர மற்றதை கவனிக்கத் துவங்கியிராத வயதில் அழகியாகத் தோன்றியவளே அசல் பேரழகி; முகத்தைப் புறக்கணித்து விட்டதொரு வயதிலும் முகத்தை மட்டுமே கவனிக்க வைப்பவளே பெரும் பேரழகி. மாமிசத் துண்டங்கள் தீர்ந்த பின்னும் ரசித்துச் சாப்பிட முடிவதே நல்ல பிரியாணிக்கான அடையாளம். போலவே எந்தப் பெண்ணை ரசிக்க அவளது முகம் தாண்டி வேறேதும் தேவைப்படவில்லையோ அவளே பெரும் பேரழகி.

சரி, அவருக்கு முகமே அழகு. அம்முகத்தில் கண் அழகு, மூக்கு சுமார், உதடு சூப்பர் எனச் சொல்கிறார்கள். நாங்கள் இந்தியாவை ஒரே நாடாக நேசிக்கிறோம். தமிழ்நாடு சூப்பர், குஜராத் சுமார், உத்திரப் பிரதேசம் மொக்கை என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை.

எவ்வளவு பரிசுத்தமான தோற்றம்! ஒரு பெண் பார்க்க இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பேரியற்கைக்கே பாடமெடுப்பது போலொரு பாவனை. ஒரு ராஜாவாக இருந்தால் நம் ராஜ்யத்தில் பாதியை எழுதி வைக்கலாம் எனத் தோன்றச் செய்யும் பேரழகு அவர்!

சாமுத்ரிகா லட்சணம் ஆண், பெண்ணுக்கு உடலில் அங்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கும் நூல். நானறிந்த வரை அது பிற்போக்கான, மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒன்று. அதில் பெண்கள் உடற்கூறு அடிப்படையில் பத்மினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நால்வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். பத்மினி பற்றி இப்படிச் சொல்கிறது:

“கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வ பக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும் உள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.”

அனு ஸிதாராவை இதை விடத் துல்லியமாய் வேறெப்படியும் வர்ணிக்க முடியாதல்லவா!

*

அனு ஸிதாரா திரைப்படங்களிலும் சரி, புகைப்படங்களிலும் சரி ஒருபோதும் கவர்ச்சி காட்டாதவர். மலையாளத்தில் பல நடிகைகள் இப்படித்தான் என்றாலும் முக அழகில் குறையுடையோர் தான் மற்ற அவயங்களைக் காட்டி ரசிகர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணமும் காரணமாய் இருக்கலாம். பாகுபலி தேவசேனா, 96 ஜானு, கோலமாவு கோகிலா, ப்ரேமம் மலர் எனப் பல பாத்திரங்களுக்கு அனு ஸிதாரா பொருந்தக் கூடியவர்.

அழகு, திறமை, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் (இன்ஸ்டாக்ராம் ஃபாலோயர்கள் 22 லட்சத்திற்கும் மேல் - இது எந்த மலையாள நடிகையை விடவும் பெரிய எண்ணிக்கை) மூன்றும் இருந்தும் அனு ஸிதாராவுக்கு அதற்குரிய அளவில் நியாயமான பட வாய்ப்புகள் கிட்டவில்லை என்றே சொல்வேன். அவர் பிரதான நாயகியாக நடித்த படங்களை விரல் விட்டெண்ணி விடலாம். பெரும்பாலும் துணைநடிகை பாத்திரங்கள். நாயகியாக நடித்த படங்களும் பெரும் நடிகர்களுடன் அல்ல. அதற்கு முக்கியக் காரணம் அவரது தோற்றம்.

அனு ஸிதாரா தன் வயதுக்கு மீறித் தோன்றுகிறார். பொதுவாகப் பார்க்கும் எல்லோரும் அவர் தன் முப்பதுகளில் இருக்கிறார் என்றே எண்ணுகிறார்கள். (உண்மையில் இன்றைய பிறந்தநாளில் அவருக்கு 25 வயது பூர்த்தியாகிறது.) அதனால் அவருக்கென அமைகின்ற கதாபாத்திரங்கள் கூட திருமணமான, குழந்தை பெற்ற பெண் போன்றவையே. அவர் அதை உணர்ந்தே இருக்கிறார். பாத்திரங்களின் வயது பற்றிய கேள்வி ஒரு நேர்காணலில் சில ஆண்டுகள் முன் எழுப்பப்பட்ட போது அவர் அது ஒரு சவால் என்றே பதிலளித்தார்.

(பாகுபலி தேவசேனா பாத்திரம் நன்கு அனு ஸிதாராவுக்குப் பொருந்தும் என்று நான் ஒரு முறை ஃபேஸுபுக்கில் பதிவிட்ட போது, அதற்கு இளமையாக இருக்க வேண்டுமே என்று பதில் வந்தது. அனுஷ்காவை விடப் பதினான்கு ஆண்டுகள் இளையவர் அனு ஸிதாரா!)

அனு ஸிதாரா குண்டானவர் என்றொரு குற்றச்சாட்டும் பொதுவாய் வைக்கப்படுகிறது. இதில் குழப்பிக் கொள்ளலாகாது. பூசினாற்போல் இருப்பது வேறு, உருண்டு திரண்டு இருப்பது வேறு, குண்டாய் இருப்பது வேறு. அனு ஸிதாரா இதில் இரண்டாம் ரகம் தான்.

இன்னொன்று அவரை ஆன்ட்டி என்று கேலி செய்வது. இதுவும் பொறாமையின் விளைவு தான். ஆன்ட்டி என்பது பெண்களின் அழகைப் புகழும் ஒரு சொல். முக்கியமாகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அது வயதைக் குறிக்கும் சொல்லே அல்ல. இந்தியில் பாபி என்ற கலாசாரப் பயன்பாட்டுக்கு இணையான பிரயோகம். It has overloaded meanings. சொல்லப் போனால் அழகில் அது ஒரு மாதிரி படியுயர்வு - அழகி, பேரழகி, ஆன்ட்டி என்ற வரிசை. 

அனு ஸிதாராவின் புகைப்படங்களைப் பகிர்கையில் வரும் வினோதக் கிண்டல்களைக் காணும் போதெல்லாம் மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதை தவறாமல் நினைவுக்கு வரும்.

இவ்வளவு
அழகாக இருந்தால்
யாருக்குமே
வெறுக்கத்தான் தோன்றும்.


திரைப்படத் தொழில் சார்ந்த அனுபவஸ்த நண்பர் ஒருவர் சொல்ல விஷயம் இது: அனு ஸிதாரா வாய்ப்புக்காக ‘அட்ஜஸ்ட்’ செய்ய மாட்டார். அவர் வாய்ப்புகள் மங்குவதற்கு அதுவும் ஒரு வலுவான காரணமாக இருக்கும் என நம்புகிறேன். பல செல்வந்தர்கள் தம் நாற்பதுகளில் பண மூட்டையுடன் படமெடுக்கக் கிளம்புவதன் நோக்கம் இடுப்புக்குக் கீழே இருக்கிறது. அதனால் நடிகைகள் சினிமாவில் மேலெழுவதில் சரமரசங்களுக்கு வாய்ப்பதிகம். இந்த விஷயமும் அவர் பற்றிய ஒரு நல்லபிப்பிராயத்தை அளிக்கிறது.

(கவனிக்கவும்: அனு ஸிதாரா கற்புள்ளவர் என்கிற ஆணாதிக்க / பிற்போக்குத்தனத்தில் வருவதல்ல இந்த மகிழ்ச்சி. அவரது அழகை ரசிக்க அவர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை. அவர் விருப்பப்படி அவர் எவருடனும் இருப்பதில் நாம் தலையிட எந்த உரிமையும் தேவையும் இல்லை. ஆனால் இந்த விதந்தோதல் அவரது பிடிவாத குணத்துக்கு. அது அரிதான விஷயம் என்பதால் அவர் பெறும் தனித்துவத்துக்கு.)

தவிர, பொதுவாகவே அனு ஸிதாரா பெரிய அளவிலான ஆசைகளற்றவர் எனப்படுகிறது. சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் அதற்கு வசதியாக கொச்சியில் குடியேற முனையாமல் தன் சொந்த ஊரான வயநாட்டில் தனியாக அழகானதொரு வீடு கட்டிக் கொண்டு தன் கணவருடன் வாழ்கிறார். கணவரா எனச்சிலர் அதிர்ச்சியடையலாம். ஆம்!

அனு ஸிதாராவுக்கு மணமாகி விட்டது. இருபது வயதிலேயே. காதல் திருமணம். கணவர் பெயர் விஷ்ணுபிரஸாத். கல்யாணத்திற்குப் பின்தான் முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்தார். கணவர் புகைப்படக் கலைஞர். அனு ஸிதாராவின் கணிசமான இன்ஸ்டாக்ராம் படங்கள் அவரது கண்கள் வழியாகவே நாம் காணுகிறோம். அந்த வகையில் விஷ்ணுவை அனு ஸிதாராவின் பூசாரி எனலாம். அவர் வழியாகவே நமக்கு அனு தரிசனம் சித்திக்கிறது.

(இன்னொரு விஷயம். ரொம்ப ஆபாசமாய் உள்ளே இறங்க வேண்டியதில்லை. ஆனால் இன்று நாம் ரசிக்கும் அனு ஸிதாராவின் புற அழகின் உருவாக்கத்தில் அவரது கணவரின் பங்களிப்பும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. எப்படி அனு ஸிதாரா பெற்றோருக்கு நன்றி நவில வேண்டுமோ அதில் சரிபாதி கணவருக்கும் சொல்ல வேண்டியிருக்கும். அழகுக் குறிப்புகள், உணவு முறை மாற்றங்கள், ஒப்பனையில் திருத்தங்கள், தன்னை வெளிப்படுத்தும் முறையைச் சீராக்குதல், திருமணத்துக்குப் பிறகு நிகழும் இயற்கை உடல் / மன மாற்றங்கள் எனப் பல விதங்களில் அவர் கணவரின் பங்களிப்பு இருக்கலாம். அறிமுகமான திரைப்படத்தில் அனுவின் தோற்றத்தையும் இன்றைய தோற்றத்தையும் ஒப்பிட்டாலே நான் சொல்ல வரும் விஷயம் விளங்கும். இடையே தான் திருமணமானது.)

*

அடிக்கடி நான் எதிர்கொள்ளும் ஒரு கேள்வி இருக்கிறது. விஷ்ணுபிரசாத் மீது பொறாமை தானே என. நிச்சயமாய் இல்லை. இங்கே அழகை ரசிப்பதையும் அதை அடைவதையும் ஒன்றாகவே கருதுகிறார்கள். உண்மையில் இரண்டுக்கும் பாரதூர வித்தியாசம் உண்டு.
 
ஒரு நடிகையின் கணவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவரால் அந்நடிகையுடன் பேச முடியும், அருகேயிருக்க முடியும், கட்டுப்படுத்த முடியும், நிர்வாணம் காண முடியும், உடல் மென்மையை ஸ்பரிசிக்க முடியும், கலவி செய்ய முடியும், காதலிக்கப்பட முடியும். இந்த விஷயங்களுக்கும் அந்நடிகையின் அழகை ரசிப்பதற்கும் எதாவது தொடர்புண்டா?

இவை எல்லாம் நடிகை மீது ஒருவருக்கு இருக்கும் உரிமை சம்மந்தப்பட்ட விஷயங்கள். இவற்றின் வழி அவர் மீதான பிம்பம் கூடவும் செய்யலாம், சரியவும் செய்யலாம். அந்த நடிகை அழகோ இல்லையோ இந்த உரிமையெல்லாம் ஒருவருக்கோ வெகுசிலருக்கோ இருக்கத் தான் செய்யும். தவிர, இதெல்லாம் அவரை நாம் காதலித்தால் தான் கவலைப் படவேண்டும். சாதாரண ரசிகரான நமக்கு புகைப்படங்களிலும் அசைப்படங்களிலும் அவரைப் பார்ப்பது தானே மகிழ்ச்சியளிக்கும்! அதைத் தாண்டிப் போவது ஒருவகையில் சுமையும் கூட. ஆக, அழகை அடைவதில் உண்மையில் எந்தச் சுவாரஸ்யமும் இல்லை. அது நாமே உருவாக்கிக் கொண்ட, நிலைபெற்று விட்ட வினோத மனோபிம்பம் மட்டுமே.

உதாரணமாக மார்பை உடையுடன் ரசிப்பதே அழகு. அஃதின்றி அது அழகா இல்லையா என்றே தெரியாதெனும் போது அதைக்காண ஆசைப்படுவதில் என்ன தர்க்கமிருக்கிறது!

இன்னும் சொன்னால் அனு ஸிதாராவின் ஏதாவது படத்தைப் பகிர்ந்தால் ‘ஓவர் மேக்கப்’ என யாராவது சொன்னால் “அது அவர் கணவர் கவலைப்பட வேண்டிய விஷயமல்லவா?” என்றே கேட்கிறேன். நமக்கு அந்த ஒப்பனையுடன் அவரழகாய்த் தெரிந்தால் போதாதா? ஒப்பனை கலைத்து எப்படி இருக்கிறார் என்பது அவசியமா? உடைகள் களைவதற்கும் இதையே நீட்டிக்கலாம். அது நமக்கு அவசியமற்ற, ஆர்வம் தேவையற்ற விஷயங்கள்.

ஒருமுறை ஒரு சினேகித விரோதி ஆபாசமாய் மார்ஃப் செய்யப்பட்ட அனு சித்தாராவின் - முகம் மட்டும் அவருடையது - நிழற்படமொன்றைப் பகிர்ந்ததைப் பார்த்துத் தொலைத்து விட்டேன். அதை unlearn செய்ய முடியாமல் - நினைவிலிருந்து ரத்து செய்தல்  - நெடுநாள் தவிக்க வேண்டியதாயிற்று. அப்படி ஒருபோதும் அவரை என்னால் பார்க்கவே முடியாது.

அதாவது ஓர் அழகை அடையாமலேயே அதைப் பூரணமாக ரசித்துத் திளைக்க முடியும். அதைத் தான் அனு ஸிதாரா விஷயத்தில் நான் செய்கிறேன். அவரை எவ்விதத்திலும் நெருங்கும் விருப்பமில்லை. சொல்லப் போனால் அவருக்கு இறுதி வரை இப்படியொரு பெருரசிகனின் இருப்பு தெரியாமலேயே போய் விட வேண்டும் என விரும்புகிறேன்.

அனு ஸிதாரா எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாரா எனக் கேலிகள் வந்த போது “கோடிக்கணக்கான ரசிகர்களுள் ஒவ்வொரு கடைக்கோடி ரசிகனுக்கும் அப்படி அவர் வாழ்த்திக் கொண்டிருக்க முடியுமா!” என்றே அதற்குப் பதிலிறுத்தேன். அது சமாளிப்பு அல்ல; நகைச்சுவை அல்ல; நிஜமாகவே அப்படித்தான் நினைக்கிறேன்; விரும்புகிறேன்.

இதை ஆதி சங்கரர் அம்பாள் மீது கொண்டிருந்த பக்தியோடு ஒப்பிடலாம். 42 முதல் 100 வரையிலான சௌந்தர்ய லஹரி பாடல்களில் (அவை மட்டுமே அவர் இயற்றியது, முதல் 41 பாடல்கள் சிவபெருமான் இயற்றியது என்பது ஐதீகம்) அவர் உச்சி முதல் பாதம் வரை சக்தியின் அழகை, பொலிவை, எழிலை, வனப்பை வர்ணிக்கிறார். அதில் நிரம்பிவழிவது காமமோ காதலோ அல்ல; துதி, உபாசனை, ஒருவித ரசிப்பு மனநிலை. அவ்வளவு தான்.

குறைந்தது மூன்று மணி நேரம் சந்தோஷ் சிவன் மாதிரியான நல்ல ஒளிப்பதிவாளரை வைத்து முழுக்க முழுக்க அனு ஸிதாராவை மட்டும் காட்டி ஒரு படமெடுக்க வேண்டும். படத்தில் வேறு ஆட்கள் யாரும் கூடாது. வசனம் அவசியமில்லை. நளினமான பின்னணி இசை மட்டும் போதும் (of course, இளையராஜா). படம் நெடுக வித விதமான உடைகளில், பின்புலங்களில் அனு ஸிதாராவின் சிரிப்பு, நடை என முக பாவம், உடல் மொழியைத் துல்லியமாய்ப் பதிவு செய்ய வேண்டும். பூமியின் அழகான பெண்ணை ஆராதிக்கும் முயற்சி. சௌந்தர்ய லஹரிக்கு நிகரான ஒரு நவீனப் படைப்பாகக் கொண்டாடப்படும்.

சௌந்தர்ய லஹரி என்றால் ‘அழகின் அலைகள்’ என்று பொருள். சங்கரர் அருளிய முதல் பாடலை (அதாவது 42வது பாடல்) ஒரு குறுங்கவிதையாக எழுதிப் பார்க்க முயன்றேன் -

மலையில் விளைந்தவளே!
வெவ்வேறு பால்வீதிகளின்
கணக்கற்ற சூரியன்களை
நெருக்கிக் கோர்த்ததுபோல்
ரத்னங்கள் ஜ்வலிக்குமுன்
மாசறுபொன் கிரீடத்தை
எழுதப் புகும் ரசிகனுக்கு
விலையற்ற கற்களின்
வண்ண விளையாட்டில்
மினுங்குமதன் பிறை
அழியா வானவில்லாய்
மயக்கங்கள் தராதோ!


மலைசூழ் வயநாட்டில் பிறந்த அனு ஸிதாராவுக்கும் அப்படியே பொருந்துகிறதல்லவா!

***

Comments

நல்லதொரு கட்டுரையை எழுதுவதற்கு எவ்வளவு நிதானமும், பல கோணங்களில் சிந்தனையும், தேர்ந்த சொல் தேர்வுகளும் தேவை என்பதைக் காட்டியுள்ளது
Mano Red said…
ஒருவேளை அனு ஸிதாரா படிக்க நேர்ந்து, அதற்கு அவர் தரும் வெக்கத்தை ஓரளவுக்கு கற்பனை செய்ய முடிகிறது. இதப் படிச்சா எங்களுக்கே வெக்க வெக்கமா இருக்கே. அனுவுக்குச் சொல்லவா வேணும்.
வாசித்தேன் ஸிதாராவை...
தேன் வரிகள்...
வாழ்த்துகள்
பிறந்தநாள் பெண்ணுக்கும்...
உங்கள் வரிகளுக்கும்...
உங்கள் வார்த்தைகள் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.
நானெல்லாம் ஒரு தொடர் வாசகன் அல்லது ரசிகன் கிடையாது.

உங்கள் பதிவு என்னை அப்படி ஒரு மாற்றம் பெற செய்கிறது. நன்றி..
Unknown said…
மொழிநடை, தேர்ந்தெடுத்த சொற்கள் மட்டுமல்ல சிதறிய முத்துக்களை தேடியெடுத்து கோர்ப்பது போல லாவகமான நடை. ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்.

சரவணன்
கித்தான் பூப்படைகிறது, தூரிகை உச்சம் அடைகிறது. <3
Vetirmagal said…
beautiful lady and beautifully expressed thoughts. thanks.
Vediyappan said…
இப்படியும் ஒரு ரசிகன் இருக்க முடியுமா?!!! மெய்சிலிர்க்க வைக்கிறது...
இதுவும் கடந்து போகும்...
Unknown said…
அனு சிதாரா பேரழகி, அழகுக்கு நிகர் அவரேதான். செயற்கை அழகு காட்டி ஆடம்பரமாக காட்டும் பூமியில் இயற்கை கொஞ்சும் அழகி, நான் பார்த்து வியந்த பேரழகு
Anonymous said…
Srreeja, suvalakshmi, but gopika va miss paniteengale…! 😎

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்