கன்னித்தீவு - முன்னுரை
மீகாமன் குறிப்பு
“For the nation to live, the tribe must die.”
- Samora Machel (First President of Mozambique)
நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது.
அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன்.
எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரும் என்றும் தோன்றுகிறது.
அதன் பக்கவிளைவுகளில் ஒன்று தான் அந்தமான் பழங்குடிகள் பற்றிய இந்நாவல்.
‘ஜெய் பீம்’ தான் என் இரண்டாவது நாவலாய் இருந்திருக்க வேண்டியது. தொடங்கிச் சில அத்தியாயங்கள் முடித்திருந்தேன். அதன் களம் பிரம்மாண்டமானது, கொஞ்சம் சிக்கலானது, தேடலையும் உழைப்பையும் கோருவது, பொறுப்புணர்வை எதிர்பார்ப்பது. இக்காரணங்களை முன்னிட்டு அதை ஒத்திப் போட்டு, இடைக்கால முயற்சியாய்க் ‘கன்னித்தீவு’ நாவலை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த ஆறு மாதங்களின் ஓட்டத்தில் முன்னதிற்கு இணையான விஸ்தீரணத்தைப் பெற்று நிற்கிறது இந்நாவல்.
ஆம், இதன் நீளமும், ஆழமும் நான் உத்தேசிக்காதது. இதன் பேசுபொருள் கொண்டு இப்போது நோக்குங்கால் நாவல் தனக்குத் தக்கதை உறிஞ்சிக் கொண்டது புரிகிறது.
இத்தனைக்கும் பத்தே நாட்களில் நிகழும் சம்பவங்களின் தொகுதி தான் இந்நாவல்.
இந்த நாவலைத் தொடங்குவதற்கான உடனடி உந்துதலைத் தந்தது கடந்த நவம்பர் 2018ல் ஜான் ஆலன் சௌ என்ற 27 வயது அமெரிக்க இளைஞர் அந்தமானின் வடக்கு சென்டினல் தீவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகச் சட்டத்துக்குப் புறம்பாய் நுழைந்த போது அத்தீவில் வசிக்கும் கற்காலப் பழங்குடிகளான சென்டினலியர்களால் கொல்லப்பட்டு அவரது உடலைக் கூட மீட்க முடியாமல் போன சம்பவம் தான் என்றாலும் நாவலின் மைய நரம்பின் மீது அதற்கு ஓராண்டுக்கு முன்பே எனக்கு ஆர்வம் வந்து விட்டது. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதிக் கொண்டிருந்த சமயம் நியூயார்க் டைம்ஸ் இதழில் இந்திய மானுடவியலாளரான த்ரிலோக்நாத் பண்டிட்டின் நேர்காணலை வாசித்தேன் (A Season of Regret for an Aging Tribal Expert in India - Ellen Barry).
அதில் ஜரவா பழங்குடி இனப் பெண்ணொருத்தியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “I have seen a Jarawa girl. I can never forget her face, though it was many years back. She sat in the boat watching us as if she was Queen Victoria, with such dignity and such poise. You see, then I realized one doesn’t need clothes and ornaments and crown to make you dignified. What comes spontaneously, your inner self, you can project your personality that way.” ‘கன்னித்தீவு’ நாவலின் முக்கியப் பாத்திரமான மரியாவுக்கான பாத்திர வார்ப்பு அங்கிருந்து தொடங்குகிறது.
நாவலின் கதை இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் முன் நடைபெறுகிறது. அப்படி காலத்தால் சற்று முந்தையது என்பதால் இதை வரலாற்று நாவல் என்று சிலர் வகை பிரிக்கும் அபாயம் உண்டு. என் வரையில் ‘கன்னித்தீவு’ ஒரு மானுடவியல் நாவல். அவ்வகையில் பார்த்தால் தமிழின் முதல் Anthropological Fiction-ஆக இது இருக்கலாம்.
கற்காலப் பழங்குடிகளைத் தொந்தரவு செய்யாமல் விடுவது என்பதற்கும், அவர்கள் நம் குற்றவியல் சட்டத்துக்குள் வருவார்களா என்பதற்கும் இடையே முரண்பாடின்றி ஒற்றைத் திசையிலான பதிலைத் தேடுவதே அவர்களை அணுகுவதற்கான சரியான அறம் என்பது என் நம்பிக்கையும் நிலைப்பாடும். ‘கன்னித்தீவு’ நாவலில் அதைத் தான் பிரச்சாரச் சப்தமின்றி subtle-ஆகப் பேச முயன்றிருக்கிறேன். காஷ்மீர் தொடர்பான சில சட்ட மாற்றங்கள் நிகழும் அரசியல் சூழல் என்பதையும் ஒட்டி இதை வாசிக்கலாம்.
சுதந்திர இந்தியா என்பது எல்லா இந்தியக் குடிகளுக்குமான சுதந்திர தேசமா என்ற வினா தொக்கி நிற்கிறது. மக்களாட்சியில் இது மதிப்பு வாய்ந்த கேள்வி ஆகிறது.
*
சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் விருந்தினராகப் பங்கு கொண்டபோது என் அமர்வில் ஒரு கேள்விக்கு “என் எழுத்துக்கள் எல்லாமே ப்ரக்ஞைப்பூர்வமாக எழுதியவை தாம், தானாக நிகழ்ந்தது என்று ஒன்றுமில்லை” எனப் பதிலளித்தேன். அப்போது ஜெயமோகன், “தானாய் எழுதுதல் நிகழும், பல நல்ல எழுத்துக்கள் அப்படி நிகழ்ந்தவை தாம்” என்ற பொருளில் பேசினார். அப்போது அதில் ஏற்பில்லை. இந்த நாவலில் அப்படியான சில பகுதிகள் உண்டு. அவை நான் திட்டமிட்டதல்ல; கதைப் போக்கில் பாத்திரங்களே தம்மை எழுதிக் கொண்டன எனச் சொல்வேன். அப்படியான அனுபவம் இதுவே எனக்கு முதல் முறை. அப்படியோர் இடத்தை முதலில் உணர்ந்த போது அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு உற்சாகமாக மின்னஞ்சல் செய்தேன்.
பெரும்பாலும் நான் என் வாழ்விலிருந்து எழுதுபவன் இல்லை. மற்றவர் வாழ்வை அவர்கள் பார்வையிலிருந்து எழுத முயல்பவன். அதையே இலக்கியச் சவால் எனக் கருதுகிறவன். அதனால் தான் பன்னிரண்டு ஆண்டு ஐடி அனுபவத்துக்குப் பின்னும் இன்னும் அந்தப் பின்புலத்தில் ஒரு புனைவைக் கூட முயன்றதில்லை. ஆனாலும் அதை எல்லாம் மீறி அநிச்சையாய் ஆங்காங்கே கதாபாத்திரங்களில் நான் வந்து தொலைக்கிறேன், மிஷ்கின் படத்தில் எல்லோருமே மிஷ்கின் தான் என்பது போல. இந்நாவலிலும் ஆங்காங்கே அப்படித் தென்படும் என்னைக் கண்டு திடுக்கிட்டேன்.
தகவல் சேகரிப்பு மற்றும் வாசிப்பை ஒதுக்கிப் பார்த்தால் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை இரண்டரை மாதங்களில் எழுதி முடித்தேன் என நினைவு. இதற்கு முழுதாய் ஆறு மாதங்கள் பிடித்திருக்கிறது. இரண்டுக்குமான வித்தியாசத்தை யோசித்தால் குறுகிய காலத்தில் எழுதப்படும் நாவல்களில் ஓர் ஒற்றைத்தன்மை வந்து விடுகிறது எனத் தோன்றுகிறது. அது சிறுகதைக்கே பொருத்தமானது. அவசியமானதும் கூட. மாறாக, ஒரு நாவலுக்கு பன்முகத்தன்மை தேவை. (‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை ஒரு நீண்ட சிறுகதை என ஒரு விமர்சகர் சொன்னது இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.) ஆக, நாவல் எழுதுவது என்பதே ஊறப்போடுவது தான் என்பதை இம்முறை உணர்கிறேன்!
‘கன்னித்தீவு’ என்ற சொற்றொடர் தமிழ்ச் சூழலில் மிகப் பிரபலமானது. அப்படியான பிரபலத் தலைப்புகளை நூல்களுக்கு வைப்பதில், அவற்றின் தேய்வழக்குத்தன்மை காரணமாக எனக்கு உவப்பில்லை எனினும் இந்நாவலுக்கு அதை விட நெருக்கமான தலைப்பு கிடையாதெனப் பூரணமாகத் தோன்றியதால் தயக்கம் விட்டுத் தேர்ந்தேன்.
எனக்குத் தெரிந்து ‘கன்னித்தீவு’ என்ற சொல் முதலில் அறிமுகமானது எம்ஜிஆர் இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் (1958) தான். பிறகு தினத் தந்தி நாளேட்டில் 1960லிருந்து மிகப் பிரபலமான ‘கன்னித்தீவு’ சித்திரக்கதை வெளியாகத் தொடங்கியது. அதன் தனித்துவம் சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அக்கதை தொடர்ந்து வெளியாவது தான். (இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் வெளியான தினத் தந்தியில் 21,045வது பகுதி வெளியாகி இருக்கிறது.) பிறகு, 1965ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் மீண்டும் கன்னித்தீவு இடம் பெற்றது. பின்னர் 1981ல் ஜெய்சங்கர் நடிப்பில் டி. ஆர். ராமண்ணா இயக்கி ‘கன்னித்தீவு’ என்ற பெயரிலேயே ஒரு படம் வெளியானது. 2011ல் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் கபிலன் எழுதிய ‘கன்னித்தீவு பொண்ணா…’ என்ற பாடல் இடம் பெற்றது. இப்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ‘கன்னித்தீவு’ என்ற படம் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
சினிமாவாக, பாடலாக, புதினமாக ‘கன்னித்தீவு’ தொடர்ந்து தமிழ் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும். ‘கன்னித்தீவு’ என்பதன் இயல்பே அது தான் அல்லவா!
*
கடந்த ஃபிப்ரவரி இறுதியில் ஐந்து நபர்களிடம் என் முன்னிருக்கும் இரண்டு நாவல் கருக்களைச் சொல்லி, எதை உடனே எழுதலாம் என அபிப்பிராயம் கேட்டேன். என் மனைவி, நண்பன் இரா. ராஜராஜன், சினேகிதி சௌம்யா, எழுத்தாளர் பா. ராகவன் மற்றும் எழுத்தாளர் ரமேஷ் வைத்யா. ஐவரில் பா. ராகவன் மட்டுமே ‘கன்னித்தீவு’ நாவலை விட ‘ஜெய் பீம்’ எழுதுவதைச் சிபாரிசு செய்தார். ஆனால் கடைசியில் அவருக்குத்தான் இந்நாவலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்பது நகைமுரண்.
பா.ராகவன் என் அதிர்ஷ்டம். தமிழ் இலக்கியச் சூழலில் நான் கண்ட பெரும்பான்மை நட்புக்கள் பதில் மொய் தான். நான் கொஞ்சம் introvert என்பதாலும் வசிப்பது அயல் மாநிலம் என்பதாலும் படைப்புகளுக்கான பரஸ்பரக் கருத்து பகிர்வு என்பது தாண்டி தமிழ் எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பேதும் ஏற்படவில்லை. பாரா விதிவிலக்கு.
ஒரு தசாப்தமாக அவரைத் தெரியும். கிழக்கு பதிப்பகம் சார்பில் அவர் நடத்திய அபுனைவு நூல்கள் எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றிருக்கிறேன்.
பாரா என் முதல்ச் சிறுகதையை வெளியிட்டவர். என் முதல் கவிதைத் தொடரை வெளியிட்டவர். அவரது ஃபேஸ்புக் பதிவுகள் தொகுதியான ‘14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்’ மின்னூலுக்கு நான் முன்னுரை எழுதியது அவரளித்த கௌரவம்.
நானே அதீத தன்னம்பிக்கைக்காரன். ஆனால் என் மீது என்னை விடவும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் பாரா என்று சொல்லத் தோன்றுகிறது. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதுகையிலும் சரி, ‘கன்னித்தீவு’ எழுதுகையிலும் சரி, இடையில் சுணக்கம் கண்டு சோர்வுற்ற போது விடாமல் என்னை உந்தி எழுத வைத்தவர் பாரா தான். அவர் மட்டும் இல்லை எனில் இந்நாவல் இவ்வேளையில் வெளியாகியிருக்காது.
சந்தோஷ் நாராயணன் இந்நாவலுக்கு மிகப் பொருத்தமானதும், மிக அழகானதுமான ஓர் அட்டைப் படத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். சொல்லப் போனால் அது உள்ளடக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்பேன். அவருக்கு என் பிரியங்கள்.
எழுத உற்ற சூழலை உண்டாக்கிக் கொடுத்த என் குடும்பத்துக்கும், நாவலின் பிழை திருத்தம் பார்க்க உதவிய சௌம்யாவுக்கும், மிகக் குறுகிய காலத்தில் நாவலைச் சிறப்பாக அச்சிட்டு வெளியிடும் செல்வி உள்ளிட்ட உயிர்மை குழுவினருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்றிகள்.
‘கன்னித்தீவு’ நாவலின் நாயகி நிறைந்த கர்ப்ப ஸ்த்ரீ. இதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நிஜ வாழ்விலும், பொதுவெளியிலும் நிறைய கர்ப்பவதிகளைப் பார்க்க நேர்ந்தது எதேச்சையானதா எனத் தெரியவில்லை. மனைவியின் பால்ய தோழி இந்து அரவிந்த், அடுக்ககத்தில் சௌம்யா ஷரண், சௌம்யா ஷெட்டி, அலுவலகத்தில் நான்சி ரூசியா, ரச்சிதா ராணி, ஃபேஸ்புக்கில் மஞ்சரி நாராயணன், ஷாலின் மரிய லாரன்ஸ், சினிமாவில் ஏமி ஜாக்சன் எனப் பலர். பிரபஞ்சமே கர்ப்பிணிகளால் ஆனது போன்ற ஒரு பிரமையை அது அளித்தது. அவர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
*
நாவல் இறுதி வடிவை மீள்வாசிக்கையில் அவையடக்கத்தை உதாசீனம் செய்த ஒரு மெல்லிய பெருமிதப் புன்னகையை மறுக்க முடியவில்லை. மெய்வருத்தக்கூலி கிட்டி விட்டது. மற்றவற்றைத் தமிழ் வாசகப் பரப்பு பார்த்துக் கொள்ளும் என நம்புகிறேன்.
ஒரு வாழ்விலிருந்து வெளியேறியது போல் இருக்கிறது இந்நாவலைத் தீர்க்கையில். ஏதும் எழுதாமல் ஒரு சிற்றோய்வைத் திட்டமிடுமளவு அழுத்தத்தைத் தந்திருக்கிறது. நெடுந்தூரப் பயணமொன்றில் மைல்கல் தாண்டுகையில் சற்று இளைப்பாறுவதுபோல்.
பெங்களூரு மஹாநகரம்
இந்திய சுதந்திர தினம், 2019
Comments