இரு பாடல்கள்

2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன்.

(1)

(Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.)

பல்லவி:

(அப்பா)
பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை
என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை
தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய்
ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள்.

(அம்மா)
வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும்
விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும்
முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய்
முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய்.

அனுபல்லவி:

(இருவரும்)
ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி
மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர
இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு
இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ்.

சரணம் 1:

(அம்மா)
அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள்
சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள்
பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள்
சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள்.

(அப்பா)
இடக்கான கேள்விகளில் ஆசிரியை மிரள்கிறாள்
துடுக்கான பதில்களை விரல்நுனியில் ஆள்கிறாள்
வகுப்பறையும் மைதானமும் இவளுக்கு வேறில்லை
உகுத்திடும் கண்ணீரில் கரையாதவர் எவருமில்லை.

அனுபல்லவி (repeat)

சரணம் 2:

(அம்மா)
அம்புலி மாமாவும்* கதை சொல்ல அப்பாவும்
தலைகோதி மடிமீது தூங்க வைக்க அம்மாவும்
உறக்கத்தில் சிரிக்கிறாள், அதை விடவா அழகு
ஸ்வப்னத்தில் விளையாடும் ஆனைக்குட்டி அப்பு!*

(அப்பா)
ஒரு கரண்டி கவிதையும் ஒரு சிட்டிகை இசையும்
சில துண்டுகள் ப்ரியமும் தேவைப்கேற்ப கடவுளும்
இவளைச் செய்யும் ஸ்வர்ணஜால* சமையல் குறிப்பு
சமையல் கலைஞன் நான்; செய்யும் பாத்திரம் நீ!

அனுபல்லவி (repeat)

  1. பன்னிரு பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் குறித்த ஓர் இலக்கண நூல் தொகுதி. இந்த நூலின்படி 6 வயதான பெண் குழந்தை பேதை.
  2. 80களில் டெட்டிபேர் போன்ற வெண்பஞ்சு பொம்மைகள் சாதாரண குடும்பங்களில் பரவவில்லை என்பதால் வெண்துகில் என மாற்றி இருக்கிறேன்.
  3. அம்புலி மாமா என்பது குழந்தைகளுக்கான பிரபல கதைப் புத்தக மாத இதழ். 70களிலும் 80களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலம்.
  4. Appu Aur Pappu என்பது 1985ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சி தொடர்
  5. ஸ்வர்ணஜாலம் என்பது இரும்பிலிருந்து தங்கம் செய்ய பண்டைய தமிழ் சித்தர் எழுதி வைத்த ரகசியக் குறிப்புகள்

(2)

(Situation: நண்பர்கள் ஓர் இயற்கைச் சூழலில் பாடி ஆடும் பாடல். அபி சாம் செரியன் என்ற புதிய இசையமைப்பாளர் போட்ட மெட்டுக்கு எழுதியது.)

0:33 - 0:40
மழையும் பனியும் மிகை
மலையில் விரியும் கடை
மனதைத் திருடும் விலை
அட, போடா!

0:41 - 0:48
அச்சம் சோம்பல் பிழை
லட்சம் கனவுகள் துணை
லட்சியம் தொடும் கலை
அட, போடா!

0:49 - 0:57
படியாய் ஏறும் அடிகள்
சுகமாய் மாறும் வலிகள்
வருவோம் புதிய அலையாய்
ஓஹோ!

0:58 - 1:01
வெறியுடன் வெற்றி சேர்ந்திடாதா!
வாழ்வை வசந்தமாய் மாற்றிடாதா!

1:45 - 2:00
தேடல்கள் வெல்லும் வேளை
தேசங்கள் சொல்லும் நாளை
தடைகளை உடைத்து விரைவோம்
இன்னொரு ஜென்மம் காண்போம்

2:01 - 2:09
அறிவை விடவும் திறமை விடவும்
எதுவும் பெரியதில்லை
என்னைப் போலே உன்னைப் போலே
எவனும் எங்குமில்லை

2:42 - 2:57
தூங்கிப் போகும் முன்னே
தூரங்கள் போவோம் இன்றே
வியர்வை ஊற்றி உழைப்போம்
விதிகளை மாற்றி அமைப்போம்

2:58 - 3:05
அன்பும் ஆசையும் ஊறும் தருணம்
ஆடல் பாடல் தானோ
இரவும் பகலும் இணையும் காலம்
குடியும் கூத்தும் தானோ

3:07 - 3:14
மழையும் பனியும் மிகை
மலையில் விரியும் கடை
மனதைத் திருடும் விலை
அட, போடா!

3:15 - 3:22
அச்சம் சோம்பல் பிழை
லட்சம் கனவுகள் துணை
லட்சியம் தொடும் கலை
அட, போடா!

3:23 - 3:31
படியாய் ஏறும் அடிகள்
சுகமாய் மாறும் வலிகள்
வருவோம் புதிய அலையாய்
ஓஹோ!

3:32 - 3:35
வெறியுடன் வெற்றி சேர்ந்திடாதா!
வாழ்வை வசந்தமாய் மாற்றிடாதா!

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்