ஒரு புளித்த மாவின் கதைசமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோகன் மீதான‌ வசைகளும் பெருகியபடி இருந்தன.

அதிகாலை 6: “ஜெயமோகன் மாவைக் கடையில் திருப்பிக் கொடுத்தார்.”
காலை 9: “ஜெயமோகன் மாவைக் கடையில் வீசி எறிந்தார்.
முற்பகல் 11: “ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் மீது விட்டெறிந்தார்.
நண்பகல் 12: “ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் முகத்தில் எறிந்தார்.
பிற்பகல் 2: “ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே நையப் புடைத்தார்.
மாலை 4: “ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே அடித்துக் கொன்றார்.
இரவு 7: “ஜெயமோகன் மாவாலேயே நாகர்கோயிலை எரித்தார்.

அதாவது புளித்த மாவை கடையில் திருப்பிக் கொடுத்தது என்ற செயல் ஒருவரைத் திட்டப் போதுமானதாக இல்லை என்றதும் குற்றத்தைப்பெரிதாக்கத் தம் கற்பனையில் உதித்ததை எல்லாம் போட்டு செய்தியைத் திரித்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் மீது சமூக வலைதளவாசிகள் இத்தனை பிரியங்கொண்டிருப்பது பேரதிர்ச்சி தான்!

ஜெயமோகன் இது பற்றி எழுதியது இது: “அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன்.” பாதிக்கப்பட்ட ஒருவராக கோபத்தின் கையறுநிலையில் மாவைக் கடையில் வீசி வந்திருக்கிறார்.

ஜெயமோகன் பிற்பாடு இப்படியும் சொல்கிறார்: “நான் நடுவே புகுந்து மாவு பற்றிக் கூறினேன். அது கூட தெரிந்தவர் என்பதனால் “ஏன் இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா?” என்ற அர்த்ததில்தான்.” அதாவது தான் சாத்வீகமாகவே அணுகியதாக.

இதில் உண்மையில் என்ன தான் நடந்தது என்பது எனக்குத் தெரியாது. வசை பாடிய எவருக்கும் கூடத்தெரியாது. ஆனாலும் ஜெயமோகன் மீதான கருத்து வேறுபாட்டினை வன்மமாக மாற்றிக்கொண்டு செய்திகளை உருவாக்குகிறார்கள். நான் ஜெயமோகனை நம்புகிறேன். இதில் என் நிலைப்பாடு இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்பட்டது.

ஒன்று சில கருதுகோள்கள்: 1) ஜெயமோகன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ்ச் சூழலில் தீவிர இலக்கியவாதியாய்ச் செயல்பட்டு வந்தாலும் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டதாய் விவரம் இல்லை. குடியையும் இலக்கியத்தையும் குழப்பிக் கொண்டு அதைக் கலகச் செயல் எனச் சொல்லிக் கொண்டவர் இல்லை. 2) ஜெயமோகன் பார்வதிபுரத்தில் ஒரு வஸ்தாது எல்லாம் கிடையாது. ஆள் பலமோ, இன்ன பிற செல்வாக்கோ அற்றவர். அப்படியானவர் அங்கே பல காலமாய் மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரி மீது - எவ்வளவு கோபம் என்றாலும் - உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு குறைவு. 3) அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் உடனடியாக எதிர்வினையாற்றப் பதற்றம் காட்டாத ஜெயமோகன் இதில் பொய்கள் சொல்லி ஆகப் போவது என்ன? நீண்ட கால அடிப்படையில் ஒரு சில்லறைச்சம்பவத்தில் தன் ஆளுமை குறித்த பிம்பம் சிதைவுறுவதை விரும்புவாரா?

இரண்டாவது அவர் மீதான என் தனிப்பட்ட நம்பிக்கை. நம் வீட்டிலுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுகிறது, சம்பவத்துக்கு இரு வேறு வர்ணிப்புகள் வருகிறது, ஆனால் இரண்டுக்கும் சரியான ஆதாரம் இல்லை எனும் போது நம் வீட்டு ஆள் சொல்வதை நம்புவதே பழக்கம். அப்படி ஜெயமோகன் சொல்வதை நம்புகிறேன். அதுவே இயல்பு.

இது நடுநிலை தவறுவதல்ல. தெரியாத விஷயத்தில் அப்படித்தான் துவங்க முடியும். அப்புறம் உண்மை வெளிவருகையில் நேர்மையாகப் பிழையை ஒப்புக் கொள்ளலாம்.

(எழுத்தாளன் குற்றச்செயலில் ஈடுபட மாட்டான் என்ற வாதத்தை நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் எழுத்தாளன் எந்நேரமும் எழுத்தாளனாகவே சிந்திப்பதில்லை. தவிர, மனித மனதின் சிடுக்குகள் அத்தனை நேரடியானதும், எளிமையானதுமில்லை. அதனால் அப்படி எல்லாம் தட்டையான சூத்திரங்களை, சமன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. சொல்லப் போனால் ஓர் எழுத்தாளனுக்கு இருக்கும் சமூகக் கோபங்கள் மற்றும் அங்கீகார விரக்திகள் காரணமாய் குற்றச்செயலில் ஈடுபட சாதாரணர்களை விட அவனுக்கே அதிக முகாந்திரம் இருக்கிறது. ஒரு மாதம் முன் நடந்த ஃபிரான்சிஸ் கிருபா விவகாரத்திலும் என் கருத்து இதுவாகவே இருந்தது.)

அடுத்து ஜெயமோகன் தாக்கப்பட்ட விவகாரம். ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: “அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை. என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான்.” நிச்சயம் மோசமான தாக்குதல். இதையும் நம்புகிறேன்.

இந்தத் தாக்குதலைச் சமூக வலைதளத்தில் பலரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த மாதிரி மனப்பிறழ்வு சமூக வலைதளங்களில் இயல்பு என்பதால் அதை நாம் பெரிதாய்ப் பொருட்படுத்த வேண்டியதில்லை. என் அதிர்ச்சி எல்லாம் அத்தாக்குதல்!

எழுத்து மற்றும் எழுத்தாளன் மீதான சமூகத்தின், அரசாங்கங்களின் அலட்சியத்தால், அறியாமையால் நாம் அடைந்திருக்கும் கேடுகெட்ட நிலை இது. ஜெயமோகன் என்ற சமகாலத் தமிழின் மகத்தான எழுத்தாளனை அடையாளம் தெரியாதவர்கள் தாம் நம் தேசத்தின் குடிமக்கள். இதுதான் இன்றைய இந்தியாவின், தமிழகத்தின் அவல நிலை.

எழுத்தாளனுக்கு இங்கே மரியாதை கிடையாது என்பது அவன் எழுத்துக்குக் காசு வருவதில்லை, அங்கீகாரம் தருவதில்லை என்பதை எல்லாம் தாண்டி இம்மாதிரி அசட்டு அக்கிரமங்களின் போது தான் மிக வலுவாய் முகத்திலறைகிறது. லியோ டால்ஸ்டாயோ மாக்ஸிம் கார்க்கியோ ருஷ்யாவில் தாக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். நாடு கடத்தப்படுவது கூட எழுத்துக்கான மறைமுக மரியாதை தான். ஆனால் இம்மாதிரி ரவுடித்தனமெல்லாம் வெட்கக்கேடு.

ஒரு சாதாரணன் தாக்கப்பட்டாலும் குற்றம் தான். அதற்கும் தண்டனை தர வேண்டும். ஆனால் ஓர் எழுத்தாளன் சமூகத்தில் மரியாதையாய் நடத்தப்பட வேண்டும் என நம்புகிறேன். ஆம், சாதாரணனை விடக் கூடுதல் மரியாதையுடன். மரியாதை எனில் ஒன்றும் காலில் விழச் சொல்லவில்லை. எழுத்தாளனை அடையாளம் காண்பது முதல் மரியாதை. பின் அதற்கேற்ப‌ நடத்துவதையே இங்கு மரியாதை என்கிறேன்.

உதாரணமாய் சச்சின் டெண்டுல்கர் அந்த இடத்தில் இருந்திருந்தால் கடைக்காரர் எவ்வளவு குடிபோதையில் இருந்திருந்தாலும் அப்படி நடந்து கொண்டிருப்பாரா? அப்படியே நடந்திருந்தாலும் சுற்றி இருந்தவர்கள் தான் சும்மா விட்டிருப்பார்களா? சச்சின் தன் விளையாட்டுத் துறையில் சாதித்ததற்கு எவ்வகையிலும் குறைவில்லை ஜெயமோகன் அதைவிட உயர்ந்த இலக்கியத்தில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள். ஆனால் மரியாதை? சச்சினுக்குக் கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை.

ஜெயமோகன் இடத்தில் அப்பகுதியின் விஏஓ இருந்திருந்தால் கூட இந்தச்சம்பவத்தை அரங்கேற்ற மாவுக்கடை ஆசாமிக்குத் துணிச்சல் வந்திருக்காது என்பது எவ்வளவு குரூரமானதுமானது! அந்த மரியாதையை எழுத்தாளனுக்கு மறுப்பது பெரும்குற்றம்.

அதை விடக் கொடுமை வாசிப்பவர்களே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு, அப்புறம் எப்படி எழுத்தாளனைத் தெரியும் என்று நியாயப்படுத்துவது. அது ஜெயமோகனின் பிரச்சனையா? எல்லாக் குற்றத்துக்கும் தான் தர்க்கம் இருக்கும், அதற்காக சரி என்றாகி விடுமா? காம விழைவால் தானே கற்பழிப்பு நடந்தது என குற்றவாளிக்குப் பரிந்து பேச முடியுமா? ஏன் நடந்தது என்பது வேறு, அது நியாயமா என்பது வேறு!

எறும்பை நசுக்குவதும் யானையைச் சுடுவதும் ஒன்றென எண்ணும் அறிவுஜீவிகள் சிலர் பாரிசாலன் தாக்கப்பட்டதையும், ஜெயமோகன் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். Size does matter. உதாரணமாய் ஒரு சாதாரணனின் கொலை வழக்கும், ராஜீவ் கொலை வழக்கும் ஒன்றா? உயிர் எல்லோருக்கும் ஒன்று எனினும் அதன் மதிப்பு வெவ்வேறு. ஒரு தேசத்தின் பிரதமருக்கு இணையாக ஒரு மொழியின் முதன்மை எழுத்தாளன் மதிக்கப்பட வேண்டும் என்றே நம்புகிறேன்.

அடுத்த வாதம் இதில் ஜெயமோகன் எழுத்தாளன் என்பதைக் கொண்டு வரக்கூடாது என்பது. இது ஒரு வியாபரிக்கும் நுகர்வோனுக்கும் நிகழ்ந்த சண்டை மட்டுமே எனக் குறுக்க முயலும் செயல். பிரதமர் ஒரு மளிகைக் கடையில் மாவு வாங்குகிறார். வீட்டுக்கு வந்து மாவு கெட்டுப் போயிருப்பதை அறிந்து திரும்பக் கடைக்குப் போய்க் காசைத் திரும்பிக் கேட்கிறார். கடைக்கார ரவுடி பிரதமரை அடையாளம் தெரியாமல் (அல்லது தெரிந்தும்) குமட்டில் குத்தி அனுப்புகிறான். தொடர்ந்து பிரதமர் வீட்டுக்கும் வந்து “நாடு நாடா சுத்தறவன் தானே நீ” என சவுண்ட் விட்டு மிரட்டிப் போகிறான். இப்போது நம் இணைய அறிவுஜீவி நீதிமான்கள் என்ன சொல்வார்கள்? “இது ஒரு மாவுப் பிரச்சனை. அரசுப் பொறுப்பு இதில் வராது. இது ஒரு கன்ஸ்யூமருக்கும் கடைக்காரருக்குமான அக்கப்போர் மட்டுமே. அதை மட்டுமே பேச வேண்டும். பாதிக்கப்பட்டவர் பிரதமர் என்பதை இதில் கொண்டு வரக்கூடாது.” என்றா? கேட்போர் ஆசன வாயில் சிரிக்க மாட்டார்களா? இதை எல்லாம் வாதமென எப்படித் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்? வன்மம் எவ்வளவு தூரம் ஒருவரை கோமாளியாக்குகிறது!

அடுத்த மொண்ணை வாதம் மாவு புளித்ததைத் திருப்பிக் கொடுத்தது போல் நாவல் நன்றாக இல்லை என்றால் திருப்பிக் கொடுக்க முடியுமா? என்பது. மாவு புளித்தது என்பது ஓர் அறிவியல் உண்மை. நாவல் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். இங்கே ராஜேஷ் குமாருக்கும் வாசகர்கள் உண்டு, சுந்தர ராமசாமிக்கும் வாசகர்கள் உண்டு. தவிர, மாவு புளித்திருந்தால் சட்டப்படி அது குறைபட்ட பொருள், அதற்குத் தண்டனை உண்டு. அதை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்காடக்கூடச் செய்யலாம். நாவலுக்கு அப்படியான கோடுகள் ஏதும் கிடையாது. இந்த எளிய உண்மைகள் கூடப் புரியாமல் இந்த அசட்டுக் கேள்வியைக் கேட்டு விட்டு ஜெயமோகனை மடக்கிப் பழி தீர்த்து விட்டதாக நினைத்து முகத்தில் பெருமிதத்தை ஒட்டிக் கொண்டு குறுக்கும் மறுக்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளின் தரத்துக்குப் பொறுப்பு. அது சரியான கெடுத் தேதிக்குள் உள்ளதா, நன்றாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டியது அவர் கடமை. ஒருவேளை தவறாக / அரைகுறைத் தரத்தில் ஏதும் விற்கப்பட்டு விட்டால் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு காசைத் தர வேண்டியதும் அவர் வேலை தான். அவர் பொருள் தயாரிப்பாளரிடம் இதற்கான நஷ்டத்தைப் பேசிப் பெற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய, விவரமறியாமல் தன்னிடம் வந்து பொருள் வாங்கிய அப்பாவி நுகர்வோனைப் பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது. அதை மறுப்பது - அபராதம் மாதிரி சிறிதோ, சிறை போல் பெரிதோ - தண்டனைக்குரிய குற்றம் தான். ஆக, அங்கே ஜெயமோகன் என்றில்லை, யார் இருந்திருந்தாலும் புளித்த மாவுப் பாக்கெட்டைப் பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பியிருக்க வேண்டும். அதைச் செய்ய மறுப்பதே சட்டமும் தெரியாத, அறமும் தெரியாத, வியாபார நுணுக்கமும் தெரியாத தடித்தனம் தான். இதில் அடிதடி வேறு. அக்கடையை அணுகவே இனிப் பலரும் தயங்குவார்கள்!

இன்னொரு கோணமும் உண்டு. மாவு புளித்ததை கடைக்காரர் எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும், ஆனால் புத்தகம் நன்றாக இல்லை எனில் கடைக்காரரிடம் கேட்க முடியாது. இப்படி எழுத்தாளர் கடைக்காரர்களுக்கு எத்தனை அணுக்கமானவர்!

அடுத்த குற்றச்சாட்டு அடி பெரிதில்லை என்றாலும் வழக்கை வலுவாக்கும் பொருட்டு அரசு மருத்துவமனையில் போய் உட்கார்ந்து கொண்டார் ஜெயமோகன் என்பது. இது முதலில் எழுத்தாளர் பாரதி மணி அவர்கள் தொலைபேசியில் ஜெயமோகனை / அவர் நண்பர்களை நலம் விசாரித்து விட்டு மேலோட்டப் புரிதலில் போட்ட ட்வீட்டிலிருந்து தொடங்கியது. பிறகு செல்வேந்திரன் விளக்கம் அளித்ததும் அவரே அதை நீக்கி விட்டார். ஆனால் அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளமெங்கும் சுற்றிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு மருத்துவர் இன்னும் ஒரு படி மேலே போய் இதனால் எளியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு படுக்கை பறிக்கப்பட்டு விட்டது என்று ஜெயமோகனை பூர்ஷ்வாவாக்கி திடீர் சமூக அக்கறையாளர் அவதாரமெடுத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாடை வைப்பவர்கள் இரண்டு விஷயங்களை நுட்பமாக ஒன்றாக்கி விடுகிறார்கள். ஒன்று ஜெயமோகனுக்கு சம்பவத்தில் அவ்வளவாய் அடிபடவில்லை என்பது. மற்றது அவர் சம்பவத்தைப் பெரிதாக்கி பொய்க்கேஸ் போடுகிறார் என்பது. இவ்விஷயத்திலும் ஜெயமோகன் அறம் பிறழ்ந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

தன் காயங்கள் குறித்தும், மருத்துவமனையிலிருந்து திரும்பியது குறித்தும் அவர் எழுதியிருப்பது: “தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின் துன்பங்கள் அழுகைகள் நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்து விட்டேன். தனியார் மருத்துவமனையில் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கலாம்.
காவல் துறையில் புகாரளித்தது ஏன் என்பதையும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்: “புகார் செய்யவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இது என்நிலம், இந்த மக்கள் இப்படிஇருப்பதை நான் நன்கறிவேன். அதன்பின் அவன் வீட்டுக்கு வந்து மனைவியையும் மகளையும் வசைபாடி தாக்கமுற்பட்டமையால்தான் இரண்டு மணி நேரம் கடந்து காவலரிடம் செல்லவேண்டியிருந்தது. அதன்பின்னர் காவலர்கள் கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.” இதில் எதையுமே பொய் என குடிகார மாவுக் கடைத் தரப்பு மறுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஜெயமோகன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓர் எளிய சிறுவியாபாரியைப் பழி வாங்குகிறார் என ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயமோகன் மீதான பொறாமையும், வயிற்றெரிச்சலும் எப்படி ஒருவர் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதைக்காண ஆச்சரியமாய் இருக்கிறது.அடுத்த கோணம் மாவுக்கடைக்காரர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதை முன்வைத்து திராவிட இயக்கத்தைக் கேலி செய்யும் கூலிப்படையுடையது. இது விகடன் செய்திக் குறிப்பின் ஒரு பகுதி: “செல்வம் தி.மு.க-வின் 17-வது வட்ட பிரதிநிதியாக உள்ளார். செல்வத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனிடம் சென்று பேசியுள்ளார். “இவருக்காக நீங்கள் பேச வரலாமா” என ஜெயமோகன் கூறியதைத் தொடர்ந்து மகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தி.மு.க நகரச் செயலாளர் மகேஷிடம் கேட்டோம், “செல்வம் தி.மு.க.காரர்தான். ஆனால், தாக்கப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் என்பது தெரியாமல் அங்கு சென்றுவிட்டேன். ஜெயமோகன் எனத் தெரிய வந்ததும் உடடியாக நான் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்” என்றார்.” இதனடிப்படையில் இவ்விஷயத்தை ஆராயலாம்.

தன் கட்சி உறுப்பினருக்குப் பாதிப்பு, அதுவும் சிறைபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் எவரும் அதிலிருந்து மீட்க முனைவதே இயல்பு. சொல்லப்போனால் கட்சிகள் இந்தியாவில் இயங்குவதே இந்த அடிப்படையில் தான். சிலர் மிக இயல்பாக திமுகவிலிருந்து அதிமுகவுக்கோ அல்லது எதிர்த்திசையிலோ மாறிக் கொள்வது இதனால் தான். குற்றப் பின்னணி உள்ளோருக்குக் கட்சிப் பின்புலம் எப்போதும் பக்கபலம். ஏதும் சட்டப் பிரச்சனை என்றால் கட்சி உதவிக்கு வரும். எந்தக் கட்சி, என்ன கொள்கை என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமே இல்லை. ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து கொண்டே இருப்பார்கள். கட்சிகளுக்கும் சில சமயம் இவர்களின் பணமோ, பலமோ தேவை என்பதால் சகித்துக் கொண்டிருப்பார்கள். இது வழமையான நடைமுறை தான். அப்படியான ஒருவர் தான் மாவுக்கடைக்காரர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வித்தியாசம் இந்த விவகாரத்தில் திமுக செயலாளர் நடந்து கொண்ட விதம். பாதிக்கப்பட்டவர் மரியாதைக்குரிய எழுத்தாளர் எனும் போது உரிய மரியாதை தந்து எதிர்வினையாற்றிய வகையில் திமுக ஒரே குட்டையில் ஊறிய மட்டையல்ல என்பதைக் காட்டியிருக்கிறார். (அங்கே ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இல்லாமல் வேறு சாதாரணர் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது தனியாய் விவாதிக்கப்பட வேண்டிய வேறு தலைப்பு. இதற்குத் தொடர்புடையதல்ல.)

ஜெயமோகனும் இவ்விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். இதில் திமுகவின் தலையீடு பற்றிய‌ அவரது வாக்குமூலம்: “திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்பு கோரி விட்டு சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு.” மிகப் பெரும்பாலும் இதுவே திமுகவின் முகம்.

இப்படியானவர்களுக்கு கட்சியின் கொள்கையும், எக்கட்சி என்பதும் முக்கியமில்லை என்பதன் நீட்சி அவர்களின் செய்கையை கட்சி அடையாளத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்பதே. அதனாலேயே மாவுக்கடைக்காரரின் செய்கைக்கு திமுக சாயம் பூச வேண்டியதில்லை. இதை மிகக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். மதவெறிச் செயல்களை நேரடியாக பாஜக போன்ற கட்சிகளுடன் தொடர்புபடுத்திப் பேசும் அதே வேளையில் இதையும் சொல்கிறேன். இதில் எவ்வித தர்க்கக்குழப்பம் ஏதுமில்லை.

இந்துத்துவக் கட்சிகள் விஷயத்தில் அப்படிப் பேசக்காரணம் அவர்களின் கொள்கையே அம்மாதிரி வன்முறைகளை ஆதரிக்கிறது. அத்வானி, மோடி, ஆதித்யநாத் தொடங்கி ப்ரக்யா வரை உரைகளிலும் உரையாடல்களிலும் மதவெறியை ஊட்டியிருக்கிறார்கள். அதனால் அப்படியான செயல்களை அவர்கள் கட்சியின் கடைநிலைத் தொண்டர் செய்கையில் அதை அக்கட்சியின் அடையாளத்தோடே இணைத்துப்பார்க்க வேண்டும்.

பாஜக அல்லது பிற இந்துத்துவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போதும் இந்த கட்சிசார் பொதுமைப்படுத்தல் பரவலாக நிக‌ழக் காரணமும் இதுவே. மத நூல்கள் அடிப்படையில் பெண்கள் மற்றும் காமம் சார்ந்த பல்வேறு பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொள்கை அளவிலேயே அவர்கள் கொண்டிருப்பதே அதன் காரணம்.

மாறாய் திமுக பிரியாணிக் கடையில் பிரச்சனை செய் என்றோ, ப்யூட்டி பார்லரில் பெண்ணைத் தாக்கு என்றோ, மாவுக்கடையில் எழுத்தாளனை அடி என்றோ சொல்ல வில்லை. அதற்கும் அக்கட்சியின் கொள்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அதனால் அவற்றைத் கட்சி தொடர்பற்ற தனிமனித விஷயங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. (ஆனால் கட்சித் தலைமை வருத்தம் தெரிவிப்பதோடல்லாமல், விளக்கம் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் இத்தகு ஆசாமிகளை லாப நஷ்டக் கணக்கு பாராமல் நிரந்தரமாகக் கட்சியை விட்டு நீக்குவதே இம்மாதிரி பிரச்சனையை இன்றைய சமூக வலைதள உலகில் கையாள வழி. இல்லையென்றால் கட்சியின் பிம்பம் சிதையும்.)

ஆக, இப்பிரச்சனையில் ஜெயமோகனை நுகர்வோனாக மட்டுமின்றி எழுத்தாளன் என்ற அடையாளத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்லும் அதே வேளையில், மாவுக்கடைக்காரரை திமுககாரராக அல்லாமல் வியாபாரியாகவும், குடிபோதையில் குற்றம் இழைப்பவராகவுமே பார்க்க வேண்டுமென ஆய்ந்து தெளிந்தே சொல்கிறேன்.

இதில் மறைமுகமாய் அதிகார வட்டத் தொடர்பு கொண்ட ஒருவன் X சாமானியன் என்ற கோணமும் வந்து விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜெயமோகன் ஓர் எழுத்தாளராக இல்லையென்றால் இவ்வளவு தூரம் தீவிரமாய் மாவுக்கடைக்காரர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. அதுவும் அவர் ஒரு பலமான கட்சியைச் சார்ந்தவர் என்பதை வைத்துப் பார்க்கும் போது. ஆக, எழுத்தாளன் என்றாலும் அதிகாரம் கொண்ட எழுத்தாளனாக இருந்தால் தான் மதிப்பு.

இதில் அவமானம் காரணமாக மாவுக்கடைத் தரப்பு இத்தோடு விஷயத்தை முடித்துக் கொள்ளாமல் "பெண்ணை அடித்து விட்டார்" என்ற பொய்க்குற்றச்சாட்டுடன் அரசியல் மற்றும் வியாபாரிகள் சங்கத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜெயமோகனைக் கைது செய்யக் கோரி நாகர்கோயிலில் இன்னும் சுவரொட்டி அடித்துக் கொண்டிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் இதில் ஜெயமோகனுக்கு ஆதரவாய் இறங்கி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து செயல்படக் கோரியது நல்ல விஷயமே.

இறுதியாக ஜெயமோகன் மீது நம் சமூக வலைதளச் சமூகம் ஏன் இத்தனை வன்மம் காட்டுகிறது என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள விழைகிறேன். தமிழ் வெகுஜன வெளியில் அவ்வளவாய் அறியப்படாத ஃப்ரான்சிஸ் கிருபா சென்ற மாதம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது சமூக வலைதளச் சமூகம் அளித்த பேராதரவை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அதிலும் உண்மை என்ன என்பது எவருக்கும் அப்போது தெரியாது. இத்தனைக்கும் அது இதை விட பன்மடங்கு தீவிரமான குற்றச்சாட்டு. ஆனாலும் தயங்காமல் ஆதரவளித்தார்கள். அவர் ஒரு படைப்பாளி என்பதனாலேயே. ஆனால் சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பிரதான முகமாகவும், சினிமாப் பங்களிப்புகளின் வழி வெகுமக்களிடையே புகழையும் பெற்றிருக்கும் ஜெயமோகன் அதற்கு நேர்மாறாக ஒரு சில்லறைப் பிரச்சனையில் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அவரது சில கருத்துக்கள் / எழுத்துக்களே காரணம் என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயமோகன் பண மதிப்பிழப்புசார் இறப்புக்களைப் பற்றி மேம்போக்கான கருத்துச் சொன்னது, ஒரு வயதான வங்கி ஊழியையின் வீடியோ பகிர்ந்து கோபப்பட்டிருந்தது, இந்து / இந்துத்துவச் சார்பு கொண்டவர் போல் தோன்றச் செய்யும் அவரது எழுத்துக்கள், பெரியாரிய / திராவிட இயக்கங்கள் மீதான அலட்சியப் பார்வை, பெண்ணெழுத்துக்கள் மீதான கடுமையான விமர்சனப் பார்வை எனப் பல காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றில் ஏதோ ஒரு வகையில் காயப்பட்ட ஒவ்வொருவரும் இந்நிகழ்வை சாக்கிட்டுத் தம் கோபத்தை இறக்கி வைத்தார்கள். புளித்த மாவு விவகாரமே ஜெயமோகனுக்குப் பதில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடந்திருந்தால் சமூக வலைதளவாசிகள் எஸ்ராவின் பக்கம் தான் ஆதரவாகப் பேசியிருப்பார்கள். நம் சூழலில் எதிர்வினை இப்படித் தான் எனும் போது தன் நிலைப்பாடுகளின் விளைவுகள் ஜெயமோகனுக்கும் புரிந்தே இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் இதில் அவர் புதிதாய் அதிர்ச்சி கொள்ள ஏதுமில்லை.

சுருக்கமாக என் தரப்பு: 1) ஜெயமோகன் புளித்த மாவைத் திருப்பி வாங்க மறுத்த கடைக்காரப் பெண்மணியிடம் கோபத்தில் மாவுப் பொட்டலத்தை வீசியிருக்கிறார். அது அவருக்கு காயமேற்படுத்தும் நோக்கில் இல்லை. காயமேற்படுத்தவும் இல்லை. (ஒருவேளை அப்படி ஏதும் ஆகியிருந்தால் அது ஒரு விபத்து.) 2) ஜெயமோகன் அப்பெண்ணின் கணவரால் கடை வாசலில் தாக்கப்பட்டிருக்கிறார். பின் ஜெயமோகன் வீட்டுக்கும் வந்து அவரது மனைவி, மகளை வசைபாடி இருக்கிறார். வீட்டுக்குள் நுழையவும் முற்பட்டிருக்கிறார். 3) வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் செய்ததாலேயே ஜெயமோகன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மாவுக்கடைக்காரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 4) ஜெயமோகன் தனது உடற்காயங்களுக்கான நியாயமான சிகிச்சைக்காகவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். (வழக்கை வலுவாக்க அல்ல.) 5) மாவுக்கடைக்காரர் திமுக என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேச வந்த நகரச் செயலாளர் சம்மந்தப்பட்டது ஓர் எழுத்தாளர் என்றதும் விலகிக் கொண்டிருக்கிறார். இது கலைஞர்கள் மீதான திமுகவின் மரியாதை காரணமாக. 6) குடிபோதையின் காரணமாகவே குற்றம் நடந்தது என ஜெயமோகனும் சொல்கிறார். கடைக்காரரும் ஒப்புக் கொள்கிறார். 7) ஜெயமோகன் ஒரு சிறுவீழ்ச்சியைச் சந்திக்க எத்தனை பேர் மனதில் வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. (எனக்கும் ஜெயமோகனுடன் சில விஷயங்களில் கடும் முரண்பாடுகள் உண்டு தான். ஆனால அவர் துன்பப்பட வேண்டும் என ஒருபோதும் எண்ணியவனில்லை. கருத்து வேறுபாட்டை தனிப்பட்ட வன்மாக வரித்துக் கொள்வது சாதாரணமாகி விட்டது சமூக ஊடகங்களில். நம் இயல்பான நோய்க்கூறு மனநிலை. புளித்த மாவெனத் தலைப்பில் சொல்லியிருப்பது இந்த மனநலக்குறைவைத் தான்!) 8) இவை எல்லாவற்றையும் விட முகத்திலறைவது இங்கே நிலவும் எழுத்தாளனுக்கான அடையாளமின்மை தான். அதை தனிப்பட்டு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

வாசகனாகக் கோபப்படும் அதே சமயம் இச்சமூகத்தில் ஒருவனாக, இதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் ஆசானிடம் மன்னிப்புக் கோரவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜெயமோகன் இச்சம்பவத்தின் மன, உடற்காயங்களிலிருந்து விரைந்து மீளட்டும். நம் தமிழ்ச் சமூகம் எழுத்தை, எழுத்தாளனை உரிய முறையில் கொண்டாடக் கற்கட்டும்.

***

(ஜூலை 2019 உயிர்மை இதழில் வெளியானது)

Comments

Naanjil Peter said…
அருமையான விளக்கக் கட்டுரை.
நன்றி.
Kgum17 said…
என் கோணமும் இதுதான். ஏதாவது குறை சொன்னால் அருகில் உள்ள கடைகார்கள் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.சுற்றுலாதலங்களில் இவ்விதம் அதிகம் காணலாம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்