புத்தரின் இரண்டாம் புன்னகை


We must develop this atomic energy quite apart from war – indeed I think we must develop it for the purpose of using it for peaceful purposes. ... Of course, if we are compelled as a nation to use it for other purposes, possibly no pious sentiments of any of us will stop the nation from using it that way.
-    Jawaharalal Nehru, First Prime Minister of India (1948)

பிஜேபி எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தேசப்பற்று சற்றி அதீதமாகத் தான் நாட்டில் புரண்டோடும் - அது சினிமாவோ விளையாட்டோ யுத்தமோ. சமீபமாக தேசப்பற்றுப் படங்கள், அதுவும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானவை பாலிவுட்டில் நிறைய எடுக்கப்படுகின்றன. Neerja (1986 கராச்சியில் நடந்த விமானக் கடத்தல்), Airlift, (1990 குவைத் இந்தியர்களைக் காப்பாற்றியது) Rustom (1950களின் கப்பல் அதிகாரி) மற்றும் The Ghazi Attack (1971 இந்திய பாகிஸ்தான் போரில் நடந்த நீர்மூழ்கிக்கப்பல் சண்டை) வரிசையில் தற்போது அபிஷேக் ஷர்மா இயக்கியிருக்கும் படம் Parmanu.


சில இடங்கள் தவிர மிக நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் படம் வந்திருக்கிறது.

அதீத, நாடகீய தேசப்பற்றை ஊட்டும் Nationalistic Jingoism வகைப் படம் தான் இதுவும். 1998ல் வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் அமெரிக்க செயற்கைக்கோள்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இந்தியா பொக்ரானில் எப்படி அணு ஆயுதப்பரிசோதனையை நடத்தியது என்பதுதான் படத்தின் திரைக்கதை. Parmanu என்ற இந்திச்சொல்லுக்கு அணு என்று பொருள். பரமணு எனக் கொள்ளலாம்!

ஆனால் வரலாற்றை அப்படியே எடுக்கவில்லை. நிறைய மசாலா சேர்த்துள்ளார்கள். பொக்ரான்-2 என்பதே ஒரு தனி மனிதனின் - ஐஏஎஸ் அதிகாரி - கனவு என்பதாகவே கதை சொல்லப்படுகிறது. மெத்தனமும் அலட்சியமும் மிக்க அரசு இயந்திரத்தை இதைச் செய்ய எப்படிச் சம்மதிக்க வைக்கிறான். பின் தன் புத்திசாலித்தனமான திட்டத்தின் மூலம் அதை எப்படிச் செயல்படுத்துகிறான் என்பது தான் திரைக்கதை. அதனால் அவன் சொந்த வாழ்வில் சந்திக்கும் இழப்புகளையும் காட்டிப் போகிறது.

பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் (DRDO), இந்திய ராணுவம், உளவுத் துறை (IB), விண்வெளித் துறை (அதற்கு மட்டும் ISRO-வைக் குறிக்காமல் Indian Space Agency என்று சொல்கிறார்கள், என்ன சிக்கலோ!) ஆகிய பஞ்சபாண்டவர்களையும் அஷ்வத் ரைனா என்ற ஸ்ரீகிருஷ்ணர் வழிநடுத்தி வெல்லும் பாரதப் போர் தான் பொக்ரான்-2 என்பது புத்திசாலித்தனமான உவமை!

சிறப்பான திரைக்கதை. Neerjaவுக்கு எழுதிய சய்வின் கத்ரஸ் என்பவருடன் இணைந்து இயக்குநர் செதுக்கியிருக்கிறார். உண்மையிலேயே ஒட்டிக் கொள்ள வேண்டும் எனப் பிடிவாதமோ முரண்டோ பிடிக்காமல் சுதந்திரம் எடுத்துக் கொண்டிருப்பதால் அற்புதம் செய்ய முடிந்திருக்கிறது. முக்கியமாய் அமெரிக்க செயற்கைக்கோளை ஏமாற்றி விட்டு தினம் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை நடக்கும் காட்சிகள் யாவும் அபாரம். அதை ஒரு சிஐஏ மற்றும் ஐஎஸ்ஐ உளவுக் கூட்டணி கண்டறிவதும் சுவாரஸ்யம். கடைசி அரை மணி நேரம் நிஜமாகவே இருக்கை நுனியில் உட்கார வைக்கிறார்கள்!

படம் முழுக்கவும் சீரியஸ் மூடைப் பாதிக்காமல் subtle-ஆன மெல்லிய நகைச்சுவை இழையோடுகிறது. சிஐஏ ஏஜெண்ட் பானி பூரி தின்பது, பொக்ரான் சைட்டின் பாஸ் கோட்கள், இஸ்ரோ விஞ்ஞானி ப்ரின்ட்டருடன் போராடுவது, டிஆர்டிஓகாரரின் மறதி, அஸ்வத் ஃபோனில் சார்ஜ் இல்லை என்று சொல்வது என்று பல உதாரணங்களைச் சொல்லலாம். நீரஜ் பாண்டே தான் இயக்குநரின் மானசீக குரு என நினைக்கிறேன்.

ஒவ்வொரு துறைக்கும் இடையே இருந்த மெல்லிய உரசல்களையும் ஈகோவையும் படம் காட்டுகிறது. அரிதாய் மிகத் திறமையான, மிக நேர்மையான, மிக அர்ப்பணிப்பு கொண்ட அதிகாரிகளும் இந்திய அரசுகளில் உண்டு என்பதையும் காட்டியுள்ளார்கள்.

The Ghazi Attack படத்தில் தேவையே இல்லாமல் தப்ஸி பண்ணுவைக் கதைக்குள் (கப்பலுக்குள்) நுழைத்திருப்பார்கள். இரண்டு மணி நேரம் ஃப்ரேம் முழுக்க முழுக்க ஆண்களால் நிரம்பி இருந்தால் திரையரங்கில் கூட்டம் சேராது என்ற புரிதலின்பாற் செய்த திரைக்கதை நகாசு அது. டிக் டிக் டிக் (2018) படத்தில் விண்வெளிக் குழுவில் ஒருவராக வரும் நிவேதா பெத்துராஜும் அப்படித்தான். இந்தப் படத்திலும் டயானா பென்டி அப்படித்தான் இண்டலிஜென்ஸ் ப்யூரோ அதிகாரியாக வருகிறார். ஆனால் வெறும் பதுமை என்பதைத் தாண்டி கதையின் நகர்ச்சியிலும் பங்களித்திருக்கிறார்.

பொமன் இரானி வழக்கம் போல் பொருத்தமான நடிப்பு. தேசப்பிரதமரின் பிரதானக் காரியதரிசி என்பதற்குரிய உடல்மொழி சிறப்பாக வந்திருக்கிறது. இன்னும் பெரிய பாத்திரங்கள் கிடைத்தால் துணை நடிகருக்கான தேசிய விருதில் கை வைப்பார்.

இதில் இஸ்ரோ விஞ்ஞானி தமிழர். நாசா வாய்ப்புகளை உதறித் தள்ளி இங்கே இருப்பவர் என்று சொல்லப்படுகிறது. கலாமுக்கான மரியாதையாக இருக்கலாம்.

மிகச் சிறப்பான ஒளிப்பதிவு (அஸீம் மிஷ்ரா மற்றும் சுபீன் மிஸ்திரி). மிக மிக நம்பகமான கலை இயக்கம். குறிப்பாக பொக்ரான் பரிசோதனைக் களம் தொடர்பான காட்சிகள் மிக நேர்த்தியாக வந்திருக்கின்றன. கிராஃபிக்ஸும் அபாரம். அணுகுண்டு வெடிக்கும் காட்சியும் விண்வெளியில் செயற்கைகோள்களைக் காட்டும் இடங்களும் உண்மைக்கு மிக அருகே வந்திருக்கிறது. (டிக் டிக் டிக் தோல்வியுற்றது இதில் தான்.)

படத்தில் சில இடங்களில் பின்னணி இசையும் நன்றாக இருந்தது (சந்தீப் சௌதா).

படம் சத்தமின்றி சின்னதாய் சில அரசியல்களையும் பேசிச் செல்கிறது. 1995லேயே பொக்ரானில் அணு ஆயுதப் பரிசோதனை நடக்கவிருக்கிறது. அது அமெரிக்க உளவு செயற்கைக்கோளின் கண்ணில் பட்டதால் அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைக்கு அடங்கி இந்தியா அச்சோதனையைக் கைவிடுகிறது. பிறகு 1998ல் ரகசியமாய் அதைச் செய்து முடிக்கிறது. 1995ல் காங்கிரஸின் ஆட்சி, நரசிம்மராவ் பிரதமர். 1998ல் பாஜக ஆட்சி. வாஜ்பாய் பிரதமர். இவ்விரு கட்சி ஆட்சிக்குமிடையேயான வித்தியாசங்களை பார்வையாளர் மனதில் போகிற போக்கில் பதிய வைக்கிறார்கள்: 1) காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசின் மேல்மட்டம் (அமைச்சர்கள் முதலியோர்) பெரும்பாலும் கோமாளிகளாக இருந்தது. பாஜக ஆட்சியில் அப்படியில்லை. 2) காங்கிரஸ் ஆட்சியில் ஓர் அதிகாரியின் ஐடியாவை மட்டும் வாங்கிக் கொண்டு அவனை இருட்டடிப்பு செய்தார்கள். மாறாக பாஜக ஆட்சியில் அவனைக் கொண்டே அத்திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். 3) காங்கிரஸ் ஆட்சியில் திட்டத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் திறன் இல்லை. பாஜக ஆட்சியில் திட்டம் நிறைவேறியது. 4) காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்கா மிரட்டியதும் பயந்து திட்டத்தைக் கைவிட்டனர். பாஜக ஆட்சியில் அமெரிக்காவுக்குத் தெரியாமல் செய்து முடித்தார்கள். தெரிந்த பின்பும் தைரியமாக மீண்டும் இரண்டு குண்டுகள் வெடித்துப் பரிசோதனை செய்தார்கள்.

இவற்றை இயக்குநர் (அல்லது படத்தை எழுதியவர்கள்) திட்டமிட்டுச் செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் சங்கிகளின் அட்டகாசம் வலுத்து வரும் நடப்புக் காலகட்டத்தில் வெளிவரும் படத்தை அக்கோணத்தில் பாராதிருக்க முடியவில்லை.

*

பொக்ரானில் இந்தியா ஆணு ஆயுதப் பரிசோதனை நடத்தியதைப் பற்றிப் பார்ப்போம்.

1968ல் அமெரிக்க முதலிய நாடுகள் கொண்டு வந்த NPT என்ற அணுவாயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) 190 உலக நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், தெற்கு சூடான் மட்டும் இதில் இணையவில்லை. வட கொரியா முதலில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பின் அதை மீறியது. இறுதியில் 2003ல் இதிலிருந்து விலகியது. அணு சக்தியைப் பல நாடுகள் பயன்படுத்தி வந்தாலும் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் சொற்பமே.

அவற்றை மேலோட்டமாக ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்: 1) NPT-படி அணு ஆயுதம் வைத்துக் கொள்ள உரிமை கொண்ட நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் மற்றும் சீனா). 2) அனுமதியின்றி அணு ஆயுதம் வைத்திருப்பவை; அதை அதிகாரப்பூர்வமாகச் சோதித்தவை (இந்தியா, வடகொரியா மற்றும் பாகிஸ்தான்). 3) அணு ஆயுதம் வைத்திருப்பதாக வலுவாக நம்பப்படுபவை; சோதித்துக் காட்டாதவை (இஸ்ரேல்). 4) அணு ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் NATO உறுப்பினராக இருப்பதால் வைத்திருக்கும் நாடுகளிடமிருந்து பெற்று பயன்படுத்த முடிந்தவை (பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் துருக்கி) 5) முற்காலத்தில் அணு ஆயுதம் வைத்திருந்த நாடுகள் (பெலாரஸ், கஸகஸ்தான், தென்னாப்ரிக்கா மற்றும் உக்ரைன்).

NPT ஒப்பந்தப்படி அணு ஆயுதம் தயாரிக்க, வைத்திருக்க உலகில் மேற்சொன்ன ஐந்து நாடுகளுக்கு மட்டுமே - ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ளவை - அனுமதி.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு ஹோமி பாபா தலைமையில் அணுத் திட்டத்தை பிரதமர் நேரு தொடங்கினார். 1948ம் ஆண்டின் அணுசக்திச் சட்டப்படி அணு சக்தியை அமைதியான வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்தியா தீர்மானித்தது. இன்னும் சொல்லப் போனால் அணுவாயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தைக் கொண்டு வர இந்தியா மிகவும் முயற்சிகள் எடுத்துக் கொண்டது.

ஆனால் பிற்பாடு இந்தியாவே அதில் இணையவில்லை. அமைதி நடவடிக்கைக்காக (அணு சக்திக்காக மற்றும் தற்காப்புக்காக) அணு ஆயுதம் வைத்துக் கொள்வதை இந்த NPT ஒப்பந்தம் அனாவசியமாகத் தடுக்கிறது என்பது தான் காரணம். உலகிலுள்ள எல்லா நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வரை இதை ஒப்புக் கொள்வதில் அர்த்தமில்லை என்று இந்தியா உணர்ந்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் மிகச் சில முன்னேறிய நாடுகள் மட்டும் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ஒப்புக் கொண்டால் அது இந்தியா முதலிய பின்காலனிய நாடுகளின் பாதுகாப்பை மறுக்கும் ஒரு நவகாலனியமாகவே அமையும் என்பது இந்தியாவின் பார்வையாக இருந்தது.

1974ம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியின் போது இந்தியா தன் முதல் அணு ஆயுதப் பரிசோதனையை பொக்ரானில் நிகழ்த்தியது. அமைதியான அணுகுண்டு என அதை வர்ணித்தது. அதைக் குறிக்கும் பொருட்டு அச்சோதனையை புன்னகைக்கும் புத்தர் (Smiling Buddha) என்று அழைத்தனர். BARC அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணாவின் தலைமையில் இந்தியா இதைச் சாதித்தது. ஒரே அணு குண்டு. அணுச்சிதைவின் (Nuclear Fission) அடிப்படையானது. இதன் மூலம் அணு ஆயுதத்தை அதிகாரப்பூர்வமாய் நிரூபித்த ஐந்து நாடுகளுக்குப் பின் ஆறாவதாய் ஒரு ரவுடி போல் உலக அரங்கில் நுழைந்தது இந்தியா. எதிர்பார்த்தபடியே பல நாடுகளின் பொருளாதாரத் தடைகள் குவிந்தன. கனடா இந்தியாவுக்கு அளித்து வந்த அணுசக்தி தொடர்பான உதவிகளை நிறுத்திக் கொண்டது. பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது.

இதன் விளைவாக 1974க்குப் பின்பும் இந்தியா தன் அணுசக்தி அறிவை அமைதியான வழிகளில் மட்டுமே பயன்படுத்தியது. அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கவில்லை. 1980களில் ராஜா ராமண்ணாவின் வழிகாட்டலில் அணுப்பிணைவின் (Nuclear Fusion) அடிப்படையில் இயங்கும் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும் ஆற்றலையும் இந்தியா பெற்றது. பின் 1988 முதல் 1990 வரை ராஜீவ் காந்தி மற்றும் விபி சிங் ஆட்சிகளில் மீண்டும் அணு ஆயுதத் தயாரிப்பில் இறங்கியது இந்தியா. அதைப் பிரயோகித்தத் தேவையான (Nuclear Warhead) ப்ரித்வி ஏவுகணைகளை அப்துல் கலாம் தலைமையில் தயாரித்தது இந்தியா. ஆனால் சர்வதேசத் தடைகளுக்கு அஞ்சி அணுகுண்டுகளைச் சோதிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் 1995ல் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இந்தியா பொக்ரானில் அணுகுண்டுச் சோதனை நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்க உளவு செயற்கைக்கோள் அதைக் கண்டுபிடித்ததால் நடத்தவிருந்த கைவிடப்பட்டது.

பின் 1998ல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்த பிறகு மிக ரசிகசியமாக பொக்ரானில் அணு ஆயுதச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆபரேஷன் சக்தி என்று இதை அழைத்தனர். அணுசக்தித் துறையைச் சேர்ந்த ஆர். சிதம்பரமும் பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் இருந்த அப்துல் கலாமும் இதன் பிரதான மூளையாகச் செயல்பட்டனர். மொத்தம் ஐந்து குண்டுகள். ப்ளுடோனியத்தில் செய்யப்பட்டவை. அணுக்கருச்சிதைவு, அணுகரு இணைவு இரண்டு வகையிலும் குண்டுகள் இருந்தன. Parmanu படம் முழுக்கப் பேசியிருப்பது இதை எப்படிச் சாதித்தார்கள் என்பதைத்தான்!

பொக்ரான் என்பது ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடம். இதற்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கும் வெறும் 230 கிமீ தூரம் தான். பரிசோதனையில் ஏதேனும் அணுக்கசிவு ஏற்பட்டு, காற்றில் பரவி பாகிஸ்தானுக்குப் போனால் இரு நாடுகளுக்கும் போர் மூளும் ஆபத்தும் உண்டு. (படத்திலும் சோதனை நடத்த சில நிமிஷங்கள் இருக்கும் போது காற்று பாகிஸ்தானை நோக்கி அடிக்கும். அப்போது வெடிப்பில் ஏதேனும் கசிவு நேர்ந்து காற்றில் கலந்தால் ஆபத்து என காற்று திசை மாறக் காத்திருப்பார்கள்.)

வெட்டவெளிப் பாலைவனம் என்பதால் செயற்கைக்கோளின் கண்காணிப்பிலிருந்து தப்புவதும் கடினம். இத்தனையும் மீறி அணு ஆயுதப் பரிசோதனை செய்ய இந்தியா வசதியான, பாதுகாப்பான வேறெந்த இடத்தையும் இன்னும் கண்டிபிடிக்கவில்லை.

இம்முறை முன்பைக் காட்டும் கடும் பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் மீது விதிக்கப்பட்டன. அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதில் முக்கியமானவை. அதனால் பெரும் பாதிப்புக்குள்ளானது இந்தியா. அதிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு வர சில ஆண்டுகள் பிடித்தது. பாகிஸ்தான் போட்டிக்கு தானும் பதினைந்தே நாட்களில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது. சோதனை நடத்தப்பட்ட மே 11ம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதில் முக்கியமான விஷயம் முதல் பொக்ரான் பரிசோதனைக்கும் இரண்டாவதற்கும் இடையே கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு கால இடைவெளி. இக்காலத்தில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு என்பது மிகத் தீவிரமாக அமெரிக்க உள்ளிட்ட முன்னேறிய நாடுகளால் எடுக்கப்பட்டன. ஓர் உதாரணம் அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் எல்லா நாடுகளின் முக்கியப் பிரதேசங்களையும் கண்காணித்து வந்தது. 1995ல் முதல் முயற்சியின் போதே பெரும் அழுத்தம் வந்ததால் தான் கைவிடப்பட்டது என்பது தெரிந்ததே. அப்போது அணு ஆயுதச்சோதனை நடத்தினால் மோசமான பொருளாதார அடியை இந்தியா பெறும் என்பது அடிப்படை அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.

ஆனாலும் வாஜ்பாய் அரசு அதைச் செய்தது. அப்போது அதற்கான அத்தியாவசியத் தேவை என்ன என்பது தெளிவில்லை. எல்லையில் நடந்து கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் உரசல்களைக் காரணமாகச் சொல்ல முடியாது. அது எப்போதும் இருந்து வருவது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சொன்ன பாஜக தன் அரசியல் பலத்தை ஏற்றிக் கொள்ள செய்யப்பட்டதே இப்பரிசோதனை என்ற குற்றச்சாட்டை முழுக்கப் புறந்தள்ள முடியவில்லை. அதற்கேற்ப வாஜ்பாய் அரசு அதற்கடுத்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பெறுவெற்றி பெற்றது. அதற்கு பொக்ரான் சோதனை அளித்த வலுவான தலைமை என்ற பிம்பம் முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

சும்மா இருந்த பாகிஸ்தானையும் சொறிந்து விட்டு அதையும் அணுஆயுத வல்லமை உடைய நாடுகளின் அதிகாரப்பூர்வப்பட்டியலில் இணைவதற்குக் காரணமாக இருந்தது.

2006ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அணு ஆயுதத் தயாரிப்பையும், அணு சக்தி நடவடிக்கைகளையும் இந்தியா தனித்தனியேப் பிரித்து நடத்துமென அறிவித்தது (அதாவது அணுசக்திக்காகப் பிற நாடுகள் அளிக்கும் உதவிகள் அணு ஆயுதத்திற்குப் பயன்படுத்தாது). இதன் தொடர்ச்சியாக இந்தியா அமெரிக்காவிடையே அணுசக்தி தொடர்பான 123 என அழைக்கப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2007ல் கையெழுத்தானது. அதன்படி இந்தியா எந்த அணு ஆயுதப் பரிசோதனையிலும் இறங்கக்கூடாது. செய்தால் அத்தனை உதவிகளையும் அமெரிக்கா ரத்து செய்யும்.

கிட்டத்தட்ட ஒரு நவீன அடிமை சாசனம் தான் இது. இதைத்தான் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் “குசு போட்டுக்கலாமா?” என்று கிண்டல் செய்திருப்பார்கள்.

ஆறுமாதத்திற்கு முந்தைய கணக்குப்படி இந்தியாவிடம் சுமார் 130 அணுகுண்டுகள் இருக்கின்றன. அருகிருக்கும் எதிர்காலத்தில் அவற்றை இந்தியா பரிசோதிக்கும் சாத்தியமோ பிரயோகிக்கும் அழுத்தமோ இருப்பதாய்த் தெரியவில்லை. அதனால் பழைய நினைவுகளைக் கிளறி தேசப்பற்றை வெகுஜனங்களின் மனதில் பொங்கிப் புரண்டோட Parmanu படம் முயற்சி செய்து அதில் பெருவெற்றியும் பெற்றிருக்கிறது.

அது ஒரு வகையில் அவசியமானதும் கூட. புத்தரின் மூன்றாம் புன்னகை அத்தனை அருகில் இல்லை என்பதால் முதலிரு புன்னகைகளை மீளுருவாக்கி ரசிக்கிறோம்.

புத்தர் என்றைக்கடா புன்னகைத்தார்? என்ற கேள்வி தொக்கி நிற்பது வேறு கதை!

***

(உயிர்மை ‍ ஜூலை 2018 இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்