மாநில சுயாட்சி என்பது மாயையா?


“The Federation is a Union because it is indestructible.” - B.R. Ambedkar

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா தற்கொலை தொடர்பான பேச்சிடையே நீட் தேர்வை முன்வைத்து கல்வி தொடர்பான சட்டங்களை இயற்றும் உரிமை மாநிலங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார் கமல். மாநில சுயாட்சிக் கோரிக்கை தொடர்பான நெடிய வரலாற்றில் ஒரு சிறுகுரல் தான் அது. சொல்லப் போனால் கமல் கேட்ட உரிமை ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உண்டு - ஆனால் ஏட்டளவில் மட்டும்.


அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வர்ணிக்கிறது (“India, that is Bharat, shall be a Union of States.” - பிரிவு 1) என்றாலும் அதில் நம் நாட்டின் அரசமைப்பைச் சுட்ட கூட்டாட்சி (Federal), கூட்டமைப்பு (Federation) போன்ற சொற்கள் எங்குமே நேரடியாய்ப் பயன்படுத்தவில்லை எனினும் இந்திய அரசியலைப்புச் சட்டம் கூட்டாட்சித்தத்துவத்தையே முன்வைப்பதாக நம்பப்படுகிறது. காதல் என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தாமல் இல்லாமல் திருக்குறள் காதலைச் சொல்லவில்லையா!

கூட்டாட்சி என்றால் என்ன? அது கூட்டணி ஆட்சி (Coaliation) அல்ல. மாநிலங்களை ஒன்றிணைத்த ஒரு தேசிய அரசுக்கும் (Central) அந்த மாநில அரசுகளுக்குமான (States) அதிகாரப் பகிர்வைக் குறிப்பது. இதற்கான சிறந்த உதாரணம் அமெரிக்கா தான். அது ஐக்கிய மாகாணங்களின் (United States) தொகுப்பே. அந்த மாகாணங்களுக்குப் பல அதிகாரங்கள் உண்டு. அமெரிக்க அரசுக்கு வேறு சில அதிகாரங்கள். இரண்டும் மோதும் இடங்களில் புரிந்துணர்வுடன் முடிவெடுக்க கூட்டாட்சி முறை உதவும்.

இதற்கு நேர் எதிரான நிலை என ஒற்றை அரசு முறையைச் (Unitary) சொல்லலாம். Federal முறை Federation-ஐ உருவாக்கும்; போலவே Unitary முறை Union-ஐ உருவாக்கும். இங்கிலாந்து ஓர் உதாரணம். அங்கே பிராந்தியங்களுக்கென தனிப் பிரதிநிதித்துவம் ஏதும் கிடையாது. மொத்தச் சிந்தனையும் தேசிய அளவில் மட்டும் தான். சீனா, ஜப்பான், ஃப்ரான்ஸ், இத்தாலி போன்றவையும் இவ்வகை அரசு கொண்ட நாடுகளே!

பெயரிலேயே ஒன்றியம் என்று இருந்தாலும் இந்தியாவை ஏன் கூட்டமைப்பாய்ப் பார்க்கிறோம்? மிக முக்கியமான ஆறு காரணங்கள்: 1) இங்கே இரண்டு அரசுகள் உண்டு: மத்திய அரசு, மாநில அரசுகள். 2) இவ்விரு அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 3) ஈரவை முறை (ராஜ்யசபா & லோக்சபா, சில மாநிலச் சட்டமன்றங்களிலும் கீழவை உண்டு. 4) அரசியல் சாசனத்தின் உச்ச ஆதிக்கம். 5) அரசியல் சாசனத்தின் பகுதி உறுதித்தன்மை. 6) சுதந்திரமான நீதிபரிபாலனம்.

இந்தியா கூட்டாச்சி அல்ல என்று சொல்லத்தக்க அம்சங்களும் உண்டு. 1) ஒற்றை அரசியல் சாசனம் (காஷ்மீர் விதிவிலக்கு). 2) ஒற்றைக் குரியுரிமை (கூட்டாட்சியில் பொதுவாய் மாநிலத்துக்கு ஒரு குடியுரிமை, தேசத்துக்கு ஒரு குடியுரிமை இருக்கும். அமெரிக்காவில் அப்படித்தான்.) 3) அரசியல் சாசனத்தின் நெகிழ்தன்மை (சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வர பொதுவாய் மாநிலச் சட்டசபைகளின் ஒப்புதல் தேவை இல்லை. ஆனால் அமெரிக்காவில் நான்கில் மூன்று பங்கு மாகாணங்களின் ஒப்புதல் தேவை.) 4) ஒருங்கிணைந்த நீதியமைப்பு. 5) மத்திய அரசின் நியமன முறை. 6) அகில இந்தியப் பணிகள். 7) அவசரநிலை அதிகாரங்கள். 8. சமமற்ற மாநிலப்பிரதிநிதித்துவம் (பாராளுமன்ற மேலவையான ராஜ்யசபாவின் அங்கத்தினர் மாநிலச் சட்டசபையால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றாலும் அதில் எல்லா மாநிலங்களுக்கும் சம பலம் கிடையாது. உதாரணமாய் உத்திரப்பிரதேசத்திற்கு அதிக உறுப்பினர்கள், சிக்கிம் மாநிலத்திற்குக் குறைவு). 9. மாநில அரசுகள் மீதான மத்திய அரசின் செல்வாக்கு (மாநில அரசின் உச்ச பதவியான ஆளுநரையே மத்திய அரசு தான் நியமிக்கிறது). 10. மாநிலங்களுக்கு இருக்கும் மிகக் குறைவான நிதி தொடர்புடைய அதிகாரங்கள்.

இந்தியா அதன் தனி பாணியிலான கூட்டாட்சி முறையைப் (Federalism Sui Generis) பின்பற்றுகிறது எனப் பூசி மெழுவோர் உண்டு. Quasi-Federal என்று சொல்வோரும் உண்டு. அரைகுறைக் கூட்டாட்சி. பல வகைகளில் அது உண்மை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தியக் கூட்டாட்சி என்பது ஒருவித அரசியல் பாசாங்கே!

*

கூட்டாட்சி என்ற தத்துவமானது 1919ல் ப்ரிட்டிஷார் கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம் (Government of India Act) வழியே தான் இந்தியாவுக்கு அறிமுகமானது. அதில் சட்டம், நிர்வாகம், நிதியைக் கையாள மத்திய மற்றும் மாநிலப் பட்டியல் இருந்தது.

மே 1930ல் வெளியான சைமன் கமிஷன் அறிக்கை மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் கூட்டாட்சி அரசு முறையைத் தான் சிபாரிசு செய்தது. மோதிலால் நேரு தலைமையேற்று ஆய்ந்து வெளியிட்ட நேரு அறிக்கையும் இதையே சொன்னது. 1935ல் கொண்டு வரப்பட்ட இந்திய அரசுச் சட்டத்திலும் இதன் கூறுகள் இடம் பெற்றன. அதன் கூட்டாட்சி தொடர்புடைய பல்வேறு விஷயங்களை அரசியல் நிர்ணய சபை அரசியல் சாசனம் எழுதும் போது எடுத்தும், விடுத்தும் கொண்டது.

சுதந்திரத்துக்கு முந்தைய ப்ரிட்டிஷ் அரசின் க்ரிப்ஸ் ப்ரப்போஸல் (1942), கேபினெட் மிஷன் (1946) மற்றும் இரண்டுமே வலுவற்ற ஒரு மத்திய அரசையே முன்வைத்தன. அத்திட்டத்தில் வெளியுறவு, பாதுகாப்பு போன்ற சில விஷயஙகளில் தான் மத்திய அரசுக்கு அதிகாரம் இருந்தது. மற்ற அதிகாரங்கள் மாகாணங்களுக்கு. இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டுமே இதை நிராகரித்தன. அதையும் மீறி அரசியல் நிர்ணயச் சபையின் முதல் அறிக்கை கூட்டாட்சிக் கொள்கைகளை ஒட்டியே அமைந்திருந்தது. அப்போது சபையின் தலைவரான நேரு “வலிவற்ற மைய அரசு என்பது தேச நலனுக்கு ஆபத்தானது, ஆனால் அதே சமயம் மாகாணங்களுக்கு பல விஷயங்களில் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதால் ஒற்றை அரசு முறை அரசியல்ரீதியாகவும் நிர்வாகரீதியாகவும் பின்னுக்கு இழுக்கும் நடவடிக்கையாக முடியும்.” என்றார். பிறகு ப்ரிட்டிஷ் அரசு கொண்டு வந்த இந்திய சுதந்திரச் சட்டத்தில் (India Independence Act, 1947) தான் இப்பார்வை எதிர்திசையில் பயணிக்கத் தொடங்கியது.

மகாத்மா காந்தி கிராம சுயராஜ்யத்தை முன்வைத்ததால் அதன் நீட்சியாக அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்யும் கூட்டாட்சி வடிவத்துக்கே ஆதரவாக இருந்தார். மாகாணங்களை இந்தியாவுடன் இரும்புக் கரம் கொண்டு இணைப்பதில் முனைப்புக் காட்டுபவராய் இருந்தாலும் உள்துறை அமைச்சரான சர்தார் படேலும் கூட்டாட்சி ஆதரவுக் கருத்துக்கள் கொண்டிருந்தார். ஆனால் நேருவும் அம்பேத்கரும் நேர் எதிராய் ஒன்றிய அமைப்பு முறையை ஆதரித்தனர். பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு தான் குழப்பமான கூட்டாட்சி முறையை இந்தியா சுவீகரித்துக் கொண்டது.

இந்திய அரசியல் சாசனச் சிற்பியான பிஆர் அம்பேத்கர், “இந்தியா யுத்தம், இயற்கைச் சீற்றங்கள் முதலிய அசாதாரணக் காலங்களில் ஒற்றை அரசு முறையாகவும், மற்ற சாதாரணச் சூழ்நிலைகளில் கூட்டாட்சி முறையிலும் செயல்படும்.” என்று சொன்னார்.

*

மத்திய, மாநில அரசுகள் இடையேயான சட்ட மற்றும் நிர்வாக அதிகாரப் பகிர்வுகளை நம் அரசியல் சாசனத்தின் 11ம் பகுதி (Part XI) விவரிக்கிறது. எந்தெந்த விஷயங்களில் மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றலாம் என்பதை ஏழாவது அட்டவணை (Seventh Schedule) விவரிக்கிறது. மொத்தம் மூன்று பட்டியல்கள் உண்டு - மத்தியப் பட்டியல் (Union List), மாநிலப் பட்டியல் (State List) மற்றும் பொதுப் பட்டியல் (Concurrent List).

பாராளுமன்றம் மொத்த நாட்டுக்கோ ஒரு பகுதிக்கோ சட்டங்கள் இயற்ற முடியும். போலவே மாநிலச் சட்டசபை தன் மாநிலத்துக்கோ ஒரு பகுதிக்கோ சட்டங்கள் இயற்ற முடியும் [பிரிவு 245 (1)]. மத்தியப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (1)]. பொதுப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் அதிகாரமுண்டு [பிரிவு 246 (2)]. மாநிலப் பட்டியலில் இருக்கும் விஷயங்களில் தம் மாநிலத்தில் சட்டமியற்ற மாநிலச் சட்டசபைகளுக்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (3)]. மாநிலங்கள் தவிர்த்த பிற பகுதிகளில் (உதா: யூனியன் பிரதேசம்) மாநிலப் பட்டியல் விஷயங்களில் சட்டமியற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரமுண்டு [பிரிவு 246 (4)].

இது வரை எல்லாம் சரியாகத் தான் இருப்பது போல் தோன்றும். ஆனால் இத்தோடு முடியவில்லை. அரசியல் சாசனம் மேலும் சில சிறப்பு அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்குகிறது. மாநிலப் பட்டியலிலும், பொதுப் பட்டியலிலும் இடம் பெறாத விஷயங்களில் சட்டம் இயற்றவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு [பிரிவு 248 (1)]. இதை Residuary Powers என்கிறார்கள். தேச நலனை முன்வைத்து இரண்டில் மூன்று பங்கு உறுப்பினர் பங்கேற்பில் வாக்களிப்பு மூலம் ராஜ்யசபா மாநிலப் பட்டியலில் இருக்கும் விஷயம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றினால் பாராளுமன்றம் அதைச் சட்டமாக்கலாம் [பிரிவு 249 (1)]. அவசர நிலைப் பிரகடம் அமலில் இருக்கும் போது மாநிலப் பட்டியல் விஷயத்தில் பாராளுமன்றம் சட்டம் இயற்றலாம். [பிரிவு 250 (1)].

ஆக, ஒரே விஷயத்திற்கு பாராளுமன்றமும் சட்டசபையும் சட்டங்கள் இயற்றும் சாத்தியமுண்டு. அவை முரண்பட்டால் என்ன ஆகும்? மாநிலச் சட்டசபை இயற்றிய ஒரு சட்டம் (பிரிவுகள் 249 மற்றும் 250-ஐப் பயன்படுத்தி) பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரண்பட்டால் பாராளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும் [பிரிவு 251]. பொதுப் பட்டியலில் மாநிலச் சட்டசபை இயற்றிய சட்டம் பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரண்பட்டால் பாராளுமன்றம் இயற்றிய சட்டமே செல்லுபடியாகும் [பிரிவு 254 (1)].

இவ்விஷயத்தில் போனால் போகிறதென மாநில அரசுகளுக்கு ஆறுதல் பரிசளிக்கிறது அரசியல் சாசனம். பொதுப் பட்டியலில் மாநிலச் சட்டசபை இயற்றிய ஒரு சட்டம் பாராளுமன்றம் அதற்கு முன்போ பின்போ இயற்றிய சட்டத்திற்கு முரணானதாக இருந்தால், ஜனாதிபதியிடம் அனுப்பி ஒப்புதல் பெறுவதன் மூலம் அந்த மாநிலத்தில் அச்சட்டத்தை அமல்படுத்த முடியும். ஆனால் பாராளுமன்றம் அதே விஷயத்தில் சட்டத்தைச் சேர்க்கவோ மாற்றவோ நீக்கவோ தடையில்லை [பிரிவு 254 (2)].

பாராளுமன்றம் தலையிட முடியாத விஷயங்களில் (பிரிவுகள் 249 மற்றும் 250-ஐப் பயன்படுத்தவியலாத சமயங்களில்) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் அவற்றின் சட்டசபைகளில் (மேல்சபையிலும் கீழ்சபை இருந்தால் அதிலும்) தீர்மானம் நிறைவேற்றினால் பாராளுமன்றம் அதை அந்த மாநிலங்களுக்குச் சட்டமாக்கலாம் [பிரிவு 252 (1)]. அச்சட்டங்களை பாராளுமன்றமே திருத்தவோ திரும்பப் பெறவோ முடியும், அந்த மாநிலச் சட்டசபைகளுக்கு அதில் உரிமை இல்லை [பிரிவு 252 (2)].

மாநில அரசுகள் சட்டங்களை அமல்படுத்த நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும், இவ்விஷயத்தில் மத்திய அரசு அவர்களை வழிநடத்தலாம் [பிரிவு 256]. மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களைப் பாதிக்காத வண்ணமே மாநில அரசுகள் நிர்வாக அதிகாரத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்திலும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தலாம் [பிரிவு 257 (1)]. தேசிய நெடுஞ்சாலைகள், நீர்வழிப் போக்குவரத்துக் கட்டுமானத்திலும் இருப்புப் பாதைகள் நிர்வாகத்திலும் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு மத்திய அரசு வழிகாட்டலாம் [பிரிவு 257 (2) & (3)].

மாநில அரசின் சம்மதத்துடன் ஜனாதிபதி அந்த அரசுக்கோ, அதன் அதிகாரிகளுக்கோ சில மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களை நிபந்தனையுடன் அல்லது அஃதற்று அளித்து அவர்களைச் செயல்படப் பணிக்கலாம் [பிரிவு 258 (1)]. மத்திய அரசின் சம்மதத்துடன் மாநில ஆளுநர் அந்த மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை நிபந்தனையுடன் அல்லது அஃதற்று மத்திய அரசுக்கு அளிக்க முடியும் [பிரிவு 258A].

மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனைகளை சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் தலையிட்டு த் தீர்க்க முடியும் [பிரிவு 262 (1)]. உச்ச நீதிமன்றமோ, பிற நீதிமன்றங்களோ குறிப்பிட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப் பிரச்சனையில் தீர்ப்பளிக்க முடியாது என்றும் பாராளுமன்றம் சட்டமியற்ற முடியும் [பிரிவு 262 (2)].

மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல்களைத் தீர்க்க ஜனாதிபதி மாநிலங்களுக்கு இடையேயான ஒரு குழுவை அமைக்க முடியும் என்று சொல்கிறது 263வது பிரிவு.

*

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு என்ற விஷயம் கல்வி என்ற தலைப்பின் கீழ் வரும். கல்வி என்ற விஷயம் அரசியல் சாசனத்தின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே அதில் சட்டம் இயற்றலாம். ஆனால் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நீட் சட்டம் இயற்றி விட்டதால் தமிழக அரசு சட்டசபையில் அதை மறுதலித்துச் சட்டம் இயற்றினாலும் அதை அமல்படுத்த ஜனாதிபதி ஒப்புதல் தேவை என்றாகிறது. ஆர்எஸ்எஸ்காரரும் ஆளும் பாஜகவின் கைப்பாவை எனக் கருதப்படுபவருமான நம் ஜனாதிபதி ஒருபோதும் அதைச் செய்ய மாட்டார். (அவர் செய்ய மாட்டார் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அதற்கான சிறுமுயற்சியைக் கூட செய்யவில்லை இங்கே ஆட்சியிலிருக்கும் பொம்மை அரசு.)

இன்று மத்தியப் பட்டியலில் ராணுவம், அந்நிய விவகாரம், அணுசக்தி, குடியுரிமை, வங்கிகள், ரயில்வே, துறைமுகம், நெடுஞ்சாலை என 100 விஷயங்கள் இருக்கின்றன. மாநிலப் பட்டியலில் சட்டம் ஒழுங்கு, சிறை, சுடுகாடு, மீன்வளம், நூலகங்கள், விவசாயம் என 61 விஷயங்கள் இருக்கின்றன. பொதுப்பட்டியலில் குற்றவியல் சட்டம், திருமணம், விவாகரத்து, மின்சாரம், அச்சு ஊடகங்கள் என 52 விஷயங்கள் உள்ளன. முன்பு மாநிலப்பட்டியலில் 66ம் பொதுப் பட்டியலில் 47ம் இருந்தன. பிறகு 5 விஷயங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதில் கல்வியும் ஒன்று. வனத் துறை, எடை மற்றும் அளவைகள், வன விலங்கு மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதித் துறை நிர்வாகம் ஆகியவை மற்ற நான்கு.

இந்த அரசியல் சாசன மாற்றம் இந்திரா காந்தியால் 1976ல் – எமர்ஜென்ஸி காலம் - கொண்டு வரப்பட்டது. புகழ் பெற்ற 42வது சட்ட திருத்தம்! அவசர நிலையின் போது மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பறிக்கும் வண்ணம் நுழைக்கப்பட்ட இந்த மாற்றமானது அப்படியே சாசனத்தில் நிலைத்து விட்டது. இன்று பொதுப் பட்டியலில் உள்ள 25வது விஷயம் - Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour (உயர்கல்வி உட்பட கல்வி அனைத்தும்). இப்படித் தான் அனிதாவின் தலை விதியை அன்றைய இந்திராவும் இன்றைய மோடியும் இணைந்து கிறுக்கினர்!

*

கூட்டாட்சி என்பதன் தர்க்கப்பூர்வ நீட்சியே மாநில சுயாட்சி (State Autonomy) எனலாம். அல்லது மாநில சுயாட்சியே கூட்டாட்சிக்கு வித்திடும் என்றும் இதனைப் பார்க்கலாம். மாநில சுயாட்சி விஷயத்தில் தமிழகமே மற்ற இந்திய மாநிலங்களுக்கு முன்னோடி.

அரசியல் சாசனச் சட்டம் அமலுக்கு வந்த பின் 1956ல் மொழிவாரி மாகாணங்களின் உருவாக்கம் தான் இந்தியாவின் கூட்டாட்சிக்கு அடித்தளம். பிராந்தியங்களின் பலம் மத்திய அரசின் விருப்பத்தை மீறி நடைமுறை மாற்றமாக உருப்பெற்ற நிகழ்வு அது.

அதற்கு அடுத்த ஆண்டே அறிஞர் அண்ணா தமிழக சட்டசபையில் மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் பெறுவதைப் பற்றிப் பேசி இருக்கிறார் (மே 6). 1969ல் பொங்கலை ஒட்டி அண்ணா தம்பிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட “மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்பதைக் குறிப்பிடுகிறார்.

அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சீரான மத்திய மாநிய அரசுகளின் உறவுக்கு மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு மாற்ற வேண்டிய அதிகாரங்களைப் பரிந்துரைக்க பிவி ராஜமன்னார், ஏஎல் முதலியார், பி சந்திரா ரெட்டி ஆகியோரைக் கொண்ட நிபுணர் கமிட்டி ஒன்றை அமைத்தார். 1970ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் தான் இன்று வரையிலும் மிகப் பிரபலமான “மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்ற முழுக்கத்தை அறிவித்தார்.

செப்டெம்பர் 1970ல் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை சென்னை அண்ணா நகரில் திமுக நடத்தியது. கலைஞர் தலைமையிலான அந்நிகழ்வில் தந்தை பெரியார், காயிதே மில்லத், அப்போதைய மேற்கு வங்க முதல்வர் அஜய் முகர்ஜி, எஸ்எம் கிருஷ்ணா, ப்ரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு வங்க முதல்வர் பிணராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் ஸ்டாலின், கி. வீரமணி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழைத்து நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டுக்கு அதுவே தூண்டுதலாக இருக்கக்கூடும். (தலைமையேற்றுப் பேசிய தொல். திருமாவளவன் மாநில சுயாட்சிக் கோரிக்கைக்கு கலைஞரே முன்னோடி எனக் குறிப்பிட்டார்.)

1971ல் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி என்பதை முன்னிலைப்படுத்தியது திமுக. ராஜமன்னார் கமிட்டியின் அறிக்கை மே 1971ல் வந்த பின் ஏப்ரல் 1974ல் தமிழக சட்டப்பேரவையில் அவ்வறிக்கையை முன்வைத்து அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ல் மாநில சுயாட்சி என்ற முக்கிய அய்வு நூலை முரசொலி மாறன் எழுதி வெளியிட்டார்.

1973ல் பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தள் கட்சி அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை இயற்றியது 1979ல் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மத்திய மாநில உறவு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மத்திய மாநில உறவுகளை ஆராய 1983ல் சர்க்காரியா ஆணையமும் 2007ல் நீதிபதி பூஞ்சி ஆணையமும் அப்போதிருந்த காங்கிரஸ் மத்திய அரசுகளால் அமைக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன.

1989ல் திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளை உள்ளடக்கிய முதல் மத்திய அரசு விபி சிங் அமைந்தது. வெறும் 11 மாதங்களே பதவியில் இருந்த அவ்வரசு குறுகிய இடைவெளியில் கூட்டாட்சித் தத்துவத்தை வலுவாக்கும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. சர்க்காரியா கமிஷன் பரிந்துரையின் படி சாசனப் பிரிவின் 263வது பிரிவைப் பயன்படுத்தி 1990ல் சர்வமாநிலக் குழு (Inter-State Council) அமைத்தது அதில் முக்கியமானது. பின் 1996 முதல் 2014 வரை மத்திய அரசுகளில் பிராந்தியக் கட்சிகள் இடம் பெற்று கூட்டணி ஆட்சியே அமைந்ததால் ஓரளவு ஆரோக்கியமான கூட்டாட்சி முறை நடைபெற்றது எனலாம். இதில் இடதுசாரிகளின் பங்கும் முக்கியமானது.

தெற்காசிய அரசியல் விமர்சகரான கொல்கத்தாவைச் சேர்ந்த கார்கா சேட்டர்ஜி தன் கட்டுரை ஒன்றில் “இன்று மேற்க வங்க மாநில அரசுக்கு சில அதிகாரங்கள் உள்ளன என்றால் அது கலைஞர் தமிழ் மக்களுக்காக தில்லியை எதிர்த்துப் போராடியதால் தான்.” என்கிறார். 1974ல் மாநில முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றலாம் என்ற உரிமையை இந்திரா காந்தியிடம் பேசிப் பெற்றவர் கலைஞர் தான்.

*

ஜேசி ஜோஹரி தன் The Constitution of India: A Political and Legal Study நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “முதலில் நம் கூட்டாட்சி முறையில் உள்ள மாநிலங்கள் அமெரிக்க மாகாணங்களைப் போலவோ சுவிட்சர்லாந்து கான்ட்டன்களைப் போலவோ பலம் வாய்ந்தவை அல்ல. அடுத்தது இங்கே மத்தியிலும் மாநிலங்களிலும் பாராளுமன்ற முறையிலான அரசுகளே அமைந்திருக்கின்றன. இந்தியாவை ஒரு கூட்டாட்சி நாடு என்று சொல்லலாம் தான். ஆனால் இதன் உறுப்பு மாநிலங்கள் முன்பு சுந்ததிர நாடுகளாய் இருந்து தற்போது இந்தியக் கூட்டமைப்பிற்குள் தம்மை இணைத்துக் கொண்டவை அல்ல. இந்த மாநிலங்கள் எல்லாம் வெறும் புவியியல் துண்டுகள். அவற்றின் அளவுகள் மத்திய அரசால் கூட்டவோ குறைக்கவோ பட முடிந்தவை.”

ஆக, தெளிவாய் நெடுங்காலமாய் இந்திய அரசியல் சாசனத்தின் நடைமுறை அமல்படுத்தலில் மத்திய அரசின் கையே ஓங்கி இருக்கிறது. இதை சமச்சீரற்ற கூட்டாட்சி (Asymmetric Fedaralism) என்று சொல்லலாம். இந்தியா வடிவில் கூட்டாட்சி நாடு; ஆனால் சாரத்தில் ஒற்றையாட்சி நாடு என்றும் இதனைப் பார்க்கலாம்.

ஆனால் ஒரு விஷயம் - தற்போதிருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட கூட்டாட்சியையேனும் பாதுகாக்கும் வகையில் தான் நம் அரசியல் சாசனம் எழுதப்பட்டுள்ளது. சாசனத்தின் 368வது பிரிவு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யும் முறையைப் பேசுகிறது. மேலே நாம் பார்த்த சாசனத்தின் 11ம் பாகம் (அத்தியாயம் ஒன்று மட்டும்), ஏழாம் அட்டவணை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்றால் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மாநிலச் சட்டசபைகளின் ஒப்புதல் பெற வேண்டும். இதன் வழி கணிசமான மாநிலங்களும் ஒப்புதல் தந்தால் ஒழிய குறிப்பிட்ட சாசனத் திருத்தத்தை நிறைவேற்ற இயலாது. (பொதுவாய் 368(2)வது பிரிவில் குறிப்பிடப்படாத மற்ற திருத்தங்களுக்கு பராளுமன்ற இரு அவைகளின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் போதும். மாநிலச் சட்டசபைகளின் அங்கீகாரம் தேவையில்லை.)

பல்வேறு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இன்று அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்புப் கூறுகளில் (Basic Structure) பாராளுமன்றம் மாற்றம் செய்ய முனைந்தால் அதற்கு உச்சநீதிமன்றத்தின் சம்மதமும் பெற வேண்டும். அப்படியான கூறுகளில் கூட்டாட்சியும் ஒன்று என 1973ல் வேசவானந்த பாரதி மற்றும் கேரள அரசு இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

1984ல் ப்ரதீப் ஜெயின் - இந்திய யூனியன் வழக்கில் இந்தியா பாரம்பரியக் கூட்டாட்சி முறையில் செயல்படவில்லை எனத் தீர்ப்பளித்த அதே உச்சநீதிமன்றம் 2001ல் கங்கா ராம் மூல்ச்சாந்தனிக்கும் ராஜஸ்தான் மாநிலத்துக்குமான வழக்கில் இந்திய அரசியல் சாசனம் கூட்டாட்சியின் பாரம்பரியச் சாயைகள் கொண்டதே எனத் தீர்ப்பளித்தது.

அவ்வப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் நமது கூட்டாட்சி முறை எளிதானதல்ல என்ற விஷயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்துக்கும் இந்திய யூனியனுக்குமான வழக்கின் தீர்ப்பில் (1963) நம் அரசியல் சாசனம் பாரம்பரிய கூட்டாட்சி முறையில் அமைந்ததல்ல எனச் சுட்டிக்காட்டப்பட்டது. 1974ல் ஷம்செர் சிங்குக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையேயான வழக்கின் தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தை “more unitary than federal” எனக் குறிப்பிடப்பட்டது. 1977ல் ராஜஸ்தானுக்கும் இந்திய யூனியனுக்குமான வழக்கின் தீர்ப்பில் கூட்டாட்சியை முன்வைத்து அரசியல் சாசனத்தைக் குறிக்க “amphibian” என்ற சொல்லை நீதியரசர் பெக் பயன்படுத்தினார். 1994ல் எஸ்ஆர் பொம்மை - இந்திய யூனியன் வழக்கில் “pragmatic federalism” என்ற சொல்லை நீதிபதி அஹமதி பயன்படுத்தினார். 2002ல் ஹரியானா மாநிலத்துக்கும் பஞ்சாப் மாநிலத்துக்குமான வழக்கில் “semi-federal” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

*

இன்று மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு தொடர்ச்சியாய் அரசியல் குவிப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. ஜிஎஸ்டி கூட மாநிலங்களுக்கான வரிவிதிப்பு உரிமைகளைப் பிடுங்கும் நடவடிக்கை தான். முழுமையான ஒற்றை ஆட்சியைச் செயல்படுத்தும் அதிபர் ஆட்சி முறையைக் கொணரும் சட்டத் திருத்தத்தையும் மோடி கொண்டு வரக்கூடும் என நடுநிலை அரசியல் நோக்கர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்தியா முழுமைக்கும் - பாராளுமன்றத்துக்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் - ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் பாஜகவின் திட்டம் கூட கூட்டாட்சியை அழித்து ஒழிக்கும் நோக்கில் தான். அப்படி நடக்கையில் மக்கள் தேசியப் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் தந்து வாக்களிக்க வாய்ப்பதிகம் (உதாரணமாய் 1999 முதல் 2014 வரை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 16 சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடந்ததில் வாக்களித்த 77 சதவீதம் பேர் நாடாளுமன்றம் சட்டமன்றம் ஆகிய இரண்டுக்கும் ஒரே கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.) மாநில அரசுக்கு ஒரு மாதிரி, மத்திய அரசுக்கு ஒரு மாதிரி என்று பிரிந்த்துணர்ந்து வாக்களிக்கும் தெளிவு நம் மக்களிடம் இல்லை என்ற பலவீனத்தைப் பயன்படுத்தி இதைச் செயல்படுத்தப் பார்க்கிறார்கள் ஃபாசிஸ்ட்கள்.

இந்தித் திணிப்பு, உணவுப் பழக்கத் திணிப்பு, நீட் திணிப்பு, ஜிஎஸ்டி திணிப்பு, ஆதார் திணிப்பு என பாஜக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றை இந்தியா என்ற கூட்டாட்சிக்கு எதிரான கருத்துருவாக்கத்தை நோக்கிய நகர்வாகவே இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் இதுவரை அமைதி காத்த மாநிலங்களிலும்கூட உரிமைக்கான வேட்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. கர்நாடகத்தில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்படுகின்றன; கேரளத்தில் திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படுகிறது.

இச்சூழலில்தான் விசிக நடத்திய மாநில சுயாட்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: 1) மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்ய ஆணையம் அமைத்திட வேண்டும். 2) இந்தியாவில் அதிபர் ஆட்சிமுறையைத் திணிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும். 3) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். 4) அரசியலமைப்புச் சட்டத்தில் (மாநில அதிகாரங்கள் தொடர்பாய்) திருத்தம் வேண்டும். 5) ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பதவிகள் ஒழிக்கப்படவேண்டும். 6) மாநிலங்களுக்குப் பொருளாதார தற்சார்புநிலையை உருவாக்க வேண்டும். 7) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ரத்து செய்ய வேண்டும். 8) மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 9) நீதி நிர்வாக அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். 10) தேசியப் புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்க வேண்டும். 11) கல்வி தொடர்பான அதிகாரங்களை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திட வேண்டும். 12) இந்தி மற்றும் சமற்கிருதத் திணிப்பைக் கைவிட்டு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.

மேற்கு வங்க வழக்கறிஞரும் ராஜ்யசபா உறுப்பினருமான பிஎன் பேனர்ஜி ஒருமுறை “சாதாரண நேரங்களில் இந்தியா கூட்டமைப்பாகவும், அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஒன்றியமாகவும் இயங்குகிறது” என்றார். இன்று மோடியின் மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களையும் உரிமைகளையும் நசுக்கி ஓர் ஒன்றியமாகத்தான் இந்தியாவை வைத்திருக்கிறது. எனில் நாம் இன்று அவசர நிலையில் இருக்கிறோமா!

***

(உயிர்மை - அக்டோபர் 2017 இதழில் வெளியானது) 

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்