கமல் ஹாசனின் அரசியல்


கமல்ஹாசனின் இருபத்தியிரண்டு ஆண்டு தீவிர ரசிகனாகவும் தமிழக அரசியலில் ஆர்வம், அக்கறை கொண்டவனாகவும் கடந்த ஒரு மாதமாக அவரது அரசியல் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். நான் அறிந்த வரை இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சிறிதும் பெரிதுமாய் 7 நேர்காணல்கள் அளித்துள்ளார். சுமார் இரண்டே முக்கால் மணி நேரம் நீடிக்கும் அந்த நேர்காணல்களின் வழியே துலங்கும் கமல் ஹாசனின் (தற்போதைய) அரசியல் நிலைப்பாட்டினைப் புரிந்து கொள்ளும், முயற்சியாகவே இந்தக் கட்டுரையை எழுதிப் பார்க்கிறேன்.



1. கமல் ஒரு விஷயத்தில் தெளிவாக‌ இருக்கிறார். அது (இப்போதைக்கேனும்) தேசிய அரசியலை முன்னெடுக்காமல் தமிழக அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவது. தேவையில்லாமல் பாஜகவைப் பகைத்துக் கொண்டு இங்கே தன் அரசியல் முன்னேற்றங்களுக்குத் தடங்கல்களைச் சந்திக்க‌ அவர் தயாரில்லை. (கமல் ஹாசன் தான் ஒழுங்காக வரிக் கட்டும் நேர்மையான கொம்பன் ஆயிற்றே, பிறகு எதற்கு அவர் மத்திய அரசுக்கு அஞ்ச வேண்டும்? தவறே செய்யாத ஒருவரைப் பிரச்சனையில் சிக்க வைப்பது இந்தியாவில் ஒரு விஷயமா! இங்கே அதிகாரம் என்பது அதிகாரம் மட்டுமல்ல; அதிகார துஷ் பிரயோகமும் கூட.) அதனாலேயே பண மதிப்பிழப்பு, சகிப்பின்மை போன்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட எல்லாக் கேள்விகளையும் மழுப்பலாகக் கடக்கிறார். அதனாலேயே மக்களுக்கு அவசியமெனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் தயக்கமில்லை என்றும் சொல்கிறார். (கேள்வி பாஜகவுடன் கூட்டணி சம்மந்தப்பட்டது என்றாலும் 'இல்லை' என்ற ஒற்றை நேரடி பதிலாக அல்லாமல் நீட்டி முழக்குகிறார்.) அவர் தமிழக‌த்தை மட்டும் குவிமையமாகக் (focus) கருதுவதில் தவறே இல்லை. அது நிதானமாக எடுத்து வைக்கும் அடியாகவும் தெரிகிறது. ஆனால் அதற்காக இந்த மழுப்பல்கள் எல்லாம் ரொம்பவே ஜாஸ்தி. ஒன்று அக்கேள்விகளைத் தவிர்க்கச் சொல்லி முதலிலேயே சொல்லி விடலாம். அல்லது நேர்காணலின் போதாவது 'நோ கமெண்ட்ஸ்' எனச் சொல்லலாம். அல்லது தைரியமாக "நான் காவிக்கு எதிரானவன், அதனால் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. ஆனால் மாநில நன்மைக்காக மத்திய அரசிடம் பேசுவதில் தயக்கமில்லை." என்று தெளிவாகவே சொல்லலாம். அவர் இப்படி கொழகொழவெனப் பேசுவது அரசியலில் - அதுவும் பேச்சாலேயே வளர்ந்த தமிழக அரசியலில் - செல்லுபடியாகாது என்பதை விட அவருக்கு எதிராகவும் திரும்பும்.  (இன்னொரு விஷயம் தமிழக அரசியலில் மட்டுமே கவனம் குவிக்க விரும்புவவர் டைம்ஸ் நவ், இந்தியா டுடே, சிஎன்என், என்டிடிவி, ரிபப்ளிக் எனப் பிரதானமாக வடக்கிந்தியர்களை உத்தேசித்து இயங்கும் தொலைக்காட்சிகளுக்குத் தன் அரசியல் தொடர்பான நேர்காணல்களை அளிக்க வேண்டும்? 1% தமிழர்கள் கூட அவற்றைப் பார்ப்பதில்லை  தானே!)

2. கமல் தன் இடதும் அல்ல, வலதும் அல்ல, மய்யத்தில் நிற்கிறேன், மக்களோடு நிற்கிறேன் என்று தெளிவாகச் சொல்லி விட்டார். எப்படி தான் தான் காவிக்கு எதிரானவன் என்பதைப் பல இடங்களில் சொல்லி விட்டாரோ, அதே போல் தான் கம்யூனிஸ்ட் அல்ல என்பதையும் சொல்லி விட்டார். நான் இடது பக்கம் சாயல் உள்ளவன் என்பதால் அவரும் எனக்கு உவப்பாய் அதையே சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். வலதின் பிரச்சனைகள் பற்றி அவரும் அவர் படங்களும் ஆங்காங்கே சொல்லி விட்டன‌. அப்படி இடதின் பிரச்சனைகள் என்ன என்பதையும் அவர் சொல்ல முயலலாம். வெறுமனே மக்கள் இடதும் அல்ல, வலதும் அல்ல என்பதால் தானும் அப்படி என்று சொல்வது ஒரு தலைவனுக்குரிய கூறு அல்ல. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி; மக்கள் வழியில் மன்னன் போவதில்லை.

3. சிந்தாந்தரீதியாக இதுவரை அவர் முழுமையாக‌ ஒப்புக் கொண்டிருப்பது தான் பகுத்தறிவுவாதி என்பதை மட்டும் தான். மற்றபடி கம்யூனிஸம், இந்துத்துவம், திராவிடம், தமிழ் தேசியம், தலித்தியம் என எதையும் தன் இஸமாக அவர் சொல்லவில்லை. அது போக, பெரும்பாலும் காந்தியத்தைச் சொல்கிறார். மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரைக் குறிப்பிடுகிறார். அதே சமயம் காந்தியோடும் வேறுபாடு உண்டு என்கிறார். உண்ணாவிரதம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்கிறார். தனக்குப் பிடித்தமான தலைவர்கள் கம்யூனிஸத்தில் உண்டு என்கிறார். எம்ஜிஆரின் அரசியல் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்கிறார். ஓரிடத்தில் - ஒரே இடத்தில் - அம்பேத்கர் பெயரை உச்சரிக்கிறார். இப்போதைக்கு அவரை கம்யூனிசத்திலும் எம்ஜிஆரிஸத்திலும் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன!) ஈடுபாடு கொண்ட‌, பகுத்தறிவு நிறைந்த‌ காந்தியவாதி என்பதாக அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.

4. "கருப்புக்குள் காவியும் அடக்கம்" என்று கமல் சொன்னதில் எந்த விஷமமும் இல்லை. அதை இயற்பியலில் வரும் ஒளியின் தன்மையாகவே நகைச்சுவையாகச் சொல்கிறார். ஆனால் அதில் சிலேடையும் இருக்கிறது. எந்த நிறத்தை உள்வாங்கினாலும் கருப்பிலிருந்து வெளிப்படுவது கருப்பு மட்டுமே. அதே போல் அவரும் இந்துத்துவச் சிந்தாந்தத்தை உள்வாங்கினாலும் தன்னிடம் வெளிப்படுவது பகுத்தறிவு தான் என்று சொல்கிறார். (இது அவரே ஓரிடத்தில் சொல்லும் விளக்கம் தான்.) இங்கே அவர் பன்னிரண்டு வயது வரை தீவிர ஆத்திகனாக இருந்ததையும் சேர்த்து வைத்துப் பார்க்கலாம். ஆக, அவர் சொன்னதை "கருப்புக்குக் காவியும் அடங்கும்" என்று தான் மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.

5. தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஊழலற்றது அல்ல, அதனால் தனிக்கட்சி துவங்குவேன் என்கிறார். இது எனக்குப் புரியவில்லை. அதிமுக, திமுக இரண்டும் தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றன. அவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. காங்கிரஸ் மத்தியில் செய்த ஆட்சிகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் அனேகம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை எப்படி ஊழல் கட்சிகள் ஆயின? அவர்கள் ஊழல் செய்ய இன்னும் வாய்ப்பே கிடைக்கவில்லையே! தன்னை எவரும் முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டார்கள், அதனால் அக்கட்சிகளில் சேரவில்லை என்று சொல்லலாம். அது நியாயமான காரணம் தான். அவ்வளவு நேர்மை அரசியலுக்கு ஆகாது என நினைத்தால் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன என்றாவது சொல்லலாம். மற்றபடி, தமிழகத்தில் எல்லோருமே ஊழல்காரர்கள் என்று மட்டையடியாகச் சொல்வதில் நியாயம் இல்லை.

6. கேரள முதல்வர் பிணராயி விஜயனை மட்டும் தான் தானே விரும்பிப் போய்ச் சந்தித்தேன் என்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவராகவே சென்னை வந்து தன்னைச் சந்தித்தார் என்கிறார். மம்தா பேனர்ஜியைச் சந்திக்கவிருப்பதாக வரும் செய்திகள் வதந்தி என்கிறார். தலைவர்களைச் சந்திப்பதன் காரணம் அவர்களிடம் அரசியல் பாடம் கற்க என்கிறார். ஓர் உதாரணமாய் கட்சிக்கான பணத்தை மக்களிடமே பெறுவதைப் பற்றிச் சொல்கிறார். ஆக, இந்தச் சந்திப்புகள் முழுக்க எந்த அரசியல் கூட்டணி அல்லது கட்சியில் இணைதல் நோக்கங்களும் இல்லாது கமலுக்கான அரசியல் ஆலோசனைகள் வழங்குவதன் / கேட்டுக் கொள்வதன் பொருட்டே நடந்திருக்கின்றன எனப் புரிந்து கொள்கிறேன்.

7. கலைஞரிடம் தனக்கு நெருக்கம் உண்டு, அவர் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க சுதந்திரம் அளித்தார் என்று சொன்னாலும் ஜெயலலிதா விஸ்வரூபம் வெளீயீடு விஷயத்தில் ஃபாசிஸ்டாக நடந்து கொண்டார் என்று சொன்னாலும் கலைஞர், ஜெயலலிதா இருவருமே ஊழல்வாதிகள் என்று ஒரே இடத்தில் வைக்கிறார். எடப்பாடி சேகுவேரா போன்றவர் என்று யாரோ அதிமுக அமைச்சர் சொல்வதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை என்று நான் கமலையும் அமைச்சரையும் ஒரே தட்டில் வைத்துச் சொன்னால் கமலுக்குக் கோபம் வராதா! இருவரையும் ஒரே தட்டில் வைப்பது எல்லாம் இன்று, நேற்று இணையத்தில் முளைத்த பச்சாக்களின் கருத்தியல். கமலும் அதையே சொல்வது ஏமாற்றம் தான். கலைஞர் ஜெயலலிதாவை விட எங்கனம் மேலானவர் என்று சொல்லி விட்டே, அவர் ஊழல்வாதி என்ற குற்றச்சாட்டையும் வைக்கலாம், திமுகவிடமிருந்து தள்ளியும் இருக்கலாம். எப்படி ஒருபுறம் பாஜகவைப் பற்றி தவறாக ஏதும் சொல்லாமல் ஜாக்கிரதையாக‌ மழுப்புகிறாரோ, அதே போல் இன்னொருபுறம் கலைஞர் பற்றி நல்லது ஏதும் சொல்லாமல் நழுவுகிறார்.

8. தனிக் கட்சி தான் தொடங்குவேன், அப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தான் சொல்கிறார். யாரை உடன் சேர்த்தாலும் கறைபட்ட தரப்பாகி விடும் என்பதே அவரது நிலைப்பாடு என்பதாகப் புரிந்து கொள்கிறேன். (அப்படிக் கூட்டணி வைக்கும் தகுதியில் கட்சிகள் இருந்தால் அவற்றில் சேர்ந்து விட மாட்டேனா என்பது அவரது பதிலாக இருக்கக்கூடும்.) எல்லாம் சரி தான். ஆனால் அப்படி நிற்கும் போது வெற்றியின் நிகழ்தகவு என்ன? இது எவ்வளவு தூரம் கள யதார்த்தத்தில் (ground reality) சாத்தியமாகும் எனப் புரியவில்லை.இது வழக்கமான திமுகவுக்கு அதிமுகவுக்கு மாற்றாக யாரும் வர முடியாது என்ற discouraging வாதம் அல்ல. அப்படி முயன்ற தேமுதிக முதலிய கட்சிகளின் / மநகூ முதலிய கூட்டணிகளின் இன்றைய நிலையைக் கணக்கில் கொண்டு அவரது தொலைநோக்குத் திட்டம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள விழைகிறேன். ஒரு பேச்சுக்கு 2018ல் சட்டமன்றத் தேர்தல் வருகிறது என வைத்துக் கொண்டால் அதில் "குறைந்தபட்சம்" 25 தொகுதிகளாவது வெல்வது நோக்கமாக இருந்தால் நல்லது. அதாவது 10% வாக்கு வங்கியைக் குறி வைப்ப்பது. அது மாதிரியான இலக்குகள் (targets) ஏதும் இருக்கிறதா என இதுவரை தெளிவில்லை. அவர் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லும் roadmap-ல் இதுவும் இருக்கும் எனக் கருதுகிறேன். பார்ப்போம்.

9. கமல் யாருடன் அரசியல் ஆலோசனைகள் செய்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு நட்பாய் பல நல்ல கலைஞர்கள் இருக்கலாம். உறவுகளின் வழி சில திறமையான‌ வழக்கறிஞர்கள் கூட‌ இருக்கலாம். ஆனால் அரசியல், சமூக, பொருளாதார, நிர்வாக வல்லுநர்களை தன் நுழைவு பற்றிய கலந்துரையாடல்களில் இணைத்துக் கொள்வது அவசியம். (எனக்குத் தெரிந்து அப்படியான திறன் கொண்டு அவருக்கு நெருக்கமாக இருப்பவர் பிஏ கிருஷ்ணன் ஒருவர் தான். ஆனால் அவஅவரால் குறிப்பிட்ட எல்லை வரையிலான‌ ஒரு பார்வையை மட்டுமே அளிக்க முடியும். ஒரு திறமையான, கலவையான‌ குழு இருப்பதே நல்லது.) அவர் மகள்களின் அலோசனைப்படி நடக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஏழாம் அறிவு படத்தில் ரிசர்வேஷன் நாட்டைக் கெடுத்து விட்டது என்று தன் சொந்த வசனத்தைச் சேர்த்த ஷ்ருதி ஹாசனால் என்ன அரசியல் ஆலோசனை நல்க முடியும் கமலுக்கு எனப் புரியவில்லை. என் கேள்வியை இப்படியும் புரிந்து கொள்ளலாம்: கமல் கட்சியின் கருத்தியல்களின் உருவாக்கத்தில் பங்கு வகிக்கப் போவோர் யார்?

10. தொடர்புடைய இன்னொரு விஷயம். சினிமா ஆக்கத்தில் கமல் இயக்குநராக இல்லாத படங்களில் கூட அவர் தலையீடு எல்லாத் துறைகளிலும் இருக்கும் எனக் கேள்வி. பொதுவாக அவர் யாருடைய ஆலோசனையையும் மதித்துக் கேட்க மாட்டார் என்று ஒரு பிம்பமும் இருக்கிறது. ஓரளவு அதை நான் நம்புகிறேன். ஆனால் அதே மனப்பான்மையைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கும் வந்தால் அவரை விட ஆபத்தானவர் யாரும் இல்லை. அது ஒரு சர்வாதிகாரியையே உருவாக்கும். ஜெயலலிதா போல், மோடி போல், இந்திரா போல். (இந்திரா காந்தியின் திறனை வேறு ஒரு நேர்காணலில் சிலாகித்தார், அவசர நிலைப் பிரகடனம் கொண்டு வருமளவு நேருவிடமிருந்து அரசியல் கற்றிருந்தார் என.) துறைசார் வல்லுனர்களின் கருத்துக்கள், அறிவுஜீவிகளின் நிலைப்பாடுகள், களப்பணியாளர்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் ஒரு நல்ல தலைவன் கணக்கில் கொள்ள வேண்டும். மக்களாட்சியின் மிகப்பெரிய பலம் அது தான். (ஆலோசனை சொல்லும் இடத்தில் முட்டாள்கள் இருந்து விட்டால் இன்னும் ஆபத்து. அது தான் விஜயகாந்த்துக்கு நடந்தது.) கமலின் மனப்பழக்கம் அதற்கு அனுமதிக்குமா எனத் தெரியவில்லை. (இந்திராவுக்கு நேரு போல் தனக்கு யாரும் இல்லை என்றார். ஆனால் அதை ஆதங்கமாகச் சொன்னாரா சுயம்புவாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் கர்வத்துடனா என ஊகிக்க முடியவில்லை.)

11. கமல் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் யார்? கட்சியின் முதுகெலும்பாக விளங்கப் போவது அவர்களே. இத்தனை தோல்விக்குப் பிறகும் திமுக வலுவாய் நிற்பதற்கு முக்கியக் காரணம் அதன் இரண்டாம் மட்டத் தலைவர்கள். 27 எம்எல்ஏக்கள் பெற்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவராய் உட்கார்ந்தும் தேமுதிக நாசமானதற்குக் காரணம் அத்தகைய தலைவர்கள் அக்கட்சியில் இல்லாததே. இன்னொரு கோணத்தில் நாளை கமலின் கையில் அதிகாரம் வாய்த்தாலும் அவர் மட்டும் நேர்மையாய், தெளிவாய் இருந்தால் போதாது. இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கும் அவை வேண்டும். கமலின் நேர்காணல்களிலிருந்து இதற்கு இரண்டு விதமான பதில்கள் இந்தக் கேள்விக்குக் கிடைக்கின்றன: (i) மக்கள் நலனில் அக்கறை கொண்ட எவரென்றாலும். (ii) தமிழகமெங்கும் அவரது ரசிகர் நற்பணி மன்றப் பொறுப்புகளில் இருப்பவர்கள். முதலாவது ஓரளவு எடுபடும். ஆம் ஆத்மி கட்சி தில்லியில் அப்படித் தான் (முதல் முறை மட்டும்) உருவாகி எழுந்தது. அவர்ககளுக்குள் சண்டையின்றி மேய்ப்பது பெரிய வேலை என்றாலும் அந்த ரிஸ்க்கை எடுத்துத் தான் ஆக வேண்டும். இரண்டாம் வகையினர் பற்றிக் குழப்பங்கள் இருக்கின்றன. 2000ம் ஆண்டுக்குப் பின் கமல் ஹாசனின் ரசிகர் மன்றங்களில் அவ்வளவாய்ப் புதியவர்கள் இணைந்திருப்பார்களா எனச் சொல்ல முடியவில்லை. ஆக, இன்று அந்தப் பொறுப்புகளில் இருப்போர் பெரும்பாலும் சுகர் பேசண்ட்களாய் இருக்கவே வாய்ப்புண்டு. அவர்கள் நல்லவர்களாகவும், நல்ல ரசனை கொண்டவர்களாக‌வும் இருக்க நிறைய வாய்ப்புண்டு என்றாலும் அரசியல் புரிதலோ, நிர்வாகத் திறனோ இருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களை விட்டு விடவும் முடியாது. கமல் ஹாசன் கட்சி ஆரம்பிப்பதே பிரதானமாய் அவர்களை நம்பித்தான். அந்த முதலீட்டுக்கு ஏதாவது பிரதிபலன் நிச்சயம் எதிர்பார்ப்பார்கள். கமல் அதைப் பிழை சொல்லவும் முடியாது. அல்லது இந்த இரண்டு பிரிவிலும் பேலன்ஸ் செய்து ஆட்களை வைத்துக் கொள்வாரா!

12. கமல் பெரும்பாலான‌ கேள்விகளுக்கு தான் சந்தித்த சினிமா அனுபவங்களைச் சொல்லியே பதில் அளிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தீவிர‌ ரசிகனான எனக்கே அரசியலை முன்வைத்த உரையாடல்களில் அது அலுப்பூட்டுகிறது, ஏமாற்றமளிக்கிறது. அரசியல் பற்றி அதிகபட்சம் தன் வீட்டுக்கு ராஜாஜியும், காமராஜரும் வந்ததை மட்டுமே சுட்டுகிறார். கமல் வெறும் நடிகராக மட்டும் இருந்த போது அவரது நேர்காணல்களை ரசித்ததன் காரணம் அவர் மற்ற நடிக, நடிகையர் போல் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று அறுத்தெடுக்காமல் சினிமா தாண்டி சுவாரஸ்யமாக, அறிவுப்பூர்வமாகப் பேசினார். அதனால் அவர் அரசியலுக்கு வரும் போது அதையே அரசியலுக்கு நீட்டித்து நாம் எதிர்பார்ப்பது இயல்பே. தவிர‌, செய்திச் சேனல்கள் பெருவி விட்ட இன்றைய நவ‌யுக ஊடக‌ உலகில் ஒரு வட்டச் செயலாளர் கூட தன் கட்சியின் சார்பில் விவாத‌ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தரவுகளை முன்வைத்து அரசியல் பேச வேண்டி இருக்கிறது எனும் போது கமலின் பேச்சுகளில் அது தொடர்பான போதாமையை உணர்கிறேன். என் தனிப்பட்ட எதிர்ப்பார்ப்பு கமல் சினிமா பற்றிய பேச்சைக் குறைத்துக் கொண்டு அரசியலை முன்வைத்து அறிவுப்பூர்வமாய்ப் பேச வேண்டும் என்பதே.

13. அவர் ட்வீட்கள் அனாவசியத் திருகலுடன் இருக்கின்றன என்பதை நானே ஒப்புக் கொள்வேன் என்றாலும் கமலின் பேச்சு எனக்குப் பிடிக்கும். மிகப் பிடிக்கும். ஆனால் என் போன்றவர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும். கொஞ்சம் திமிராகச் சொல்ல வேண்டுமெனில் அறிவுரீதியான எலைட் ஆசாமிகளுக்கு மட்டுமே அவர் பேச்சு உவப்பாக இருக்கும். அவர்கள் மொத்த ஜனத்தொகையில் அதிகபட்சம் 5% இருக்கலாம். மற்றபடி மீதம் எல்லோரும் கமல் பேசுவது புரியவில்லை எனக் கடந்து போய் விடுகிறார்கள். உண்மையில் அவர் பேசுவதில் புரியாமல் போக பெரும்பாலும் ஏதும் இருப்பதில்லை. வேண்டியது கொஞ்சம் சிரத்தையான கவனிப்பு மற்றும் குறைந்தபட்ச சிந்தனைத் திறன். அஃது நம் தேசத்தில் பெரும்பாலானோருக்கு இல்லாததால் தான் இந்தப் பிரச்சனை. கமலின் இன்றைய பேச்சின் வடிவம் பொரு வெகுஜன அரசியல் இயக்கத்துக்கு பொருந்தி வரக்கூடியதில்ல. அதை அவர் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். அவர் இப்படிப் பேசவே கூடாது என்பதல்ல. (அப்புறம் நாங்கள் எங்கே போவதாம்!) ஆனால் நாய் வேடமணிந்தால் குறைத்தாக வேண்டும் என்பதாய் அரசிய‌லுக்கு உரிய பேச்சுக்கலையை அவர் கற்றுக் கொள்வது தவிர்க்க முடியாதது. இதற்கான நல்ல சமகால உதாரணம் திருமாவளவன். நேர்காணல்களில் வெளிப்படும் திருமாவளவன் வேறு, மேடைப்பேச்சுகளில் வெளிப்படும் திருமாவளவன் வேறு. அரசியலுக்கு உரிய தேவை என்ன என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார். கலைஞர் பேச்சினால் மட்டுமே இத்தனை கோடி பேரை ஈர்த்தார். எம்ஜிஆருக்கு பேச்சுத் திறமை தேவைப்படவில்லை. அவர் தன் தோற்றத்தாலும், உடல் மொழியாலுமே மக்களைக் கவர்ந்து விட்டார். கமலுக்குப் புகழ் தந்த ஒரே உடல் மொழி முத்தம் தான் என்பதால் அது அரசியலில் செல்லுபடியாகாது என்பதால் அவர் மக்களை ஈர்க்கும் பேச்சுக்கலையை கற்க‌ வேண்டியதாகிறது. (பிக்பாஸ் நிகழ்ச்சியின் anchor-ஆக கமல் பேசியது ஓரளவு இதற்குப் பக்கத்தில் வருகிறது என்று சொல்லலாம். ஆனால் அது பெரும்பாலும் வழிநடத்தப்பட்ட ஒன்று. ஒரு வட்டத்துக்குள் நின்று விட்ட‌ ஒன்று.)

14. அரசியலில் வெற்றி பெற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பல இடங்களில் நேர்மை என்ற பதிலையே சொல்கிறார். அது உண்மையில் நேர்மையான பதிலும் கூட. அவர் அதையே தனக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசமென முன்வைக்கிறார் எனப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது வித்தியாசம் தானே ஒழியே வெல்லுமா? ஊழல் ஒழிப்பு என்பது முடிந்தவுடன் (ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்) அதற்கான முக்கியத்துவம் போய் விடும். அதன் பிறகு சித்தாந்த பலம் அவசியம். தனக்கான இசங்கள் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வது அடையாள அரசியலிலிருந்து தான் விலகி இருப்பதை மக்களுக்கு உணர்த்த என அவர் கருதினாலும் ஒருவகையில் பலவீனம் தான். அவரது கட்சிக் கொள்கைகளின் அறிக்கை இவற்றை எல்லாம் தீர்க்கும் என நம்புகிறேன்.

15. கமல் நேர்மையான ஆட்சி தருவார் என ஏன் நம்புகிறேன்? இரண்டு காரணங்கள். ஒன்று அவர் இன்று வரை கருப்புப் பணத்தில் ஈடுபடாமல் நேர்மையாக வருவான வரி கட்டி வருகிறார் என்பது. ஜி படம் பாடாவதி என்றாலும் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் எனக்குப் பிடித்தமானது. மக்களுக்கு நல்லது செய்து விட்டு மக்களிடம் போய் ஓட்டுப் போடுங்கள் எனக் கேட்பார்கள். அவ்வகையில் ஏற்கனவே முப்பது ஆண்டுகளாக நேர்மையாக இருக்கும் ஒருவர் ஓட்டுக் கேட்கிறார் என்பதால் புதிதாய் அவர் சம்பாதித்து ஆகப் போவது ஒன்றுமில்லை என்ற அடிப்படையில் அவரை நம்புகிறேன். இரண்டாவது காரணம் எண்பதுகளில் கமலின் முன் இரு பாதைகள் இருந்தன. ரஜினி போல் நோகாமல் சூப்பர் ஸ்டார் ஆவது. நிதி சார்ந்த ரிஸ்க்கள் எடுத்து எல்ல கலைஞன் எனப் பெயர் எடுப்பது. அவர் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார். அந்தத் தேர்வு தான் அவர் அரசியலிலும் சவால் நிறைந்த நேர்மையான பாதையையே எடுப்பார் என நம்பவும் காரணம். அவரே அதை தான் செல்லும் அரசியல் முட்கிரீடம் என இரண்டு மூன்று இடங்களில் சொல்லி ஒப்புக் கொள்கிறார். அதனால் அவர் அரசியலுக்கு வந்தால் "முடிந்த அளவு" நேர்மையாக இருப்பார் என்றே நம்புகிறேன். முடிந்த அளவு என்றால்? ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவாலை விட, கம்யூனிஸ்ட்களை விட என வைத்துக் கொள்ளுங்களேன்.

16. அரசியலுக்கு வந்தால் சினிமாவில் கவனம் செலுத்த மாட்டேன் என்று சொல்வது அவரது திரை வெறியனாக எனக்குக் கடும் கசப்பை அளித்தாலும் அது தான் அவரது அரசியல் பணிகளுக்கு நியாயம் செய்யும் சரியான முடிவாக இருக்கும். அவரே சொல்வது போல் இரட்டைப் படகில் சவாரி செய்தல் சிரமம். இதை மத்திய‌ நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நிதி தவிர்த்த மூன்று துறைகளைக் கவனித்த‌தால் தான் நிதி நிர்வாகம் பல்லிளிக்கிறது என்று சமீபத்தில் முன்னார் நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா விமர்சனம் செய்திருப்பதை இதோடு ஒப்பு நோக்கலாம். ஒரு வேலை நேர்த்தியாய் முடிய Quality Time அதற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற முதிர்ச்சியான‌ புரிதல் கமலுக்கு இருப்பது முக்கியமானது.

17. ஜெயலலிதா மறைந்து, கலைஞர் நலங்குன்றி இருக்கும் சூழலின் வெற்றிடத்தை (அது உண்மையில் வெற்றிடமா என்ன? ஸ்டாலின், திருமா எல்லாம் தொக்கா!) பயன்பட்டுத்திக் கொண்டு அரசியலுக்கு வருகிறீர்களா என்ற கேள்வி திரும்பத் திரும்ப கமலிடம் கேட்கப்படுகிறது. அவர் அதை மறுத்து நான் 30 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் என்ற சம்மந்தமே இல்லாத‌ பதிலைச் சொல்கிறார். அந்தக் கேள்வியே நேரடி அரசியல் பங்களிப்பைப் பற்றியது எனும் போது எவ்வளவு முறை தான் அதே பதிலைச் சகிப்பது? (முதல் முறை அதை சில வருடங்கள் முன் அவர் சொல்லிக் கேட்ட போது ரசிக்கும் படி நன்றாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து விடாமல் எல்லா இடங்களிலும் அதையே சொல்வது எரிச்சலூட்டுகிறது.)  தவிர, அங்கே அந்தக் கேள்வியின் நோக்கம், தகவல்பூர்வமான ஒரு பதிலைப் பெறுவது தானே ஒழிய‌ கமலின் புத்திசாலித்தன பதிலைப் பெறுவதல்ல. அதனால் அவர் அதற்கு மழுப்பாமல் நேரடியாகவே பதில் சொல்வதே முறை. என் புரிதல் அவர் இதை வெற்றிடம் என்று எண்ணி, அதை நிரப்பும் உத்தேசத்தில் தான் இப்போது வெளிவருகிறார். அதிமுகவின் மோசமான நிலை அவர் நுழைவை நியாயப்படுத்துகிறது. இத்தனை வெளிப்படையாகச் சொல்லத் தேவையில்லை என்றாலும் அக்கேள்வியை இன்னும் கொஞ்சம் தீவிரமாக எதிர்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் சுட்டுவிரல் மையைச் சுட்டி முப்பதாண்டு என்று சொல்வது சுத்தமாகப் பொருந்தவே இல்லை.

18. ரஜினியின் அரசியல் நுழைவு பற்றி திரும்பத் திரும்ப கமலிடம் (குறிப்பாய் வட இந்திய ஊடகங்கள்) கேட்கப்படுகிறது. அது அவர்கள் டிஆர்பியை உத்தேசித்தது. ரஜினி ஒரு போதும் அரசியலுக்கு வரப் போவதில்லை. அதற்கான திராணியோ திறமையோ அவருக்கு இல்லை. கமல் அக்கேள்வியை நன்றாகவே கையாள்கிறார். நண்பராக அவரிடம் தன் வருகையைத் தெரியப்படுத்தி இருக்கிறேன் என்கிறார். அவர் விரும்பினால் இணைத்துக் கொள்வேன், அவருக்கும் மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்கிறார். இருவரும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் என்று ஒப்புக் கொண்டாலும் அவரது காவிச் சாய்வு குறித்த கேள்விக்கு அதைத் தான் சொல்ல முடியாது என விலகுகிறார். ரஜினியின் இருப்பு தன் கட்சியில் தன் ஈகோவைக் காயப்படுத்தாத அளவில் மட்டும் கமல் ரஜினியை வரவேற்பார் எனத் தோன்றுகிறது. அதற்கான காரணம் கூட நீண்டகால நட்பு, மக்கள் நலன் என்பதை எல்லாம் விட ரஜினியின் மார்க்கெட் காரணமாகவே என்றும் எண்ணுகிறேன்.

19. சமீபத்தில் வாக்குரிமை பெற்றோர், விரைவில் ஓட்டுரிமை பெற இருப்போர் என 17 முதல் 20 வயது இளைஞர்களைத் தான் கமல் குறி வைக்கிறார். அதுவும் ஆம் ஆத்மி பாணி தான். அவர்களே ஆர்வக்கோளாறாய் இருப்பார்கள். ஐஐடிகாரர்கள் நின்றாலும் ஆதரிப்பார்கள், மநகூ வந்தாலும் ஆதரிப்பார்கள், கமல் வந்தாலும் ஆதரிப்பார்கள். ஆக, அவர்களைக் கட்சியில் இணைத்துக் கொள்ளவும், அவர்களின் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் அள்ளவும் அவர் உழைப்பார் எனத் தெரிகிறது. இப்போதைக்கு அவரது தேர்தல் அரசியல் யுக்தியாக‌ (strategy) அது மட்டும் வெளிப்பட்டிருக்கிறது.

20. நேர்காணல் செய்வோர் அனைவரும் (குறிப்பாய் வட இந்திய ஊடகங்கள்) மிகுந்த பதற்றத்துடன் கேட்ட கேள்வி எப்போது வருகிறார் என. ஒருவர் 30 நாளா, 60 நாளா, 90 நாளா எனக் கெடு கொடுக்கிறார். இன்னொருவர் 100 நாளில் வருவாய் என எடுத்துக் கொள்ளலாமா எனக் கழுத்தை இருக்கி ஆமாம் என வாங்கி அதைத் தலைப்புச் செய்தியாய்ப் போடுகிறார். நீ கேட்பதற்காக எல்லாம் அந்த நாளில் வர முடியாது என்ற கமலின் பதிலிருந்து அவர் தன் வருகைக்கு அவசரப்படவில்லை எனப் புரிகிறது. அது நியாயமும் கூட. வைகோ ஏன் தோற்றார்? அவர் 1991ம் அல்லாமல் 1996ம் அல்லாமல் இடைப்பட்ட காலத்தில் மதிமுகவைத் தொடங்கி, கொழுந்து விட்டெரிந்து தேர்தல் வருகையில் அணைந்து போயிருந்தார். விஜய்காந்த் ஏன் வென்றார்? அவர் தேமுதிகவை 2006 தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் தொடங்கினார். அந்தச் சூட்டோடு தேர்தலில் நின்று கிட்டத்தட்ட 10% ஓட்டு வாங்கினார். ஆக, எப்போது கட்சி தொடங்க வேண்டும் என்பதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இன்று கமல் எப்போது கட்சி தொடங்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் கமலிடம் இல்லை என்றே சொல்வேன். ஆட்சி கலைந்து, ஆறு மாதத்துக்குள் தேர்தல் வந்தால் உடனே தொடங்குவதில் பொருள் இருக்கிறது. அதற்காக முழுக்க ஆறப் போடவும் முடியாது. அந்த சமநிலையைப் பேணுவது ஒரு சவால். அவசரப்படாமல் அணுகுவதிலிருந்து கமல் சரியான பாதையில் தான் இருக்கிறார் என்று சொல்ல முடிகிறது.

21. கமல் தான் இன்று தமிழகத்தில் முதல் பிரச்சனையாகக் கருதுவது ஊழல் தான் எனச் சொல்கிறார். அதாவது அது தான் இருப்பதிலேயே பெரிய பிரச்சனை என்றல்ல. மற்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் முன் தடையாக இது இருக்கும் என்கிறார். அதில் எனக்குக் குழப்பங்கள் இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை என நினைக்கிறேன். அல்லது ஆம் ஆத்மி பாணியில் ஊழலையே பெரிய பூதம் எனக் கட்டமைத்து அதற்கு ஆதரவைப் பெருக்கி அதன் மூலம் ஆட்சிக்கு வருவது அவர் திட்டமாய் இருக்கலாம். அதுவும் தவறில்லை. அதற்கு அடுத்த பிரச்சனைகள் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றைச் சொல்கிறார். (சமூக நீதியைக் குறிப்பிடவில்லை.) எப்படியோ அவர் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லி மட்டும் அரசியல் பேசவில்லை. அதைத் தாண்டி நிறையப் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார், அவற்றையும் ஒழிப்பது தன் வேலை எனக் கருதுகிறார் என்பது வரை நல்ல விஷயம் தான்.

22. ஊழல் என்றால் எதைக் குறிப்பிடுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. அரசியல்வாதி ஊழல் செய்தால் ஐந்து வருடத்தில் தூக்கி எறிந்து விடலாம், ஆனால் ஐஏஎஸ் அதிகாரி ஊழல் செய்தால் ஆயுளுக்கும் நீடிக்கும் என்கிறார். மக்கள் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவதையும் குறிப்பிடுகிறார். ஆக, ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்ற ஒற்றப்படையான புரிதலுடன் அவர் வரவில்லை. வேர் வரை புரிந்து தான் இருக்கிறது. ஆக, அவரது ஊழல் ஒழிப்பு என்பதை எல்லா மட்டங்களிலும் ஊழலைக் களைவது என்றே புரிந்து கொள்கிறேன். அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். அதற்கான செயல் திட்டன் என்னவாய் இருக்கும் என்பதை அறியவும் ஆவல் கொண்டிருக்கிறேன்.

23. மக்கள் ஐயாயிரம் வாங்கிக் கொண்டு ஐந்தாண்டுகளுக்கான தன் வாக்கை விற்பது லாபகரமான வியாபாரமல்ல; மாறாய் நல்ல கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு அதை விட அதிக பலன் பெறலாம் என்கிறார். அதாவது மக்கள் நலன் கொண்ட கட்சிகள் ஊழல் செய்யாமல் மாநிலத்தின் கட்டுமானத்தை உயர்த்தும், நலத்திட்டங்கள் மூலம் நன்றாகச் சம்பாதிக்கும்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பதாய்ப் புரிந்து கொள்கிறேன். ஆனால் மக்களின் மனநிலை நாளைக்குக் கிடைக்கும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கலாக்காயே மேல் என்பதாக இருக்கிறது. அதை உடைத்து கோடிக்கணக்கான மக்களின் மனநிலையை எப்படி கமல் மாற்றப் போகிறார் என்பதும் மலைப்பாய் இருக்கிறது.

24. கட்சி நடத்த, குறிப்பாய் தேர்தல் அரசியலில் பங்கேற்க பணம் தேவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு மக்களிடம்  இருந்தே பெறுவேன் எனச் சொல்கிறார். காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுக் கொண்டிருந்தவர்களை, காசு வாங்காமல் ஓட்டுப் போடு என்று மாற்றுவதே சிரமம் எனும் போது காசும் கொடு, ஓட்டும் போடு எனக் கேட்டும் model எப்படிச் சாத்தியப்படும்? ஆக, இதைப் பணம் படைத்த உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இருந்து நிதி பெறுவது எனப் புரிந்து கொள்கிறேன். அதாவது மக்கள் நலன் மட்டுமே நோக்கமாய்க் கொண்டு பிரதிபலன் பாராத நிதி உதவி (ஓரளவு ஆம் ஆத்மி பாணியிலானது). இன்னொரு வகையில் இப்படியான நிதி உதவி சாத்தியப்படும் போது அவ்வாறு கொடுத்தோர் அனைவரும் தவறாமல் கமலுக்கே வாக்களிப்பர் என்பது நிஜமே.

25. கமல் சினிமாவில் தோற்றதால் தான் அரசியலில் இறங்குகிறார் என்ற வாதம் அபத்தமானது. இரண்டு அடிப்படைகளில் இதைப் பார்க்கலாம். ஒன்று கமல் சினிமாவில் ஒழிந்து போகவில்லை. இப்போதும் வருடம் இரண்டு படங்கள், அதுவும் லாபம் தரக்கூடிய படங்கள் என்று அவரால் செய்ய முடியும். அவர் நடித்தாலே வெற்றி என்ற நிலை இல்லை (அது எப்போதும் இல்லை என்றே நினைக்கிறேன்) என்றாலும் அவரை நம்பிப் பணம் போட ஆட்களே இல்லை எனக் கட்டமைக்கப்படும் பிம்பம் பொய். ஆக, அவர் தோற்றுப் போன நடிகர் என்று சொல்வது ஒருவகை வக்கிர விருப்பம் மட்டுமே. அடுத்ததாக‌ கமலை 100 கோடி ரூபாய் பேரத்துடன் ஓர் அரசியல் கட்சி பத்தாண்டுகள் முன்பே இழுக்க முயற்சித்தது. அதற்கு கமல் செவி சாய்த்தாரில்லை. (அப்போது  இருந்ததற்கும் இப்போதைக்கும் கமலின் business graph-ல் எந்தப் பெரிய மாற்றமுமில்லை.) தவிர, அவர் வாழும் முறையைப் பார்க்கும் போது அரசியலுக்கு வந்து காசு சம்பாதித்து அதைக் கொண்டு சொத்து சேர்க்கும் திட்டத்தில் இருப்பது போலவும் தெரியவில்லை. அப்படியான திட்டத்தில் இருப்பவர் அதிகம் சிரமம் எடுக்காமல் பாஜக போன்ற புளியங்கொம்பைப் (பண பல அடிப்படையில்) பற்றிக் கொள்ளலாம். நிச்சயம் மாநிலத் தலைமைப் பதவியும் நிறைய தொகையும் தருவார்கள். ஆனால் கமல் அதைச் செய்யவில்லை. தவிர, அரசியல் வந்தாலே வெற்றி என்றில்லை, அதன் நிலையின்மை சினிமாவைக் காட்டிலும் ஜாஸ்தி. யாரோ ஒரு எடப்பாடியை ஒற்றை இரவில் உச்சத்தில் ஏற்றும்; சாணக்கியரான‌ கலைஞரைக் கூட பத்தாண்டுகள் வீட்டில் உட்கார வைக்கும். அதனால் சினிமாத் தோல்விக்கு ஒருபோதும் அரசியல் புகலிடம் ஆகாது. அதனால் இந்தக் குற்றச்சாட்டை கமல் தான் முன் வந்து பேசி மறுக்க வேண்டும் என்பதில்லை. தர்க்கப்பூர்வமாய்ச் சிந்திக்கும் எவரும் தாமாய்ப் புறந்தள்ளி நகரலாம்.

26. கமல் வந்தால் கண்டிப்பாக இப்போது இருக்கும் கட்சிகளை விட நிச்சயம் மேலானதாகத் தான் இருக்கும் என்ற மேலோட்ட நம்பிக்கையில் கமலை ஆதரிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் பாவம் பார்க்கும் இடத்தில் வைத்து கமலைப் பார்ப்பது அவரை அவமதிப்பது என்றே சொல்வேன். இன்றும் நான் திமுக ஆதரவாளன் தான். திமுக மீதான விமர்சனங்கள் இருந்தாலும் வேறு வழியின்றி, இருப்பதில் அதுவே நல்லது என்று கருதும் காரணத்தால் அதை ஆதரிக்கிறேன். கமல் ஹாசனையும் அப்படிக் கருதி ஆதரிக்கும் நிலை வந்து விடக்கூடாது என்பது தான் என் ஆதங்கம். கமல் ஹாசனைத் தெளிவான மாற்றுத் தரப்பாக, உணர்ச்சிகரம் தாண்டி தர்க்கக் காரணங்களுடன் ஆதரிக்கும் நிலை இருக்க வேண்டும். அது தான் கமல் மாதிரியான ஓர் அறிவுஜீவி அரசியலுக்கு வருவதன் நற்பலனாக இருக்க முடியும். விஜய்காந்த் அரசியலுக்கு வந்த போது எனக்கு ஒரு மெல்லிய நம்பிக்கை இருந்தது. ஆனால் அதைத் தாண்டி அந்தச் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் மீதான அபிமானத்தில் திமுகவுக்குத் தான் வாக்களித்தேன். அப்படியான "மெல்லிய நம்பிக்கை" மட்டுமே இப்போதைக்கு எனக்கு கமலின் மீது இருக்கிறது. கமல் ஒரு வலுவான  கட்சிக் கொள்கைகளுடன் (manifesto) வரட்டும். தன் கட்சியின் இரண்டாம் மட்டம் யாரெனத் தெளிவுபடுத்தட்டும். பிறகு அவரை முழு மனதுடன் ஆதரிப்பதைப் பார்க்கலாம். இப்போதைக்கு அத்தகையதொரு வரவு பற்றி கனவு மட்டுமே காண முடிகிறது.

27. சில மாதங்கள் முன் என்னைக் கேட்டிருந்தால் மிகுந்த உற்சாகத்துடன் கமலை அரசியலுக்கு எதிர்பார்ப்பதைப் பகிர்ந்திருப்பேன். ஆனால் இந்த ஒரு மாதத்தில் கமலிடம் அடிப்படையில் ஒரு தெளிவின்மை இருக்கிறது என்பதை உணர்கிறேன். அது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. அதனால் என் வேகம் மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால் இது முடிவல்ல. இந்த மாதத் தொடக்கத்தில் ரிபப்ளிக் டிவிக்கு அளித்த பேட்டியில் கமல் தான் கட்சி தொடங்க மாட்டேன் என்றும் தேர்தல் அரசியலில் பங்கேற்க மாட்டேன் என்றும் சொன்னார். வெறும் இருபது நாட்களில் அவரது முடிவு மாறி விட்டது. அதனால் இப்போது இருக்கும் நிலையை வைத்து முழுக்க கமலைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. உத்தேசமாய் 2018ன் தொடக்கத்தில் இந்த எல்லாக் கேள்விகளையும் அப்போதைய கமலை வைத்து மீள்பார்வை செய்யலாம். கமலின் இயல்பை வைத்து அவர மெருகேறி மேலும் நம்பிக்கை அளிப்பார் என நம்புகிறேன். பார்ப்போம்.

*

References:
  1. Anupam Kher's People (Republic TV) - https://www.youtube.com/watch?v=dbwymYV5Nzw (4 செப்டெம்பர் 2017 - 48 நிமிடம்)
  2.  India Upfront (Times Now) - https://www.youtube.com/watch?v=I-q_XHNcwjY (21 செப்டெம்பர் 2017 - 20 நிமிடம்)
  3. India Today Interview - https://www.youtube.com/watch?v=uRZZlRpoOgg (21 செப்டெம்பர் 2017 - 8 நிமிடம்)
  4. Face Off (CNN News 18) - https://www.youtube.com/watch?v=nUR3gUFX7ik (25 செப்டெம்பர் 2017 - 18 நிமிடம்)
  5. வெல்லும் சொல் (News 18 தமிழ்நாடு) - https://www.youtube.com/watch?v=wDGShp7BEQI (25 செப்டெம்பர் 2017 - 22 நிமிடம்)
  6. வியூகம் (News 7 Tamil) - https://www.youtube.com/watch?v=EPiLIntUHik ( 25 செப்டெம்பர் 2017 - 29 நிமிடம்)
  7. NDTV Interview - https://www.youtube.com/watch?v=N-cxpjk_irw (26 செப்டெம்பர் 2017 - 20 நிமிடம்)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்