மதுமிதா: சில குறிப்புகள் [குறும்படம்]


மதுமிதா: சில குறிப்புகள் நான்கு ஆண்டுகள் முன் சுஜாதா பிறந்த‌ நாளில் தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியான சிறுகதை. மருதன் வெளியிட்டார். அது எழுதப்பட்டது அதற்கும் ஈராண்டுகள் முன். 'இறுதி இரவு' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதை அது. இடைப்பட்ட காலத்தில் பத்து முறையாவது வெவ்வேறு காரணங்களுக்காக அது திருத்தப் பட்டிருக்கும். அதை முதலில் பொன்.வாசுதேவனின் அகநாழிகை இதழுக்குத் தான் எழுதினேன். அப்போது அவ்விதழை வெளிக்கொணர்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதால் அதில் வெளியாகவில்லை. பிறகு ஒரு வெகுஜன இதழில் “இது ஹை ரேஞ்சாக இருக்கிறது. எங்கள் வாசகர்களுக்குப் புரியாது” என்று காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டது. இன்னொரு பிரபல இதழும் மௌனித்தது. பிறகு தான் பொறுமையிழந்து இணையத்தில் வெளியிடத் தீர்மானித்தேன்.


இறுதி இரவு சிறுகதையைக் குறும்படம் ஆக்குவது பற்றிய பேச்சுகளும் வேலைகளும் கடந்த ஒன்றரை வருடங்களாகவே  நடந்து வரும் சூழலில் மதுமிதா முந்திக் கொண்டாள். இவ்வாண்டு சரியாய் அதே சுஜாதா பிறந்த நாளன்று நான் உயிர்மை விருது மேடையில் இருந்த போது தான் மதன்ராஜ் மெய்ஞானம் மதுமிதா கதையைக் குறும்படமாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பினார். பிறகு சரசரவென வேலைகள் முடிந்து, இதோ படம் வெளியாகி விட்டது.

பெங்களூரு மதுமிதா சான் ஃப்ரான்சிஸ்கோ மதுமிதாவாகி விட்டாள். குறும்படத்தில் எனக்குப் பல இடங்களில் நிறைவும் சில இடங்களில் இன்னும் மேம்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. நான் அச்சிறுகதையைப் படமாக்கி இருந்தால் வேறு மாதிரி தான் திரைக்கதை அமைத்திருப்பேன். உதாரணமாய் அக்கதையின் தனித்துவமாக நான் கருதுவது அதன் கூறுமுறையை - இன்றைய நவீன உலகின் பல்வேறு தொலைத் தொடர்புகளைச் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி. அதன் எளிய கதைச் சரடு இரண்டாம் பட்சமே. அதனால் நான் எழுதி இருந்தால் அந்த உத்தியை ஒட்டியே திரைக்கதை அமைத்திருப்பேன். ஆனால் மதன்ராஜ் தன் திரைக்கதையில் படைப்பின் கதைச் சரடை மட்டும் முக்கியமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாசகராக அவரது பார்வை அது என்று தான் அதைப் புரிந்து கொள்கிறேன்.

எழுதிய பின் எழுத்தாளனுக்கு அதன் மீது பாத்யதை ஏதுமில்லை. அதை இப்படி வாசி, அப்படிப் பார் என்று வாசகனுக்குச் சொல்வது அனர்த்தம். அது வாசகச் சுதந்திரம், வாசக உரிமை. ஆக ஒரு கதையை எப்படி அணுகிப் படமாக்கவும் ஓர் இயக்குநருக்கு உரிமை உண்டு என்றே கருதுகிறேன். அது புரிந்தே படமாக்கல்களுக்கு ஒப்புகிறேன். இறுதி இரவும் அப்படியே. இன்னும் சொல்லப் போனால் ஒரு கதையானது பல கோணப் படமாக்கல்களுக்குரிய சாத்தியம் கொண்டது.

என் கதாப்பாத்திரத்தின் தீற்றல்கள் இருந்தாலும் இந்தப் படத்தில் நீங்கள் பிரதானமாய் பார்ப்பது மதன்ராஜின் மதுமிதா. இது ஒரு குறும்படப் போட்டிக்காக எடுக்கப்பட்டது. அதன் விதிகளின்படி படம் ஒரே இடத்தில் (Single Location) நடக்க வேண்டும், காட்சிகள் நடக்கும் காலம் (Timeline) 24 மணி நேரத்திற்குள் இருக்க வேண்டும், குறும்படத்தின் நீளமானது (Running time) 12 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற சட்டகங்களுக்கு உட்பட்டு படம் எடுக்கப்பட்டிருப்பதையும் உணர்கிறேன். தவிர‌, படத்தில் பங்கேற்ற‌ அனைவரும் அமெரிக்காவில் முழு நேர மென்பொருள் ஆசாமிகள் என்பதையும் அறிகிறேன்.

ஆனால் அதற்குள் நின்று மதன்ராஜ் பயன்படுத்தியிருக்கும் திரைக்கதை உத்தி சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. கவனித்துப் பாருங்கள். திரைக்கதை தவிர்த்து படத்தில் எனக்குப் பிடித்த இரு விஷயங்கள்: மதுமிதாவாக நடித்த ரம்யா பெரும்பாலும் நன்றாக நடித்திருக்கிறார், அப்புறம் பின்னணி இசை (பென் தாமஸ்). மதன்ராஜுக்கு வாழ்த்துக்கள்!


மதுமிதா பாத்திரத்தை நான் திரையில் காணும் இரண்டாவது முறை இது. முதல் முறை நானே இயக்கிய LIFE OF API என்ற நான் முன்பு பணிபுரிந்த அலுவகம் தொடர்பான குறும்படத்தில் மதுமிதா இருந்தாள். எந்த மதுமிதா பெஸ்ட் என யோசனை!

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்