முதல் குறும்படம்

LIFE OF API - இது தான் நான் எடுத்திருக்கும் என் முதல் குறும்படத்தின் பெயர் (தலைப்பு நன்றி : ஆங் லீ / யான் மார்டெல்).

6 மணி நேர ஸ்க்ரிப்ட்வொர்க்; 6 மணி நேர ப்ளானிங்; 12 மணி நேர ஷூட்டிங்; 12 மணி நேர எடிட்டிங் - இவை metadata. சுருங்கச் சொன்னால் ஆறு நாட்களில் பதினோரு ஆட்களின் உழைப்பில் முகிழ்த்திருக்கிறது இந்த நான்கு நிமிடப்படம்.


இது ஓர் ஆங்கிலக் குறும்படம். நான் பணிபுரியும் நிறுவனத்திற்காக எடுத்திருக்கிறேன். ஆனால் முழுக்க‌ டாகுமெண்டரி போலாகி விடாமல் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். மொத்தம் பன்னிரு காட்சிகளில் மூன்று வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையை என் நிறுவனம் தொடர்புடைய தொழில்நுட்பத்தின் சர‌டு கொண்டு இணைக்கும் dramatic-ஆன திரைக்கதை.

ஒன்லைன் கேட்டால் Amores Perros, 21 Grams, ஆய்த எழுத்து, David படங்கள் நினைவுக்கு வரக்கூடும். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு படத்தின் திரைக்கதை உத்தி வெற்றிகரமானதாகத் தோன்றுகிறது. நல்ல‌ நம்பிக்கையைத் தருகிறது. தவிர‌, படத்தின் மைய நோக்கைச் சிதைக்காத வண்ணம் உறுத்தாத மெல்லிய குறியீடுகள் சில முயற்சித்திருக்கிறேன்.

இது என் முதல் திரைக்கதை முயற்சி அல்ல. இதற்கு முன் இரு திரைப்படங்களுக்கும், இரு குறும்படங்களுக்கும் எழுதி இருக்கிறேன். அவை யாவும் பாதி எழுதப்பட்ட / சிந்திக்கப்பட்ட நிலையிலேயே ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் கைவிடப்பட்டன. முழுக்கத் தயாரான எனது முதல் திரைக்கதை இது தான். இப்போது படமாகவும் எடுக்கப்பட்டு விட்டது.

Celtx என்ற மென்பொருளில் தான் இப்படத்தின் திரைக்கதையை எழுதினேன். ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் அத்தனை சீன்களையும் பட்டியலிடுவது, வசனங்கள், ஆக்ஷன், ஷாட் டீட்டெய்ல்ஸ் போன்றவற்றை ஹாலிவுட் திரைக்கதைகளின் ஃபார்மேட்டில் சுலபமாக எழுதுவது போன்ற பல விஷயங்களை இந்த சாஃப்ட்வேர் சுலபப்படுத்தியது; நேரத்தை மிச்சப் படுத்தியது (தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தவிர யாரேனும் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்களா!).

Canon 600Dயில் ஒளிப்பதிவு செய்தோம். அது அடிப்படையில் ஒரு DSLR கேமெரா. அதன் Moive Modeல் முழுப்படத்தையும் ஒளிப்பதிந்தோம். சில குறைந்த லைட்டிங் காட்சிகள் தவிர நல்ல துல்லியத்தில் 1080p FullHD படமெடுக்க முடிந்தது.

MacBook Proவின் iMovieயில் படத்தை எடிட் செய்தோம். படத்தை இங்கே எடுத்து அமெரிக்கா அனுப்பி வைக்க, அங்கே இருக்கும் பையன் எடிட்டிங் செய்தான். ஆடியோ விஷயங்களையும் அவன் தான் பார்த்துக் கொண்டான். Skypeல் Screen Sharing செய்து இதனை சாத்தியப்படுத்தினோம். மூன்று இரவுகள் அவனைத் தூங்க விடாமல் வேலை வாங்க வேண்டி இருந்தது. "A film is made on two tables - the writing table and the editing table" என்ற‌ சத்யஜித் ரேயின் கருத்து எவ்வளவு நிஜம்!

படத்திற்கு இசை இளையராஜா. அதாவது படத்தின் Opening Credits-க்கும், Closing Credits-க்கும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் புடிக்கல மாமு, வானம் மெல்ல ஆகிய பாடல்களின் Prelude-களைப் பயன்படுத்தி இருக்கிறேன். மற்ற‌படி, வசனம் தவிர படம் முழுக்க மௌனம் தான். பட‌த்தில் எங்கே இசை வரக்கூடாது என்பதும் ராஜா சொல்லிக் கொடுத்தது தானே!

என் முதல் படத்துக்கு இளையராஜா இசையமைத்து விட்டார். டைட்டில் கார்டில் அவர் பெயருடன் என் பெயர். Divine!

திரைக்கதைப்படி Cafe Coffee Dayயில் மூன்று காட்சிகள் எடுக்க வேண்டி இருந்தது. அதன் கிளை மேலாளரை அணுகிய போது மேலிட தொடர்பு கொடுத்து பேசியதில் ஒரு மணி நேர‌த்துக்கு ரூ. 15,000 கேட்டார்கள். இந்தப் படம் கமர்ஷியல் நோக்கத்திற்காக எடுக்கப்படவில்லை என்ற விளக்கம் எடுபடவில்லை. Costa Coffeeயில் பேசிய போது Prank Call என்று சொல்லி அழைப்பை முறித்தார்கள். கடைசியில் என் அலுவலகத்திலேயே ஒரு மினிமல் காஃபி ஷாப் செட் போட்டோம்.

ஃபோரம் மாலுக்குள்ளும் வீடியோ கேமெரா எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் இருந்ததால் ஷூட்டிங் முழுக்கவே என் அலுவலகத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டோம் (Not a Love Story படத்தில் ஷூட்டிங் அனுமதிக்கப்படாத மாலில் ஐஃபோன் பயன்படுத்தி ராம்கோபால் வர்மா படம் எடுத்தது போல எல்லாம் திருட்டுத்தனம் முயற்சிக்கவில்லை).

எட்டு நடிகர்கள். அவர்களில் மூவ‌ர் பெண்கள். நான் உட்பட மூன்று டெக்னீஷியன்கள். எல்லோருமே என் நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள். அத்தனை பேரும் சுத்த‌ இளைஞர்கள். பெண்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள்.

ஓர் இயக்குநராய் ஸ்க்ரிப்ட்டில் கொடுத்த அதே வசனத்தைத் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அவரவர்க்கு வரும் இயல்பான மொழியை ஓர் எல்லை வரை அனுமதித்தேன். எல்லாக் காட்சிகளும் குறைந்தபட்சம் 10 டேக் போயின.

இந்த சீன் கேமெரா பார்த்துப் பேசினால் தான் ஆடியன்ஸ் அப்பீல் கிடைக்கும் என நட்புரீதி அராஜகம் செய்தனர். நானே ஓகே செய்த ஷாட்டை த‌னக்குத் திருப்தி இல்லை, இன்னொரு டேக் போவோம் என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்கள்.

ஒரு படத்தின் இயக்குநராய் இருப்பது நிஜமாகவே உச்சபட்ச மன அழுத்தத்திற்குரிய விஷயம் என்பது  புரிகிறது. நான்கு நிமிடத்திற்கே இப்படி என்றால் முழுநீளப்படமெடுத்தால் அவ்வளவு தான் (மூன்று மாதத்தில் நேர்த்தியாய்ப் படமெடுத்து முடிக்கும் ஹரியை எல்லாம் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்). நிறைய கத்த வேண்டி இருக்கிறது; நிறையக் கோபம் வருகிறது. டென்ஷனில் ரோமங்கள் நரைப்பதோ உதிர்வதோ ஆச்சரியமே இல்லை. இயக்குநர் வேலை நாய்ப்பிழைப்பே.

படம் நெடுகிலும் கற்பதற்கு நிறைய இருந்தது. தொழில், நுட்பம், தொழில்நுட்பம் எல்லாம். அப்புறம் லேசாய் மனிதர்கள்!

படத்தின் outputல் எனக்கே முழுக்க‌ திருப்தி இல்லை தான். படம் வேகமாகச் செல்வ‌தால் - அதுவும் மூன்று கதைகளை நான்கு நிமிடத்தில் மாற்றி மாற்றிச் சொல்வதால் - பின்தொடர சிரமமாய் இருக்கிறது என்கிறார்கள் பார்த்த சிலர். இது போக டப்பிங் பேச வைக்காமல் லைவ் ரெக்கார்டிங் போனதால் சில இடங்களில் noise reductionக்குப் பின் வ‌சனங்கள் அமுங்கி விட்டன. இந்த‌ technical glitches தாண்டி எனக்கு நிறைய ஊக்கம் விதைத்திருக்கும் முக்கிய மைல்கல் இது.

எல்லாவற்றுக்கும் மேலாய் மதுமிதா என்ற என் கற்பனைப் பாத்திரத்திற்கு உயிரூட்டி நடமாட விட்டிருக்கிறேன் இதில்.

படம் எங்கள் டெக்னாலஜி பற்றியது என்பதால் இப்போதைக்கு அலுவ‌லக உட்சுற்றுக்கு மட்டுமே அனுமதி. பார்க்கலாம். ஒருவேளை எதிர்காலத்தில் இது தொடர்பான‌ விதிகள் தளர்த்த‌ப்பட்டால் இங்கே பகிர்கிறேன். அதுவரை காத்திருக்கவும்.

இதில் இறங்கியதால் வழக்கமான எழுத்து, வாசிப்பு எதுவும் சாத்தியப்படவில்லை. The Attacks of 26/11 உள்ளிட்ட கடந்த வாரம் வெளியான‌ திரைப்படங்கள் ஏதும் பார்க்கவில்லை. ட்விட்டர் பக்கம் போகவில்லை. அலுவலக வேலைகள் கூட சற்று தேக்கம் கண்டிருக்கின்றன. இனி மெல்லத் தரையிறங்கி தினசரிகளைச் சரி செய்ய வேண்டும். நல்லிர‌வு!

Comments

அட்டகாசம் , வெயிட்டிங்க் டூ ஸி
Unknown said…
(தமிழ்நாட்டில் கமல்ஹாசன் தவிர யாரேனும் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்களா!) என் நண்பர் ரகு, கிரீன் எனர்ஜி சம்பந்தமாக அரசுக்கு ஒரு குறும்படம் எடுக்கும் பொழுது திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்தினார். ஆனால் அது Celtx இல்லை #தகவல் :)
SudarKodi said…
விரைவில் குறும்படத்தைக் காண ஆவலாய் இருக்கிறேன்..:-)
Rampradeep said…
Neenga yen oru hollywood padam tamizhil edukka kudathu?
King Viswa said…
எனக்கு தெரிந்த அளவில் பல இயக்குனர்கள் திரைக்கதை எழுத மென்பொருள் பயன்படுத்துகிறார்கள்.

இப்போதைய இளைய தலைமுறை இயக்குனர்களில் பெரும்பான்மையானோர் இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்