பிஜேபி ஆட்சி - A RECAP

ஆழம் ‍- ஜூன் 2014 இதழில் மத்தியில் இதுவரையிலான பிஜேபி ஆட்சிக் காலங்களின் போதான சாதனைகள் / சோதனைகள் குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது:

*

தனிப்பெரும்பான்மையுடன் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நல்ல நிர்வாகம் மற்றும் மாநில வளர்ச்சியை முன்வைத்துப் பேசி பதவிக்கு வந்தவர் என்பதால் அவரது அடுத்த அறுபது மாதச் செயல்பாடுகள் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கிறது.

இது பிஜேபி ஆட்சி என்பதால் பொதுவாய் இதற்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இது இருக்கும் என்பது மேலோட்டமான எண்ணம். குறைந்தபட்சம் அவ்வாட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என நம்பலாம்.


இதற்கு முன் ஆட்சிபீடத்தில் இருந்து பிஜேபி நிர்வாக, அரசியல், பொருளாதார, சமூக, கலாசார தளங்களில் செய்தது என்ன என்பதை இக்கட்டுரை பேசுகிறது.

பிஜேபி இது வரை மூன்று முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல் முறை 1996ல் 161 எம்பிக்கள் பெற்று அதிக இடங்கள் கொண்ட கட்சியாக இருந்ததால் ஜனாதிபதி ஆட்சியமைக்க அழைத்ததால் வாஜ்பாய் ஆட்சி அமைத்தார். ஆனால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியாததால் தம் பதவியை ராஜினாமா செய்தார். 13 நாள் ஆட்சி அது.

தொடர்ந்து ஐக்கிய முன்னணி உருவாகி காங்கிரஸ் ஆதரவில் தேவ கௌடாவும், ஐகே குஜ்ராலும் பிரதமராக கிட்டத்தட்ட தலா ஓராண்டுகள் ஆட்சி செய்தார்கள்.

பிறகு 1998 பொதுத் தேர்தல்களில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் 254 இடங்களைப் பிடித்தது (இதில் பிஜேபி மட்டும் 182). இது போக பிற கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாம் முறையாக வாஜ்பாய் பிரதமரானார். இது 1999 வரை 13 மாதங்கள் நீடித்தது. அதிமுக பாதியில் ஆதரவை திரும்பப் பெற்றதால் பிஜேபி பெரும்பான்மை பலம் இழந்து வாஜ்பாய் ஆட்சி கலைந்தது.

இதைத் தொடர்ந்து நடந்த 1999 லோக்சபா தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 270 இடங்களைப் பெற்றது (அதில் பிஜேபி அதே 182). பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தெலுங்கு தேசம் கட்சியை சேர்த்துக் கொண்டு மூன்றாம் முறையாக வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை தமிழகத்தில் திமுக ஆதரவு. பிரச்சனை இன்றி முழுமையான ஆட்சி காலமும் ஆரோக்கியமாய் நீடித்தது.

ஆக, இதற்கு முந்தைய பிஜேபியின் ஆட்சி என்பது 1999 முதல் 2004 வரையில் வாஜ்பாய் ஆட்சி செய்த காலகட்டம் தான். அந்த ஆறு ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள், என்ன தோற்றார்கள், என்ன மாற்றம் கொண்டு வந்தார்கள்?

முதலில் சாதனைகளைப் பார்க்கலாம். மே 1998ல் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் தான் இந்தியா தனது இரண்டாவது அணு வெடிப்புச் சோதனையை பொக்ரானில் நிகழ்த்தியது (முதலாவது இந்திரா காந்தி ஆட்சியில் 1974ல் நடந்தது). மொத்தம் 5 சோதனைகள். அதுவும் ஆட்சிக்கு வந்து வெறும் ஒரே மாதத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உளவு நிறுவனங்களின் கண்களில் மண்ணைத் தூவி நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நிறைய நாடுகள் இந்தியா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இதனால் இந்தியாவுக்கு வரும் அந்நிய முதலீடுகள், வர்த்தகத் தொடர்புகள், அறிவார்ந்த பரிமாற்றங்கள், நவீன தொழில்நுட்பங்கள் ஆகியன கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் இது ஒரு வீரச் செயலாகவே பார்க்கப்பட்டது. ரஷ்யா, ஃப்ரான்ஸ் போன்ற சில தேசங்கள் மட்டும் இதை அங்கீகரித்தன. தொடர்ந்து பாகிஸ்தானும் இரு வாரங்களில் அணு வெடிப்புச் சோதனையை நிகழ்த்தியது.

வாஜ்பாய் ஆட்சியின் மற்றுமொரு சாதனை தேசத்தின் உள்கட்டமைப்பு வசதியை சீர்படுத்தியது. ஒன்று 1998ல் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம்; இன்னொன்று 2000ல் ஆரம்பித்த பிரதம மந்திரி கிராம சதாக் யோஜனா. முதலாவது இந்தியா முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது. இதில் முதல் திட்டமாய் ஆரம்பிக்கப்பட்ட டெல்லி - சென்னை - மும்பை - கொல்கத்தா ஆகிய நான்கு மாநகரங்களை இணைக்கும் தங்க நாற்சாலை திட்டம் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே ஓரளவு முடிக்கப்பட்டது. இரண்டாவது கிராமங்களை இணைக்கும் நல்ல சாலைகளை உருவாக்கும் திட்டம் (பின் வந்த காங்கிரஸ் ஆட்சி இவ்விரு உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரிவுபடுத்தித் தொடர்ந்தது).

1999ல் வாஜ்பாய் அரசு கொண்டு வந்த புதிய தொலைத்தொடர்புக் கொள்கை தொலைபேசிக் கட்டணங்களைக் குறைத்து அதன் பயன்பாட்டை அதிகரித்தது.

அடுத்து வாஜ்பாய் அரசு கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள். நரசிம்ம ராவ் அரசின் பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கையின் நீட்சியே வாஜ்பாய் அரசின் அணுகுமுறையும். விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிடட் போன்ற சில அரசு துறை நிறுவனங்களை முதலில் தனியார்மயமாக்கினார்கள். தொழிற்பூங்காக்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், சிறப்பு ஏற்றுமதி செயல்பாட்டு மையங்கள் ஆகியன நாட்டின் பல இடங்களிலும் உருவாக்கப்பட்டன. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இங்கே தொழில் தொடங்க ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் இங்கே சுலபமாய் முதலீடு செய்ய ஏற்றது போல் சலுகைகளும் வசதியும் செய்யப்பட்டன.

அடுத்தது வாஜ்பாய் அரசின் வெளியுறவுக் கொள்கைகள். சுதந்திரத்திலிருந்து முதல் முறையாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தரைவழிப் போக்குவரத்து 1999ல் தொடங்கப்பட்டது. டெல்லியிலிருந்து லாகூர் சென்ற அந்தப் பேருந்தின் முதல் பயணத்தில் பிரதமர் வாஜ்பாயே பாகிஸ்தான் சென்றார். பிறகு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் வர்த்தக ஒப்பந்தத்துக்கான லாகூர் தீர்மானம் வெளியிடப்பட்டது. சீனாவுடனும் எல்லைப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகள் நடந்தன. இஸ்ரேலுடன் தீவிரவாதத்தை இணைத்து எதிர்க்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அமெரிக்காவுடன் நல்லுறவு பேணப்பட்டது. 22 ஆண்டுகள் கழித்து ஒரு அமெரிக்க அதிபர் இந்தியா வந்தது வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான். செப்டெம்பர் 11, 2001 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போரில் தாலிபன், அல்க்வைதா போன்றோரைப் பிடிக்க அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருந்தது இந்தியா.

கடைசியாய் கார்கில் யுத்தம். 1999ல் லாகூர் தீர்மானம் வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களில் அதைக் காற்றில் பறக்கவிட்டு பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகள் என்ற போர்வையில் எல்லைக்கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவி காஷ்மீர் பள்ளத்தாக்கை ஆக்ரமித்துக் கொண்டது. வாஜ்பாய் தலைமையிலான அரசு இந்திய ராணுவத்தை அனுப்பிப் போரிட்டது. ஆபரேஷன் விஜய் என்பது இதன் பெயர். கார்கிலில் மூன்று மாத யுத்தம். அவர்கள் பக்கம் 4,000 பேர் சாவு. நம் பக்கம் 500 பேர் இறப்பு. சுமார் 70% பகுதி மீட்கப்பட்டது. வேறு வழியின்றி நவாஸ் ஷெரீஃப் மீதமிருந்த பாகிஸ்தான் வீரர்களைத் திரும்ப உத்தரவிட்டார். இந்தப் போர் இந்தியாவில் வாஜ்பாயின் பிம்பத்தை உயர்த்திக் காட்ட உதவியது. 1999 தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வர இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நடந்த எதிர்மறைச் விஷயங்களைப் பார்க்கலாம். முதலாவதும் மிக முக்கியமானதும் 2002 குஜராத் கலவரங்கள். கோத்ராவில் இந்து கர சேவகர்கள் வந்த ரயில் பெட்டி கொளுத்தப்பட்டு 59 பேர் இறந்ததற்கு எதிராய் இந்துக்கள் குஜராத் மாநிலம் முழுக்க சுமார் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்தார்கள். கிட்டத்தட்ட 250 முஸ்லிம் பெண்களை வன்புணர்ச்சி செய்தார்கள். பல்வேறு அரசு சாரா அமைப்புகள் இது நரேந்திர மோடி தலைமையிலான மாநில பிஜேபி அரசின் நேரடி ஆதரவில் நடந்த கலவரம் என விசாரணைகளுக்குப் பின் உறுதி செய்தன. மத்தியில் அப்போதிருந்த வாஜ்பாய் அரசு அதை மேம்போக்காகக் கண்டித்ததோடு சரி. ஆட்சிக்கலைப்பு அல்லது மோடியை ராஜினாமா செய்ய வைத்தல் போன்ற வேறு எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதற்குப் பின் கோவாவில் நடந்த பிஜேபியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய போது வாஜ்பாய் முஸ்லிம்களை அமைதியாக வாழ விருப்பமற்றவர்கள் என்று குறிப்பிட்டார். தீவிரவாதத்தைக் காரணம் காட்டி கலவரத்தை நியாயப்படுத்தினார். அப்போது குடியரசுத் தலைவராய் இருந்த கே.ஆர்.நாராயணன் 2002 குஜராத் கலவரங்களின் வேர் வாஜ்பாய் மற்றும் மோடி அரசுகளில் உள்ளது என்றார்.

அடுத்த மோசமான விஷயம் வாஜ்பாய் அரசு கல்வித்துறையை காவிமயமாக்க முயன்றது. அப்போதிருந்த NCERT பாடத்திட்டத்தில் இந்தியாவின் உண்மையான வரலாற்றையும் கலாசாரத்தையும் பிரதிபலிக்கப் போகிறோம் என்ற பெயரில் இந்துத்துவ கருத்துக்களைப் புகுத்தினார்கள். இதை மார்க்ஸிய வரலாற்று அறிஞர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். கல்லூரிகளில் வேத ஜோதிடம் என்ற புதிய படிப்பை விஞ்ஞானிகளின் எதிர்ப்பை மீறிக் கொண்டு வந்தார்கள். பிற்பாடு காங்கிரஸ் ஆட்சி வந்ததும் இந்த மாற்றங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன.

வாஜ்பாய் ஆட்சியில் சில ஊழல்கள் நடந்தேறின. அப்போதைய பிஜேபி தலைவர் பங்காரு லக்ஷ்மண் தொழிலதிபர்கள் என்று சொல்லிய தெகல்கா நிருபர்களிடம் லஞ்சம் கேட்டது ரகசியமாய் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பினார்கள். கார்கில் போரில் இறந்தவர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதிலும் பாரக் ஏவுகணை வாங்கியதிலும் ஊழல் நடந்ததற்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சராய் இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவி விலகினார். கூட்டு பாராளுமன்றக் கமிட்டி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அருண் ஷோரி, ஜஸ்வந்த் சிங் கார்பரேட்களுக்கு ஆதரவாய் தொலைத்தொடர்புத் துறையில் முறைகேடாய் லைசென்ஸ்கள் வழங்கியவகையில் ரூ. 42,080 கோடி தேசத்திற்கு நஷ்டம் எனக் குறிப்பிடுகிறது.

இன்னொன்று பாபர் மசூதி இடிப்பின் பத்தாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் பொருட்டு 2002ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தியின் பிரச்சனைக்குரிய இடத்தில் சிலா தானம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டது, ஆனால் உச்சநீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துத் தீர்ப்பளித்தது. விஷ்வ இந்து பரிஷத் இதைச் செய்தே தீருவோம் என இறங்கினர். கலவரச் சூழல் உருவானது. பிறகு மத்திய அரசு, காஞ்சி ஜெயேந்திரர் போன்றோர் தலையிட்டு அயோத்தியிலேயே வேறு இடத்தில் அடையாள பூஜை செய்வதோடு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடைசியாய் பொடா என்ற தீவிரவாதத் தடுப்புச் சட்டம். பல கட்சிகளின் எதிர்ப்பை மீறி இச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் கடுமைத்தன்மை அப்பாவிகள் மீது கூட இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பழிவாங்க ஏதுவாயிருந்தது. அதனால் மாநில அரசும் மத்திய அரசும் தமக்கு ஆகாதவர்கள் மீது சம்மந்தமின்றி இந்தச் சட்டத்தைப் பிரயோகித்து சுலபமாய்ப் பழிவாங்க வாய்ப்பு இருந்ததால் மனித உரிமை அமைப்புகளும் இச்சட்டத்தை எதிர்த்தன. உதாரணமாய் 2002 கோத்ரா ரயில் எரிப்பில் சம்மந்தப்பட்ட முஸ்லிம்களின் மீது எந்த ஆதாரமும் இன்றி பொடா சட்டத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் கலவரம் நடத்திய இந்துக்களின் மீது சாதாரண சட்டங்களின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியில் இச்சட்டம் தேவையற்றதெனத் திரும்பப் பெறப்பட்டது.

இது போக வாஜ்பாய் ஆட்சியில் இரு துர்சம்பவங்கள் நிகழ்ந்தேறின. முதலாவது காத்மண்டுவிலிருந்து புதுதில்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஐந்து தீவிரவாதிகள் கடத்தி ஆஃப்கானிஸ்தான் கொண்டு சென்று, பயணிகளைப் பிணைக்கைதிகளாக்கி பதிலுக்கு சிறையிலிருந்த் மௌலானா மஸூத் அஸார் உள்ளீட்ட சில தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரினார்கள். பேச்சுவார்த்தைக்குப் பின் வேறு வழியின்றி அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தீவிரவாதிகளுடன் சென்று பயணிகளை மீட்டுத் திரும்பினார். அப்போது அங்கு தாலிபன் ஆட்சி என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு ஒத்துழைக்கவில்லை.

அடுத்தது 2001ல் இந்தியப் பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல். மொத்தம் ஐந்து பேர் பாராளுமன்ற வளாகத்துக்குள் நழைந்து அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் 7 பேரை சுட்டுக் கொன்றனர். பிறகு ராணுவம் நுழைந்து அவர்கள் அனைவரையும் கொன்றது. அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதும், லஷ்கர்-ஈ-தய்பா ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும் சதித்திட்டம் அங்கே தயார் செய்யப்பட்டது என்பதும் தெரியவந்த பின் வாஜ்பாய் அரசு இந்திய பாகிஸ்தான் எல்லை முழுக்க சுமார் 5 லட்சம் ராணுவ வீர்ர்களைக் குவித்தது. பதிலுக்கு பாகிஸ்தானும் ராணுவத்தை எல்லையில் நிறுத்தி வைக்க, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எல்லை நெடுகவும் எந்த நேரமும் போர் வெடித்து விடும் என்கிற பதட்டம் நீடித்தபடியே இருந்தது. ஆனால் ஏதும் நிகழவில்லை.

மேலே குறிப்பிடப்பட்ட சாதனைகளைச் சொல்லி 2004ல் தேர்தலைச் சந்தித்தது பிஜேபி. “இந்தியா ஒளிர்கிறது” என்ற விளம்பரம் பரவலாய்ச் செய்யப்பட்டது. ஆனால் அது எடுபடவில்லை. காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் வென்றது.

பிஜேபி என்ற மதவாதக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாய் மிதவாதி எனப் பெயரெடுத்தவர். கலைஞர் 90களின் இறுதியில் அவரை “தவறான இடத்தில் இருக்கும் சரியான நபர்” என வர்ணித்திருக்கிறார். அவரது ஆட்சி காலத்தின் சாதனைகளை, தவறுகளைப் பார்க்கும் போது அது சரியென்றே தோன்றுகிறது.

நரேந்திர மோடி என்பவர் இன்னொரு வாஜ்பாயா என்பது போகப் போகத் தெரியும்.

*

Comments

Anonymous said…
சென்றமுறை காங்கிரஸ் ஆட்சி வந்தப்போ அதைப்பத்தி பதிவு போடாம இப்ப மட்டும் ஏய்யா இப்படி?அடுத்த புக்கு வரப்போகுதா?ஓடுங்க அது உங்களை நோக்கித்தான் வருது!
அப்பாவி தமிழன் said…
முந்தைய ஆட்சியை விடவும் அசிங்கமான, மக்கள் விரோத ஆட்சி நடக்கும் என்று நான் முன்னரே எனது முகநூலில் சொன்னேன். அதானி குழுமம் மட்டும் பயன் பெறும். சர்வதேச சந்தையில் கட்சா எண்ணை விலை பெரிதும் குறைந்தும், நாம் நாட்டில் சில்லறை விற்பனையில் குறையவில்லை.

ஆப் கி பார் மோசடி சர்க்கார்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்