G2K2K : நேர்காணல் (பகுதி - 2)

இளைஞர் முழக்கம் மார்ச் 2014 இதழில் வெளியான எனது நேர்காணலின் தொடர்ச்சி:

***

11.    நெருப்புக்கு நெருப்பு என்ற பழிவாங்குதல் கொடூரமானதாக உள்ளதே. எழுதும்போது என்ன உணர்ந்தீர்கள்?

ஆம். அந்தப் பகுதி கொடூரமானது தான். அந்தப் பகுதி என்றில்லை. பொதுவாகவே இந்தப் புத்தகம் எழுதும் காலகட்டம் முழுக்கவே உணர்ச்சிமயமானவனாகவே இருக்க முடிந்தது. பொதுவாய் அது என் இயல்பில்லை என்பதையும் குறிப்பிடவிரும்புகிறேன்.

முஸ்லிம்களை எரிப்பதில் அவர்களை கொல்லும் நோக்கமே பிரதானம் என்றாலும் மற்றுமொரு மறைமுக நோக்கம் இருந்தது. அது அந்த மதத்தை அவமதிப்பது. அவர்கள் பிணங்களை எரிப்பதில்லை. சடங்குகளுக்கு உட்படுத்திப் புதைக்கிறார்கள். அப்படிச் செய்தால் தான் இறையை அடைய முடியும் என்பது அவர்கள் நம்பிக்கை. அப்போது தான் முஸ்லிமாக முழுமை அடைகிறார். அதை மறுத்து எரித்து சாம்பல் ஆக்குவதன் மூலம் முஸ்லிமே இல்லை என்ற அடையாள அழிப்பை செய்தனர்.


12.    நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகளும் பாதிக்கப்பட்டதாக சொல்லியுள்ளீர்களே, என்ன ஆதாரம்?

2002 குஜராத் கலவரங்களின் போது நீதிபதிகள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் என எல்லாத் உயர்குடி முஸ்லிம்களும் தாக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் நேரடியாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். அவை எல்லாம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்டவை.


13.    நரோடா பாட்டியா, குல்பர்க் சொசைட்டி, பெஸ்ட் பேக்கரி என தனித்தனியாக விரிவாக எழுதியுள்ளதை வாசிக்கையில் குலையே நடுங்குகிறது.  சுருக்கமாக கூறுங்கள்.


நரோடா பாட்டியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு காலை முதல் இரவு வரை பெண்கள் தெருவில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். முஸ்லிம் வீடுகள், கடைகள் ஆகியன எரிக்கப்பட்டன. மசூதி ஒன்று அழிக்கப்பட்டது. சுமார் 5000 இந்துக்கள் இதில் பங்கு கொண்டனர். மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி ஆகிய பிஜேபி, பஜ்ரங் தள் பெரும்புள்ளிகள் கலந்து கொண்ட கலவரம் இது.

குல்பர்க் சொஸைட்டியில் வசித்த இஷான் ஜாஃப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்பியைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் கொல்லப்பட்டார். அவ்விடத்தில் வசித்த பல முஸ்லிம்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். 69 பேர் இறந்தனர். வீடுகள் கொளுத்தப்பட்டன. அங்கே யாரும் வசிக்கத் திரும்பவே இல்லை.

ஒரு முஸ்லிமால் நடத்தப்பட்ட பெஸ்ட் பேக்கரி 500 பேர் கொண்ட கும்பலால் சுற்றிவளைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. உள்ளே இருந்த 12 பேர் இறந்தனர்.


14.    பெண்கள், குழந்தைகள் மீதான கொடுமைகள் குறித்து?  கூட்டு பாலியல் வல்லுறவு, அதன் பின் கொலை என்பது என்ன கொடூரமிது? ஒரு வரியைக் கூட கண்ணீரின்றி கடக்க இயலவில்லை. ஏனிந்த வெறி, யார் உருவாக்கியது?

2002 குஜராத் கலவரங்களில் பெண்கள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் விதவிதமானவை, வக்கிரமானவை: துகிலுரித்தல், நிர்வாணப்படுத்துதல், அப்படியே தெருவில் ஊர்வலம் போகச் செய்தல், உடல் உறுப்புக்களைக் கசக்குதல், முகத்திலும் உடலிலும் ஆசிட் வீசுதல், பொது இடத்தில் வைத்து பல பேர் கூட்டாய் வன்புணர்ச்சி செய்தல், பிறப்புறுப்புக்குள் கழி, கம்பி, குச்சி போன்ற பொருட்களை செலுத்துதல், வயிற்றைக் அறுத்தல், வயிற்றைக் கிழித்து அதற்குள் பொருட்களை சொருகுதல், பிறப்புறுப்பை வெட்டுதல், மார்புகளை அறுத்தல், கை, கால்களை உடைத்தல், இந்து மத உருவங்களை பெண்களின் உடல்களில் ஆயுதங்களால் கீறி வரைதல். இன்னும் இன்னும் நிறைய நிறைய கொடூரமான பல பாலியல் ரீதியான வன்முறைகள்.

ஆண்கள் தான் இதை செய்தார்கள் என்றில்லை. இந்துச் சிறுவர்களுக்கு முஸ்லிம்களை எரிக்கவும் பெண்களைக் கற்பழிக்கவும் கற்றுத் தரப்பட்டது.

சில இடங்களில் மகளின் முன்பாக தாயை வன்புணர்வு செய்தனர்; இன்னும் சில இடங்களில் தாயின் முன்பாக மகளை வன்புணர்வு செய்தனர். உச்சபட்சமாய் 3 வயதான பெண் குழந்தை ஒன்றை வன்கலவி செய்து கொன்றிருக்கிறார்கள்.

பெண் உடலை எப்படி எல்லாம் வன்முறையில் சிதைக்கலாம் என் விதவிதமாய்க் கற்பனை செய்து செயல்படுத்தினர். பெண் உடலை விளையாட்டு மைதானம் போல, சோதனை எலி போல், குழந்தையின் விளையாட்டு பொம்மை போல் பயன்படுத்தினர்.

பாலியல் வன்முறை என்பதை இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தவும் முஸ்லிம்களை அடிபணிய வைக்கவுமான ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.


15.    சிறப்பு புலனாய்க்குழு குஜராத் அரசிடம் மென்மையாகவும், பாதிக்கப்பட்ட மக்களிடம்  கடுமையாகவும் நடந்துகொண்டதாக கூறியுள்ளீர்களே, உண்மையா?


குல்பர்க் சொஸைட்டி எரிப்பு வழக்கில் பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக ஆஜரான ஆர்.கே. ஷா என்பவரே இதைச் சொல்கிறார். அவர் இந்த வழக்கிலிருந்து இடையில் விலகிக் கொண்டார். அவர் அதற்கு சொன்ன காரணம் சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தம்மால் இணைந்து பணிபுரிய முடியவில்லை என்பதே. பல உயிர்கள் பலியான வழக்கில் முக்கியமான சாட்சிகளிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள், அவர்களைக் குழப்புகிறார்கள், சாட்சி விவரங்களை சரியாகப் பகிர்வதில்லை, முறையான ஒத்துழைப்பு தருவதில்லை, இதெல்லாம் அவர்கள் கடமை என்றார்.


16.    வழக்குகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற வாதம்?


முந்தைய கலவரங்கள் போலல்லாது 2002ல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்கள் அல்லது அவர்களின் ஆண் உறவினர்கள் அதை போலீஸில் புகாராக சொல்ல முன்வந்தனர். ஆனால் இம்முறை போலீஸ் இந்தப் புகார்களை ஏற்க மறுத்தது. இவை பொய்ப் புகார்கள் எனப் புறந்தள்ளியது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி அதற்குச் சொன்ன விளக்கம்: “பாலியல் வன்முறைக்கெல்லாம் கலவரக் காரர்களுக்கு நேரமில்லை. தவிர இந்துக்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள்”.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக தண்டிக்கப்படவில்லை. முதலில் சரியான சாட்சிகள் இல்லை. சாட்சி சொல்ல வந்தவர்களின் வாக்குமூலங்களும் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. மீறி சாட்சி சொல்ல முயன்றவர்கள் மிரட்டப்பட்டனர், அல்லது பணம் கொடுத்து பணிய வைக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குற்றத்துக்கும் தனித்தனியாக விளக்கமாக முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை.

ஆறு பெண்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று குஜராத்தின் நிவாரண முகாம்களில் அடைக்கலமாகி இருந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து வாங்குமூலங்களைப் பெற்றது. அவற்றிலிருந்து போலீஸ் அவர்களின் வழக்குகளைச் சரியாகப் பதிவு செய்யாமல் மழுப்பி இருப்பது புலனாகிறது.


17.    இராணுவம் பயன்படுத்தப்படவில்லையா?

பயன்படுத்தப்பட்டது. கலவரம் தொடங்கிய அன்றிரவே ராணுவம் குஜராத்தில் வந்து இறங்கி விட்டது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநில அரசின் உத்தரவு கிடைக்காததால் ராணூவம் சும்மா இருக்க வேண்டி நேர்ந்தது. அவர்கள் உடனே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் பல சேதங்களைத் தடுத்திருக்கலாம். குஜராத் அரசு அதைச் செய்யவில்லை. அவர்கள் முடுக்கி விடப்பட்டபோது எல்லாம் முடிந்திருந்தது. போர் முடிந்த பின் வந்த பட்டாளம் போல் ராணுவம் மீட்புப் பணிகள் செய்தது.


18.    போலிஸ்-அரசு-நீதிமன்றம்-ஊடகங்கள் என சுருக்கமாக.

குஜராத் கலவரங்களின் போது மாநிலத்திலும் மத்தியிலும் பிஜேபி ஆட்சி தான். போலீஸ், அரசு, நீதிமன்றம் மூன்றுமே கலவரத்தில் இந்துக்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டன. கலவரக்காரர்கள் மீது சரியாக போலீஸ் வழக்குப் பதியவில்லை. நீதிமன்றம் அவர்களுக்கு முறையற்ற ஜாமீன் வழங்கியது. சில குஜராத்தி ஊடகங்கள் கலவரத்தை மேலும் பெரிதாக்கும் தொனியில் பொய்யான செய்திகள் வெளியிட்டன.

போலீஸுக்கு லஞ்சம் கொடுத்தனர். அவர்கள் சாட்சிகளைப் பிறழச் செய்தனர். விசாரணை நடத்துவதில் பெரும் தாமதம் காட்டினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரெனத் தெரிந்தும் அவர்களைக் கைது செய்யவில்லை. நேர்மையாக நடந்து கொண்டு கலவரங்களில் முஸ்லிம்களின் உயிரைக் காத்த போலீஸ்காரர்கள் மோடியின் அரசால் மறைமுகமாக பழிவாங்கப்பட்டார்கள். ஏதேனும் காரணமற்ற ஒழுங்கு நடவடிக்கை அல்லது மாநிலத்தை விட்டே போகுமளவு பணி இடமாற்றம் ஆகியன இவர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்டது. அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், உண்மையை அம்பலப்படுத்தியவர்கள், சாட்சி சொன்னவர்கள் அனைவரும் மிரட்டப்பட்டார்கள். நீதித்துறையில் ஊழல் மலிந்திருந்தது.


19.    மோடி மீதான சமீபத்திய தீர்ப்பு?

முதலில் அது ஒரு மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டுமே. இன்னும் மேல்முறையீடுகள் சாத்தியம் இருக்கிறது. அடுத்து அது முழுக்க முழுக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையைச் சார்ந்து வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நடுநிலைத்தன்மை மீதே கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் இத்தீர்ப்பை ஏற்பதில் தயக்கங்கள் இருக்கின்றன.


20.    மோடி கலவரத்தின் நாயகனா? வளர்ச்சியின் நாயகனா?

மோடி குஜராத் வளர்ச்சியின் நாயகனா என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்கின்றன. அது பற்றி என் புத்தகம் அக்கறைப்படவில்லை. ஆனால் கலவரங்கள் மோடியின் ஆதரவுடன் நடந்திருப்பதாகவே பல விசாரணைகளும் சொல்கின்றன.

சிலபல கொலைகள் செய்த பேட்டை ரவுடிகளே இப்போதெல்லாம் தேர்தலில் அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற செயலில் இறங்கியவரின் உளவியல் என்ன? அவர் எவ்வளவு சிறந்த நிர்வாகி எனினும் ஆபத்தானவர் இல்லையா? ஹிட்லர் கூட சிறந்த நிர்வாகி, பெரிய போர்தந்திரி, மிகுந்த புத்திசாலி என்று தான் வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால் யூதர்கள் மட்டும் அவரை எதிர்க்கவில்லை, உலகமே தான் இன்று அவரை உமிழ்கிறது. பிரச்சனை யூதர்களைக் கொன்றது என்ற நிகழ்வு அல்ல; மனித உயிர்களை இப்படிக் கையாண்ட ஒருவன் ஒட்டுமொத்த மனித குலத்துக்கே தான் எதிரி என்பதே இங்கே புரிதல். அவன் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் அவனை ஆதரிக்கத் தேவையில்லை என்பது இதன் நீட்சி.


21.    இணையத்தில் கிடைக்கும் ஆதாரங்கள்?

இணையத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை விபரங்கள், கன்சர்ன்ட் சிட்டிசன்ஸ் ட்ரிப்யூனலின் விரிவான விசாரணை அறிக்கை, தெகல்கா ரகசியப் புலனாய்வுக் கட்டுரைகள் என பல ஆதாரங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் விரிவான ஒரு பட்டியலை புத்தகத்தின் பின் இணைப்பில் தந்திருக்கிறேன்.


22.    சுருக்கமாக குஜராத் கலவரங்கள் மற்றும் அதில் மோடியின் பங்கு குறித்த உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

சிறப்பு புலனாய்வுக்குழு அளித்த clean chit தாண்டி, 2002 குஜராத் கலவரத்தில் மோடியின் நேரடி பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. பெரும்பாலானோருக்கு அப்படித் தான். நேரடி பங்கு என நான் சொல்வது என்னவெனில் முஸ்லிம்கள் கலவரத்தில் இறந்ததை கோத்ரா ரயில் எரிப்புடன் சம்மந்தப்படுத்தி நியூட்டனின் மூன்றாம் விதி என வீராவேசமாய்ப் பேசியதை அல்ல; “அடுத்த சில நாட்களுக்கு இந்துக்கள் முடிந்த அளவு முஸ்லிம்களைக் கொன்று குவிப்பார்கள், அரசாங்கமும் போலீஸூம் அதைக் கண்டு கொள்ளத் தேவை இல்லை, வேண்டுமானால் நீங்களும் அதற்கு உதவலாம்” என்ற வாய்மொழி உத்தரவை ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் அளவுக்கு மதவெறியுடன் நடந்து கொண்டார் என்பதே என் நம்பிக்கை. மோடியின் நேரடி ஆதரவு இருக்கிறது என்று நன்கு தெரிந்த பின்பே கலவரங்கள் இன்னமும் தைரியமாக தீர்க்கமாக பரவலாக நடந்தப்பட்டன.

***

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு