G2K2K : நேர்காணல் (பகுதி - 1)

இளைஞர் முழக்கம் மார்ச் 2014 இதழில் குஜராத் 2002 கலவரம் நூல் குறித்த எனது நேர்காணல்:

***

1.    நீங்கள் ஓர் அரசியல்வாதியல்ல. முழுநேர எழுத்தாளருமல்ல. எனினும், இப்படியான ஒரு பெரும் முயற்சிக்கு எப்போது முடிவெடுத்தீர்கள், எங்கேயிருந்து அதற்கான உந்துதல் கிடைத்தது?

நான் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். முழுநேர எழுத்தாளன் இல்லை என்றாலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து அச்சு இதழ்களிலும், வலைதளங்களிலும் எழுதி வருகிறேன். இரு கவிதைத் தொகுதிகள் உட்பட இதுவரை ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறேன். என் முதல் புத்தகத்துக்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது. குங்குமம் வார இதழில் ஒரு தொடரும் எழுதி உள்ளேன்.

ஏற்கனவே சில கட்டுரைகள் எழுதி இருந்தாலும் குஜராத் 2002 கலவரம் தான் எனது முதல் நேரடி அரசியல் நூல். அடிப்படையில் இது ஒரு வரலாற்றுப் புத்தகம் தான் என்றாலும் சமகால இந்தியச் சூழலில் இது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

தீராநதி, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியான கட்டுரைகள், அ.மார்க்ஸ் எழுதிய / தொகுத்த / மொழிபெயர்த்த சில கட்டுரைகள் ஆகியவை வழியாக 2002 குஜராத் கலவரங்கள் அது நடந்த சில மாதங்களிலேயே எனக்கு அறிமுகமானது. அப்போது நான் கல்லூரியில் நுழைந்திருந்த நேரம். எப்போதும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய் நடந்திருந்த காலம். இப்போது யோசித்துப் பார்த்தால் அப்போதிருந்த அற மனநிலை காரணமாகவே குஜராத் கலவரங்கள் மிக ஆழமாய் என்னுள் வேர் விட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. புத்தகத்தின் ஆதி விதை அங்கே தான் விழுந்தது.

அது குறித்து தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். பிற்பாடு உயிர்மை இதழில் சில கட்டுரைகள், The Hindu நாளேட்டில் சித்தார்த் வரதராஜன் எழுதிய ஒரு விரிவான கட்டுரை, Tehelka ரகசியப் புலனாய்வுகளின் தொகுப்பு, உண்மை அறியும் பெண்கள் குழுவின் அறிக்கை ஆகியவற்றை வாசிக்க நேர்ந்தது. தடை செய்து பின் விலக்கப் பட்டிருந்த ராகேஷ் ஷர்மா இயக்கிய The Final Solution என்ற டாகுமெண்டரி படத்தை அப்போது தேனாம்பேட்டையில் ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு மாலையில் ஓர் அமைப்பு திரையிட்டது (ஏதேனும் கம்யூனிஸ்ட் பிரிவாக இருக்கும் என ஊகிக்கிறேன்).

அவ்வப்போது 2002 குஜராத் கலவரங்கள் குறித்த செய்திகளைக் கவனித்து வந்தேன். இடையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடியைக் கலவரங்களில் தொடர்பற்றவர் என அறிவித்தது. கடந்த ஜூனில் 2014 மக்களவைத் தேர்தல்களுக்கு பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப் பட்டதும் தான் விழித்துக் கொண்டேன். ஒரு வெளிப்படையான ஃபாசிஸ்ட்டின் கையில் மதச்சார்பற்ற இந்த தேசத்தின் உச்சப்பதவியை ஒப்படைப்பதன் பயம் அது.

குஜராத் கலவரங்கள் குறித்து முழுமையான வரலாற்றுப் பார்வையை அளிக்கும் ஒரு புத்தகம் தமிழில் இல்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன். அதனாலேயே
இப்புத்தகத்தை எழுதத் தீர்மானித்தேன். கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்க சம்மதித்தார்கள்.


2.    கலவரம் என்று  பொதுவாக வர்ணிக்கப்படும் 2002 குஜராத் படுகொலை நிகழ்வை, இன அழித்தொழிப்பு என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்? ஹிட்லரையும், ராஜபக்சேவையும், மோடியையும் ஒப்பிடுவது வரலாற்றுபூர்வமானது தானா?

ஓர் உடனடிக் காரணத்தின் விளைவாக இரு தரப்பு மக்களிடையே வெடிக்கும் வன்முறைகளைத் தான் கலவரம் என்று சொல்ல இயலும். முழுக்க முன்கூட்டிய திட்டமிட்டுக் காத்திருந்து தோதாக ஒரு நிகழ்வு நடந்ததும் அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு தரப்பு அரசாங்கத்தின் துணை கொண்டு இன்னொரு தரப்பை அழித்தொழிப்பதற்குப் பெயர் இன அழிப்பு தான். குஜராத்தில் அது தான் நடந்தது.

நரேந்திர மோடியின் ஆதரவு முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறைகளுக்கு இருந்தது என்று தான் வெளிவரும் ஆதாரங்களும் வாக்குமூலங்களும் உறுதி செய்கின்றன. இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டதும் இதே தான். ஹிட்லர் யூதர்கள் மீது நடத்தியதும் இதே தான். அதனால் தான் அப்படி ஒப்பிட வேண்டியதாகிறது.


3.    இந்து - இஸ்லாம் மக்களிடையே கலவரங்கள் உருவான 1923 - 1927 காலங்களில் 1925ல் ஆர்.எஸ்.எஸ் உருவானது என்று கூறுகிறீர்கள், எனில், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றமே வகுப்புவாதக் கலவரம் என்பது தானா?

கலவரங்கள் நேரடி நோக்கமாக இருக்கவில்லை.  இந்து மக்களைப் பாதுகாக்கும் நொக்கமே ஆர்எஸ்எஸ் உதயமாகக் காரணமாக இருந்தது. அப்போது இந்துக்களுக்கு முக்கிய எதிரிகளாக அவர்கள் இரண்டு தரப்பைப் பார்த்தார்கள். ஒன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்; இன்னொன்று முஸ்லிம் பிரிவினைவாதம். இந்த இரண்டுக்கும் எதிராகப் போராடும் பொருட்டு இந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒழுக்கவியல் கல்வியும் தற்காப்புக் கலைகளும் கற்றுத் தருவதே ஆர்எஸ்எஸின் நோக்கம்.

ஆனால் அது மதவாதத்தை உயர்த்திப் பிடித்தது என்பதையும் உள்ளூர வன்முறைக்கு தயாராகவே அதன் செயல்பாடுகள் அமைந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.


4.    2001 அக்டோபர் 7ல் மோடி குஜராத் முதல்வராகிறார். பாபர் மசூதி ஏற்கனவே இடிக்கப்பட்டு, அரசின் பாதுகாப்பில் இருந்த இடத்தில் 2001 - 2002 வரை நடைபெற்ற மகாயாகம் ஏன் திட்டமிடப்பட்டது?

அயோத்தியில் ராமஜென்மபூமி என்றழைக்கப்படும் பாபர்மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை அரசு கையகப்படுத்தி இருந்தாலும் பொதுவாக அந்த இடம் தவிர்த்து அயோத்தியின் மற்ற இடங்களில் கரசேவகர்களின் நடமாட்டமும் பல வித மத நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. இன்று வரை கூடத் தொடர்கிறது. அதற்கு பிஜேபி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற இந்துத்துவ அமைப்புகளே காரணம். சட்டப்படி பிரச்சனைக்குரிய இடம் தவிர்த்து அயோத்தியின் மற்ற பகுதிகளில் இதெல்லாம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய / மாநில அரசுகள் பொதுவாய் தலையிடுவதில்லை.

ஏதேனும் பதட்டம் உண்டாகக்கூடிய சூழல் நிலவும் போது அதற்கென தனியாய் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேவையான நடவடிக்கையை எடுக்கும் அனுமதியை அரசு பெறும். இது போன்ற ஒரு விசித்திரக் குழப்பமான சூழல் தான் இருபதாண்டுகளுக்கும் மேலாக அயோத்தியின் நிலைமை. இந்தச் சூழலில் தான் விஷ்வ ஹிந்து பரிஷத் அந்த மஹா யாகத்தை நடத்த 2001ல் திட்டமிட்டது.


5.    கரசேவர்களை பத்திரமாக வழியனுப்பிய அரசு ஏன் அவர்களை பத்திரமாக வரவேற்கவில்லை?

மாநில உளவுத்துறைகள் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே பிரதான காரணம். குஜராத்திலிருந்து கரசேவர்கள் அயோத்தி நோக்கி கிளம்புவது குஜராத் உளவுத்துறைக்குத் தெரியும். யாகம் முடிந்து திரும்ப உத்திரப் பிரதேசத்தில் இருந்து கிளம்புவது குஜராத் உளவுத்துறைக்கு தெரியவில்லை. இன்னொரு காரணம் ரயில்வே காவல் துறையின் அசட்டை. அயோத்தியிலிருந்து சபர்மதி குஜராத் நோக்கிக் கிளம்பியது முதலே பல ஸ்டேஷன்களில் பிரச்சனை நடந்துள்ளது. அது அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்குச் சொல்லி அவர்களை உஷார் நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஒட்டுமொத்த அரசு எந்திரத்தின் தோல்வியே இது.


6.    கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து மிகத் தெளிவாக, 2002 ஃபிப்ரவரி 27 காலை 07.43 முதல் மாலை 4 மணி வரை நுணுக்கமாக, ஆதாரங்களுடன் விரிவாக எழுதியுள்ளீர்கள். ரயில் எரிப்பு திட்டமிட்டு நடந்ததல்ல என்பதை வாதாடும் விதம் நுணுக்கமானது. சற்று விளக்குங்கள்.


கோத்ராவில் நடந்த சபர்மதி ரயில் எரிப்பு முஸ்லிம்களால் முன்கூட்டி திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல மூன்று முக்கியக் காரணங்கள்:

ஒன்று கோத்ரா ரயில் நிலையத்திலிருந்து ரயில் எரிக்கப்பட்ட இடத்திலும் அதற்கு முன்பும் என இரண்டு இடங்களில் ரயில் நின்றிருக்கிறது. ஆனால் முஸ்லிம்கள் யாரேனும் ரயிலுக்குள் ஏறியதாக சரியாய் நிரூபிக்கப்படவில்லை. எனில் ரயிலில் உள்ளே இருந்த கரசேவகர்கள் தான் இருமுறையும் ரயில் நின்றதுக்குக் காரணம்.

அடுத்து நின்ற ரயிலுக்குள் வெளியே சூழ்ந்து துரத்திய முஸ்லிம்கள் எரிபொருளை வீசினார்கள் என்பதற்கோ நெருப்பு எதையும் வைத்தார்கள் என்பதற்கோ கரசேவகர்கள் தவிர்த்த பிற பயணிகளோ ரயில்வே ஊழியர்களோ சாட்சி சொல்லவில்லை.

கடைசியாய் எரிந்த ரயில் பெட்டிகளை ஆராய்ந்த தடய அறிவியல் ஆய்வகம் கொடுத்த அறிக்கை பெட்டியை எரிக்கத் தேவையான எரிபொருளை வெளியே இருந்து உள்ளே ஊற்றி இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகச் சொல்கிறது.


7.    ரயில் எரிப்பு குறித்து இரு விசாரணைக்குழுக்கள். இரு விதமான நேரெதிர் முடிவுகள். ஏனிந்த முரண்பாடு?


ரயில்வே அமைச்சகம் அமைத்த பேனர்ஜி கமிஷன் எரிந்த ரயில் பெட்டியை நேரடியாய் ஆராயவே மாநில அரசால் அனுமதிக்கபடவில்லை. ஆவணங்களை ஆராய்ந்தது, ஆட்களை விசாரித்தது ஆகியவற்றைக் கொண்டு தான் பேனர்ஜி கமிஷன் தன் அறிக்கையைத் தாக்கல் செய்தது. அது இதை விபத்து என்று தான் சொன்னது. நாம் அறிந்தவரை அது எந்த மனச்சாய்வுமற்ற சுதந்திரமான அறிக்கை.

ரயில் எரிப்பை விசாரிக்க குஜராத் மாநில அரசே அமைத்த ஷா - நானாவதி கமிஷன் முஸ்லிம்களின் முன்கூட்டியே திட்டமிட்ட சதியே ரயில் எரிப்புக்குக் காரணம் என்று சொன்னாலும் அந்த கமிஷனின் அறிக்கை மாநில அரசால் influence செய்யப்பட்டது என தெகல்கா ரகசியப் புலனாய்வுகளில் தெரிய வந்தது. போலீஸ் லஞ்சம் தந்து போலி சாட்சிகளைத் தயாரித்திருந்தார்கள். அது கமிஷனால் ஏற்பட்டிருந்தது.

ஒன்று ஆதாரங்களின் அடிப்படையிலானது. மற்றது திரிக்கப்பட்டது. அது தான் வித்தியாசங்களுக்கு காரணம். கன்சர்ன்ட் சிட்டிசன்ஸ் ட்ரிப்யூனல், ஹசார்ட்ஸ் சென்டர்  போன்ற அரசு சாரா அமைப்புகள் ரயில் எரிப்பை விசாரித்து அறிவித்த முடிவுகள் பேனர்ஜி கமிஷன் முடிவை ஒத்திருக்கின்றன என்பது முக்கியமானது.


8.    ரயில் எரிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டவர்களும், கருத்துச் சொன்னவர்களும் கலவரத்தை உருவாக்க முக்கிய காரணமானவர்கள் என்று முடிவுக்கு வர இயலுமா?

ரயிலில் எரிந்த கரசேவகர்களின் உடல்களைப் படம் பிடித்து ஊடகங்களில் வெளியிட்டார்கள். உடல்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்கள். இது எல்லாம் அங்கே எரிந்த ரயிலைப் பார்வையிட வந்த குஜராத் முதல்வர் உள்ளிட்ட பிஜேபிகாரர்களின் செயல். இதெல்லாம் குஜராத் இந்துக்களின் கோபத்தை தூண்டும் விதத்தில் அமைந்தன. இது தவிர ரயில் எரிப்பு பற்றி பத்திரிக்கைகள் வெளியிட்ட பொய்ச் செய்திகளும், இந்துத்துவத் தலைவர்களின் துவேஷப் பேச்சுகளும் இந்துக்களிடையே வெறுப்புணர்ச்சியைத் தூண்டின.

இவை எல்லாம் தாம் கலவரங்கள் பெருமளவில் பரவ முக்கியக் காரணங்கள்.


9.    அந்த பந்த் குறித்தும், அது திட்டமிடப்பட்ட விதம் குறித்தும்? பந்த் தான் கலவரத்திற்கான திட்டமிடலா?


ரயில் எரிப்பைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்த பந்த் தான் கலவரங்களுக்கு மூலக்காரணம். அந்த பதட்டமான சூழலில் பந்த் நடந்தால் பெரும் வன்முறைகள் மூள அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கிறது என்று நன்கு தெரிந்த போதும் மாநில அரசு அதை அனுமதித்தது. ஒருவகையில் கலவரத்திற்கான திட்டமே.


10.    நெடுநாட்களாகத் தீவிரமாக ஆராய்ந்து பட்டியல்கள் தயாரித்து சில மணி நேரங்களில் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று பக்கம் 51ல் கலவரங்கள்  எப்படி நடந்தன என்ற பகுதியில் கூறியுள்ளீர்கள். ஆக, கலவரம் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டதா?

கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனால் கலவரம் நடந்த முறையை வைத்துப் பார்க்கும் போது அது இந்துக்களின் உடனடி எதிர்வினையாகத் தோன்றவில்லை. முன்பே தயாராகி சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்ததாகவே தெரிகிறது. தவிர சில பகுதிகளில் கலவரத்திற்கு நெடுநாட்கள் முன்பிருந்தே இந்துக்கள் தம் வீடுகளை மிகப் பலமான் இந்து அடையாளங்களை இட்டு வைத்திருக்கின்றனர். கலவரம் ஏதும் நடந்தால் தாம் முஸ்லிம்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு எந்த சேதாரமும் நேரக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்கள் என்று ஒரு தியரி உண்டு. நிரூபணமில்லை.

(தொடரும்)

No comments: