அநிச்சை நகல்கள்

இன்றைய‌ செகண்ட் ஸிட்டிங் ரயில் பயணத்தில் அருகே ஓர் இளங்குடும்பம். கணவன், மனைவி, குழந்தை. குழந்தைக்கு 3 இருக்கும்; மனைவிக்கு குறைந்தபட்சம் 36 (முதலாவது வயது). அக்குழந்தைக்கு உணவூட்ட அப்பெண் நேடுநேரமாய் முயற்சித்துக் கொண்டிருந்தார். ம்ஹூம். குழந்தை (சம்)மதியேன் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. பிறகு அந்த ஆள் தன் பையிலிருந்து ஐபேட் எடுத்து ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடிக் காட்ட ஆரம்பித்தார் அந்தக் குழந்தைக்கு.

உற்சாகமான குழந்தை அதைப் பார்த்துக் கொண்டே ஏதோ பேசியபடி சமர்த்தாய் சோறுண்ணத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் எனக்கு சட்டென ஒரு ட்வீட் தோன்றியது: "அம்மா ஊட்டாத சோற்றை ஆங்க்ரி பேர்ட் ஊட்டும்". அதை மொபைலில் டைப் செய்தும் விட்டேன். ஆனால் ஏதோ உள்ளுணர்வில் உறுத்தவே தேடிப் பார்த்ததில் கிடைத்தது இது!


நீதி: ஏற்கனவே நான் பலமுறை சொன்னது தான். சில விஷயங்களை காப்பி எனத் தட்டையாய் சொல்லி விட முடியாது.

படித்த பாதிப்பில் மிகப் பிடித்துப் போனதில் வார்த்தையோ வாக்கியமோ அதன் பகுதியோ அப்படியே ஆழ்மனதில் தங்கி விடுகிறது. பிற்பாடு சமயம் கிடைக்கையில் நம்முடையது என்பதாக நமக்கே போலித் தோற்றம் காட்டி ஏமாற்றி விட்டு நம் எழுத்தில் வந்து விடுகிறது. சுஜாதாவின் நடையும் வைரமுத்துவின் கவித்துவமும் இப்படித் தான் நெடுங்காலம் என் எழுத்தில் கோலோச்சின. சமீபமாய்த் தான் அதிலிருந்து ஓரளவு விடுபட்டிருக்கிறேன். சில சமயம் நேர்ப்பேச்சிலும் கூட இப்படி வந்து விடும். சில நேரம் இவை பாதிப்பு என்பதாக அல்லாமல் விபத்தாக ஒரே போல் சிந்தித்ததாகவும் இருக்கும்.

சமீப காலமாய் ட்விட்டரில் இது போல் அடிக்கடி நிகழ்வதைக் காண்கிறேன். நானே பலருக்கு இந்த ஒற்றுமைகளை / பாதிப்புகளை சுட்டிக் காட்டியும் இருக்கிறேன். குற்றம் சாட்டும் தொனியில் அல்ல; அதன் சுவாரஸ்யம் கருதி. இதை சரி என்று சொல்லவில்லை. இதையும் கூட தவிர்க்கத் தான் வேண்டும். ஏற்கனவே கேட்டது போல் தோன்றினால் ஒரிஜினல் தானா என ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னர் எழுதலாம். கவனமாய் இருந்தாலே இதில் பாதியைத் தவிர்த்து விடலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என அனுபவப்பூர்வமாய் உணர்ந்ததைப் பதிவு செய்யும் பொருட்டே இப்பதிவு.

மற்றபடி, நன்கறிந்தே செய்யப்படும் சிந்தைத் திருட்டுக்களை எப்போதும் கடுமையாக எதிர்க்கிறேன். அறிவே தெய்வம்!

Comments

Unknown said…
Few are not capable of doing it, few are not aware of doing it! But if its sane copying, as u said must be punished! If not, can be ignored as innocence!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்