மயிரு [சிறுகதை]

குமுதம் இதழில் 'ஹேர் ஸ்டைல்!' என்ற தலைப்பில் வெளியான சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.

******

விழிப்புத் தட்டியவுடன் சுடலை தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

நேற்றுப் பெய்த முதல் மழையில் துளிர் விட்ட பச்சைப் பசும்புல்வெளி கணக்காய் வழுக்கை மண்டையில் ஆங்காங்கே சிறுசிறு மயிரிழைகள் முளை விட்டிருந்தன. எழுந்து போய் சுவற்றிலிருந்த பாதரசம் போன பெல்ஜியம் கண்ணாடி முன் நின்று தலையைப் பார்க்கும் ஆவலை சோம்பேறித்தனத்தினால் ஒத்திப் போட்டான் சுடலை.

கார்த்திகைக் குளிர் மாசிக் கடைசி வரையிலும் வீசி விட்டுத் தான் ஓய்கிறது. அது மனிதர்களின் மனதிலும் உடலிலும் சோம்பலின் சொகுசை விதைத்துப் போகிறது.

கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. வெளிச்சம் பார்த்தால் காலை ஏழு மணி ஆயிருக்கும் எனத் தோன்றியது. அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு ஆளுக்கு சமைக்க அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து என்ன தான் செய்வாளோ தெரியாது. அப்பா காலத்திலிருந்தே அதே பழக்கம்.

இப்போது அவளுக்கு பிரஷர் இருக்கிறது, அடிக்கடி தலை வலிக்கிறது என்கிறாள். மெதுவாக எழுந்து வேலை செய்தால் என்ன‌‌ என்றால் கேட்க மாட்டேன் என்கிறாள்.

சுடலைக்கு போன ஐப்பசியில் தான் முப்பத்தி மூன்று முடிந்தது. இந்த வயதில் எல்லோருக்கும் முன் மண்டையில் வழுக்கை விழத் தொடங்குவது சகஜம் தான். ஆனால் சுடலைக்கு கிட்டதட்ட மொத்த மண்டையும் வழுக்கை விழுந்து விட்டது.

பத்தாவது படிக்கும் வரையில் எல்லாருக்கும் இருப்பது போல் சுடலைக்கும் தலை நிறைய முடி இருந்தது. பின் திடீரென முன்மண்டையில் தொடங்கிய முடி உதிரல் ஒரு வருடத்தில் பின்மண்டை வரை மொத்தமாய்க் அழித்து விட்டுத் தான் நின்றது.

பிஎஸ்ஜி கலைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைத்து பிஎஸ்சி படிக்கப் போனவன் எல்லோரும் சொட்டை என கேலி செய்கிறார்கள் என்று படிக்கப் போக‌ மாட்டேன் என அடம் பிடித்தான். பின் அப்பனின் மிரட்டலுக்குப் பயந்து போனான்.

அவனுக்கு பத்தொன்பது வயதிருக்கும்போது அதீதமாய்க்குடித்த ஒரு மார்கழி இரவில் மாரடைப்பு கண்டு இறந்து போனார் அவன் அப்பா. சிங்காநல்லூரில் இருந்து கொண்டு காட்டன் மில்லுக்கு வேலைக்குப் போனார் என்று தான் பெயர், ஆனால் சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை. வீட்டை கவனிக்கவும் அவனை மிரட்டவும் ஆள் இல்லாமல் போனதால் கல்லூரிக்கு முழுக்குப் போட்டான் சுடலை.

பீளமேட்டில் ஓர் எலக்ட்ரிக்கல் கடைக்கு வேலைக்குப் போகத் தொடங்கினான். பிறகு ஈபியில் கரண்ட் கம்பம் ஏறும் லைன்மேன் உத்தியோகம். அவன் அம்மா முதலில் பயந்தாலும் அரைக் காசென்றாலும் அரசாங்கக் காசு என்று வாளாவிருந்து விட்டாள்.

ஆனாலும் கிண்டல்கள் குறைந்தபாடில்லை. கூட்டத்தில் அவனை அடையாள‌ப்படுத்த "சொட்டையா ஒருத்தர் இருக்காரு பாருங்க" என்பார்கள். வந்தா மலை, போனா மயிரு என்ற பழமொழி பேசப்பட்டால் அவனைக் கைகாட்டி, "நிறைய மலையக் கட்டி இழுத்திருக்கான் போல‌ இருக்கே" என்று சொல்வார்கள். "கண்ணு கூசுது, தொப்பி போடுடா" என்பார்கள். அப்பாவியாய் முகம் வைத்துக் கொண்டு “சீப்பு வேணுமா?” எனக் கேட்பார்கள். ஓனிடா தலையன், ஃபுட்பால் கிரவுண்டு என கற்பனை வளம் மிக்க பட்டப் பெயர்கள். முன்னால் சிரித்துப் பேசுபவர்கள் கூட அவன் இல்லாத போது அவன் தலை பற்றி கேலி பேசுவார்கள். எந்தக் குழந்தையைத் தூக்கினாலும் தலையையே தொட்டுத் தொட்டு பார்க்கும். சுடலைக்கு எல்லாம் பழகி விட்டது.

அம்மா அவனிடம் அடிக்கடி "சொட்டை தான்டா உனக்கு அழகு" என்பாள்.

தன்னை சமாதானம் செய்யவே அப்படிச் சொல்கிறாள் என்பதாகவே தோன்றும் சுடலைக்கு. அல்லது தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்கிறாளோ?

"என்னைக் கல்யாணம் பண்ணும் போது உங்கப்பனே சொட்டை தான்டா" என்பாள்.

அவள் சொல்வது உண்மைதான். அவர்களின் கல்யாண ஆல்பம் பார்த்திருக்கிறான். இரும்பு பீரோவில் வைத்துப் பூட்டி இருப்பாள். அடிக்கடி எடுத்துப் பார்த்து பனிக்கும் கண்க‌ள் துடைப்பாள். அதில் அவன் அப்பா சொட்டை தான். அப்போது அவருக்கு இருபத்தைந்து வயது இருந்திருக்கக் கூடும். பழுப்பேறிய அந்த‌ கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் அவரது சொட்டை இன்னமும் எடுப்பாய்த் தெரிவது போலிருக்கும்.

ஒரு பரம்பரைச் சாபமாக சொட்டை தன்னைத் துரத்துகிறதோ என்று நினைப்பான் சுடலை. தானும் மண்டையில் மயிரில்லாமல் தான் கல்யாண ஃபோட்டோ எடுக்க வேண்டி இருக்குமோ என்றெண்ணி உறக்கம் வராமல் பல இரவு புரண்டிருக்கிறான்.

இப்போதும் அப்படி ஒரு குரூர‌ கனவுக்கு பயந்து கண் விழித்ததால் தான் முதலில் தலையைத் தொட்டுப் பார்த்தான். சுடலை தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

அல்லோபதி, சித்த வைத்தியம் எல்லாம் முயன்று பார்த்தாயிற்று. சில டாக்டர்கள் இதெல்லாம் சரி செய்ய முடியாது என்று வெளிப்படையாக கைவிரித்து விட்டார்கள். பலர் காசு வாங்கிக் கொண்டு ஒவ்வொரு முறையும் ஏதாவது புது மருந்து கொடுத்து அலைய விட்டார்கள். டிவியில் டெலிஷாப்பிங் பார்த்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது ரூபாய் பணம் அனுப்பி, பத்திரப் பார்சலில் வீடு வந்து சேர்ந்த அந்த மருந்தையும் தடவிப் பார்த்து விட்டான். ஒரு கேரள நம்பூதிரியிடம் போய் ஆயிரம் ரூபாய் அழுது பயபக்தியுடன் மாந்திரீக பூஜை கூட செய்து பார்த்தாயிற்று.

ம்ஹூம். எதுவுமே வேலைக்காகவில்லை. நாளும் காசும் போனது தான் மிச்சம்.

இந்த நிலையில் தான் போன மாதம் ஜெய்சாந்தியில் பொங்கல் ரிலீஸ் படம் பார்க்க வந்த பக்கத்துத் தெரு சங்கர் இண்டர்வெல்லின் போது உக்கடத்தில் ஒரு துலுக்க டாக்டர் இருப்பதாகவும், சொட்டைத் தலை, பட்டை மார் போன்ற பிரச்சனைகளுக்கு கைராசிக்காரர் என்றும் சொன்னான். சங்கர் தங்கையின் சமீப திடீர் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும் போது அவன் சொல்வதில் உண்மை இருக்கும் எனப் பட்டது.

படம் முடிந்தவுடன் வீட்டுக்குக் கூட வராமல் உக்கடம் பஸ் ஏறினான். அவர் ஒரு யுனானி மருத்துவர். தலையைப் பரிசோதித்து விட்டு “சரி செய்து விடலாம்” என்றார். அவன் பார்க்கப் போன ஒவ்வொருவரும் இதைத்தான் செய்வார்கள், அந்தத்தலையில் பரிசோதிக்க அப்படி என்ன தான் இருக்கிறது என இதுவரை புரிந்தபாடில்லை.

அடுத்த ஆறு மாதத்துக்கு தலைக்கு குளியல் கூடாது, எண்ணெய் வைக்கக் கூடாது, முடி வெட்டக் கூடாது, மொட்டை அடிக்கக் கூடாது, சாப்பாட்டில் கத்திரிக்காய், மீன் சேர்க்கக் கூடாது, இங்கிலீஷ் மருந்து ஏதும் எடுக்கக் கூடாது, பெண் சம்போகம் கூடாது - இப்படி நிறைய அறிவுறைகளுடன் ஒரு பாட்டில் தைலமும் ஒரு டப்பா குளிகையும் கொடுத்தார் அவர். தைலத்தைத் தினம் தூங்கப் போகும் முன் தலையில் தடவ வேண்டும்; தினம் காலை உணவுக்குப் பின் குளிகையை சாப்பிட வேண்டும்.

எல்லாவற்றையும் விட அதிமுக்கியமாய் ஆறு மாதத்திற்குள் சொன்ன‌ பத்தியத்தில் எதையாவது உடைத்தால் மறுபடியும் தலையில் முடி முளைக்க வாய‌ப்பே இல்லை. அரிப்பு ஏதேனும் ஏற்பட்டால் இடையே வந்து காட்டலாம். மற்றபடி, மறுபடி வரத் தேவை இருக்காது என்றார். மருந்துகளுக்கு ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டார்.

கடந்த ஒரு மாத‌ பத்தியத்தின் விளைவு தான் தலையில் முளைத்திருக்கும் முடிகள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உண்மை தானோ என நினைத்தான் சுடலை.

ஒலித்த செல்ஃபோனை படுத்தவாறே எடுத்து வாசித்தான். ஏதோ கணவன் – மனைவி ஜோக் எஸ்எம்எஸ். அதுசரி, குறுஞ்செய்திகள் தரம் பிரித்தா அனுப்பப் படுகின்றன!

சொட்டைத் தலை ஆம்பிளைக்கு எவன் பெண் தருவான்? சுடலையின் திருமணமும் தள்ளிக் கொண்டே போனது. இருபத்தைந்து வயதில் பெண் பார்க்க அவன் ஜாதகம் எடுத்தார்கள். இன்னமும் பெண் கிடைத்த பாடில்லை. கல்யாண ஃபோட்டோ பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தவனுக்கு கல்யாணமே சாத்தியமா என்ற நிலைமை.

இவனோடு படித்த பயல்கள் எல்லாம் கல்யாணமாகி பிள்ளைக‌ள் பெற்று அவர்களைப் படிக்க வைக்க நாயாய்ப் பேயாய் அலைந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு கல்யாணம் கசந்து போய் பரஸ்பர சம்மத டைவர்ஸ் கூட‌ ஆகிவிட்டது.

உடன் படித்த செந்தில் ப்ளஸ் டூ முடித்து டாக்டருக்குப் படிக்க மெட்ராஸுக்கு ரயில் ஏறிய போது வழியனுப்ப நண்பர்களுடன் போன சுடலை "என்னடா பிரயோஜனம்? படிச்சு முடிச்சு உன‌க்குன்னு ஒரு கண்ணாலங் காட்சி ஆகும் போது தலை பூரா நரைச்சுரும்" என்று கேலி செய்திருக்கிறான். இப்போது அவன் எம்பிபிஎஸ் முடித்து, எம்டி முடித்து, சிவந்த டாக்டர் பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து விட்டான்.

நேரில் வந்து சுடலைக்கு பத்திரிக்கை வைத்தான் செந்தில். "உனக்கு இன்னும் நரைக்கல, நரைக்க வாய்ப்புமில்லை. நீ என்ன தான் சாதிச்சிட்ட?" என்ற எள்ளல் முகத்தில் தெரிந்ததாய்த் தோன்றியது சுடலைக்கு. கல்யாணத்திற்குப் போகவில்லை.

இப்போதெல்லாம் அவன் எந்த விஷேசங்களுக்குமே செல்வதில்லை. எல்லோரும் எதோ எழவு வீடு போல் முகத்தை வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். அல்லது ஏதாவது தூரத்து சொந்தங்களில் பெண் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

முன்பாவது பெண் பார்க்கப் போகும் படலம் மாதம் ஒன்றாவது நடக்கும். அது மெல்லக் குறைந்து இப்போது வருடத்திற்கே ஒன்றிரண்டு என்று வந்து நிற்கிறது.

பெண்களுக்கு குடிப்பவன் சம்மதம், அடிப்பவன் சம்மதம், தண்டச்சோறு சம்மதம், கூத்தி வைத்திருப்பவன் சம்மதம், கடன் வைத்திருப்பவன் சம்மதம், கருவாயன், குண்டோதரன், சோடாபுட்டி எல்லாம் சம்மதம். சொட்டைத்தலை மட்டும் ஆகாது.

ஒருமுறை ஒரு ஐம்பது வயது அம்மாள் "சொட்டைத்தலைய‌ன் என் மருமகனா, வெளியே தலைகாட்டவே முடியாதே!" என்று இவன் காதுபடவே அலுத்துக் கொண்டாள் - அவள் தலையையா இவன் தலையையா என்று சொல்லவில்லை.

இதெல்லாம் பெண் பார்க்க ஆரம்பித்த புதிதில் நடந்தவை. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம் என்ற புரோக்கரின் பொய்யை நம்பி ஒத்துழைத்தது. அந்த ஆயிரம் பொய்களில் சொட்டை இல்லை என்பது விரைவில் புரிந்து போனது.

"சுடலை!" - புரோக்கரின் குரல் வீட்டு வாசலில் கேட்டது.

சிந்தனையிலிருந்து மீண்டு அவசரமாய் வாரிச்சுருட்டி படுக்கையிலிருந்து எழுந்து உள்ளே குரல் கொடுத்தான், "வாங்க. உக்காருங்க. அம்மா! புரோக்கர் வந்திருக்காரு"

அவருக்கு காசு கொடுப்பது நின்று போய் நாளாகிறது. ஆனால் அவரோ இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கி விட்டார். அவர் வருகிறார் என்றால் புதிதாக ஏதாவது ஜாதகம் கொண்டு வந்திருக்கிறார் என்று அர்த்தம். இத்தனைக்குப் பிறகும் சுடலையின் மனம் உற்சாகத்தில் குதியாட்டம் போடத் தான் செய்தது.

“இன்னும் தூக்கம் விட்ட பாடில்லையா, சுடலை?”

“இப்ப தான் எந்திரிக்கறேன். இருங்க மூஞ்சி கழுவிட்டு வர்றேன்”

தூக்கம் போக கழுவி முகந்துடைத்து வரும் போது அம்மா புரோக்கருக்கு காபி கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு சுடலையைக் காட்டிலும் ஆர்வம்.

“என்ன சுடலை, தலையில என்ன? புதுசா முடியெல்லாம் வந்தாப்ல இருக்கு!”

கேள்வி சந்தோஷமாகவும் சங்கடமாகவும் இருந்தது. விஷ‌யத்தைச் சொன்னான்.

“அப்படினா என் வேலை சுலபமாயிருச்சு! இந்த முறை கண்டிப்பா ஓகே ஆயிடும்”

பெண் பார்ப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்துக் கொள்ளலாம் எனப் பிரியப்பட்டான் சுடலை. அதற்குள் தலையில் கணிசமாய் முடி வளர்ந்து விடும், பெண் வீட்டாரிடம் சொட்டைத் தலை குறித்து ஏதும் சொல்ல வேண்டியது இல்லை என்ற நம்பிக்கை அவனுக்கு. அதைப் புரிந்து கொண்டாற் போல் புரோக்கரும் தலையாட்டிப் போனார்.

பங்குனி மத்திக்கு மேல் ஒரு நல்ல நாளில் போய் பெண் பார்த்தார்கள். சுகந்தி – அது தான் பெண்ணின் பெயர் – அழகாய்த் தான் இருந்தாள். புது நிறம். இந்தப் புரட்டாசி வந்தால் முப்பது வயதாகிறது. ஜாதகத்தில் ஏதோ தோஷம், அதனால்தான் திருமணம் தட்டிப் போகிறதென்றார்கள். ஏதோ முணுமுணுத்த அம்மாவை அடக்கினான் சுடலை.
   
அவர்கள் துடியலூர்க்காரர்கள். ஏழ்மைப்பட்ட குடும்பம். அவள் அப்பாவுக்கு சுகந்தியை சேர்ந்து மூன்று பெண் குழந்தைகள். இன்னும் யாருக்கும் கல்யாணம் ஆகவில்லை.

சுகந்தி குனிந்த தலையை இன்னும் நிமிர்ந்தாளில்லை. சுமாராய்ப் படித்திருந்தாள். வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்தியிருந்தார்கள். பின்பு வீட்டில் சும்மா இருந்து விட்டு கடந்த மூன்று மாதங்களாகத் தான் தையல் க்ளாஸ் போகிறாள். அதுவும் வேலைக்குப்போகவில்லையா எனப்பெண் பார்க்க‌ வருபவர்கள் கேட்பதை முன்னிட்டு.

சுடலைக்கு அப்போது தலையெங்கும் இளமயிர்கள் அடர்த்திகொண்டு பரவியிருந்தன.

சுகந்தி சுடலையைப் பார்த்த பார்வையில் பிடித்திருக்கிறதா இல்லையா என்றே உணர முடியவில்லை. ஆனால் அதுவே சுடலைக்கு பேராறுதலாய் இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு பார்க்கப் போன‌ கிட்டதட்ட நாற்பது பெண்கள் முதல் பார்வையிலேயே சுடலையைப் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்ற தம் அசூயையை வெளிப்படுத்தி விடுவார்கள். பிறகு பேசும் பேச்சுக்கள் ஏதும் அவன் காதில் விழாது.

ஒரு வாரம் கழித்து சித்திரைக் கனியன்று சுகந்தி வீட்டில் சம்மதம் சொன்னார்கள். சுடலைக்கு நம்பவே முடியவில்லை. நண்பர்களை டாஸ்மாக் அழைத்துப் போனான்.

ஆனிக் கடைசியில் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது. கணக்குப் போட்டு பார்த்தான். ஆனிக் கடைசியில் வைத்தியர் சொன்ன ஆறு மாதக் கெடுவும் முடிந்து விடுகிறது, நல்லதாய்ப்போயிற்று. கல்யாணம் முடிந்து மேற்படி விஷயத்தில் பத்தியமாய் இருக்க முடியுமா! சுடலைக்கு எல்லாம் இறைவன் செயலாய்ப் பட்டது.

ஏதாவதொரு மண்டபத்தில் முகூர்த்தம், சுகந்தி வீட்டில் சாந்தி எனத்தீர்மானித்தார்கள்.
கல்யாணத்துக்குப் பிறகு ஆடிக்கு சுகந்தி அம்மா வீட்டிலேயே இருந்து கொள்வது,
ஆவணி பிறந்தவுடன் சுடலை வந்து அழைத்துப் போய் விடுவது என்று பேசினார்கள்.

வரதட்சணை இல்லை; சுகந்திக்கென செய்த நகைகள் மட்டும் போட்டு அனுப்புவது, கல்யாணச் செலவை இரு வீட்டாரும் சமமாய்ப் பகிர்ந்து கொள்வது, அவரவர்க்கு வரும் மொய்ப்பணத்தை அவரவரே எடுத்துக் கொள்வது. மொய்ப் பணத்தையாவது முழுதாக தம்பதிகளிடமே கொடுத்து விடுவது தானே முறை என்று புரோக்கர் கூட சொல்லிப் பார்த்தார். கல்யாணத்துக்கு நிற்கும் பெண்டுகளைக் காட்டி வாயடைக்கச் செய்து விட்டார் சுகந்தியின் அப்பா. எல்லாவற்றிற்கும் தலையாட்டினான் சுடலை.

இவை எல்லாவற்றிலும் விமர்சனமும் எதிர்ப்பும் இருந்தாலும் மகனுக்காக பல்லைக் கடித்து வாயை மூடிக் கொண்டிருந்தாள் சுடலையின் அம்மா. சுடலை மிதந்தான். சுகந்தியின் தையல் க்ளாஸுக்குப் போய் ரகசியமாய் அவளைச் சந்தித்து வந்தான். செல்போனில் தினப்படி நூறு எஸ்எம்எஸ்களையும் சுகந்திக்கே அனுப்பித் தீர்த்தான்.

அம்மா யாரோ ஜோஸ்யரிடம் போய்க் கேட்டு வந்து இருவரும் கல்யாணத்துக்கு முன் திருநாகேஸ்வரம் போய் தோஷம் கழித்து வர வேண்டும் என்று கறாராகச் சொல்லி விட்டாள். சுகந்தி வீட்டில் விருப்பமில்லை. வெட்டிச்செலவு என்றார்கள். அம்மாவுக்குத் தெரியாமல் மொத்த செலவையும் தான் ஏற்பதாக வாக்களித்தான்.

வைகாசியில் எல்லோருக்கும் விடுமுறை வாய்த்த ஒரு ஞாயிற்றுக்கிழமையில் பஸ் ஏறி திருநாகஸ்வரமும் கும்பகோணம் கோயிலும் போய் வந்தார்கள். அபூர்வமாய்க் கிடைத்த தனிமையில் சுகந்தியை தயக்க சம்மதத்தினூடே முத்தமிட்டான் சுடலை.

பேராஷூட் எண்ணெயும், க்யூட்டிக்குரா பௌடரும், கொஞ்சம் வேர்வையும் கலந்து நாசியைத் துளைத்த நறுமணத்தில் மனம் திளைத்த படியே சுடலை கேட்டான் -

“உனக்கு என்கிட்ட எது ரொம்பப் பிடிக்கும்?”

கொஞ்சம் கூட யோசிக்காமல் சுகந்தி சொன்னாள் -

"உங்க ஹேர்ஸ்டைல் தான்". அவனுக்கு திக்கென்றது.

தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். எங்கும் முடி ஓரளவு வளர்ந்து விட்டது.

இரு வீட்டாரும் கல்யாண வேலைகளை முடுக்கி விட்டார்கள். ஒண்டிபுதூரில் இருந்த ஒரு மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து வந்தான். பாப்பநாயக்கம்பாளையத்தில் சல்லிசான ஒரு நல்ல சமையல்காரன் இருக்கிறான் எனக் கேள்விப்பட்டு அவனைத் தேடிப் பிடித்தான். வீடியோகிராஃபர் வேண்டாம் என்று சுகந்தி வீட்டில் சொல்லி விட்டதால் இராமநாதபுரத்தில் ஒரு ஃபோட்டோகிராஃபரை மட்டும் புக் பண்ணினான். கணபதியில் தெரிந்த அச்சாபீஸில் பத்திரிக்கை அடித்தான். அலைந்து அழைத்தார்கள். குடும்பமாய்ப் பெரிய கடை வீதி போய் ஜவுளி எடுத்தார்கள். நகை வாங்கினார்கள்.

சுடலைக்கு எல்லோரையும் போல் கிட்டதட்ட தலை முழுக்க முடி வந்து விட்டது.

கல்யாணத்துக்கு இருபது நாள் இருக்கையில் திடீரென சுடலையின் அம்மா செத்துப் போனாள். தலை வலிக்கிறது என்று அலறியவளை ஈஎஸ்ஐ மருத்துவமனை கூட்டிச் செல்லும் வழியிலேயே மூளையில் ரத்தக்குழாய் வெடித்ததால் உயிர் பிரிந்தது.

நிறைய அழுது, ஆத்துப்பாலத்தருகே இருக்கும் மின் மயானத்திற்கு அம்மாவின் உடலைக் கொடுத்து, சாம்பல் வாங்கி, பேரூர் போய்க் கரைத்து வந்தான் சுடலை.

பெண் வீட்டாரும் ஊர்ப்பெருசுகளும் ஒன்றுகூடி நிறைய செலவாகிவிட்டதால் குறித்த தேதியிலேயே கல்யாணத்தை நடத்தி விடுவது என முடிவு செய்தார்கள். ஒரு கெட்ட காரியம் நடந்த வீட்டில் உடனடியாக ஒருசுப‌காரியம் நடத்துவது நல்லது என்றார்கள்.  பதினாறாம் நாள் காரியம் முடிந்தாலே எல்லாத் தீட்டும் கழிந்தது என்றனர். சில வருடங்கள் முன்பாக அவன் தூரத்துப் பங்காளி ஒருவனின் அப்பன் செத்த போது இது போல் செய்ததை உதாரணம் காட்டினார்கள். சுடலையிடம் இது குறித்து தனி அபிப்பிராயம் ஏதுமில்லை; அதை அங்கே யாரும் எதிர்பார்க்கவும் இல்லை.

ஈமக்கிரியையின் போது மழிக்கப்பட்ட மொட்டைத் தலையோடு ஃபோட்டோவுக்கு சிரித்து போஸ் கொடுத்த‌ படி சுகந்தியின் கழுத்தில் தாலி கட்டினான் சுடலை.

*******

Comments

க்ளைமாக்ஸில் ஹீரோயின் சவுரியை கழட்டினாள் என எதிர்பார்த்து பல்பு வாங்கினேன். சொட்டையின் கல்யாண வேட்டை எப்படி டைட்டில் ?
//உக்கடத்தில் ஒரு துலுக்க டாக்டர்//
முழு முகவரி ப்ளீஸ்.
@சேக்காளி
அது முழுக்க முழுக்க என் கற்பனை மட்டுமே!
Anonymous said…
இதற்கு எதற்கு அம்மாவைக்கொல்ல வேண்டும்? 'அந்தப் பெண்ணைத் தனிமையில் சந்தித்தான், மேற்படி பத்தியத்தை மீறிவிட்டான், வைத்தியம் பலிக்காமல் போய்விட்டது' என்று முடித்திருக்கலாம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்