முல்லைப்பெரியாறு - ஒரு முக்கியக்கருத்து

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் பற்றி மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா இந்த வார ஆனந்த விகடன் இதழில் அளித்திருக்கும் நேர்காணல் இது. இதில் கிட்டதட்ட எல்லாக் கருத்துக்களுடனுமே நான் ஒத்துப்போகிறேன். சொந்த இனம் தவறு செய்வதைச் சுட்டிக் காட்ட தனி மனோதிடமும் நேர்மையுணர்வும் வேண்டும் - ஸக்கரியா போல்.

முக்கியமாய், எதிர்ப்படும் எல்லோருமே அணை வேண்டும் / வேண்டாம் என்பது பற்றி ஒரு கருத்து கொண்டிருக்கும் போது ஒட்டு மொத்த தமிழகத்திலும் / கேரளத்திலும் நான் ஒருவன் மட்டும் தான் சிவில் எஞ்சினியராக இல்லாமல் போய்விட்டேனோ என்ற குழப்பமும் சங்கடமும் வந்து விட்டது. என்னை ஆறுதல் படுத்தும் விதம் "ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது" என்று ஒப்புக் கொண்ட ஸக்கரியாவுக்கு சிறப்பு நன்றிகள்.

*******

கேரளத்தை ஆளும் மாஸ் ஹிஸ்டீரியா!

சமஸ்

பால் சக்கரியா. மலையாளத்தின் மகத்தான எழுத்தாளர். துணிச்சலான கருத்துகளுக்காகப் பெயர் பெற்றவர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழர்கள் - மலையாளிகள் உறவில் பிளவை உருவாக்கி இருக்கும் நிலையில் சக்கரியாவிடம் பேசினேன்.

தமிழகம் - கேரளம் இடையே இப்போது நிலவும் கசப்பான சூழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கஷ்டமாகத்தான் இருக்கிறது. வரலாறு, ஒரே ஆட்சியின் கீழ் தமிழகமும் கேரளமும் சேர்ந்து இருந்ததைச் சொல்கிறது. பழந்தமிழில் இருந்து பிரிந்து வளர்ந்த ஒரு கிளைதான் மலையாளம். கேரளத்தின் அநேகப் பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களிலும் குடியேறிய தமிழர்கள் வசிக்கிறார்கள். அவ்வாறே தமிழகமும் லட்சக்கணக்கான மலையாளிகளுக்கு வாழ்வளிக்கிறது. தமிழர்களும் மலையாளிகளும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகவே இதுவரை நடந்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இப்போது ஏற்பட்டு இருக்கும் சூழல் வருந்தத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் பல சுயநலக் கட்சிகள் தமிழகத்தையும் கேரளத்தையும், இந்தியா - பாகிஸ்தான்போல எல்லைத் தகராறை நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றன. இந்த அரசியலுக்கு ஊடகங்கள் பொறுப்பற்ற ஆதரவைத் தருவதுடன் பிரசாரமும் நடத்தி வருகின்றன. இது மிக ஆபத்தானது!

இந்த விவகாரத்துக்குப் பின் தமிழர்கள் மீதான மலையாளிகளின் பார்வை எப்படி இருக்கிறது?

நாம் எப்போதுமே சகோதரர்கள்தான். ஆனால், அணையை வைத்து அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் அரசியல், சிலரின் மனதிலாவது பாதிப்பை உருவாக்கத்தான் செய்திருக்கிறது!

அணை விவகாரத்தில் கேரளத்தின் நியாயம் என்ன? தமிழர்களிடம் இருந்து மலையாளிகள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

கேரளத்தில் 40 நதிகள் இருக்கின்றன. அவற்றில் வெறுமனே 8 சதவிகித நீரைத்தான் கேரளம் பயன்படுத்துகிறது. மீதி தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இதில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்துக்குச் செல்லும் நீரானது ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் கேரளத்துக்குத் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதைப் பெரும்பான்மை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள்.

மலையாளிகள் உண்ணும் சோறும், குழம்புக்குக் காய்கறியும், தின்னும் பழமும், பூஜை மலரும்... அவ்வளவு ஏன்... கறிவேப்பிலைகூட தமிழகத்தில் இருந்துதான் வருகிறது. உண்மையில் மலையாளிகள் தங்கள் எதிர்காலத்துக்காகச் செய்ய வேண்டியது, தாங்கள் வீணாக்கும் 92 சதவிகித தண்ணீரைத் தமிழகத்தில் உள்ள உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு இன்னும் அதிக அளவு கொடுத்து, அதற்குரிய நியாயமான விலையைப் பெறுவ தும், தங்களிடம் இல்லாத அரிசி, காய்கறி, பழங்களைத் தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்க அவர்களிடம் இருந்து உறுதி பெறுவதும்தான். இதை நானே பல முறை பேசியும் எழுதியும் இருக்கிறேன்.

ஆக, தண்ணீர் இங்கு ஒரு பிரச்னை அல்ல. மலையாளிகள் தண்ணீரைப் பிரச்னையாகப் பார்த்தால், அது தவறு.

அதே சமயம், அணையின் பழமை - எல்லா அணைகளையும் போல அச்சத்தை உருவாக்கக்கூடியதுதான். இந்தப் பழமையும் நிலநடுக்க வாய்ப்புகளும்தான் இப்போது அரசியல் நடத்த வாய்ப்புகளாகி இருக்கின்றன. சாதாரண மக்கள் - குறிப்பாக, அணை ஒருவேளை உடைந்தால் பாதிக்கப்படும் சூழலில் உள்ள மக்கள் - அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நடத்தும் பிரசாரத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அணை இருக்கும் பகுதிக்கு அருகில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அணையை வைத்து நடத்தப்படும் அரசியலுக்கும் அணை மீதான அச்சத்துக்கும் வலு சேர்த்து இருக்கின்றன. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்தச் சூழலைப் பெரும் ஆரவாரத்துடன் பயன்படுத்திக்கொள்கின்றன.

மொத்தத்தில், புரிந்துணர்வுடனும் அறிவியல் நோக்குடனும் அணுகப்பட வேண்டிய ஒரு விஷயத்தை வைத்து, 'கும்பல் ஆவேசத்தை’ (மாஸ் ஹிஸ்டீரியா) உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் கள். வேறு வழி இல்லாத சாதாரண மக்கள், இதற்குப் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் இந்தப் பின்னணியில், கேரள மக்களின் அச்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!

அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் ஒருசேர விமர்சிக்கும் இந்தத் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது?

இது ஜனநாயக நாடுதானே? இங்கு ஒரு குடிமகனுக்கு எந்த ஒரு கருத்தையும் வெளிப்படையாகச் சொல்ல உரிமை இருக்கிறதுதானே? கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சக்திகள் எல்லா இடங்களிலுமே இருக்கும். அவற்றுக்கு எல்லாம் பயந்துகொண்டு இருந்தால், ஒரு படைப்பாளி ஒருபோதும் வாயைத் திறக்கவே முடியாது. மாறாக, மக்களை ஆட்டிப்படைப்பவர்களுக்கு எடுபிடியாகத்தான் அவன் இருக்க வேண்டும். அப்படி இருப்பவன் படைப்பாளி அல்ல; மக்கள் விரோதி!

இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

அணை என்பது ஒரு பொறியியல் உருவாக்கம். என்னைப் போன்ற ஓர் எழுத்தாளன் அதைப் பற்றி அறிவியல்பூர்வமாகச் சொல்ல முடியாது. மேலும், ஒரு குடைக் கம்பியைக் கொண்டு அணையின் பலத்தைச் சோதித்துச் சொல்லும் திறன் என்னிடம் இல்லை. (கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஒரு முறை அப்படிச் செய்து காட்டிவிட்டு, அணை பலம் அற்றது என்று சொன்னார்!) அதே சமயம், எனக்குத் தெரிந்து ஒரு தீர்வு இருக்கிறது. அணைப் பொறியியல் தொடர்பாக சர்வதேச அளவில் மிகச் சிறந்த சிலரைக்கொண்ட தன்னிச்சையான ஒரு குழுவை அமைக்கலாம். அந்தக் குழு சொல்லும் எந்தத் தீர்வையும் இரு மாநிலங்களும் நேர்மையாக ஏற்றுக்கொள்ளும் உறுதியைத் தந்து, அவர்களிடம் அணையைப் பற்றி ஆய்வு நடத்தச் சொல்லலாம்.

இந்த இடத்தில் இன்னோர் ஆய்வா என்று என்னைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. இது வரை இரு மாநிலங்கள் சார்பிலும் அமைக்கப்பட்ட ஐ.ஐ.டி. உள்ளிட்ட எல்லா ஆய்வுக் குழுக்களும், அந்தந்த மாநிலங்களின் வாதங்களுக்கு ஏற்ப முடிவு சொல்லியிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குழு என்ன சொல்கிறதோ, அதைக் கேட்கலாம். இப்படி ஓர் ஆய்வை நடத்தினால், அதிகபட்சம் ஐந்து கோடி ரூபாய் செலவாகலாம். இரு மாநில அரசுகளுக்கும் இந்தத் தொகை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் ஒரே மாதிரியான அக்கறை இன்மையைத்தான் வெளிக்காட்டுகின்றன!

*******

நன்றி: ஆனந்த விகடன், 28-டிசம்பர்-2011

Comments

சிந்திப்பவன் said…
இப்படி செய்தால் என்ன?
பழைய அணையை இடித்து விட்டு புதிய அணையை பழைய அணைக்கு முன்னால் (அதாவது)தமிழ்நாட்டில் கட்டலாம்.இந்த அணை முழுவதும் தமிழக அரசுக்கு சொந்தம் என அறிவிக்கலாம்.இப்பொழுது பழைய அணையிலிருந்து எந்த அளவு தண்ணீர் கேரளாவிற்கு போகிறதோ அதே அளவு புதிய அணையிலிருந்து அனுப்புவதாக தமிழக அரசு கேரளா அரசிற்கு வாக்குறுதி தரலாம்.அனைத்து செலவும் (அணை இடிக்க,கட்ட)கேரள அரசே ஏற்கவேண்டும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்