7ஆம் அறிவு - விமர்சனம்

மெல்லினம் இதழில் (நவம்பர் 2011) வெளியான 7ஆம் அறிவு பற்றிய எனது திரைவிமர்சனத்தின் முழு வடிவம் இது:

*******

ஏ.ஆர்.முருகதாஸ் முதல் சூர்யா வரை தமிழனின் பெருமையைச் சொல்கிறதென கூவியறிவித்த படம்; சன் டிவி முதல் விஜய் டிவி வரை ப்ரோமோ நிகழ்ச்சிகளின் மூலமாக உயரத் தூக்கிப் பிடித்த படம்; மல்ட்டிப்ளெக்ஸ் முதல் கீற்றுக்கொட்டகை வரை போட்டிபோட்டு வாங்கித் திரையிட்டிருக்கும் தீபாவளிப்படம் - 7ஆம் அறிவு.

இந்தப்பின்புலங்களோடு சேர்த்துப்பார்க்கையில் படம் ஏமாற்றத்தையே அளிக்கிறது.

7ஆம் அறிவு படத்தின் கதை என்ன? ஆரம்பத்தில் சொல்லப்பட்டது போல் இது ஹாலிவுட்டின் இன்செப்ஷனோ, பாலிவுட்டின் சாந்தினி சௌக் டூ சைனாவோ அல்ல. ஆனால் கொஞ்சமாய் தசாவதாரம் படத்தின் சாயல் மட்டும் இருக்கிறது.

6ம் நூற்றாண்டு போதி தர்மன், சீனா சென்று, மக்களை கொடிய நோயிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் காப்பாற்றி பின் மருத்துவத்தையும் தற்காப்புக்கலையையும் கற்றுத்தருகிறார். 21ம் நூற்றாண்டில் இந்தியா மேல் கிருமி யுத்தம் நிகழ்த்த வரும் சீனஉளவாளிக்கு போதிதர்மரை genetics மூலம் மறுபடி உருவாக்க முயலும் பெண் விஞ்ஞானி தடையாக வர, எந்த நூற்றாண்டு ஜெயிக்கிறது என்பது க்ளைமேக்ஸ்.

வலுவான கதை இருந்தும், தெளிவான திரைக்கதை இல்லாததால் தடுமாறுகிறது படம். போதி தர்மன் என்ற தமிழனை(?!) நம் மக்களுக்கு (மறு)அறிமுகம் செய்யும் டாகுமெண்டரியா அல்லது பயோ-வார் பின்னணியில் எண்டர்டெய்னரா என்பதில் குழம்பியிருக்கிறார்கள். இதில் இடைச்செருகலாய் சூர்யா - ஸ்ருதி காதல் வேறு.

படத்தின் ஆகச்சிறந்த பகுதி என்றால் முதல் 20 நிமிடங்கள் வரும் போதி தர்மன் காட்சிகள் தாம். ரவி கே.சந்திரனின் அற்புத ஒளிப்பதிவும், தோட்டா தரணி மற்றும் ராஜீவனின் அட்டகாச கலையமைப்பும், பீட்டர்ஹெயினின் அசகாய ஸ்டன்ட்களும் உதவியிருக்கின்றன. இன்னும் அதிகமாய் சூர்யாவின் கண்களும், உடல்மொழியும்.

மற்றபடி, படம் முழுக்க சுவாரஸ்யமற்ற சராசரிக் காட்சிகளின் தோரணம் தான்.

6ம் நூற்றாண்டு போதி தர்மன், சர்க்கஸ் கலைஞன் அரவிந்தன் என இரு வேறு காலகட்ட கதாப்பாத்திரங்கள் சூர்யாவிற்கு. தேவைப்படுவதைக் கொடுத்திருக்கிறார். ஆனால் முதல் 20 நிமிடங்கள், கடைசி 10 நிமிடங்கள், அப்புறம் பாடல் காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் சூர்யா தான் கதாநாயகனா என சந்தேகம் வந்து விடுகிறது. அவரை விட அதிகமாய் ஸ்ருதி ஹாசனும், வில்லன் ஜானியுமே வருகிறார்கள்.

தமிழில் ஸ்ருதி ஹாசனின் அறிமுகம் (இந்தி Luck படத்தில் ஏற்கனவே அறிமுகம்). அழகாக இருக்கிறார், மிகஅழகாக இருக்கிறார், ரொம்ப அழகாக இருக்கிறார். மற்ற படிக்கு சமகாலத் தமிழ் நடிகைகளைக் காட்டிலும் எவ்வகையிலும் உயர்வில்லை.

இந்தியன் படத்தில் "நோக்கு வர்மத்தாலேயே விலங்கை உடைக்க முடியுமான்னு பார்க்கறீங்களா?" என்று சுஜாதா எழுதிய ஒரு வசனம் வரும். வில்லனாக வரும் ஜானி (வியட்நாமிய ஹாலிவுட் நடிகர்) நோக்கு வர்மத்தாலேயே எல்லோரையும் வசியப் படுத்தி தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்கிறார். ஆனால் படம் முழுக்க அதே வித்தையை பயன்படுத்திக் கொண்டிருப்பது அலுப்புத் தட்டுகிறது. தவிர பில்லா அஜீத் மாதிரி படம் நெடுகிலும் அவரை நடக்க விட்டிருக்கிறார்கள். கம்பீர தோற்றமும், நிஜத்திலேயே தற்காப்புக்கலை தேர்ச்சி பெற்றவர் என்பதும் ஜானியின் பலம். மற்றபடி நடிப்பதற்கெல்லாம் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.

அபிநயா, அவினாஷ், அழகம் பெருமாள், போன்ற நடிகர்கள் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள். போலவே மலையாள பாக்ருவும், மங்காத்தா அஸ்வினும். பெயர் தெரியாத அந்த சீனத்தாயும் சிறுமியும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள். பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலுமே கோட்டை விட்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அதிலும் அந்தச் சீனப்பாடல் நர்சரி ரைம்ஸ் கேட்பது மாதிரியிருக்கிறது.

ரமணா திரைக்கதையைப் பார்த்து வியந்தவர்களுக்கும், கஜினி காதல்காட்சிகளைக் கண்டுரசித்தவர்களுக்கும் முருகதாஸ் தந்திருக்கும் மெகா ஏமாற்றம் 7ஆம் அறிவு. மேக்கிங்கிலும், வசனங்களிலும் மட்டும் பழைய முருகதாஸ் எட்டிப் பார்க்கிறார் - முக்கியமாய் சென்னையில் அந்தக் கொடிய நோய் பரவுவதை காட்சிப்படுத்தியிருப்பது.

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி சுவாரஸ்யமான காட்சியமைப்புகளின் மூலமாகப் படத்தை நகர்த்தியிருந்தால் கமல்ஹாசனின் தசாவதாரம் போல் ஒரு ரோலர்கோஸ்டர் எண்டர்டெய்னர் ஆயிருக்க வேண்டியது. ஆனால் இப்போதைக்கு இப்படித்தான் நம்மால் சொல்ல முடிகிறது - நல்ல முயற்சி ஆனால் சுமார் படம்.

பயன்படுத்தாத ஏழாம் அறிவு ஒருவருக்கு இருப்பதும் இல்லாததும் ஒன்று தான்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்