௲ - தௌசண்ட் வாலா

வ - குவாட்டர் கட்டிங்

யாராவது அமெரிக்க, ஐரோப்பிய குடிமகன்கள் மென்பொருள் பற்றிய சோம்பேறித்தன‌ ஸ்கைப் சம்பாஷணைகளினூடே மெதுவாய் உங்கள் மொழியின் நல்ல திரைப்பட இயக்குநர் யார் எனக் கேட்டு வைத்தால் உடனடியாய்ச் சொல்ல நேற்று வரை ஓர் ஒற்றை வார்த்தைப் பதிலைத் தயாராய் வைத்திருந்தேன் : அது மிஷ்கின். இன்று முதல் இன்னும் ஒரு (இரு?) பெயரையும் அதனோடு சேர்த்துச் சொல்லலாம் : அது புஷ்கர் - காயத்ரி.


2007ல் ஓரம் போ வந்த‌ போதே என் ப்ரியத்திற்குரிய இயக்குநர்களுள் ஒன்றாகிப் போனது இந்த ஜோடி. அவ்வாண்டு வெளியான படங்களில் முதல் ஐந்துள் ஒன்றாக ஓரம் போவை குறிப்பிட்டிருந்தேன். இப்போது அவர்கள் இயக்கியிருக்கும் 2வது படமான மூலம் அந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை (மிகைமதிப்பு?!). ரொம்ப நாள் கழித்து ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப்பார்க்க முடிந்த படம் (இதற்கு முன்பு பொய் சொல்லப்போறோம்). அத்தனை அசத்தலாய் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கதையே - சொல்லப்போனால் ஒன்லைனே - வித்தியாசமானது. குவாட்டர் கட்டிங்கிற்காக இரு இளைஞ்ர்கள் ஒரு ராப்பூரா சென்னையைச் சுற்றுவதன் வாயிலாக மாநகர இரவு வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. அதற்கே முதலில் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.

அடுத்து, படத்தின் திரைக்கதை - எந்திரன் உட்பட சமீபத்தில் நான் பார்த்த எந்தத் தமிழ்ப்படத் திரைக்கதையைக் காட்டிலும் மிகச்சிறந்ததாக அமைத்திருக்கிறார்கள். இரண்டே கால் மணி நேரம் நீளும் திரைப்படத்தில் எந்த இடத்திலுமே "இதென்ன சப்பையாய்?" என்று பார்ப்பவனுக்கு கேள்வியே எழும்ப விடாமல் (கதையே அந்த சப்பையைப் பற்றியது தான் என்றாலும்!) கவனமாய்க் காட்சிகளைக் கோர்த்து, ஒவ்வொரு விஷயத்தையும் மிகத்துல்லியமாய் ஜஸ்டிஃபை செய்திருக்கிறார்கள். அதற்கு புஷ்கர் - காயத்ரி ஜோடிக்கு இரண்டாவது திருஷ்டி கழிக்க வேண்டும்.

மூன்றாவது திருஷ்டி படத்தின் வசனங்களுக்கு. ஓரம் போ போலவே ஒரு பரப்பிய‌ எழுத்தாளனைப் பொறாமைப்பட வைக்கும் சுவாரசியமான வசனங்கள் (உடனடியாய் நினைவுக்கு வருவது க்ளைமேக்ஸில் தன் கையை ஜான் வெட்ட முயற்சிக்கும் போது சிவா சொல்லும் வசனம் - "துபாய்ல ஆறு மாசம் பொண்ணுங்க சக‌வாசமே இல்லாம இருக்கனுமாம். கை எவ்வளவு முக்கியம்னு தயவு செஞ்சு புரிஞ்சுக்க‌ங்க"). Simply superb!

நான்காவது திருஷ்டி இயக்கத்துக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலுமே நேர்த்தி தெறிக்கிறது.

ஐந்தாவது திருஷ்டி கேமெராவுக்கு. நிரவ் ஷா தன் வாழ்வில் இது வரை எடுத்துக் கொடுத்த படங்களிலேயே இதுவே ஆகச்சிறந்த ஒளிப்பதிவாக இருக்கக்கூடும் (DHOOM, பில்லா, மரதாசப்பட்டினம் படங்களை சேர்த்தால் கூட‌). படம் முழுக்கவே இரவு தான். மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். பிற்பாடு, நான் திரைக்கதையில் ஏதாவது experiment செய்ய நேர்ந்தால் அவரையே ஒளிப்பதிவாளராக அழைக்கத் தோன்றும்.

குறிப்பிடும்படியான மற்ற விஷய‌ங்கள் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்கம். பின்னணி இசை, பாடலிசை இரண்டிலுமே தான் ஒரு ஜீவியல்ல என்று நிரூபித்திருக்கிறார் ஜி.வி.

நடிப்பில் சிவாவை விட‌ சரண் அள்ளுகிறார். லேகா தான் பாவம் - அதற்கு அபிந‌யஸ்ரீயே பரவாயில்லை. எல்லோரிலும் முத்தாய்ப்பு ஜான் விஜய். அதுவும் டபுள் ஆக்ட் வேறு - பிய்த்து உதறியிருக்கிறார். க்ரைக் கூட வந்து போகிறார் (படத்தில் அவர் பேசிய ஒரு வசனம் கூட அர்த்தமாகவில்லை). பாஸில் ஜீவா வந்தது போல், இதில் ஆர்யா guest.

இப்படியெல்லாம் பிரித்துப் பிரித்து ஆராய்வதை விடுத்துப் பார்த்தால் இந்தப்படம் ஒட்டுமொத்தமாக ஓர் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. அதுவும் அசலான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பதிவின் தலைப்பில் சொல்லியிருப்பது மாதிரி தீபாவளிக்கேற்ற தௌசண்ட் வாலா. இதை உள்வாங்கிக் கொள்ளத் தோதாய்த் தமிழன் புலன்களைத் திறந்து வைத்திருக்கிறானா என்பது almost சந்தேகமாகவே இருக்கிற‌து.

ஒன்று சொல்வேன் - இப்படம் வெற்றி பெறாவிட்டால், நிச்சயம் தமிழகம் உருப்படாது.

(வழக்கம் போல்) பின்குறிப்புக‌ள்:
  1. குவாட்டர் என்றால் எவ்வள‌வு சொல்லுங்கள் பார்க்கலாம். 250 மிலி என்றால் நீங்கள் சரக்கை இதுவரை முகர்ந்து கூட பார்த்ததில்லை என்று அர்த்தம் (நானும் அப்படித்தான் - ஆனால் ஒரே வித்தியாசம் சகவாச தோஷத்தால் குவாட்டர் என்பது 250 அல்ல‌ 180மிலி என்கிற பொது அறிவுத்தகவலைத் தெரிந்து வைத்திருக்கிறேன்).
  2. 'வ' என்ற டைட்டிலுக்கு குடித்து விட்டு வாந்தியெடுக்கும் போது எழுப்பும் சப்தம் என்று யாரோ பொழிப்புரை வழங்க, சில காலம் அதையும் நம்பித் திரிந்தேன். ஆனால் படத்தின் தலைப்பில் வருவது 'வ' என்னும் உயிர் மெய் எழுத்தன்று; 'வ' என்ற எண் வடிவம். அது 1/4 அதாவது கால் அதாவது குவாட்டரைக் குறிக்கிறது.
  3. அதே போல், இந்த விமர்சன இடுகையின் தலைப்பில் இருக்கும் '௲' என்ற எழுத்தும் தமிழ் எண் வடிவமே. அது ஆயிரம் (1000) என்ற எண்ணைக் குறிக்கிறது. Tit-for-tat.

Comments

Karthik said…
// படம் ஓடவில்லை என்றால் தமிழகம் உருப்படாது // நல்ல காமெடி!! இன்னமும் படங்களில் தான் தமிழ் நாட்டின் தலை விதி இருக்கிறது என்று நம்பும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகம் நிச்சயம் உருப்படாது.
viki said…
ஹி ஹி ஹி அப்படிப்பட்ட காவியமா? =))
தயவு செய்து இதை படிக்கவும்


http://www.karundhel.com/2010/11/blog-post.html
Anonymous said…
CSK.. Watch 'The Old Man and the Sea'.
Unknown said…
இவ்வளவு ஒரு ''அருமையான'' விமர்சனம் எழுதிய உங்களுக்கு ஒரு பெரிய திருஷ்ட்டி கழிக்க வேண்டும்.

மேலும் அப்படியே திரும்பிப்பார்க்காமல் ஓடிப்போய், தஞ்சாவூர் கல்வெட்டில் ரைட்டர்? C S K க்கு ஒரு இடம் போடுங்கப்பா.
Kumar said…
நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் நமது நண்பர் நலன் குமார் சொல்வதை போல படம் இருக்காது என்பது எனது நம்பிக்கை.

சென்னை இரவு வாழ்கையை அனுபவித்தால் மட்டும் அதன் அருமை புரியும்.

படம் பார்த்த பின்பு எனது கருத்தை சொல்கிறேன்.

Plz delete my previous comment.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்