பரத்தை கூற்று : சாரு அழைக்கிறார்

பர‌த்தை கூற்று புத்தக வெளியீட்டு நிகழ்வு பற்றிய சாரு நிவேதிதாவின் பதிவு இது:

*******

http://charuonline.com/blog/?p=1082

*******

October 12th, 2010

புத்தக வெளியீட்டு விழா

“கடந்த‌ ஒன்றரை மாதமாய் பல்வேறு காரணிகளால் தாமதமாகிக் கொண்டிருந்த ‘பரத்தை கூற்று’ புத்தக வெளியீட்டு நிகழ்வு வரும் 16-அக்டோபர்-2010, ச‌னிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது – எனது ஆதர்சத் த‌மிழில‌க்கியப்‌ பேராளுமைகளுள் ஒருவரான எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு, சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் அவர்களுக்கு என் ப்ரியங்கள்” என்று தொடங்குகிறது சரவண கார்த்திகேயனின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

சில காலம் முன்பு சரவண கார்த்திகேயனின் கடிதத்தை வெளியிட்டு என் பதிலையும் எழுதியிருந்தேன். ஞாபகம் இருக்கலாம். இப்போது அவருடைய ’பரத்தை கூற்று’ அகநாழிகை வெளியீடாக வருகிறது. சரவண கார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள். அழைப்பிதழில் என் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்தாளர் என்ற அடைமொழியை மட்டும் நீக்கியிருக்கலாம். பரவாயில்லை. அது தமிழ்நாட்டு வழக்கம் போலும். 16-ஆம் தேதி சனிக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸுக்கு வந்து விடுங்கள். அந்த இடம் கே.கே. நகரில் உள்ள முனுசாமி சாலையில் உள்ளது. தெரியும் என்று நினக்கிறேன்; கே.கே.நகர் என்றால் கலைஞர் கருணாநிதி நகர்.

இதோ அழைப்பிதழ்:

http://www.writercsk.com/2010/10/blog-post_11.html

*******

சாருவின் பெயருக்கு முன்னால் 'எழுத்தாளர்' என்று பயன்படுத்தியமை குறித்து:

இலக்கியத்துக்கு நிரம்பப் பரிச்சயப்படாத எங்கள் நண்பர் குழாமிடையே நடக்கும் சம்பாஷணைகளில் அடிக்கடி எழுத்தாளர் அல்லது கவிஞர் என்ற முன்னொட்டைப் பயன்படுத்துவ‌தன் (உதாரணம் : எழுத்தாளர் சுஜாதா, எழுத்தாளர் பாலகுமாரன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, எழுத்தாளர் ஜெயமோகன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் மகுடேசுவரன்) பழக்க நீட்சியாக இது அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது (அதன் காரணமாகவே நான் அடைய வேண்டிய இடத்தைக் குறிக்கும் பொருட்டு இத்தளத்தின் பெயரையும் writer என்ற‌ முன்னொட்டுடன் தேர்ந்திருக்கலாம் என்றும்). இம்முறை அதை நீக்கி விட்டேன் - கவனிக்க முதல் வரி.

No comments: