THE சோழன் ECSTASY

ஆயிரத்தில் ஒருவன்.

முப்பத்தியிரண்டு கோடிகளையும் மூன்றரை வருடங்களையும் முழுதாய் விழுங்கிச் செரித்து வெளிவந்திருக்கும் செல்வராகவனின் மலம். மன்னிக்கவும்! - படம். இங்கே 'மலம்' என்கிற பதத்தை எதிர்மறையான பொருளை உணர்த்தும் பொருட்டு நான் பிரயோகிக்க‌வில்லை. எந்தவொரு படைப்பாளியின் படைப்பையும் அவனது சிந்தனையின் ஆகச்சிறந்த‌ கழிவாகவே அதாவது மலமாகவே பார்க்கிறேன் (இந்த மீஉவமை தொடர்பான த‌ர்க்க விவாதங்களை நாம் பிறிதொரு சமயம் விரிவாகப் பேசுவோம்).


"முதற்பாதி நன்றாக இருக்கிற‌து; இரண்டாம் பாதி சுமார் தான்" என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்க (அல்லது எழுதுவதைப் படிக்க) முடிகிறது. அவற்றிலெல்லாம் ஓர் அவசர அணுகலும், முதிர்ச்சியின்மையும் தான் தெரிகிறது. அதே போல் "ஆயிரத்தில், லட்சத்தில், கோடியில் ஒரு படம்" என்று தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்களிடம் ஒருவித முன்முடிவும், கொஞ்சம் பயமும் தான் தெரிகிறது. "செல்வராகவனே ஏதோ வித்தியாசமா செஞ்சிருக்காரு, நல்லா இருக்குன்னே சொல்லி வைப்போம். இல்லாட்டி புரியாதவன்னு ஒதுக்கிடுவாங்க" என்கிற பயத்தைத் தான் சொல்கிறேன்.

இந்த மாயைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஒரு நல்ல படம் என்று சொல்வதை விட ஒரு நல்ல முயற்சி என்பேன். தமிழில் Indiana Jones வகை அட்வென்ச்சர் படங்களே மிகக்குறைவு (திருடா திருடா, புதையல் போன்றவை தவிர‌, குருசிஷ்யன், மேட்டுக்குடி போன்ற அமெச்சூர்களையும் கணக்கு சேர்த்தால் கூட எண்ணிக்கை ரொம்பக் கம்மி தான்). அடுத்து, The Da Vinci Code மாதிரியான சரித்திர ரகசியங்களை ஆராயும் த்ரில்லர்கள் தமிழில் இல்லையென்றே சொல்வேன். தமிழ் சினிமாவில் இவ்விரு தளங்களிலும் இருக்கும் பெரிய‌ வெற்றிடத்தை மிகச்சுலபமாய் இப்படம் ஆக்ரமிக்கிறது. அது தான் இப்படத்தின் பிரதான வெற்றி என்பேன்.

தஞ்சையின் ஒரு குக்கிராமத்தில் நிகழும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் சரித்திர நிகழ்வைச் சித்தரிக்கும் தெருக்கூத்திலிருந்து மெல்ல மாறி அந்தச் சரித்திரம் நிஜமாய் நிகழ்ந்த மூன்றாம் இராஜேந்திர சோழ‌னின் 1279ம் ஆண்டுக்கே பயணிக்கும் தொடக்கக்காட்சி முதல் படம் முழுக்க‌ மிக மிக நுணுக்கமாய் பல காட்சிகள் அற்புதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அத‌ற்கே செல்வராகவனைக் கட்டிப்பிடித்து தீர்க்கமாய் ஒருமுறை கன்னத்தில் முத்தமிடலாம். ஆனால் அதே சம‌யம், ஒட்டுமொத்த திரைக்கதையின் மேலோட்டமான தன்மையின் விளைவான பலவீன‌மான சில காட்சிகளின் ரூபத்தில் பட‌த்தில் ஏற்பட்டிருக்கும் தொய்விற்காக அவரைக் கன்னம் கன்னமாய் (குறைந்தபட்சம் செல்லம் செல்லமாய்) அறையவும் தோன்றுகிறது.

படத்திலிருக்கும் சில காட்சிகளை மறக்கவே முடியாது. பர்ஸிலேயே காண்டம் வைத்திருக்கிறேன் வர்றியா எனக் கேட்கும் கார்த்தியிடம், டேபிளின் அடியில் அவரது ஆண்குறியை நோக்கி பிஸ்டலை நீட்டி ரீமா சென் எச்சரிக்கிறார். கார்த்தியை நடுவே நிற்க வைத்துக் கொண்டு, நான்கெழுத்து வார்த்தைகள் நிரம்பிய‌ மேட்டுக்குடி சாக்கடை ஆங்கிலத்தில் ஆண்ட்ரியாவும் ரீமா சென்னும் பரஸ்பரம் சரமாரியாக திட்டிக் கொள்கிறார்கள். குளிர் மிகுந்த இரவில் உடலை சூடேற்றிக் கொள்ள, கார்த்தியை ஆளுக்கொரு புறம் இறுக்கமாய்க் கட்டிப்பிடித்த படி ரீமாசென்னும் ஆண்ட்ரியாவும் படுத்துற‌ங்குகிறார்கள். கைக்குழந்தையுடன் இருக்கும் தாய் சோழனிடம் பஞ்சத்தை உணர்த்த தன் முலையைப் பிதுக்கி ரத்தம் பீய்ச்சுகிறாள். சட்டியில் சிறுநீர் கழிக்கச் செய்தும், இடுப்பைச் சுற்றித் தடவிப் பார்த்தும் ரீமா சென்னின் கர்ப்ப சரித்திரத்தை அதாவது கன்னித‌ன்மையை சோழர்கள் ஆராய்கிறார்கள். ராணுவத்தினர் சோழன் மனைவியை நிர்வாணமாக்கி ஆடவைக்கிறார்கள்; அவன் மகளை இழுத்துச் சென்று கும்பலாய் வன்புணர்கிறார்கள்.

தவிர, படத்தின் முடிவு கதை ஆரம்பித்த இடத்திற்கே செல்வது (அதாவது, சோழ இளவரசனை பாண்டியர்களிடமிருந்து காப்பாற்றி தப்பிக்கச்செய்வது), நடக்கப் போகும் எல்லா நிகழ்வுகளையும் முன்பே க‌ணித்து, ஓவியங்களாக பாதளக்குகையின் சுவர்களில் தீட்டி வைத்திருப்பது (அவற்றுடன் சமகால‌ நிகழ்வுகளை ஆங்காங்கே ஒப்பிட்டுக் காட்டுவது), சோழன் போன வழியில் தொடர்ந்து போன ஒரு பாண்டிய தளபதி அவ்வழியில் இருக்கும் ஆபத்துக்களை ஓர் ஓலைச்சுவடியில் எழுதி வைத்திருப்பது (அவற்றின் உதவியுடன் தான் ஆராய்ச்சியாளர்கள் குழு பயணிக்கிறது), முக்கால்வாசி தாம் புரிகிறது என்றாலும் பதின்மூன்றாம் நூற்றாண்டுத் தமிழ் பேசி, ரீமா சென் பார்த்திபனை வன்முறையாய் seduce செய்யும் காட்சிகள், பிறகு ஆங்காங்கே தென்படும் செல்வராகவன் branded black humor எல்லாமே அட்டகாசம்.

சோழ இளவரச‌ன் போன பாதைகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டிருப்பதாய் சொல்லப்படும் ஏழு ஆபத்துக்களில் நடராஜர் நிழல் விழும் புதைகுழி மட்டும் பிரமிப்பை ஏற்படுத்தும் நல்ல கற்பனை (கடல், காட்டுவாசிகள், காவலர்கள், பாம்புகள், பசி, கிராமம் ஆகியவை பிற). அதே போல் சோழனின் பாதாள உலகில் காட்டப்படும் அதிசயங்கள் எல்லாம் கட்டிடக்கலை அற்புதங்களாகவும் (உதாரணம்: பார்த்திபன் ரீமா சென்னைத் தொடாமலே தூக்குவது), வேறு இயற்பியல் அதிசயங்களாகவுமே (உதாரணம்: கார்த்தி சிரச்சேதத்திலிருந்து உயிர் பிழைக்கும் காட்சி) எடுத்துக் கொள்கிறேன். இவற்றை மாய மந்திரங்கள் என‌ செல்வராகவன் சொல்லவில்லை என உறுதியாய் நம்புகிறேன்.

கட‌லில் துரத்தும் விசித்திர நீர் வாழ் உயிரினம் (அது என்ன ஜெல்லி ஃபிஷ்ஷா?), Gladiator ஸ்டைல் அரங்கில் நடக்கும் பிரம்மாண்ட சண்டைக் காட்சி, 300 மாதிரியான நிறைய ரத்தம் அழகாய்த் தெறிக்கும் யுத்தகாட்சிகள், ஆராய்ச்சிக்குழுவைத் துரத்தும் பாம்புகள், கூடாரங்களின் மேல் வீசி எரியப்படும் தீப்பந்தங்கள், என ஆங்காங்கே Apocalypto, Mummy, Troy மாதிரியான‌ பல ஆங்கிலப் படங்களின் தூக்கலான‌ வாசனையும் வீசாமலில்லை. ஆங்கிலப்படங்களின் காட்சிகளை அல்லது மொத்த படத்தையே கூட‌ அப்படியே காப்பியடிப்பது த‌மிழ் சினிமா பிராந்தியத்தில் சமீபத்தில் பெருகியிருக்கும் ஒரு விதமான நோய்க்கூறு. ஆனால் தற்போது அது தான் ட்ரெண்ட்.

தவிர, இரண்டாம் பாதியில் வரும் 'புலி'க்கொடி, தலைவனின் ஆளுமை, அந்த இனத்தின் வீரம், ராணுவத்தின் அட்டூழியம், ஒரு இனமே அழிக்கப்படுவது, இனத்தலைவன் பிணத்தை சாதாரணர்களுடன் ஒன்றாய் பிணக்குவியல்களுடன் போடுவது என எல்லாமே நடந்து முடிந்த‌ ஈழ யுத்தத்தை, அதன் உள் அரசியலை impersonate செய்வதாக இருக்கிறது. ஆனால் அவற்றில் வெளிப்பட வேண்டிய கலைத்தன்மையில் ஏதோ ஒருவித வறட்சி நிலவுவ‌தாய்ப் படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்ட‌தைப் போல், திரைக்கதையில் ஆங்காங்கே பல்லிளித்துத் தென்படும் சிற்சில அபத்த ஓட்டைகளைத் தவிர்த்துப் பார்த்தால், படம் எனக்குப் பிடித்திருக்கிறது. பல்வேறு திரைப்படக் கலைஞர்களின் அபார உழைப்பு படத்தின் கணிசமான காட்சிகளில் தெரிகிறது. படத்தின் முக்கியமான பலங்களென்று பார்த்தால், ஐந்து விஷயங்களைக் குறிப்பிடலாம்: செல்வராகவனின் இயக்கம், ராம்ஜியின் ஒளிப்பதிவு, சந்தான‌த்தின் கலை, பார்த்திபனின் பாத்திரப்படைப்பு ம‌ற்றும் ரீமா சென்னின் நடிப்பு. மற்ற‌படி, கார்த்தி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், பிரதாப் போத்தன், அபிநயா எல்லாம் வெறும் அலங்காரத்துக்கு - அல்லது சும்மா கணக்குக்கு மட்டும்.

தசாவதாரம் போல் அல்லாமல், கிராஃபிக்ஸ் நிறைய இடங்களில் திருப்திகரமாகவே இருக்கிறது. சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில், நிறைய இடங்களில் உறுத்தலாகத் தெரியவில்லை. ஆனால் கிராஃபிக்ஸ் மொக்கை என்று ஆங்காங்கே குரல்களைக் கேட்கிறேன். அப்படிச் சொல்பவர்கள் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா என ஆதங்கம் + ஆயாசம் தான் ஏற்படுகிற‌து. ஆயிரத்தில் ஒருவனின் கிராஃபிக்ஸை அவதாரின் அனிமேஷனுடன் ஒப்பிடுவதற்குப் பெயர் மேதாவித்தனம் அல்ல; கூமுட்டைத்தனம். திரைப்படத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிடுவதை விட தமிழிலேயே வந்த முந்தைய திரைப்படங்களை ஒப்பிடுவ‌தே நேர்மையானது. அவ்வகையில் இது பரவாயில்லை.

"தாய் தின்ற மண்ணே" பாடலில் மட்டும் கொஞ்சம் இசை தெரிகிறது (ஆனால் அதிலும் வைரமுத்துவின் வரிகளே பாதி சந்தத்தைத் தீர்மானித்து விடுவதாகத் தோன்றுகிறது). மற்றபடி"உம்மேலெ ஆச தான்" பாட்டெல்லாம் ரொம்ப நாள் தாங்காது (இந்த இடத்தில் "அடடா வா அசத்தலாம்" என்ற யுவனின் சர்வம் படப்பாடல் வேறு தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது). படம் நெடுக பின்னணி இசையும் அஃதே. ஜி.வி.பிரகாஷிடமிருந்து அவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும் என்பது வேறு விஷயம்.

அந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அந்த ஒருவன்(ர்) சந்தேகமே இல்லாமல் நிச்சயம் எம்.ஜி.ஆர். தான். இந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவ்விஷயத்தில் படுகுழப்பம் நிலவுகிறது. ஒருவேளை, செல்வராகவன் தன்னைத் தான் அப்படிக் குறிப்பிடுகிறாரோ? என்னைப் பொறுத்த வரை, இதை த‌மிழ் சினிமாவில் ஒரு முக்கியமான முயற்சியாகவும், செல்வராகவனின் அடுத்த கட்டந‌கர்விற்கான பயிற்சியாகவும் சொல்வேன்.

அடுத்த முறை, நிஜமான யுத்தகளத்தில் சந்திப்போம், செல்வா.

Comments

//’The Da Vinci Code மாதிரியான சரித்திரம் சார்ந்த அமானுஷ்யங்களின்’//

அப்படியா? Da Vinci Code வரலாறு சார்ந்த புதிர்வகைப் (mystery genre) படம். அமானுஷ்யம், ஃபேண்டஸி போன்றவகைளைவிட அதில் புதிர்த்தன்மையும், குறியீட்டு விளக்கங்களும்தான் அதிகம்.

ஆயிரத்தில் ஒருவன் - Indian Jones வகை genre. அதுவும் last crusade தேடிப் போகும் கதையைக் குறிப்பிட்டுச் சொலலாம் என்று நினைக்கிறேன்.
@Sridhar Narayanan
ஒப்புக்கொள்கிறேன். திருத்தியும் இருக்கிறேன். நன்றி.
TBCD said…
//ரீமா சென்னின் நடிப்பு.//

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ரீமா கதை மாந்தருடனும் ஒட்டவில்லை. நடிப்பிலும் சோபிக்கவில்லை.

நல்ல தமிழ் முகமாக தேர்வு செய்து போட்டியிருக்கலாம்...ரீமா பாண்டியன் மகளா...உவ்வே !

ஆயிரத்தில் ஒருவன், தப்பிக்கும் சோழ இளவல் !
Keerthi said…
I felt like Dasawatharam-like crap graphics in the trailer. After ur post, I feel comfy to go see thz movie
perumal said…
//குளிர் மிகுந்த இரவில் உடலை சூடேற்றிக் கொள்ள, கார்த்தியை ஆளுக்கொரு புறம் இறுக்கமாய்க் கட்டிப்பிடித்த படி ரீமாசென்னும் ஆண்ட்ரியாவும் படுத்துற‌ங்குகிறார்கள்.//

இங்குதான் செல்வராகவனின் டச் தெரிகிறது.
Pradeep T R said…
A honest and by far, the best review for this movie I have ever read on the Internet.
Dinesh said…
Really amazing and in-fact,very much frankly spoken about the flim. Kudos to CSK:)

By the way, i do agree with you in appreciating this flim. Because, this is Selva's just 4th flim, if i'm right & this flim is completly belongs to a new genere. All his previous flims were about love,love & only love.

So, we should really appreciate his stint in taking this kind of a subject. Now, this really raise a question about the legendry flim makker Mani Ratnam's "Raavana".. Is it going to be this kind of a try????? we should wait and see!!!!
Keerthi said…
Today only saw thz piece of shit machi. Probably it was my expectation or the screenplay, selvaraghavan has gone way back to his pre-thulluvadho ilamai days. Graphics was like...It was like 20 yrs bk, esp some creature in the river. It was like Maniratnam's anajali. there used to be song with graphics,,,Still in a worst headache and hangover
viki said…
இங்குதான் செல்வராகவனின் டச் தெரிகிறது./////

ஆமாமாம் அவன் ஒரு கலவி வெறி பிடித்த ஒரு மிருகம் என்பது ஊருக்கே தெரியும்..

*
சுகாசினி இந்த படத்தை விமர்சிக்கும் போது இதில் நடிப்பவர்கள் எல்லோரும் "dark" ஆக இருப்பதால் இது ஒரு dark film என்றார்..நான் தலையில் அடித்து கொண்டேன்..Noir Neo Noir பற்றி தெரியாதவர்களெல்லாம் பட விமர்சனம் செய்வது வெட்க கேடு..மேலும் இவ்வாறு ( இதில் நடிப்பவர்கள் எல்லோரும் "dark" ஆகா இருப்பதால்) அவர் விமர்சிக்கும் போது அவரது பார்பன இன வெறியே தெரிந்தது..(சுகாசினி அம்மையாரே dark film குறித்து தயவு செய்து உங்கள் சித்தப்பாவிடம் அதாவது கமலிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது ).
மேலும் இப்படம் ஆங்கில படங்களின் பிரதியா என கேட்டதற்கு செல்வா மூலம் வந்தவன் போல் எரிந்து விழுந்தான்..(Indiana Jones+Apocalypto வாக கூட இருக்கலாம்!!)
அதென்னவோ தெரியவில்லை பண்டைய தமிழ் மன்னர்களை சித்தரிக்கும் பொது ஒன்று புலிகேசி போல் சித்தரித்து கேலி செய்கிறார்கள் இல்லையேல் பார்த்திபன் போல் அடிதொண்டையில் பேசும் ரத்த வெறி பிடித்த ஒருவனாக (அப்படி எந்த மன்னனும் அடிதொன்டையில் கர்ண கொடூரமாகபேசியதாக நான் படித்ததில்லை)காட்டுவதை கண்டவுடன் எனக்கு தோன்றியது ஒன்றுதான்..
கமல் அவர்கள் தனது மருதநாயகம் மற்றும் மர்மயோகி படங்களில் ஏதேனும் ஒன்றையாவது முடித்து மக்களுக்கு பண்டைய தமிழர்கள் குறித்த தெளிவான ஒரு பார்வையை முன் வைக்க வேண்டும்..மற்றபடி சைக்கோ செல்வா படங்களை பார்பவனும் சைக்கோ ஆ(க்கி )கி விடுவான் !!!! =))
viki said…
உயிர்மையில் சாரு செல்வாவை கொத்து பரோட்டா போட்டு விட்டார்(Fetish என்று நெத்தியடி விமர்சனம்)சென்ற மாதம் யோகியை (Tsotsi இன் அட்ட காபி )வறுத்து எடுத்தார் ..தன்னை தானே உலகத்தரமான இயக்குனர் என மார்தட்டி கொள்ளும் அறிவிலிகளுக்கு சாரு போன்றவர்களின் கடுமையான விமர்சனம் நெத்தியடி..
Natraj.P said…
//..தன்னை தானே உலகத்தரமான இயக்குனர் என மார்தட்டி கொள்ளும் அறிவிலிகளுக்கு ..//
சாருவும் அந்த கேட்டகிரி தான் நண்பரே

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்