பொக்கிஷம் - ஒரு கடிதம்

ப்ரிய லெனினுக்கு,

நலம். 'நலமறிய ஆவல்' என்று கூட நான் உங்களை அன்புடன் விசாரிக்க இயலாத‌ தூரத்திலிருக்கிறீர்கள். உங்களுக்கென்ன, நீங்கள் நிம்ம‌தியாய்ப் போய்ச் சேர்ந்து விட்டீர்கள். இங்கே மலேசியாவில் உட்கார்ந்து கொண்டு நாற்பது வருடங்களுக்கு முன்பு நாம் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்களை வைத்து சேரன் எடுத்திருக்கும் 'பொக்கிஷம்' போன்ற திரைப்படங்களை தனிமையில் பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் அபாக்யவதி நான் தானே.

இயக்குநர் சேரனை எனக்கு மிகப்பிடிக்கும் தான். அவருடைய ஆட்டோகிராஃப், தவமாய்த் தவமிருந்து போன்ற படங்களின் இயல்பான கலை வெளிப்பாட்டிலிருந்த அழகியலை நான் நினைத்து நினைத்து மெய் மறந்து நெஞ்சுருகி லயித்திருக்கிறேன். ஆனால் அப்புறம் மாயக்கண்ணாடியில் சரிய ஆரம்பித்த அவர் மீதான நம்பிக்கை இப்போது இந்த பொக்கிஷம் படத்தில் பரிதி முன் பனியே போல முழுவதும் காணாமல் போய்விட்டது.

இந்த படத்தில் கூட இயக்குநர் சேரனாக அவர் நிச்சயம் ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 1970களின் கல்கத்தா செட் (ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும் சில உறுத்தல்களை மன்னிக்கலாம்), சில காட்சிகளின் அழகான ஒளிப்பதிவு, சில இடங்களின் அற்புதமான பின்னணி இசை போன்றவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்தியதற்காக அவரை பாராட்ட வேண்டியிருக்கிறது. ஆனால் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர்.

ஆம். கதை என்று ஒன்று உருப்படியாய் இருந்தால் தானே. நமது கதை என்பதற்காக தூக்கி வைத்தா கொண்டாட முடியும். அப்போது கடிதங்களை இப்போது படித்துப் பார்க்கும் போது ஆபாசமாகத் தோன்றுகிறது - அதிலிருக்கும் பாசாங்கின் காரணமாக. அப்படியிருக்கையில், அதைத் திரைப்படமாக எடுக்கும் தைரியம் சேரனுக்கு எப்படி வந்தது என்பது புதிர் - அதுவும் "இலக்கிய வடிவில் ஓர் இயல்பான திரைப்படம்" என்கிற அறிவிப்புடன்.

தவிர, superlative adjectiveகளால் எழுதப்பட்ட அபத்தமான காதல் கடிதங்களை வரிசையாய்ப் படித்துக் கொண்டே இருப்பது எப்படி ஒரு திரைப்படமாகும் என்கிற தர்க்கமும் புரியவில்லை. கண்ணை மூடிக் கொண்டு கவனித்தால் ஆகாஷ்வாணியில் ஞாயிறு நண்பகல்களில் ஒலிபரப்பாகும் family drama கேட்பது போல் இருக்கிறது. பாடல் காட்சிகளும் கொடுமை - பாடல் முழுக்க வானத்தைப் பார்த்து சிரித்த படி, சேரன் நடந்து கொண்டே இருக்கிறார்.

காதல் ஒரு பைத்தியகாரத்தனம். காதல் பற்றிப் படம் எடுப்பதும் இந்தக் காலத்தில் பைத்தியகாரத்தனம் தான். அந்த வகையில், பல வருடங்களுக்கு முன் இறந்து போன உங்களுக்கு கடிதமெழுதிக் கொண்டிருப்பதும், இதுவரை பொக்கிஷம் படம் பார்க்க வாய்ப்பு கிடைக்காத‌ உங்களுக்கு ஒருவேளை மிகப்பெரிய பைத்தியகாரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிற‌து. சேரனே சொல்லும் காரணம்.

நாற்பது வருடங்கள் முன்பு நீங்கள் எனக்கு எழுதி, என் முகவரி தெரியாமல் அனுப்பாது வைத்திருந்த கடிதங்களை, உங்கள் ம‌கன் மகேஷ் மலேசியாவுக்கு - வேலை வெட்டி இல்லாமல் - ஃப்ளைட் பிடித்து வந்து என்னிடம் ஒப்படைக்கும் போது, இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கடிதத்தையும் யாராவது உங்களிடம் நிச்சயம் சேர்ப்பிப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அது தான் நம் காதலின் வலிமை; உண்மைக்காதலின் பலம்.

நான் நினைப்பது சரியென்றால், நீஙகள் எனக்கு அனுப்பிய கடிதங்களுக்காகவே உங்களை நிச்சயம் நரகத்திற்குத் தான் அனுப்பியிருப்பார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் நரகத்திலிருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளில் ஒன்றாக பொக்கிஷம் படம் பார்ப்பதும் கூடிய விரைவில் சேர்க்கப்படும் என நம்புகிறேன். அப்போது உங்களுக்குத் தெரிய வரும் நான் அனுபவித்த அந்த மூன்று மணி நேர வலியும் வேதனையும். மற்றவை அடுத்த கடிதத்தில்...

இப்படிக்கு,
என்றும் உங்கள் நதீரா.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்