மோதல் விளையாட்டு

நான் ஒரு சரண் ரசிகன்.

நீங்கள் சென்னையில் வசிப்பவரென்றால், "இயக்குநர் சரண் வாழ்க" என்ற வாசகம் பின்னால் எழுதப்பட்ட ஓர் ஆட்டோவை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கிட்டதட்ட அதே அளவுக்கு அவரது படங்களுக்கு - குறிப்பாய் அவற்றின் வசனங்களுக்கு - நான் விசிறி. அவர் இயக்கிய‌ படங்களில் வசூல்ராஜா MBBS (மற்றும் நான் இதுவரை பார்க்காத அல்லி அர்ஜுனா) தவிர மற்ற எல்லாப் படங்களுமே (பொதுவாக பெரும்பாலானோரால் மொக்கை என வர்ணிக்கப்படும் ஜே.ஜே., இதயத்திருடன், வட்டாரம் உட்பட) எனக்குப் பிடிக்கும்.


ஒட்டுமொத்த திரைக்கதை என்பது அவரது படங்களில் சுமார் தான் என்றாலும் அவற்றின் வசனங்களும், தனித்தனி காட்சிகளும், கதாபாத்திர உருவாக்கமும் மிகவும் பிரத்யேகமானதொரு நுட்பத்தன்மை வாய்ந்தவை. சராசரிக்கு மேலான ஒரு பார்வையாளனுக்கு மிகுந்த சுவாரசியத்தையும் அதன் வாயிலாக ரசிப்புத்தன்மையின் உவப்பையும் உருவாக்க‌ வல்லவை. எழுத்தில் "வாசிப்பு இன்பம்" என்று ஜெயமோகன் அடிக்கடி குறிப்பிடுவதற்கு இணையாய் சினிமாவில் சரண் படங்களைச் சொல்லலாம்.

"மோதி விளையாடு" என்கிற படத்தை அது வெளியான அடுத்த நாளே மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்ததற்கான காரணத்தை நான் விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் எனக்கு இது நம்பியவர்கள் யாவரும் கழுத்தறுக்கும் ஏழரைச் சனி காலம் போலிருக்கிறது. இம்முறை சரணிடனும் அப்படித்தான் நடந்திருக்கிறது. டைட்டில் கார்டு போடுகையில் கதை - வசனம் எஸ்.ராமகிருஷ்ணன் என்று போடும் போதே எனக்குள் கெளவுளி கத்துவது போல் ஏதோ பட்சி சொல்லி விட்டது.


எஸ்.ராமகிருஷ்ணனின் ஒரு நல்ல சிறுகதையை அல்லது நாவலை சரண் திரைக்கதை அமைப்பது அல்லது சரணின் வழக்கமான‌ ட்ரேட்மார்க் டச்களுடன் கூடிய ஒரு திரைப்படத்துக்கு எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதுவது - இந்த இரண்டில் ஒன்றைக் கூட என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மந்திரவாதி கதைகளில் வரும் சாத்தியமற்ற உலகத்தின் மாயக்கதவுகள் போலத்தான் அது எனக்குத் தோன்றியது. ஒருவேளை எஸ்.ரா. magical realism அல்லது மாந்திரீக யதார்த்தம் என்று குறிப்பிடுவது இதைத்தானோ?

ஒரு சினிமா வசனகர்த்தாவாக எஸ்.ராமகிருஷ்ணனின் மேல் எனக்கு பெரிய மரியாதை கிடையாது (அவருடைய இலக்கிய ஸ்தானத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு எழுத்தாளனாக அவர் என்றுமே என்னை வசீகரித்து வந்திருக்கிறார்). சுஜாதா, மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற தமிழ் சினிமா வசனகர்த்தாக்களில் ஜாம்பவான்களென நான் கருதும் யாருக்கும் அருகில் கூட எஸ்.ரா.வால் வர முடியாது (ஜெயமோகனின் வசனங்களும் என் மனதில் இதே சித்திரத்தைத் தான் உருவாக்கியிருக்கின்றன).

எஸ்.ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த எழுத்தாளர் தான். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரின் இடம் அசைக்க முடியாதது தான். ஆனால் சினிமா வேறு ஜாதி. அதற்கு எழுதும் போது தேவைப்படும் திறமை வேறு மாதிரியானது. அவர் எழுதியதிலேயே வசனம் சிறப்பானதாக அமைந்த படம் உன்னாலே உன்னாலே ஒன்று தான். மற்ற யாவும் (பாபா, சண்டக்கோழி, பீமா, தாம் தூம் போன்று அவர் வசனம் எழுதிய அத்தனை படங்களையும் பார்த்து விட்ட தைரியத்தில் சொல்லுகிறேன்) சராசரிக்கும் கீழானவையே.

சரண் அவருக்குள்ளேயே ஒரு மிக நல்ல வசனகர்த்தாவை வைத்துக் கொண்டு ஏன் வெளியே அலைகிறார் என்பதும் புரியவில்லை. கொஞ்சமே கொஞ்சம் நல்ல வசன‌ங்கள், சந்தானம், ஹனீஃபா வரும் சில காட்சிகள், தேவா, ஹரிஹரன்,லெஸ்லி பாடும் பாடல் மற்றும் காஜல் அகர்வாலின் ஸ்லீவ்லெஸ் தவிர படத்தில் வேறேதும் சுவாரசியமில்லை. அதுவும் வினய் பேசுகையில் தமிழைக் கடித்துத் துப்புவது கேட்கச் சகிக்கவில்லை - characterisation என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள், சரண்.

சரி. அதெல்லாம் இருக்கட்டும். படம் எப்படி இருக்கிறது? சரணின் படங்களில் கால வரிசையில் மட்டுமல்ல, தர வரிசையிலும் இது தான் கடைசி என்பேன். ஹார்பர் க்ளைமேக்ஸ், இரண்டு ஹீரோயின்கள், தாமு, வையாபுரி காமெடி, பரத்வாஜ் இசை போன்ற டிபிகல் சரண் படத்தின் சமாசாரங்கள் இதில் இல்லை. அதே வரிசையில் சத்தமில்லாமல் காணாமல் போயிருக்கும் மற்றொரு விஷயமும் இப்படத்தில் உண்டு - அது சரண்.

Comments

என்னா பாசு... ஃபிஷ் நெட் பார்க்கலையா? ஸ்லீவ்லெஸ்ஸை விட அதுதான் டாப்பு!
ஆர்வா said…
சரணின் திரைப்படங்களில் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் 'பார்த்தேன் ரசித்தேன். செமையான படம். அதே மாதிரி "அல்லி அர்ஜுனாவும்" நல்ல கதை அம்சம் உள்ள படம். ரிச்சாவை ரொம்ப அழகா சரண் காட்டி இருப்பாரு. ஆனா சரன் கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா, தாமு, வையாபுரி, சார்லி போன்றோருடைய மொக்கை காமெடிகளை நம்பறது தான். சரண் படங்கள்ல பாடல்களுக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கும். ஆனா சமீப காலமா சரணுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்