சகா : சில குறிப்புகள் - 5

சகாவுக்குள் ஒரு சுமாரான எழுத்தாளன் உண்டு. எங்கள் கல்லூரி நாடகங்களில் கணிசமானவற்றுக்கு அவன் தான் வசனகர்த்தா . ஒரு முறை பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பெருந்தலைகள் பலர் கலந்து கொண்ட விழாவில் நிகழ்த்த‌ப்பட்ட நாடகத்தில் அவன் எழுதிய வசனம் இது: "பேரு அனிதா, சுருக்கி 'அன்னி'னு கூப்பிடுவோம்" "நல்ல வேளை, பேரு சுனிதா இல்லை". அடுத்த நாள் சப்பை காரணங்கள் சொல்லி சகாவை ஒரு மாதம் ச‌ஸ்பெண்ட் செய்தார்கள். பிறகு தான் தெரிந்தது துணைவேந்தரின் மகள் பெயர் சுனிதா என்று. விஷயம் கேள்விப்ப‌ட்டு அப்பெயரைச் சுருக்கி துணைவேந்தரை விளித்தான் சகா.

**********************

ட்விட்டரின் உபயத்தில் சகா புதிதாக சினேகித்திருக்கும் ஜெனிஃபர் கேத்ரீன் என்கிற அமெரிக்க தேசத்துப் பெண்ணின் வயது பதின்மூன்று. இந்த வயதிலுள்ள எந்தப் பெண்ணும் சகாவுடன் அரை மணி நேரம் முகம் பாராமல் (கவனிக்கவும்! முகம் பாராமல் - அது மிக முக்கியம்) சாட் செய்தால் போதும், நிச்சயம் அவன் மீது பைத்தியமாகி விடுவாள். ஆச்சரியமாய், ஜெனிஃபர் மட்டும் சிக்க மாட்டேனென்கிறாள் ("ஏடாகூடமா ஏதாவது பேசினா ஒண்ணுமே தெரியாத மாதிரி ஸ்மைலி அனுப்பறா மச்சி"). சகாவும் விடுவதாயில்லை. மிகவும் கெஞ்சிய பிறகு, தனது புகைப்படத்தை அனுப்பியிருக்கிறாள் ஜெனிஃபர்.

**********************

சகா தவறாக நினைக்க மாட்டான் என்கிற நம்பிக்கையில், உரிமையுடன் அவனிடம் அனுமதி கேட்காமலேயே ஜெனிஃபர் அனுப்பிய படத்தை இங்கே வெளியிடுகிறேன் (பெண்கள் விஷயத்தில் சபலப்படும் பலகீனமான ஆண்கள் மற்றும் த‌ன்னை விட அழகானவர்களைக் கண்டு பொறாமைப்படும் பெண்கள் தயவு செய்து ஜெனிஃபரின் புகைப்படத்தைப் பார்க்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்) . ரிட்டயர்ட் கேஸான ஜெனிஃபரின் தந்தை‌ மூன்றாம் வில்லியம் ஹென்றி தற்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தின் non-executive chairman. அவருக்கு மற்றொரு பெயரும் உண்டு - பில் கேட்ஸ்.

**********************

புத்தருக்கு அடுத்த படி நிர்வாணத்தைப் ப‌ற்றி அதிகம் சிந்தித்தது, பேசியது, செயல்பட்டது சகாவாய்த் தான் இருக்கும். அவனுடைய போதி மரம் பெண்கள். இவ்விடயத்தில் சகாவின் மேல் ஒரு பழி சொல்லலாகாது. "நானா தேடிப் போகிறேன்?" என்பான். அவனைப் பொறுத்த வரை அவன் செய்து கொண்டிருப்பது ஒரு சமூக சேவை. அல்லது இறைப் பணி என்று கூட வைத்துக் கொள்ளலாம். கிட்டதட்ட மந்தை தவறிய ஆடுகளை இரட்சிப்பது மாதிரியானது. ஆடுகளிடம் மேய்ப்பனுக்கு இல்லாத உரிமையா. சகா கொஞ்சம் அதிகமாகவே சலுகை எதிர்பார்ப்பான். ஆடுகளும் அவன் சொல்வது படி ஆடும். முரண்டு பிடிக்கும் ஆடுகளுக்கு வேறு மாதிரியான வைத்தியம். அதன் பெயர் நட்பு.

**********************

சகாவுக்கு கன்னி ராசி. ஆனால் அவனோடு இழையும் பெண்கள் யாரும் அந்த ராசிக்கு பொருத்தமாய் இருப்பதாய்த் தெரியவில்லை. "Virginity is a relative term. எவ்வளவு பழசானாலும் எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் எப்பவும் புதுசா ஏதாவது ஒண்ணு இருக்கும். அதைத் தேடிக் கண்டு பிடிக்கிறது ஒரு பெரிய கலை. கடைசி வரை அப்படி எதுவும் கிடைக்கலைன்னா கற்பனை பண்ணனும். அந்த‌ வகையில ஒவ்வொருத்தியும் மனோரஞ்சிதம் பூ மாதிரி. ஆமாம். மனசில தான் எல்லாம் இருக்கு" என்பது சகாவின் அருள்வாக்கு. இது பெண்களுக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

Comments

Keerthi said…
I think I can guess frm d AU incident...haha

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்