சகா : சில குறிப்புகள்

சகாவை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதுவும் நீங்கள் அலைபாயும் மனதுடைய ஓர் இளம் யுவதியென்றால் நிச்சயம் தெரிந்திருக்கக்கூடும் (இதைப் படித்தால், "அலைபாயாத மனசிருக்கிற பொண்ணு யாருப்பா உலகத்தில இருக்கா?" என்று கூவுவான்). பெங்களூர்=பெண்+கள்+ஊர் பதிவில் சொல்லப்பட்ட "இவளுங்களை எல்லாம் வரிசையாய் நிறுத்தி வெச்சு ஒவ்வொருத்தரா ...க்கனும் மச்சி" என்கிற புகழ் பெற்ற வச‌னம் அவனுடையது தான்..

**********************

சகாவுக்குப் பேச்சு தான் அப்படி இப்படி இருக்குமே தவிர ஒரு நேரத்தில் ஒரே கேர்ள் ஃப்ரெண்ட் என்கிற கொள்கையில் தவறாதவனாய் இருப்பவன். அவனுக்கும் அவனது தற்போதைய கேர்ள் ஃப்ரெண்டுக்கும் இடையேயான சிறு ஊடலின் முடிவில் அவள் அவ‌னுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் தணிக்கைகுப் பிந்தைய வரிகள் இவை: "போடா புலி..... பன்னி குட்டி it was just a conversation...
My next question about that was, Do ....? U stupid boy... I Love U da...."

**********************

சகாவுக்கு மது, புகை என்று எந்தப் பழக்கமும் கிடையாது (இந்த வரிசையில் மாது என்பதைத் தவிர்த்து விட்டேன் என்பதைக் கவனிக்கவும். அது சகாவின் வேண்டுகோளின் படி திட்டமிட்டு செய்ததே. அதற்கு அவன் சொன்ன காரணம்: "த‌ப்பே கிடையாது. இது வேற மாதிரி. உடம்புக்கானதில்லை. மனசுக்கான treatment"). அளவுக்கதிகமான புலாலுடன் அளவில்லாத aerated drinks குடிக்கும் பழக்கம் மட்டும் உண்டு. அப்புறம் கொஞ்சம் Pizza; கொஞ்சம் பெண்கள்.

**********************

சகாவிடம் அவன் தகிடுதத்தங்களைப் ப‌ற்றிய விமர்சனங்களை முன்வைத்தால் அதை அவன் கண்டுகொள்வதேயில்லை. மீறிக்கேட்டால் அந்த சம்பாஷணையை முடிக்கும் விதமாய் பெரும்பாலும் அவன் கடைசியாய்ச் சொல்லும் வாக்கியம் இதுவாய்த்தான் இருக்கும்: "உன்னை மாதிரி சாமியார் பயல்களுக்கு என் வாழ்க்கை புரியாது. I pity on such complicated pugs". அவனுக்கு ஏகபத்தினிவிரதன்கள் எல்லோருமே சாமியார்கள் தான்.

**********************

சகா ஒருமுறை சொன்னது: "உன்னை யாரோ பெத்திருக்கா, என்னை யாரோ பெத்திருக்கா ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா அப்படின்னு ஏதோ விஜய் படத்தில் ஒரு பாட்டு வருமே, அதை தளபதி படத்தில ரஜினி அரவிந்த்சாமியைப் பார்த்துப் பாடற மாதிரி யோசிச்சுப் பாரு". இதற்கு முன் "சோளி கே பீச்சே கியா ஹை" பாட்டுக்கும் இதே மாதிரி ஒரு remix proposal
கொடுத்திருக்கிறான். அதைப் பிரசுரிக்க இயலாது.

**********************

பிற்சேர்க்கை: இதைப் படித்து விட்டு என் மனைவி "இது சாரு நிவேதிதாவின் பெருமாள் கதைகள் மாதிரி இருக்கிறது" என்று சொன்னத‌ன் தொனியில் "இதைப் பிரசுரிக்காதே" என்ற அதட்டலை விட "என்ன இது புதுப்பழக்கம்?" என்ற கவலையே தென்பட்டது. முதல் வாசகியாய் ஆரம்பத்திலிருந்து என் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கிறவள் என்கிற முறையில் அவளது அந்தக் கருத்தை உதாசீனம் செய்யவே முடியவில்லை. ஆனால்...

Comments

//என்ன இது புதுப்பழக்கம்?"//

நல்ல பழக்கமாத்தான் தெரியுது. தொடருங்க. :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்