எல்லாப்புகழும் இறைவனுக்கே

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் பற்றிய எனது கருத்தில் என் மனைவிக்கு சிறிதும் உடன்பாடு இல்லை (அவள் ஒரு தீவிர ‌ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகை). அந்தப்பதிவை நான் எழுதியத‌ற்குப் பழிவாங்கும் விதமாக‌ கடந்த இரு நாட்களாக உண‌வில் உப்பும் காரமும் கூடக்குறையப் போட்டு வைக்கிறாள்.

அது கிடக்கட்டும். ஸ்டார் மூவிஸில் ஆஸ்கர் லைவாக ஒளிபரப்பப்படுவதால் இன்று காலை எல்லா வீட்டு வேலைகளையும் அப்படியே போட்டு விட்டு ரிமோட்டுடன் டி.வி. முன்னால் அமர்ந்து விட்டாள். நானும் வேறு வழியின்றி அவளுடன் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

Slumdog Millionaireக்காக சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொண்ட Chris Dickens பேசுகையில், தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாக‌க் குறிப்பிட்டார். உடனே என் மனைவி, "இந்தியாவை எல்லோருக்கும் பிடிக்கிறது - இந்தியர்களைத்தவிர" என்று சொன்னாள்.

அவள் என்னைத்தான் சொல்கிறாளோ என நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் Slumdog Millionaireக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது. பின்பு அதில் வரும் "Jai Ho" பாடலுக்காக மற்றொரு விருது.

நல்லவேளை என் மனைவி எனக்கு உப்பும் காரமும் குறைத்துப்போடுகிறாள்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்