தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்கு

பொ.ஊ. 969ம் ஆண்டு என்பது ஓர் உத்தேசக் கணக்கு. ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசன் கொலை ஆகிறான். கொன்றது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள். அனேகமாகத் தமிழ் வரலாற்றில் பதிவாகி இருக்கும் முதல் கொலை வழக்கு அதுவே.

எப்படி தஞ்சை பெரிய கோயில் என்பது ராஜராஜ சோழன் என்ற மாபெரும் த‌மிழரசன் கட்டினான் என்பதே பல்லாண்டுகளாக மக்களுக்குத் தெரியாமல் போய் இறுதியில் ஒரு ப்ரிட்டிஷ்காரர் வந்து மறுகண்டுபிடிப்பு செய்து மீள்அறிமுகப்படுத்த‌ வேண்டிய‌ நிலை இருந்ததோ அப்படி ஆதித்த கரிகாலன் கொலையும் பல காலம் மக்களால் மறக்கப்பட்டு பிறகு 1950-ல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக நினைவூட்டப்பட்டது.

ஆனால் பொன்னியின் செல்வன் ஒரு புதினம். கற்பனைக் கதை. இந்தக் கொலை பற்றி இருக்கும் அசல் வரலாற்று ஆவணங்கள் என்னென்ன‌? சரித்திர ஆய்வாளர்கள் இது பற்றி அதிகாரப்பூர்வமாகச் சொல்வது என்ன? இது பற்றி முழு உண்மை வெளிவந்து விட்டதா?

*

ஆதித்த கரிகாலன் கொலை பற்றிப் பார்க்கும் முன் சோழ நாட்டில் அப்போது நிலவிய அரசியல் சூழல் சுருக்கமாக: சோழ மன்னர் கண்டராதித்தர் மறைய, அவரது மகனான மதுராந்தகன் சிறுவனாக இருக்க, கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயர் அரசனாகிறார். ஆனால் அவரும் ஓரிரு ஆண்டில் மறைய, அவரது மகன் சுந்தர சோழர் அரசனாகிறார். நியாயமாக அவர் அசல் உரிமை கொண்ட மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, தனக்கு அடுத்து அரசனாக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யாது தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுகிறார். இந்தப் பதவிப் பிரச்சனை முதல் பகை. வரி கட்ட மறுத்து சண்டித்தனம் செய்து கொண்டிருந்த பாண்டிய நாட்டின் மீது ஆதித்த கரிகாலன் போர் தொடுத்த போது மன்னன் வீர பாண்டியனின் தலையைக் கொய்து தஞ்சைக் கோட்டை வாயிலில் குத்தி வைக்கிறான். அது பாண்டியர்களிடம் உண்டாக்கிய வன்மம் இரண்டாம் பகை. இச்சூழலில்தான் அவன் கொல்லப்படுகிறான்.

அதன் பிறகு உத்தம சோழன் என்ற பெயரில் மதுராந்தகன் அரசனாகிறான். அவனுக்குப் பிறகு ஆதித்த கரிகாலனின் தம்பியான (பிற்பாடு ராஜராஜ சோழனாகப் புகழ் பெற்ற‌) அருண்மொழி வர்மன் அரசனாகிறான். ஆதித்தன், அருண்மொழியின் சகோதரியான குந்தவை, வந்தியத்தேவன் என்ற சிற்றரசனை மணந்து செல்வாக்குடன் திகழ்கிறாள்.

ஆதித்த கரிகாலன் கொலை பற்றி நமக்கு இரண்டே ஆவணங்கள்தாம் கிடைக்கின்றன. ஒன்று உடையார்குடி கல்வெட்டு, மற்றொன்று திருவாலங்காட்டுச் செப்பேடுக‌ள். அவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே பல்வேறு வரலாற்று ஆய்வாளர்களும் தத்தம் நிலைப்பாட்டை இந்த விஷயத்தில் வந்தடைந்தார்கள். அந்தக் கருத்துக்களை ஒட்டியே பொன்னியின் செல்வன் முதல் ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு வரை நூற்றுக்கும் மேற்பட்ட‌ வரலாற்று நாவல்கள் கடந்த முக்கால் நூற்றாண்டில் எழுதிக் குவிக்கப்பட்டன.

*

உடையார்குடி கல்வெட்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியிலுள்ள‌ அனந்தீசுவரம் ஆலயத்தில் கருவறையின் மேற்குப்புற அதிட்டானத்தில் இடம்பெற்றுள்ள‌ ஒரு சாசனம். ராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில் பொறிக்கப் பெற்றது. அதாவது உத்தேசமாக பொ.ஊ. 987. பலரும் புரிந்து கொண்டிருப்பது போல் இது மன்னனின் சாசனமே அல்ல; மாறாக ஒரு தனி நபர் கோயிலுக்களித்த அறக்கொடை பற்றியும், அதற்காக வாங்கிய‌ நிலங்கள் பற்றியும்தான் பேசுகிறது. சரி, இதில் ஆதித்த கரிகாலன் எங்கே வருகிறான்?

வீரநாராயணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோருக்கு குறிப்பிட்ட நிலம் தொடர்பாக மன்னன் அனுப்பிய‌ ஓர் அனுமதிக் கடிதம் இதில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அந்நிலம் முன்பு ஆதித்த கரிகாலன்  கொலையாளிகளுக்குச் சொந்தமாக இருந்தது. கொலைச்சதி தெரிந்ததும் தண்டனையாக அவர்களிடமிருந்த நிலம் பறிக்கப்பட்டது.

கல்வெட்டைப் பொறித்த ஆள் திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த பரதன் எனும் வியாழ கஜமல்ல பல்லவரையன். அவன் அனந்தீசுவரம் கோயிலில் தண்ணீர் பந்தலுக்காகவும் சிவனடியார்களின் உணவுக்காகவும் குறிப்பிட்ட நிலத்தைப் பொன் கொடுத்து வாங்கி நன்கொடையாக அளித்தான் என்பதைப் பதியவே இக்கல்வெட்டு. நிலத்தை அவனுக்கு விற்றது வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினர். கல்வெட்டு அந்நிலத்தின் முன்கதையையும் பேசுகிறது. ஆதித்தனைக் கொன்ற ராஜ துரோகிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் நிலங்கள் முழுவதும் முன்பு அரசின் ஆணைக்கேற்ப வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையினரால் கையகப்படுத்தப்பட்டு, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளன‌. அதன் ஒரு பகுதிதான் மேற்சொன்ன கோயில் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்ட நிலம்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விற்பனை செய்ய கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் என்ற இரு கண்காணிப்பாளர்களை நியமித்து ராஜராஜ சோழன் அனுப்பியிருந்த‌ ஆணைக் கடிதமே கல்வெட்டில் இருந்த மேற்கோள்.

கொலையாளிகள் யார் என இந்தக் கல்வெட்டு தெளிவாகவே சொல்கிறது. சோமன், அவன் தம்பி ரவிதாசன் என்ற‌ பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் என்ற‌ இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவரும் கொலை செய்த‌ துரோகிகள்.

பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் பிராமணர்களுக்கு வழங்கப்படுவது. பஞ்சவன் பிரமாதிராஜன் விருது பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்கள் தரும் விருது. இருமுடிச் சோழ பிரமாதிராஜன் விருது சோழப் அரசர்கள் வழங்குவது. ஆக, ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டில் உருவானது என்பதும் பாண்டியர் சிலர் சோழ நாட்டில் ஊடுருவி அங்கே பதவிகள் பெற்று துரோகிகளாக நடந்து கொண்டனர் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.

குறிப்பிட்ட நிலம் இவர்களின் தம்பி மலையனூரான் என்ற‌ பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன், அவன் தாய் பெரிய நங்கைச்சாணி, அவனது மகன் என‌ மூவருக்குச் சொந்தமானது. நெருங்கிய உறவினர் நிலங்கள் யாவும் பறிக்கப்பட்டன என்பதால் இதையும் எடுத்திருக்கிறார்கள். இதுவே உடையார்குடி கல்வெட்டின் உள்ளடக்கம்.

ஆக, உடையார்குடி கல்வெட்டு ஆதித்த கரிகாலன் கொலைக் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிக்கும் சாசனமல்ல; மாறாக, ஒரு நில விற்பனை ஆவணம் மட்டுமே.

எனவே இக்கல்வெட்டின் மூலம் ராஜராஜன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் தண்டிக்கப்பட்டனர் என்று சொல்ல முடியாது, சுந்தர சோழர் அல்லது உத்தம சோழன் காலத்தில் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம் என‌ ‘உடையார்குடி கல்வெட்டு: ஒரு மீள்பார்வை’ என்ற‌ கட்டுரையில் நிறுவுகிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

*

இரண்டாம் ஆதாரம் திருவாலங்காட்டுச் செப்பேடு. சோழ அரசின் இலச்சினை கொண்ட‌ பெரிய இணைப்பு வளையத்துடன் மொத்தம் 31 ஏடுகள் உள்ள தொகுதி இது. ராஜேந்திர சோழனின் ஆறாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இஃது பிற்கால சோழர் வரலாற்றினை விவரிக்கிறது. 10 ஏடுகள் சமஸ்கிருத ஸ்லோகமாகவும் மீதம் தமிழ் உரைநடையிலும் உள்ளன. அதில் மூன்று சமஸ்கிருத ஏடுகள் ஆதித்த கரிகாலன் பற்றிப் பேசுகின்றன.

ஆதித்த கரிகாலன் போரில் பாண்டிய இளவரசனைக் கொன்றவன்; அவன் தலையைத் தன் நகரில் உள்ள கம்பத்தில் தொங்க விட்டவன்; வானுலகைக் காணும் ஆசையோடு அஸ்மனமானான் என்கிறது. அதாவது உரிய காலத்துக்கு முன்பே செத்துப் போனான் என்றே அர்த்தம். கொலை செய்யப்பட்டான் என்று சூசகமாகச் சொல்கிறது. பாண்டியப் பகை குறிக்கப்படுவதால் செப்பேடு அவர்களையே கொலைகாரர்கள் ஆக்குகிறது. (எசாலம் செப்பேடுகளும் பாண்டிய மன்னனின் தலையை வெட்டி தஞ்சை வாயில் மரத்தில் தொங்க விட்டான் ஆதித்த கரிகாலன் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.)

இதன் அடுத்த பகுதியிலேயே ஆதித்தன் மறைந்த இருளைப் போக்க (அதாவது அரச பதவி ஏற்க) மக்கள் அருண்மொழியை வேண்டியதாகவும் ஆனால் தர்மத்தை அறிந்த அவனோ அதை ஏற்காது அரச பதவியில் ஆசை கொண்ட சிற்றப்பன் மதுராந்தகனிடம் பொறுப்பை ஒப்படைத்ததாகவும் சொல்கிறது. ஆக, மதுராந்தகன் சோழ அரியணைக்கு ஏங்கியதும் ஆதித்த கரிகாலன் அதற்குத் தடையாக இருந்ததும் இதன் மூலம் தெளிவு.

*

இவற்றைக் கொண்டு வரலாற்றாசிரியர்கள் முன்வைக்கும் முடிவுகளைப் பார்க்கலாம்.

சோழர்கள் (புத்தகம் 1) நூலில் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆதித்த கரிகாலன் ஒரு சதி மூலம் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார். ஆனால் அக்கொலைக் குற்றவாளிகள் மதுராந்தகனாகிய உத்தம சோழன் ஆட்சியில் தண்டிக்கப்படவில்லை, ராஜராஜன் அரியணை ஏறிய பின்பே தண்டனை வழங்கப்பட்டது என்று உடையார்குடி கல்வெட்டு உணர்த்துவதாகப் புரிந்து கொள்கிறார். அதையும் மதுராந்தகனுக்கு நாடாளும் ஆசை இருந்ததையும் இணைத்து, அவனே அந்தக் கொலைச் சதிகாரன் என்கிறார் சாஸ்திரி.

பிற்காலச் சோழர் சரித்திரம் (பகுதி I) நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார், சோழத்தின் பிராமண உயர் அதிகாரர்களே ஏன் தம் இளவரசனையே வஞ்சமாகக் கொன்றனர் என வியக்கிறார். ஆனால் உத்தம சோழன் சதி செய்து கொன்றிருக்கலாம் என்ற கூற்றை மறுக்கிறார். அப்படி இருந்தால் ஆதித்தனின் தம்பியான அருண்மொழி வர்மன் எப்படி உத்தமனை அரச பதவி ஏற்க அனுமதித்திருப்பான், எப்படி அவன் மீது பேரன்புடன் இருந்திருப்பான், குடிகளின் ஆதரவு எப்படி உத்தம சோழனுக்குக் கிடைத்திருக்கும் எனக் கேள்விகள் எழுப்புகிறார் (உத்தம சோழன் நல்லாட்சி புரிந்தமைக்குச் சான்றுகள் உண்டு). எனவே இது அதிகாரிகள் சதி மட்டுமே என்கிறார். உடையார்குடி கல்வெட்டை ராஜராஜ சோழ‌ன் காலத்தில்தான் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர் என்பதாகவே பண்டாரத்தாரும் புரிந்து கொண்டாலும் வழக்கின் விசாரணை முடியவும் தண்டனை அறிவிக்கவும் தாமதம் ஆகியிருக்கலாம் என நல்லவிதமாகவே புரிந்து கொள்கிறார்.

கே.கே. பிள்ளையும் பண்டாரத்தார் போல கொலை செய்தது பிராமணர்கள் என்பதைச் சுட்டி அரசாங்க அதிகாரிகள் ஏன் அரசிளங்குமாரனைக் கொன்றனர் என வியக்கிறார். சோழர் வரலாறு (2ம் பாகம்) நூலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அரியணை ஏறும் நிமித்தம் மதுராந்தகனே சூழ்ச்சி செய்து ஆதித்தனைக் கொன்று விட்டான் என்கிறார். தென்னாட்டுப் போர்க்களங்கள் நூலில் கா. அப்பாத்துரை எதிரிகள் சிலரால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் எனப் பொதுவாகச் சொல்லி முடித்துக் கொள்கிறார்.

‘ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கு ஒரு மறு ஆய்வு’ என்ற கட்டுரையிலும் ‘முதலாம் இராசராச சோழன்’ நூலிலும் க.த. திருநாவுக்கரசு கிட்டத்தட்ட சதாசிவ பண்டாரத்தார் சொல்லும் கருத்தையே வழிமொழிகிறார். கூடுதலாக, மதுராந்தகன் மீது குற்றமில்லை என்று மக்களுக்கு உறுதிபடச் சொல்லவே அருண்மொழி அவனை அரியணை ஏறச் செய்தான் என்றும் அவன் குற்றமற்றவன் என மக்களும் ஏற்றதாலேயே உத்தம சோழன் என்ற பெயர் பெற்றான் என்றும் சேர்த்துக் கொள்கிறார். குற்றவாளிகள் பிராமணர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ராஜராஜன் மரண தண்டனை விதிக்கவில்லை என்கிறார். இந்த‌க் கட்டுரை தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்ட அருண்மொழி ஆய்வுத் தொகுதி (பதிப்பாசிரியர்: நடன. காசிநாதன்) மற்றும் சோழர் சமுதாயம் (பதிப்பாசிரியர்: முனைவர் சீ. வசந்தி) ஆகிய இரு நூல்களிலும் இடம் பெற்றது இதன் ஏற்புக்குச் சான்று.

‘A Note on the accession of Rajaraja Chola’ என்ற கட்டுரையில் ஆர்.வி. ஸ்ரீநிவாசன் என்பவர் ஒருபடி மேலே போய் அருண்மொழி வர்மன் அரச பதவிக்கு வர வேண்டி தன் சொந்தச் சகோதரனான ஆதித்த கரிகாலனை குந்தவை, வந்தியத்தேவன் துணை கொண்டு கொன்றிருக்கலாம் என்கிறார். ராஜராஜன் தர்மம் என்றெல்லாம் சொன்னாலும் தன் தவறை மறைக்கவே மதுராந்தகனுக்கு அரச பதவியை விட்டுக் கொடுத்தான் என்பது அவர் ஊகம். ராஜராஜனைத் தப்புவிக்க‌ வேண்டுமென்றே உத்தமனைக் குற்றவாளி ஆக்குகிறார் என்று நீலகண்ட சாஸ்திரியையும் சாடுகிறார். இவ்வாதங்களில் தர்க்கம் இருந்தாலும் இக்கட்டுரையின் நோக்கம் அதிர்ச்சி மதிப்பீடு என்றே எனக்குப் படுகிறது.

‘ஆதித்த கரிகாலன் கொலையும் கருணையும்’ கட்டுரையில் துரை இளமுருகு, இந்தக் கொலை மதுராந்தகன், அருண்மொழி வர்மன் இருவரின் கூட்டுச் சதிதான் என்கிறார். சந்தேகம் வராமல் இருக்க மதுராந்தகனை அரசனாக்கினான் ராஜராஜன் என்கிறார்.

‘பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும்’ என்ற‌ கட்டுரையில் நடன. காசிநாதன் சத்ரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே காலகாலமாக இருக்கும் பொறாமை மற்றும் பகையே ஆதித்த கரிகாலன் கொலைக்குக் காரணம் என்கிறார். அதற்குப் பழி தீர்க்கவே ராஜராஜன் தான் ஆட்சிக்கு வந்ததும் காந்தளூர்ச்சாலை மீது படையெடுத்துப் போய் அங்கே பிராமணர்களின் கடிகையை அழித்தான் என்கிறார்.

காலந்தோறும் பிராமணியம் (பாகம் ஒன்று) நூலில் அருணன் சுந்தர சோழர் போல் அவரது மைந்தன் ஆதித்த கரிகாலனும் பிராமணிய மதமல்லாது, சமண, பௌத்த மதங்களை ஆதரித்து வந்திருக்கலாம் என்றும் அதனால் சினமுற்ற சில‌ சோழ உயர் அதிகாரிகளான பிராமணர்கள் அவனைக் கொன்றிருக்கலாம் என ஊகம் சொல்கிறார்.

இப்படி வரலாற்றில் கைதேர்ந்த பலரும் பல ஆதாரங்கள், தர்க்கங்களின் அடிப்படையில் ஆதித்தன் கொலையில் ப‌ற்பல கருதுகோள்களை முன்வைத்திருக்கின்றனர். இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது இவற்றில் சிலவற்றின் கலவையாகவோ உண்மை இருக்கலாம்.

நான் இந்த ஒவ்வொன்றில் இருந்தும் உண்மைக்கு மிக அருகில் இருப்பதாகத் தோன்றிய விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ என்ற ஆயிரம் பக்க நாவலை எழுதினேன். புனைவெனினும் உண்மைக்கு அருகில் இருந்தால் மட்டுமே மதிப்பு - எதிர்கால நூற்றாண்டின் விஞ்ஞானக் கதை என்றாலும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்காக இருந்தாலும் சரி!

***

(தீராநதி - ஃபிப்ரவரி 2023 இதழில் வெளியானது)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்