தடுப்பூசி அனுபவங்கள்

நண்பர்கள் சிலர் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் பற்றி தனிப் பேச்சில் விசாரிக்கிறார்கள் என்பதால் பொதுவாய் என் அனுபவத்தை, புரிதல்களை எழுதி விடலாம் என நினைக்கிறேன்.

என் அம்மாவிலிருந்து தொடங்கலாம். மார்ச் துவக்கத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்திய‌ அரசு தடுப்பூசி போடத் துவங்கினார்கள். எனக்கு அந்த மாதம் முழுக்க அம்மாவுக்குத் தடுப்பூசி போடுவதில் தயக்கங்கள் இருந்தன - இத்தனைக்கும் அவருக்கு எந்த வயோதிக‌ உபாதைகளும் இல்லை. நான் கவலைப்பட்டது தடுப்பூசியின் திறன் குறித்து அல்ல‌; தடுப்பூசியின் உடனடி பக்க விளைவுகள் பற்றியும் அல்ல‌; சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பெரிய விளைவுகள் நேருமா என்ற கேள்வியே. அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் இல்லை.

இடையில் எங்கள் அடுக்ககத்தில் இருக்கும் முதியோர் அனைவரும் போட்டுக் கொண்டார்கள், ஊரில் என் மாமனார், மாமியாரும் போட்டு விட்டார்கள். இது அம்மாவுக்கு ஒரு peer pressure உண்டாக்கி தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார். அதற்கு மேல் நான் தயங்கவில்லை. மறுநாளே நான் அழைத்துப் போய் பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அப்போது கோவிஷீல்டா கோவேக்ஸினா என்ற குழப்பமும் எனக்கு இருந்தது. மனிப்பாலில் அப்போது இரண்டுமே போட்டார்கள். ஆனால் கோவேக்ஸின் போட வேண்டுமெனில் மருத்துவர் பரிந்துரைக் கடிதம் வேண்டும். நான் அங்கே இருந்தவரிடம் ஏன் அப்படி எனக் கேட்டு நச்சரிக்க, அவர் ஒரு கட்டத்தில் "இரண்டுக்கும் வேறுபாடு ஏதுமில்லை, கோவேக்ஸின் கையிருப்பு குறைவாய் இருக்கிறது, அதனால் அதற்கு இப்படிக் கட்டுப்பாடு விதிக்கிறோம், உங்களுக்கு கோவேக்ஸின்தான் வேண்டுமெனில் போட்டுக் கொள்ளலாம்" என்றார். நான் விசாரித்த வரை சுற்றம் நட்பில் எல்லோருமே கோவிஷீல்ட்தான் போட்டிருந்தனர். அதனால் ஒருவேளை பக்க விளைவுகள் ஏதும் இருந்தாலும் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் (like in software, bigger user base means better support) என அதையே தேர்ந்தேன். அது மார்ச் இறுதி.

அப்போது 4 முதல் 6 வாரம் இடைவெளி சொல்லியிருந்தார்கள் கோவிஷீல்ட் இரண்டாம் டோஸுக்கு. இதற்கிடையில்தான் ஏப்ரல் மத்தியில் நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்கு மறுநாள் இறந்தது தமிழகத்தின் தடுப்பூசி போடும் பயணத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. எங்கள் நண்பர் வட்டத்திலுமே கூட அது பற்றிய கவலைகள் வெளிப்படுத்தப்பட்டன.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஜனவரி மத்தி முதல் ஏப்ரல் மூன்றாம் வாரம் வரை முன்களப் பணியாளர்களும், தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களும் மட்டுமே (வேறு வழியின்றி) தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். மற்றவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது உண்மையில் மிக மிக மந்தமாகவே நடந்தது. அம்மாவுக்கு முதல் டோஸ் போடும் போது கூட அந்த மருத்துவமனையின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் பெருங்கூட்டம் இருந்ததெனச் சொல்ல முடியாது. இங்கே தடுப்பூசிகள் குறுகிய கால எக்ஸ்பயரியோடு வருகின்றன என்பதையும் ஒரு குப்பியை உடைத்தால் பத்து பேருக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் போட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வகையில் தாய்ப்பால் மாதிரிதான் தடுப்பூசியும். அதனாலேயே தடுப்பூசிகள் வீணாகின. தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்ததற்கு இதையே நியாயப்படுத்தலாக அரசு சொல்லக்கூடும் (அதாவது எப்படியும் மக்கள் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை, வீணாவதை விட ஏற்றுமதி செய்வது நல்லது என). ஆனால் மக்கள் அப்படி ஆர்வம் காட்டவில்லை என்றதுமே நிலைமை உணர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு அப்போதே திறந்து விட்டிருந்தால் வீணாவதும் குறைந்திருக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அவசியம் வந்திருக்காது.

மே துவக்கத்திலிருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக‌ மத்திய அரசு அறிவித்தது. அதே சமயத்தில்தான் கோவிட் இரண்டாம் அலை இந்தியாவில் துவங்கியது. அதனால் மக்கள் தடுப்பூசி மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். இந்த இரண்டு காரணங்களாலும் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அப்போது ஆரம்பித்தது. அதே சமயம்தான் (பழைய 4 - 6 வாரக் கணக்குப்படி) என் அம்மாவுக்கு இரண்டாம் டோஸ் போடும் காலம் வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. மே 1க்கு மேல் எப்படியும் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு நிற்கும் கூட்டம் பன்மடங்காகும் என்பதால் சரியாக மார்ச் இறுதி நாளில் Co-WIN தளத்தில் அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் ஸ்லாட் புக் செய்தேன். ஆனாலும் ஏதோ மனதில் பட, அங்கே கிளம்பும் போது தொலைபேசி விசாரிக்க, வராதீர்கள், ஸ்டாக் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நான் உடனே பெங்களூரில் தடுப்பூசி போடும் ஒவ்வொரு தனியார் மருத்துவமனையாகத் தொலைபேசி விசாரிக்கத் தொடங்கினேன். ஒரு மணி நேரம் முயற்சிக்குப் பின் ஒரு மருத்துவனையில் வரச் சொன்னார்கள். ஒன்றரை மணி நேரம்தான் போடுவோம் என்றார்கள். அவசரமாய்க் கிளம்பிப் போனால், அங்கே ஏற்கனவே நீண்ட வரிசை சாலை வரை நின்றது. நின்று டோக்கன் வாங்கியதில் என் அம்மாவுக்குத்தான் கடைசி. ஒரு வழியாய்ப் போட்டு என் அம்மா முழுக்கேடயம் பெற்றவரானார்! சேஷாத்ரிபுரம் ப்ளூ ப்ளிஸ் மருத்துவமனை அது. (இரண்டு முறையும் அவருக்குக் கை வலி தவிர‌ பக்கவிளைவுகள் ஏதுமில்லை.)

மே 1 முதல் Co-WIN தளத்தில் எனக்கும் மனைவிக்கும் ஸ்லாட் புக் செய்ய முயன்றோம். முடியவே இல்லை. கோவேக்ஸின், கோவிஷீல்ட் தேர்வுகளை விடுத்து, தனியார், அரசு மருத்துவமனை எதுவானாலும் சரி, அருகிலா தூரமா என்பதும் கவலை இல்லை என்ற மனநிலைக்குச் சில தினங்களிலேயே வந்து விட்டோம். பிறகு ஊர் வாரியாக‌, வயது வாரியாக இருந்த‌ டெலக்ராம் அலர்ட் குழுவில் சேர்ந்து பார்க்கத் துவங்கினோம். அது ஓரளவு உதவியது. ஆனால் அது கால்கிணறுதான். அலர்ட் வரும். அப்போது ஏற்கனவே லாகின் செய்திருக்க வேண்டும் (அந்த ஓடிபி லாகின் பத்து நிமிடங்களுக்குத்தான் செல்லும்.) கண் முன்னால் ஸ்லாட்கள் காட்டும். புக் செய்ய முயன்றால் இல்லை என்று சொல்லும். அல்லது கேப்ட்சா தவறாகி விடும். மே-1லிருந்து தொடர்ச்சியாய் இரண்டு வாரம் தினம் குறைந்தது 50 முறை கோவின் தளத்தில் முயன்றேன். நடைப்பயிற்சியின் போது முயல்வேன். அலுவலக வேலையில் சிறிய இடைவெளி கிடைத்தாலும் முயல்வேன். அத்தனை தோல்விகள். ஐஆர்சிடிசியில் ரயில் முன்பதிவு செய்வதை விட, ரஜினி படத்துக்கு முதல் காட்சி சென்னையில் முன்பதிவு செய்வதை விட பன்மடங்கு சிரமம். ஒரு கட்டத்தில் ஓசூரில், தர்மபுரியில், கிருஷ்ணகிரியில், சேலத்தில், ஈரோட்டில், கோவையில் அல்லது சென்னையில் கிடைத்தாலும் பயணித்துப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கத் துவங்கினோம். போடுகிறார்களா என்பதும் தெளிவில்லை, அதன் நடைமுறை மற்றும் அறச் சிக்கல்கள் குறித்தும் தயக்கங்கள் இருந்தன.

ஏராளப் பிரயத்தனங்களுக்குப் பின் மே 14 அன்று இருவருக்கும் பெங்களூர் இந்திரா நகரில் இருக்கும் சிவி ராமன் அரசு மருத்துவமனையில் ஸ்லாட் கிடைத்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டால் ஏப்ரல் 12 அன்று பற்றாக்குறை காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்துவதாகக் கர்நாடக அரசு அறிவித்தது. அதனால் ஸ்லாட்டுக்கு முந்தைய நாளே அதே சிவி ராமன் மருத்துவமனைக்குப் போனோம். 200 பேருக்குக் குறையாமல் வரிசை. எல்லோரும் அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருப்பவர்கள். நாங்க விசாரித்ததில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையெனால் கிளம்பி விடச் சொன்னார்கள். அங்கிருந்து ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால், கோரமங்களா அப்போலோ க்ரேடில் இரண்டு மருத்துவமனைகளுக்கும் சென்றோம். அதே பதில். அடுத்து அலுவலக‌ நண்பர் ஒருவர் சொல்லி முந்தைய நாள் ரூபேனா அக்ரஹாரா ஆரம்ப சுகாதார மையத்தில் போட்டதாகக் கேள்வியுற்று அங்கே போனோம். அதே பதில். அன்று இரவு எங்கள் ஸ்லாட் கேன்சல் ஆனது எனக் குறுஞ்செய்தி பெற்றோம். ஆனாலும் இறுதி முயற்சியாக அன்று மறுபடி சிவி ராமன் ஜிஹெச் போய் ஊசி போட அப்பாயிண்ட் இருக்கிறது என நம்பிக்கையின்றிக் காட்டினோம். கேன்சல் எஸ்எம்எஸ் வந்திருக்குமே எனச் சொல்லித் திருப்பி அனுப்பினார்கள். அது அப்படித்தான் முடியும் என உள்ளூர‌த் தெரியும்தான். ஆனாலும் எங்கள் பக்கமிருந்து எந்தச் சுணக்கமும் இன்றி முயன்றோம் என்ற குறைந்தபட்ச நிம்மதி வேண்டும் என்பதால்தான் அவ்வளவு போராடினோம்.

அன்றைய நாளிலேயே (டெலக்ராம் அலர்ட் இன்றி) ரேண்டமாக Co-WIN தளத்தில் பார்த்த போது மைசூர் அப்பலோவில் மறுதினத்துக்கு ஸ்லாட் காட்டியது. யோசிக்காமல் புக் செய்து விட்டேன். எங்களுக்கு வாய்த்ததும் கோவிஷீல்ட்தான். (இப்போதும் Co-WIN தளத்தில் காட்டப்படுவதில் பெரும்பான்மை கோவிஷீல்ட்தான்.) அங்கே போய் இல்லை எனக் கை விரித்தால் என்கிற பயமும் அச்சுறுத்தியது. மிகுந்த யோசனை மற்றும் தயக்கத்துக்குப் பின் போய் விடத் தீர்மானித்தோம். மருத்துவமனை தவிர எங்கும் இறங்கக்கூடாது என முடிவு செய்து இரு வேளைக்கு உணவைக் கட்டி எடுத்துக் கொண்டோம். மறுநாள் சனிக்கிழமை விடுமுறை. அதிகாலையிலேயே காரில் கிளம்பி மைசூர் போனோம். மாவட்ட‌ எல்லையில் சோதனைச் சாவடியில் போலீஸ் விசாரித்தது. தடுப்பூசிப் போடப் போகிறோம் என்றதும் விட்டு விட்டார்கள். மருத்துவமனையிலிருந்து அரை கிமீ தள்ளி ஓர் இடத்தை எடுத்து அங்கே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊசி போடுகிறார்கள். நெரிசல் ஏற்படுத்தாமல் சமூக இடைவெளியுடன் அங்கே புழங்க முடிந்தது. ஊசி போட்டு அரை மணி அமர்ந்து விட்டு (யாரும் அமர்வதில்லை, யாரும் கட்டாயப்படுத்துவதும் இல்லை) கிளம்பி வரும் வழியில் கோடை மழை செல்லமாய் ஆசீர்வதித்தது.

300 கிமீ, 7 மணி நேரம் காரோட்டிப் போய்ப் போடுமளவு என்ன அவசரம் எனக் கேட்கலாம். சுற்றிச் சூழந்த தொற்று மற்றும் மரணச் செய்திகள் அப்படி desparate-ஆகத் தேட வைத்தது என்பேன். கர்நாடகத்தில் அரசு மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை நிறுத்தியதும் முக்கியக் காரணம் (இவ்வாரம் மீண்டும் திறந்திருக்கிறார்கள்). சில விஷயங்கள் எனக்கு முன்பே தெரியும். 1) Co-WIN தளத்தில் அப்பாயிண்ட் கிடைப்ப‌து மிக அரிது. 2) கிடைத்தாலும் திடீரென ஸ்லாட் கேன்சல் செய்ததாக குறுஞ்செய்தி வரலாம். 3) அப்படி ஆகாவிடிலும் நேரில் போகும் போது ஸ்டாக் இல்லை என்று சொல்லலாம். இப்ப‌டி அத்தனை சாத்தியக்கூறுகள் இருந்தும் தொடர்ந்து முயன்றதற்குக் காரணம் முன்பு சொன்னதேதான். வெளிக்காரணிகள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நாம் ஒழுக்கமாக முயற்சிக்க வேண்டும். வந்தால் மலை, போனால் மயிர்.

எங்கள் இருவருக்குமே சில தினங்கள் ஊசி போட்ட இடத்திலும் அந்தக் கையிலும் வலி இருந்தது. ஊசி போட்ட மறுநாள் எனக்கு மட்டும் மெல்லிய காய்ச்சல் இருந்தது (99.5 டிகிரி ஃபார‌ன்ஹீட் வரை). அதுவும் என் தினசரிகளைப் பாதிக்கவில்லை, தெர்மாமீட்டரில் காட்டியதுதான். ஊசி போட்டு இக்கணத்தோடு முழுதாகப் பத்து நாட்கள் முடிந்தது. வேறு ஏதும் பக்க விளைவுகள் இதுவரை இல்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். மருத்துவர் குறிப்பாக உங்களுக்குக் கூடாது என்று சொல்லியிருந்தால் ஒழிய, உங்களுக்கு ஊசி தொடர்பான அலர்ஜிகள் ஏதும் இல்லை எனில் எல்லோரும் போட்டுக் கொள்ளலாம் என்பதே என் புரிதல். சமீபத்திய பேட்டியில் உலக சுகாதார மையத்தின் திட்டங்களின் துணைத் தலைவரான‌ மருத்துவர் சௌம்யா சுவாமிநாதன் கர்ப்பிணிகள் கூட கோவிஷீல்ட் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். அதனால் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே ஒரு கார்டியாலஜிஸ்ட் மற்றும் என் வழக்கமான மருத்துவரிடம் கேட்டு விட்டேன். என்னுடன் படித்து தற்போது மருத்துவராக இருக்கும் இருவரிடம், என் மனைவிக்குத் தெரிந்த இரண்டு மருத்துவர்களிடமும், சமூக ஊடகங்களில் பழக்கமுள்ள‌ இரு மருத்துவர்களிடமும் கேட்டு விட்டேன். எல்லோரும் ஒரு குரலில் சொல்வது இதுதான்: தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. Go for it!

ோசமான பக்க விளைவு கேஸ்கள் பற்றிக் கேட்கலாம். அது உண்மைதான். ஆனால் எண்ணிக்கை கவனியுங்கள். லட்சங்களில் ஒன்று. நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போதும், சாலையில் நடக்கும் போதும் கூட அதே அளவு (அல்லது அதை விடவும் அதிகமான அளவில்) விபத்தை எதிர்கொள்ளும் சாத்தியமுண்டு. ஆனால் நாம் பயணத்தைத் தவிர்ப்பதில்லை. அது மாதிரிதான். போடாவிட்டால் வரும் ஆபத்துக்களோடு ஒப்பிட்டுத்தான் போட வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது.

Efficacy பற்றியெல்லாம் படித்து விட்டு இன்ன தடுப்பூசிதான் வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பலர் ஸ்புட்னிக் வரும் எனக் காத்திருக்கிறார்கள். சிலர் ஃபைஸர் வரும் என எதிர்பார்க்கிறார்கள். மருத்துவர் சென் பாலன் கேலி செய்திருந்தது போல் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் போது தூக்கி எறியப்படும் லைஃப் ஜாக்கெட்டை அணிந்து பிழைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, என்ன கலர், என்ன ப்ராண்ட் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு வாய்ப்பு வரும் போது போட்டுக் கொள்ளுங்கள். வாய்ப்பைப் பெறக் கூடுதலாக‌ முயற்சி செய்யுங்கள்.

ஊசி போடப் போய் அங்கே மருத்துவமனைச்சூழலில் கோவிட் வந்து விட்டால்? என்பது என் நண்பர்களிடம் நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. இது முட்டாள்தனமானது என்பதே என் பதில். இது ஒரு போலியான‌ deadlock நிலை. போட்டால்தான் தடுக்க முடியும், போடப் போனாலே வந்தால் என யோசிக்க முடியாது. We need to take chances safely. என்னைப் போல் பல‌ மருத்துவமனைகளுக்கு அலையச் சொல்லவில்லை. ஆனால் ஒன்றில் ஸ்லாட் கிடைக்கும் வாய்ப்பிருந்தால் தகுந்த பாதுகாப்புடன் போய்ப் போட்டுத் திரும்பலாம். வீட்டிலேயே இருப்பதால் எனக்கு வராது என்பது பூரண உண்மையல்ல. இன்னொரு கவலை ரத்தம் உறைவது என்ற பக்கவிளைவு பற்றியது. உங்கள் உடலில் ரத்தம் உறையும் வாய்ப்பு இருந்தால் தடுப்பூசியை விட கோவிட் வந்தால் அது நிகழும் வாய்ப்பு பன்மடங்கு அதிகம். அதனால் எப்படிக் கணக்குப் பார்த்தாலும் தடுப்பூசி போடுவது லாபம்தான்.

இப்போதும் Co-WIN தளத்தில் நண்பர்களுக்காகப் பார்த்துச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். நான் சொன்ன டெலக்ராம் குழுவில் பெங்களூர் 18+ முதல் டோஸில் மட்டும் சுமார் 26,000 பேர் இருக்கிறார்கள். இன்னும் இது பற்றியெல்லாம் தெரியாமல் இருப்பவர்கள் பன்மடங்கு. எனில் பெருநகரங்களில் நிலவும் தடுப்பூசிக்கான‌ போட்டியை யோசித்துக் கொள்ளுங்கள். அந்த அடிப்படையில் என் உத்தேசக் கணக்குப்படி நம் நாட்டின் 80% மக்கட்தொகைக்கு தடுப்பூசி போட்டு முடிக்க ஒரு வருடமானது ஆகும். அதற்குள் இன்னுமோர் கோவிட் அலையும் வந்து போகலாம். அதையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால்தான் போட்டுக் கொள்ளுங்கள் என்கிறேன்.

முதல் டோஸ் போட்டு சில வாரங்களிலேயே கொஞ்சமாய் கோவிட் எதிர்ப்பு சக்தி வந்து விடுகிறது என்கிறார்கள். இரண்டாம் டோஸ் போட்டு நான்கு வாரங்களுக்குப் பின் எதிர்பார்க்கும் எதிர்ப்பு சக்தி வந்து விடும். அதன் பிறகு கோவிட் வராதா எனக் கேட்டால் அப்படி இல்லை. வரும் வாய்ப்பு குறைவு, வந்தாலும் உயிர் ஆபத்து குறைவு. கவனியுங்கள் பூஜ்யம் ஆகாது. வாய்ப்பு ஒப்பீட்டளவில் வெகுவாய்க் குறைந்து விடும். அதற்காகத்தான் இத்தனை எத்தனங்களும். எப்படிப் பார்த்தாலும் நல்ல டீல்தான்.

என் அனுபவம் சிலருக்கேனும் உந்துதல் ஏற்படுத்தலாம் என்பதால்தான் இதை இவ்வளவு விரிவாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போது அரசு கோவிஷீல்ட் டோஸ்களுக்கான இடைவெளியை 12 முதல் 16 வாரங்கள் என மாற்றி இருக்கிறது. ஆகஸ்ட் வாக்கில் நாங்கள் போட வேண்டிய‌ இரண்டாம் டோஸுக்காக காத்திருக்கிறோம். அப்போது தடுப்பூசி கையிருப்பு நிலை இன்னும் மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். குறைந்தது மைசூர் சமஸ்தானம் வரை சாரட் வண்டியை விரட்ட‌ வேண்டி இராது.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்