நுளம்பு [சிறுகதை]
ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர்.
ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார்.
அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அணிந்திருந்தது கருநீலக் குட்டைப் பாவாடையும் கரமற்ற டாப்ஸும்.
அந்த நண்பர்கள் எவரது பெயரோ செல்பேசி எண்ணோ அவருக்குத் தெரியவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பது மட்டும் அவருக்குத் தெரிந்திருந்தது.
அவரை ஆசுவாசப்படுத்திப் புகாரெழுதி வாங்கிக் கொண்டிருந்தார் ரைட்டர். இடையே கிழவரின் பதற்றந்தணிக்க இரண்டு முறை தண்ணீர் தர வேண்டி இருந்தது. துண்டு துண்டாய் அவரளித்த தகவல்களைக் கோர்வையாக்கி எழுத்தாக்க உதவ வேண்டி இருந்தது. முப்பத்தைந்து வருடங்களாய் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்.
போலீஸ் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவரது கூர்ந்து கவனிக்கும் ஆற்றலைக் கூர்ந்து கவனித்து ரைட்டராகப் போட்டார் அப்போதைய ஆய்வாளர். ஒப்பீட்டளவில் அதிக ஆபத்தற்ற வேலை என்பதால் அவருக்கும் அது பிடித்துப்போனது. ஒரு நாளில் நான்கு எஃப்ஐஆராவது போட வேண்டி இருக்கும். கேஸ் டயரியை மிகத்துல்லியமான சார்ஜ்ஷீட்டாக மாற்ற வேண்டி இருக்கும். எத்தனையோ வழக்குகளின் தலைவிதியை எழுத்தால் திருத்தி நேர்செய்திருக்கிறார். அவர் ஆரம்பித்த காலத்தில் ஸ்டேஷனுக்கு ஒரு ரைட்டர் மட்டுமே இருப்பார். இப்போது நிர்வாகத்திற்கு, குற்றவியலுக்கு, சட்டம் ஒழுங்குக்கு எனத் தனித்தனியாக இருக்கிறார்கள். குற்றங்களின் எண்ணிக்கை அப்படி.
விரலொடிய எழுதி அத்தனை ஆண்டுகளில் ஐந்து காவல் நிலையங்களின் வழியாக உதவி துணை ஆய்வாளராகப் பரிணமித்திருந்தார். இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெறப் போகிறார். இன்னும் ஒவ்வொரு புகாரும் அவருக்கு முதல் புகார் தான்.
கிழவருக்கு நம்பிக்கை சொல்லி அனுப்பி வைத்தது விட்டு அபர்ணாவை அழைத்தார்.
அவள் இன்னும் அசைவின்றி நிலைகுத்திய பார்வையுடன் உட்கார்ந்திருந்தாள். ஒரு வேளை அவளுக்குக் கன்னடம் புரியாதோ என்று ஊகித்து ஆங்கிலத்துக்கு மாறினார்.
“மேடம்…”
அபர்ணாவிடம் அப்போதும் எந்த மாற்றமும் இல்லை. அதே வெறித்த பார்வை. அதே உறைந்த உடல். ரைட்டர் சற்று எரிச்சலுற்றுத் தன் குரலின் டெசிபலை உயர்த்தினார்.
அபர்ணா திடுக்கிட்டுப் பார்த்தாள். வேறொரு காலத்திலிருந்து இக்கணத்துக்கு வந்தது போல், வேறொரு கிரகத்திலிருந்து இங்கே வந்தது போல் திருதிருவென விழித்தாள்.
“வாட் டூ யூ வான்ட், மேடம்?”
அபர்ணா மெல்ல எழுந்து அவரது மேசைக்கு எதிரே இருந்த மர நாற்காலியில் போய் அமர்ந்தாள். அதன் கால்களில் ஒன்று இளகி ஆடியது. அவர்கள் தலைக்கு மேலிருந்த மின் விசிறியின் சுழற்சி ஏதோவோர் உதிரி பாகத்தில் உராய்ந்து கீச்சொலி எழுப்பிக் கொண்டிருந்தது. அதைத் தவிர அந்தக் காவல் நிலையத்தில் வேறெந்தச் சப்தமும் இல்லை. உச்சி வெயில் சன்னல்களின் வழியே வெளிச்சம் பரப்பிக் கொண்டிருந்தது.
முகம் கழுவி வந்திருக்கிறாள் என்பதையும் அதற்குமுன் தொடர்ந்து அழுதிருக்கிறாள் என்பதையும் நெருக்கத்தில் உணரமுடிந்தது. இப்போது கண்ணீர் வற்றியிருக்கக்கூடும்.
அபர்ணா சற்று நேரம் மௌனமாய் இருந்தாள். சாலையில் அவளைப் பார்க்கும் எந்த ஆணும் ஒருமுறை கற்பனையில் கலவி செய்வான், எந்தப்பெண்ணும் ஓரக்கண்ணால் தன் ஆணைப் பார்ப்பாள் என ரைட்டருக்குத் தோன்றியது. அவர் சட்டையில் இருந்த பட்டையில் திம்மைய்யா ரெட்டி என்ற பெயரை மானசீகமாய்ப் படித்தாள் அபர்ணா.
அவளையறியாமல் அவள் உதடுகள் அதில் அசைந்தன. ஒருவேளை பேச ஒத்திகை பார்க்கிறாளோ எனத்தோன்றியது திம்மையாவுக்கு. காத்திருந்தார். அங்கே அவர் முன் வந்து அழுபவர்களும் உண்டு. பொறுக்கத்தான் வேண்டும். அபர்ணா தொடங்கினாள் -
“என் குழந்தையைக் கொன்று விட்டேன்.”
*
அபர்ணாவின் பிறந்த நாள். சதுரமாக ஒரு கேக் வாங்கி வந்திருந்தார் அப்பா. சிவப்பு க்ரீமிலேயே தேவதை படம் வரைந்த கேக். அதன் மீது ஏழு சிறிய மெழுகுவர்த்திகள்.
பக்கத்து வீட்டுக்காரர்களையும் பள்ளி நண்பர்களையும் மட்டும் அழைத்திருந்தார்கள். அதிகம் போனால் பதினைந்து பேர் அந்தச் சின்னஞ்சிறு வீட்டை நிறைத்திருந்தார்கள்.
கேக்கை விட அழகான வெள்ளுடையில் அபர்ணா மத்தாப்பூ போல் சிரித்திருந்தாள். ‘கேக் வெட்டலாம்’ என்று அம்மா சொல்ல, ‘பொறு’ என்று காத்திருக்கச் சொன்னாள்.
சற்று நேரத்தில் ஆயிஷா முழுக்கக் கருப்புடையில் தன் வாப்பாவுடன் நுழைந்தாள்.
“எல்லோரும் வந்தாச்சு. இப்போ கேக் வெட்டலாம்.”
சமையலறையின் கத்தியிலேயே அம்மா அபர்ணா கை பிடித்துக் கேக் வெட்டினாள்.
முதல் கேக் துண்டத்தை அபர்ணா ஆயிஷாவுக்கு ஊட்டினாள். பின் அம்மாவுக்கு. பின் அப்பாவுக்கு. பின் பாட்டிக்கு. பின் தான் உண்ண வெட்டப்பட்ட துண்டுகள் ஏதுமில்லை என்றதும் தானே கத்தியை எடுத்து கேக்கை வெட்ட முனையும் போது அதன் கூர்மை அவள் விரலில் உராய்ந்தது. குருதி ஊறிச் சுரந்து அவள் கையெல்லாம் சிவப்பானது.
அபர்ணா அலறத் துவங்கினாள். அவள் அம்மாவும், அப்பாவும், பாட்டியும் சூழ்ந்து கொண்டு முதலுதவிகள் செய்யத் துவங்கினர். ஆயிஷாவும் அழத் துவங்கினாள்.
“விரலை வாயில் வெச்சு சூப்புடி. ரத்தம் வெளியே போனா அதே ரத்தம் உள்ளேயும் போகனும். பொம்பளப்புள்ள ரத்தத்துக்கு அலறலாமா! இன்னும் எத்தனை பார்க்கனும்!”
பாட்டி இப்படிச் சொன்னதும் அம்மா அவளை ‘எப்ப என்ன பேசறதுன்னு விவஸ்தை இல்லையாம்மா?’ என அதட்டியதைப் பார்த்துக் கொண்டே மயங்கினாள் அபர்ணா.
*
திம்மய்யா அதிர்ந்து அபர்ணாவை உற்றுப் பார்த்தார். அவளது ஆங்கில உச்சரிப்பின் வசீகரத்தை முழுக்க வியக்க விடாது அவள் சொன்ன சொற்கள் தடுத்தன. அத்தனை ஆண்டுகளும் குற்றச் சூழல்களில் புழங்கியிருந்தாலும் - பக்கத்து வீட்டுக்காரியுடன் கள்ளக் காதல் கொண்டிருந்த கணவனின் ஆண் குறியை அறுத்து, ரத்த வெள்ளத்தில் சாக விட்டு, கவனமாக விஜய் கர்நாடகாவில் குறியைச் சுற்றிக் கையோடு எடுத்து வந்து சரணடைந்த பெண்ணைப் பார்த்திருக்கிறார் - அவள் சொன்னதைச் செரிக்க புதிதாயோர் அமிலம் மூளைத் திசுக்களுக்குத் அவசியப்பட்டது. தடுமாறிக் கேட்டார்.
“என்ன சொன்னீங்க?”
“நீங்க சரியாத்தான் புரிஞ்சுக்கிட்டீங்க. என் குழந்தையைக் கொலை செஞ்சிட்டேன்.”
“…”
“அந்தக் குற்றத்தை ஒப்புக்கிட்டு சரணடையத் தான் இங்கே வந்திருக்கேன்.”
“உங்க பேரு…?”
“அபர்ணா. மிசஸ். அபர்ணா ரஞ்சித்.”
“எங்கே வசிக்கிறீங்க?”
“எம்பிஎம் லேக் வ்யூ.”
“அகரா ஏரிக்கு எதிரே இருக்கே அதுவா?”
“ஆமா.”
“உங்க கணவர் வரலியா?”
“அவர் இறந்துட்டார்.”
“ஓ! எப்போ?”
“மூணு வாரம் முன்.”
“எப்படி?”
“ஆக்சிடெண்ட். எலக்ட்ரானிக் சிட்டி ஃப்ளைஓவர்ல எதிர்ல வந்த ஹெவி வெஹிகிள் ட்ராக் மாறி எங்க கார் மேலே மோதிடுச்சு. ஹெட்ஆன் கொலிஷன். ஸ்பாட் அவுட்.”
“வேற யாருக்கோ நடந்தது மாதிரி சொல்றீங்க.”
அபர்ணா பதில் பேசவில்லை. அதற்கு ஏதும் சரியான பதிலிருப்பதாக நம்பவில்லை.
“உங்க வயசு.”
“இருபத்தி எட்டு நடக்குது.”
“கல்யாணமாகி எவ்வளவு வருஷம் ஆச்சு?”
“அஞ்சு வருஷம்.”
“எத்தனை குழந்தைங்க?”
“ஒரு பையன்.”
“பேரு?”
“அபய்.”
“எத்தனை வயசு?”
“பதினோரு மாசம்.”
“ஸோ, அவனைத் தான் கொன்னுட்டதா சொல்றீங்களா?”
“ஆமா.”
இப்போது அபர்ணா விசும்பத் தொடங்கினாள். மூக்கில் சளி ஒழுகியது. கைக்குட்டை எடுத்து நாசூக்காய் ஒலியெழுப்பிச் சிந்தித் துடைத்து, மீண்டும் பேசத் தயாரானாள்.
“ஏன் கொன்னீங்க?”
“…”
“சொல்லுங்க மேடம்.”
“…”
“குழந்தையின் உடல் எங்கே?”
“…”
“வாயைத் திறந்து ஏதாவது பதில் சொல்லுங்க.”
“…”
*
அபர்ணாவின் முகமெல்லாம் வியர்த்திருந்தது. அவள் உடலெங்கும் பதற்றமிருந்தது.
“ஆயிஷா…”
காலை இரண்டு பீரியட் முடிந்து ப்ரேக்குக்கு மணியடித்திருந்த போது வழமை போல் ஆயிஷாவுடன் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்து வெளியே வந்த போது தான் அதிர்ந்து போய் வாசலில் ஆயிஷாவின் கையைப் பிடித்து நிறுத்தினாள் அபர்ணா.
“என்னடி?”
“ஒரே ரத்தமா வருது?”
“எங்கேடி?”
ஆயிஷா அவசரமாய் அபர்ணாவின் கை, கால்களில் எல்லாம் கண்களை மீட்டினாள்.
“தெரில, இப்ப டாய்லெட் போறப்ப தான் பார்த்தேன். ஜட்டியெல்லாம் ரத்தம்.”
அவள் சொன்னதைக் கிரஹிக்கச் சில விநாடிகள் எடுத்த பின் முகம் பிரகாசித்தாள்.
“வாவ்!”
அபர்ணாவை மென்மையாய்க் கட்டியணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
ஆயிஷாவைப் புரியாமல் பார்த்தாள். அவளுடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.
“அடிவயித்துல பயங்கரமா வலிக்குதுடி.”
“ஃபர்ஸ்ட் டைம் அப்படித்தான்டி இருக்கும். நீ இங்கயே இரு. ஒன் மினிட்ல வர்றேன்.”
ஆயிஷா வேகமாய் வகுப்பறைக்கு ஓடித் தன் பள்ளிப்பையைத் திறந்து அவசரத்துக்கு வைத்திருந்த சானிடரி நேப்கின் எடுத்து டாப்ஸின் பக்கவாட்டிலிருந்த பாக்கெட்டில் ஒளித்துக் கொண்டு மீண்டும் கழிவறைக்கு அவசரமாகத் திரும்பி மூச்சு வாங்கினாள்.
அபர்ணவைக் கைப்பிடித்தழைத்துக் கொண்டு மீண்டும் கழிவறைக்குள் நுழைந்தாள். ப்ரேக் முடியும் நேரம் என்பதால் அங்கு எவரும் இல்லை. ஒவ்வொரு கழிவறையின் கதவாய்த் திறந்து பார்த்து திருப்திகரச் சுகாதாரத்தில் இருந்த ஒன்றிற்குள் நுழைத்து அவளையும் இழுத்துக் கொண்டாள். பள்ளீச் சீருடை ஸ்கர்ட்டை விலக்கிச் சுத்தம் செய்த பின் சானிடரி பேடைச் சரியாய்ப் பொருத்திக் கொள்ளச் சொல்லித் தந்தாள்.
அபர்ணா வெட்கப்பட்டாள். ஆயிஷாவை அணைத்துக் கொண்டாள். வயிறு வலித்தது.
“எல்லா மாசமும் இப்படித் தான் கட்டிகட்டியா இவ்வளவு ரத்தம் போகுமாடி?”
ஆயிஷா அவளது முகம் பார்த்தாள். அவள் மிகமிகப் பயந்திருந்தாள் என்பது புரிந்தது.
*
திம்மய்யா தொடர்ந்து கால் மணி நேரம் விசாரித்தும் அபர்ணா வாய் திறக்கவில்லை. காவல் ஆய்வாளர் வரும்வரை காத்திருந்து தகவல் சொல்ல பிற்பகல் கடந்திருந்தது.
இன்ஸ்பெக்டர் நீலாவதிக்கு எத்தனை வயதென எவராலும் கண்டுபிடிக்க முடியாது. யார், என்ன ஊகித்தாலும் அதை விட ஒரு வருடமாவது குறையத் தான் இருக்கும்.
பெரிய முலையும் அதை விடப் பெரிய தொப்பையும் கொண்டிருந்தவள் பேண்ட்டை மேலே இழுத்து விட்டபடி அவளை அணுகி சற்று கடுமையான குரலில் சொன்னாள் -
“ஏதாவது சொன்னாத்தான் இதை சீரியஸா எடுத்துக்க முடியும், மிஸஸ் அபர்ணா.”
“…”
“இறந்தவரின் உடல், மோட்டிவ் - இது ரெண்டும் ஒரு கொலை வழக்கில் ரொம்பவும் முக்கியம். கொலை செய்தவரே நேரில் வந்து ஒப்புக் கொண்டாலும் இது அவசியம்.”
“…”
“ஸோ, உருப்படியா ஏதும் நடக்கனும்னு நினைச்சா ஏதாவது சொல்லுங்க.”
“…”
“இல்லன்னா எங்க டைம் வேஸ்ட் பண்ணாம இடத்தைக் காலி பண்ணுங்க.”
அபர்ணா கைப்பையில் வைத்திருந்த சிறுகுடுவைத் தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.
“ஸாரி மேடம். சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன். கேஸ் எடுக்கறதும் எடுக்காததும் உங்க விருப்பம். இல்லனா அடுத்து நான் மீடியாவுக்குத்தான் போகனும்.”
அவள் அசந்து போய் உட்கார்ந்தாள். மனதுக்குள் அபர்ணாவின் கற்பைத் திட்டினாள்.
*
அபர்ணாவின் வீட்டுக்கு வந்திருந்தாள் ஆயிஷா. இருள் வெல்லத் துவங்கி இருந்தது.
“பப்ளிக் எக்ஸாமுக்கு எல்லாம் ப்ரிப்பேர் பண்ணி முடிச்சாச்சா ஆயிஷா? ஒரு மாசம் கூட முழுசா இல்ல. எங்க அபர்ணா என்ன பண்ணுவாளோன்னு பயமாவே இருக்கு.”
“அதெல்லாம் சூப்பரா எழுதிடுவா ஆன்ட்டி. இத்தனை வருஷமா பார்க்கறீங்களே!”
அபர்ணாவின் அம்மா கொடுத்து விட்டுப் போன தேநீர் சூடாறத் தொடங்கி இருந்தது. தட்டில் பரப்பியிருந்த மிக்ஸரில் நிலக் கடலை பொறுக்கிக் கொறித்தாள் ஆயிஷா.
அபர்ணா தலையைக் குனிந்திருந்தாள். முகம் இறுகி யோசனையில் உறைந்திருந்தது.
மெல்ல அவள் தோள் மீது கைவைத்தாள் ஆயிஷா. திடுக்கிட்டுத் தலை தூக்கினாள்.
“இது தப்பு தானே ஆயிஷா?”
“எது தேவையோ அதுவே தர்மம்னு உங்க மதத்துல தானே சொல்லியிருக்கு.”
“இல்ல. உடம்புக்கு ஏதும் பிரச்சனை வந்திட்டா?”
“யாருக்கு?”
“ரெண்டு பேருக்குமே தான்டி”
“அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. குழப்பிக்காதே.”
“ம்.”
“இது ஒரு கொடுக்கல் வாங்கல். அவ்வளவு தானே.”
“ஆனா…”
“பயந்தா எதுவுமே செய்ய முடியாது. ஒண்ணு இதை விடனும். இல்லன்னா பயத்தை.”
“ம்.”
“என்ன இதையே நிறுத்திடலாமா? எனக்கு ஒண்ணும் பிரச்சனையே இல்ல.”
“இல்ல… இல்ல…”
அவரசமாய் மறுத்து ஆயிஷாவின் வெதுவெதுப்புக் கரம் பற்றிக்கொண்டாள் அபர்ணா.
“அப்போ கதவைச் சாத்திட்டு வா. பத்தே நிமிஷம் தான். முடிஞ்சிடும்.”
அபர்ணா மெல்லப் பூனை போல் நடந்து கதவை அணுகி உரத்துக் குரல் கொடுத்தாள்.
“அம்மா நாங்க மாக் எக்ஸாம் எடுக்கறோம். தர்ட்டி மினிட்ஸ் டிஸ்டர்ப் பண்ணாதே.”
கதவைச் சாத்தி உட்புறமாய்த் தாழிட்டாள். ஆயிஷாவிடம் திரும்பிப் புன்னகைத்தாள்.
*
இன்ஸ்பெக்டர் நீலாவதி செல்பேசியில் அடக்கமாய்ப்பேச முயன்று கொண்டிருந்தாள்.
“புஜ்ஜுக்குட்டி ஃப்ரிட்ஜ்ல ஆப்பிள் இருக்கு. சாப்பிடு. நான் வர லேட் ஆகும். ஹோம் ஒர்க் முடி. அப்புறம் தான் டிவி. அம்மா வந்து டின்னர் செஞ்சு தர்றேன். தூங்கிடாதே.”
எம்பிஎம் லேக் வ்யூ என்று நுழைவாயிலில் பிரம்மாண்டமாய்ப் பொறிக்கப்பட்ட அந்த வளாகத்தின் ஆரவல்லி ப்ளாக்கில் - ஹிமாலயா, விந்தியா, பூர்வாஞ்ச்சல் மற்றவை - பத்தாவது மாடியில் அபர்ணாவின் ஃப்ளாட் இருந்தது. பல்பொருளங்காடி, மருந்தகம், உடற்பயிற்சிக்கூடம், சிறுவர் பூங்கா என ஒரு குட்டி நகரத்தைத் தேக்கியிருந்தது.
நீலாவதி அவளுடன் இரு காவலர்களை அழைத்துக் கொண்டு வீட்டைச் சோதனை போட வந்திருந்தாள். அங்கிருந்து ஜன்னல் வழி பார்த்தால் அகரா ஏரி தெளிவற்றுத் தெரிந்தது. ஒளியும் வளியும் போதும் போதுமெனப் புகுந்து விளையாடிய விஸ்தார இரண்டாயிரம் சதுர அடி வீடு. காவலர் குடியிருப்பில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வீட்டோடு அதை ஒப்பிட்டுக் கொண்டாள் நீலாவதி. மெல்லிய பொறாமை எழுந்தது.
திடுக்கிட்டு மனதில் விளைந்த கசப்பை விழுங்கிக் கொண்டு அவளிடம் கேட்டாள் –
“உங்க கணவர் என்ன செய்யறார்?”
“…”
“ஐ மீன், என்ன செஞ்சிட்டு இருந்தார்.”
“டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்ல சீனியர் எஞ்சினியர்.”
“இந்த அபார்ட்மெண்ட் விலை என்ன?”
“ஒன்றரை கோடி ரூபாய், பத்திரச் செலவு, அப்புறம் சார்பதிவாளர் அலுவலக லஞ்சம்.”
நீலாவதி திரும்பி அவளை முறைத்து விட்டுத் தன் விசாரணையைத் தொடர்ந்தாள் -
“உங்க பேரண்ட்ஸ்?”
“சென்னையில் இருக்காங்க.”
“ரஞ்சித் பேரன்ட்ஸ்?”
“திருச்சி.”
“ரஞ்சித்துக்கு ப்ரதர்ஸ் சிஸ்டர்ஸ்?”
“இல்ல. அவர் ஒரே பையன். நானும் அப்படித் தான்.”
“சரி, எல்லோர் கான்டாக்ட் டீட்டெய்ல்ஸும் கொடுங்க. பேசனும்.”
அபர்ணா நிதானமாய் தன் செல்பேசியை நிரடிப் பார்த்துப் பார்த்து ஓர் ஏ4 தாளில் பெயர்களையும் எண்களையும் உடன் உறவுமுறைகளையும் எழுதிக் கொடுத்தாள்.
இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டை அங்குலம் அங்குலமாய்ச் சோதனையிட்டும் உருப்படியாய் ஏதும் சிக்கவில்லை, துவைக்காத அவளது உள்ளாடைகள் தவிர.
அதில் ரத்தத் திட்டுக்கள் தென்பட, ஒரு பந்துமுனைப் பேனாவால் அதைத் தூக்கி நீலாவதியிடம் காட்டினார் காவலர். அபர்ணா மிக நிதானமாய்ப் பதில் சொன்னாள் -
“ஐயாம் ஹேவிங் மை பீரியட்ஸ்.”
காவலர் நீலாவதியைச் சங்கடமாய்ப் பார்க்க, அவள் கண்களால் சைகை செய்தாள். பூப்போல் பாவித்து ஒரு பாலிதீன் காகிதத்திற்குள் அதைச் சேகரித்துக் கொண்டார்.
*
பல் துலக்கி, கொப்பளித்து, துடைத்து, விளக்கணைத்துப் போர்வைக்குள் போய் படுத்த போது ஆயிஷாவின் பெயர் செல்பேசியில் ஒளிர, குழப்பமாய்ப் பற்றினாள் அபர்ணா.
ஒருவேளை ட்ஸ்க்ரீட் மேத்தமேட்டிக்ஸில் ஏதும் சந்தேகம் கேட்கப் போகிறாளோ! அவளுக்கு இந்த செமஸ்டர் அந்தப் பேப்பர் மட்டும் பூதம் மாதிரி பயமுறுத்தியது.
“ஹலோ, சொல்லுடி. எங்கே இருக்கே?”
“வீட்ல தான்டி. ஒரு முக்கியமான விஷயம்.”
“என்ன ஆச்சு?”
“நம்ம மேட்டருக்கு புதுசா ஒரு டெக்னிக் இருக்கு. அடுத்த முறை ட்ரை பண்ணலாம்.”
“ஓ!”
“ஆமா. வலி குறைவா.”
“ம். சரி.”
இணைப்பைத் துண்டித்து விட்டு அபர்ணா யோசித்தாள். தனக்கு என்ன வேண்டும் என மிகத் துல்லியமாய்த் தெரிந்தவள் ஆயிஷா மட்டும் தான் என நினைத்தாள்.
*
நீலாவதி பக்கத்து ஃப்ளாட்களில் விசாரித்தாள். அபர்ணா, ரஞ்சித் இருவர் பற்றியும் நல்ல விதமாகவே சொன்னார்கள். மிகச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பதைத் தவிர வேறு புகார்கள் இருக்கவில்லை. அவர்களுக்கு அபய் என்கிற கைக்குழந்தை இருந்ததையும், மாலைகளில் அடுக்கக வளாகத்தில் இருக்கும் சிறுவர் பூங்காவிற்கு வந்து அதற்கு வேடிக்கை காட்டுவாள் அபர்ணா என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.
அவர்களுக்குள் சண்டையோ வாக்குவாதமோ கூட இருந்ததாய் அக்கம் பக்கத்தினர் எவரும் சொல்லவில்லை. அவர்கள் வீட்டுக்கு வேறு ஆண், பெண் நண்பர்கள் எவரும் வந்து போயிருக்கவில்லை என்பதால் கள்ளக் காதல் என்ற கோணமும் அடிபட்டது.
மூன்று வாரம் முன் ரஞ்சித் இறந்து, பிரேதப்பரிசோதனைக்குப் பின் குத்துமதிப்பாய்க் கட்டித்தான் உடலை எடுத்து வந்தார்கள் என்றும் அன்று அபர்ணா போட்ட அலறலில் மொத்த அடுக்ககமும் அவர்கள் ஃப்ளாட் முன்கூடியது என்றும் சொன்னார்கள். அன்று முழுக்க அபய்யைக் கவனித்துக் கொண்டிருந்த வடகிழக்கு முகங்கொண்ட எதிர்த்த ஃப்ளாட்காரியிடம் சாத்துகுடிச் சாறு வாங்கி அருந்தியபடி கூடுதலாய் விசாரித்தாள்.
உருண்டு திரண்டு அழகழகாய் இருந்தவள் மணிமணியாய் ஆங்கிலம் பேசினாள்.
அப்பா இறப்பதற்குக் கொஞ்சம் நாள் முன்புதான் அபய் நடக்கத் தொடங்கி இருந்தான் என்றும் ஆனால் இன்னும் அவசரம் என்றால் நடைக்குப் பதில் தவழ்ந்தே வருவான் என்றும் சொன்னாள். பேச்சும் இன்னும் வந்திருக்கவில்லை. அம்மா, அம்மா என்பது தவிர அவனுக்கு இரண்டு சொற்கள் மட்டும் தான் தெரியும் என்றும் சொன்னாள்.
“அப்பா எங்கே போயிருக்கார்?”
“ஆபீஸ்.”
“என்ன வாங்கிட்டு வருவார்?”
“ஆப்பிள்.”
காலி தம்ளரை டீபாயில் வைத்து, அவள் தந்த டிஷ்யூ தாள்கள் மறுத்து கர்ச்சீஃப்பால் உதட்டை ஒத்திக் கொண்ட நீலாவதி அவளிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தாள்.
“கடைசியா எப்போ அபய்யைப் பார்த்தீங்க?”
“நேத்து சாயந்திரம். சில்ட்ரன்ஸ் பார்க்ல. அபர்ணா தூக்கிட்டு வந்திருந்தாங்க.”
“ஏதாவது வித்தியாசமாப் பட்டுதா?”
“இல்ல. அப்படி ஏதும் இல்ல. எல்லாமே நார்மலாத்தான் இருந்துச்சு.”
“நார்மல்னா?”
“அவுங்க ஹஸ்பண்ட் இறந்த பிறகு ரெண்டு வாரம் பார்க் வரவே இல்ல. ரெண்டு பேர் பேரண்ட்ஸும் வந்து ரிச்சுவல்ஸ் எல்லாம் முடிஞ்சு கிளம்பின பிறகு லாஸ்ட் ஃப்யூ டேஸாத் தான் மறுபடி இங்கே வர ஆரம்பிச்சாங்க. நானும் நடந்ததைப் பத்திப் பேசி அவுங்களை ஹர்ட் பண்ண வேண்டாம்னு குறிப்பா ஏதும் பேசல. பட் அவுங்க சிரிச்ச முகமாத் தான் இருந்தாங்க. ஷீ இஸ் ரெகவரிங்ன்னு தோனுச்சு. அவ்வளவு தான்.”
“வேற ஏதும் பயந்த மாதிரி, இல்ல கோபமா?”
“நோ, மேடம்”
“கொஞ்சம் யோசிச்சு பார்த்துச் சொல்லுங்க.”
“என்னங்க, சினிமால கேட்கற மாதிரி கேட்கறீங்க! அப்படி ஏதும் இல்ல.”
“இல்ல. கேட்கறது வேற, அழுத்திக் கேட்கறது வேற.”
“ஆ. ஒரு விஷயம் நினைவு வருது. அபர்ணா நேத்து சீக்கிரமே கிளம்பிட்டாங்க. வழக்கமா இருட்டும் வரை இருப்பாங்க. பட் எஸ்டர்டே ஷி லெஃப்ட் வெரி ஏர்லி.”
“ஏன்? ஏதாவது காரணம் சொன்னாங்களா?”
“இல்ல.”
“நீங்களும் ஏதும் கேட்கலயா?”
“அதெப்படி நான் கேட்க? ப்ரைவஸி இன்ட்ரூஷன் இல்லையா!”
“ம்ம்ம்.”
“ஆனா அவுங்க முகம், பாடி லேங்குவேஜ் பார்த்தா ஒண்ணு தோனுச்சு.”
“என்ன?”
“பீரியட்ஸ் ஆகிட்டாங்களோன்னு தோனுச்சு. பட் திஸ் இஸ் ப்யூர்லி மை கெஸ்.”
*
“அப்படி எதைக் கண்டு மயங்கினீங்க ஸார், எங்க அபர்ணா கிட்ட?”
ஆயிஷா கேட்க, ஒரு பச்சோந்தியின் நிறமாற்றம் போல் ரஞ்சித் வெட்கப்பட்டான்.
ஆண் வெட்கத்தின் அழகு என்பது அதன் அசல்தன்மையிலும் அரியதன்மையிலும் உள்ளது. அவ்வகையில் அது பெண் வெட்கத்திலிருந்து முற்றிலும் தலைகீழானது.
“நிஜமாவே நீங்க லக்கி.”
ரஞ்சித் அதை ஆமோதிப்பது போல் அசட்டுச் சிரிப்பொன்றை வெளிப்படுத்தினான்.
“அபர்ணா யாரையும் லவ் எல்லாம் பண்ணுவாங்கறதே ஆச்சரியம் தான். அதுவும் ஆறு மாசம் என்கிட்ட கூடச் சொல்லாம ரகசியம் வேற. அதான் லக்கின்னேன்.”
“நான் தான் யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.”
“ஓ! ஏன்?”
“லவ்ல ஒரு ப்ரொபேஷன் பீரிய்ட் இருக்கு. லவ் சொல்லும் வரை, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளும் வரை பெரும்பாலும் நம்ம நல்ல பக்கத்தை மட்டும் தான் அடுத்தவருக்குக் காட்டியிருப்போம். நாம எவ்வளவு தான் நேர்மையாவே இருக்க முயன்றாலும் இந்தப் பாசாங்கு வந்திடும். காதலிப்பவரின் முன்னால் மூக்கைக் கூட நோண்ட மாட்டோம்.”
“ரஞ்சித்…”
“நீ சும்மா இருடி. ஃப்ராங்க்கா பேசறது ஒரு ப்ளஸ்ஸிங். நீங்க சொல்றது கரெக்ட்.”
“பிறகு உறவு உறுதின்னு ஆன பிறகு மெல்ல நிஜ முகம் வெளிப்படத் தொடங்கும். அதைக் கடக்கும் வரை எவருக்கும் தெரிய வேண்டாம்னு நினைச்சேன். ஆறு மாசம். அந்த டைம்ல எங்களில் ஒருத்தரோட ஏதாவது விஷயம் மற்றவருக்குப் பிடிக்காமப் போனா அப்படியே பிரிஞ்சிடலாம். அந்த ப்ரேக்கப்பையும் அறிவிக்க வேண்டியதில்ல. ரெண்டு பேர் எதிர்காலத்துக்கும் பாதிப்பில்லாம இருக்கும். அதனால் தான் சொல்லல.”
“பிரமாதம்.”
ஆயிஷா கைதட்டினாள். அபர்ணாவை முத்தமிட்டாள். பின் ரஞ்சித்திடம் சொன்னாள்.
“நிஜமாவே நல்ல ஜோடி நீங்க.”
“தேங்க்ஸ்.”
ரஞ்சித் அடக்கம் காட்டினான். சட்டென நினைவு வந்தது போல் ஆயிஷா கேட்டாள்.
“அபர்ணா எங்களைப் பத்திச் சொன்னாளா?”
“ஓ! சொன்னாளே. செகண்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து திக் ஃப்ரெண்ட்ஸ்.”
“அதில்ல. நான் சொல்றது…”
சட்டென ரஞ்சித்தின் முகம் ஒரு கணம் இருண்டு மீண்டும் இயல்புக்கு வந்தது.
“ம்… சொன்னா.”
“இன்னிக்கு உங்களைப் பார்க்கனும்னு சொன்னது அதுக்குத் தான்.”
ரஞ்சித் என்ன என்பதைப் போல் அவளைப் பார்த்தான். அவள் சிரித்துச் சொன்னாள் -
“ஆமா, இனி இதை நீங்க தானே செய்யனும்.”
ஆயிஷா பையைப் பிரித்து ஒவ்வொரு பொருளாக எடுத்து வைக்கத் தொடங்கினாள்.
அபர்ணா சங்கடமாக உணர்ந்தாள். ரஞ்சித்தின் கண் பார்க்க முடியாமல் தவித்தாள்.
*
அபய் காணாமல் போய் விட்டதாக அடுக்ககத்தில் இருந்தோரிடம் அப்போதைக்குச் சொல்லி வைத்திருந்தாள் நீலாவதி. அவர்களால் காரணம் ஊகிக்க முடியவில்லை. அந்த அடுக்ககம் பாதுக்காப்பானதா என்பது பற்றித் தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.
அபார்ட்மெண்ட் செக்ரட்டரியிடம் அறிமுகம் செய்து கொண்டு அடுக்ககத்தின் சிசிடிவி கேமெராப் பதிவுகள் அன்றைய தினம், முந்தைய தினம் முழுக்கப் பார்க்க வேண்டும் எனக்கேட்டாள் நீலாவதி. மறுநாள் காலைக்குள் எல்லாவற்றையும் பிரதி எடுத்துத்தர உறுதி அளித்தார். நீலாவதி அடுக்ககத்தைச் சுற்றி நடந்து எல்லா இடங்களையும் தன் நினைவில் தேக்கினாள். அவற்றுக்கிடையேயான தூரங்களை மனதில் கணக்கிட்டாள். உடன் வந்த ஒரு காவலரிடம் சொல்லி சில கோணங்களில் நிழற்படங்கள் எடுத்தாள்.
அடுக்ககத்தின் வாயில் காவலாளி ஒரு முக்கியமான தகவலைச் சொன்னார். அன்று அதிகாலை அபர்ணா கிளம்பி வெளியே போனதாகவும் ஒரு மணி நேரத்தில் திரும்பி விட்டதாகவும். அவள் உடையை வைத்து நடைப் பயிற்சி போவதாக ஊகித்ததாகவும்.
அவர் கன்னடத்தில் மிகச் சரளமாக உரையாடினார். அந்த அடுக்ககத்தில் அவள் சந்தித்தவர்களுள் அப்படிப் பேசிய ஆள் அவர் ஒருவர் தான். பெருமூச்சு வந்தது.
மழைத் தூறல் விழ, அகரா ஏரியே ஓர் ஓவியம் போல் அழகாய்க் காட்சியளித்தது. குருதி வாடை வீசிய ப்ளாஸ்டிக் பை ஒன்று ஏரிப் பரப்பில் மிதந்து கொண்டிருந்தது.
அடுக்கக வாசலிலிருந்து ஏரியைப் பார்த்த நீலாவதிக்கு இருள் மட்டுமே புலப்பட்டது.
*
அபர்ணா ரஞ்சித்துடன் மணக்கோலத்தில் நிழற்படத்துக்கு நடித்துக் கொண்டிருந்தாள்.
கிட்டத்தட்ட மண்டபமே காலியாகி இருக்க, ஆயிஷா அசைந்து மேடைக்கு வந்தாள். மணமக்களிடம் மொய்க் கவர் வாங்கிப் பையிலிடும் நிமித்தம் உடன் நிற்கும் நண்டு சிண்டுகள் கூடக் கிளம்பியிருந்தனர். இருவரும் அவளைப் பார்த்துப் புன்னகைத்தனர்.
ஆயிஷா A என்றும் R என்றும் ஆங்கில எழுத்து பதித்த மோதிரங்களை இருவருக்கும் அணிவித்துக் கையைப் பற்றி வாழ்த்திப் புகைப்படத்திற்கு நின்றாள். புகைப்படக்காரர் எல்சிடி டிஸ்ப்ளே பார்த்து கட்டை விரல் காட்டியதும் அபர்ணாவைப் பட்டுப் புடவை சரசரக்க இறுக்கி அணைத்தாள். அவளுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள் –
“A ஃபார் அபர்ணா இல்ல; ஆயிஷா தான்.”
அதைக் கேட்டு அபர்ணா கண்களில் நீர் கோர்த்து நிற்க, பதிலுக்குக் கிசுகிசுத்தாள் -
“நீ மட்டும் வராம இருந்திருந்தா உன்னைக் கொன்னே போட்ருப்பேன்டி.”
ஆயிஷா விடுவித்துக் கொண்டு இருவரையும் பொதுவாய்ப் பார்த்துச் சொன்னாள்.
“சென்னையில் ரிசப்ஷன் வைக்காம இவ்வளவு தள்ளி பெங்களூர்ல வந்து வெச்சா எப்படிடி வர முடியும்? நானே காலையில் ஒரு ப்ரொடக்ஷன் லாஞ்ச் முடிச்சிட்டு அவசரமா டேக்ஸி பிடிச்சு வர்றேன். லேட்டாகிடும்னு இடையே நிறுத்தல. மதியம் சாப்பிடக் கூட இல்லை. கொலைப் பசில வந்தா நீ அவ்வளவு கொழுப்பாப் பேசற.”
“ஸாரிடி. ரஞ்சித் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இங்கே தான் நிறையப் பேர். அது தான் இங்க வைக்க டிசைட் பண்ணினோம். முதலில் போய்ச் சாப்பிடு. பிறகு ஃப்ரியாப் பேசலாம்.”
“அப்புறம் எங்கே பேச? நீங்க முக்கியமான வேலையைப் பார்க்க வேண்டாமா?”
ஆயிஷா கண்ணடித்தாள். ரஞ்சித் புரியாதது போல் இளித்துக் கொண்டு நின்றான்.
“சரி சரி. இருப்பேல்ல? நாளைக்குக் கூட பேசலாம்.”
“இல்லடி. நைட்டே கிளம்பறேன். டாக்ஸி வெயிட்டிங் தான்.”
“ஏய்… என்னடி அவசரம்?”
“நான் ரெண்டு நாளில் ஜெர்மனி கிளம்பறேன். விஸா வந்தாச்சு. இவ்வளவு நாளா வேண்டாம் வேண்டாம்னு ஒத்திப் போட்டது உனக்காகத் தான். இப்பத் தான் ரஞ்சித் இருக்காரே. நான் பாட்டுக்கு நிம்மதியாக் கிளம்பலாம். ஆஃபீஸ்ல ரொம்பப் ப்ரஷர்.”
“ம்ம்ம்.”
“ரஞ்சித், அபர்ணாவைப் பார்த்துக்கங்க. தனியாச் சொல்ல ஏதுமில்ல. அஞ்சாறு மாசம் முன் சொன்னதுதான். இடையில் நீங்கதான் கவனிச்சுக்கிட்டீங்க. யூ நோ வெல். இந்த ஜெர்மனி ஆஃபரை நான் ஏத்துக்க முக்கியக் காரணம் உங்க மீதான நம்பிக்கை தான்.”
“ஷ்யூர் ஆயிஷா.”
“தேங்க்ஸ்! அண்ட் அகைன் விஷிங் போத் ஆஃப் யூ எ வெரி ஹேப்பி மேரிட் லைஃப்.”
ஆயிஷா அபர்ணாவை மீண்டும் கைகுலுக்கி விடைபெற்றுக் காதோரம் சொன்னாள் -
“வலிக்குதுனு பாதிலயே நிறுத்த வெச்சிடாதேடி. நம்மள மாதிரி இல்ல. ஆம்பள ஏங்கிடுவான். நோ பெய்ன் நோ கெய்ன். எஞ்சாய். ஆல் த பெஸ்ட் ஃபார் டுநைட்.”
*
நீலாவதி மேலதிகாரிகளிடமும், தெரிந்த பப்ளிக் ப்ராசிக்யூட்டரிடமும் விஷயத்தைச் சொல்லி ஆலோசனை கேட்டாள். இப்போதைக்கு அபர்ணாவின் ஸ்டேட்மெண்ட்டைக் கைப்பட எழுதி வாங்கிக்கொண்டு சந்தேகத்தின் பேரினான கைது என நீதிபதியிடம் கெஞ்சி அரெஸ்ட் வாரண்ட் வாங்கி கஸ்டடியில் எடுக்கச் சொன்னார்கள். ஒருபோதும் அவள் மீது கை வைக்க வேண்டாம் என்றும், அவள் தரப்பில் எவராவது ஜூனியர் வக்கீல் வந்து வாதாடினால் கூட கேஸ் நிற்காது என்றும் கூறினார்கள். கவர்மெண்ட் சைக்யாட்ரிஸ்ட்டை வரவழைத்து அபர்ணாவிடம் பேசிப் பார்க்க அறிவுறுத்தினார்கள்.
திம்மையாவுக்குப் பேசி, வேண்டிய ஆவணங்களைத் தயாரித்து வைக்கச் சொன்னாள்.
மீண்டும் அபர்ணாவின் ஃப்ளாட்டுக்கு வந்த போது அவள் தூங்கியிருந்தாள். எழுப்பி அவளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் கிளம்பினாள் நீலாவதி. கொஞ்சம் கூட அதிராமல், ஏதும் பேசாமல் அவளைத் தொடர்ந்து நடந்தாள். இருட்டியிருந்தது.
“இன்னிக்கு ஏர்லி மார்னிங் கிளம்பி வெளியே போனீங்களா?”
“ஆமா. வாங்கிங்.”
“எங்கே?”
“அகரா லேக்.”
“இது உங்க ரொட்டீனா?”
“ஓரளவு. ரஞ்சித் இருந்த வரை வாரம் ரெண்டு மூணு நாள் போலப் போவேன். அவர் அபய்யைப் பார்த்துக்குவார். டெலிவரிக்குப் பிறகு கொஞ்சம் தொப்பை போட்ருச்சு.”
“இன்னிக்கு அபய்யைக் கூட்டிப் போகலயா?”
“இல்ல.”
“ஏன்?”
“அவன் தான் செத்துட்டானே!”
நீலாவதி அபர்ணாவின் செல்பேசியை வாங்கி ஒரு பாலிதீன் உறைக்குள் போட்டாள்.
காவல் நிலையம் வந்து பெண் காவலரிடம் அபர்ணாவை ஒப்படைத்து விட்டு நீதிபதி வீட்டுக்குப் போய் விவரம் சொல்லிச் சம்மதிக்க வைத்துக் கையெழுத்து வாங்கி கீழே அவரது ஊதா வட்ட ரப்பர் ஸ்டாம்ப் அழுந்தக் குத்தி மீண்டும் ஸ்டேஷன் திரும்பிய போது திம்மய்யா காத்திருந்தார். மிஸ்ஸிங் கேஸ் என எஃப்ஐஆர் எழுதச்சொன்னாள்.
அபர்ணா மற்றும் ரஞ்சித்தின் பெற்றோருக்கு அழைத்து உடனே பெங்களூர் கிளம்பி வரச் சொன்னாள். அவர்களிடமும் குழந்தையைக் காணவில்லை என்று சொன்னாள்.
அபர்ணாவின் செல்பேசி, அவளது ஃப்ளாட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முதலிய ஆதாரங்களை உரிய அறையில் வைத்துப் பூட்டினாள். அவள் எழுதித் தந்த செல்பேசி எண்கள் கொண்ட காகிதத்தைத் தன் மேசையின் இழுப்பறையில் இட்டுப் பூட்டினாள்.
அபர்ணாவுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்துச் சிறையிலடைத்து, நைட் ட்யூட்டிக்கு மனோரமாவை அவசரமாய் வர வேண்டிக் கொண்டு, வந்ததும் கிளம்பி வீடு சேர்ந்த போது புஜ்ஜுக் குட்டி தூங்கியிருந்தான். அவசரமாய்க் குளித்துத் துடைத்து நைட்டிக்கு மாறி, அவனைத் தட்டி எழுப்பித் தோசை வார்த்துத் தந்தாள். அவளும் உண்டு கை கழுவிப் படுத்து செல்பேசி எடுத்துப் பார்த்த போது நள்ளிரவு நழுவிப் போயிருந்தது.
*
அன்று பிற்பகல் அபர்ணா லேசாய்க் கண்ணயர்ந்த சமயம் வாட்ஸாப் வீடியோ கால் செய்தாள் ஆயிஷா. தூக்கம் கலைந்தாலும் மரமேறி விளையாடும் அணிற்பிள்ளை போல் அத்தனை உற்சாகமாய் இருந்தாள். ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ போன்ற அபத்தக் கேள்விகள் முடிந்ததும் மேடிட்டிருந்த வயிற்றைக் காட்டினாள் அபர்ணா.
“ஏய், சொல்லவே இல்ல.”
“எங்க, நீ பேசினாத்தானே?”
“ஏன், என் நம்பர் உன் கிட்ட இல்லையா?”
“சரி சரி.”
“எத்தனை மாசம்?”
“அஞ்சாவது மாசம் நடக்குது.”
“சூப்பர்டி. செக்கப் எல்லாம் ரெகுலராப் போறியா? எல்லாம் நார்மல் தானே?”
“எவ்ரிதிங் ஆல்ரைட்.”
“குட்.”
“அப்பப்போ குமட்டிட்டு வர்றது தவிர எல்லாம் சௌக்கியம்.”
“மத்த விஷயமெல்லாம் எப்படிப் போகுது?”
“ம். அதுக்குத் தான் இப்பத் தேவையில்லையே!”
“அட, ஆமால்ல. முன்ன பின்ன புள்ள பெத்திருந்தாத் தெரியும்.”
“அதுக்கு முதலில் கல்யாணம் பண்ணனும்.”
“அப்படின்னு கட்டாயமில்ல.”
ஆயிஷா கண்ணடித்தது ஏசிடி ப்ராட்பேண்ட் கம்பிகள் வழி தேய்ந்து வந்து விழுந்தது.
“ஏய், எவனாவது வெள்ளைக்காரனைப் பிடிச்சிட்டியா?”
“இல்லடி. கருப்பன். அழகன்.”
செல்பேசியைத் திருப்பிக் காட்டினாள். அரை ட்ரவுஸரணிந்து டாட்டூ குத்திய கருப்பு முதுகைக் காட்டியபடி ஒருவன் கட்டிலில் குப்புறப் படுத்துறங்கிக் கொண்டிருந்தான்.
“அடிப் பாவி!”
*
மறுநாள் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது அபர்ணா சொன்னது, வடகிழக்குக்காரி சொன்னது, அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி சொன்னது இவை மூன்றுமே துல்லியமாய்ப் பொருந்திப் போவதை உணர்ந்தாள். அபர்ணா அன்று மாலை குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறாள். கொஞ்சம் நேரத்தில் குழந்தையோடு திரும்பி வருகிறாள். இடையே அவள் குழந்தைகள் பூங்கா வந்ததும் போனதும் வேறு கேமெராக்களில் பதிவாகியிருந்தது. அன்று இரவு முழுக்கவும் அவள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. காலை ஆறு மணிக்கு அபர்ணா மட்டும் ட்ராக் சூட், பேண்ட் போட்டு வெளியே வருகிறாள். குழந்தை இல்லை. அடுக்கக வளாகத்தின் பிரதான வாயில் வழியே வெளியே போனதும் பதிவாகி இருந்தது. ஒரு மணி நேரத்தில் வீடு திரும்புகிறாள். பிறகு முற்பகலில் வீட்டை விட்டுக் கிளம்பி வெளியே போகிறாள். காவல் நிலையத்துக்குப் புகாரளிக்க வந்த அதே உடையில். அதன் பிறகு வீட்டுக்கு யாரும் வரவில்லை. மாலையில் நீலாவதி அபர்ணாவை அழைத்து வந்தது தான்.
அகரா லேக் வாயிலில் இருந்த சிசிடிவி கேமெராவிலும் அபர்ணா அன்றைய தினக் காலையில் வருவதும் போவதும் பதிவாகி இருந்ததைச் சரி பார்த்துக் கொண்டாள்.
அடுக்ககக் காவலாளிக்குத் தொலைபேசி அபர்ணா அதிகாலை நடைப் பயிற்சிக்குச் செல்வது வழக்கம் தான் என உறுதிபடுத்திக் கொண்டாள். அகரா ஏரியில் ஏதேனும் கிடைக்கிறதா எனப் பார்த்து வர ஆள் அனுப்பினாள். அவர்கள் கை விரித்தார்கள்.
அபர்ணாவின் பெற்றோரும் ரஞ்சித்தின் பெற்றோரும் காலையே காவல் நிலையம் வந்து விட்டனர். அவர்கள் அபர்ணாவைச் சந்தித்துக் கேள்வி கேட்ட போதும் அவள் வாயைத் திறக்கவில்லை. காவல் நிலையமே கண்ணீரும் கம்பலையுமாக இருந்தது.
ஒப்பாரிகள் ஓய்ந்த பின் நீலாவதி அவர்களிடம் மெல்ல விசாரிக்கத் தொடங்கினாள்.
“பாருங்க. இப்போதைக்கு இது எங்களுக்கு குழந்தை காணாமப் போன கேஸ் தான். பாடி கிடைக்கும் வரை அப்படித்தான். தவிர கொலைக்கான முகாந்திரமும் இல்ல.”
“…”
“அதனால அபர்ணா ஏதாவது சொன்னா தான் கேஸ் கொஞ்சம் நகரும். இல்லன்னா அவர் ஜெயிலிலேயே இருக்க வேண்டியது தான். எங்களுக்கு நிறைய நேரம் இருக்கு.”
“மேடம், அவளுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு. அது தான் இப்படி உளர்றா.”
“அந்த ஆங்கிளும் இருக்கு. ஆனா அதை அரசு டாக்டர் வந்து உறுதி செய்யனும்.”
“மேடம், அபர்ணா ஒரு வெஜிடேரியன். வள்ளலார் ஃபாலோயர். மத்த உயிர்களுக்குக் கூட தீங்கு நினைக்க மாட்டா. வீட்டில் எறும்பு மருந்து, கொசுவர்த்திச் சுருள், எலிப் பொறி ஏதுமே வைக்க விடமாட்டா. அவ எப்படி சொந்தக் குழந்தையைக் கொல்வா?”
“உங்க ஃபேமிலியே வெஜிடேரியனா?”
நால்வரும் ஒரு சேரத் தலையாட்டி மறுத்தனர். நீலாவதி குழப்பமாய்ப் பார்த்தாள்.
“அவ மட்டும் தான் சைவம். ரொம்பச் சின்ன வயசுலயே நிறுத்திட்டா. ஸ்கூல் புக்ல எதையோ படிச்சிட்டு சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டா. நாங்க ஆரம்பத்தில் போகப் போகச் சரியாகிடும்னு நினைச்சோம். ஆனா அபர்ணா ரொம்ப உறுதியா இருந்துட்டா. லவ் மேரேஜ். அவுங்க வீட்லயும் நான் வெஜிடேரியன் தான். பீஃப் கூட சாப்பிடுவாங்க. மாப்பிள்ளை கூட ஆரம்பத்தில் மாத்த முயற்சி பண்ணினார். ஆனாப் பிடிவாதகாரி.”
“லவ் மேரேஜ்ங்கறதால உங்களுக்குள் ஏதாவது தகராறு இருந்துச்சா?”
“எவ்ரிதிங் வாஸ் ஸ்மூத். ரஞ்சித்தை நிராகரிக்க எங்களுக்கு ஏதும் காரணமில்ல.”
“உங்களுக்கு?”
“இல்ல. பிரச்சனை பண்றதா இருந்தா அபர்ணா வீட்ல தான் பண்ணியிருக்கனும்.”
“அபர்ணாவுக்கு வேற லவ் ஏதாவது?”
“இல்லங்க மேடம்.”
“ரஞ்சித்துக்கு?”
“நோ.”
“இப்பன்னு இல்ல. கல்யாணத்துக்கு முன்?”
“இல்ல.”
“அவுங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்களா? ஏதாவது சண்டை?”
“நிச்சயமா இல்ல. லவ் மேரேஜ்னு ஆரம்பத்தில் எங்களுக்குத் தான் பயமா இருந்துச்சு. ஆனால் மாப்பிள்ளை நிஜமாவே நல்லாப் பார்த்துக்கிட்டார். ஹி இஸ் எ ரியல் ஜெம்.”
“அபர்ணா வேலைக்குப் போகலையா?”
“இல்ல. சென்னையில் வேலைக்குப் போயிட்டு இருந்தா. கல்யாணம் ஆகி பெங்களூர் போக வேண்டி இருந்தப்போ ரிஸைன் பண்ணிட்டா. ரெண்டு பேரும் எடுத்த முடிவு.”
“ரஞ்சித் - அபர்ணா எப்படி அறிமுகம்?”
“அபர்ணா சென்னைல வேலையில் இருந்தப்பத் தான் பெங்களூரில் இருந்து வேலை விஷயமா ஆஃபீஸுக்கு வந்தார் ரஞ்சித். இவ கம்பெனியின் க்ளைண்ட் அவுங்க. அது சம்மந்தமான தொழில்நுட்ப விஷயங்களை விவாதிக்க வந்த போது பழக்கமாகிடுச்சு.”
“ரஞ்சித் இறந்து மூணு வாரம்தான் ஆகுது. அதுக்குள்ள அபர்ணாவைத் தனியா விட்டு ஏன் ஊருக்குப் போனீங்க? இந்த சமயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியாதா? ஒருவேளை நீங்க இங்கயே இருந்திருந்தா இந்தச் சிக்கலே வராமப் போயிருக்கலாம்.”
“…”
“அதுவும் நீங்க நாலு பேர் இருந்தும் இப்படி அபர்ணாவைத் தனியா விட்ருக்கீங்க.”
“இல்ல மேடம். சொல்லப் போனா அவ தான் எங்களை வற்புறுத்திக் கிளம்ப வெச்சா.”
“அப்படியா!”
“ரெண்டு பேருமே வேலையை விட்டுட்டு தான் வந்திருந்தோம். அதைச் சொல்லித் தான் கிளப்பினா. நான் என்ன சின்னப் பொண்ணா அப்படின்னு கேட்டா. நீங்கல்லாம் பயப்படற மாதிரி ஏதும் பண்ணிக்க மாட்டேன். அபய்க்காக வாழனும்னு சொன்னா.”
“இந்தக் கேஸ் சம்மந்தமா வேற ஏதும் சொல்லனுமா?”
“குறிப்பா ஒண்ணுமில்லங்க, மேடம்.”
“சரி. பெங்களூர்லயே இருங்க ரெண்டு வாரம். தேவைப்பட்டா கூப்பிடறேன்.”
“ஓக்கே மேடம், அவ ஏதோ உளர்றா. நம்பாதீங்க. அவ லைஃபை அழிச்சிடாதீங்க.”
“நீங்க ஒரு லாயரைப் பாருங்க. வந்து பேசச் சொல்லுங்க அவரை. அபர்ணா பேசாம நாங்க மேற்கொண்டு எதையுமே செய்ய முடியாது. இது மிஸ்ஸிங்கா, கிட்நாப்பிங்கா, மர்டரான்னு எங்களுக்கே தெளிவில்ல. ஆனா போற டைரக்ஷன் ஒண்ணும் சரியில்ல.”
நீலாவதி ரஞ்சித் விபத்து விசாரணைக் கோப்புகளை வரவழைத்து ஊன்றிப்படித்தாள். அதில் உறுத்தலாய் ஒன்றும் இருக்கவில்லை. எதிரே வந்த லாரிக்காரன் நிஜமாகவே
ஒரு கணம் கண் அசந்ததால் நிகழ்ந்த விபத்து. உள்நோக்கம் ஏதும் இருக்கவில்லை.
இருவரின் வங்கிக் கணக்குகளையும் ஆராய்ந்தாள். ரஞ்சித்துக்கு ஒரு தனிச் சேமிப்புக் கணக்கும், அபர்ணா – ரஞ்சித் பெயரில் ஒரு கூட்டுக் கணக்கும் இருந்தன. ரஞ்சித்தின் கணக்கில் ஏராளமான ட்ரான்சாக்ஷன்கள் இருந்தன. பல ஆயிரக்கணகில், சில லட்சக் கணக்கில். கான்ஸ்டபிள் ஒருவரிடம் அதன் பிரிண்ட் அவுட்டைக் கொடுத்து ஆராயச் சொன்னாள். அபர்ணாவின் கணக்கில் ரஞ்சித்தின் டெத் இன்ஷ்யூரன்ஸ் தொகையான ரூபாய் பத்து லட்சம் ஒரு வாரம் முன்பு வந்திருந்தது. ஆனால் அது நீலாவதிக்குத் தவறாய்ப் படவில்லை. அவளது பொருளாதார உயரத்துக்கு அது ஒன்றுமே இல்லை.
அதே வங்கியில் அபர்ணா பெயரில் லாக்கர் ஒன்றும் இருந்தது. அவள் பெற்றோரிடம் விசாரித்ததற்கு அவளது நகைகள் எல்லாம் அதில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.
கடந்த ஓராண்டு ரஞ்சித், அபர்ணாவின் செல்பேசி எண்களின் கால் ஹிஸ்டரியை சம்மந்தப்பட்ட மொபைல் சர்வீஸ் ப்ரொவைடரிடம் விண்ணப்பித்து வாங்கி வரச் செய்தாள். அதிலும் வித்தியாசமாய் ஏதும் இருக்கவில்லை. பெற்றோர், அலுவலக ஆசாமிகள், சொந்தக்காரர்கள், ஆன்லைன் டெலிவரி ஏஜென்ட்கள், கொஞ்சமாய் நண்பர்கள் என்று இருந்தது. குறிப்பாய் அபய் காணாமல் போன இரவிலும் அதற்கு முந்தைய தினங்களிலும், ரஞ்சித் இறந்த நாட்களுக்கு முன்பும் பின்பும் ஏதுமில்லை.
*
ஆயிஷாவுடன் தொடர்பு கிடைத்ததும் சப்தமாய் அழத் தொடங்கினாள் அபர்ணா. அது ஆடியோ கால் என்பதால் நிலைமையைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.
வெண்துகிலில் சுற்றித் தரப்பட்ட ரஞ்சித் பிணத்தை நடுஹாலில் போட்டு வைத்துக் கொண்டு தான் அவளுக்குத் தொலைபேசி இருந்தாள் அபர்ணா. இன்னும் அதிகம் கூட்டம் கூடவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓரிருவர் துக்கத்துடன் ஒத்தாசைக்கு வந்திருந்தனர். அபய்யைக் கவனிக்கும் பொறுப்பை எதிர்ஃப்ளாட் பால் கொழுக்கட்டை எடுத்துக் கொண்டாள். அப்படித்தான் அவளை அபர்ணாவிடம் குறிப்பிடுவான் ரஞ்சித். அவனை நினைக்க நினைக்க அழுகை மேலும் கூடுதலாக வெடித்தது அபர்ணாவுக்கு.
அவள் கண்ணீர் காயும் வரை வாட்ஸாப் காலில் அப்படியே காத்திருந்தாள் ஆயிஷா.
“ரஞ்சித் இல்லடி. போயிட்டார்.”
“என்னடி சொல்ற. எப்படி?”
“ஆக்ஸிடெண்ட். அவர் மூஞ்சி கூடப் பார்க்க முடில.”
“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.”
“பொட்டலம் கட்டிக் கொண்டு வந்திருக்காங்கடி.”
“இப்ப எங்கே இருக்கே?”
“வீட்ல தான். ரொம்ப வலிச்சிருக்கும்ல?”
“அதெல்லாம் யோசிக்காதேடி.”
“ஐயோ ஐயோ ஐயோ. என் வாழ்க்கையே போச்சேடி.”
“நான் ஆறுதல் சொல்றதுல அவ்வளவு சமர்த்து கிடையாது. என்ன சொல்றதுன்னே தெரில. ஒண்ணு மட்டும் சொல்றேன். அழறதெல்லாம் இன்னிக்கே அழுது தீர்த்திடு.”
“…”
“அபர்ணா, எல்லாம் கடந்து வந்தே தான் ஆகனும்.”
“ம்.”
“நீ நிஜம். அபய் நிஜம். அவனை வளர்க்கறதே பெரிய வேலை.”
“நான் மட்டும் தனியா எப்படிடி?”
“முடியும் அபர்ணா. நான் அஞ்சு வருஷமா தனி தான். துணை வரும், போகும்.”
“ம்.”
“ரஞ்சித் உங்களை ரொம்ப நல்ல பொசிஷன்ல தான் விட்டுட்டுப் போயிருக்கார்.”
“ம்.”
“தேங்க் ஹிம் அன்ட் கிவ் ஹிம் அ குட் ஃபேர்வல்.”
“எனக்குத் தேவையானதை அவர் வெச்சிட்டுப் போகலையே.”
அதில் ஒரு கணம் ஆயிஷா அதிர்ந்துதான் போனாள். அவளிடம் பதிலேதும் இல்லை.
“அப்பா அம்மா வந்துட்டாங்களா?”
“வந்திட்டு இருக்காங்க. நீ வர்றியா?”
“நான் எப்படிடி திடீர்னு கிளம்பி வர்றது? ஒண்ணு ரெண்டு மாசத்துல ட்ரை பண்றேன்.”
அபர்ணா அழைப்பைத் துண்டித்தாள். ஆயிஷா நெடுநேரம் யோசனையாய் இருந்தாள்.
*
அபர்ணாவின் பெற்றோர் ஏற்பாடு செய்த வக்கீல் காவல் நிலையம் வந்து பேசினார். தலை நரையில், கச்சிதமான கருப்புக் கோட்டில் அனுப்பவக்காரர் எனத் தெரிந்தது.
“நான் தமிழ் தான்மா, இது பெங்களூர், எல்லாமே கன்னடம்னு பயப்படாதே. நான் பார்த்துக்குவேன். தமிழ் ஆளுகன்னு தெரிஞ்சு கம்மியாத் தான் ஃபீஸ் வாங்கறேன்.”
அபர்ணா புன்னகைத்தாள். அவள் பேசி விடுவாள் என அவருக்கு நம்பிக்கை வந்தது.
“பழைய டயலாக் தான் அபர்ணா. ஆனாலும் சொல்றேன். டாக்டர் கிட்ட, லாயர் கிட்ட எதுவும் மறைக்கக்கூடாது. சொல்லப் போனா புருஷன் கிட்ட இருக்கறத விட முழு உண்மையா இருக்கனும். அப்பத்தான் அதுக்கேத்தாப்ல வாதாடிக் காப்பாத்த முடியும்.”
“ஸாரி ஸார். நான் சரண்டர் ஆனதே வெளியே வரக் கூடாதுன்னு தான்.”
“கில்டியா ஃபீல் பண்றியா? அதுக்கு தண்டனை அனுபவிக்க நினைக்கறியா?”
“அது ஒரு பக்கம். அதை விட முக்கியமா இனி யாரையும் கொன்னுடக் கூடாதுன்னு.”
“…”
“ஆமா. ஐயாம் சீரியஸ். எனக்கு வக்கீல் அவசியமில்ல.”
“சரி, அன்னிக்கு நைட் என்ன நடந்துதுன்னாவது சொல்லும்மா.”
அரை மணி நேரம் அவளிடம் பொறுமையாப் பேசி விட்டு வெளியே வந்த வக்கீல் நீலாவதியிடம் உதட்டைப் பிதுக்கினார். அவள் எரிச்சலாய் மேசையில் குத்தினாள்.
*
அத்தனை குரூர விபத்திலும் ரஞ்சித் அணிந்திருந்த நகைகள் அதிகம் சேதாரமாகாமல் கொண்டு வந்து கொடுத்திருந்தார்கள். ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தாள் அபர்ணா.
R என்ற எழுத்துப் பொறித்த மோதிரத்தைக் கையிலெடுத்ததும் ஆயிஷாவின் முகம் மனதிலாடியது. அவளைப் பார்த்தே ஐந்தாண்டுகள் ஆகிறது. இந்தப் பக்கம் வரவே இல்லை. வாட்ஸாப் வீடியோவில் பார்ப்பது ஆதார் அட்டையை விடக் கொடூரமாய் இருக்கிறது. அவள் இப்போது கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அபய் பிறந்த போது பார்க்க வரவில்லை. ரஞ்சித் இழவுக்கும் வரவில்லை. வாய் விட்டுக் கேட்டும் கூட மழுப்பி விட்டாள். சீக்கிரம் அவளைப் பார்க்க வேண்டும். எவ்வளவு உற்சாகமான நாட்கள் அவை! எவ்வளவு அழகான ரகசியங்கள் எமக்குள் இருந்தன!
அவை ஏதுமே திரும்பாதோ! ஓருயிரையும் துன்புறுத்தாது வாழ்ந்தென்ன கண்டேன்!
ஏற்கனவே மோதிர விரலில் ‘A’ போட்ட மோதிரம் இருந்தது. ரஞ்சித்துடையது ஒரு சுற்றுப் பெரிது. ‘R’ போட்ட அந்த மோதிரத்தை நடுவிரவில் நுழைத்தாள். பாம்பு விரலில் மோதிரம் போடக்கூடாது என்று அம்மா சொல்வாள். போட்டால் என்ன?
‘A’, ‘R’ இரண்டையும் இணைத்துப் பார்த்ததும் ‘ரத்தத்தின் ரத்தமே’ எனத் தோன்றியது.
“சாப்பிட வா அபர்ணா. லேட்டாச்சு.”
அம்மாவின் குரல் டைனிங் ஹாலிலிருந்து கேட்டதும் அவசரமாய் எழுந்து போனாள்.
*
அன்றைய நண்பகலில் விக்டோரியா மருத்துவமனையின் சைக்கியாட்ரி துறையின் தலைவர் டாக்டர் ரங்கநாத் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் வந்திருந்தார்.
பணமும் பதவியும் புகழும் நிரம்பச் சம்பாதித்து விட்டதால் ஆர்வத்தின் பொருட்டு மட்டும் பணிநீட்டிப்பை ஏற்று அரசு வேலையிலிருந்தார். கண்ணாடி அணிந்திருந்தும் அவர் அதைப் பயன்படுத்துவதாய்த் தெரியவில்லை அல்லது ‘மூக்குக் கண்ணாடி’ என்கிற சொற்செட்டை அவர் மிகத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
அவர் வந்ததும் நீலாவதி எழுந்து நின்று வணங்கினாள். ஸ்டேஷனே நின்றது.
பத்து நிமிடம் அவளிடம் பேசி, கேள்விகள் வழி வழக்கு பற்றிப் புரிந்து கொண்டு விசாரணை அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டு அபர்ணாவை வரவழைத்தார்.
“நான் டாக்டர் ரங்கநாத்.”
“ஹாய், ஐயாம் அபர்ணா.”
“எனக்கு கேஸ் பத்தி ஆர்வமில்ல. நாம பொதுவாப் பேசலாம்.”
“கேஸ் பத்திப் பேச என்ன இருக்கு!”
“எந்தக் கலர் பிடிக்கும் உனக்கு?”
“சிவப்பு.”
“எந்தக் கலர் பிடிக்காது?”
“அதுவும் சிவப்பு தான்.”
“கடவுள் நம்பிக்கை இருக்கா?”
“நிறைய.”
“உன் குலதெய்வம் என்ன?”
“சின்னமஸ்திகா.”
“ரஞ்சித் இறந்தப்போ எப்படி உணர்ந்தே?”
“இதென்ன கேள்வி? ரொம்ப துக்கமா.”
“அபய் இறந்தப்போ?”
“அதை விட அதிக துக்கமா.”
“ஏன் அதிகம்?”
“நான் காரணம் என்பதால்.”
“உனக்கு இந்த உலகத்திலேயே அதிகம் பிடிச்சது யாரு?”
“என் ஃப்ரண்ட் ஆயிஷா.”
“ஏன் பிடிக்கும்?”
“எனக்காக என்ன வேணா செய்வா.”
“பெண்ணாகப் பிறந்தது பிடிச்சிருக்கா?”
“நிச்சயமா இல்ல.”
“அப்படியா! ஏன்?”
“பீரியட்ஸ், ப்ரக்னன்ஸி. எவ்ளோ ரத்தம்.”
“என்ன கேக் பிடிக்கும்?”
“எக்லெஸ் எதுனாலும்.”
“ஏன்?”
“உயிரைக் கொல்றது பாவம்.”
“அப்புறம் எப்படி அபய்யை உன்னால கொல்ல முடியும்?”
“ம்.”
மேலும் கேள்விகளைத் தொடர்ந்தார். அபர்ணாவின் பதில்கள் சார்ந்து அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொண்டார். இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள் இடைவெளி விட்டு சுமார் ஒரு மணி நேரம் அவளோடு உரையாடினார். வினாக்கள் கொண்ட சில தாள்களைக் கொடுத்து பதில் எழுதச் செய்தார். அது இன்னொரு மணி நேரம் ஆனது. பிறகு அவளை அனுப்பி வைத்தார். அத்தாள்களை எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தார். சிலபல இடங்களைச் சிவப்பு மசியால் வட்டமிட்டார்.
நடுவே பிற வழக்குகளில் கவனமாகித் திரும்பிய நீலாவதியிடம் பேச ஆரம்பித்தார்.
“இந்தப் பெண் அபர்ணா பெரும்பாலும் சாதாரணப் பெண் போலத்தான் தோன்றுகிறாள். சில இடங்களில் பிசிறடிக்கிறது. ஆனால் அது பொதுவாக எல்லா மனிதர்களிடமும் இருக்கக்கூடியது தான். மற்றபடி மனநிலை குலைந்தவளாகச் சொல்லவே முடியாது.”
“ஓ!”
“எளிய, இளகிய மனமுடையவள். பயம், ஆசை இந்த ரெண்டும் தான் மனிதர்களின் ஆதாரப் பிரச்சனைகளுக்கான காரணம். அது ரெண்டுமே இவளுக்குக் குறைவு தான்.”
“அப்ப என்ன சஜஸ்ட் பண்றீங்க?”
“நார்மல் மென்டல் ஸ்டேட்னே அஷ்யூம் பண்ணிக் கேஸை ப்ரொஸீட் பண்ணுங்க.”
“ஓக்கே, ஃபைன்.”
“ஆனால் ஒரு விஷயம். குறிப்பிட்ட சமயங்களில் மனம் தடுமாறலாம். ஒரு ஸ்பைக் மாதிரி திடீர் வெடிப்பு. அப்புறம் சரியாகிடலாம். அப்போ இந்தப் பரிசோதனையைச் செய்தால் தான் கண்டறிய முடியும். இல்லன்னா அது பாட்டுக்கு ஆழத்தில் எங்கோ புதைஞ்சு ஒளிஞ்சிருக்கும். நாம மேலோட்டமாத் தெரியறத மட்டும் நோண்டிக்கிட்டு கிடப்போம். காய்ச்சல் விட்டு விட்டு வந்தா காய்ச்சல் இருக்கும் போது தெர்மாமீட்டர் வெச்சுப் பார்த்தாத்தானே காய்ச்சல் இருக்கறதையே காட்டும்! அந்த மாதிரி விஷயம்.”
*
“போய்ட்டு வர்றேன்டி. பத்திரமா இரு. எதுனாலும் உடனே ஃபோன் அடி.”
“சரிம்மா. நீ கவலைப்படாதே. உன் உடம்பைப் பார்த்துக்க, அப்பாவையும்.”
அம்மா கிளம்பும் போது அபர்ணாவை அணைத்துக் கொண்டாள். உடல் கதகதத்தது.
“என்னடி உடம்பு இத்தனை சூடா இருக்கு?”
“அது எப்பவும் அப்படித்தான்மா.”
“என்ன அப்படித்தான். பீரியட்ஸ் வரப்போகுதோ என்னவோ.”
திக்கென்றது அபர்ணாவுக்கு. அதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டதா! வயிறு கலங்கியது.
ஆயிஷா பத்தாண்டுகளுக்கு முன் சொன்ன வாக்கியம் சொல் பிசகாமல் ஒலித்தது.
“உடம்பு சுட்டா, வயிறு கலங்கினா, பீரியட்ஸ் பக்கத்துல இருக்குனு அர்த்தம்.”
*
“ஃபோன்ல யாரு?”
“சஞ்சனா தான் மா.”
“அந்த ரூம்ல தான் நெட்வொர்க்கே வராதே.”
“இப்பலாம் யாரும்மா ஃபோன் பண்றா? வாட்ஸாப்ல தான் பேசிக்கறோம்.”
புஜ்ஜுக்குட்டி சொல்லிக் கொண்டே செல்பேசிப் புட்டத்தில் சார்ஜரைச் சொருகினான்.
நீலாவதிக்குப் பொறி தட்ட சைபர் க்ரைமில் சொல்லி அபர்ணாவின் வாட்ஸப்பில் யாருக்கேனும் அழைப்பு போயிருக்கிறதா எனக் கேட்டாள். ஒரே எண்ணுக்கு சில மாதங்களுக்கொரு முறை வீடியோ அழைப்புகள் வந்திருந்தன. ஜெர்மனி தேசத்து எண். A என்று பெயர் சேமிக்கப்பட்டிருந்தது. அழைத்த போது ஆயிஷா பேசினாள்.
நீலாவதி சுருக்கமாய் அறிமுகப்படுத்திக் கொண்டு, விஷயத்தைச் சொல்லி உதவி வேண்டும் என்று சொன்னாள். மறுமுனையில் ஆயிஷா ஜீரணிக்கச் சமயமெடுத்தது.
“அபர்ணா எங்கே? நான் பேச முடியுமா?”
“இங்கே தான் இருக்காங்க. உங்க கிட்ட என்கொய்ரி முடிஞ்சப்புறம் பேசலாம்.”
“ஓக்கே.”
“இன் ஃபேக்ட், அபர்ணாகிட்ட நீங்க அவசியம் பேசனும். உங்ககிட்டயாவது ஏதாவது சொல்லலாம். ஒரு மாசம் ஆகப் போகுது. கேஸ் தொடங்கின இடத்துலயே நிக்குது.”
“ஷ்யூர்.”
பின் விரிவான விசாரணையை மறுநாள் ஜூம் காலில் பேசலாம் என்றும் விவரங்கள் அனுப்புவதாகவும் சொல்லி நீலாவதியின் மின்னஞசல் முகவரி வாங்கிக்கொண்டாள்.
*
வயிறு லேசாய் வலித்தது. கை, கால் முட்டியிலும் வலி இருந்தது. படுத்திருந்தாள்.
அபர்ணாவுக்குக் கை நடுங்கியது. தன் ஒரு கையால் இன்னொரு கையைப் பிடித்து நிறுத்தப் பார்த்தாள். இரண்டு கைகளுமே சேர்ந்து நடுங்கத் தொடங்கின. விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சிவப்பு ஸ்வெட்டருக்குள் அபய் மல்லாக்கக் கை கால்களை விரித்து இயேசு சிலுவையிலறையப்பட்டதைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்.
கொசு ஒன்று காதுக்குள் எரிச்சலூட்டும்படி ரீங்காரித்து வந்து அபய்யின் கன்னத்தில் ஒட்டியது. அதைக் கொல்ல விரும்பாமல் மெல்லப் போர்வையால் தட்டி விட்டாள்.
அபர்ணாவுக்குப் பயமாய் இருந்தது. அவசரமாய்ச் செல்பேசியை எழுத்து வாட்ஸாப் திறந்து ஆயிஷாவின் பெயர் தேடி யோசித்து விட்டு கால் பட்டனை அழுத்தினாள்.
‘Of all that is written, I love only what a person has written with his own blood.’
சட்டென அவள் விரல் தானாய்த் திரையைத் தடவி வாட்ஸாப் காலைத் துண்டித்தது.
*
BENGALURU CITY POLICE லேபிள் ஒட்டப்பட்ட HP விண்டோஸ் லேப்டாப் திறந்திருந்தது. காவல் நிலைய வைஃபை நிலையாமையினூடே ஜூம் காலில் குந்தினாள் நீலாவதி.
ஆயிஷா சட்டை பொத்தான்களில் அலட்சியமோ அவசரமோ காட்டியிருந்தாள். அவள் பின்புலத்தில் தெரிந்த வீட்டுப்பொருட்களில் செழிப்பும் சுத்தமும் ஒருசேரத் தெரிந்தது.
“குட்மார்னிங் மேடம்.”
“இங்க, குட்ஆஃப்டர்நூன் ஆகிடுச்சு.”
ஆயிஷா அதை மிக ரசித்துப் புன்னகைத்தாள். நீலாவதியும் இணைந்து கொண்டாள்.
“சொல்லுங்க ஆயிஷா. அபர்ணா கிட்ட அப்பப்போ பேசி இருக்கீங்க. ஸோ உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்கலாம்னு தான் உங்க கிட்ட என்கொய்ரி பண்ண நினைச்சேன்.”
“எனக்குத் தெரிஞ்சதை எல்லாம் சொல்லிடறேன்.”
“இருங்க, ஸ்டேஷன் ரைட்டரையும் கூப்பிட்டுக்கலாம்.”
ஓரமாய் நின்று சர்க்கரையற்ற தேநீரை ரசித்துறிஞ்சிக் கொண்டிருந்த திம்மய்யா அவசரமாய் அதைத் தீர்த்து, அட்டைக் கோப்பையைக் கசக்கிக் குப்பையில் எறிந்து விட்டு உதடுகளைத் தன் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டு வந்து அமர்ந்தார்.
தானும் கணினித் திரையில் தெரிய வேண்டுமா அல்லது தனக்குத் திரை தெரிந்தால் போதுமா என அவருக்குக் குழப்பமாய் இருந்தது. சரி எழுதுவதற்குக் குரல் கேட்டால் போதும் என முடிவெடுத்து நீலாவதிக்கு எதிரான நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
“சொல்லுங்க, அயீஷா.”
“கேளுங்க மேடம்.”
“நீங்க ஜெர்மனி போயி எவ்ளோ நாளாச்சு?”
“அஞ்சு வருஷம் முடியப் போகுது.”
“அங்கே என்ன வேலை?”
“எல்லோரும் பண்றது தான். சாஃப்ட்வேர்.”
“சரி, அபர்ணாவுக்கு ஏதும் பிரச்சனை இருக்கா? உடல்ரீதியாக அல்லது மனரீதியாக?”
“அபர்ணாவுக்கு ரென்ஃபீல்ட் சின்ட்ரோம்.”
“அப்படின்னா?”
“ரென்ஃபீல்ட் ட்ராகுலா நாவலில் வரும் கேரக்டர் பேர். நூறு வருசம் முன் எழுதினது.”
அதற்கும் வழக்குக்கும் என்ன தொடர்பு என்பதுபோல் நீலாவதி அவளைப் பார்த்தாள்.
“ஸாரி மேடம். சொல்றேன்.”
“ம்.”
“அபர்ணாவுக்கு ரத்தம் குடிக்கற அர்ஜ் இருக்கு.”
“ரத்தம்னா?”
”மனுஷ ரத்தம். அப்படியே பச்சையா.”
“ஓ!”
“அது ஒரு க்ளினிக்கல் கண்டிஷன். அங்க டாக்டர்ஸ் கிட்ட கேட்டா சொல்வாங்க.”
“சரி, இது உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“பத்து வருஷம் நான் தான் அவளுக்கு ரத்தம் கொடுத்தேன்.”
“ஓ!”
“ஆமா.”
“எப்போல இருந்து இது இருக்கு?”
“அவ வயசுக்கு வந்ததுல இருந்து.”
“ஏன் இப்படி?”
“பீரியட்ஸில் ரத்தம் போறது அவளுக்கு பயம் கொடுக்குது. உயிர் போயிடுமோன்னு. அதைச் சரி செய்ய இழந்த ரத்தத்துக்கு இணையா மனித ரத்தம் குடிக்க நினைக்கறா.”
“இது கவுன்சிலிங் தேவைப்படற விஷயம் ஆச்சே?”
“ஆமா. ஆனா அந்த வயசுல அவ அந்த பயத்தைத் தன் அம்மா கிட்ட சொன்னப்போ அது முட்டாள்தனமான எண்ணம்னு சொல்லிட்டாங்க. என் கிட்ட இதைக் கேட்டப்ப எனக்கும் தெளிவாத் தெரியல. எந்த இந்திய டீனேஜ் வயசுப் பெண்ணுக்கும் இருக்கும் அரைகுறை புரிதல். நிறைய மூட நம்பிக்கை. நிறையத் தயக்கம். நிறையத் தடைகள். அதனால் என்னாலும் ஏதும் பெருசா உதவ முடியல. அவ பயத்தைப் போக்கறதுக்கு.”
“அப்புறம்?”
“பீரியட்ஸப்ப ப்ளீடிங் தொடங்கும் முதல் நாள் இரவு அவள் ரொம்பக் கஷ்டப்படுவா. பயத்தில் தூங்காமத் துடிப்பா. ஆனா வீட்ல யாருக்கும் தெரியாமப் பார்த்துக்கிட்டா.”
“வயித்து வலி அதிகமாகி துடிக்கறதா?”
“இல்ல. வயித்து வலி வழக்கமான அளவு தான். ஆனா இது அவ மனசுல கற்பனை பண்ணிக்கற பிரச்சனை. ஒண்னுமில்லாததை உருபெருக்கிப் பண்ணிக்கிட்ட சுயவதை. வயித்து வலி மட்டும் தான்னா நானே டாக்டர்கிட்ட போகத்தான் சொல்லியிருப்பேன்.”
“புரியுது.”
“அது பார்க்கச் சகிக்காமத்தான் நான் அவளுக்கு ரத்தம் கொடுக்க ஆரம்பிச்சேன்.”
“…”
“முதலில் ரொம்ப க்ரூட் ஃபார்ம்ல தான் ஆரம்பிச்சோம். ஊசியால் என் விரலில் குத்தி ரத்தம் வரும் வரை உறிஞ்சுவா. சில நாள் ரெண்டு மூணு விரல் வரை போகும். பின் சில நாள் பிளேடில் கீறல். அப்புறம் டென்த் படிக்கும் போது சிரிஞ்சில் ப்ளட் எடுக்கக் கத்துக்கிட்டேன். பிறகு காலேஜ என்எஸ்எஸ் கேம்ப்பில் ப்ளட் டொனேஷன் கேம்ப்ல பார்டிசிபேட் பண்ணினப்ப ப்ராப்பரா ப்ளட்பேக்ல ரத்தம் எடுக்கறது பத்தித் தெரிஞ்சுது.”
“எவ்ளோ ப்ளட் குடிப்பாங்க?”
“முதலில் கொஞ்சமாத் தான் இருந்தது. அப்புறம் மெல்ல மெல்ல அதிகமாச்சு. நான் கடைசியாக் கொடுத்த ஆண்டுகளில் ஒரு தடவைக்கு 350 மில்லி கொடுப்பேன். மாசம் ஒருமுறை. அப்படியே என் கண்முன்னாலேயே குடிச்சிடுவா. எனக்குக் குமட்டிக்கிட்டு வரும். ஆனா அவ ஒருமுறை கூட சின்ன முகமாற்றம் கூட காட்டின நினைவில்ல.”
“பீரியட்ஸில் எல்லா நாளும் இது செய்வாங்களா?”
“இல்ல, ஆரம்பிச்ச முதல் நாள் மட்டும் தான்.”
“ஏன்?”
“தெரியல. அதுலயே அவ மனசு சாந்தமாகிடுதுன்னு வெச்சுக்கலாம்.”
“எப்போதிலிருந்து இதைச் செஞ்சீங்க?”
“அவ வயசுக்கு வந்ததில இருந்து கல்யாணம் ஆகும் வரை.”
“இதெல்லாம் அவ பேரண்ட்ஸுக்குத் தெரியாதா?”
“இல்ல. சுத்தமாத் தெரியாது. அவ்வளவு அழுத்தக்காரி.”
“அதென்னவோ உண்மை தான்.”
நீலாவதி முணுமுணுத்ததை இயர்ஃபோனில் கேட்ட ஆயிஷா புன்னகைத்தாள்.
“அப்படின்னா அபர்ணாவே தான் செய்வது தப்புனு நினைச்சாங்களா?”
“இல்ல. அவ அதை ஓர் அந்தரங்க விஷயமா நினைச்சா. அது தான் காரணம்.”
“ஓ!”
“எப்படி பீரியட்ஸ் நம்ம சொசைட்டில டாபூவோ அதே போல் அது தொடர்புடைய தன்னோட ரத்தம் குடிக்கற பழக்கமும் டாபூன்னு அவ நினைச்சதாச் சொல்லலாம்.”
“இது ரஞ்சித்துக்காவது தெரியுமா?”
“கல்யாணமானதிலிருந்து அவர் தானே அவளுக்கு டோனர்.”
“ஓ!”
“ஆமா, அபர்ணாவோடது லவ் மேரேஜ். அதுவும் இண்டர்கேஸ்ட் மேரேஜ் என்பதால் காலேஜ் முடிச்ச ஆறு மாசத்துல அபர்ணாவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. அதனால் தான் கல்யாணத்தைக் கூட அவுங்க ரெண்டு ஃபேமிலிக்கும் சம்மந்தமே இல்லாம பெங்களூரில் கொண்டு போய் வெச்சாங்க. ஆனால் ரஞ்சித் நல்ல சாய்ஸ்.”
“கல்யாணத்தால ரெண்டு ஃபேமிலிலயும் ஏதாவது பிரச்சனை இருந்துச்சா?”
“சேச்சே. அபர்ணா வீட்ல மட்டும் கொஞ்சம் அவமானமா ஃபீல் பண்ணினாங்க. ஆனா கோபமாவோ வெறுப்பாவோ மாறல. ஒரே மகள் சீக்கரமே சமாதானம் ஆகிட்டாங்க.”
“சரி, மேலே சொல்லுங்க.”
“ரஞ்சித் ரொம்ப லக்கினு அவரை முதலில் மீட் பண்ணினப்போ சொன்னேன். ஆனால் உண்மையில் இப்ப யோசிச்சுப் பார்த்தா அபர்ணா தான் லக்கி. நாலஞ்சு வருஷமா மாசாமாசம் தன் ரத்தத்தை அவளுக்குக் கொடுத்திட்டு இருந்தார். சாகும் வரைக்கும்.”
“அபர்ணாவின் பிரச்சனை தெரிஞ்சு தான் ரஞ்சித் கல்யாணம் பண்ணினாரா?”
“ஆமா. அவருக்கு முன்பே தெரியும் அவ கண்டிஷன். அவர் புரிஞ்சுக்கிட்டார். இதை அவர் ஒரு பெரிய பிரச்சனையாவே நினைக்கல. டயாபடீஸ் இருக்கறவங்க தினம் இன்சுலின் போட்டுக்கறாப்ல இது மாசாமாசம் ஒரு கடன் என்று தான் பார்த்தார். அதனால் ஹர்ட் பண்ணாம ஒரு குழந்தை மாதிரி தான் அவளைக் கையாண்டார்.”
“எப்போ கடைசியா நீங்க அபர்ணா கிட்ட பேசுனீங்க?”
“ரஞ்சித் இறந்த அன்னிக்கு. ஆனா அன்னிக்குச் சரியா பேச முடியல.”
“அதன் பிறகு பேசலயா?”
“அப்புறம் வேலை விஷயமா ஒரு அஃபிஷீயல் ட்ரிப்ல லண்டன் வரைக்கும் போக வேண்டி இருந்தது. மூணு வாரம் வாட்ஸாப் பயன்படுத்தல. ஒரு நாள் மிஸ்ட் கால் பார்த்துட்டு வேலை மத்தியில் இருந்ததால் கூப்பிடல. திரும்ப ரிலாக்ஸாகி ட்ரை பண்ணினா அவ நம்பர் வேலை செய்யல. மெயில் அனுப்பினேன். பதிலே இல்ல.”
“அப்போ நாங்க அபர்ணா செல்ஃபோனை சீஸ் பண்ணியிருந்தோம்.”
“காட் இட்.”
“இப்படிக் குடிப்பதால் உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை ஆகாதா?”
“ப்ளட்ல அயர்ன் அதிகம் இருப்பதால அதைக் குடிச்சா லிவர்ல, ஹார்ட்ல ப்ராப்ளம் வரும்னு சொல்வாங்க. ஆனா அபர்ணாவுக்கு நான் அறிஞ்ச வரை ஒண்ணும் ஆகல. சொல்லப் போனா அவ ஒரு கட்டத்தில் அதை ரசிக்க ஆரம்பிச்சிட்டா. அந்த ருசியே பிடிச்சுப் போச்சு. சந்தோஷமா செஞ்சா. ஆனா அது மாசத்தில் அந்த ஒரு நாள் தான்.”
“விசித்திரம்.”
“ரஞ்சித் கிட்ட எடுத்துக்க ஆரம்பிச்சப்ப ஒரு முறை சொன்னா என்னிடம். ரஞ்சித்தின் ரத்தம் என்னுடையதை விட திக்கா, ரிச்சா இருக்கு, ஆனா சுவை தான் குறைவுன்னு.”
“வக்கிரம்.”
“இட் இஸ். ஆனா அது தான் அபர்ணா. அல்லது அதுவும் சேர்ந்தது தான் அவ.”
“இது அப்நார்மலான விஷயம் இல்லையா?”
“நமக்கு விரலில் காயம் பட்டு ரத்தம் கசிஞ்சா வாயில் வெச்சு சூப்பறோம்ல, அதோட நீட்டிக்கப்பட்ட வடிவம் தான் அபர்ணாவுக்கு இருந்தது. அது நார்மல்னா அவளோடது எக்ஸ்டென்டட் நார்மல். என்னால அப்படித் தான் சமாதானப்படுத்திக்க முடிஞ்சது.”
“அதுக்கு அபர்ணா தன் ரத்தத்தையே குடிக்கலாமே!”
“அவ கிட்டயே அதை ஆரம்பத்துல கேட்டிருக்கேன். அதுவும் ட்ரை பண்ணியிருக்கா. ஆனா அது தன்னோட ரத்தம்னு அவளுக்குத் தெரியுமே. அவ ரத்தம் குடிக்கறதே தன் மாதாந்திர ரத்த இழப்பைச் சரிகட்டத்தான். அப்புறம் எப்படி தன் ரத்தத்தையே குடிச்சு அதைச் சமன் செய்ய முடியும்? அதைச் சரி செய்ய வெளியிலிருந்து இன்னொருவர் ரத்தத்தால் மட்டுமே முடியும். இது மனநிலைச் சிக்கல். அதனால் அது தீர்வாகல.”
“ப்ளாக் மார்க்கெட்ல ஏதாவது இல்லீகல் வழியில் ப்ளட் வாங்கி இருக்கலாமே. ஏன் ரஞ்சித்தே ரத்தம் கொடுத்துச் சிரமப்படனும்? அவுங்ககிட்ட காசுக்கும் குறைச்சலில்ல.”
“ஒரு போலீஸ்காரரே இப்படிக் கேட்பது ஆச்சரியம் தான்!”
“நீங்க சொல்ற விஷயத்தின் உண்மையைத்தன்மையை ஆராய வேண்டியிருக்கே!”
“விஷயம் தெரிஞ்சதே எங்க மூணு பேருக்குத் தான். ஸோ வெளியே முயற்சிக்கவே இல்ல. அப்படி முயற்சிக்க நாங்க விரும்பி இருந்தாலும் அபர்ணா ஒத்துக்க மாட்டா.”
“ஏன்? வெளியே தெரிஞ்சிடும்னா?”
“ம். அது மட்டுமில்ல. ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிற ரத்தம் எத்தனையோ பேரின் உயிர் காக்குதுன்னு அவளுக்குத் தெரியும். அதை விடத் தன் தேவை முக்கியமானது இல்லன்னு நினைச்சா. அடுத்தவரைத் துன்புறுத்தி ரத்தம் பெறுமளவு அவ போகல.”
“அதாவது உங்களுக்குத் தெரிஞ்ச வரை.”
“அஃப் கோர்ஸ்…”
“உங்களுக்கு இது தப்புனு தோனலையா ஆயிஷா?”
“சில சமயம் தோனும். ஆனா புலி வாலைப் பிடிச்ச கதை மாதிரி ஆகிடுச்சு. அந்த யோசனை டூ லேட். தவிர, எல்லாம் விட அவ நிம்மதி முக்கியம்னு தோனிடும்.”
“ஓஹோ!”
“ஆனா…”
“ஆனா?”
“ஒரு கட்டத்துக்கு மேல நான் இதைப் பத்தி தரவ்வாத் தேடிப் படிச்சேன். இதன் மருத்துவ விஷயங்கள், உளவியல் விஷயங்கள், சட்ட விஷயங்கள்னு எல்லாமே.”
“ஓ!”
“இந்தியாவில் இது சம்மந்தமாத் தெளிவாச் சட்டம் ஒண்ணுமில்ல. நான் உட்கார்ந்து உங்க கிட்ட எல்லாத்தையும் தைரியமாச் சொல்லிட்டிருக்கவும் அதுதான் காரணம்.”
“சரி, அபய் விஷயத்துக்கு வர்றேன். என்னவாகியிருக்கும்னு ஊகிக்க முடியுதா?”
“அபர்ணா லாஸ்ட் பீரியட் டேட் தெரியுமா?”
“தெரியுமே. அபய் காணாமப் போன அதே நாள் தான்.”
உடன் ஆயிஷா முகம் இருண்டாள். சொற்களைத் தேடினாள். தடுமாறிச் சொன்னாள்.
“தென் தேர் இஸ் எ சான்ஸ்.”
“எதுக்கு?”
“அபய் ப்ளட்டை எடுக்க அவ ட்ரை பண்ணி இருக்கலாம்.”
“ஷிட்.”
“நான் அபர்ணா கிட்டப் பேசறேன், மேடம்.”
“இல்ல. அவ ஆபத்தான பெண் மாதிரி தோனுறா எனக்கு. நான் திரும்பப் பேசறேன்.”
ஆயிஷாவின் பதிலுக்குக் காத்திராமல் லேப்டாப்பை மூடி விட்டு எழுந்தாள் நீலாவதி.
*
ரஞ்சித் உயிலேதும் எழுதவில்லை. அவன் சாவை எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தவிர பெரிய காரணம் ஏதுமில்லை. அதனால் அவன் சம்பாத்யமும் சொத்துக்களும் அவளுக்கும் அவன் பெற்றோருக்கும் சமமாய்ப் பிரிந்தது. அதில் அபர்ணாவுக்கு எந்த மனக் குறையும் இல்லை. ஏனோ தான் உயில் எழுதினால் என்ன எனத் தோன்றியது.
ஒரு வெள்ளைத் தாள் எடுத்து இது யார் வற்புறுத்தலுமின்றி தானே சுயநினைவுடன் எழுதும் உயில் என்றும், தனக்கென வரக்கூடிய சொத்துக்கள் அத்தனையும் சினேகிதி ஆயிஷாவுக்கே சேரும் என்றும் எழுதிக் கையெழுத்திட்டாள். மகிழ்ச்சியாய் இருந்தது.
அந்த வெள்ளைத் தாள் குறிப்பு சட்டப்பூர்வமாய்ச் செல்லுபடியாகுமா என்றெல்லாம் அவள் கவலைப்படவில்லை. அது என்றேனும் தன் பெற்றோர் கண்களில் பட்டால் நிச்சயம் தன் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என அறிவாள். அவ்வளவு தான்.
ஃப்ளாட்டைப் பூட்டி வங்கிக்கு வந்து லாக்கர் திறக்க விண்ணப்பம் எழுதிக் கொடுத்துக் காத்திருந்து அனுமதி கிடைத்ததும் தாளை மடித்து லாக்கரில் வைத்துப் பூட்டினாள்.
வெளிவந்து ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
*
பிற்பகல் கடந்திருந்தது. நீலாவதி அபர்ணாவை விசாரணை அறைக்கு அழைத்தாள்.
“அபர்ணா, த கேம் இஸ் ஓவர்.”
“…”
“உன் ஃப்ரண்ட் ஆயிஷா கிட்ட பேசினேன்.”
திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தாள் அபர்ணா. பிறகு வெறுமையாச் சிரித்தாள்.
“இனியும் மறைச்சுப் பிரயோஜனம் இல்ல. என்ன நடந்ததுன்னு சொல்லு.”
“எல்லாமே சொல்லிட்டாளா?”
“கிட்டத்தட்ட.”
அபர்ணா பெருமூச்சு விட்டாள். தோல்வியுற்றதைப் போல் உணர்ந்தாள். தண்ணீர் குடித்தாள். சற்று நேரம் யோசித்தாள். பிறகு தீர்மானித்தவளாய்ப் பேச ஆரம்பித்தாள்.
“ட்யூஸ்டே ஈவ்னிங். அபய்யைத் தூக்கிட்டு அப்பார்மெண்ட் சில்ட்ரன் பார்க் போனேன். அப்பவே பீரியட்ஸ் ஆனேன். அதனால சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துட்டேன். ரஞ்சித் இல்லாம, ஆயிஷா இல்லாம என் முதல் பீரியட்ஸ் அது. பிஸினஸ் ட்ரிப் ஏதாவது போறதுன்னாக் கூட முன்கூட்டியே பளட் எடுத்து வெச்சிட்டுப் போவார் ரஞ்சித். அவர் என் கடவுள் மாதிரி. அவர் இல்லாம யாருமே இல்லாத அனாதையா உணர்ந்தேன்.”
“தென்?”
“ஒவ்வொரு வாய்ப்பா யோசிச்சேன். அப்பார்ட்மெண்ட்ல யார்கிட்டயாவது போய்க் கொஞ்சம் ரத்தம் கொடுங்கன்னு வெட்கம் விட்டுக் கேட்டுடலாமான்னு யோசிச்சேன். ஆனால் இந்தப் பாழாய்ப் போன மான ரோஷம் என்னை அப்படியே அடக்கிடுச்சு.”
“ம்.”
“அப்புறம் குழந்தைக்குப் பால் கொடுத்துத் தூங்க வெச்சிட்டு, நானும் தூக்க மாத்திரை போட்டு படுத்துட்டேன். ஆனா எவ்வளவு முயன்றும் தூக்கமே வரல. ரத்தம், அதோட வாடை, அதோட நிறம், அந்த ருசி மனசுல திரும்பத் திரும்ப வந்துட்டே இருந்துச்சு.”
“…”
“நைட் பதினோரு மணி இருக்கும். அந்த வெறியை அடக்கவே முடியல. தூங்கிட்டு இருந்த அபய்யைப் பார்த்தேன். ‘அம்மா, வேணும்னா என்னை எடுத்துக்கோ’ன்னு சொல்ற மாதிரியே இருந்துச்சு. அதுவும் ரஞ்சித்தின் குரலில். பூ மாதிரி சிரிச்சான்.”
“…”
“கிட் எடுத்துட்டு வந்து அபய் கையில் ஊசி குத்தினேன். முழிச்சுக்கிட்டு அழுதான். எடுத்து அப்படியே மாரோட அணைச்சுக்கிட்டேன். அந்த வலிலயும் என் முலை தேடினான். கண்ல தண்ணி வந்திடுச்சு. தடுமாறினேன். ஆனா ஒரே கணம் தான். திரும்ப ரத்தம் மனசு பூரா நிறைஞ்சுது. ரஞ்சித் கிட்ட எடுக்கற மாதிரியே தான் எடுத்தேன். அதே 350 எம்எல். வலியில் அபய் அழுதான். வாயைப் பொத்தினேன்.”
“…”
“ரத்தத்தைக் குடிச்சு அது நாக்கை நனைச்சு தொண்டையில் இறங்கின பிறகு தான் நிதானத்துக்கே வந்தேன். வேகமா வெடிக்கற மாதிரி என் நெஞ்சு அடிச்சுக்கிச்சு.”
“…”
“அபய்யைக் கையில் தூக்கினேன். அவன் உடம்பு கொதிச்சுது. பேரசிட்டமால் சிரப் வாயில் ஊத்த முயற்சி பண்ணினேன். பல்லைக் கடிச்சு வாயைத் திறக்கவே இல்ல. கொஞ்சம் நேரத்தில் குழந்தைக்கு வலிப்பு வர ஆரம்பிச்சுது. பயந்து போனேன்.”
“…”
“என்ன என்னவோ செஞ்சு பார்த்தேன். ஆனா கொஞ்ச நேரத்தில் அசைவே இல்ல.”
“…”
“அப்புறம் மூக்கில் விரல் வெச்சுப்பார்த்தேன். நெஞ்சில் கை வெச்சுப்பார்த்தேன். அபய் இறந்துட்டது புரியவே ரொம்ப நேரமாச்சு. அப்படியே அவனை மெத்தையில் போட்டு ரொம்ப நேரம் பார்த்துட்டே உட்கார்ந்திருந்தேன் - திடீர்னு அம்மான்னு எந்திரிச்சு என்னை வந்து கட்டிக்குவான்னு. ஆனா எழவே இல்ல. என்னை ஏமாத்திட்டான்.”
“எவ்வளவு பெரிய பாவம் நீ செஞ்சது…”
“என் குழந்தை. எனக்கு அதன் ரத்தத்தில் உரிமை இருக்குனு அந்நேரத்தில் தோனுச்சு.”
“…”
“காலையில் எழுந்தப்பக் கூட எனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்ல. கை தவறி ஒரு பீங்கான் கோப்பை விழுந்து உடைஞ்சாப்ல தான் தோனுச்சு. அபய்யின் ரத்தம் எடுத்த மெடிகல் கிட் சமாச்சாரங்கள் வீட்டில் இருக்க வேண்டாம்னு தோனுச்சு. காலையில் வாக் போய்ட்டு வந்தேன்ல, அப்போ அகரா லேக்ல வென்ஃப்ளான், ப்ளட்பேக், பேண்ட் எய்ட், காட்டன் எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன். டாய்லெட் ஃப்ளஷ் பண்ணினாப்ல.”
“…”
“ஆனா வீடு திரும்பின பின் எட்டு மணிக்கு அபய்க்கு ஒரு வேக்கப் கால் அமேஸான் எக்கோல வெச்சிருக்கோம். அது பாடுச்சு. ஆனா அபய் எழுந்திருக்கல. எனக்கு அப்பத் தான் நான் பண்ணின பாவம் முதல் முறையா உறைச்சுது. அதைக்கேட்டதும் அடக்க முடியாத அழுகை வந்திடுச்சு. அழுதேன். குமுறிக் குமுறி அழுதுட்டே இருந்தேன்.”
“…”
“இப்படியே இருந்தா மேலும் பலர் சாவுக்குக் காரணமாகிடுவேனோன்னு தோனுச்சு. ஒவ்வொரு மாசமும் யாராவது சாவாங்க என்னால. அது தான் உடனே போலீஸ் ஸ்டேஷன் கிளம்பி வந்தேன். ஆனால் இந்த உண்மையை முழுக்கவுமே சொல்ல என்னால முடியல. ஏன்னா அதை நான் செய்யல. நான் நானா இருந்தப்ப செய்யல.”
“அப்புறம் அபய் பாடியை என்ன செஞ்சீங்க, அபர்ணா?”
“…”
“சொல்லுங்க.”
“அன்னிக்கு ராத்திரியே…”
“கமான்… யூ ப்ரூட்டல் க்ரிமினல்…”
“துண்டு துண்டா வெட்டி, மசாலா தடவி, வாழை இலையில் சுருட்டி வெச்சு அவிச்சு…”
நீலாவதிக்குப் புட்டத்தில் ஊசி குத்தியது போல் சினமேறியது. அபர்ணாவை ஓங்கி கன்னத்தில் அறைந்தாள். ஏராள நியூட்டன் விசை கொண்ட மிருக பலத் தாக்குதல்.
அபர்ணா அந்த அறையின் மூலைக்கு எகிறிப் போய் விழுந்தாள். சுதாரித்துத் தலை தூக்கிப் பார்த்தாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் அவள் பிம்பம் தெரிந்தது. இன்னோர் அபர்ணா. ரத்தம் வழிகின்ற உதட்டுடன் புத்தம் புதிய அபர்ணா.
அவளுக்கு வேறு எவரையோ பார்ப்பது போல் தோன்றியது. எங்கோ பார்த்த முகம் போல். யோசித்து யாரென நினைவுபடுத்திக் கொள்ள முயன்றாள். தலை வலித்தது.
*
ஒரு மாதமிருக்குமா? நாட்கள் நகர்வதே தெரிய மாட்டேன் என்கிறது. நான்கே சுவர். ஒரு கழிவறை. சுமாரான சாப்பாடு. உப்புத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டுமே!
இன்ஸ்பெக்டர், லாயர், டாக்டர், அம்மா எல்லோரும் ஒரே கேள்வியையே தான் வெவ்வேறு சொற்களில் கேட்கிறார்கள். மனிதர்களை விட பதில்கள் முக்கியமா!
அடிவயிற்றில் இளகிக் கசிந்தது. அநிச்சையாய் ஆயிஷா நினைவுக்கு வந்தாள்.
அச்சம் தொற்றிக் கொள்ள, சிரமப்பட்டு நடுங்கிய குரலை வெளியே எறிந்தாள்.
“அம்மா, மனோரம்மாம்மா… இங்கே உடனே வாங்க ப்ளீஸ்…”
*
நீலாவதி வெளியே வந்து கோபத்துடன் ரைட்டரின் மேசையில் குத்தினாள். என்ன விஷயமென்று புரியாமல் திம்மய்யா எழுந்து நின்றார். அவள் நிதானத்துக்கு வரச் சற்று நேரம் பிடித்தது. கண்ணாடி தம்ளரிலிருந்த நீரருந்தினாள். மூச்சு வாங்கியது.
“குழந்தையக் கொன்னு சமைச்சுத் தின்னிருக்கா. இவ எல்லாம் ஒரு மனுஷியா?”
அப்போது அபர்ணா இருந்த விசாரணை அறையின் கதவு அறைந்து சாத்தப்பட்டு உட்புறம் தாழிடப்பட்டது. நீலாவதி அதிர்ந்து அவசரமாய் ஓடிப் போய்க் கதவைத் தட்டினாள். தன் பிழை உறைத்தது. கஸ்டடியில் இருக்கும் கைதியை எல்லோர் முன் வைத்தும் அடித்திருக்கிறேன். பதற்றத்தைத் தணித்தபடியே யோசிக்கத் துவங்கினாள்.
திடீரென நினைவு வந்து, மனதில் நாள் கணக்கிட்டுப் பெண் காவலரைக் கேட்டாள்.
“ஆமா மேடம், நான் தான் சானிடரி நாப்கின் வாங்கிக் கொடுத்தேன் காலைல.”
“என்னம்மா சொல்றதில்லயா…”
“அது வந்து…”
“ஷிட்.”
‘அருட்பெருஞ்சோதி… தனிப்பெருங்கருணை…’
விரலிலிருந்த ‘A’ மற்றும் ‘R’ மோதிரங்களை பெருவிரலால் இறுக்கி அழுத்திய படியே அபர்ணா தன் உதட்டில் வழிந்த ரத்தத்தை நக்கினாள். அதன் அதீத ருசி நாக்கில் ஏறி மூளையில் இறங்கியதும் சன்னதம் வந்ததுபோல் தன் உதட்டைத் தானே வெறியுடன் கடித்துக் கொள்ளத் துவங்கினாள். சிவந்த குருதித் துளிகள் பீச்சியடிக்கத் தொடங்கின.
***
Comments
ச்சும்மா தெறிக்குது.
கொரியன் த்ரில்லர் மாதிரி இருக்கு
Romba arumaiyana kadhaikalam...varthaigal vara marukuthu... excellent ...