ஜலப் பிரவேசம் [சிறுகதை]


காவல் ஆய்வாளர் மஞ்சுநாத்தின் செல்பேசி சிணுங்கிய போது அவரது மனைவியும் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். அவர் உதாசீனம் செய்யத் தீர்மானித்தாலும் அதன் அதீத ஒலியினால் எரிச்சலுற்று அவரது நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள்.

மஞ்சுநாத் எழுந்து தன் லுங்கியைச் சீரமைத்துக் கொண்டு செல்பேசியைப் பற்றினார்.

பாகமண்டலா காவல் நிலையத்திலிருந்து தலைமைக் காவலர் பசவப்பா பேசினார். தன் குரலில் மரியாதையையும் அவசரத்தையும் சரிவிகிதம் கலந்தளிக்க முயன்றார். ஆனால் அதை எல்லாம் மீறிக் கொண்டு தார்வாட் கன்னடம் தான் நிரம்பி வழிந்தது.


“ஸார், ஒரு மிஸ்ஸிங் கேஸ். கன்ட்ரோல் ரூம்ல இருந்து தகவல்.”

“போய்ப் பார்த்துட்டு எஃப்ஐஆர் போட்டு வைங்க. காலைல பார்க்கிறேன்.”

“ஸார். லேடி…”

“வாரமொரு பொம்பள காணாமப் போகுதுய்யா கூர்க் மாவட்டத்துல.”

“இல்ல ஸார். அது வந்து…”

“அட, என்னய்யா?”

அந்தக் கடுப்பு பசவப்பாவிற்கானதா அல்லது ஜாக்கெட் ஹூக் சரி செய்து கொண்டு திரும்பிப் படுத்து விட்ட தன் பெண்டாட்டிக்கானதா என அவருக்கே தெளிவில்லை.

“ஹை ப்ரோஃபைல் கேஸ் ஸார். எப்படியும் மீடியா சீக்கிரம் வந்துடும்.”

“யாரு?”

“ஷ்யாமளா. தமிழ் ரைட்டர்.”

“போன வருஷம் பேங்களூர்ல இவர் மூஞ்சில ப்ளாக் இங்க் வீசினாங்களே?”

“அந்தம்மாவே தான்.”

“அவுங்க மதராஸ் தானே? எப்ப கொடகு வந்தாங்க?”

“தெரியல ஸார். இனிமே தான் விசாரிக்கனும்.”

“எந்த இடத்துல இருந்து மிஸ்ஸிங்?”

“தல காவேரி.”

“சரி, நான் ஒரு மணி நேரத்துல வந்திடறேன். நீங்க இப்பப் போய் ப்ரிலிமினரி என்கொய்ரி ஆரம்பிங்க. ஸ்டேஷன்ல ஆள் இருக்குல்ல? நைட் ட்யூட்டி யார்?”

பதிலுக்கு அக்கறைப்படாமல் தொடர்பைத் துண்டித்து அவசரமாய்க் குறுங்குளியல் இட்டுச் சீருடைக்கு மாறினார். மனைவியிடம் சொல்லிக் கிளம்பலாம் என அவள் புறம் திரும்பிய போது மெல்லிய குறட்டை ஒலி வெளிப்பட்டது. எதிர்ப்புறம் இருந்த சுவர்க் கடிகாரம் உறுத்தார். ஐந்து நிமிடங்கள் விரைந்து ஓடும் அதன் சிறிய முள் பத்திலும் பெரிய முள் பன்னிரண்டிலும் என நின்றன. வீட்டுச் சாவி தேடி எடுத்துக் கொண்டு வெளியே பூட்டிக் கிளம்பினார். குளிரும் இருளும் முகத்தில் அறைந்தன.

மஞ்சுநாத் தல காவேரி கோயில் வாயிலை அடைந்த போது ஏற்கனவே இரண்டு தேசிய தொலைக்காட்சிகளின் தொகுப்பாளினிகள் ஆங்கிலத்தில் மூச்சு விடாமல் கேமெரா முன் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையிலிருந்த மைக்கும் அவர்கள் வாயசைவும் அந்த நேரத்தில் அவருக்கு வேறொன்றை நினைவூட்டின.

அவரது சீருடையைக் கண்டதும் அவசரமாய் மைக்கை நீட்டிக் கேட்கத் துவங்கினர். ஊடகங்களும் அதை விட அதிகமாய் ஆங்கிலமும் மஞ்சுநாத்துக்கு ஒவ்வாமை என்பதால் தெரிந்த, சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்த சம்பிரதாய பதிலை – “வீ ஆர் இன்வெஸ்டிகேட்டிங். வீ வில் சால்வ் இட் சூன்” - உதிர்த்து அவசரமாய் நகர்ந்தார்.

“இது சுற்றுலாத்தலம் அல்ல; புனிதத்தலம்” எனக் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எச்சரித்து போர்ட் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இது க்ரைம் சீன் என எண்ணிக் கொண்டார். இரண்டிரண்டாய்ப் படிகள் ஏறிப் போய் இடதுபுற ஓரமாய் ஷூக்களை கழற்றி விட்டார். படியெல்லாம் நனைந்திருந்து பெய்த மழையை நினைவூட்டின.

அங்கே பசவப்பாவுடன் வேஷ்டி சட்டை அணிந்து ஓர் ஆள் நின்று கொண்டிருந்தார். அவரைக் கொத்தாய்ப் பிடிக்க வேண்டும் எனில் கழுத்தை அல்ல, இடுப்பைத் தான் பிடிக்க வேண்டும் என்பது போல் இருந்தார். மஞ்சுநாத்தைப் பார்த்ததும் கும்பிட்டார்.

பசவப்பா அந்த அசந்தர்ப்பத்திலும் ப்ரோட்டோகால் தவறாமல் சல்யூட் வைத்தார்.

“ஸார். இவர் ராஜேந்திரன். ஷ்யாமளாவின் கணவர்.”

“அவுங்களுக்கு என்ன வயசு?”

“நாற்பத்தஞ்சு ஸார்.”

“எப்படி நடந்துச்சு?”

குளிரினாலோ பதற்றத்தினாலோ நடுங்கிக் கொண்டிருந்தவர் பேசத் தொடங்கினார்.

திடீரென முந்திய இரவு தான் ஷ்யாமளா உடனே தல காவேரி போக வேண்டுமென அவரிடம் கேட்டிருக்கிறாள். அவ்வளவு அவசரமாய்க் கிளம்புவதில் ராஜேந்திரனுக்கு விருப்பமில்லை என்றாலும் அவளை மறுத்துப் பேசுவது அவர்கள் தாம்பத்யத்தின் இருபத்தைந்து ஆண்டுகளில் வழக்கமில்லை என்பதால் அரைமனதாய் ட்ராவல்ஸில் கார் சொல்லி சென்னையிலிருந்து அதிகாலை கிளம்பி மடிகேரி வந்திருக்கின்றனர்.

மாலை வந்து சேர்ந்ததும் ஒரு ஹோட்டலில் அறையெடுத்துத் தங்கிச் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நேராய்த் தல காவேரி கோயிலுக்குக் கிளம்பி வந்திருக்கின்றனர்.

*

காவிரி நதியின் ஊற்றென நம்பப்படும் அந்த நீர்நிலை, அதற்குத் தொடர்பின்றி ஒரு சொகுசு விடுதியின் நீச்சல் குளம் போல் அலட்டல் இன்றித் தளும்பாமல் கிடந்தது.

ஷ்யாமளா புதிதாய் ருதுவான பெண்ணின் தயக்கத்துடன் அடி மேல் அடி வைத்து தல காவேரி குளத்தைச் சுற்றி வந்தாள். அவள் ஆழ யோசனையில் இருக்கிறாள் எனத் தோன்றியது. அதனால் ராஜேந்திரனும் மௌனமாய் அவளின் பின் நடந்தார்.

குளத்தின் மறுபுறத்தில் நகரின் செழித்த அடுக்ககத்துள் இருக்கும் பூஜையறை போல் சன்னப் பரிமாணங்களில் ஒரு கோயில். அதில் பச்சைப் பட்டணிந்த காவேரம்மாவின் சிலை ஒளிர்ந்தது. அதன் முன்னால் ஒன்றரைக்கு ஒன்றரை அடியில் சதுரத்தில் ஒரு சிறியகுளம் “DO NOT TOUCH HOLY WATER” என்ற எச்சரிக்கை வாசகத்துடன் மிளிர்ந்தது.

அதில் தான் காவிரி நதியின் ஊற்று இருக்கிறது என்பது ஐதீகம். அதுவே தல காவிரி குளத்தையும் நிரப்புகிறது. பின்னர் பூமிக்குள் புகுந்து, மலைப் பாறைகளைப் பிளந்து ஊடுருவி சற்றுத் தள்ளி எங்கோ காவிரி என்கிற பேராறாகப் பெருகுகிறது. நதிமூலம்!

பகற்பொழுதில் கோயிலுக்கு மேல் கூரை வேயும் பணிகள் நடந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. செம்மை பீடித்த இரும்புச்சட்டகங்கள் எலும்புக்கூடு போல் நிறுவப்பட்டிருந்தன. மழைத்துளிகள் சிவப்பு ஆக்ஸைடின் சினேகத்திற்கு முயன்றன.

கடவுளுக்கான சமாச்சாரம் என்றாலும் மனித வேகத்தில் தானே வேலை நடக்கும்!

தல காவேரி குளத்தில் ஷ்யாமளா வலக் கால் வைக்கும் போது மணி எட்டே கால் இருக்கும். தென்மேற்குப் பருவக் காற்று மெல்லிசாய்த் தூறிக் கொண்டிருந்தது. நீரின் தட்பத்தை, பாதம் பட்ட கணம் நிகழ்ந்த ஷ்யாமளாவின் தோள்பட்டைச் சிலிர்ப்பிலே கண்டு கொண்ட ராஜேந்திரன் சளிப் பிடிக்குமென்றஞ்சி குளத்துக்கு வெளியே நின்று கொண்டார். இன்னொரு காரணமும் இருந்தது - நீரிழிவுப் போராளியான அவருக்கு சிறுநீர் முட்டிக் கொண்டிருந்தது. ஹோட்டல் அறையிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம் தான் ஆகியிருக்கும் என்றாலும் அவ்வூரின் குளிர் அவரைப் பிதுக்கியிருந்தது. அப்புனிதக் குளத்தை அசுத்தப்படுத்த விரும்பாமல் அங்கேயே நிற்கத் தீர்மானித்தார்.

கார்மேகக் களியாட்டின் காரணமாக நிலா தட்டுப்படவில்லை. அந்நேரம் குளத்திலோ, அதைச் சுற்றியோ எவருமே இல்லை. பத்தாண்டுகளுக்கு முன் வந்த போது அச்சிறு கோயிலின் இடப்புறத்தில் ஒரு சட்டையற்ற பிராமணர் அமர்ந்து கொண்டு ஐம்பொன் தேக்கரண்டியில் காவிரித் தீர்த்தம் வழங்கிக் கொண்டிருந்தார். அவரையும் காணோம்.

கண்ணுக்குப் புலப்படாத காற்று மட்டும் பெய்ய முயன்று கொண்டிருந்த மழையின் கழுத்தைத் திருகும் கவித்துவ ஆவேசத்துடன் அப்பிரதேசம் முழுக்கவும் சுழன்றது.

தூறல் சாரலாகிக் கொண்டிருக்க, கலங்காமல் தெள்ளியதாய்த் தேங்கியிருந்த நீருள் ஷ்யாமளா மெல்ல ஒவ்வொரு அடியாய் வைத்துக் குளத்தின் மத்தி வரை போனாள்.

“எதுக்கு அவ்வளவு தூரம் போறே ஷ்யாமளா? இங்கருந்தே முழுக்கு போடலாம்ல?”

ஷ்யாமளா அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் இப்போது குளத்தின் நடுவே நின்று கொண்டிருந்தாள். நடுவே என்றால் குளத்தினிரு எதிர்முனைகளுக்குக் கோடிழுத்தால் அவளை வெட்டிச் செல்லுமளவு துல்லியம். இப்போது ஷ்யாமளா தனது முடி முதல் அடி வரை முழு உடலும் நனையும்படி நீரில் முங்கி மீண்டாள்.

அகல் விளக்குகள் மட்டும் ஆங்காங்கே புள்ளிபுள்ளியாய் ஒளியூட்டிக் கொண்டிருந்த அவ்விரவில் கோயிலைப் பார்த்தபடி அவருக்குப் பின்புறத்தைக் காட்டி நின்றிருந்த அவளது உருவம் உருகும் பொன் போல் மினுங்கி அவருக்குக் கிளர்ச்சியூட்டியது. இருபத்தைந்து ஆண்டுகளாய் அவர் அங்குலம் அங்குலமாய்க் கண்ட உடல் தான் எனினும் ஏதேனும் கோணத்தில், ஒளியில், அசைவில் சிலிர்க்கத் தவறுவதில்லை.

அதே நேரம் கருவறையில் நின்றிருக்கும் அம்மன் சிலையின் பின்புறம் போலவும் தோற்றமளித்தது. குற்றவுணர்வு எழ காவேரம்மாவை நோக்கிக் கைகள் கூப்பினார்.

ஷ்யாமளா இரண்டாம் முறையும் நீரில் மூழ்கி எழுந்து நின்றாள். இப்போது அவளது உடல் சிறிதும் நடுங்கவில்லை என்பதை ராஜேந்திரன் மனதில் குறித்துக் கொண்டார். முதல் முறையை விடவும் சற்றுக் கூடுதல் நேரம் அவள் நீருக்குள் இருந்ததையும்.

ஷ்யாமளா மூன்றாம் முறை தண்ணீருக்குள் சென்றாள். அவள் தலை வெளியே வரக் காத்திருந்தார் ராஜேந்திரன். முழுதாய் ஒரு நிமிடம் ஒழிந்திருக்கும். அவள் வெளியே வரவில்லை. சற்றுப் பதற்றத்துடன் அவள் நின்று கொண்டிருந்த இடத்தை உற்றுப் பார்த்தார். அந்த இடத்தைச் சுற்றியுள்ள நீரில் பார்த்தார். குளம் முழுக்கப் பார்த்தார். குளத்தின் கரைகளிலும் பார்த்தார். அவளைக் காணவில்லை. எங்கும் தெரியவில்லை.

“ஷ்யாமளா!”

“ஷ்யாமளாஆ…”

பதில் இல்லை. இப்போது குளத்தைச் சுற்றிவந்தார். குளத்தில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே காணோம். சிறு அசைவு கூட இன்றி குளம் சமர்த்தாய்ப் புன்னகைத்தது.

ராஜேந்திரன் உரத்த குரலில் உதவி கேட்டபடி படியேறி மேலே ஓடினார். கோயிலின் பூசாரி போலிருந்தவர் அவசரமாய் ஓடி வந்தார். பிறகு கழிவறைகள் உட்பட கோயில் வளாகம் முழுக்கத் தேடியும், வாசலில் நின்ற, அவர்கள் வந்த டாக்ஸியில் பார்த்தும், வெளியிலிருந்த பூசைச் சாமான் கடையில் விசாரித்தும் எந்தத் துப்பும் கிட்டவில்லை என்றதும் தான் கோயில் அர்ச்சகர் நூறுக்குத் தொலைபேசி விஷயத்தைச் சொன்னார்.

*

இத்தனையும் கோர்வையாய் ராஜேந்திரன் சொல்லி முடித்து மூச்சு வாங்கியது. அவர் முகத்தில் சோகமிருந்ததா இல்லையா என மஞ்சுநாத்துக்கு இருளில்புலப்படவில்லை.

துடிப்பான உள்ளூர் இளைஞர்கள் இருவர் வரவழைக்கப்பட்டு அரை மணி நேரமாய் அக்குளம் துப்புரவாய்ச் சலிக்கப்பட்டது. காலியான பெப்ஸி டின் ஒன்றும் ஓர் இற்றுப் போன அரைஞாண் கொடியும் பாலிதீன் உறைகளும் தவிர வேறேதும் சிக்கவில்லை.

மஞ்சுநாத் தல காவேரி கோயில் பிராமணரை விசாரித்தார். சம்பவம் நடந்த சமயம் தான் குளத்தின் அருகே இல்லை என்றும் அருகிலுள்ள அகத்தீஸ்வரர் சன்னதிக்கு நடை சாத்துவதற்கு முந்தைய அர்த்த யாம பூஜை செய்யப் போயிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அக்குளத்தில் ஐந்தாறு ஆண்டுகளாய்ப் புழங்குகிறவர் என்ற அடிப்படையில் பொதுவான சில விஷயங்களைத் தன் அவதானிப்பாகச் சொன்னார்.

“இந்த ஸ்தலம் ஓர் அடையாளம் மட்டுமே. குளத்தின் அதிகபட்ச ஆழமே ஐந்தடிக்கு மேல் இல்லை. இதிலிருந்து தண்ணீர் சில துவாரங்கள் வழி பூமிக்குள் ஊடுருவுவது நிஜமே. ஆனால் ஒரு மனுஷி அதற்குள் போவது சாத்தியமில்லை. தமிழ் நாட்டின் கோயில்களில் காணப்படுவது மாதிரி பெரிய தெப்பக்குளம் இல்லை இது. ஒருவரின் கண் பார்வைக்குள் அடங்கி விடும் சிறிய குளம். இங்கே எப்படி ஒருவர் மூழ்கிப் போக முடியும்? அதுவும் அவரது உடல் கூடக் கிடைக்கவில்லை. இருட்டு என்பதால் அவர் குளத்தின் அந்தப் பக்கத்தில் மேலே ஏறிப் போனது தெரியாமல் இருக்கலாம். தொடர்ந்து தூறலாய் மழை பெய்து கொண்டிருந்ததால் காலடித்தடமும் இருக்காது.”

கடல் மட்டத்திலிருந்து நாலாயிரத்துச் சொச்சம் அடிகள் மேலேறி வந்து ஒருத்தி காணாமல் போயிருப்பதை மஞ்சுநாத் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்.

*

ஷ்யாமளா ஜெயமஹால் பேலஸ் மைதானத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாக்காரர்கள் அமைத்திருந்த தற்காலிக அரங்குக்குள் நுழைந்த போது பெங்களூர் மாநகரம் அவள் எதிர்பார்த்த அளவுக்குக் குளிராய் இல்லை. எதிர்ப்பட்ட புத்தகக் கடையில் மரியாதை நிமித்தம் நின்று ஓரிரு புத்தகங்களை எடுத்துப் பார்த்து விட்டு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நேரமாயிற்று என நினைவூட்டியதும் கிளம்பி, புல்வெளிகளைக் கூச்சத்துடன் மிதித்து நடந்து நிகழ்ச்சி நடக்கும் அரங்கை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நாற்பத்தி நான்கு வயது என்று அவளே ஒப்புக்கொண்டாலோ விக்கிபீடியாவில் தேடியறிந்தாலோ ஒழிய எவரும் அவளைப் பார்த்து மட்டும் சொல்லி விட முடியாது என்ற மாதிரியான நடை.

நான்கு புகைப்படக்காரர்கள் அவளுக்குப் பின்னிருந்து முன்னால் ஓடி வந்து அவளது பிம்பத்தை மைக்ரோ எஸ்டி கார்டில் சேமித்துக் கொண்டார்கள். அவர்களோடே ஓடி வந்த ஒருவன் தன் கையில் மறைத்திருந்த திரவத்தை அவளது முகத்தில் எறிந்தான்.

ஷ்யாமளா அதிர்ந்து அவ்விடத்திலேயே முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு நின்று விட்டாள். திராவகம் என்றே எண்ணினாள். முதலில் அவளது கவலை தன் கண்களுக்கு ஏதும் ஆகிடக்கூடாது என்பதாகவே இருந்தது. அவை எரிந்து அவளது அச்சத்தைக் கூட்டின. பிறகு முகத்தில் வேறெங்கும் வலியோ எரிச்சலோ இல்லை என்பதை உணர்ந்தாள். அவளது நாசியில் நுழைந்த அதன் மணத்தைப் பிரித்தறிய முனைந்தாள். பேனா மசி. முகம் மூடிய கைகளிரண்டையும் விரித்துப் பார்த்தாள்.

முகத்தில் வீசிய மசி கைகளிலும் பிரதியாகி இருந்தது. அடர்த்தியான கருப்பு நிறம்!

அதற்குள் அவள் மீது மசி வீசியவனை அங்கிருந்த ஓர் ஆணும் இரு பெண்களும் மடக்கிப் பிடித்து வைத்திருந்தனர். அவன் திமிறிக் கொண்டு கோஷம் எழுப்பினான்.

“ஜெய் ஸ்ரீராம். ஹிந்துஸ்தான் ஸிந்தாபாத். பாரத் மாத்தா கீ ஜே!”

அப்போது அங்கே பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார். அங்கிருந்தோர் ஷ்யாமளாவைச் சூழ்ந்து கொண்டு நலன் விசாரித்தனர்.

“மேடம், நேரா நடந்தா ரெஸ்ட் ரூம். அங்கே போய் க்ளீன் பண்ணிட்டு வந்திடலாம்.”

ஷ்யாமளா தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, துரிதமாய்த் துடிக்கும் இருதயம் இயல்புக்குத் திரும்பக் காத்திருந்து, தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு யோசித்தாள்.

இதற்குச் சில நிமிடங்கள் பிடித்தன. அதற்குள் யாரோ தண்ணீர் அடைத்த புதிய நெகிழிக் குடுவை ஒன்றைப் பிரித்து நீட்டினார்கள். அதை வாங்கி அருந்தி விட்டு, அங்கேயே வாயைக் கொப்பளித்து விட்டுப் பின் உறுதியான குரலில் சொன்னாள்.

“நான் இப்படியே, இதே முகத்தோடே நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.”

“மேடம்…”

“எஸ். லெட்ஸ் கோ.”

சொன்னது போல அப்படியே போய் மேடையேறினாள் ஷ்யாமளா. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை இந்தி, இந்து என்கிற ஒற்றை மொழி, ஒற்றை மதத்தின் வழி எப்படி இன்றைய ஆட்சியாளர்கள் தட்டையாக ஆக்குகிறார்கள் என்று அன்று அவள் அற்புதமான ஓர் உரை நிகழ்த்தினாள். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் #WeStandWithShyamala என்ற டேக் இரு தினங்கள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

பாரத மாதாவின் செழிப்பை அழித்து மலடி ஆக்குகிறார்கள் என்று அவள் சொன்ன வாக்கியம் கார்டூன்களாகப் பரிணமித்தது. கருப்பு மசி காய்ந்துறைந்த முகத்துடன் ஆவேசமாய் விரல் நீட்டியபடி ஷ்யாமளா பேசும் புகைப்படம் டைம் இதழின் ஆசியப் பதிப்பின் அட்டைப் படத்தில் இடம் பெற்றது. ஷ்யாமளா ஒரே நாளில் சர்வதேச அளவில் புகழடைந்தாள். இயல்பாகவே அவளை வெறுப்போரும் கூடிப் போனார்கள்.

*

ஷ்யாமளா காணாமல் போன போது அணிந்திருந்த உடுப்புகள் பற்றிய விவரத்தையும் அவளது தெளிவான, சமீபத்திய, அதிதுல்லியப் புகைப்படங்களென நான்கைந்தையும் ராஜேந்திரனிடமிருந்து வாட்ஸாப்பில் பசவப்பா வாங்கிக் கொண்டார். அன்றைய மாலை தல காவேரியின் நுழைவாயில் தூணருகே நின்று அவள் தனியே எடுத்துக் கொண்ட நிழற்படமே இருந்தது. கொடகு மாவட்டம் முழுக்க அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டன.

மறுநாள் காலை சிவந்த கண்களுடன் மஞ்சுநாத் காவல் நிலையத்திற்கு வந்த போது சாதகமான எந்தத் தகவலும் கிடைத்திருக்கவில்லை. தலை வலித்தது. டீ சொன்னார்.

டிஎஸ்பி நாகே கௌடா மஞ்சுநாத்தை அழைத்து ஒவ்வொன்றாக விசாரித்தறிந்தார்.

“ஸார், தல காவேரி குளத்திலிருந்து நீர் காவிரி நதிக்குச் செல்வது உண்மை தான் என்றாலும் அதில் ஓர் மனித உடல் நழுவிச் செல்வது சாத்தியமில்லை. அதனால் ரெண்டு விஷயம் தான் சாத்தியம். ஒன்று ஷ்யாமளாவே குளத்திலிருந்து வெளியேறி எங்கோ போயிருக்க வேண்டும். அல்லது யாரோ அவரைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும். இருட்டு அதிகம் என்பதால் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது அவர் நம்மிடம் பொய் சொல்கிறார். இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்.”

“தல காவேரியின் துவாரங்களில் உடல்போகாது, ஆனால் ஆன்மா போகுமில்லையா?”

டிஎஸ்பி நகைச்சுவை செய்கிறாரா அல்லது தீவிரமாய்ச்சொல்கிறாரா என்பது சரியாக புரியாததால் மஞ்சுநாத் மழுப்பலாகச் சிரித்து வைத்தார். பேசி விட்டுத் தொடர்பைத் துண்டித்ததும் ஆறிக் கொண்டிருந்த தேநீர்க் குவளையை எடுத்து உதட்டில் வைத்தார்.

மீண்டும் ஒருமுறை பகல் வெளிச்சத்தில் போய் தல காவேரி குளத்தை ஆராய்ந்தார். உருப்படியாய் ஏதும் சிக்கவில்லை. அப்பிராந்தியத்தைச் சுற்றிலும் வனம். அதற்குள் நுழைந்திருந்தால் அல்லது நுழைந்து வெளியேறி இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது?

*

‘கொங்குதேர்’ – தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் மனோரஞ்சிதம் வார இதழில் ஐந்தாண்டுகளாய் ஷ்யாமளா எழுதும் தொடர்கதை அது. ஆண்டுகொன்றாய் மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு வாரமும் மிகப் பிரபல ஓவியர் வரைந்த ஓவியத்துடன் வெளியானது. அது வாசகர் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற தொடர்.

ஆரம்பித்த இரண்டு மாதங்களில் பத்திரிக்கையின் விற்பனை இரண்டு மடங்கானது. அதனால் வாரம் நான்காயிரம் ரூபாய் என ஆரம்பிக்கப்பட்ட எழுத்தாளர் சன்மானம் ஆறே மாதங்களில் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அது சமகாலத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் எந்த எழுத்தாளரும் எந்தப் பத்திரிக்கையிலும் பெறாத தொகை.

ஷ்யாமளா தொடரை எழுத வரும் போது இரண்டு நிபந்தனைகள் விதித்தாள். தான் எழுதி அனுப்புவதில் ஒரு சொல் கூட மாற்றக்கூடாது, பிழை திருத்தம் செய்வதாய் இருந்தாலும் அவளிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டும் என்பது முதலாவது. இரண்டாவது தொடரைக் குறுக்கவோ நீட்டிக்கவோ வற்புறுத்தக் கூடாது, ஒருவேளை இடையில் வாசகர் கருத்துப்படி தொடர் வெளியிடும் பத்துப் பக்கங்களில் வேறு விஷயம் வந்தால் வியாபாரத்துக்கு நல்லது எனத் தோன்றினாலோ ஏதேனும் எதிர்ப்புகள், மிரட்டல்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என எண்ணினாலோ தாராளமாய்த் தொடரை நிறுத்திக் கொள்ளலாம், ஷ்யாமளா தனது வலைதளத்தில் மீதித் தொடரை வெளியிட்டுக் கொள்வார் - இது இரண்டாவது நிபந்தனை. அனுபவம் மிக்க அதன் தலைமை ஆசிரியர் மார்த்தாண்டம் இரண்டையுமே ஏற்றுக் கொண்டார்.

இரண்டிலுமே மீறும் சந்தர்ப்பம் ஒருமுறை கூட ஐந்தாண்டுகளில் நடக்கவில்லை. சிறிய எழுத்து மற்றும் தகவற்பிழைகளை மட்டும் அவளிடம் கேட்டுச் சரி செய்து கொண்டார்கள். ஒரு வாரம் கூட தொடர் தடைபட்டதில்லை. ஷ்யாமளா உடல் நலம் குன்றியிருந்த போது கூட தவறாமல் அத்தியாயத்தை அனுப்பி விடுவாள். இடையில் கலைஞர் மறைவின் போது அவரை நினைவு கூரும் வகையில் சிறப்பிதழாக அதே விலையில் ஆனால் கூடுதல் பக்கங்களுடன் முழு வண்ணத்தில் மனோரஞ்சிதம் வெளியானது. அதில் வாரத் தொடர்களாய் வந்து கொண்டிருந்த எந்த விஷயமும் இடம் பெறவில்லை, ஷ்யாமளாவின் தொடர் தவிர. மார்த்தாண்டத்திடம் ஷ்யாமளா கொண்டிருந்த செல்வாக்கு என்றுமதைக் கொச்சையாய்த் திரித்துக் கிசுகிசுத்தார்கள்.

அது பொதுவிடத்தில் பட்டப் பகலில் நிகழும் ஒரு சாதி ஆணவக் கொலை பற்றிய கதை. அதில் சம்மந்தப்பட்ட அத்தனை பேரின் எண்ணங்களும் செயல்களும் விரியும் நாவல். இறந்தவன், அவன் மனைவி, இருவரின் பெற்றோர், உறவினர்கள், சாதிக் காரர்கள், போலீஸ்காரர்கள், இரு சாதியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், ஊடகங்கள், வழக்குரைஞர்கள், நீதிமன்றம், கொன்ற கூலிப் படையினர், கொலையை வேடிக்கை பார்த்தோர் என எல்லோரின் உளவியலும் நியாய தர்மமும் துல்லியமாய்ப் பேசப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட அது ஒரு சமூகவியல் ஆய்வாகவே அமைந்தது. நாவலின் முதல் பாகத்துக்காக சாஹித்ய அகாதமி விருது பெற்றாள் ஷ்யாமளா. ஒரு தனியார் பல்கலைக்கழகம் அந்நாவலுக்காக அவளுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் அத்தனை எல்லா ஆணவக் கொலைகளையும் ஆராய்ந்தே ஷ்யாமளா அதை எழுதினாள். தருமபுரி இளவரசன் மரணம் நடந்த போது தான் ஆரம்பிக்கப்பட்ட தொடர். இடையே, தொடரை அவள் எழுதிக் கொண்டிருக்கும் போதே நாமக்கல் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் என ஆணவக் கொலைகள் நடந்தன. அந்த எல்லாவற்றின் சாயலையுமே அவர் நாவலுக்குள் கொண்டு வந்தாள். எந்த அச்சமுமின்றி நாவலில் சாதிப் பெயர்களை நேரடியாகப் பயன்படுத்தி இருந்தாள்.

அவை எல்லாம் சேர்ந்து கொண்டு நாவலுக்கு ஒரு காவியத்தன்மையை அளித்தது. அதன் கதாபாத்திரங்கள் வாசக மனங்களில் அமரத்துவம் எய்தினர். குழந்தைகளுக்கு கொங்குதேர் நாயகன் நாயகி பாத்திரப் பெயர்கள் சூட்டுமளவு வாசகர்கள் போனார்கள்.

சமூக அவலங்களைப் பிரச்சாரத் தொனியின்றி எளிமையான வெகுஜன மொழியில் எழுதியதே ஷ்யாமளாவின் சிறப்பாக இருந்தது. அவள் கதைகளில் ஆழமான தத்துவ தரிசனங்கள் இருந்தன. அதே சமயம் கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத சுவாரஸ்யத்தையும் தாங்கியிருந்தது. அவரவர்க்கு வேண்டியதை அவரவர் எடுத்துக் கொண்டார்கள். சில விமர்சகர்கள் அவளைப் ‘பெண் ஜெயகாந்தன்’ என்றழைத்தார்கள். (ஜெயகாந்தன் ஞானபீடம் வென்ற, 70, 80களின் தமிழின் ஜாம்பவான் படைப்பாளி.)

ஷ்யாமளா தன் எழுத்தின் மூலம் நிகழ்த்தியது ஒரு சமூக யுத்தம். பல எதிர்ப்புகளை மீறி மனோரஞ்சிதம் பத்திரிக்கை அவளுக்குத் துணைநின்றது. இந்த யுத்தத்தில் அவள் தன் சொந்தச் சாதியையும் பகைத்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் சாதிய எதிர்ப்புக் குரல்கள் ஆதிக்க சாதிகளுக்குள் இருந்து தான் வர வேண்டியது இன்றைய தேவை என நம்பினாள். இவ்விஷயத்தில் கணவருடன் கூட அவளுக்கு மனஸ்தாபம் இருந்ததாக ஒரு பேச்சு இருந்தது. அவள் உயிருக்கு எப்போதுமே ஆபத்து இருந்தது.

அவள் வீட்டில் கல் எறிந்தார்கள். தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்கள். வழக்குப் போட்டு நீதிமன்றம் இழுத்தடித்தார்கள். வாக்கு வங்கியைக் குறி வைத்த மாநில அரசு அவளுக்கு ஆதரவாய் நிற்கவில்லை. சாதி வெறி அமைப்புகள், இந்துத்துவ உதிரி அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டன. போலீஸ் பந்தோபஸ்த் கேட்ட அவளது விண்ணப்பத்தை நிராகரித்தார்கள். எல்லாவற்றையும் கையாண்டாள் ஷ்யாமளா.

‘கொங்குதேர்’ எழுதும் போது அவள் வேறேதும் எழுதவில்லை. ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை, இலக்கியத்தில் நீத்தோர்க்கு ஒரு சிறுஅஞ்சலிக்குறிப்பு கூட எழுதவில்லை. ஆனால் சில போராட்டங்களில் மரியாதை நிமித்தம் தேர்ந்தெடுத்துக் கலந்து கொண்டாள். இலக்கிய விழாக்களில் பேசினாள். நேர்காணல்கள் தந்தாள்.

நாவலின் பாகங்கள் தமிழில் வெளிவந்த சில மாதங்களிலேயே ஆங்கிலத்திலும் கூட வெளிவந்தன. நாடெங்கும் கொங்குதேர் சாதிய, மதவாத எதிர்ப்பின் அடையாளமாகிப் போனது. அதனால் இந்திய அளவிலேயே வேரூன்றி வந்த வலதுசாரி அரசியலுக்கு ஓர் அச்சுறுத்தலாக ஷ்யாமளா பார்க்கப்பட்டாள். அதன் சிறு எதிர்வினையாகத்தான் பெங்களூரில் நடந்த இலக்கிய விழாவில் இந்துத்துவ உதிரி அமைப்பின் அடியாள் அவள் முகத்தில் கருப்பு மசி வீசினான். அந்த முகத்தோடே அவளாற்றிய உரையின் இறுதி வரி பிரபலமானது. திரும்பத் திரும்ப விமர்சகர்களால் நினைவு கூரப்படுவது.

“என் முகத்தில் வழியும் கருப்பில் தொனிக்கும் அவலட்சணம் என்னுடையதா என்ன!”

*

ஷ்யாமளா காணாமல் போய் முழுதாக 24 மணி நேரம் ஓடி விட்டது. அவள் பற்றி ஆங்கிலத்தில் கிடைக்கும் குறிப்புகளை சேகரித்துத் தர பசவப்பாவிடம் கேட்டிருந்தார் மஞ்சுநாத். சில மாதம் முன்பு டெக்கான் க்ரோனிக்கிள் இதழின் ஞாயிறு இணைப்பான சன்டே க்ரோனிக்கிளில் ஷ்யாமளா பற்றி வந்த ஒரு கட்டுரையைத் தான் மஞ்சுநாத் வாசித்து முடித்திருந்தார். (ஆங்கிலத்தில் ‘She’ என்ற பிரயோகத்திற்கு ‘அவள்’ எனப் போட்டுக் கொண்டிருந்தார்.) ராஜேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்திருந்தார்.

அவரது ஒற்றை நாடித் தேகம் கூடுதலாய் ஒரு சுற்று இளைத்திருந்ததாகப் பட்டது. அன்றைய காலை சவரம் செய்யாத முகத்தில் வெள்ளி ரோமங்கள் எட்டிப் பார்த்தன.

“என்ன ஆகியிருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க மிஸ்டர் ராஜேந்திரன்?”

“ரைட் விங்னால கொல்லப்பட்டவங்க, மிரட்டப்பட்டவங்க கடந்த அஞ்சு வருசத்துல நிறையப் பேர். ஷ்யாமளாவுக்கும் அப்படி ஏதும் ஆகியிருக்குமோன்னு தான் பயம்.”

“ஆமாவா?”

“அப்படித்தான் தோனுது. அதுவும் இந்த ஸ்டேட்ல நடந்திருக்கறது இன்னும் அதிகமா அப்படி நினைக்கத் தூண்டுது. இங்கே முன்பு அப்படி நிறைய நடந்திருக்குங்கறது தான் காரணம். ஷ்யாமளாவை வெறுக்கறவங்க ரொம்ப அதிகம். அவள் எழுதாம இருந்தா சந்தோஷப்படறவங்க நிறையப் பேர். ஷ்யாமளா உண்மையில் பலருக்கு உறுத்தல். கண்ல விழுந்த தூசு மாதிரி. அவளை யாராவது கடத்திப் போயிருக்கலாம் அல்லது…”

“அல்லது?”

“யூ நோ வாட். அதை ஏன் என் வாயால சொல்லனும்?”

“ஓக்கே. ரிலாக்ஸ். சில ரொட்டீன் பெர்சனல் கொஷின்ஸ்.”

“ப்ரொசீட்.”

“ஷ்யாமளாவுக்கு ஹெல்த் எப்படி?”

“அதெல்லாம் ஏதுமில்ல. சுகர், பிபி இருந்தது. ஆனா ரெண்டுமே கன்ட்ரோலில் தான் இருந்துச்சு. உடம்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தருவா. தினம் ரெண்டு வேளை நடை. உணவுகளில் கறாரான கட்டுப்பாடு. வருஷமொரு தரம் தனக்கும் எனக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் ஏற்பாடு பண்ணிடுவா. அவளைப் பார்த்து யாரும் வயசைச் சொல்ல முடியாது. நாங்க சேர்ந்து நடந்தாலே ஷ்யாமளா என் வைஃப்னு சொல்ல முடியாது.”

“பீரியட்ஸ் பிரச்சனை, வயித்து வலி ஏதாவது?”

“நாலு மாசம் முன்பு தான் அவளுக்கு மெனோபாஸ் ஆச்சு. அதுக்கு முன்பு எப்பவும் ரெகுலர் தான். கொஞ்சம் சோர்வா இருப்பா. மத்தபடி பெரிய அலட்டல் இருந்ததில்ல. சொல்லப் போனா எரிஞ்சு விழக் கூட மாட்டா. She just isolate herself during those days.”

“உங்களுக்குள் ஏதாவது சண்டை?”

“குறிப்பிடும்படியா ஏதும் இல்ல.”

“குறிப்பிடாதபடி ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க.”

“புரியல.”

“உங்களுக்குள் சமீபமாய் ஏதாவது வாக்குவாதம்? சண்டைகள்?”

“இல்லை. அப்படி ஏதும் இல்லை.”

“சின்னதாக இருந்தாலும் சரி.”

“சின்ன சச்சரவுகள் இருக்கத் தான் செய்தன. அது எந்த கணவன் மனைவிக்குள்ளும் இருக்கக்கூடியவை. அதைப் பொருட்டாக எடுத்தால் உலகில் எல்லா மனைவிகளும் காணாமல் போய்க்கொண்டிருக்க வேண்டும். I believe it is not worthy to mention here.”

“சின்னது பெருசுங்கறதுல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோடு.”

“அது உண்மை தான்.”

“சரி. சின்ன சண்டைக்கு ஓர் உதாரணம் சொல்லுங்க.”

“ஒரு முறை எங்க வீட்டில் கல் எறிஞ்சாங்க. கொங்குதேர் எழுதினதுக்காக. வாரம் ஒரு முறையாவது ஃபோன்ல மிரட்டல் வரும். அசிங்கமாப் பேசுவாங்க. ஒரே முறை அவ கிட்ட நமக்கு இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் கடுமையாக் கேட்டேன். ஆனா அதைக் கூட அவ பொறுமையாத் தான் எடுத்துக்கிட்டு எனக்கு விளக்கினா.”

“அந்த நாவல் படிச்சீங்களா? உங்களுக்கு நியாயமாப் படுதா அவுங்க எழுதினது?”

“இதுவரை ஷ்யாமளாவோட ஒரு சொல் கூடப் படிச்சதில்ல. இனியும் படிக்கறதா இல்ல. ஆர்வமும் நேரமும் இல்லங்கறது முதல் காரணம். கார்மெண்ட் பிசினஸ் என்னோட மொத்த நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிடுச்சு. இரண்டாவது காரணம் எங்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு அவள் எழுத்துக்களைத் தவிர்ப்பது தேவைன்னு கல்யாணமான புதுசுலயே எனக்குத் தோனிடுச்சு. அதனால அப்படியே இருந்துட்டேன்.”

“சோ அவர் ரைட்டிங் பத்தி ஒண்ணும் பேசினதே இல்ல அவர்கிட்ட?”

“கல்யாணமான புதுசுல ஷ்யாமளா கிட்ட கேட்டிருக்கேன் பெண் எழுத்தாளர்கள் எல்லாம் தங்கள் பேருக்குப் பின்னால் புருஷன் பேரைப் போட்டுக்கறாங்களே, நீ அதெல்லாம் செய்ய மாட்டியா அப்படினு. நானென்ன குடும்ப நாவலா எழுதறேன், அப்படின்னு பதிலுக்குக் கேட்டா. எனக்கு அது புரியல. இப்ப வரைக்கும் கூட.”

“ரைட்டரா ஷ்யாமளாவுக்கு ஒரு பிம்பம் இருக்கு. பெர்சனல் லைஃப்ல எப்படி?”

“ஷ்யாமளா நல்ல மனைவியா, நல்லா அம்மாவா, மிக நல்ல குடும்பத் தலைவியா இருந்தா. இதுக்கெல்லாம் அப்புறம் தான் எழுத்துக்கு நேரம் ஒதுக்கினா. இதை நான் சொல்லாமல் அவளே செஞ்சா. அவள் கல்லூரி முடிச்ச மறுவருஷமே எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அப்பவே அவ நிறைய எழுதிட்டு இருந்தா. மீடியாவில் அவள் முகம் பிரபலம் தான். அடுத்த வருஷமே ஆதிரா பிறந்துட்டா. ஆதிராவை வளர்த்த பெருமை முழுக்க ஷ்யாமளாவுக்குத் தான். ஸ்கூலில் பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் முதல் எஞ்சினியரிங் கல்லூரியில் சீட் வாங்கியது வரை அவளோட வேலை தான்.”

“ஆதிரா இப்போ?”

“கல்யாணமாகிடுச்சு. ஆஸ்திரேலியாவில் செட்டில்ட். வாரமொருமுறை பேசுவோம்.”

“அரேஞ்ட் மேரேஜ்?”

“ஆம். அவர் ஷ்யாமளாவின் நெடுநாள் வாசகர்.”

“ஓ! இண்டர்கேஸ்ட் மேரேஜ்?”

“ஆம்.”

“அதில் ஏதும் சிக்கல் இல்லையா?”

“நெவர். பிரச்சனைனா நாங்க தான் செஞ்சிருக்கனும்.”

“ஓர் அந்தரங்கக் கேள்வி. மறைக்காமப் பேசனும்.”

“ம்.”

“ஷ்யாமளாவுக்கு ஏதாவது அஃபேர் இருந்துச்சா?”

“சேச்சே. இல்ல.”

“ஏன்னா ஆர்ட்ஃபார்ம்ஸ், ரைட்டிங் சர்க்கிளில் இருந்தா இதெல்லாம் மிகவும் சகஜம். அங்கே பெண்களுக்குச் சற்று அதிகச் சுதந்திரம் இருக்குமே. அதனால கேட்கிறேன்.”

“எனக்குத் தெரிஞ்சு அப்படிலாம் ஏதும் இல்லை. தெரியாமலும் ஏதும் இருக்காது.”

*

ஷ்யாமளாவுக்கு அந்த வயதிலும் காதல் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. பெயரற்ற, பெயர் கொண்ட மின்னஞ்சல்கள். அதில் சக எழுத்தாளர்களும் உண்டு. அவளை விட வயது மலிந்த இளைஞர்களும்கூட உண்டு. ஒரு பெண்ணாய் இருந்தும் அவள் எப்படி இத்தனை தெளிவாய்ச் சிந்திக்கிறாள் என்பதே அவர்கள் எல்லோரும் வசீகரிக்கப்பட்ட புள்ளியாக இருந்தது. எவருக்கும் அவள் பதிலளித்திருக்கவில்லை. தெரிந்த, பழகிய சில நபர்களுக்கு மரியாதை நிமித்தம் ஒரு புன்னகையை மட்டும் அனுப்பியிருந்தாள்.

“டியர் ஷ்யாமளா, நலம். உங்கள் நலம் நம்புகிறேன். இப்போது தான் கொங்குதேர் தொடரின் ‘நெஞ்சறிக’ அத்தியாயம் வாசித்தேன். சௌம்யா பேசும் வசனங்களை ஒரு பயிற்சி மாதிரி மனதில் போட்டுப் பிரட்டிக் கொண்டிருக்கிறேன். உள்ளம் சிந்திக் கொண்டிருக்கிறது. என் பதின்ம வயதிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக உங்களை வாசிக்கிறேன் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். உங்களிடமிருந்து ஆறாயிரம் மைல் தள்ளியிருந்தாலும் வாசிக்கும்தோறும் உங்கள் பாதத்தின் அருகே இருப்பதாகவே தோன்றுகிறது. அதன் வெளிச்சத்தில் சுகந்தத்தில் ருசியில் திளைக்கிறேன். இது ஒரு சக்தி உபாசனை தான். ஆதிசங்கரர் எழுதி விட்ட சௌந்தர்ய லஹரி எழுதப்படாமல் என மனதில் இருக்கிறது. உங்களை என் குருவாகவே மனதில் வரித்திருக்கிறேன் எனினும் நீங்கள் எதிர்பாலினமென்பது எப்போதும் முன்னே வந்து நின்று கொள்கிறது. உங்கள் தலைமுறையில் பிறந்திருந்தால் நிச்சயம் உங்களைக் கரம் பற்றி இருப்பேன் என்று தோன்றுகிறது. விதியின் வினோதத் திரைக்கதையில் நான் பூமி வந்தடைய இருபது வருடத் தாமதம் நேர்ந்து விட்டது. உங்களை, உங்கள் எழுத்தை எவ்வளவு நேசித்தாலும் ஓர் அன்னையின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய இக்கட்டில் இருக்கிறேன். ஒன்று தோன்றுகிறது. உங்கள் சிறிய குடும்பத்தில் ஒருவனாய் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். ஆதிராவை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவளை உங்கள் மறுபிறவியாக, இணைபிரதியாகவே பாவிக்க முனைகிறேன். ஆதிராவுக்கு காமிக்ஸ் கூடப் பரிச்சயம் இல்லை என எழுதியிருக்கிறீர்கள். பரவாயில்லை. கல்லில் பிரதிஷ்டை செய்த பின் கடவுள் அந்தக் கல் தான். அது அசையவில்லை, பேசவில்லை, அருளவில்லை என்பதெல்லாம் பக்தனுக்குப் பொருட்டா என்ன! உங்களை எப்படி அணுகுகிறேனோ, அப்படியே அவளையும் மரியாதையாக நடத்துவேன். இன்னொரு மிக முக்கியமான விடயத்தையும் சொல்லி விட விரும்புகிறேன் - என் சாதி என்ன என்பது இங்கே முக்கியமே இல்லை என நினைக்கிறேன். உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன். சிட்னியில் இப்போது நள்ளிரவு தாண்டி விட்டது. விடியலை எதிர்நோக்குகிறேன். உடல் நலத்தில் கவனம் வைக்கவும். எல்லாவற்றையும் விட அஃதே முக்கியம்.”

*

சைபர்க்ரைம் உதவியுடன் ஷ்யாமளாவின் மின்னஞ்சல் பெட்டியை உடைத்திருந்தார் மஞ்சுநாத். பெரும்பாலும் தமிழில் இருந்தன. அவரது பள்ளி கோடை விடுமுறைகள் பெங்களூரின் ஹலசூரிலிருக்கும் பாட்டி வீட்டில் கழிந்தது என்பதால் அவருக்குத் தமிழ் கொஞ்சமாய்ப் பேசத் தெரியும் என்றாலும் வாசிக்க வராது. ஆங்கிலத்தில் எஞ்சிய சில மின்னஞ்சல்களை மட்டும் அவர் படிக்க முயன்று கொண்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்த ஷ்யாமளாவின் மகள், மருமகன் கிளம்பி வந்திருந்தனர். அவர்களிடம் மஞ்சுநாத் சுருக்கமாக விசாரணை மேற்கொண்டார். குடும்பத்தில் எல்லோருமே இம்மாதிரி ஒன்றை உள்ளூர எதிர்பார்த்திருந்ததாகத் தோன்றியது.

ஊடகங்கள் கதறத் துவங்கின. ஷ்யாமளா காணாமல் ஆனது பற்றிப் பல ஊகங்களை முன் வைத்தன. அவளுக்கு இந்துத்துவச் சக்திகளால் ஆபத்து நேர்ந்திருக்கலாம் எனப் பேசினார்கள். அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என விவாதித்தனர். ஏற்கனவே கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் வரிசையில் சேர்கிறாரா ஷ்யாமளா என்றும் ஆரூடம் கூறினார்கள்.

அரசு ஆதரவு ஊடகங்கள் ஷ்யாமளாவின் சொந்த வாழ்வைக் குடையத் தொடங்கின. அவர் தன் வீட்லிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறினாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனத் துப்பறிந்தார்கள். அவர் கல்லூரி நாட்களில் காதலித்த ஒரு தலித் இளைஞன் வரை தோண்டி எடுத்து இந்த நிகழ்வோடு முடிச்சுப் போட்டார்கள்.

மஞ்சுநாத் அவசரமாய் அந்த முன்னாள் காதலனின் தடம் தேடிக் கண்டறிந்தார். அவர் பெங்களூரில் பிரபல ஐடி நிறுவனத்தில் டைரக்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அனுமதி பெற்று இரவுப் பேருந்தேறி உறவினர் வீட்டில் தங்கிப் போய்ச் சந்தித்தார்.

“நாங்கள் காதலித்தது உண்மை தான். சாதி குறுக்கே நின்றது. அவளது அம்மா ஒப்புக் கொள்ளவே இல்லை. அதனால் துயருடன் பிரிய நேர்ந்தது. நாங்கள் பேசிக் கொண்டே முழுதாகக் கால் நூற்றாண்டாகிறது. ஷ்யாமளாவின் கல்யாண நாளன்று அவளைப் பார்த்து வாழ்த்திப் பிரிந்தது தான் எங்கள் கடைசிச் சந்திப்பு. பிறகு நானும் அவளைத் தொந்தரவு செய்ததில்லை; அவளும் என்னைத் தேடி வந்ததில்லை. மனைவி, மகள் என மகிழ்ச்சிகரமான குடும்பம் ஒன்று எனக்கு அமைந்திருக்கிறது. ஃபேஸ்புக்கில் கூட நாங்கள் நண்பர்கள் இல்லை. அவளது தொலைபேசி எண் கூடத் தெரியாது. ஆனால் பொதுவெளியில் புழங்குபவள் என்பதால் அவள் பற்றிய செய்திகளை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் பற்றியும் அவளுக்குத் தெரிந்திருக்கலாம். Off the record - இப்போதும் ஏதேனும் தருணங்களில் அவள் நினைவு வரத்தான் செய்கிறது. யூ ஸீ - முதற்காதல் யாருக்குத் தான் மறக்கும்! மற்றபடி ஷ்யாமளா காணாமல் போனதற்கும் எனக்கும் தொடர்பில்லை. உண்மையாகவே அதற்கு வருந்துகிறேன். வலியுணர்கிறேன். அவள் மீண்டு வர வேண்டும் என நானும் பிரார்த்திக்கிறேன்.”

அவர் மகள் பெயர் ஷ்யாமளாவா எனக் கேட்க நினைத்துக் கைவிட்டார் மஞ்சுநாத்.

“உங்கள் பிரிவு இயல்பாக பரஸ்பரம் பேசிக் கொண்டு நிகழ்ந்ததா?”

“இல்லை. ஷ்யாமளா திடீரெனப் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.”

“ஓ!”

“என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் மீது கோபத்துடன் தான் இருந்தேன். ஆனால் தன் திருமணத்துக்குப் பத்திரிக்கை அனுப்பி இருந்தாள். அதில் ஒரு குறிப்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் மனப்பாடம் ஆகி விட்டதொரு குறிப்பு. அதுவே என்னைக் கரைத்தது. சந்தேகமின்றி ஷ்யாமளா நிச்சயம் பெரும்எழுத்தாளினி தான்.”

“என்ன குறிப்பு அது?”

“ஓர் உறவில் சொல்லிக் கொண்டெல்லாம் விடைபெற முடியாது. அது யதார்த்தச் சாத்தியமில்லை. அப்படிச் செய்தாலது தொட்டுத் தொடரும். அறுக்க வேண்டுமெனில் பட்டெனச் செய்ய வேண்டும். அப்படிக் காணாமல் போவதன் பொருள் சுயநலம் என்பதோ பிரியமில்லை என்பதோ இல்லை. அதன் பொருள் பிரிவு மட்டும் தான். பரிசுத்த விலகல். புரிந்து கொள்வாய் என நம்புகிறேன். கல்யாணத்தில் சந்திப்போம்.”

அவர் கண்களில் ஈரம் இருந்தது. அவர் வயதுக்கு அது வெகு அந்நியமாகப் பட்டது.

*

டைம் இதழ் புகழுக்குப் பின் நூறு பிரதிகள் விற்கும் இலக்கியக் காலாண்டிதழான மண் கழுதையில் ஷ்யாமளாவை விரிவாய் நேர்காணல் செய்து வெளியிட்டார்கள்.

“சாதி மீறிய உங்கள் காதல் தோற்றதால் தான் உங்கள் மகளுக்கு நீங்களே பார்த்து வைத்தாலும் சாதி மறுப்பு மணம் செய்து வைத்தீர்கள் என்கிறார்களே, உண்மையா?”

“என் குடும்ப விஷயங்கள் என் வாசகர்களுக்கு அனாவசியம் என்றே நினைக்கிறேன்.”

“ஆனால் உங்கள் வாழ்க்கை என்பது திறந்த புத்தகம் என அடிக்கடி சொல்வீர்களே!”

“அதற்காக நடுவீதியில் என் கணவருடன் புணர்ச்சியில் ஈடுபட முடியாதில்லையா!”

“சாகும் வரை எழுதிட்டே இருக்கனும்னு எழுத்தாளர்கள் சொல்வாங்க. நீங்க எப்படி?”

“எனக்கு அப்படி இல்ல. எழுதினது போதும்னு தோனினா உடனே நிறுத்திடுவேன்.”

“ஜெயகாந்தன் இப்படித்தான் சொன்னார். திரும்பவந்து ஹர ஹர சங்கர எழுதினாரே?”

“அதுவே ஒரு பாடம் தான். நான் அந்த மாதிரி அசட்டுத்தனம் செய்ய மாட்டேன்.”

அந்நேர்காணல் வரி பெரும் சர்ச்சைக்குள்ளானது, முன்னோடியை அவமதிப்பு செய்து விட்டதாக. நேர்காணலை வெளியிட்ட பத்திரிக்கை ஷ்யாமளாவுக்குத் தொலைபேசி அவள் விளக்கம் எழுதினால் வெளியிடுவதாகச் சொன்னார்கள். “அது தான் தெளிவா இருக்கே, எதுக்கு மன்னிப்பு?” என்று சொல்லி விட்டாள். எவரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாக ஒரு சம்பிரதாய அறிவிப்பை வெளியிட்டது அப்பத்திரிக்கை.

அந்தச் சூடு அடங்கும் சமயம் - சுமார் ஆறு மாதங்கள் முன் - ஷ்யாமளாவுக்கு ஞான பீடம் தரப் பரிசீலிக்கிறார்கள் என்று செய்திகள் வந்த போது ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சம்மந்தமின்றிப் பேசுவதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சொன்னாள்:

“கிழடு தட்டிப் போன பிறகு அவ்விருது தருவது தானே நம் பாரம்பரியம்! ஆனால் நான் ஞானபீடத்துக்கு பூரணமாகத் தகுதியானவள் என்பதை அறிவேன். அதே சமயம் என் முன்னோடிகளான அசோக மித்திரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் தரப்படாத அந்த விருது எனக்கு அவசியமில்லை. கொடுக்கப்பட்டாலும் வாங்கிக் கொள்ள மாட்டேன்.”

‘ச்சீய் ச்சீய், இந்தப் புழம் புளிக்கும்’ என்ற தொனியில் சொல்வதாகச் சிலர் சமூக ஊடகங்களில் கேலி செய்தார்கள். தன்னம்பிக்கை என்பது தாண்டி தலைக்கனம் ஏறிக் கொண்டிருக்கிறது ஷ்யாமளாவுக்கு என்றார்கள். அரிய குறிஞ்சிப் பூ மாதிரி சுழற்சி முறையில் வலியத் தமிழுக்குத் தேடி வரும் அங்கீகாரத்தை ஏன் இடது காலால் ஷ்யாமளா எட்டி உதைக்க வேண்டும் எனச் சிலர் அங்கலாய்த்தார்கள். பிறகு ஓரிரு வாரத்தில் பட்டியலில் இருந்து ஷ்யாமளா பெயர் நீக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

ஃபேஸ்புக்கிற்கு அரிதாய் வரும் ஷ்யாமளா அன்று அதில் ஒரு குறிப்பை எழுதினாள்.

“நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என எனக்குத் தெரியும். ஒருபோதும் ஒரு விருது அதை எனக்கு உணர்த்தப் போவதில்லை. அது மற்றவர்களின் என் மீதான மதிப்பீடு மட்டுமே. அஃது என்னை ஊக்குவிப்பதும் இல்லை, தேக்கி வைப்பதும் இல்லை. இன்னும் தூரம் நடக்க வேண்டுமா, போதுமா என்பது எனக்குத் தோன்ற வேண்டும்.”

*

மஞ்சுநாத் வழக்கு குறித்து கேள்வியும் பதிலும் என மனதில் நிகழ்த்திப் பார்த்தார்.

“ஷ்யாமளா கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். இல்லைஎனில் அவரே எங்காவது போயிருக்கலாம். அல்லது தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். நான்கு வாய்ப்புகள் தாம் இருக்கின்றன. இதில் தற்கொலை என்பதை நீக்கி விடலாம்.”

“ஏன்?”

“ஏனெனில் தற்கொலை செய்வதற்குரிய எந்த வலுவான காரணமும் அவருக்கில்லை. பெரும்பாலும் இணக்கமான கணவன், புகழின் உச்சத்திலிருந்த இலக்கிய வாழ்க்கை, பணப் பிரச்சனை ஏதும் இல்லை, நோய்மையற்ற உடல், தன் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களையே தனக்கு ஆயுதமாக்கிக் கொண்ட சமயோசிதமும் பயமின்மையும் தன்னம்பிக்கையும். மன அழுத்தம் ஏற்பட எந்த முகாந்திரமுமற்ற நிறைவாழ்க்கை.”

“அவரே எங்கேனும் சென்றிருப்பாரா? கோபித்துக் கொண்டு அல்லது துறவு போல்?”

“அப்படித் தெரியவில்லை. அவர் கதைகளில் ஒன்று கூட துறவு பற்றிப் பேசவில்லை.”

“வேறு எதைப் பேசுகின்றன?”

“பெரும்பாலும் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பற்றியவை. அவர் வாழ விரும்பியவர் என்பதற்கான சாயைகளே அவர் எழுத்தில் தென்படுகிறது. ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்.”

“எனில் அவர் கடத்தப்பட்டோ கொல்லப்பட்டோ இருக்கலாம்.”

“உடல் கிடக்கும் வரை கொலை என்று சொல்ல முடியாது. அதனால் இப்போதைக்கு ஷ்யாமளா யாராலோ கடத்தப்பட்டிருக்கலாம் என்பதே கன்வின்சிங்கான ஒரு தியரி.”

“யார்?”

“இங்கே இந்துத்துவா ஆட்களாக இருக்கலாம். அல்லது தமிழகச் சாதி அமைப்புக்கள்.”

“யாருக்கு வாய்ப்பு அதிகம்?”

“தமிழகத்திலிருந்து இங்கே வந்து செய்ய வாய்ப்பு குறைவு. இங்கே தான் யாரோ.”

“இதைப் பற்றி நமக்கு மேலும் என்ன தெரியும்?”

“கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட எல்லா இந்துத்துவ அமைப்புகளையும் விசாரித்துப் பார்த்தாயிற்று, அன்னஃபீஷியலாக. எவருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.”

“உளவுத் துறை என்ன சொல்கிறது?”

“அவர்களிடமும் இது பற்றி ஏதும் தகவல் இல்லை.”

“ஷ்யாமளா இங்கே வருவது யாருக்கெல்லாம் தெரியும்?”

“சொல்லப் போனால் யாருக்கும் தெரியாது.”

“யாருக்குமேவா?”

“அவளது கணவர் மற்றும் ட்ராவல்ஸ் கார் ட்ரைவர் தவிர.”

“அவர்களில் யாருக்காவது இதில் தொடர்புண்டா?”

“ட்ரைவரை உதைத்து விசாரித்தாயிற்று. பயனில்லை. அவனுக்கு உண்மையிலேயே எதும் தெரியவில்லை. ஷ்யாமளா ஓர் எழுத்தாளர் என்பது கூடத் தெரியவில்லை.”

“ஷ்யாமளா தமிழில் ஒரு பிரபல எழுத்தாளர். இது நம்புவது போல் இல்லையே!”

“தமிழகத்தில் எழுத்தாளர்களை யாருக்கும் தெரியாது என்கிறார்கள். மற்றவர்களுக்குக் கிடைக்கும் மரியாதைகூட அவர்களுக்குக் கிடைக்காது. மார்க்கெட்டில் வலிப்பு கண்டு இறந்த ஒருவருக்கு உதவிய கவிஞனை அவனது தோற்றத்தினால் கொலைகாரன் என்றெண்ணி காவல் நிலைத்தில் வைத்திருந்தார்கள். மளிகைக் கடையில் புளித்த மாவு திரும்பிக் கொடுத்த எழுத்தாளரை அடித்திருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடிக் கடையில் கூடுதல் தொகை கேட்டதை எதிர்த்த எழுத்தாளரை அடித்திருக்கிறார்கள்.”

“கொடூரம். சரி, ஷ்யாமளா கதைக்கு வருவோம்.”

“ஆக, ட்ரைவரிடம் தப்பிருப்பதாகத் தெரியவில்லை.”

“மிஞ்சியிருப்பது?”

“அவள் கணவன்.”

“அவன் எப்படி?”

“ஆசாமி சாதுவாகவே தோன்றுகிறான். ஷ்யாமளாவின் மீது பெரிய ஒட்டுதல் இருப்பதாகத் தோன்றவில்லை. எதற்கும் சந்தேகப் பட்டியலில் வைக்கலாம்.”

*

கௌரி லங்கேஷ் கொலை வழக்கு சம்மந்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக தீவிர வலதுசாரி வன்முறை அமைப்பின் சிறிய அலுவலகத்தில் சோதனையிட்ட போது வாள்கள், அரிவாள்கள், நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஒரு டைரியும் சிக்கியது.

அதில் சில பெயர்கள் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்தன. தேசம் முழுக்க மதவாதத்தை எதிர்த்து எழுதியும் பேசியும் செயல்பட்டும் கொண்டிருந்த சிந்தனையாளர் பெயர்கள். கௌரி லங்கேஷ் முதற்பெயராகவும் ஏழாவதாக ஷ்யாமளாவின் பெயரும் இருந்தது.

கர்நாடகக் காவல்துறை உடனே சென்னைக்குத் தகவல் தெரிவித்தார்கள். ஷ்யாமளா கேட்ட போது கண்டு கொள்ளாத காவல் துறை இப்போது அவர்களாகவே முன் வந்து அவள் வீட்டுக்கு ஒரு காவலரை 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக அனுப்பினார்கள்.

அதைக் குறித்து காவல் துறைக்கு எழுதிய திறந்த மடலை இப்படி முடித்திருந்தாள் -

“எழுத்தாளர்களைக் கொல்வதும், அதிலிருந்து தப்பிப்பதும் இந்த ஆட்சியில் சுலபம் என லெட்டர்பேட் கட்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது அவலமான சூழல். தோட்டாக்களுக்கு அஞ்சுகிற குரல்வளைகள் ஒருபோதும் காலத்தை வெல்வதில்லை.”

*

மூன்று நாட்கள் நிற்காமல் ஓடி விட்டிருந்தன. விசாரணைகளோடு ஷ்யாமளா பற்றி ஆங்கிலத்தில் வந்த செய்திக் குறிப்புகளையும், நேர்காணல்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஒரு முன்னேற்றமுமில்லை என்பதால் மஞ்சுநாத் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தார். எதிர்க் கட்சிகள் சிபிஐ விசாரணை கோரின.

அப்போது தான் அந்தத் தகவல் வந்து சேர்ந்தது. ஒரு யூட்யூப் வீடியோ பற்றியது.

சங் சேனா என்ற மங்களூரைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பின் 25 வயதுத் தலைவன் பேசிப் பதிவேற்றியிருந்தான். ஷ்யாமளா காணாமல் போனதற்குத் தனது அமைப்பு பொறுப்பேற்பதாகவும் இனி இந்து மதத்தையும் அதன் வழக்கங்களையும் எதிர்க்க இந்தியாவில் எவருக்கும் துணிவு வரக்கூடாது என்பதற்காக இதைச் செய்ததாகவும் சொல்லி ஒரு எவர்சில்வர் வாளை உருவி உயர்த்திக் காண்பித்துக் கோஷமிட்டான்.

அன்று மாலை அவன் கைது செய்யப்பட்டு பாகமண்டலா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டான். முதல் ஒரு மணி நேர மரியாதையான விசாரணையில் அலட்சியம் காட்டியவன் – “நான் யார் தெரியுமா? எனக்கு ஒண்ணுனா சிஎம்மே லைன்ல வருவார்.” – பிறகு இரண்டு அடி வாங்கி அலறியதும் பேச ஆரம்பித்தான்.

அவனுக்கு ஷ்யாமளா யாரென்றே அவள் காணாமல் போன செய்தி பரவும் வரை தெரியாது. பிறகு மேலோட்டமாய் இணையத்தில் பார்த்தும், தன் வட்டத்தில் பேசியும் தெரிந்து கொண்டவன், அதைப் பயன்படுத்தித் தன் அமைப்பைப் பிரபல்யப்படுத்தும் நோக்கில் அந்த வீராவேச உரையை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறான்.

உதடு கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருந்த வலியுடன் பேசிக் கொண்டிருந்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கச் சொல்லி மஞ்சுநாத் சொன்னபோது, உடனே அவனை விடுதலை செய்யச்சொல்லி மறுக்கமுடியாத ஓர் உயரத்திலிருந்து வாய்மொழி உத்தரவு வந்தது.

மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றார். கடவுளை நினைத்துக் கொண்டார்.

*

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஷ்யாமளாவின் சிறுகதைத் தொகுதி மஞ்சுநாத் கையில் வந்து சேர ஒரு வாரமாகி விட்டது. உண்மையில் அவர் விரும்பி இருந்தால் கொக்கைன் அதை விடச் சீக்கிரம் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆறாண்டுகள் முன் ஷ்யாமளா எழுதிய அந்தப் புத்தகத்திலிருந்து ஏதும் விஷயம் கிடைக்கும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை தான். பள்ளிக்காலத்திலேயே துணைப்பாட நூல்களை வெறுத்த அவர் கஷாயம் குடிப்பது போல் அதைப் படித்து விடத் தீர்மானித்திருந்தார்.

அதிலிருந்த ஒரு நீளமான சிறுகதை அவரை மிக ஈர்த்தது. தலைப்பு: ‘To the Fullest’.

சென்னையில் வாடகை அடுக்ககத்தில் தனியே வாழும் ஒரு தம்பதி பற்றிய கதை. பெற்றோரை எதிர்த்துக் காதல் திருமணம். இருவருக்கும் நல்ல வேலை. அதீதமான சம்பாத்யம். குழந்தை இல்லை. அடுக்ககத்திலோ, அலுவலகத்திலோ எவருடனும் அவர்கள் அதிகம் பேசுவதில்லை. அவர்களின் பெற்றோர் உட்பட உறவினர்களோ நண்பர்களோ அவர்கள் வீட்டுக்கு வருவதை எவரும் கண்டதில்லை. தமது முப்பத்து ஐந்தாவது வயதில் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பி ஆறு மாதங்களில் அதை முடிக்கிறார்கள். பிறகு இரண்டு மாதம் முழுக்க ஓர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிச் செலவழிக்கிறார்கள். பிறகு அடுக்கம் திரும்பி ஆவேசமாய்ப் புணர்கிறார்கள்.

மூன்று நாட்கள் கழித்து உட்புறம் தாழிடப்பட்ட அவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் எழவே, கதவுடைத்து நுழைகிறார்கள். ஒரு பொருளும் இன்றி காலியாய் இருக்கிறது வீடு. இருந்தது ஒரு மேஜை. அதனருகே சரிந்து கிடந்த இரு நாற்காலிகள். தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த, அழுகிய, காணச் சகிக்க முடியாத தம்பதியர் உடல்கள்.

மேசை மீது ஊதா நிறத்தில் நூறு ரூபாய்ப் பணக்கட்டு, ஆப்பிள் மேக்புக், ஒரு குறிப்பு.

“நாங்கள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விட்டோம். பரஸ்பரம் காதலில் திளைத்து விட்டோம். நாங்கள் நினைத்ததற்கு மேலேயே பணம், வசதி, சொகுசைப் பார்த்து விட்டோம். பல நாடுகளில் வாழ்ந்து விட்டோம். எங்கள் பக்கெட் லிஸ்டில் இருந்த விஷயங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டோம். இனி எங்களுக்கு இந்த வாழ்க்கையில் செய்ய ஏதுமில்லை எனத் தோன்றுகிறது. போதும். எங்களது இந்த வாழ்க்கை எங்களுடையது என்று நம்புகிறோம். அதை நீட்டிக்கவோ முடித்துக்கொள்ளவோ எங்களுக்கு முழு உரிமையுள்ளதென நினைக்கிறோம். இந்த வீட்டிற்கான வாடகை உட்பட இம்மாதம் கட்ட வேண்டிய எல்லா பில்களையும் செலுத்தி விட்டோம். எங்கள் லேப்டாப்பை பக்கத்து வீட்டுச் சிறுமி ஆதிராவுக்குக் கொடுத்து விடுங்கள். இதனுடன் இருக்கும் பணத்தை எங்கள் இறுதிச் சடங்கிற்குப் பயன்படுத்திக் கொள்ளவும். எங்களை மின்மயானத்தில் தகனம் செய்யவும். இந்தக் கணத்தில் இந்த உலகம் மிக அழகானதாகத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் நன்றி.”

*

“ஷ்யாமளாவின் தொடர் இல்லாமல் வரும் முதல் இதழ் இன்று தான் வெளியாகிறது. ஓர் இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்த தொடர் பற்றி யோசிக்க ஷ்யாமளாவிடம் சொல்லியிருந்தேன். ஒருவகையில் அது எங்கள் பத்திரிக்கையின் விற்பனையைத் தீர்மானிக்கும் விஷயம். ஆனால் அவர் பொதுவாய் அதில் ஆர்வமற்று இருந்தார்.”

“ஓ! ஏன்?”

“தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளில் அவரை அப்படிப் பார்த்ததில்லை.”

“துயரமாகவோ பயந்தோ இருந்தாரா?”

“இல்லை. உற்சாகமாகவே காணப்பட்டார். அணையும் ஜோதியின் பிரகாசம் என்று அபசகுனமாகக் கூட எனக்குப் பட்டது. மனித மனதுக்கு யார் அணையிட முடியும்?”

“ஏன் அப்படித் தோன்றியது?”

“பெரிய காரணம் ஏதுமில்லை. தொடர் முடியவிருந்தது காரணமாய் இருக்கலாம்.”

“எழுத்துலகில் ஷ்யாமளாவுக்கு யாராவது எதிரிகள்?”

“தமிழ் இலக்கிய உலகில் எல்லோரும் எல்லோருக்கும் விரோதிகள் தாம். நட்பிற்கே அங்கே இடம் இல்லை. ஆனால் அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.”

மனோரஞ்சிதம் பத்திரிக்கையின் சீஃப் எடிட்டரான மார்த்தண்டனிடம் செல்பேசியில் விசாரித்துக் கொண்டிருந்தார் மஞ்சுநாத். வழக்கிற்குப் பயன்படும்படியான தகவல்கள் ஏதும் கிடைக்காத உரையாடல் கடைசிக் கட்டத்தை எட்டிய போது இதைச்சொன்னார்.

“Unfortunately, கடைசியா எங்களுக்குள் நடந்த உரையாடல் அவ்வளவு சுமூகமா இல்ல.”

“எப்போ நடந்தது இது?”

“போன புதன் கிழமை மாலை. அது தான் எங்க இதழ் கடைகளில் கிடைக்கும் நாள்.”

“அதாவது ஷ்யாமளா காணாமல் போவதற்கு முந்தைய நாள்.”

“ஆமா.”

“என்ன பேசினாங்க? உங்களுக்குள் என்ன பிரச்சனை?”

“கொங்குதேர் தொடரின் கடைசி அத்தியாயம் அன்றைய இதழில் தான் வெளியாகி இருந்துச்சு. வழக்கமா தொடர் முடிஞ்சதும் ‘முற்றும்’ போடுவோம். அதைத் தான் செஞ்சிருந்தோம். ஆனா அவர் எங்களுக்கு அனுப்பிய கோப்பில் அதுக்கு பதிலா வேற சொல் இருந்துச்சு. அதை ஏன் மாற்றினோம்னு கோவிச்சிக்கிட்டார். அது பெரிய மாற்றம் இல்லைங்கறதால சப்எடிட்டர்கள் என் கிட்ட கேட்டுட்டு மாத்திட்டாங்க.”

“ஓ!”

“அது மிகச்சிறிய விஷயம். அதுக்கு ஏன் அவ்ளோ கோபப்பட்டாங்கன்னு எனக்கு இப்ப வரைக்கும் புரியல. ஆனா logically speaking, அது அவரது நிபந்தனைக்கு எதிரானதுதான். தவறு எங்க பக்கம் தான். அவுங்கள திரும்ப சந்திக்கையில் மன்னிப்புக் கேட்கனும்.”

“ஃபைன். அப்போ வேற ஏதாவது பேசினாரா? தற்கொலை செய்துக்கற, வீட்டை விட்டு வெளியேறுகிற அர்த்தத்தில்? துக்கத்தில் அல்லது மனஅழுத்தத்தில் இருந்தது போல்?”

“அப்படித் தோனல. என்னோடு பேசினது கூட கோபம்னு சொல்றதை விட அப்செட்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அது எழுத்துத் சூழலில் வழக்கமா நடக்கறது தான்.”

“ஆர் யூ ஷ்யூர்?”

“எஸ். எங்களுக்குள் இருந்தது மேலோட்டமான பத்திரிக்கை ஆசிரியர் - எழுத்தாளர் உறவு. தனிப்பட்ட விஷயங்களை ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்றதில்ல. அதனால் அப்படியான மனநிலையில் இருந்திருந்தாலும் என்னிடம் சொல்லியிருக்க மாட்டார்.”

“ஓக்கே. வேற ஏதும் நினைவு வந்தா எனக்குக் கூப்பிடுங்க. இது தான் என் எண்.”

செல்பேசியைத் துண்டித்த பிறகு யோசனையாய் கிறீச்சிட்ட நாற்காலியில் சாய்ந்தமஞ்சுநாத்துக்கு அது சட்டெனத் தோன்றியது. மீண்டும் ஆசிரியருக்கு அழைத்தார்.

“முற்றும் என்பதற்குப் பதிலா ஷ்யாமளா அதில் பயன்படுத்தி இருந்த சொல் என்ன?”

“நிறைவு.”

***

Comments

Unknown said…
Excellent story. Thanks for sharing
Ajay said…
Excellent writeup boss.
Anonymous said…
அருமை என்று சொல்வதற்கு பதில் இன்னும் சிறந்த வார்த்தையே தேடிக் கொண்டிருக்கிறேன்.
Sunil kumar said…
நீண்ட நாட்களுக்கு பின் அட்டகாசமான ஒரு சிறுகதையை படித்த "நிறைவு"

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்