நான் ஏன் அரக்கன் அல்லன்
என் சிற்றறிவிற்கு எட்டிய ஒன்றைச் சொல்ல விழைகிறேன். மனங்கோணும் நண்பர்கள் பொருத்தருள்க. இது ஒரு நெடுநாள் உறுத்தல்.
அரக்கர், அசுரர் என்பதெல்லாம் நேர்மறைச் சொற்கள் அல்ல. தீமை என்பதன் உருவகமாக இந்துப் புராணங்கள் சொல்பவை. அவர்கள் எல்லோரும் பிறப்பால் பிராமணர்கள் அல்லாதோரும் அல்ல. ஆரியர்களின் புராண நாயகர்களான ராமனை மறுதலிக்கும் நோக்கில் திராவிடக் கருத்தியல் கொண்ட எழுத்தாளர்களும் தலைவர்களும் அதற்கு எதிரான ராவணனை அக்கதையின் நாயகனாக்கி எழுதினர், பேசினர். அது பிராமணியத்தை எதிர்க்கும் ஒரு குறியீட்டு எதிர்ப்பு. அது ஓர் அடையாளக் கலகச் செயல் மட்டுமே. அதன் நோக்கம் ஓர் அதிர்ச்சி மதிப்பீடு. அதன் வழியாக அவர்கள் புனிதமாகக் கருதும் விஷயங்களைக் கலைத்துப் போடுவது.
கவனியுங்கள். அவர்களின் நோக்கம் ராமாயணம் என்னும் புராணத்தை, அதன் மீதான மரியாதையை, பயபக்தியை உடைத்தெறிவது தானே ஒழிய அரக்கர்களைப் புனிதப்படுத்துவது இல்லை. அந்தக் காலகட்டத்தின் பின்புலத்தை எடுத்துப் பார்த்தால் இது எளிதில் விளங்கும். அப்போது கடவுள் நம்பிக்கையைத் தகர்க்க வேண்டிய அவசியம் திராவிட இயக்கத்துக்கு இருந்தது. ஏனெனில் சாதியத்தின் வேர் இந்து மதம், அதன் ஆதாரம் தெய்வ நம்பிக்கை, அதன் ஆணி வேர் புராணங்கள். அவை தாம் தம் நாயகர்களை மக்கள் மத்தியில் (குறிப்பாக திராவிடர்கள்) கடவுள் ஆக்கி வைத்திருந்தன. அதனால் அந்தப் புராண நம்பிக்கைகளையும், குறிப்பாக நாயக பிம்பத்தையும் நொறுக்க வேண்டிய தேவை இருந்தது. அதனால் அவற்றில் இருந்த வில்லன்களை (ராவணன், நரகாசுரன், மஹாபலி, சூரமத்மன், மகிஷாருரன், பஸ்மாசுரன் போன்றோர்) வேண்டுமென்றே நாயகர்கள் ஆக்கினார்கள்.
புராணங்களில் சொல்லப்பட்ட நாயகர்களின் வீரதீர, மாயாஜாலச் செயல்களைக் கேலிக்குள்ளாக்கினார்கள். தர்க்கம் மீறிய புராணங்களை மானாவாரியாகப் பகடி செய்தார்கள். அதன் கடவுளர்களை நகைச்சுவைச் சித்திரமாக்கி விட்டார்கள். அவற்றில் சொல்லப்பட்டிருந்த சமூக விதி தாண்டிய கடவுளர் உறவுகளைக் கொச்சையாக விமர்சித்தார்கள். அது அந்தப் புராணங்களுக்கு, அவற்றின் பால் கொண்டிருந்த வெகுஜன நம்பிக்கைக்கு விடுக்கப்பட்ட சவால். இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்ற கணக்கீடு அது. பிராமணர்கள் சீண்டப்பட்டார்கள். அது ஒரு அரசியல் போராட்ட வடிவம். அது ஓரளவு பலனளித்தது. அவற்றால் பாதிப்புற்று கணிசமான மக்கள் விழிப்புணர்வு பெற்றார்கள். முழு நாத்திகர்கள் ஆகவில்லை என்றாலும், பகுத்தறிவுடன் மூட நம்பிக்கைகளைக் கேள்வி கேட்டார்கள்.
இது தான் பின்புலம். அரக்கர்களை தமிழர்களுக்கோ, திராவிடர்களுக்கோ உருவகம் ஆக்குவது அவர்களின் நோக்கமல்ல. இலங்கையிலிருந்து வந்ததாலேயே ராவணன் தமிழனாய், திராவிடனாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. (குறைந்தது அவர்களுக்கு அடையாளமாக ஆக வேண்டிய தேவை இல்லை.) அதே சமயம் ராவணன் பிராமணன் என்பதையும் கவனிக்க வேண்டும். அவனைக் கொன்றதால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது (ராமன் பிராமணன் அல்ல, ஷத்ரியன் என்பதைக் கவனியுங்கள்). ஆக, ஒரு பிராமணனை, பிராமணன் அல்லாதவன் வீழ்த்திய கதை தான் ராமாயணம். இது இது திராவிடர்களுக்குச் சாதகமான புராணம் அல்லவா? ஏன் எதிர்க்க வேண்டும்? காரணம் ராமன் என்பவன் கடவுளாக்கப்பட்டு விட்டான். மதக் குறியீடு ஆகி விட்டான். ராமன் என்ற கற்பிதம் ஆரியர்களுடையது என்பதால் தான் திராவிடப் பெரியவர்கள் ராவணனை நாயகனாக்கினார்கள். அதன் அர்த்தம் ராவணன் திராவிடன் என்பதல்ல; ஒடுக்கப்பட்டவன் என்பதல்ல.
மற்றபடி, அசுரன், அரக்கன் என்பதெல்லாம் தலித்களை, பிற்படுத்தப்பட்டவர்களைக் குறிப்பதல்ல. அது கெட்ட குணமுடையோரையே குறித்தது. அவர்களில் பிராமணர் உள்ளிட்ட எல்லாச் சாதியினரும் இருந்தனர். இன்னும் சொன்னால்அசுரர்களும் தேவர்களும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள். காசியப முனிவர்! தாய் தான் இரு குலத்துக்கும் வேறு. ஆனால் அவர்களுமே கூட சகோதரிகள் தாம் - முறையே திதியும், அதிதியும். ஆக, ஒரே வழியில் தோன்றியவர்களை எப்படி இரு வேறு பிரிவினராகப் பிரிப்பீர்கள்? சாதி என்பது பிறப்புடன் தொடர்புடையது என்று நம்புவது தான் பார்ப்பனியப் பார்வை என்பதை நினைவிற்கொள்க.
இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். புராணங்கள் எழுதப்பட்ட காலத்தில் தலித்களை அல்லது பிற்படுத்தப்பட்டோரை எதிர்களாகச் சித்தரித்து அவர்களை பிராமணர் வீழ்த்துவதாகக் கட்டமைக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஏனெனில் அப்போது தலித்களும் பிற்படுத்தப்பட்டோரும் அடிமைகளாகவே இருந்தனர். ஆக அவர்களைப் பொருட்படுத்தி தம் கதையில் எதிர்மறைப் பாத்திரங்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் அதிகபட்சம் துணைப் பாத்திரங்களாக வந்தனர். நாயகர்களுக்கு விசுவாசம் கொண்ட அடிமைகளாக. அதனால் தான் சொல்கிறேன், அன்று புராணம் எழுதியோரின் உத்தேசம் திராவிடர்களைத் தீயவர்களாக, ஒழுக்கமற்றோராகச் சித்தரிப்பது அல்ல. நாமாக இன்றைய சூழலில் வலிந்து அந்தப் பார்வையைத் திணிக்கிறோம்.
அதுவே கடந்த நூறாண்டுகளில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டிருந்தால் பிராமணர்கள் அப்படிச் செய்திருப்பார்கள். ஏனெனில் இப்போது திராவிட, தலித் இயக்கங்களின் எழுச்சி காரணமாக பிராமணர்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் சமமான எதிரிகளாக உருவாகி விட்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். பார்ப்பனச் சித்தாந்தங்களை நகைச்சுவைகளாக ஆக்கி விட்டார்கள். ஆனால் அன்றைய நிலை அதுவல்ல. அதனால் தலித்களை பிற்படுத்தப்பட்டோரை இழித்துச் சித்தரிக்க அவசியமும் இல்லை. சொல்லப் போனால் அவர்களைப் பொருட்படுத்தத் தகுந்தவர்களாக எண்ணியே இருக்க மாட்டார்கள். தொந்தரவில்லாமல் தனக்குக் கீழே இருப்பவர்களைத் தனக்குச் சமமனான எதிரியாகக் கற்பனை செய்வார்களா என்ன! எளிய உளவியல்.
ஆக, நானறிந்தவரை புராணங்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான சமர் தானே ஒழிய பிராமணர்கள் அபிராமணர்கள் இடையேயானதல்ல. தேவர் மகன் திரைப்படம் எப்படி இரு தேவர்களுக்குமான சண்டையோ அப்படி. ஆனால் இப்போது நாம், அசுரர், அரக்கர் என்ற கற்பிதங்களைத் திரித்து அதைத் திராவிடர்களுக்கான அடையாளம் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் இரண்டு தர்க்கப் பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று வீம்பாக கெட்ட குணமுடைய ஓர் அடையாளத்துக்கு திராவிடர்களை ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு புராணங்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டவர்களாகி விடுகிறோம். ஒன்றை எதிர்ப்பது என்பது அதைக் கடப்பதில் தான் இருக்கிறது; அதற்கு நேர் எதிரான திசையில் செல்வதில் இல்லை. எனில் நம் செயலை அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதாகிறது. இன்று ஒரு புராண ஆதரவாளர் திராவிடர்களுக்கும் நாங்களே அடையாளம் இருக்கிறோம் என்று நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல வாய்ப்புண்டு அல்லவா!
ஒருவர் எதிர்தரப்பின் நாயகனுக்கு எதிரி என்பதாலேயே அவன் நம் தரப்பாக வேண்டும் என்பதில்லை. அவர் நம் தரப்பே இல்லை எனும் போது நம் ஆதர்சமாகவோ அடையாளமாகவோ எப்படி ஆக முடியும்? நம் திசையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும், எதிரியல்ல. ஆக, தர்க்கப்பூர்வமாகப் பார்த்தால் ஒருவர் அசுரர், அரக்கர் என்று சொல்லிக் கொள்வதில் எந்தப் பெருமையும் இல்லை. விரும்பாத பெண்ணைத் தூக்கி வருவதும், உலக மக்களைத் தொந்தரவு செய்வதும் தான் நம் அடையாளமா என்ன? அதனால் அசுரர், அரக்கர் போன்ற சொற்களை வீம்பிற்குப் பயன்படுத்துவது, திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு, தலித்களுக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு அடையாளம் ஆக்குவது அசட்டுத்தனமானது என்பதே என் தாழ்மையான எண்ணம். அந்தப் பயன்பாட்டில் ஒரு வசீகரம் இருக்கிறது தான். ஆனால் அர்த்தமில்லை.
அசுரன் படத்துக்கு அப்பெயர் வைத்ததற்குப் பின் தீயதாக ஆக்கப்பட்டு விட்ட சொல் ஒன்றை நல்லதாக ஆக்கும் நல்லெண்ணம் இருக்கலாம் இயக்குநருக்கு. ஆனால் உண்மையில் அந்த முயற்சி இறுதியில் நல்ல விஷயம் ஒன்றுக்குத் தீய அடையாளம் தந்து விட்டதாகவே முடிந்தது என எனக்குப் பட்டது. சினிமா பரவாயில்லை. எதிர்மறைகளையும் கொண்டாடுவது நம் வழக்கம். ஆனால் அரசியலில், சமூகச் செயல்பாட்டில் இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும், சாதாரண மக்களிடம் மனவிலக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நான் திராவிடன் தான். ஆனால் அசுரனோ, அரக்கனோ அல்ல. முழு நல்லவனாக விழையும், முனையும் அரைகுறை நல்லவன்.
*
Comments