கன்னித்தீவு - விமர்சனப் போட்டி முடிவுகள்


கன்னித்தீவு விமர்சனக் கட்டுரைப் போட்டி மார்ச் தொடக்கம் முதல் ஏப்ரல் இறுதி வரை நடந்தது. போட்டிக்கு மொத்தம் 35 கட்டுரைகள் வந்தன (முழுப்பட்டியலை இங்கே காணலாம்). அதிலிரண்டு விதிமுறைகள் காரணமாகத் தகுதியிழந்ததால் 33 மட்டும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து நானும் நண்பரும் 20 கட்டுரைகளை மட்டும் நடுவர் குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம்.

கன்னித்தீவு நாவலை வாசித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பா. ராகவனும், நவீனாவும் நடுவர்களாக இருக்கச் சம்மதித்தனர். அவர்கள் இருவரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் அளித்த மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அடிப்படையில் இறுதி வெற்றியாளர்கள் பட்டியல் இது.
போட்டி அறிவிப்பில் மூன்று பரிசுகள் மட்டும் சொல்லியிருந்தேன். இப்போது கூடுதலாய் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்படுகிறது - கூட்டு மதிப்பெண்ணில் நான்காவதாய் வந்த கட்டுரைக்கு. அது மூன்றாவதிலிருந்து ஒரே மதிப்பெண் தான் குறைவாய் இருந்தது என்பதாலும், தனிப்பட்டு எனக்கு மிகப் பிடித்த விமர்சனமாய் இருந்தது என்பதாலும். வெற்றியாளர்க‌ளுக்கு என்னுடைய‌ வாழ்த்துக்கள்.

உயிர்மை சுஜாதா விருதுகள், அமேஸான் கிண்டில் Pen to Publish உள்ளிட்ட போட்டிகளில் நடுவராய்ச் செயல்பட்டிருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்: ஒரு போட்டியின் தரம் என்பது நடுவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை பொறுத்தே அமைகிறது. இந்தப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கும் போது இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் மெய்வருத்தக் கூலி பெற்றதாகவே நம்புகிறேன். தமிழ்ச் சூழலில் இது அரிதான ஒன்று தான். அந்த அடிப்படையில் நடுவர்களுக்கு என் பிரியங்கள்.

போட்டியில் கலந்து கொண்ட மற்ற 31 வாசக நண்பர்களுக்கும் என் அன்பும் மரியாதையும். குறைந்தபட்சம் 25 கட்டுரைகள் வந்தால் தான் போட்டி நடக்குமென்று அறிவித்திருந்ததால் ஒரு கட்டத்தில் போட்டி நடக்குமா என்ற நிலை கூட இருந்தது. ஆக, போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருமே இந்தப் போட்டி ரத்தாகாமல் வெற்றிகரமாக நடக்கக் காரணமானவர்கள். வெற்றிப் படைப்புகள் தாண்டி என் மனதுக்குப் பிடித்தமான விமர்சனங்கள் இவற்றில் சிலவுண்டு. உதாரணமாக பூங்கொடி பாலமுருகன் எழுதிய விமர்சனத்தில் சீதை லட்சுமண ரேகையைத் தாண்டியதால் தான் ராமாயணம் பிறந்தது என்பது போல் பார்வதியும் ரிஸ்க் எடுத்ததால் கன்னித்தீவு பிறந்தது என்று சொல்லியிருந்தது brilliant அவதானிப்பு. இது போல் இன்னும் பல ஆச்சரியங்கள் அவற்றில் இருந்தன.

போட்டிக்கு நிறைய விமர்சனங்கள் வரத் தூண்டுகோலாய் இருந்த‌ 'வாசிப்பை நேசிப்போம்' குழு நண்பர் கதிரவன் ரத்தினவேலின் முயற்சிகளுக்கான என் நன்றியை மீண்டுமொரு முறை இங்கே பதிகிறேன்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வெற்றி பெற்றோர் மின்னஞ்சலிலோ, மெசஞ்சரிலோ எனக்கு விவரங்களைப் பகிரவும் (A/C No., Name, Bank, Branch, IFSC).

முக்கியமாய் ஒரு கடைசிச் செய்தி: போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கும் சம்பத் போட்டியில் பங்கெடுக்க விருப்பமில்லை, இருந்தாலும் எண்ணிக்கைக்காகக் கலந்து கொள்வதாகத் தனிச் செய்தியில் சொல்லியிருந்தார். ஏனென வினவியதற்கு சில‌ ஜாம்பவான்கள் போட்டியில் இருப்பதாகவும், பலரும் நாவலில் உள்ளே புகுந்து விளையாடி இருப்பதாகவும் தன் தயக்கத்தைச் சொன்னார். நான் "Winners never quit" என்று சொல்லி அதை நிராகரித்தேன். இன்று அவர் நிஜ‌ வின்னர்!

*

போட்டி அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156931432512108
போட்டி நீட்டிப்பு அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157072931292108
அடுத்த கட்டம் பற்றிய அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157141521967108
இறுதிச்சுற்று பற்றிய அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157148739987108

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்