எழுத்தாளக் குற்றவாளிகள்

இது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்:

1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள்?

2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார்? ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா?

என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன்.

(1)

ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. ஏகப்பட்ட பதிப்பகங்கள் வந்து விட்டன. பல பிரபல எழுத்தாளர்கள் சொந்தமாய்ப் பதிப்பகம் வைத்துக் கொள்ளும் இடத்துக்கு வந்து விட்டார்கள். புதியவர்கள் சுயபிரசுரம் செய்வதும் நடக்கிறது. ஆனால் அது ஒரு கவலைக்குரிய விஷயமல்ல. எல்லோரும் புத்தகம் போடுவதால் இலக்கியத்தின் கற்பே போய் விட்டது போல் பினாத்தத் தேவையில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.

ஒன்று அப்படி கொண்டு வரப்படும் நூல்களில் நல்லதும் வல்லதுமே நிற்கும். அப்புறம் ஒரு புத்தகம் அல்லது சில புத்தகம் போடுவதாலேயே ஒருவர் எழுத்தாளர் என்று நிலை பெற்று விட முடியாது. எழுத்தாளர் என்று ஒருவர் தன்னைத் தானே உணர வேண்டும். அதையே தன் பிரதான அடையாளமாய் எண்ண வேண்டும். அப்போது தான் தொடர்ந்து எழுத்தாளராய் இயங்கும் உந்துதல் கிடைக்கும். தற்காலிகச் சுணக்கங்கள் இருக்கலாம், ஆனால் வேலை நெருக்கடி, குடும்ப அழுத்தங்கள் என்றெல்லாம் சொல்லி ஓர் அசல் எழுத்தாளன் எழுதுவதை நிறுத்த மாட்டான்.

வாய்ப்பிருக்கிறதே எனப் புத்தகம் போட்டவர்கள் தான் ஓரிரு நூல்களில் அப்படிக் களைத்து, அலுத்து நின்று விடுவார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து ஒரு போதும் அலுக்காது. உதாரணமாய் என் முதல் நூல் 2009ல் வெளியானது. அன்று என்னோடு குறைந்தது 50 பேர் புதிதாய் புத்தகம் போட்டு எழுத்துலகினுள் வந்திருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் புத்தகம் கொண்டு வருகிறார்கள்? அதிகம் போனால் நான்கைந்து பேர் இருக்கலாம். அவர்கள் மட்டுமே அதில் எழுத்தாளர்கள். மற்றவர்கள் பிரசுரமாதல் எனும் ஒரு புதிய கிளுகிளுப்பின்பால் ஈர்க்கப்பட்டு புத்தகம் போட்டவர்கள். கொஞ்ச காலத்தில் அது தீர்ந்தவுடன் தம் வழமையான தினசரிகளுக்குத் திரும்பி விடுவார்கள்.

அது இயல்பு தான். அப்படிப் புத்தகம் போடுவது தவறெனச் சொல்வது என் நோக்கமல்ல. இன்னும் சொன்னால் அதுவும் வரவேற்க்கத்தக்கதே. அதில் நல்ல நூல்களும் இருக்கலாம். பல துறைசார் நூல்கள் அப்படி எழுதப் பெற்றவை தாம். அதனால் அப்படி எல்லோரும் புத்தகம் வெளியிடுவது பற்றி ஒரு வாசகன் கவலை கொள்ள ஏதுமில்லை.

எப்போதும் தமிழ் மொழியில் பொருட்படுத்துவது மாதிரி எழுத சுமார் 50 பேர் இருப்பார்கள். பத்தாண்டுகள் முன்பும் அதே தான். இன்றும் அதே தான். பத்தாண்டுகள் கழித்தும் அதே தான். இன்று புதிதாய் 100 பேர் புத்தகம் கொண்டு வருகிறார்கள் என்பதால் அடுத்த பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 500 ஆகி விடாது. மெல்லிய உயர்வு வேண்டுமானால் நடக்கலாம்.

(2)

ஒருவர் சராசரியாய் தன் 25-30 வயதில் தன் முதல் நூலைப் பதிப்பிக்கக்கூடும். எழுதுபவர்களின் சராசரி ஆயுள் 65 என்று வைத்துக் கொண்டாலும் ஒருவருக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் தான் எழுதக் கிடைக்கும். (இந்தக் கணக்கே மிகையாகத்தான் சொல்கிறேன். உண்மையில் நம் சூழலில் இப்படி 30 ஆண்டுகள் எழுதக் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!) இதில் எழுத்தையே தன் அடையாளமாக வாழ்வாக எண்ணும் ஒருவன் ஆண்டுக்கு ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் போதும் என எண்ணிக் கொண்டிருக்க முடியாது. மொத்தமாக 30 நூல்கள் கொண்டு வந்தால் போதும் என ஒருவர் நினைக்க முடியுமா? ஒரு நல்ல எழுத்தாளனுக்கு எழுத அவ்வளவு தான் இருக்குமா?

திரும்பத் திரும்ப ப. சிங்காரத்துக்குப் போய் நிற்கக்கூடாது. அவரெல்லாம் விதிவிலக்கு. ஜெயகாந்தன் எண்ணி எண்ணியா எழுதினார். அசோகமித்திரனும் நிறைய எழுதி இருக்கிறார். குறைவாக எழுத வேண்டும் என எண்ணிய சுந்தர ராமசாமி கூட சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, உரை, பத்தி, நேர்காணல், மொழிபெயர்ப்பு என 30 புத்தகங்களாவது எழுதியிருப்பார். ஜெயமோகன் ஏற்கனவே லட்சம் பக்கங்கள் எழுதி விட்டார். ஒருவர் காலத்திற்கும் நிற்பது போல் ஒரு செவ்விலக்கியத்தை எழுதி விட்டால் கூட அதோடு அவர் நின்று விட வேண்டும் எனச் சொல்ல நாம் யார்?

இந்தப் புத்தகக் காட்சிக்கு வருவதையும் கணக்கிட்டால் இதுவரை 22 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். இது கடந்த பத்தாண்டுகளில் செய்தது. அடுத்ததாய் குறைந்தது பத்துப் புத்தகங்கள் எழுதுமளவு திட்டங்கள் இப்போதே என் மனதில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் செய்து முடிக்கும் போது மேலும் இருபது புத்தகங்களுக்கான‌ புதிய‌ திட்டங்கள் மனதில் தயாராய் இருக்கும். அதனால் குறைவாய் தான் எழுதுவேன், வருடம் ஒரு புத்தகம் தான் வெளியிடுவேன், அரைக்கால் புத்தகம் தான் வெளியிடுவேன் என ஓர் எழுத்தாளன் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது.

சாத்தியமான போது எழுதிப் பிரசுரித்து விட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் எழுத முடியாமல் போகலாம். அல்லது குறைவாய் எழுதும் சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியம், அரசியல், பொருளாதாரம், பதிப்புலகம் உள்ளிட்ட‌ பல புறக் காரணிகள் இதைத் தீர்மானிக்கும். இவை எதுவும் எழுத்தாளன் கையில் இல்லை. அதனால் எதையும் எதிர்காலத்தை நம்பி ஒத்திப் போட முடியாது. எழுதுகிற சூழல் இருக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்வதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

இதில் ஒரே சமயத்தில் வரும் ஏழெட்டு நூல்களில் ஏதேனும் (அல்லது அனைத்துமே) தரமில்லை என்றால் அதைக் காலம் கழித்து விட்டு முன்னேறும். அது ஆண்டுக்கு ஒரு நூல் எழுதினாலும் நடக்கும். அதனால் எழுத்தாளனை எழுத விடுங்கள். அவன் ஆண்டுக்கு ஒரு பக்கம் எழுதினாலும் சரி, பத்துப் புத்தகம் எழுதினாலும் சரி. நன்றாக இருப்பதைக் கொண்டாடுங்கள்; மற்றவற்றை நிராகரியுங்கள். அவன் நிறைய எழுதுவதாலேயே எல்லாவற்றையும் பாராட்டுங்கள் எனச் சொல்வதாய் அர்த்தமில்லை. அதே சமயம் நிறைய எழுதுவதாலேயே அவை தரம் குறைந்ததாய்த்தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிவும் சரியானதல்ல.

எழுத்தை ரேஷனில் தரச் சொல்லாதீர்கள். நதியின் ஊற்றை அளவு சொல்லி அடைக்க முடியுமா? அள்ளிக் குடிப்பது அவரவர் சாமர்த்தியம். நீர் கரித்தால் துப்புவதும் பருகுபவன் உரிமை.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்