Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்

அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:

1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்?

எத்தனை வேண்டுமானாலும்.

2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா?

தாரளமாய்க் கலந்து கொள்ளலாம்.

3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா?

இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.

4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா?

சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி?

தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031

தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031

மும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப்பவை: https://www.amazon.in/b?node=16030135031



6) போட்டிக்கு வரும் ஒரு படைப்பை அமேஸான் ப்ரைமில் வெப்சீரிஸாக எடுப்பதாகப் போட்டிருக்கிறது. அதைப் பற்றி மேலும் விளக்கம் தர முடியுமா?

இந்தியாவில் மொத்தம் மூன்று மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) போட்டி நடக்கிறது. இதில் நீள்வடிவில் எழுதப்படும் படைப்புகளில் அதிகபட்சம் ஐந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் (நூல் விற்பனை மற்றும் வாசகர் மதிப்பீட்டின் அடிப்படையில்). ஆக மொத்தம் அதிகபட்சம் 15 படைப்புகள் இந்தியாவிலிருந்து இறுதிச் சுற்றில் இருக்கும். இதே போல் வேறு நாடுகளிலும் நடத்தப்படும் KDP போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குப் பல படைப்புகள் தேர்வாகும். இவை அனைத்தும் இந்த ப்ரைம் வீடியோ வெப்சீரிஸ் தேர்வுப் போட்டியில் இருக்கும். அமேஸான் ப்ரைமின் உலகளாவிய ஆடியோவிஷுவல் தேர்வுக்குழு இதிலிருந்து ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும். ஆக, கவனித்துப் பார்த்தால் தமிழில் நீள்வடிவில் இறுதிச் சுற்று வரை வந்த ஒரு படைப்பு ரூ.5 லட்சம் பரிசுத் தொகைக்குத் தேர்வாகாமல் போனாலும் ப்ரைம் வீடியோ போட்டியில் வெல்ல வாய்ப்புண்டு.

7) ஆங்காங்கே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என்கிறீர்களே, எது என்ன?

தமிழில் மட்டும் இரு வடிவுகள்; ஒவ்வொன்றிலும் மூன்று பரிசுகள். கணக்கிட்டால் மொத்தம் ரூ.7.35 லட்சம் வருகிறது. மும்மொழிகளையும் சேர்த்தால் பதினெட்டு பரிசுகள் வரும். ரூ.22.05 லட்சம். ஒட்டுமொத்தமான இந்தியாவுக்கான அந்தப் பரிசுத் தொகையைத் தான் அமேஸான் விளம்பரங்களில் '20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுகள்' என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

8) ஒருவரின் படைப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் / மொழியில் பரிசு வெல்ல வாய்ப்புண்டா?

இல்லை. பொதுவாய் ஒருவர் இரண்டு மொழி அல்லது மூன்று மொழியில் நூல்கள் வெளியிட்டு, அவற்றைச் சந்தைப்படுத்தி, விற்க வைத்து, வாசகரிடையே நல்லபிப்பிராயம் ஏற்படுத்தி, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி, கடைசியில் நடுவர்களும் அவற்றையே வெற்றி பெற்ற நூலாகத் தேர்ந்தெடுப்பது என்பது என்வரையில் மிக மிக மிக அரிதான நிகழ்வு. ஆனால் அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் கூட அவற்றில் ஒரே ஒரு மொழியில் மட்டும் தான் அவருக்குப் பரிசு வழங்கப்படும். ஆக, ஒருவர் ஒரு போட்டியில் தான் பரிசு வெல்ல முடியும். ஆனால் அதே சமயம், ஒருவர் இரு வடிவுகளிலும், மும்மொழிகளிலும் படைப்புகளைப் போட்டிக்கு அனுப்ப எந்தத் தடையும் இல்லை.

9) எனக்கு கிண்டிலில் எப்படிப் பதிப்பிப்பது என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. உதவ முடியுமா?

இணையம் பழகி இருந்தால் இது சுலபம் தான். இணையத்திற்கே நீங்கள் புதிது என்றால் இணையப் பரிச்சயம் கொண்ட யாரையாவது உடன் வைத்துக் கொள்ளலாம். கீழ்கண்ட பக்கங்களில் கிண்டில் மின்னூல் செய்வது பற்றி படங்களுடன் கூடிய‌ விரிவான விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன.

https://www.youtube.com/watch?v=8AEZ_dpEtvY

https://kdp.amazon.com/en_US/help/topic/G200635650

https://mfishbein.com/how-to-self-publish-a-book-on-amazon/


10) வங்கிக் கணக்கு மற்றும் PAN கார்ட் முதலிய தகவல்கள் கேட்கிறார்களே, அது கட்டாயமா?

ஆம். புத்தகம் விற்றால் மாதந்தோறும் உங்களுக்குப் பணம் வர வேண்டுமே!

11) முதல் சுற்றில் மின்னூல்களின் விற்பனை மற்றும் வாசக மதிப்பீடு (Customer Rating) சார்ந்து இறுதிப் போட்டிக்கான படைப்புகள் தீர்மானிக்கப்படும் என்பது  தெரிந்ததே. இதற்கு எந்தத் தேதி முதல் எந்தத் தேதி வரையிலான விற்பனை மற்றும் ரேட்டிங் கணக்கில் கொள்ளப்படும்?

போட்டி தொடங்கிய செப்டெம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை. (போட்டிக்கான படைப்பைப் பதிப்பிக்க டிசம்பர் 14 தான் கடைசித் தேதி. இறுதி நாட்களில் பதிப்பிக்கப்படும் படைப்புகளுக்கும் உரிய விற்பனை மற்றும் வாசக மதிப்பீடு வாய்ப்பு கிட்ட வேண்டுமென்பதற்காக இந்த ஏற்பாடு.) Practically speaking, போட்டிக்குரிய படைப்பு பதிப்பக்கப்பட்டது முதல் ஆண்டிறுதி நாள் வரை நிகழும் விற்பனையும், வரும் ரேட்டிங்கும் கணக்கு. ஆக, சீக்கிரம் பதிப்பித்தால் நிறையப் பேரைச் சென்றடையும் சாத்தியம் அதிகம்.

*

தொடர்புடைய பதிவுகள்:
http://www.writercsk.com/2019/09/pen-to-publish-2019.html
http://www.writercsk.com/2019/09/blog-post.html
http://www.writercsk.com/2019/09/blog-post_15.html

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்